அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தேனில் தோய்த்த பழம்
2

பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது. தொடர்ந்து பணியாற்றித் தொல்லைகளை ஏற்றுக்கொள்ள இயலாத தமது நிலையை, தோல்வியை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலே கருத்து வைத்து, வலிவிழந்ததாலோ கோழைத்தனம் மிகுந்ததாலோ, சபலத்தாலே, தன்னலச் சுவையாலோ பணிபுரிவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து கொண்டு, தம்மை அதற்காக எவரும் இழித்தும் பழித்தும் பேசிட இடம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குறிக்கோளையே குறை கூறவும், இழித்துப் பேசவும் கொள்கை வழி தொடர்ந்து நடப்போரை நையாண்டி செய்தும், அவர்மீது வசை உமிழ்ந்தும், தமது தோல்வியைக் கோழைத்தனத்தை மறைத்துக்கொள்ள முனைவர். இக்குணம் கொண்டவர், சிறுநரிக்கு ஒப்பானவர் என்ற கருத்துடன், சிறுகதை எழுதியோர், சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!! - என்று எழுதிக் காட்டினர்; அறிவீர்.

அஃதேபோல, நம்மிடையேயும், அத்தகையோர் அவ்வப் போது கிளம்பத்தான் செய்கின்றனர். வீரம் கொப்புளிக்கப் பேசிய வாயினால் வீணுரைகளைக் கொட்டுவர்! கொள்கைக் காகவே வாழ்கிறோம், சாவு எமை மிரட்டினும் அஞ்சோம்! என்று பேசி, நாட்டவர் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து, இஃதன்றோ வீரம்! இதுவன்றோ கொள்கைப்பிடிப்பு! என்றெல்லாம் புகழ்பாடக் கேட்டுத் தமது மார்பை நிமிர்த்தி நாநடம் காட்டி மகிழ்ந்தவர்களே, பிறிதோர் நாள், நான் யோசித்துப் பார்த்தேன்! அமைதியாக வீற்றிருந்து யோசித்துப் பார்த்தேன். அறிவுத் தெளிவுடன் யோசித்துப் பார்த்தேன்! என்னென்பேன், தோழர்காள்! கொள்கை உப்புச் சப்பற்றது, உருப்பட முடியாதது என்பதனை உணர்ந்தேன்! கொள்கைக்காக நடப்பதாக எண்ணிக்கொண்டு கோணல்வழி நடந்தேன், மடமையில் உழன்றேன், மாசு நீக்கப்பட்ட மணியானேன் இன்று, என்று பேசி, தொடர்ந்து கொள்கை வழி நிற்போரைத் தாக்கிடவும் முனைவர்.

அவர்தம் போக்கு, அவரை வந்து பீடித்துக்கொண்ட தன்னலம், பலக்குறைவு, அதனால் ஏற்பட்டது. அவர்தம் பேச்சு, நோய்கொண்ட நிலையில் கிளம்பும் முக்கல் முனகல், விக்கல் விம்மல், படபடப்பு ஆகியவைகளே. இவை நமக்கு அவர்பால் அனுதாபம் ஏற்படுத்தவேண்டுமேயன்றி, ஆத்திரம் மூட்டுதல் அறவே ஆகாது. பல்போன கிழவர் கரும்பினைச் சாறாகத் தந்தாலன்றி, பரிவுடன் ஏற்றுக்கொள்கிறாரா! இல்லையே!! சொல்போன தோழர்கள் அதே நிலையினரே! கொள்கை இழந்தோர் குணமிழந்தோரே! எனினும், அதனைக் காட்டிக் கொள்ள, வெட்கம் குறுக்கிடாதோ! குறுக்கிடவே, எமது வீரம் வற்றிப்போய்விடவில்லை, அறிவாற்றல் அழிந்து படவில்லை, மாறாகப் பன்மடங்கு வளர்ந்துவிட்டது; எமக்குக் கொள்கை பிடிக்கவில்லை, முன்னம் இனித்ததெல்லாம் இன்று கசக்கிறது, முன்பு சுவைத்தன இன்று குமட்டல் தருகின்றன, முன்பு எது வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ, அது இன்று வீம்பு அல்லது வெறி உணர்வு என்று தோன்றுகிறது, என்று கூறித் தமக்கு வந்துற்ற நோயினைப் பிறர் காணாவண்ணம் மறைத்திட முயல்கின்றனர்.

வேறென்ன! இந்நிலை, தன் நிலை மறைந்திடும்போது ஏற்படுதல், தவிர்த்திட முடியாததாகிவிடுகிறது.

மூங்கில், கரும்பைவிடத் தழைத்து ஓங்கி வளரத்தான் செய்கிறது; சுவை தாராது! அதுபோல், கொள்கையற்ற நிலையின் துணைகொண்டு, தமது இடத்தை "உயரமானதாக' ஆக்கிக்கொண்டு கொள்கையாளர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்வு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக்கொள்வதும், கதைத்துக்கொள்வதும், ஓங்கி வளரும் மூங்கில், கரும்பினைப் பழித்திடுதல் போன்றதாகும். தம்பி! பொங்கற் புதுநாளிலே காண்கிறாயே பூசுணையும் இஞ்சியும்! இஞ்சியும் அளவு என்ன? பூசுணையின் அளவு யாது? எதற்கு எது மணம் அளிக்கிறது? விளக்கவா வேண்டும்?

கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள், எதிர்ப்பு கண்டு அஞ்சார். ஏமாற்றம் ஏற்படும்போதுகூட மனம் உடைந்து போகார்.

குத்திப் புடைத்தெடுத்துப் புதுப்பாணை தன்னிலிட்டு, பால் பெய்து சமைக்கிறாரே, பொங்கல், அதற்கான அரிசி, கிடைத்தது, எப்படி? அரிசியாகவேவா? இல்லையே! விதை முளையாகி, முளை வளர்ந்து பயிராகி, பயிருடன் களை முளைத்து, களை பறித்த பின்னனர்த் தழைத்து, பூச்சிகட்கு ஈடுகொடுத்து, பிறகு, கதிர்விட்டு, முற்றி, செந்நெல்லாகிப் பிறகு அரிசி காண்கிறோம். இந்நிலைக்கு இடையில், உழவன் என்னென்ன தொல்லைகளை, ஏமாற்றங்களை, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளைச் சந்தித்தான், சமாளித்தான், அறிவோமே! பயிருடன் களை கண்டகாலை, நிலத்தையும் உழைப்பையுமா நொந்துகொள்கின்றனர்? இல்லையே! மேலும் உழைத்து தம் உழைப்பினை உருக்குலைக்க முளைத்திட்ட களையினை அகற்றுவோம் என்று பாடுபல படுகின்றனர்.

உழவன், செந்நெல் மணியினை, அடித்தெடுத்துக் களஞ்சியம் தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற்கொண்ட பணியி னின்றும் வழுவிடான்! உழவன் குறிக்கோள், அறுவடை! அந்த அறுவடை காணும்மட்டும் உழைத்தாக வேண்டும்; உழைத்தே தீருகிறான்.

பயிர் தரமாக இல்லை, ஊட்டம் போதுமான அளவு இல்லை, கதிர் செம்மையாக இல்லை, பதர் மிகுதி, மணி குறைவு, என்று ஏதேனும் கூறிவிட்டு, உழவன், தன் பணியினை விட்டு விடுகின்றானோ? விட்டிருப்பின், இன்று இல்லத்தில் இஞ்சியும் மஞ்சளும், மாபலா வாழையும், மற்றைப் பொருள்களும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்?

எனவே, உழவர் திருநாள் இடையிலே இன்னல் ஏற்படினும், தொடர்ந்து பணியாற்றி, அறுவடை கண்டே தீருவது என்ற உறுதியை உழவர் காட்டினர் என்பதை அறிந்து பாராட்ட வழங்கிட, ஏற்ற நாளாகும்.

விதை தூவும்போதே அறுவடை காணவேண்டும் எனும் குறிக்கோளினை உழவன் கொண்டான்; இடையில் எது வரினும் அந்தக் குறிக்கோளை அவன் மறந்தானில்லை, அதனினின்றும் வழுவிடவும் இல்லை. அதன் காரணமாகத்தான், பலவித உணவு வகை, பருகுவன, சூடுவன, பூசுவன யாவும் உலகு பெற்றுள்ளது. களை கண்டு கலக்கம் கொண்டு கழனிவிட்டுக் கழனி மாறி விட்டிருந்தால், என்ன கிடைத்திருக்கும்? தோல்வி!!

இந்த அரிய கருத்து நிரம்பக் கிடைக்கும் நல்ல நாள், தமிழர் திருநாள்.

ஏர்கட்டி உழும்போது எட்டு ஊரார் கேட்டு மகிழத்தக்க பாட்டெழுப்பிய உழவன், களை கண்டு கதி கலங்கி, இந்த வயலினிலே இறங்கியதே என் தவறு! என் உழைப்பதனை இதற்கீந்தது பெருந்தவறு! இனி என் உழைப்பு இதற்கு நான் அளித்திடவே போவதில்லை. அம்மட்டோ! இந்த வயலினையே அழித்தொழிப்போன், இது உறுதி என்று இயம்பிடக் கேட்டதுண்டா? இல்லை! ஆனால், தமது தகுதியும் திறமையும் அறியாததாலேயே, தாரணியில் பலப்பலரும் தலைவர்களானார்கள், இனி அவர்க்குக் கிடைத்திட்ட அந்த இடம் நாம் பெறுவோம், நமக்கு அது கிட்டாது என்பது விளங்கிவிட்டால், இடத்தையே அழித்தொழிப்போம் என்று கூறிடுவோர் கண்டு வியப்பு அடைதல் வேண்டாம்; இத்தகைய இயல்பு கொண்டோர், இத்தனை நாள் எந்த விதமாகத்தான் இங்கிருந்தார், கொள்கை முழக்கி வந்தார், குறிக்கோளின் தத்துவத்தை விளக்கி நின்றார் என்று எண்ணித்தான் எவரும் வியப்படைதல்வேண்டும்

உனைச்சுற்றி இன்றுள்ள பொருள் பலவும், காடென்றும் மேடென்றும் கட்டாந்தரையென்றும் முன்னம் மாந்தர் ஒதுக்கி விட்டிருந்த நிலம் தந்தவையன்றோ!

இன்றோ இன்பம் நாம் துய்ப்பது, இயற்கையை வெல்ல, அதன் ஆற்றல் துணைகொள்ள, எண்ணற்ற மக்கள் எத்தனையோ காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எனவே, உழைப்பின் மேன்மையை, உலகு கொண்டாட அமைந்தது பொங்கற் புதுநாள்.

நிலந்தனிலே உழுதிடுவோர், சேறாக்க மிதித்திடுவார், செய் தொழிலுக்கேற்றவண்ணம், வெட்டியும் குத்திக் குடைந்தும், பிளந்தும், குழி பறித்தும், எத்தனையோ செய்திருப்பது, காண் கின்றாய், அல்லவா? எதன் பொருட்டு? பலன் காண! எவர் துய்க்க அந்தப் பலன்? நிலம் அல்ல!

பலன் காண மக்கள் உழைத்திடுதல் காண்போர் உழைப்போரை வாழ்த்துகின்றார், உழைப்பின் ஏற்றம் செப்பு கின்றார்; உண்மை; தேவை.

ஆயின், வேறொன்று உணர்தல்வேண்டும். பலன் காண உழைக்கின்றான் மனிதன், அவன் காணும் பலன் வழங்கும் நிலமோ பலன் காணாதது மட்டுமல்ல, தன் வலிவு தானிழந்த, பொருளிழந்து போவதுடன், வெட்டுவார் நிற்பதையும் வெறுத் திடாமல், அவர்க்கும் இடம் அளித்திடும் பொறை உண்டே, அம்மம்ம! மிகப் பெரிது!!

என் சோறு உண்டவனா என் சொல்லை மீறுவது? நான் அளிக்கும் ஊதியத்தால் உயிர்பிழைக்கும் போக்கின்னா, நாக்கை நீட்டி நின்றான், நானவனுக்கு உயிர் கொடுத்தோன் என்பதனையும் மறந்து? என் வீடு ஏறி நின்று என்னையே ஏசிட, என்னதான் துணிவு உனக்கு? இறங்கு என் இடம் விட்டு என்றெல்லாம் ஊரார் உரையாடல் கேட்கின்றோம். "பொன்னுடன் மணியும், பொன்னுடையானேனும் இஃது இல்லாதானாயின், என்னுடையான்' என்று எவரும் கூறிடத்தக்க, உண்ணும் பொருள் பலவும், சுவைதரும் கனியதுவும், மணம்தரும் மலர்தானும், தந்துதவும் நிலமதுதான், ஒரு பலனும் காணாதது மட்டுமல்ல, கருவி கரம்கொண்டு தன்னை இம்சிப்போனின் தாள் தங்கி இருப்பதற்கும் இடம் கொடுக்கும், இயல்பு என்னே! சின்னஞ்சிறு பூச்சி, நமதுடலில் ஓரிடத்தில் ஊர்ந்து நமக்குத் தொல்லை தந்திடும்போதினிலே, எவ்விதம் துடிக்கின்றோம். எவ்விதம் தேடுகின்றோம், கண்டெடுத்துப் பூச்சியினைக் கொன்றழிக்கத் துடிதுடித்து, எத்தனைவிதமாகத் தாக்குகிறார், நிலமதனை. எத்துணை பொறுமையுடன் எல்லாம் தாங்கிக் கொண்டு பலன் தந்துதவுகிறது நிலம் என்னும் நேர்மை. உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்திட்டால், அரும் பொருள்கள் பல அளித்து, ஏனென்று கேளாமல், எப்பலனும் பெற்றிடாமல் ஈந்திட நான் உள்ளேன் பெற்றிடுவாய்! பிழைத்திடுவாய்! எத்தனை விதமான இன்னலும் இழிவும், நீ என்மீது சுமத்திடினும், எல்லாம் மறந்திடுவேன், பல்பொருளைத் தரமறப்பேன் அல்லேன்! குத்தியவன் குடைந்தவன், வெட்டியவன் இவனன்றோ, இவன் நிற்க இடம் கொடுக்க ஏன் நாம் ஒப்புதல் வேண்டும். பழி தீர்த்துக்கொள்வோம், இவன் நம்மைப் படுத்திய பாடுகளுக்கெல்லாம், என்ற சிறுமதி துளியுமின்றிச் செல்வம் ஈந்திடுவது காண்கின்றோம்.

அகழ்வாரைத் தாங்கும்
நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

என்றார் வள்ளுவர். பொறையுடைமையில் இஃது தலையாயது என்று கூறுகிறார்.

நிலம்தரும் பலன்கண்டு மகிழ்ந்து, நன்றி கூறும் இந்நாள், பொறையுடைமையைப் போற்றிடவும்வேண்டும்.

தம்பி! உன் எதிரே காணப்படும் விளைபொருள் யாவும், விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துணை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துளது கவனித்தனையா! தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட "விதை' கவரப்படாமலும், அழிக்கப்பட்டுவிடாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான்பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து, அதேபோது பாதுகாப்புக்காகத் தன் ஆடையால், குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத்தக்க விதமாகப் பிணைத்து வைக்கும் தாய்போல, செடியும், கொடியும் பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது, வேர்களை இறுக்கிப் பிடித்துக்கொள்வதன்மூலம், நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்து வைத்திருக்கிறது.

இத்தனை பரிவு வழங்கும் நிலத்தைத்தான், பல்வேறு பொருள்களைப் பெற்றுப் பயன் துய்க்கும் மாந்தர், பெயர்க் கிறார்கள், பிளக்கிறார்கள், குடைகிறார்கள். அகழ்வாரை நிலம் தாங்கிக்கொள்கிறது.

என்னென்ன உதவிகள் செய்தேன் தெரியுமா இன்னாருக்கு என்று கூறிடத் தோன்றும்போதெல்லாம், தம்பி! நிலம் மாந்தர்க்கு வழங்கிடும் உதவியின் தன்மையை எண்ணி, அடக்க உணர்ச்சி பெறவேண்டும். நிலம் மாந்தர்க்கு வழங்கும் திறத்துடன் மாந்தர் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் உதவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கே, வெட்கமாக இருக்கும்.

என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு என்னையே இகழ் கிறான் - நான் எப்படி அதனைத் தாங்கிக்கொள்வேன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம், தம்பி! அகழ்வாரைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை எண்ணிப் பொறையுடைமையைப் பூண்டிடல்வேண்டும்.

இத்தகு நற்கருத்துக்கள் பெற்றிடத்தக்க நாள், இத்தமிழர் திருநாள்.

நற்கருத்துகள் பலவும் நாம் பெற்றிடலாம் இந்நாளில் - அதுவும் அதற்காக ஏடெடுத்துப் படித்த பிறகு என்றுகூட இல்லை. நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை, நினைப்புகளை, பொருட்குவியலைக் கண்டாலே போதும், நான் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் உன் நெஞ்சிலே சுரக்கும்.

அது சரி, அண்ணா! பொங்கற் புதுநாளில் மகிழ்ச்சி பெறலாம், மாண்பு பெறலாம், என்கிறாய், ஒப்புக்கொள்கிறேன் - பொங்கற் புதுநாள், நாடு முழுதுக்கும் மகிழ்ச்சி தரத்தக்க நிலையினில் இன்று இல்லையே, அதனை மாற்றி அமைத்து மனைதொறும் மனைதொறும், மகிழ்ச்சி பொங்கிடத்தக்கதோர் சூழ்நிலையைக் காணவேண்டாமா - அதற்கு யாது செயல் வேண்டும் என்று கேட்கிறாய், புரிகிறது. என் பதிலும் உனக்குத் தெரியும்; நமது அரசு அமைதல்வேண்டும்; அதற்கும் அடிப்படை யாக நமது நாடு நமது ஆகவேண்டும். அந்தக் குறிக்கோளின் அரவணைப்பிலே நாம் இருக்கிறோம். தம்பி! உனக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டுள்ள "பாசப் பிணைப்பு'க்குக் காரணம் என்ன? நாம் ஏற்றுக்கொண்டு போற்றிவரும் குறிக்கோள் திராவிடநாடு திராவிடர்க்கே எனும் இலட்சியம்.

எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதற்கே, திராவிட நாடு திராவிடர்க்கே எனும் குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகின்றீர், நோக்கம் சாலச் சிறந்தது, வழி தவறு; எல்லோரும் இன்புற்றிருக்க நாடு தனியாதல்வேண்டும் என்பதில்லை, திட்டமிட்டுப் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்கினால், ஊர் தழைக்கும், உற்ற குறைகள் யாவும் நீக்கப் பெற்று எல்லோரும் வாழ்வர் என்ன கூறுகின்றீர் என்று கேட்கின்றனர் காங்கிரசார். தம்பி! அவர்கள் பேச்சினை நாகரிக முள்ளதாக்கி நான் இதுபோல் எடுத்துரைத்தேன்.

எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே, எமது கட்சியினர் திட்டம் தீட்டுகின்றார் - இரண்டு முடிந்தது, மூன்றாவது இன்று நடை பயிலக் காண்கின்றீர். இந்தத் திட்டங்கள், நாட்டு வாட்டம் போக்கிடவும், கேட்டினை நீக்கிடவும், வீட்டினிலே வாழ்வின் ஒளி வந்து பரவிடவும் ஏற்ற வழி காட்டிடவும் காண் என்று பேசுகின்றனர்.

திட்டமிட்ட சீரமைப்பு என்பதனைத் தி. மு. கழகம் தேவை யற்றது என்று கூறவில்லை. ஆயின், அது காட்டி, உரிமை வாழ்வு மறுத்திடுவது அறமாகாது என்று கூறுகிறது. சோளக் கொல்லைப் பொம்மை காக்கை கடுவனை விரண்டோடச் செய்திடக்கூடும். எனினும், வயலுக்குடையான் வரப்பருகே நின்று காத்து வளம் பெறுதற்கு அது ஈடாகாது. கார் கண்டதும் ஏர்மீது கண்பாயும் உழவனுக்கு. மாரி பெய்திடட்டும் என்னிருந்திட மாட்டான், பொய்த்திடின் என்னாகும் என்றெண்ணி, மார்பு உடையப் பாடுபட்டேனும், காலத்தில் நீர் பாய்ச்சிக் கடமை யாற்றுகிறான். இவை யாவும் தனக்கென உள்ள வயலில்!

திட்டங்கள், திருவிடம் அமைந்தால் தீய்ந்துபோய்விடுமோ! இல்லை! திட்டமிட்ட சீரமைப்பு அப்போதும் இருந்திடத்தான் வேண்டும் - எனவே, திட்டம்தனைக் காட்டித் திருவிட விடுதலை வேண்டுவதில்லை என உரைப்போர், பருகிடப் பால் கொடுத்து விட்டப் பசுவினைப் பறிப்போர் போன்றாராவர்.

திட்டம் இரண்டு முடித்தோம் என்று, வழி நடந்த களைப்பாலே வியர்வையை வழித்தெடுத்துக் கீழே வீசிவிட்டுப் பேசுவார்போல் உரைக்கின்றார் ஆட்சியாளர் - திட்டமிட்டதன் பலன், தேனாகி இனிக்கிறதா அல்லது பலனைத் தேடிக் கண்டறிய ஓர் முயற்சி நடக்கிறதா என்பதனை எண்ணிப் பார்த்தால் போதும், இவர் கூற்று எத்தகையது என்பதனை அறிந்திடலாம்.

திட்டம் இரண்டு முடித்ததனால் செல்வம் வளர்ந்தது; எனினும், அச்செல்வம் எங்குப்போய் ஒளிந்தது என எவர்க்கும் புரியவில்லை. எனவே, சென்று உசாவுங்கள், செல்வம் எங்கு உளது என்று.

இக்கருத்துடன் உரையாற்றி நேரு பெருமகனார், திட்டத்தால் கிடைத்திட்ட செல்வம் சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறதா, அல்லது சிலருடைய கரம் சிக்கிச் சீரழிந்து போகிறதா என்பதனை ஆராய்ந்து அறிந்து கூறத் தனிக்குழுவை அமைத் துள்ளார். இஃது அவர் பொறுப்புணர்வுக்குப் பொன்னான எடுத்துக்காட்டு எனப் புகழ்ந்துரைப்பர், காங்கிரசார். கூறட்டும்; தவறில்லை. அதுபோன்றே, திட்டமிட்டு ஈட்டிய செல்வம் எங்குச் சென்று ஒளிந்துளது என்று தேடிக் கண்டறிய வேண்டிய நிலையாது பாடம் தருகிறது? திட்டமிட்டது, செல்வம் வளரப் பயன்பட்டதுவே அல்லாமல், சீரான வளர்ச்சியை, எல்லோரும் பலன் காணும் முறையினைத் தரவில்லை.

கரும்பு கரம் எடுத்து, கேட்போருக்குத் தரமறுத்து, தனியே ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டவர்கள், தாமும் அஃதுண்ண நேரம் கிடைக்காமல் வேறுவேறு அலுவலிலே ஈடுபட்டுக் காலம் கடந்தபின்னர், கரும்பதனைத் தேடும்பால், கட்டெறும்புக் கூட்டம் அதனை மொய்த்துக் கிடப்பதனைக் காண்பர்.

இன்று கரும்பு எங்கே? கட்டெறும்புக் கூட்டத்திடம் சிக்கிற்றோ, கண்டறிவீர் என்று பண்டிதர் குழு அமைத்தார்; திட்டத்தின் பலன், மக்கட்கு வந்து சேரவில்லை என்பதற்குச் சான்று இதுபோதும், பலதேடி அலைவானேன்?

ஆங்கில அரசு இங்கிருந்து அகன்றபோது, இருப்பாகப் பல வகையில் விட்டுச் சென்ற தொகை 1,179,74,00,000 ரூபாய்கள் என்கின்றார். இவ்வளவும் வீணாகிப்போனதென விம்முகிறார் நிலை அறிந்தோர், நேர்மையாளர்.

வாழை, உண்பதற்கு, வழித்தெடுத்துக் கூழாக்கி வண்ணத்தாள் ஒட்டுதற்கா?

கரும்பு சாறுபெற, அடுப்பிலிட்டு எரிப்பதற்கா?

சந்தனம் மார்புக்கு; சாணம்போல் வீடு மெழுகுதற்கா?

எதெதனை எம்முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து, அப்பொருளினால் நாம் அடைகின்றோம் முழுப்பலனும்; கூரைக்குக் கழியாக வேய்ந்திடவா, கரும்பு! வேய்ந்திடின் கரும்பினால் காணத்தக்க பலனை நாம் இழந்து, கவைக்குதவாக் காரியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொண்ட தனால் பாழாக்கிவிட்டோம் என்பதன்றோ பொருள்.

அம்முறையில் வெள்ளையர் விட்டுச் சென்ற கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயும், பசையாகிப் பாழ்ப்பட்ட வாழையென, கழியாகிப் பயன் இழந்த கரும்பென, ஆகா வழிகளுக்குச் செலவாகிப் பாழாகிப் போயிற்று. இஃதொன்று போதும் கணக்கறிந்து வாக்களிக்கும் நிலைபெற்ற நாடுகளில், இன்றுள்ள ஆட்சியினை ஏற்கோம் என்று கூறி விரட்டுதற்கு.

இரும்பு இதுபோல இல்லாது போயிற்று. இது மட்டுமன்று. நாளுக்கு நாள் வரிகள் ஏறி, தொகை வளர்ந்து கேட்டிடும்போதே "மலைப்பு' மூட்டிடும் நிலை உளது. சென்ற ஆண்டு டில்லிப்பேரரசு பெற்ற வருவாய் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாடு அரசு, கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்.

இதில், பெரும்பகுதி, ஏழை எளியோர்கள், நடுத்தரத்தினர் கொட்டிக் கொடுத்திட்ட, மறைமுக வரியாகும்.

கலால் வரி, சுங்க வரி என்பவைகள் வளர்ந்துள்ள வகை அறிந்தால், வாய் வீச்சில் வல்லவராம் காங்கிரஸ் பேச்சாளர் கூட, சிந்தை நொந்திடும் நிலை பெறுவார், வெளியே காட்ட மாட்டார்.

கலால் வரி
1946 - 47 - 43.03 கோடி ரூபாய்
1948 - 49 - 50.65 கோடி ரூபாய்
1950 - 51 - 67.54 கோடி ரூபாய்
1952 - 53 - 83.03 கோடி ரூபாய்
1954 - 55 - 103.65 கோடி ரூபாய்
1955 - 56 - 132.27 கோடி ரூபாய்

இவ்விதம் ஏறிக்கொண்டே போகிறது. கணக்கு முழுதும் காட்டிக் கலங்கிடச் செய்வானேன்! பண்டங்கள் செய்கையிலே, கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி.

சுங்க வரி
1946 - 47 - 89.22 கோடி
1948 - 49 - 126.16 கோடி
1950 - 51 - 157.15 கோடி
1951 - 53 - 231.69 கோடி

இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப் படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் "பெரும்புள்ளிகள்' இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால்.

பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு
1957 - 58 - 279.65 கோடி
1958 - 59 - 278.81 கோடி
1959 - 60 - 280.18 கோடி
1960 - 61 - 310.00 கோடி

இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும் இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன?

இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை)

4971 கோடி என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம் கூறுகின்றார் 1960-61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, 143 கோடி என்பதாக!

இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று - இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் - சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது.