அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தேனில் தோய்த்த பழம்
1

கதிரவன் விழா
சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள் ஈட்டிய செல்வம் எங்குளது?
இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன?
படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும் நா வாணிக நிலை
நமக்குத் தேவை அறிவு - துணிவு - பொறை உடைமைகள்

தம்பி!

செவியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? பொங்கலோ! பொங்கல்! என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை - நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே இருக்கவேண்டும், பால் பொங்கும் இந்நாள் திருநாள் - எனினும், என்றென்றும் உன் வாழ்வு தேனோடு பால் கலந்த பான்மைபோல இருந்திடவேண்டும் என்று விரும்பி, உனக்கும் இல்லத்தவருக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தந்திடவே அழைத்தேன்.

மகனே! என்று தாய் அழைக்க, எங்கே அவன்? என்று தந்தை கூப்பிட அண்ணனிடம் கூறுகிறேன் என்று உடன் பிறந்தாள் பேசிட, என்னங்க! என்ற இசையைத் துணைவி எழுப்பிட, எங்கப்பா! இல்லே! எங்கப்பா! என்று நீ பெற்றெடுத்த செல்வங்கள் ஒருவரோடொருவர் விளையாடி, அதன் காரண மாக வம்பு விளைந்து, அப்பா! என்று அழுகுரலைக் கிளப்புவேன் என்று எச்சரிக்கை விடுத்திடும் குரலெழுப்ப, இத்தகு ஒலிகளுக் கிடையிலே உள்ள உனக்கு, என் அழைப்பொலி கேட்கிறதோ இல்லையோ என்று நான் ஐயப்படுவதில் தவறில்லையே!

தம்பி! விழாக்கோலம் கொண்டுள்ள இல்லத்தில் எழிலோவியங்களாகத் திகழும் உன் பெற்றோரும் மக்களும் வளம்பல பெற்று, வாழ்வின் இன்பம் கண்டு, பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டினை வாழவைப்பார்களாக. நினது இல்லத்தில், தமிழ் தழைக்கட்டும்! நின் ஆற்றல் தமிழைக் காத்திடப் பயன் படட்டும்! நின் வீரம் வளரட்டும்! அவ்வீரம் தாயகத்தின் மாண்பு காத்திடப் பயன்படுத்தப்படவேண்டும்! மரவு மறவாதோனே! மாண்பு மிகுந்திடவேண்டுமென்பதிலே நாட்டம் மிகக்கொண்ட நல்லோய்! வெல்க உன் முயற்சிகள்! பெற்றிடும் வெற்றிகள் மற்றையோர்க்கும் வழங்கத்தக்க பேறுகளை உனக்கு அளிக்கட்டும்! ஏறுநடையுடையோனே! வீரர் வழி வந்தவனே! மாற்றார்க்கஞ்சா மறக்குடிப் பிறந்தோனே! நினது இல்லம் இன்று புதுக் கோலம் கொண்டு பொலிவுடன் உளது! கை சிவக்க இல்லத்துப் பெண்டிர், இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்கப் பாடுபட்டு, குப்பை நீக்கிக் கரைகள் போக்கி, வண்ணச் சுண்ணம் அடித்து வகையாய்க் கோலமிட்டு, பசுமை அழகாலே இருப்பிடம் பாங்குபெறத் தோரணம் கட்டி அலங்காரம் கூட்டி யுளார்! அத்தனையும் கண்டதனால் அகமகிழ்வாய் நீ என்று ஆரணங்கு எண்ணிடாமல் இருந்திடுவதுதான் உண்டோ? ஆனால், முத்தழகி முந்தானைதனைக் கொண்டு முகத்தைத் துடைத்திடுவாள், உன் முகமோ எள் வெடிக்கும்! உழைப்பதிக மானாலே உருக்குலைந்து போகுமென உள்ளம்தனில் எண்ணி, ஊரெல்லாம் கூட்டுவயோ! உண்டோ இன்னும் கோலம்? பாரெல்லாம் கூடி நின்று "பதக்கம்' அளிப்பாரென்று இப்பாடு படுகின்றாயோ! என்றெல்லாம் கேலி மொழிதான் பேசிப் பார்க்கின்றாய். ஆரணங்கு அறியாளா ஆடவர் முறைதன்னை, ஓரப் பார்வையுந்தான் வேறென்ன கூறிடுமோ! உள்ளுக்குள் சிரிக்கின்றாள். உன் போக்குத்தான் கண்டு!! ஊரெல்லாம் விழாக்கோலம் கொண்டிடும் இத்திருநாளில், மனையெல்லாம் மாளிகையாய் மாறிடவே வேண்டாமோ! யார் அதனைச் செயவல்ல "மாயாவி' அவளல்லால்!! அறியாமல் அருகிருந்து ஆயிரம் பேசுகின்றாய்! அகன்றிடுவாய், அவள் இங்கு அழகளிக்கும் காரியத்தில் ஆர்வம் மிகக் கொண்டுவிட்டாள்! அடுத்த வீட்டு அழகியுடன் போட்டி இட்டாள், அந்தி சாயும் வேளையிலே அல்லிபூத்த ஓடை அருகினிலே!! மான் துள்ளும் என் மனையில், மயிலாடும், பார்த்திடுவாய்! தேன் சிந்தும் செடி கொடிகள் காட்டிடுவேன், கை வண்ணம் கலந்து வெண்பொற் சுண்ணப் பொடியதனால் என்று வேல்விழி விளம்பிவிட்டாள்; துடியிடையாள் தோற்பாளோ! நாம் இருவரும் உலவிடும் இந்நல்லோடை தன்னையும், தவமிருக்கும் குருகினையும், தாய் முகத்தை நோக்கிடும் சேய் விழிபோல் விழியுடைய அணிலும் அது தின்னும் பழக்கொத்தும்; பார்த்திடுவாய், நீரிருக்கும், ஆங்கு நீலம் பூத்திருக்கும், கன்று களைத்து வந்து நீர் பருகும் கண்டிடலாம்! எல்லாம் இக்கரத்தால் எழுதிடுவேன் என் முற்றம், வண்ணம் பல கொண்ட சுண்ணப் பொடிகொண்டு! கண்டு வியந்திடுவாய் காலை மலர்ந்ததுமே என்று கூறித் துவக்கி விட்டாள் எழில்காட்டும் போட்டியினை. அதை எண்ணி ஆரணங்கு, இடை துவளும் என்றறிந்தும், சரிந்த கூந்தலினைச் சரிப்படுத்த மனமுமின்றிச் சிந்து பாடிடும் புலவோன் தனியோர் உலகதனில்தான் உலாவி இருத்தல்போலத் தையல் இருக்கின்றாள் - நீயோ கை காட்டி அழைக்கவில்லை கண் காட்டிப் பார்க் கின்றாய், கனிவுள்ள சொல்கூட்டி அழைக்கின்றாய்! போ! போ! தோற்றாய்! இன்று விழாக்கோலம் வீடெல்லாம் காட்டிடவே அவள் நினைப்பு, நேரம் எல்லாம்! - என்று நான் கூறிடலாம்; நீ கேட்கவா போகின்றாய்! போ! அண்ணா! பொல்லாத கோலமது போட்டிட இவள் முனைவாள், பின்னர் தாள் வலியும் தலை வலியும் தன்னாலே வந்து சேரும், யார் பிறகு அதற்கெல்லாம் அல்லற்படவேண்டிவரும். நான் அண்ணா! அதனால்தான், நாளெல்லாம் கோலமதை நாட்டிலுள்ளார் கேட்டுக்கொண்டது போல் போட்டபடி இருக்க வேண்டாம், வா உள்ளே! என்றழைத்தேன். வம்பு அல்ல, நிச்சயமாய்! - என்று பதிலுரைப்பாய். ஏ! அப்பா! உனக்கென்ன, பதிலளித்து வெற்றி பெற வல்லமைக்கா பஞ்சம்!!

ஒன்றினை இன்றெண்ணிப் பார்த்திடுவாய்! வெறும் இலைகளே இருந்த கொடி அரும்பதனைக் காட்டிப் பின் அதுவே மலராகி, மணம் பரப்பிக் காட்டுவதும், தூவியது உட்சென்று, உயிர்பெற்று நிலம் பிளந்து, தாவி அணைத்திடத் தன் தாய் நோக்கிச் சென்றிடும் சேய்போல, மண் பிடிப்பினி லிருந்து விண்தொட்டு விளையாட எண்ணுதல்போல், பயிர் வளர்ந்து கதிர் குலுங்குவதும், தாளாலே நீர் உண்டு சுவை கூட்டித் தலையாலே தந்திடும் தாரணியுள்ளார்க்கு அன்னை போல் விளங்குகின்ற தென்னை ஓங்கி வளருவதும் ஏற்றுக்கு? எவர் பொருட்டு?

நாம் வளர்ந்து வருவது வீட்டுக்கு, நாட்டுக்கு; தொண்டாற்ற, துயர் நீக்க; தோழமை பூண்டொழுக, தொல்லுலகம் வளம் பெறவே மிகும் உழைப்பை நல்கிட உரைக்கின்றார், உணர்கின்றோம்; உணராமலேயே கூடப் பலர் உரையாடி இருக்கின்றார். ஏடு பல தன்னில் நாடறிய எழுதி யுள்ளார். எனவே, பொருள் விளக்கம் பெறுகின்றோம். ஆனால், வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாடக் கனியாட, செடியாட மலராட, ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும், என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது? கதிர் தந்துகொண்டிருக்கும் பயிர்வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது!! பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது! ஒன்றும் காணோம்! சேறாக்கி வைக்கின்றோம். நீர் பெய்து, செடி கொடியும் பயிர் வகையும் இருக்கும் இடம் தன்னில்! ஏனய்யா எனக்கிந்தச் சகதியிடம் எனக் கேட்கும் போக்கினைக் கொள்ளாமல், சேறு தந்த நமக்குச் செந்நெல் மணியதனைப் பயிர் தரக் கண்டோம்; செந்தேன் சுவைகொண்ட பழம் தந்து மரமதுவும் நமைக் கண்டு கூறிடுது, இன்று இது போதும், நாளை வா! மேலும் பெற! என்று. நாமோ? என்செய்கின்றோம்? கொடுத்தது என்ன, கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது, கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா! எத்தனை எத்தனை கணக்குகள், காபந்து, வழக்குகள், வல்லடிகள்! ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு நாம் என்ன தந்தோம், தம்பி! மண்ணுக்குள் போட்டு மூடிவிட்டோம், மரித்தவரைச் செய்வதுபோல், பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது! பெறுகிறோம் நாம், ஒரு கணக்கும் பார்க்காமல்!

வள்ளல்களிடம்கூடக் கணக்கு வரைவார் உண்டென்னலாம்! அஃதன்றி, கவிதை வாரி வழங்கினர் காண் பொருள் பெற்ற பெரும் புலவர்! இயற்கையோ எந்த ஓர் வள்ளலும் எதிர்த்து நிற்க ஒண்ணாத இயல்பினதாய் இருந்திடுதல் இன்றளவும் காண்கிறோம்.

பயன் துளியும் கருதாது பாருக்கு இனிமைதனைப் பயக்கும் இயற்கைக்கு, நாம் நன்றி கூறிடவே வந்தது இந்தத் திருநாள். கடன் மெத்தப்பட்டுவிட்ட மாந்தர், ஓர்நாள் கூடி, கதிரவன் தரும் ஒளிக்கும் கதிர்தரும் பயனுக்கும், மண் தந்த மாட்டுக்கும், வந்தனைகள் செய்து, வாழ்த்துப் பல பாடி, உம்முடைய உதவி யினால் உயிர் வாழ்ந்து வருகின்றோம்; உலகு தழைத்திடவே உழைத்திடும் உத்தமர்காள்! வாழி! நீர் வாழி! எமை வாழ்விக்கும் வள்ளல் வாழி! எனப் போற்றுகின்றோம். ஞாயிறு போற்றுதும் என்று நம் இளங்கோ, பாடியது, இயற்கையின் பெருநிதியை நாம் பெற்று வாழ்வதை எடுத்தியம்பத்தான், கதிரவன் ஒளியதால், உயிர் வளருவதால், ஞாயிறு போற்றதும் எனும் மொழிவழிப்படி, பொங்கற் புதுநாள் எனும் திருநாள் கொண்டாடி மகிழ்கிறோம்.

தம்பி! கதிரவன் ஒளியில் உயிர்ப்புச்சக்தி இருப்பது இன்று பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாதவரும் அறிந்துள்ள ஒன்றாகும். ஆனால், அதிலே உள்ள விந்தையினைக் கூர்ந்து கவனித்திருக் கிறாயா? கதிரவன் ஒளி, காரிருளை விரட்டுகிறது, "காலை மலர்கிறது' என்று கூறுவது கவிதா நடைக்காக மட்டுமல்ல, அரும்பு கூம்பிக் கிடத்தல்போலத்தான் இரவுக் காலத்தில் உலகு இருக்கிறது; பகலவன் எழுந்தால் பகல் காண்கிறோம்; அரும்பு இதழ் விரித்திடுதல்போல, உறக்கம் கலைந்து உலகு எழுகிறது, மலர்கிறது.

தட்டி எழுப்புதல் மட்டுமின்றி, உயிர்ப்புத் தந்து, காத்து நிற்பது ஞாயிறு. ஆயினும், இதனை அறிவாயே எந்தச் சக்தி உயிர்ப்புத் தருகிறதோ, அதுவே அளவு அதிகமாகப் போயின், கடும் வெயிலாகித் தவிக்கிறது தணலென்றாகிறது, பொரித்துத் தள்ளுகிறது, எரித்துவிடுகிறது, கருக்கிவிடுகிறது, சாம்பலாக்கி விடுகிறது.

எனவே, ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறது; அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த "வலிவு' ஆக்கும் பணியினைச் செம்மையாகச் செய்திட வேண்டு மெனின், அது பயன்படுத்தப்படும் "அளவு'தான் முக்கியம். அளவு அதிகமாயின் அழிவுதான்!

இந்த அளவும், எல்லாம் பொருள்கட்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடங்கட்கும், எல்லா நிலைமைகட்கும் ஒரே விதமாக இருந்திடும் என்றும் எண்ணற்க. இருத்தலும் கூடாது.

எனவே, இந்த "அளவு'க்கு அளவுகோல், எது என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது. அது மட்டுமல்ல. நமது தேவை களுக்கு ஏற்ற வகையில் அந்த அளவினை நாம் கூட்டக்குறைக்க, முறைப்படுத்த வகைப்படுத்தவும் முடியும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. கதிரவன் ஒளிதரும் விளக்கு அல்ல, தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையிலே, மட்டுப்படுத்த அல்லது அதிகப்படுத்த அல்லது இல்லாது செய்திட. கதிரவன் ஒரு ஒளிப் பிழம்பு! இருக்குமிடம் நீண்ட நெடுந்தூரம்! எத்தனை கல் தொலைவு என்று கணக்கினைக் கூறுவது விஞ்ஞானம். நாம் உணருவது இது; ஞாயிறு எவ்வளவு தொலைவிலே உளது என்றால் நாம் அதனுடைய துணைகொண்டு உயிர்ப்புச்சக்தி பெறும் விதமான அளவு தொலைவில் உளது. இல்லையேல் ஒன்று, ஒளியும் வெப்பமும் கிடைக்கப்பெறும் உயிர்ப்பொருள் யாவும் உறைந்து போய்விடும்; அல்லது தீய்ந்து தீர்ந்து போகும். இயற்கை நியதி இரண்டும் ஏற்படாதபடி அமைந்துள்ளது. உறைந்துபோகச்செய்திடவும், கொளுத்திக் கருக்கிவிடவும் முடியும் என்பதனை நாம் உணரக்கூடிய "குறிகள்' ஒவ்வோர் அளவு அவ்வப்போது நமக்குத் தென்படத்தானே செய்கின்றன. கொளுத்தும் வெயில்! என்கிறோம், கொட்டும் குளிர் என்கிறோம். அவை குறிகள்! எச்சரிக்கைகள்! இயற்கை மூலம் நாம் பெறும் வலிவின் அளவு முறை தவறிப்போனால், என்ன நேரிடும் என்பதனை நாம் அறிந்துகொள்ள, இந்தக் "குறிகள்' போதுமானவை.

"தம்பி! காய்கதிரோன் உள்ளடக்கிக்கொண்டுள்ள வலிவு மட்டுமல்ல, பொதுவாக இயற்கையின் ஆற்றலே இத்திறத்தது தான். தேவைக்கேற்ற, நிலைமைக்குத்தக்க அளவு இருந்தால் மட்டுமே பலன்; அளவு முறை கெட்டால் எல்லாம் பாழ் வெளியே, படுசூரணமே! கண்ணைக் கவர்ந்திடும் வண்ணப் பூக்கள் உதிருவதுபோலக் காட்சிதரும் வாணம், ஒன்று; வீழ்ந்ததும் அதிர்ச்சிகளை வெடிப்புகளை இடிபாட்டைப் பெருந்தீயை மூட்டிவிடும் வெடிகுண்டு மற்றொன்று. முறை கெட்டால், அளவு அதிகமானால் என்ன ஆகும் என்பதனை, இதனின்றும் அறிந்துகொள்ளலாம்.

இயற்கைக்கு இத்தகைய ஆற்றல் இருப்பினும், அதன் இயல்பு பெரும் அளவு, உயிர் இனத்துக்கு வாழ்வளிக்கும் செம்மைக்குப் பயன்பட்டு வருகிறதேயன்றி, அழிவுக்குப் பயன்பட வில்லை, எவ்வகையாலோ எத்துறையிலோ ஆற்றல் பெற்ற மாந்தர்கூடத் தமக்குள்ள "அழிக்கும் சக்தியை' இயற்கைபோலப் பொறுப்புடன் அளவுபடுத்தி உபயோகிக்கின்றனரா எனில், இல்லை என்னலாம்.

உடல்வலிவோ பொருள்வலிவோ சிறிதளவு மிகுதியாக உள்ளதென்றால், அதனைக் காட்டி ஆதிக்கம் பெறவும், பிறரை அழித்திடவும் காட்டும் உணர்ச்சி தடித்துவிடுகிறது; சில வேளை களிலே அது வெறியாகியும் விடுகிறது.

செங்கிஸ்கான், தைமூர் என்றழைக்கப்படுவோர், தமக்கு இருந்த தாக்கும் ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்தி, வெறி யாட்டமாடித் தரணியை நிலைகுலையச் செய்தனர் என்பர். நம் நாள்களிலே இட்லர் தமக்குக் கிடைத்த ஆற்றலை, வலிவை, ஆதிக்கம் பெற அழிவினை மூட்டிடவே பெரிதும் பயன்படுத்தியதனைக்

கண்டோம். பாயாத புலி, பதுங்காத நரி, சீறாத பாம்பு, உறுமாத மிருகம், கொத்தாத கழுகு இல்லை என்பதுபோல வலிவு ஏற்றப் பெற்றவர்கள் வெறிச் செயலில் ஈடுபடாதிருப்பது, நூற்றுக்கு எண்பதுக்கு மேற்பட்ட அளவு இல்லை என்றே கூறலாம். இயற்கையை, மாந்தர் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்துணையோ பாராட்டத் தோன்றுகிறது. அழிக்கும் சக்தியைக் காற்றும் கதிரோனும், மழையும் பெருநதியும், கடலும் நில நடுக்கமும் எரிமலையும் எரிநட்சத்திரமும், மிருகம்போலவோ, மாந்தரில் வெறிகொண்டலைவோர்போலவோ, அவிழ்த்து விட்டிருந்தால், அவனி ஏது? காலம் ஏது? கருப்பொருள் ஏது? எல்லாம் பாழ்வெளியாகிப் போயிருக்கும்.

இயற்கை, மிகப்பெரும் அளவுக்கு, உயிர்க்கு ஊட்டம் தரவே பயனளித்து வருகிறது; அழிக்கும் தீச்செயலில் ஈடுபட்டுவிடவில்லை.

கதிரோனுக்கு விழாக் கொண்டாடும் இந்நாளில் இக்கருத்தினை எண்ணிக்கொள்வது பொருத்தமுடைத்து என்பதனால் இதனைக் கூறினேன். ஆனால், தம்பி! மனிதன் தன் அறிவுத் திறனைக்கொண்டு கூடுமான மட்டும், அழிவு தன்னை அண்டாதபடி தடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டான்; பழகிக் கொண்டான். விஞ்ஞானம் இதற்கான முறைகளை, வாய்ப்பு களைப் புதிது புதிதாகத் தந்தவண்ணம் இருக்கிறது.

இத்துடன் மனிதன் தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான்; சுற்றுச் சார்பினைச் சமைத்துக்கொள்கிறான். சுற்றுச்சார்புக்கு ஏற்றபடி இயல்பு, தொழில், தொடர்பு ஆகியவை அமைகின்றன. இன்று திருநாள். இது ஓர் புதிய, இனிய, சுற்றுச்சார்பை இல்லங்களிலே ஏற்படுத்தி வைக்கிறது. புத்தாடை, சுவை உணவு, கலகலப்பு, தோழமை, குதூகலம், நமது இல்லங்களைப் புதுக்கோலம் கொள்ளச் செய்வது காண்கிறோம். நேற்று உண்டு மகிழ்ந்தோம், நாளையும் உண்போம், எனினும், இன்று - விழா நாளன்று - உண்பதும் உரையாடுவதும் தனியானதோர் "சுற்றுச்சார்பு' காரணமாகத் தனிச்சுவை பெறுகிறது.

ஊரெங்கும், அல்லது மிகப் பெரும்பாலான இடங்களிலே விழாக்கோலம் இருப்பது, அவரவர் இல்லத்தில் அமைந்துள்ள விழாக்கோலத்தை அதிகப்படுத்தியும் புதுவிதமாக்கியும் காட்டுகிறது.

பல சமயங்களில், சிலருடைய இல்லங்களிலே புத்தாடை, அணிகலன் பெறுவதும், சுவைமிகு பண்டங்கள் உண்பதும், பேசி மகிழ்வதும், இசை கேட்டு இன்புறுவதும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், சிலருடைய இல்லங்களில் மட்டுமே, சீர் தெரியும், மற்றைய இல்லங்களில் அது அப்போது இராது. எனவே, அவர்கட்கு, மகிழ்ச்சி இருக்கக் காரணம் இல்லை, விழா நாளெனில் அதுபோலன்று. ஊரெல்லாம் கொண்டாடுவர். தத்தமது இல்லத்தில் உள்ளதுபோன்றே மற்றையோர் இல்லங்களிலும், விழாக்கோலம், அளவும் வகையும் மாறுபடும் எனினும், மகிழ்ச்சிக்கான "சூழ்நிலை' ஓரளவுக்கேனும் இருந்திடும். "ஊரெல்லாம் வாழ்ந்திடக் கேடொன்றும் இல்லை', "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பனபோன்ற முதுமொழிகளின் வழி நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது விழா நாளின்போது,

எனவே, பொது இன்பத்தில் நமது இன்பம் ஒரு பகுதி, எல்லோரும் இன்பம் பெறுகின்றனர், நாம் மட்டும் அல்ல என்று உணர்வு தரும் உவகை விழா நாளுக்கென அமையும் தனிச் சிறப்பாகும்; தேனில் தோய்த்த பழம் புதுத் தித்திப்பு பெறுதல் போல, ஊரெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையிலே நாமும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்றோம் எனும் எண்ணம், பொங்கற் புதுநாளில் கிடைக்கப் பெறுகிறோம்.

தளதளவென்று செடிகொடிகள் இருந்திடுவதே கண்ணுக்கு விருந்தளிக்கத்தான் செய்கிறது. பசுமைக் காட்சி பாங்குடன் தெரியும்போது பார்த்துக்கொண்டிருந்தாலே பட்ட பாடுகூட மறந்து போகுமளவு மனத்துக்கு ஓர் "தெம்பு' ஏற்படத்தான் செய்கிறது. நீலநிற வானத்தைக் காணும்போது ஓர்வித மகிழ்ச்சி பிறப்பதில்லையா! அதுபோல.

பசுமைப் பாங்கு காட்டும் செடிகொடியில் வண்ண மலர்கள் பூத்திடும் காட்சி தெரியுங்காலை, வனப்பு மிகுதியாகிப் புது மகிழ்ச்சி பெறுகிறோம்.

மலர்க்குவியல் காணக் காட்சிதான் எனினும், செடி கொடியில் அவை பூத்திருக்கும் - தனிக்கவர்ச்சி தெரிகிறது. விழாநாள் மகிழ்ச்சி, செடிகொடியில் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்போன்றது. எனவேதான், அந்த மகிழ்ச்சியிலே தனியானதோர் சுவை பெறுகிறோம்.

தம்பி! எல்லா இல்லங்களிலும் என்ற சொற்றொடரை நான் மெத்தவும் பயன்படுத்தியுள்ளேன், பொருளை விளக்க, பாடம் காட்ட; எனினும், இன்று நாடுள்ள நிலையில், விழாவும் மகிழ்ச்சியும் எல்லா இல்லங்களிலும் உளது என்று கூறுவது இயலாது; நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவருமே துணிந்திடார். வறுமை கப்பிக்கொண்டுள்ள நிலை இன்று, வாட்டி வதைக்கிறது. வரிக் கொடுமை ஓர்புறமும், அகவிலை மற்றோர் புறமும், மக்களை இடுக்கித் தாக்குதலுக்காளாக்கி இருக்கிறது. இந்நிலையில் விழாக் கொண்டாட, மகிழ்வெய்தி இருந்திட வாய்ப்புள்ள இல்லங்கள் மிக அதிகம் எனக் கூற இயலாது.

ஏதோ சில இடத்தில் இருந்திடும் இன்பச் சூழ்நிலை எல்லா இடங்களிலும் பரவிடத் தக்கதோர் நன்முயற்சியில் ஈடுபடுவது சான்றோர் கடன்.

இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று.

எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். திராவிடநாடு திராவிடருக்கே என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது.

எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர்.

அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை.