அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

வண்டிக்காரன் மகன்
3

அப்பா! வேண்டுமளவு பணம் எடுத்துக்கொள் செலவுக்கு என்கிறார் ஜெமீன்தாரர்! விதவிதமான உடைகள்! வெல்வெட்டு மெத்தை! வகைவகையான உணவு! எல்லாம் எனக்கு! ஆனால் உங்களை நான் எந்தக் கோலத்தில் காண்கிறேன்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். தணலில் நிற்கிறேன்.

எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்னை. என் காதில் விழும்படி உன்னை ஏசுகிறார்களே! இதனைக் கேட்கவா எனக்குச் செவிகள்!! ஏனப்பா என்னை ஒரு சித்திரவதைக்கு ஆளாக்குகிறீர்கள்.

நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள்; நான் அவர்களுடன் உள்ளே உட்கார்ந்து கொண்டு வருகிறேன்! என்ன கொடுமை! என்ன கொடுமை!

அப்பா! நான் இருக்கும் பக்கம்கூட வருவதற்கு உமக்கு அனுமதி இல்லையே... என் எதிரிலேயே கூனிக் குறுகி நிற்கிறீரே, மாளிகைக்கு வருபவர் முன்பு!

எத்தனை முறை துடித்திருக்கிறேன்; இனியும் சகித்துக் கொள்ள முடியாது அப்பா! அப்பா! என்று கூவிக்கொண்டே உன் காலடி விழவேண்டும் அம்மா! அம்மா என்று அழுதுகொண்டே உத்தமியின் பாதத்தை வணங்கவேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லையே! கூடாது என்று கட்டுப்படுத்தி விட்டீர்களே... கிராதகனாக இரு! என்று கட்டளையிடுகிறீர்களே! இதயத்தை வெளியே எடுத்து வீசி விடு, மிருகமாகி விடு! என்று உத்திரவிட்டு விட்டீர்களே.

அப்பா! நான் இங்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் குழந்தைளுக்கு, நீங்கள் வணங்க வேண்டிய முதல் தெய்வம் தாய்! – என்று. என் தாய் அங்குத் தலைவிரி கோலமாக நிற்கக் காண்கிறேன்; என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்; தலைவலியா என்று கேட்டு உபசாரம் செய்கிறார்கள், எனக்கு!
என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறீர்களே! நாலுபேர் எதிரிலே என்னைக் கண்டால், வணங்குகிறார்களே, ஐயோ! அதைவிட வேதனை இருக்கமுடியுமா அப்பா!

ஏன் இந்த வேதனை? எத்தனை நாளைக்கு? இவ்வளவு நேசம் காட்டுகிறாரே ஜெமீன்தாரர், இப்போது உண்மையைச் சொன்னால் என்னப்பா!

வெளியே உலவப் போகிறேன் என்றால், ஜெமீன்தாரர், ஏன் அந்தச் சோம்பேறியை வண்டி கொண்டு வரச்சொல்வது தானே, ஏன் நடந்து போகவேண்டும் என்று கேட்கிறார்.

அடப்பாவிகளே! அவர் என் அப்பா! என்னை இவ்வளவு மதிப்பாக நடத்திக்கொண்டு என் அப்பாவை இவ்வளவு கேவலமாக நடத்துகிறீர்களே இது அடுக்குமா? என்று கூவிடத் தோன்றுகிறது, மாளிகை முழுவதும் அந்த ஒலி பரவவேண்டும்; இந்த ஊர் முழுவதும் கேட்கவேண்டும்; குன்றுகளலெல்லாம் பரவவேண்டும்... ஒரு வார்த்தை, ஒரு கை அசைவு, ஒரு கண் சிமிட்டுதல் போதும் அப்பா! ஓடோடி வந்து உம் பாதத்தில் விழுவேன், இந்த ஊர் அறியச் சொல்வேன், இவர் என் அப்பா! இதோ என் தாய்! என்று.

சொக்கலிங்கம் இதுபோலெல்லாம் எண்ணி எண்ணி மிகுந்த வேதனையுற்றான்.

சடையப்பனும் அவன் மனைவியும் தங்கள் மனவேதனை துளியும் வெளியே தெரியாதபடி நடந்து கொண்டார்கள்.

யாரும் காணாதபோது சொக்கலிங்கத்தைத் தொலைவிலிருந்து பார்த்துப் பூரிப்படைவார்கள்.

வேலையாட்கள், அவன் புகழ் பாடக்கேட்டு இன்புறுவார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக் கேட்பார்கள்.

எப்படியாவது யாருமறியாமல் தோட்டத்தில் உலவுவதுபோலச் சென்று பெற்றோரைக் கண்டு பேசி இதயத்துக்கு விருந்து பெற்றிடலாம் என்று புறப்பட்டாலோ, யாராவது ஒருவர் வந்துவிடுகிறார்கள் துணைக்கு என்று!!
ஜெமீன் மாளிகையிலே அவன் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆயிற்று. ஐந்தாறு தடவைகள் மட்டுமே பெற்றோரைச் சில விநாடிகள் தனியே கண்டு பேச முடிந்தது.

ஒவ்வொரு நாளும் தன் அறை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்க்கிறான், அந்தக் குடிசையை அங்குக் கோவில் கொண்டிருக்கும் தெய்வத்தை, கண்ணீரால் அபிஷேக்கிறான் இருக்குமிடத்தில் இருந்தபடியே!

அப்பா மெல்ல, தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறார்.

“வேடிக்கைக்குச் சொல்லவில்லை அம்மா! எவ்வளவு திறமையாக மூடி மறைக்கப்பட்ட இரகசியத்தையும், ஒரு சிறிய கம்பளித் துண்டினாலே கண்டுபிடித்து விடலாம்; மந்தரம் போட்ட கம்பளித் துண்டு” என்று கோகிலா கூறிவிட்டு, சொக்கலிங்கத்தைக் கவனித்தாள்.

அவன் ஓர் இலேசான புன்னகையுடன் அவளை ஒருகணம் பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று விட்டான்.

இரு மங்கையரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; வெவ்வேறு விதமான எண்ணங்கள் அந்த இருவர் உள்ளங்களிலும் உலவின.
* * *

சில நாட்களுக்குப் பிறகு பேரிடி விழுந்தது, கோகிலா கட்டிய மனக்கோட்டையில்.

ஜெமீன்தாரர், பல ஆண்டுகளாக இருந்துவந்த மானேஜரை, நீக்கிவிட்டார்.

பல ஆண்டுகள் பணியாற்றியதற்காகச் சிறிதளவு பணம் கொடுத்தார்; வேலையிலிருந்து நீக்குவதனால் வந்த வேதனை மானேஜரை வாட்டிவிட்டது.

என் தெய்வம் இருக்கும் இடத்தைவிட்டு என்னைத் துரத்துகிறார்களே என்று தனக்குள் கூறிக்கொண்டு கோகிலா குமுறினாள்.

உமாவின் தயவைத் தேடி இந்த ஆபத்தைப் போக்கிக்கொள்ளலாம் என்று அங்குச் சென்றாள்.

“எல்லாம் உன் நன்மைக்காகத்தான் இந்த ஏற்பாடு. உன் அப்பா கெட்டிக்காரர். எந்த ஜெமீனிலும் வேலை கிடைத்துவிடும் பயப்படாதே. நீ இங்கே இருப்பது ஜெமீன்தாரர், போட்டிருக்கும் திட்டத்தைக் கெடுத்துவிடும் என்று பயந்துதான் உங்களை வெளியேற்றுகிறார்” என்றாள் உமா.

விவரம் கேட்டதற்கு, உமா கூறியேவிட்டாள், சொக்கலிங்கமும் நீயும் பார்த்துக்கொள்கிற பார்வை அப்பாவுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது என்று.

தான் அறிந்த உண்மையை அப்போது சொல்லிவிடவேண்டும் என்று கோகிலா துடியாய்த் துடித்தாள். யாரோ இருமும் சத்தம் கேட்டது. சொக்கலிங்கம் சற்றுத் தொலைவிலே இருந்துகொண்டு, அமைதியாக இரு! என்று ஜாடை காட்டுவதைக் கண்டாள்.
* * *

மானேஜர், தன் குடும்பத்துடன் ஜெமீன் கிராமத்தைவிட்டுப் புறப்பட்டுப் போக ஏற்பாடாகிவிட்டது. ஜெமீன்தாருடைய பெட்டிவண்டியே மானேஜர் இரயிலடி செல்லத் தரப்பட்டது. சிபாரிசுக் கடிதம்கூடக் கொடுத்திருக்கிறார் சீரானூர் ஜெமீனுக்கு என்று வேலையாட்கள் பேசிக் கொண்டனர்.

விடிந்ததும் சென்றாக வேண்டுமே என்ற கவலை குடையும் மனத்துடன், கடைசியாக ஜெமீன் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் கோகிலம்.

எப்படியாவது சொக்கலிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்ற ஆவல்தான் உண்மையான காரணம்.

சொக்கலிங்கமும் அதே மன நிலையில்! அவன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தான். அவன் நெஞ்சத்தில் அவளைப் பற்றிய நினைவுதான்!

அவள் வரக்கண்டான்! தாவிச்சென்று அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு, தோட்டத்தின் கடைசிப் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
* * *

காற்றடித்தது; பூக்கள் உதிர்ந்தன!

எங்கோ குயில் கூவிடும் இனிய நாதம் கேட்டது.

சொக்கலிங்கம், கோகிலாவின் கண்களைத் துடைத்தபடி, “திருமண வேளையில் கண்ணீர் பொழியலாமா?” என்று கேட்டான்.

“நமக்குத் திருமணா? உண்மையாகவா? ஏதாவது கனவா?” என்று தழுதழுத்த குரலில் கோகிலா கேட்டாள்.
தன் சட்டைப் பையில்
வைத்திருந்த கம்பளித் துண்டை எடுத்துக்காட்டி, இந்தக் காதற் பரிசுமீது ஆணை! கோகிலம் நமக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்றான்.

அவன் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள் கோகிலம்.

“திட்டம், பாதி அளவுதான் நிறைவேறியிருக்கிறது, கோகிலம்!” என்றான் சொக்கலிங்கம்.

“காலமெல்லாம் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்றாள் கோகிலா.

அவன் அவளை அணைத்துக் கொண்டான். ஒரு புதிய இன்ப லோகத்திற்கு இருவரும் சென்றனர்.
குதிரைவண்டி உருண்டோடி வந்திடும் சத்தம் கேட்டது. இருவரும், நிலை உலகு திரும்பினர்.
* * *

வெள்ளைக்காரர்கள் கூட வியந்து பாராட்டும்படியான அறிவுத் தெளிவுடன் சொக்கலிங்கம் இருப்பது காணக் காண, ஜெமீன்தாரர் இப்படிப்பட்டவரைத் தமது மாளிகையிலே இருந்திடச் செய்வது ‘தமது ஜெமீனுக்கே தனிக் கௌரவம்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.

மகிழ்ச்சி அதிகமாக ஏற்படும்போதெல்லாம் ஜெமீன்தாரர், விசேஷ விருந்துக்கு ஏற்பாடு செய்வது வாடிக்கை. அந்த விருந்திலே விசேஷம் என்னவென்றால் குடும்பத்தார் தவிர வெளியார் யாரும் அதிலே கலந்துகொள்ள மாட்டார்கள்.

அத்தகைய விருந்தொன்று நடந்து கொண்டிருந்தது.

ஜெமீன்தாரர் மிக்க மகிழ்ச்சியாக இருந்தார்.

பல விஷயங்களைப் பற்றிச் சொக்கலிங்கத்திடம் பேசி மகிழ்ந்தார்.

மாடிக் கூடத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது விருந்து.

லலிதா, பலகணி வழியாக வெளிப்புறத்துக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ‘ஓ’ வென்று அலறினார்கள். பதறினர் அனைவரும்.

சொக்கலிங்கம், லலிதா பார்த்த பக்கம் பார்த்தான் பயங்கரமான காட்சி தென்பட்டது.

லலிதாவின் மூன்றாவது குழந்தை – நாலு வயது நிரம்பாதவன் தத்திதத்தி நடந்து செல்கிறான், துணை யாரும் இல்லை.

எதிர்ப்புறமிருந்து புதிதாக வாங்கி வரப்பட்டிருந்த முரட்டுக் குதிரை தூசி கிளப்பிக்கொண்டு பாய்ந்தோடி வருகிறது.

எல்லோரும் அலறினர்; என்ன செய்வது என்று தெரியாமல்.

சொக்கலிங்கம் பலகணி வழியாக வெளியே தாவி, தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு ‘பரபர’வெனக் கீழே, சருக்கு மரத்தில் இறங்குவதுபோல இறங்கி, கண்மூடிக் கண்திறப்பதற்குள் பாய்ந்தோடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மற்றோர்புறம் பாய்ந்து விட்டான். குதிரை நாலுகால் பாய்ச்சலில் சென்றது.

குழந்தையை,அவ்வளவு துணிவுடனும், சாமர்த்தியத்துடனும் சொக்கலிங்கம் தூக்கிக் கொண்டிராது போயிருப்பின்...!

நினைக்கவே நடுக்கம் எல்லோருக்கும்.

ஆண்டவனே! அட என் கண்ணே ரமா! – என்று தாய்ப்பாசம் வழிய வழிய கூவிக்கொண்டே லலிதாம்பிகா சென்று குழந்தையைச் சொக்கலிங்கத்திடமிருந்து வாங்கிக் கொண்டு உச்சிமோந்து முத்தமிட்டார்கள்.

ஜெமீன்தாரர் கட்டித் தழுவிக்கொண்டார் சொக்கலிங்கத்தை.

காளிங்கராயர், முதுகைத் தட்டிக் கொடுத்து, ‘பலே!’ என்றார்.

“ஏதாவது நேரிட்டு விட்டிருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா, இந்த வேலைக்காரப் பயல்கள் அவ்வளவு பேரையும் சவுக்கால், அடித்திருப்பேன்” என்றார் ஜெமீன்தார்.

“சவுக்குத்தான் கேடு! சுட்டுத்தள்ளிவிடவேண்டும்” என்றார் காளிங்கராயர்.

குழந்தையைக் காப்பாற்றிய மிஸ்டர் லிங்கத்தைப் பாராட்டாமல், வீரம் பேசுகிறார்களா, வீரம் என்று கூறிவிட்டுத் தன் கணவரைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் லலிதா.

உமாமகேஸ்வரி, கேலிப் புன்னகை செய்தாள்.

“சரி! சரி! நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு. விருந்து நடக்கட்டும்; மறுபடியும் எல்லோருக்கும் அல்வா!” என்று உத்திரவிட்டார் ஜெமீன்தாரர்.

வீரம் தீரம், ஆகியவை மேட்டுக்குடியினரிடம் மட்டுமே இருக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ஜெமீன்தாரர்.

நல்ல குடியில் பிறந்தவர்கள் மட்டுமே, ஆபத்தைத் துச்சமென்று எண்ணுவார்கள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

ஏழைகள், பணமில்லாதவர்கள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பண்புகளும் அவர்களிடம் கிடையாது என்பது அவர் கருத்து.

உயிர் காத்த உத்தமனாகச் சொக்கலிங்கம் இருப்பதற்குக் காரணம், அவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதுதான் என்ற தம்முடைய தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார் ஜெமீன்தாரர்.

“ஆயிரம் சொல்லுங்கள் – எல்லோரும் சமம் – அனைவரும் மனிதரே – மனிதர் யாவரும் கடவுளின் பிள்ளைகளே என்றெல்லாம் – பேதம் இருக்கத்தான் செய்கிறது.”

“பணக்காரன் ஏழை என்ற பேதம்தானே...”

“அதை நான் பெரிதாகக் கருதவில்லை. பணம் தேடிக்கொள்ளலாம், இழந்தும் விடலாம்... நான் சொல்வது பண்பு... நல்ல குடியிலே பிறந்தவரின் பண்பு... மற்றவர்களுக்கு அந்தப் பண்பு இருப்பதில்லை!”

“ஆமாமாம்! நற்குடிப் பிறந்தவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்துவிடுமே...”

“பேச்சு – நடவடிக்கை – எல்லாவற்றிலும் அந்த முத்திரை விழுந்திருக்கும்...”

“இதோ மிஸ்டர் லிங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...”

“இத்தனை பெரிய குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ள யாரால் முடியும்...”

“முடியும்...என் தாயாரால் முடியும்...”

“இதுதான் பண்பு! நற்குடி பிறந்தோர் மட்டுமே பெறக்கூடிய பண்பு. இதனை விலைகொடுத்து வாங்க முடியாது. கடலில் முத்து விளைவதுபோல இது தன்னாலே விளைவது; நற்குடி என்ற வயலில்.”

“அப்பா இன்று கவிøதா நடையில் அல்லவா பேசுகிறார்...”
“களிப்பு மிகுந்திடும்போது கவிதை தன்னாலே சுரக்குமாமே...”

“என் பேரப்பிள்ளை குதிரையின் காலின் கீழ் சிக்கிக் கொள்ளாமல் மிஸ்டர் லிங்கம் காப்பாற்றினாரே, அது அவருடைய ஆற்றலை, தைரியத்தைக் காட்டிற்று என்றுதான் எல்லோரும் பாராட்டுவர். நான் சொல்கிறேன், குழந்தைக்கு ஆபத்து என்பது தெரிந்த உடன் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு வந்ததே, அது பண்பு – அதைத்தான் நான் போற்றுகிறேன். அந்தப் பண்பு நற்குடி பிறந்ததால் வருவது. முரட்டுக் குதிரைகளை அடக்க வலிவுள்ள எந்த வேலைக்கார
னாலும் முடியும். சடையன் அடக்காத குதிரையா! ஆனால், அது வலிவைக் காட்டுகிறது. உணர்வை அல்ல. உடனே ஓடிச் சென்று காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை; இருப்பதில்லை. மிஸ்டர் லிங்கம் பண்பாளர்; நற்குடி பிறந்தவர். எப்போது கேட்டாலும் சொல்ல மறுக்கிறார் தமது பெற்றோர் யார் என்பதை. அவர் சொல்லத் தேவையே இல்லை. இன்றைய செயல் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த குடும்பத்தில் உதித்தவர் என்பதைக் காட்டிவிட்டது. இத்தகையவரை மகனாகப் பெற்ற தாய் வாழ்க! நீடூழி வாழ்க! அவளுக்கு என்னுடைய வணக்கம்!”

அப்போது வெளியே சென்று, வந்த காளிங்கராயர், “இடியட்! சுத்த முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் இப்படித்தான்...” என்று கூறுகிறார்.

“என்ன இது, ரசமான கட்டத்தில் வந்து கெடுக்கிறீர்... அப்பா எவ்வளவு உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்...”

“பேசிக் கொண்டிருக்கட்டும் உருக்கமாக, சுவையாக... அவருடைய முட்டாள் வேலையாட்கள் குழந்தைகளைக் குதிரைக் காலின் கீழ் போடட்டும்...”

“சின்ன ஜெமீன்தாரரை ஏன் குதிரை மிதித்து வந்தது... விசாரித்தீர்களா...”

“யாரை விசாரிப்பது... குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவைக் கேட்டோம்... விளையாட்டுச் சாமான் கொண்டு வர உள்ளே போய் வருவதற்குள் இந்த விபரீதம் நடந்துவிட்டதாம்...”

“அவ்வளவுதான் சொன்னாளா அந்தக் கள்ளி. இதுகள் இந்த – வேலைக்காரக் கழுதைகள் ஒரே கூட்டு – ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை – ஒப்பந்தம், நடந்தது அது அல்ல. இந்த ஆயா உள்ளே போனாள்.. விளையாட்டுச் சாமான் கொண்டுவர அல்ல... புகையிலை எடுத்து வர...”
“புகையிலையா... யாருக்கு...”

“அப்படிக் கேளுங்கள்... அந்தக் கிழவி இருக்கிறாளே, வண்டிக்காரன் சம்சாரம் அவளுக்கு...”

“புகையிலை கேட்டால் என்ன, கொடுத்தால் என்ன, அதிலே என்ன குற்றம் காண்கிறீர்.”

“அதிலே குற்றம்காண நான் என்ன முட்டாளா? இவள் போனாளே புகையிலை கொண்டுவர, அப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி வண்டிக்காரக் கிழவியிடம் சொல்லிவிட்டுப் போனாள்...”

“ஜாக்கிரதையாகத்தான் ஆயா நடந்து கொண்டிருக்
கிறாள்...”

“இவள்? குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா? செய்தாளா? செய்திருந்தால், குழந்தை தத்தித்தத்தி நடந்து செல்லுமா – குதிரை வருவது தெரியாமல். இவள் என்ன செய்தாள்? குழந்தையை விட்டுவிட்டு இவளும் போய்விட்டாள். எங்கே? கேட்டேன். சுண்ணாம்பு எடுத்துவரச் சென்றாளாம்...”

“குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சி இருந்ததா? எப்படி இருக்கும்! நற்குடியில் மட்டுந்தானே அத்தகைய பண்பு இருக்க முடியும். கிழவியைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியான நேரம். எங்கள் குலக்கொடியை இந்தக் குணவான் காப்பாற்றிய நேரம், அவருடைய நற்பண்புகளுக்காக நாம் எல்லோரும் அவருக்கு நம்முடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளும் நேரம்.”

“கம்பெனி பெரிய துரை வந்திருக்கிறார் தங்களைக் காண...”

“எல்லாச் சந்தோஷமும் ஒரே நேரத்தில் நேரத்தில் வருகிறது... நல்ல நாள் இன்று.... அழைத்து வா! வருக! வருக! நல்வரவு!

“விருந்தும் விழாவும் நடக்கும்போது வந்து சேர்ந்தேன்... அதிர்ஷ்டக்காரன்... யாருக்குப் பிறந்த நாள்...”

“பிறந்தநாள் விழா அல்ல... இதோ மிஸ்டர்... லிங்கம்... இவருக்குத்தான் பாராட்டு... இவர் உங்களிடம் எப்போதும் வாதாடுவார், மறுத்துப் பேசுவார் அதனாலேயே இவர் நல்லவர் அல்ல என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.”

“நான் அவரைப் பற்றி என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பது கிடக்கட்டும். இவர் பாராட்டப்பட வேண்டி ஏற்பட்ட காரணம்?”

“இன்று என் பேரக்குழந்தை குதிரையின் காலின் கீழ்ச் சிக்கிக் கொள்ள இருந்தது. தக்க சமயத்தில் பாய்ந்து சென்று காப்பாற்றினார்...”

“அப்படியா! என் பாராட்டுதல்! மிஸ்டர் லிங்கம் எப்போதுமே பிறருக்கு உதவி செய்வதைத் தமது இயல்பாகக் கொண்டவர். அவருக்காக நடத்தப்படும் விழாவிலே கலந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி. ஒரு விதத்தில் எனக்கும் அவர் டீச்சர்! ஆமாம், இந்த அளவு தமிழ் நான் பேசுவது அவரால் தான்... அவர் என்னிடம் வாதாடுவார், நான் சொல்லுவதை மறுப்பார், கோபிப்பார், எல்லாம் சரி. அதனாலே எனக்கு மகிழ்ச்சி; கோபம் அல்ல. தலையாட்டிகள் வெறும் அடிமைகள். அவர்களை எந்த நாட்டிலும் மதிக்கமாட்டார்கள். இவர் உண்மைக்காக – தமக்குச் சரி என்று பட்ட உண்மைக்காகத் தைரியமாக வாதாடுவார். அதனாலேயே எனக்கு இவரிடம் தனியான மதிப்பு...”

“அப்பா! இப்போதுதான் என் மனம் சாந்தி அடைந்தது. பல தடவை சச்சரவு செய்வதுபோல வாதாடுவாரே, உங்கள் நாட்டு நடவடிக்கை, பழக்கவழக்கம் ஆகியவற்றைக்கூடக் கண்டிப்பாரே, எங்கே அவரிடம் உங்களுக்குக் கோபம் இருக்கிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன்.”

“கோபமா! எனக்கா! இப்படிப்பட்டவர்களைத்தான் நான் மதிப்பது. நான் இவரிடம் வைத்துள்ள மதிப்பைத் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன். வந்த இடத்திலே விழாவும் நடக்கிறது. என் விழாப் பரிசாகவே ஒரு சந்தோஷச் செய்தியைத் தருகிறேன். நமது இலண்டன் கம்பெனியில் மிஸ்டர் லிங்கத்தை உதவி மானேஜராக நியமித்து உத்தரவு வந்திருக்கிறது...”

“இலண்டன் கம்பெனியிலா! மிஸ்டர் லிங்கம், என் வாழ்த்துக்கள்.”

“எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

“நன்றி மிஸ்டர் நார்மன், மிக்க நன்றி... அங்குச் செல்வது என் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படும்.”

“மற்றோர் மகிழ்ச்சியான செய்தி! மிஸ்டர் நார்மன்! என் இளையமகள் உமாவை மிஸ்டர் லிங்கத்துக்குத் தர விரும்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இது உண்மையான விழாப் பரிசு! என்ன மிஸ்டர் லிங்கம்! மிஸ். உமா! சம்மதந்தானே! கேட்பானேன், கண்களே கீதம் பாடுகின்றனவே.”

அப்போது, தோட்டத்துப் பக்கமிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கதறிடும் ஒலியும் கேட்கிறது.
எல்லோரும் பதறிப்போய், கீழே ஓடினார்கள்; சத்தம் வந்த திக்குநோக்கி.