அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

வண்டிக்காரன் மகன்
4

குடிசைக்குப் பக்கத்தில் சடையப்பன் வீழ்ந்து கிடந்தான், இரத்த வெள்ளத்தில்.

எதிரே, துப்பாக்கியுடன் காளிங்கராயர் ஆவேசம் வந்தவர்போல் நின்று கொண்டிருந்தார்.

ஜெமீன்தாரர், நார்மன் துரையிடம் பேசிக்கொண்டிருந்தபோது; காளிங்கராயர் கீழே வந்திருக்கிறார், யாரும் அதனைக் கவனிக்கவில்லை.

கீழே சடையப்பன் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதும், சொக்கலிங்கம் அலறினான்; துடித்தான்; அவர்மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.

காரணம் தெரியாமல் மற்றவர்கள் திகைத்து நின்றனர்.

“அய்யய்போ! அநியாயம் நடந்துவிட்டதே... யார் செய்த அக்கிரமம் இது.”

“யார் செய்தது என்று கேள்... அக்கிரமம் என்று சொல்லாதே...”

“கொலை செய்துவிட்டிருக்கிறாய்.”

“இன்னும் உயிர் போகவில்லை – சாகடிக்கத்தான் சுட்டேன்... ஏன் தெரியுமா... இந்தக் கிழவன், உன்னைப் பற்றி இழிவாகப் பேசினான்... நீ... சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது... குழந்தையைக் கவனிக்காமல் இருந்ததற்காக அந்தக் கிழவியை இரண்டு தட்டு தட்டினேன்; பாய்ந்து வந்தான் கிழவன் என்மீது; அடித்து விரட்டினேன்; இந்தத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டுவந்தான் என்னைக் கொல்ல; இங்குக் காவல் காத்துக் கிடக்கும் நாய்”

மாமா சொல்வது சரி. இதுகளுக்கு இப்படிப்பட்ட இழிவான போக்குதான் இருக்கும். “துப்பாக்கியைப் பறித்துக் கொண்டேன், சுட்டேன்; சுருண்டு விழுந்தான்; செத்தான் என்று நினைத்தேன்; கிழட்டுப்பயல் கூவினான், கூப்பிடு! கூப்பிடு! என்று. யாரை? என்று கேட்கிறேன்... என் மகனை! என் மகனை! என்கிறான். என்னடா உளறல் என்கிறேன். நானா உளறுகிறேன்... உயிர்போகும் முன் உண்மையைக் கூறுகிறேன்... மாளிகையிலே இருக்கிறான் என் மகன்! எல்லோரும் பாராட்டும் அறிவாளன்! சொக்கலிங்கம்! என்கிறான்... சமையற்காரனையா சொல்லுகிறாய் என்று கேட்கிறேன், மிஸ்டர் லிங்கம், உங்களைத்தான் சொல்லுகிறேன்... நீங்கள் அவனுடைய மகனாம்! வண்டிக்காரன் மகனாம்...!!”

“ஆமடா ஆம்! நான் அவர் மகன்தான்! வண்டிக்காரன் மகனேதான் நான்! அவர் குடிசையிலே குமுறிக் கிடந்தார், நான் மாளிகையில் வாழ்வதற்காக. இன்னலையும் இழிவையும் ஏற்றுக்கொண்டார், நான் செல்வமும் சீரும் பெறவேண்டுமென்று. மிஸ்டர். நார்மன்! இவர் என் தகப்பனார்... வண்டிக்காரன் இந்த ஜெமீனில்! வாழ்ந்து கெட்டவர். நான் சிறு வயதிலேயே மாமனால் வளர்க்கப்பட்டு வந்தேன்... இங்கு வந்ததே இல்லை... மகனே! நாலு பேர் பார்த்து மதிக்கத்தக்க நிலை உனக்கு வரவேண்டும். அதற்கு இந்த ஜெமீனில் வாத்தியார் வேலையை ஏற்றுக்கொள். உனக்கு நிறைய சிபாரிசுகள் கிடைக்கும். பெரிய உத்தியோகம் கிடைக்கும். அதுவரையில் என் மகன் என்பது மட்டும் வெளியே தெரியக்கூடாது. வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், ஜெமீன் மாளிகையில் இடம் கிடைக்காது என்றார்; எவ்வளவோ மன்றாடினேன்... கேட்கவில்லை... சத்தியம் செய்திடச் சொன்னார் தத்தளித்தேன்.. மாளிகையிலே எனக்கு விருந்து, மகிழ்ச்சி; என் தகப்பனார் இங்கு, குடிசையில், குதிரைக் கொட்டிலில். என் எதிரிலேயே ஏசுவார்கள் கேவலமாக, என் இரத்தம் கொதிக்கும், கண்ணீர் கொப்புளிக்கும், அப்போதும் என்னை அந்த உத்தமர் பார்த்துத் தலை அசைப்பார். என்னைக் கட்டிப்போட்டு விட்டார்! சீமான்களுடன் சீமாட்டிகளுடன் நான் சாரட்டில் சவாரி செய்வேன்; அவர்தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார்! வண்டியின் வெல்வெட்டு மெத்தை என்னை முள்ளாய்க் குத்தும்... சிறிதளவு குளிர்காற்று வீசினாலும், எங்கள் உடலுக்குக் கம்பளிச் சட்டை – போர்வை! பனி பெய்யும், அவர் எங்களை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்வார். எல்லாம் எனக்கு இந்தச் சமூகத்தில் ஒரு புதிய அந்தஸ்து தேடித் தர... அம்மா! அம்மா!...”

“கிழவியைப் போலீஸ் கொட்டடிக்கு அனுப்பிவிட்டேன்... திருடினாள்.... பத்துப் படி கொள்... சாட்சி இருக்கிறது...”

“மிஸ்டர். நார்மன், எனக்கு வேண்டும்; இந்தத் தண்டனையும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும். மாளிகையிலே ஒரு போலி வாழ்க்கை எனக்கு. அப்பா சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார். அம்மா மீது திருட்டுக் குற்றம்...”

“உன் மீது மோசடிக் குற்றம்... ஆமாம்! இவ்வளவு நாள் உன் குடும்ப உண்மையை மறைத்து ஜெமீன் குடும்பத்துடன் உறவாடிய மோசடி.”

“மிஸ்டர் லிங்கம்! மிஸ்டர் ஜெமீன்தார்! முதலில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும்... மற்றவை பிறகு... கிளம்புங்கள்...”

* * *

சடையப்பனைக் காப்பாற்ற முடியவில்லை, எத்தனை உயர்தரமான மருத்துவர்களாலும்.

மகனைப் பெரிய உத்தியோகத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசை ததும்பிக் கொண்டிருந்த இதயம், பேசுவதை நிறுத்திக் கொண்டது.

செய்ய வேண்டியது யாவும் செய்துவிட்டேன். சென்று வருகிறேன் என்று கூறுவது போலிருந்தது சடையப்பனின் முகத்தோற்றம்.

போலீசிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாயின் காலின் கீழ் விழுந்து கதறினான் சொக்கலிங்கம்.
வண்டிக்காரன் மகன்!

சடையன் மகன்!

பெரிய குடும்பம்! அந்தஸ்தான இடம் என்று எண்ணிக் கிடந்தோமே, நம்ம வண்டிக்காரன் மகன்!

அப்பனும் மகனுமாகச் சேர்ந்து நம்மை மடையர்களாக்கி விட்டார்களே...

ஜெமீன் குடும்பத்துக்கே இழிவு உண்டாக்கிவிட்டானே...

உமாவையே கொடுக்க இருந்தேனே...

முட்டாள்!

இவ்விதமான பேச்சுதான் முதலிலே ஜெமீன் மாளிகையிலே கிளம்பிற்று.

ஊர் கொதித்தது. மகனுக்கு அந்தஸ்து தேடிக் கொடுக்க வேதனைத் தீயிலே வீழ்ந்த உத்தமன் சடையப்பன் என்று ஏழையர் உலகம் போற்றிற்று.

போலீஸ், காளிங்கராயரைத் தேடிக்கொண்டிருந்தது.

சொக்கலிங்கம் அதிர்ச்சி தாங்காமல் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

நீதியை நிலைநாட்டியாக வேண்டும் என்று நார்மன் வேலை செய்து வந்தார்.

காளியங்கராயர் பிடிபட்டார்; வழக்குத் தெடரப்பட்டது.

அச்சம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று ஜெமீன்தாரரை.

நார்மனை நாடினார், காளிங்கராயரை மீட்பதற்காக.

“பிடிவாதம் வேண்டாம் மிஸ்டர். நார்மன்! பிடிவாதம் கூடாது. கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.”

“நான் எந்த உதவியும் செய்ய முடியாது. நடந்ததை அப்படியே கோர்ட்டில் சொல்லத்தான் போகிறேன்... நம்முடைய வியாபாரத் தொடர்பு இருந்தாலும் சரி... அறுந்தாலும் சரி...
* * *
“மிஸ்டர் நார்மன்! ஆத்திரத்தில் நடந்துவிட்டது... எப்படியாவது...”

“நடந்திருப்பது கொலை, மிஸ்டர் ஜெமீன்தார்... நான் எப்படி உடந்தையாக இருக்கமுடியும்... வண்டிக்காரனும் மனிதன் மிஸ்டர் ஜெமீன்தார், மனிதன்!”

“நீங்கள் மனது வைத்தால், என்மருமகன் தப்பலாம்... சாட்சிகளைத் தடுத்துவிட முடியும்.”

“முடியும் ஜெமீன்தார்! முடியும், நான் அந்த நேரத்தில் அங்கு வராமலிருந்தால் பிணத்தையே மறைத்துவிட்டிருக்கவும் முடியும். ஆனால் என்னால் உண்மையை மறைக்க முடியாது.”

“பூர்வீகமானது எங்கள் ஜெமீன், இப்போதே கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். மருமகனுக்கும் ஏதாவது கோர்ட்டிலே கிடைத்துவிட்டால் இழிவு எந்தக் காலத்திலும் போகாது மிஸ்டர் நார்மன். இருபது வருட சினேகிதம் நமக்குள்...”

“இருபது வருட வியாபாரத் தொடர்பு! மிஸ்டர் ஜெமீன்தார்! சமுதாயத்தில் உள்ள போலி அந்தஸ்து உணர்ச்சியை வளர்க்கக் கூடாத – அது எந்த நாட்டில் இருந்தாலும்... லிங்கம் சொல்வது முற்றிலும் சரி, எங்கள் நாட்டிலேயும் இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்ச்சி எங்கே இருந்தாலும், பாம்பு பாம்புதானே.”
* * *

காளிங்கராயரை விடுவிக்க ஜெமீன்தாரர் இலட்ச ரூபாய் வரையில் செலவிட்டுப் பார்த்தார்; பிரபலமான வழக்கறிஞர்கள் வாதிட்டுப் பார்த்தார்கள். பலிக்கவில்லை. அயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சோகமே உருவான நிலைபெற்றார் ஜெமீன்தாரர்.

என்ன செல்வம் இருந்து என்ன பயன் மருமகனைக் காப்பாற்ற முடியவில்லையே! ஜெமீன் குடும்பத்துக்கு இழிவு ஏற்பட்டுவிட்டதே, இந்த இழிவு எப்படி நீங்கும் என்று எண்ணி, சீமைக்குச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து, ஜெமீன் நிலத்தை விற்றுப் பணம் திரட்டிக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்த சொக்கலிங்கம், மெல்ல மெல்ல நலமடைந்தார்.

நார்மன் ஏற்பாடு öய்து கொடுத்திருந்த விடுதியில், தன் தாயாருடன் தங்கி இருந்தான்.

பல ஆண்டுகளாக ‘அம்மா! அம்மா!’ என்ற அந்த அன்பு மொழியைச் சொல்ல வாய்ப்புப் பெறாதிருந்த குறையைப் போக்கிக்கெள்பவன்போல, விநாடிக்கு விநாடி! ‘அம்மா! அம்மா!’ என்று அழைத்து, நான் பாவி அம்மா! ‘நான் பாதகன் அம்மா!’ காளிங்கராயர் அல்ல அம்மா அப்பாவைச் சாகடித்தது, என் சுயநலம் – என் மடமை – என் கபட நாடகம், அம்மா! எனக்கு உய்வு உண்டா! நான் மனிதன்தானா!’ என்று கூறிக் குமுறிக் கிடந்தான்.

நார்மன் அவனுக்கு ஆறுதல் கூறிட வந்தார்.

வெவ்வேறு இனம் – ஓர் இனம் ஆளும் இனமாகவும் மற்றோர் இனம் அடிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் இருந்திடினும், இருவரும் நல்ல இதயம் படைத்தவர்கள் என்பதாலே அவர்களின் நட்பு, நேர்த்திமிக்கதாக இருந்தது. நார்மன், எப்படியும் சொக்கலிங்கத்தின் மனம் உடையக்கூடாது என்பதற்காக அன்புமொழி வழங்கலானார்.

“மிஸ்டர் லிங்கம்! ஏதேதோ நடைபெற்று விட்டிருந்தாலும், எங்கள் கம்பெனி முடிவு மாறவில்லை. அந்த வேலை உமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.”

“நன்றி மிஸ்டர். நார்மன்! ஆனால் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். என்னதான் அப்பா வற்புறுத்தினாலும் நான் அந்தக் கபட நாடகம் ஆட ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. என்னுடைய உள்ளத்தின் அடிவாரத்தில் சுயநலம், சுகபோகம், ஆகியவற்றிலே ஆசை இருந்ததால்தான், நான் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டேன். நானும் ஒரு விதத்தில் குற்றவாளிதான்! அப்பாவைச் சாகடித்தது, துப்பாக்கிக் குண்டு அல்ல. என் மடமை – சமூகத்திலே கப்பிக் கொண்டுள்ள குருட்டு அறிவு! – இந்த மடமையும் குருட்டுத்தனமும் ஒழியவேண்டும்.. ஒழிக்கப்படவேண்டும்... அதற்கு நான் இருக்க வேண்டிய இடம் இலண்டன் அல்ல; இங்கு; என் நாட்டில்; தாய் நாட்டில்! என் நாட்டு மக்களிடம் ஜாதி குலம் சமயம் செல்வம் என்பவற்றின் பேரால் இரும்புப் பிடியாக இந்துவரும் மடமையைத் தொலைத்திட நான் பணியாற்றத் தீர்மானித்துவிட்டேன்... மன்னிக்கவேண்டும்...”

“மன்னிப்பதா! மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்! பணம் பதவி இவற்றினைத் துறந்திடத் துணியும் உன் பண்பினைப் பாராட்டுகிறேன்...”

“பணம் பதவி ஆகியவற்றிலே எனக்கு இருந்து வந்த ஆசைதானே, அப்பா சொன்ன திட்டத்துக்கு என்னை உடன்பட வைத்தது. உணருகிறேன்... திருந்துகிறேன்...”

“ஜெமீன்தாரர் வழக்கு சீமைக்குப் போகிறது...”

“எங்கே போனால் என்ன! வழக்கின் முடிவு எதுவானால் என்ன! நான் செய்த குற்றத்துக்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். ‘வண்டிக்காரன் மகன்’ என்றாலும் வாழ முடியும் – பளபளப்பும் போலி மரியாதையும் கிடைக்காமலிருக்கலாம் – நாணயமாக வாழ முடியும் இந்தப் பரந்த உலகத்தில் என்ற சாதாரண உண்மையை உணர முடியாதிருந்தேன். பாடம் படித்துக் கொண்டேன்; யாரும் கொடுத்திராத கட்டணம் செலுத்தி... என் தகப்பனாரின் உயிரைக் கொடுத்தது.

பக்கத்திலே கோகிலா வந்து நின்றாள்.

“என் துணைவியார்!” என்று பெருமிதத்துடன் சொக்கலிங்கம் கூறினான்.

(காஞ்சி - 1966)