அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தேனில் தோய்த்த பழம்
3

ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி.

என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது.

என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்!

திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி நடத்துகிறார் ஆங்கிலர் என்றுரைத்தோம். அவர் ஆட்சி அகற்றி விட்டோம், ஆளத் தொடங்கி ஆண்டு பதினைந்தாகிறது. இன்று, முதலாளிகள் முகாமில், கேட்பதென்ன குரல்? இன்று அவர் கோட்டை இடித்திட்டோம் எனக் காட்ட முன்வருவாரா? எங்ஙனம் இது இயலும்? கணக்குக் கேளீர்.

வெள்ளையராட்சி இங்கு இருந்தபோது இலாபம் பெற்றிட முதலாளிகள் தொழில் நடத்த, மூலதனம் போட்டிருந்தார்; தொகை அன்று 700 கோடி எனக் கணக்குண்டு.

இன்று முதலாளிகளின் முகாம், அழித்துயாம் ஏழையரை ஏற்றம் பெறச் செய்ய வந்தோம் என முழக்க மெழுப்பி அரசாள்கின்றார், காங்கிரசார். வெள்ளையர் நாட்களிலே முதலாளி மூலதனம் 700 கோடி எனில், இந்தப் பதினைந்து ஆண்டுகளில், இது எந்த அளவு குறைந்துளது? கணக்குக் காட்டுவரா காங்கிரசார்! காட்ட மாட்டார். அவர் காட்டும் கணக்கெல்லாம் உரக்கூடை, பொலிகாளை!

இன்று இவர் ஆட்சியிலே முதலாளிமார்கள் தொழில் நடத்தப் போட்டுள்ள மூலதனம் 1900 கோடி ரூபாயாகும்.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட இன்று முதலாளித்துவ முறை ஏறக்குறைய மும்முடங்கு வளர்ந்துளது; கொழுத்துளது. இதற்கோ திட்டம்? ஏழைகளைக் காப்பதற்கே எமது திட்டம் என்றனரே! நிறைவேற்றிக் காட்டினரா? இன்னமும் கேள், தம்பி! இலாபம் தன்னைக் காண முதலாளிகள் நடாத்தும் தொழில்களுக்குச் சலுகைகள், கடன் தொகைகள், சன்மானம் என்பவைகள் இவர்கள் கொடுத்துள்ளார் - கஞ்சிக்குத் தாய் கதற, கைப்பொருளை அதற்குத் தந்திடாமல், ஆவின்பால் வாங்கி அரவுக்கு ஊற்றுவான்போல், வீடில்லை மாடில்லை என்று ஏழை கதறுகையில், இலாபக் கோட்டை கட்டும் முதலாளிகள் மகிழ, காங்கிரஸ் ஆட்சியினர் தந்த தொகை 590 கோடி ரூபாய்! அறம் இதுவா?

இலாபம் தரும் தொழிலெல்லாம் ஏன் நடத்தக்கூடாது என்று நாம் அரசு நடத்துவோரைக் கேட்கும்போது என்ன பதில் கூறுகின்றார்? இதற்கெல்லாம் "முதல்' போடப் பணத்தைச் செலவிட்டுவிட்டால், மற்றப் பல செயல்கள் நடவாதே என்கின்றார்.

இலாபம் தரும் தொழில் நடத்தப் பணம் இல்லை என்று கூறும் இவர், சுரண்டல் நடாத்தும் அந்தச் சுகபோகிக் கூட்டமாம் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய்! அந்தப் பெருந்தொகையை முதலாளிகட்கு அளித் திடாமல், இவரே தொழில் நடத்தப் போட்டிருந்தால், இன்று செல்வர்களைக் கொழுத்திடவைக்கும் இலாபம் மக்களுக்கன்றோ கிடைத்திருக்கும்? நடத்துவது மக்களாட்சி என நவில்கின்றார் நேர்த்தியாக! சமதர்மம் மேற்கொண்டோம் என்று சமர்த்தாகப் பேசுகின்றார். சமதர்மம் காணும் முறையா அறுநூறு கோடி ரூபாயை அள்ளி முதலாளிக்கு அளித்திடுவது? அறிவற்றோம் துணிவற்றோம் என்றா நமை எண்ணுகின்றார்; அப்பட்டமான பொய்யை அவிழ்த்துக் கொட்டுகின்றார்.

ஒரு சேதி கேள் தம்பி! இந்தியத் துணைக்கண்டமதில் இரு குடும்பங்கள் மட்டும், தொழிலுலகில் பெற்றுள்ள ஆதிக்கத்தின் அளவு கூறுகின்றேன். இரு குடும்பங்களிடம் மட்டும் பெருந் தொழில்கள் 400 சிக்கிக் கிடக்கின்றன.

இத்தனை தொழில்கள் இரு குடும்பத்திடம் இருந்தால், இவை தம்மில் கிடைத்திடும் இலாபம் அவ்வளவும் இரு குடும்பத்துக்கன்றோ சென்று அடைபட்டுவிடும்? இரு குடும்பம் மட்டும் இத்தனை தொழில் நடத்தி இலாபம் ஈட்டிக் கொண்டால், செல்வம் பரவுவது ஏது? செழுமையை மக்கள் காண்பது எங்ஙனம்?

அதனால்தான் ஐந்தணாவும் நாலணாவும், இரண்டே அணாக்களும் நாளெல்லாம் பாடுபட்டுப் பெறுவோர்கள் பலகோடி உளர்!

இத்தனை கோடி மக்கள் இடர்ப்பாட்டில் இருக்கையிலே, மொத்தமாய் வளர்ச்சி பெற்றோம் திட்டம் நிறைவேற்றி என்று செப்புவது சரியாமோ? சிந்திக்கச் சொல், தம்பி! சீற்றம் விட்டொழித்து.

இரு குடும்பம் தம்மிடம் இறுக்கிப் பிடித்துள்ள பெருந் தொழில்கள் நடாத்தப் போட்டுள்ள மூலதனம், எவ்வளவு தொகை என்பதனைக் கேட்டிடுவாய் - 500 கோடி ரூபாய்! ஆங்கில ஆட்சியது அக்கிரம ஆட்சியாகும்; கொள்ளை அடிப்போரைக் கொழுக்க வைக்கும் கொடிய ஆட்சியாகும் என இடி முழக்கம் எழுப்பினரே! இவராளத் தொடங்கியபின், இந்நிலையில் முதலாளி, கோட்டை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கின்றான்!! கேட்பார் உண்டா? கேட்பது, நீயும் நானும்! நாட்டவர்க்கும் இது தெரியவேண்டாமோ? தெரிவிப்பாய், தெளிவளிப்பாய்.

தனிப்பட்டோர் கொழுத்து வாழத் தொழில் நடத்த விட்டுவிடல், ஏன் என்று கேட்டுப்பார் - பதிலா வரும் - செச்சே! பதறிடுவர், பகைத்திடுவர், பழித்திடுவர், பதிலளித்திட முன் வாரார்!!

தொழில் நடத்தி இலாபம் குவித்திட, முதலாளிகளுக்கு இடம் கொடுத்திட்டால், அவர் சுரண்டும் தொகையினிலே, காங்கிரஸ் பெருந்தொகை தேர்தல் நிதியாகப் பெற்றிட வழி உளது; அரிமாவின் பின் நடந்தால் சிறுதுண்டு கிடைக்கிறதே, சிறு நரிக்கு, அஃதேபோல்! பிர்லா எனும் பெரிய முதலாளியிடம் உள்ள பல தொழிலிலே ஒன்று, மோட்டார் தொழிலாகும்; இந்துஸ்தான் மோட்டார் என்பது அதன் பெயராகும். இந்த அமைப்பு மட்டும் காங்கிரஸ் தேர்தல் நிதிக்காகக் கொடுத்த தொகை எவ்வளவு? மூர்ச்சையாகிப் போகாதே, தம்பி! பிர்லா தொழிலமைப்புத் தந்த தொகை இருபது இலட்சம்!!

இருபது இலட்சம் ரூபாய் நன்கொடையை எளிதாகக் கொடுத்திட, பிர்லாவின் மனம் இடங்கொடுத்தது எதனாலே? காங்கிரஸ் கட்சியது நாடாள்வதாலேதான், தொழில் நடத்திப் பொருள் திரட்டப் பிர்லாவும் பிறரும் வாய்ப்புப் பெறுகின்றார். சுரண்டிக்கொள்ள உரிமை, காங்கிரஸ் அரசு தந்திடும்போது, ஈடுசெய்யவேண்டாமோ? செய்கின்றார்! ஒரு தொழில் அமைப்பு மூலம் மட்டும் இருபது இலட்ச ரூபாய். பெருந்தொகை என்பாய் தம்பி! நமக்கு அது, எண்ணிப் பார்த்திடக்கூட இயலாத தொகை யாகும்; ஆனால், அவர் தந்த தொகையினைப் பிர்லா பெற்ற இலாபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், உண்மைநிலை புரியும்.

பிர்லாவின் மோட்டார் தொழிலில், 1960-ஆம் ஆண்டு கிடைத்துள்ள இலாபம்.

2,85,71,127 ஆகும்.

இத்தனை பெரிய இலாபம் கிடைத்தது எவராலே? எவர் இவர்க்கு இந்தத் தொழிலை நடத்துதற்குத் துணை நிற்கின்றாரோ, அவராலே! அவர் காங்கிரஸ் அரசு நடாத்துபவர்! எனவே, அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைக் காங்கிரசுக்கு அளிக்கின்றார், செல்வம் பெற்றோர்.

கூட்டுச்சதி என்பதன்றி வேறென்ன இதற்குப் பெயர்?

"ஏழையைக் காட்டிக் கொடுப்பது' என்பதன்றி, இதற்கென்ன வேறு பெயரிடுவீர்?

எத்துணை துணிவிருந்தால் இச்செயலில் ஈடுபட்டு, எமதாட்சிக்கு உள்ள குறிக்கோள், சமதர்மம் என்றும் கூறுவர்!

வழிப்பறி நடத்துபவன், "கனம் குறைத்தேன்' என்பதுபோல், பேசுகின்றார்; கேட்டு மக்கள் திகைக்கின்றார்.

தேபர் என்பார் உனக்குத் தெரிந்திருக்கும் - ஊரார் மறந்திருப்பார் - ஓராண்டு காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராய் இவர் இருந்தார். இவர் கணக்கும், நான் கூறும் கருத்தினையே வலியுறுத்திக் காட்டுகிறது.

மொத்தமாய்க் கணக்கெடுத்தால், நாட்டில் ஒருவருக்குச் சராசரி வருவாய், 306-ரூபாய்! எனினும், கிராமத்தார் வருமானம் இந்தக் கணக்கு முறைப்படியே பார்த்திடினும், 95-ரூபாய்தான்! ஏன் இந்த அவலநிலை? இன்னும் கிராமத்தில் உள்ளோரே, பெரும்பாலோர். அவரெல்லாம், மிகக் குறைந்த வருவாய்தான் பெறுகின்றார். திட்டமிட்டு என்ன கண்டோம்.

இந்நிலையில் இருக்கிறது இவர் போடும் திட்டம்! இதைக் காட்டி, "இன்பத் திராவிடத்தை' ஏன் கேட்டு அலைகின்றீர், நாடு பூங்காவாக நாங்களாக்கிக் காட்டுகின்றோம் என்று நீட்டி முழக்குகின்றார் - அவர் பேச்சை நெட்டுருப்போட்டவர்கள், நாட்டைக் கலக்குகின்றார் நாராச நடை கலந்து.

தூற்றிடுவோர் தொகையும் வாகையும் வளர்ந்திடினும், தூய நம் கருத்துத் துவண்டுவிடப்போவதில்லை; ஆர்வம் கொழுந்துவிட்டெரிகிறது. எவர் என்ன ஏசினாலும், எதிர்ப்புப் பல மூட்டிடினும் எடுத்த செயலதனை முடித்திடும் முயற்சிக்கே மூச்சு இருக்கிறதென்ற, உறுதி கொண்டோர் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது காண்!

ஆனால், தம்பி! நமது உறுதி உரத்த குரலால், தடித்த சொற்களால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சால், வெளிப் படுத்த நினைப்பது தவறு, தீது; நெடுநாள் நிலைக்காது. "வேகம்' வேகமாக வளரும்; ஒரு சிறு ஐயப்பாடு, அல்லது அச்சம் அல்லது சலிப்பு அல்லது சபலம் ஏற்பட்டால் போதும், மிக வேகமாக வீழ்ந்துவிடும், அல்லது வேறு திக்குத் தாவும்! எனவே, உறுதிக் கழகு உறுமுதல் என்றோ, வீரத்துக்கழகு காரமாய்ப் பேசுதல் என்றோ, தவறான தத்துவம் கொள்ளக்கூடாது. அவ்விதம் வேகம் - காரம் - சூடு - மிக அதிகம் கலந்து, திராவிட நாடு குறித்துப் பேசியோர், பிறகோர் நாள், நிலைகுலைந்து, நினைப்பு அழிந்து, அடியற்ற நெடும்பனையாகிப் போயினர், கண்டோம்.

குறிக்கோள் மறுத்திடுவோர் கடுமொழியால் நம்மைத் தாக்கிடினும், தாங்கிக்கொள், தம்பி என நான் கூறிவரும் இயல்புடையோன் - கூறுவதுமட்டுமன்று, நான் தாங்கிகொள் கின்றேன். அந்தோ, இப்போக்கு, நம்மைக் கோழைகளாக்கிவிடும். ஏன் இந்த அண்ணன் இதுபோல் பயம்கொண்டு பேசுகிறான்? தூற்றுவோர்தமைத் துதிபாடி அடக்குவதோ? வெட்டுக்கு வெட்டு என்னும் வீரம் கொள்ளவேண்டாவோ? இன்று மாலை வாரீர், என் முழக்கம் கேட்டிடலாம், நான் சாடும் வேகம் கண்டு, சரியுது பார் எதிர்ப்பெல்லாம், அமைச்சர்களைத் துச்சமென்று அடித்துப் பேசினால்தான், அடங்குவர் மாற்றார்கள்; எழுச்சி கொள்வார் நம் தோழர். இந்த முறைதான் நாம் இனி மேற்கொள்ளவேண்டுமென்று சங்கநாதம் செய்த சிங்கங்கள் இன்று எங்கே? நம்மோடு இல்லை! வேகம், விறுவிறுப்பு போன விதம்தானென்ன? அறிவு மேம்பாட்டால் அமைதி அரசோச்சுது என்றும், நாகரிகம் முற்றியதால் நாவடக்கம் பெற்றோம் என்றும் இன்று அவர் பேசுகின்றார். பணிவும் குழைவுமன்றோ பண்பாகும் என்கின்றார்.

படபடத்த பேச்சு நம் பாங்கான வளர்ச்சியினைப் பாழாக்கும் என்று "பாடம்' புகட்டுகின்றார்.

இந்த மாறுதல், இத்துணை விரைவாக இவர்க்கு வரக் காரணம் என்ன? உள்நோக்கம் நான் அறியேன், எனினும், ஒன்று புரிகிறது, வேகமாகப் பேசினரே, அப்போதே உறுதி இருந்த தில்லை. உரத்த குரல் மட்டுந்தான் அவர் உடைமை! என்று தெரிகிறது. நான் சொன்னேன் அன்றே, அடக்கம் அழுத்தத்தின் விளைவு, ஆர்ப்பரிப்பு அஃதன்று என்று. என் சொல்லை நம்பாமல். எதிரியைத் திக்குமுக்காடச் செய்யும் தீப்பொறிப் பேச்சினைரைத் தீரமிகக்கொண்டவர்கள், மாற்றாரைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார் ஏமாற்றம் தான் கண்டார்.

"அரசியலில் ஒதிய மரம்போல் இருக்கும் காமராசரின் தைரியத்தை நாம் அறிவோம். இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நாங்கள் பயப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். கோழிக்குஞ்சு மனம் படைத்தவ ரிடத்தில் நாம் அடங்கி நடக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்.''

காமராசர் ஒதியமரம்! அவருக்கு இருப்பது கோழிக்குஞ்சு மனம்!!

இத்துணைக் கேவலமாய்ப் பேசியவர், இன்று என்ன கோலம் கொண்டுவிட்டார்? நாடறியும்!

இவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் வேறு பாதை சென்றனர்; அதே வேகம் அங்கேயும்! ஆக அவர்கட்கு உள்ள குணமும் தெரிந்த வித்தையும், வேகம்! மிக வேகம்! மிகமிக வேகம்! - இவ்வளவே என்பது புரிகிறதல்லவா?

ஆகவே, தம்பி! காரணமற்ற வேகம்வேண்டாம் - அன்னையைக் கேள், பக்குவமாகப் பண்டம் வெந்துவிட்டது என்றால், கொதிக்கும் சத்தம் குறைந்துவிடும். அதுபோன்றே கொள்கைப்பிடித்தம் நல்ல முறையிலே ஏற்பட்டுவிட்டால், வீணான வேகம் எழாது. சிறிதளவு அழுகிய பழத்தைக் கண்டிருக் கிறாயா - மேலே கசியும். சுவையில் புளிப்பேறிவிட்டது. பக்குவம் கெட்டுவிட்டது என்பது பொருள். கரும்பு, அப்படித் தெரிய வில்லை, பார்த்தனையா, தம்பி! அடக்கமாக இருக்கிறது, எவ்வளவோ சுவையைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு.

கொள்கையில் நமக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, "கனல் கக்குவது, எக்காரணம் கொண்டோ? அக்கொள்கையிலே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டால், உடனே காறி உமிழ்வது, இரண்டுமே, மனம் பக்குவப்படாத நிலையைத்தான் காட்டுகிறது. அது கூடாது, தம்பி! நம் நாவிலிருந்து எது வந்தாலும் நாடு ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிலரை நாட்டிலே தேடிப் பிடித்துக்கொள்ளலாம்', என்ற நினைப்பு எழலாகாது.

அது எந்த விதமான "புத்தி' என்று என்னைக் கேட்காதே, தம்பி! எனக்கு வேறோர் வகையான புத்திபற்றிய குறிப்புத் தெரியும், அதை வேண்டுமானால் கூறுகிறேன்.

திராவிட நாடு திராவிடருக்கே எனும் நமது குறிக்கோளில் நம்பிக்கை இருப்பதை நாடறியச் செய்யவேண்டும் என்பதுடன், அந்தக் கருத்தை மறுப்போரை நையப் புடைக்கவேண்டும் நாவினால் என்ற நினைப்பு, ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், காங்கிரஸ் அமைச்சர்கள், நமது கொள்கையை இழித்தும் பழித்தும் பேசிவரக் கேட்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன். அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகக் கொள்கையை விளக்க நமக்குப் போதுமான திறமை இன்னும் வளரவில்லை போலும் ஒன்று எண்ணிக்கொண்டிருந்திருப்பேனே தவிர, அமைச்சர்களை ஒதியமரம் என்று தடித்த வார்த்தைகொண்டு ஏச மனம் வந்ததில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி என் நாவினையும் அசிங்கப்படுத்திக்கொண்டதில்லை, கேட்ப வர்கள் காதிலே நாராசம் பாயும்படியும் நடந்துகொண்டதில்லை.

எனவே, நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர்களுக்கு இருக்கும் புத்தி எந்த விதமான புத்தி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடுமொழியால் தாக்கினதில்லை.

வள்ளுவப் பெருந்தகை கூறினார் அல்லவா, "கனியிருக்கக் காய் கவர்தல் கூடாது' என்று; அம்மொழிவழி நான் நின்று வந்திருக்கிறேன். ஆனால், இன்று, "திராவிட நாடு' கொள்கை தீது, ஆகாது என்ற கருத்தினைக் கொண்டுவிட்டவர்கள், "திராவிட நாடு' ஆதரவாளர்களாக இருந்தகாலை, திராவிட நாடு கூடாது என்று கூறிய அமைச்சர்களின் "புத்தி' எப்படிப்பட்டது என்பதை வீரதீரம் - காரம் - கலந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு எடுத்துரைத்தனர். என்ன விதமான புத்தி இருக்கிறது அமைச்சர்களுக்குத் தெரியுமா, தம்பி! தம்பியாக இருந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றவர்கள், இன்று மறந்துவிட்டிருப் பார்கள்; நான் எப்படி மறக்க முடியும்? அதனால் அதைக் கூறுகிறேன். அமைச்சர்களுக்கு இருப்பது,

"திருவோட்டுப் புத்தி''

விளக்கம் கேட்கிறாயா? அவர்களே தந்தனர். அதனைத் தருகிறேன்:

திராவிடம் பிரிந்தால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்கள் கேட்டு நம்மைத் திகைக்க வைக்க நினைக்கிறார்கள். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியவில்லையே. ஐயகோ! அவர்களின் கதி என்ன கதியோ என்று வருத்தப்படுவதைத் தவிர, அவர்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை.

இங்குள்ள ஆந்திர - கேரள - கருநாடக - தமிழ் மாநிலங்களிலிருந்து வரிப்பணம் டெல்லிக்குப் போகிறது. இது அவர்களுக்குத் தெரியும். டெல்லியிலிருந்து எவ்வளவு பணம் இங்குத் திரும்புகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எப்போதாவது சுயமரியாதை உணர்ச்சி பீறிட்டு வரும்போது, அவர்களே டெல்லியைப் பார்த்துக் கேட்கிறார்கள் - பணம் ஒதுக்கிறது குறைவு என்று. அடுத்த கணமே டெல்லிக்குத் தாசராகிவிடுகின்றனர்.

வாங்கி வாங்கிச் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்கள், பெருந்தனம் கிடைத்தால் மேலும் வாங்கத்தான் எண்ணு வார்கள். பிச்சை எடுத்துப் பழக்கப்பட்டவன் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விடமாட்டான். பிச்சைக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஆயிரம் ரூபாய் புதையல் கிடைத்ததாம்; அதைக்கொண்டு அவன் தங்கத்தாலான திருவோடு வாங்கினானாம். ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அவனுடைய திருவோட்டுப் புத்தி அவனைவிட்டுப் போகவில்லை. அதுபோல இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் திருவோட்டுப் புத்திதான் இன்னமும் இருக்கிறது. (31-10-59)

இவ்வளவு வேகமாகப் பேசியவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? திராவிட நாடாவது மண்ணாங்கட்டியாவது அதைக் கேட்பவர் களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்கிறார்கள்; அதைக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தமக்கு, முன்பு கிடைத்த

ஒதியமரம்
திருவோட்டுப்புத்தி

போன்ற அர்ச்சனைகளை மறந்துவிட்டு, அந்த அடியைத் துடைத்துக்கொண்டு, திராவிடநாடு கேட்பவர்களை ஒழித்துக் கட்டுவதாக முழக்கமிடுவோரைக் கட்டித்தழுவி, அப்படிச் சொல்லடா என் சிங்கக்குட்டி! என்று பாராட்டுகிறார்கள்.

இந்தப் புத்தி என்ன வகையோ, எனக்கென்ன புரிகிறது.

தம்பி! வண்டி ஒன்று நாம் வாடகைக்குவிட வைத்திருந் தால், அதிலே, அவ்வப்போது கிடைக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போகமாட்டோமா? ஒரு சமயம் அந்த வண்டியிலே கற்பூரம் இருக்கும், பிறிதோர் சமயம் கருவாடு இருக்கும்! கற்பூரம் இருந்த இடத்திலா, கருவாடு என்று யோசித்தால், வண்டிக்கு வாடகை கிடைக்குமா! நா வாணிபம் நடாத்துவோர், இதே போக்கினரே! வேகமாகப் பேசுவேன், தீரமாகத் தாக்கு வேன், எதைப் பேசினாலும் சரி! என்று கூறுகின்றனர்.

நாம் "திராவிட நாடு' குறித்துப் பேசுவது, நமது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி, நமது நாவினால் எப்படியெல்லாம் சுடமுடியும் என்பதைக் காட்ட அல்ல!

எனவே, தம்பி! உனக்குக் கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கட்டும், அதேபோது அதைக் காட்டக் கடுமொழியும் பேசவேண்டும் என்று எண்ணற்க!

அதுபோலவே, முன்பு திராவிடநாடு குறிக்கோளை ஆதரித்தவர்கள், இன்று அக்கொள்கையையும் குறிக்கோளைக் கொண்ட கழகத்தை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்ப வனாக உள்ள என்னையும், முன்பு அமைச்சர்கள்மீது உமிழ்ந்த இழிசொற்களை வீசித் தாக்கினால், கவலை கொள்ளவேண்டாம். கற்பூரம் எடுத்துச் சென்ற வண்டியிலே இப்போது கருவாடு என்று எண்ணிக்கொள்! அது தேவை என்று எண்ணுபவர்கள் அதைத் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும், நீங்கள் அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்; கற்பூரம் இருந்ததே, அதை எண்ணிக் கொள்ளுங்கள்.

கழகத்தையும், அதிலே ஈடுபாடு கொண்டவன் என்பதால் என்னையும், வரைமுறையற்ற போக்கிலே, காங்கிரசார் கடித்துரைத்தபோது, வரிந்து கட்டிக்கொண்டு என் பக்கம் வந்து நின்று, வருபவனெல்லாம் வரட்டும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று முழக்கமிட்டவர்களிலே சிலர்தானே இன்று, என்னை ஏசுகிறார்கள்; அதனால் என்ன நட்டம்?

அன்று ஏசியவர்களுக்கு இன்று ஏசுபவர்கள் தந்த பதில் இருக்கிறதே, அதை ஒரு முறை படித்துப் பார்! உன் கோபம் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போகும்; அவர்களிடம் இரக்கமே எழும் - இவர்களுக்கென்ன, தமக்குள்ள வேகத்தை, தாக்கும் திறத்தை, எவர் பேரிலாகிலும் வீசிக்கொண்டே இருக்கவேண்டும் எனும் இயல்பா! அன்று அப்படிப் பேசினார்கள்; இன்று இப்படிப் பேசுகிறார்களே! இது என்ன நாக்கு! இது என்ன போக்கு? என்று கேட்கத் தோன்றும்.

என்னை எவரோ ஏசிவிட்டார்கள்; இன்று என்னை ஏசும் ஒருவருக்குக் கொதிப்பும் கோபமும் பீறிட்டுக்கொண்டு அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை!

எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் - நமை
எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் - அண்ணன்
சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் - அவர்
தூளுக்கும் தூளெனக் கூவிடடா!
பட்ட வடுக்களைக் காட்டிடடா! - அதிற்
பாடும் துணிவினைக் கூறிடடா! - இனித்
துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் - அவர்
தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா!
வானில் பறப்பது நம்கொடிதான் - மொழி
வண்ண மடைந்ததும் நம்வழிதான் - அந்தப்
பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப்
போதனை செய்ததும் நம்மவர்தான்!
ஆனை நிகர்த்தநம் சேனைபலம் - தனை
ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் - உடல்
கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும்
குக்கல் மதியினைக் காட்டுகின்றார்.
தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் - அண்ணன்
தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் - இளஞ்
சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர்
தேம்பி அழுவது சாவகத்தில்!
தூய இவர்கள் பிறந்ததெல்லாம் - வெறும்
சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! - தெரு
நாயி லிழிந்தவர் வாடுகையில் - வட
நாட்டவர் எங்கணும் வாழுகிறார்.
அன்னைத் திராவிடப் பொன்னாடே! - உன்
ஆணை! தமிழ்மொழி மீதாணை!
மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே - வரும்
மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்!
அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் - இல்லை
ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்!
கண்ணையும் காலையும் வெட்டியபின் - இந்தக்
காய மிருந்தென்ன போயிமென்ன?

எப்படித் தம்பி! சுவைமிக்கதாக இல்லையா!! ஆம்! என்பாய், நம்மால் இதுபோலப் பாடவரவில்லையே என்றுகூட ஆயாசப் படுவாய். ஆனால், தம்பி! உனக்கு இதுபோலப் பாடத் தெரியா விட்டால் பரவாயில்லை, இப்படியும் பாடிவிட்டு, பிறிதோர்நாள் என்னை இழித்துப் பாடவும் தூய தமிழை, கவிதைத் திறனைப் பயன்படுத்தாது இருந்தால் போதும். எனக்காகக் சொல்ல வில்லை - தமிழுக்காக - கவிதைத்திறனுக்காக - மரபின் மாண்புக்காக!

பொங்கற் புதுநாளன்று பொன்னான கருத்துகளை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும், அதனைச் செய்து முடித்திடப் பயன்படாமல், இந்தத் தேசம் இருந்ததொரு இலாபமில்லை, என்ற உறுதியைக் கொண்டிடு! உத்தமனே! உன் உழைப்பால்! ஏற்றம்பெற்ற கழகம் இன்று எத்துணையோ இன்னலையும் இழிமொழியையும் தாங்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும், பாதை வழுவாமல், உறுதி தளராமல் பணி புரிகிறது.

பாற்பொங்கல் சமைத்திட உன் பரிவுக்கு உரியாள், பார்த்தனையா, தீய்த்திடும் தீயினைக் கண்டு அஞ்சாமல், வெப்பம் தாங்கிக்கொண்டு, புகை கிளப்பிக் கண்களைக் கெடுத்திட் டாலும் ஈடுகொடுத்துக்கொண்டு, அளவறிந்து, முறையறிந்து, பண்டங்களைச் சமைத்திடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இன்னலை ஏற்றுக்கொண்டு, ஏற்றி இறக்கிய பிறகல்லவா, நீ கூவி மகிழ்கிறாய்; பொங்கலோ! பொங்கல்! என்று.

நாடு மீட்டிடும் நற்காரியம் வெற்றிபெற நாமும் தம்பி! அறிவுடைமை, துணிவுடைமை, பொறையுடைமை எனும் பண்பு களைப் பேணி வளர்த்துக்கொள்ளவேண்டும்.

திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்!

திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக் காட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது.

இவ்வாண்டு, பொங்கற் புதுநாள், இந்த எண்ணத்தை உறுதியை அளித்திடல்வேண்டும்.

நாடு நமது ஆகி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க முனைவோமாக! அந்நிலைதான், தேனில் தோய்த்த பழம்போல இனிக்கும்.

தேன்! பழம்! என்று நான் கூறுகிறேன், நீயோ, தம்பி! உன் பாசம் நிறை பார்வையை, எங்கோ செலுத்துகிறாய்! உம்! விருந்துக்கான அழைப்பைப் பெற்றுவிட்டாய்! விட்ட கணை யைத் தடுத்திடவா இயலும், போ! போ. பொன்னான நாள் இது! பொற்கதிர் பரப்பும் கதிரவனைப் போற்றிடும் திருநாள்! இல்லம் இன்பப் பூங்காவாகும் நன்னாள்! இந்நாளில், எந்நாளும் நாம் இன்புற்றிருக்கும் நிலைகாண அடிகோலும், பொதுத் தேர்தல் வெற்றிக்குக் கழகம் உன்னைத்தான் நம்பி இருக்கிறது. உருட்டல் மிரட்டலையும் காட்டிப் பணம் கொட்டி நமை மாற்றார் மிரட்டும்போதும் மருளாமல் கழகம் தேர்தலில் ஈடுபட்டிருப்பது உன் ஆற்றலைப் பெரிதும் நம்பித்தான், என்பதை மறவாதே!

அண்ணன்,

14-1-1962