அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


ரங்கோன் ராதா
12
             

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் பரிதாபம் பிறந்தது. “போடி! பைத்தியக்காரப் பெண்ணே!” என்று கேலி செய்தேன். அவளோ திருப்தி பெறவில்லை. சோகத்துடனேயே பேசலானாள், “அக்கா! சோதிடன் குறிப்பிட்ட ஆபத்திலிருந்து தப்புவதற்கும் அத்தானைக் கலியாணம் செய்துகொள்வதற்கும் என் சம்பந்தம் என்று நீ கேட்கவில்லையே, ஏன்? அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா?” என்று தங்கம் கேட்டாள். நான் எவ்வளவு அசடு பார் தம்பி? நானாகக் கேட்டிருக்கத்தானே வேண்டும் அந்தக் கேள்வியை? கேட்கவேண்டுமென்று தோன்றவே இல்லை. அவள், தான் கிளப்பிய கேள்விக்குத் தானே பதிலும் கூறிவிட்டாள்.

“அக்கா! கன்னி கழியாமல் நான் இறந்துபோனால் குடும்பத்துக்கு ஆகாது. ஆகவே, இறந்துபோகுமுன்பு, கலியாணம் செய்துகொண்டாக வேண்டும். வேறு யாரையேனும் மணம் செய்துகொண்டு, அவர்கள் மனதை உடைக்க நான் இஷ்டப்பட வில்லை. அத்தான் கொஞ்சம் அழுத்தமான நெஞ்சுள்ளவரல்லவா! நான் இறந்துபோனால் அவர் சகித்துக்கொள்ள முடியும். மேலும், நீ இருக்கிறாய். ஆகவேதான், நான் அத்தானைக் கலியாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். இதை நீ நம்பினாலும் சரி, நயவஞ்சகம் என ஒதுக்கினாலும் சரி, எனக்குக் கவலை இல்லை. என் கவலை எல்லாம் இறக்கும்போது நான் கன்னியாக இருந்து குடும்பத்துக்கு நாசம் ஏற்படுமு“ நிலை வரக் கூடாது என்பதுதான்” என்று சொன்னாள்; இரண்டோர் சொட்டுக் கண்ணீர் என் விழிகளிலே இருந்து கிளம்பிற்று. ஒரு இளம் பெண் சொந்தத் தங்கை அவள் எவ்வளவு கெட்ட நினைப்புக்காரியாகத்தான் இருக்கட்டும்; அவள், தான் சாக நேரிடும் என்று தன் வாயாலே கூறினால், எப்படி அதைக் கேட்டுச் சகிக்கமுடியும். தங்கமோ அசடல்ல, புத்தி உள்ளவள்; புத்திக் கூர்மை என் வாழ்வையே துளைக்குமளவு இருந்தது அவளுக்கு. அவள் பெயரைச் சொன்னாலே எனக்கு ஆத்திரம் பிறக்கும். இருந்தும், அன்று அழுகுரலில் அவள் சொன்ன ‘சேதி’ கேட்டபோது என் மனம் என்னவோ பாகாகிவிட்டது. என்ன கூறியாவது அவளைத் தேற்றவேண்டும் என்று துடித்தேன். என் மனதிலேயே இரண்டு வகையான எண்ணங்கள் ஏககாலத்திலே கிளம்பித் தீரவேண்டிய நிலை. அவளுக்குத் தைரியம் தர என்ன கூறுவது என்று யோசிக்கவேண்டி இருந்தது. அதே சமத்தில், அவள் கூறுவது உண்மையா, நடிப்பா; நடிப்பாகவும் உண்மை யாகவும் இல்லாவிட்டால், ஒரு சமயர் யாராவது சோதிடன் உண்மையிலேயே ஏமாளியாக்கிவிட்டானா! அப்படியும் இருக்குமானால், சோதிடன் தானாகவே இக்காரியத்தைச் செய்தானா, அல்லது யாராவது தூண்டிவிட்டார்களா? ஒரு வேளை, என் கணவரே இதற்குக் காரணமோ? எவனாவது சோதிடனை ஏவி விட்டுத் தங்கத்தின் மனதிலே, பயத்தைத் தூவ வைத்தாரோ? அவர் எதற்கும் துணிந்தவராயிற்றே. அவர் மட்டுமா! பெண்கள் விஷயத்திலே, ஆடவரில் பெரும்பாலோர் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். உத்தமபுத்திரர்கூட, இந்த ஒரு விஷயத்திலே மட்டும் ஏனோ எவ்வளவு தலைகீழ் வாதம் புரியவும், தகாத முறையைக் கையாளவும் எண்ணம் பிறக்கிறது. தர்மத்தின் காவலரென்றும், சாது சன்மார்க்கி என்றும் பெயரெடுத்த தர்மபுத்திரர்கூட திரௌபதி விஷயத்திலே எப்படி நடந்துகொண்டார். ஆணழகன் அர்ஜுனனை அடைந்தோம், வில் வீரன் விஜயன் நமக்கு மாலையிட்டான், இனி நமக்கு இன்ப வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் என்ன குறை என்றுதானே திரௌபதி எண்ணி இருந்திருப்பாள். இதனை, எவ்வளவோ நுட்பமான தத்துவங்களை எல்லாம் ஆராய்ந்தறியும் ஆற்றல் படைத்த தருமர் தெரிந்து கொண்டிருக்க மாட்டாரா! அனால் என்ன செய்தார்? தம்பிக்கு மட்டுமல்ல; தனக்குமல்லவா திரௌபதியைத் தாரமாக்கிக்கொண்டார். கர்ப்பிணியைக் கானகத்துக்குத் துரத்திய இராமரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றல்லவா கூறுகிறார்கள். அப்பா! பெண்கள் விஷயம் என்றாலே, உத்தமர்கள், தத்துவம் தெரிந்தவர்கள், தபோதனர்கள், திரு அவதாரம் செய்பவர்கள் என்பவர்களெல்லாங்கூடத் தவறு செய்தே இருக்கிறார்கள்.

ரங்கோனில் ஒருநாள் ஒரு வேடிக்கை நடந்தது கேள். நாயுடு இங்கே இன்று துன்புறுத்தினாரல்லவா, அதுபோல அங்கேயும் செய்வதுண்டு. ஆனால் சில சமயங்களிலே தந்திர
மாகவும் நடப்பார். ஒரு நாள் ‘குஷாலாக’ இருக்கப் பணம் தேவைப்பட்டது. கேட்டார்; இல்லை என்றேன். உண்மையிலேயே இல்லை. ஆனால் அவர் தம் நண்பர்களிடம் வாக்களித்தார் போலிருக்கிறது; ஆகவே என் கழுத்துச் சங்கிலியைச் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார், அடகு
வைக்க. நான் மறுத்தேன். அவர் கோபித்துப் பார்த்தார். நான் பிடிவாதமாகவே இருந்து விட்டேன். என்ன செய்தார் தெரியுமோ? பாசாங்கு! பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டு தேம்பலானார். கொஞ்சநேரம் அதனைக் கவனியாமல் இருந்து பார்த்தேன், முடியவில்லை. “இதென்ன சனியன்! ஏன் அழுது தொலைக்கிறீர்கள்” என்று கேட்டேன். “ஒன்றுமில்லை உனக்கென்ன என் விதி விட்ட வழிப்படி நடக்கட்டும்” என்று பலப்பல கூறினார். நெடுநேரத்துக்குப் பிறகு, “ரங்கம்! இன்று ஒரு பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேன். ராதா, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கேட்டது. அதை வாங்கக் கண்ணாடிக் கடைக்குப் போனேன். அங்கே ஒரு அருமையான பெரிய நிலைக்கண்ணாடி நாலு அடி உயரம், இரண்டடி அகலம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது ஒரு அலங்காரப் படி கட்டின்மீது வைக்கப்பட்டிருந்தது. நான் அதனைச் சரியாகக் கவனிக்காமல், அந்தப் படியைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. பயத்தால் நான் அசைவற்று நின்றேன். கடை ஒரு பர்மாக்காரனுடையது. அவன் தீப்பொறி பறக்கும் கண்களுடன் என்னை நோக்கி வந்தான். கும்பிட்டேன். கூத்தாடினேன். 300 ரூபாய் தந்தாக வேண்டும், எடு என்றான். இன்று இரவு கொடுத்து விடுகிறேன் என்று சத்யம் செய்துவிட்டு வந்தேன். நாளைக் காலையிலே அவனுடைய கத்திக்கு நான் பலியாகவேண்டும். என் விதி அப்படி இருக்கும் போது என்ன செய்வது” என்று கூறிக் கோவென அழுதார். மறு வார்த்தை பேசாமல் வங்கிலியைக் கழற்றிக் கொடுத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே, அவர் அன்று சொன்னது பொய் என்பது தெரிந்தது. வருத்தப்பட்டேன்; வயிறு எரிந்து திட்டினேன். மறு இரவு நாங்கள் மூவரும் நாடகம் பார்க்கச் சென்றோம், வள்ளி கல்யாணம். தமிழ்நாட்டுப் பிரபல நடிகர்கள் என்று விளம்பரம் அன்று நல்ல வசூலைக் கொடுத்தது. நாடகத்திலே, முருகன் வேடுவப் பெண்ணை யானையைக் காட்டி, மிரட்டும் காட்சி நடக்கும்போது, நாயுடு என்னைக் குறும்புத்தனமாகப் பார்த்துச் சொன்னார். “ரங்கம் என்மீது பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே, இதோ பார், சாட்சாத் முருகன்கூடத்தான், யானையோ, பூனையோ எதையோ காட்டி, எதைப் பற்றியோ பேசி, வள்ளியைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார். இது சகஜமான காரியம்” என்றார் உண்மைதான்; ஆண்களே அப்படித்தான் என்று அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிற÷ன். உன் அப்பா சுபாவத்திலேயே தந்தரக்காரர், அதிலும் சுயநலம். எனவே, எவனையாவது சோதிடனைத் ‘தயார் செய்து’ தங்கத்தின் மனத்திலே மரண பயணம் பயம் ஏற்படும்படி செய்திருப்பாரோ என்று எண்ணினான்.

இப்படி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை ஏககாலத்திலே கொண்டதால், தெளிவான நிலையே கெடடு விட்டது. வீண் பயம் – பைத்தியக்காரத்தனம் – சோதிடம் முழுப்பொய் -– இதை எல்லாம் நமபாதே – என்று ஏதோ கூறினேனே தவிர, தங்கம் தந்த தகவலை மறுத்துக்கூற என்னால் முடியவில்லை. என் தங்கையின் உயிருக்கு ஆபத்து என்று அவளே கூறிடக் கேட்டால் என்னதான் பகையிருந்தாலும், மனம் பதறாதா? தங்கம் என் குழப்பத்தைத் தெரிந்துகொண்டேன்.

நான் அவள் விஷயமாகப் பரிதாபப்பேட்டேனே தவிர, எப்படி என் கணவரை அவளுக்கு மணம் முடிக்க மனம் வரும். எனவே, நான் வேறு ஏதேதோ பேசி அவளுடைய கவலையைப் போக்கப் பார்த்தேன். அவளும் என்னை வற்புறுத்தவில்லை. கொஞ்சநேரம் சென்றதும், வேலைக்காரியை வண்டி கொண்டு வரச்சொல்லி, நான் வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசற்படி வரை வந்து, என்னைத் தங்கம் வழியனுப்பி வைத்தாள்.

வம்பு பேசின அந்தச் சோதிடனைக் கண்டுபிடித்து, அவனைத் தூண்டிவிட்டவர் உன் அப்பாதானா என்பதைக் கண்டறியவேண்டுமென்று ஆசை கொண்டேன். ஆனால், நேரமாகிவிட்டது. லேடி டாக்டர் லாசரஸ் வீட்டுக்கு வந்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு. எனவே சோதிடன் விஷய
மாகப் பிறகு பார்த்துக்கொள்வது என்று தீர்மானித்து, நேரரே வீட்டுக்குச் சென்றன். உள்ளே நுழையும்போதே, முன்பு கொண்டிருந்த எண்ணத்தின்படி, அவரிடம் மல்லுக்கு நிற்பது என்ற துணிவுதான். அவர்தான், சோதிடனைக் கொண்டு தங்கத்தையும் ஏய்த்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் குடிபுகுந்தால், வலியவேனும் சண்டைக்கு நிற்பது என்ற எண்ணம் மேலும் வலுத்தது.

“வாங்கோ! என்னம்மா! நம்மை, இப்படிக் காக்கப் போட்டுப் போயிட்டிங்க” என்று லாசரஸ் கேட்டார்கள். லேடி டாக்டர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அவர் உலவிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் சீறி விழுவார். உடனே நாமும் பதிலுக்குப் பதில் சுடச் சுடத் தருவது என்று நினைத்தேன். “லேடி டாக்டரை இங்கே வரச்சொல்லி விட்டு, எங்கே போய்விட்டாய்? அந்த அம்மாள் வந்து எவ்வளவு நேரமாயிற்று. இப்படியா அவர்களைக் காக்கப்÷
பாவது” என்று கேட்பார். அலட்சியமாக ஏதேனும் பதில் கூறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரோ நான் எதிர்பார்த்தபடி ஒன்றும் கேட்வில்லை. அதற்கு மாறாக, லேடி டாக்டரிடம் விடைபெற்றுக் வெளியே போய்விட்டார். நான், லாசரசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். லேடி டாக்டர் பிறகு என்னைப் பரிசோதித்து, “உடம்புக்கு ஒன்றுமில்லை. ஆனால், சுகப்பிரசவத்துக்குத் தக்க மருந்தை இப்போதிருந்தே தந்து விடுகிறேன். சாப்பிட்டுக் கொண்டிருங்கள்” என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

வெளியே போனவர், இரவு நெடுநேரத்துக்குப் பிறகே வந்தார். எனக்குத் தூக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டு கொண்டுதான் இருந்தேன். அவர் கதவைத் தட்டினதும் பழைய வழக்கம் காரணமாகச் சரெலென எழுந்தேன், போய்க் கதவைத் திறக்கவேண்மே என்று! ஆனால் அறை வாயிற்படிவரை சென்றதும, நான் கையாள வேண்டிய புதிய முறை கவனத்துக்கு வந்தது. உடனே வேலைக்காரியை அதட்டிப் போய்க் கதவைத் திறக்கச் சொல்லிவிட்டு, நான் படுக்கை அறை சென்றேன். கதவைத் தாளிடவில்லை.