அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

வண்டிக்காரன் மகன்
2

என் மகனைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறான்; அவன் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா. ஊர் ஜனங்களெல்லாம் வெள்ளைக்காரத் துரைகளைக் கண்டால் பயந்துகொள்கிறார்களே, என்மகன் அந்தத் துரைகளிடம் எவ்வளவு தாராளமாகப் பழகுகிறான் தெரியுமா என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படத்தான் நினைக்கிறாள் உன் அம்மாவும். ஆனால்...”

“ஆனால் என்னப்பா ஆனால்! அம்மா பெருமைப்படுவதிலே என்ன தவறு. எல்லாப் பிள்ளைகுளுமா இன்று என் அளவுக்கு சர்க்கார் பாஷையைப் படித்திருக்கிறார்கள். உத்தியோகம் பார்க்கும் யோக்கியதையைப் பெற்றிருக்கிறார்கள், அம்மாவுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கும்...”

“அம்மாவும் நானும் ஆனந்தம் அடைய ஒரே வழி நான் சொன்ன வழிதான்...”

“என்ன வழி அது! எந்த மகனும் எவ்வளவு மோசமான குணம் கொண்ட மகனும் செய்யத் துணியாததை நான் செய்யவேண்டும்”

“மகனே! உன் உள்ளம் எனக்குத் தெரியாதா, உன் உத்தமமான குணம் எனக்குத் தெரியாதா! உன்னை என்ன செய்யச் சொல்லுகிறேன் – எதற்காக அதைச் செய்யச் செல்லுகிறேன். நமது குடும்பம் மீண்டும் நல்ல நிலைமையை அடையத்தான்.”

“நான் யார்மகன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உலவச் சொல்கிறீர்களே – உங்கள் கண் முன்னாலேயே – அதைவிடக் கொடுமை வேறு என்னப்பா இருக்கமுடியும்... என்னை வாட்டாதீர்களப்பா..”

“சொக்கலிங்கம்! நான் முறைப்படி தமிழ் படித்தவன் என்பது தெரியுமா உனக்கு; பாடம்கூட சொல்லிக் கொடுத்திருக்கிறேன்; பணத்துக்காகக்கூட அல்லடா மகனே, பொழுது போக்குக்காக! ஜெமீன்தாரிடம் நான் அதைக் காட்டிக் கொள்கிறேனா! சடையா! ஆத்திச்சூடி தெரியுமா உனக்கு என்று கூடக் கேலியாகக் கேட்பார் ஜெமீன்தாரர்; எனக்குங்களா! நான் என்னத்தைக் கண்டேன்!! என்று சொல்லுவேன்.”

“ஏனப்பா! ஏன் மறைக்க வேண்டும். சொன்னால் என்ன, எனக்குத் தமிழிலே நல்ல பயிற்சி உண்டு என்று...”

“சொல்லலாமடா மகனே! சொல்லலாம். நமது குடும்பம் நொடித்துப் போகாமலிருந்தால் சொல்லலாம். ஆனால் நான் போய் ஜெமீன்தாரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரியும், அகவல் அருணாசலப் புலவரிடம் ஆறு வருடம் பாடம் கேட்டிருக்கிறேன் என்று சொல்லுவதா?”
“சொன்னால் என்னப்பா என்றுதான் கேட்கிறேன்.”

“சொல்லிவிட்டு, பைத்தியக்காரா! போதும் நீ தமிழ் படித்த பெருமையைப் பற்றிக் கதை அளப்பது, போ! போ! குதிரைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டிய நேரம் இது. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல், நீ படித்த அகவலின் பெருமைபற்றி அளந்து கொண்டிருக்காதே. இப்போது உனக்குச் சோறு போடுவது உன்னுடைய அகவல் அல்ல; நம்ம குதிரைகள்! என்று சொல்லிவிட்டு இடிஇடியெனச் சிரிப்பார். மகனே! நான் இப்போது வண்டி ஓட்டி!! வண்டிக்காரனடா, வண்டிக்காரன்!”
“என் அப்பா! என்னைப் பெற்ற பெருமான்! எனக்கு உயிரும் உடலும் உதிரமும் கொடுத்த உத்தமர்.”

“அப்படி நீ சொல்லி, நான் கேட்டு மகிழ காலம் வரவில்லை அப்பா! இது அல்ல அந்தக்காலம். நான் வண்டிக்காரன்! நீ புதுவாழ்வு பெறவேண்டியவன்; என் மகன் என்று தெரிந்தால் – வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், உனக்குப் புதுவாழ்வு கிடைக்காது...”

“பயங்கரமூட்டும் பேச்செல்லாம் பேசுகிறீர்களே அப்பா!”

“விவரத்தை வளர்த்திக் கொண்டிருக்க நேரம் இல்லை. உன் மனத்திலே என்னென்ன தோன்றும் என்பதைப் பற்றியெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்து, என் மனத்திலே ஏற்பட்ட கொந்தளிப்பையும் அடக்கிக்கொண்டு, அதற்குப் பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ ஜெமீன் ஜம்புலிங்க பூபதியின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே சேர்ந்துவிடவேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் யோக்யதாம்சம் அவ்வளவும் உன்னிடம் இருக்கிறது. உன்னிடம் உள்ள ஒன்றே ஒன்றுதான், உனக்கும் வேலைக்கும் நடுவே நிற்கிறது, தடைக்கல்லாக! நீ என் மகன் – வண்டிக்காரன் மகன் என்பதுதான் குறுக்கே நிற்கிறது. வண்டிக்காரனுடைய மகனை, ஜெமீன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டார் பூபதி! பிள்ளைகளோடு மாளிகையில் தங்கி இருக்க வேண்டும்! அங்கேயே சாப்பாடு, ஜாகை எல்லாம். எப்போதும் பிள்ளைகளுடன் இருந்து வரவேண்டும். ஜெமீன் குடும்பத்துடன் பழகும் நிலை! அந்த நிலையை மகனே! ஒரு வண்டிக்காரன் மகன் பெறமுடியாது – தரமாட்டார்கள்; ஆனால் நீ அந்த நிலையைப் பெற்றே ஆகவேண்டும். அங்கு இடம் பெற்றுக்கொண்டால், நீ முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் வேகமாக அமையும். நல்ல நிலை – மதிப்பான உத்தியோகம் கிடைக்கும் – கண்குளிரக் காணுவேன், தம்பி! நோயைப் போக்கிக் கொள்ள கசப்பான மருந்துகூடச் சாப்பிடவேண்டி வந்துவிடுகிறதல்லவா. அது இது. கண்ணிலே வலி ஏற்பட்டால் அதைப்போக்க ஒரு மருந்து தெளிப்பார்கள் கண்ணில்! எரிச்சல் சொல்லி முடியாது. கண்ணீர் தாரை தாரையாகப் பெருகும். நெருப்புப்பொறி பட்டுவிட்டால் எப்படியோ அப்படி இருக்கும். கண்களே இரத்தச் சிவப்பாகிவிடும். ஆனால் தம்பி! மெல்ல மெல்ல எரிச்சல் அடங்கும், சிவப்பு மாறும், மருந்து வேலை செய்யும், கண்வலி போய்விடும், பார்வை முன்பு இருந்ததைவிட நன்றாக ஆகிவிடும். அப்படிப்பட்ட மருந்துத் துளிகளைத் தெளித்துக் கொண்டாக வேண்டும், நீயும் நானும், உன் அம்மாவும்!”
“மருந்துத் துளிகள் அல்ல அப்பா! நெருப்புப் பொறிகள்!”
* * *
கடைசியில் சொக்கலிங்கம் சம்மதம் தெரிவித்தான், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.
“கொஞ்ச காலம்! கொஞ்ச காலம்! வேறு ஒரு பெரிய வேலை கிடைக்கிற வரையில்!! என்று சமாதானம் கூறிவிட்டு, சடையப்பனும் சொர்ணமும் ஊர் புறப்பட்டார்கள், சொக்கலிங்கத்தை இரண்டு நாள் கழித்து ஜெமீன் கிராமம் வரும்படிச் சொல்லிவிட்டு.
டேவிட், சொக்கலிங்கம் வேறு ஊர் போவதை முதலில் விரும்
பவில்லை என்றாலும், சீக்கிரமாகவே சீமைக்கு வரும்படி அவருக்கு ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்த கடிதம் கிடைத்
ததும், சொக்கலிங்கம் தன் தகப்பனாருடன் போய் வாழ்ந்து வருவதுதான் முறை என்ற முடிவுக்கு வந்தார்.

பொதுவான சிபாரிசுக் கடிதத்துடன், குறிப்பாக ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதிக்கே ஒரு தனியான சிபாரிசுக் கடிதமும் வாங்கிக்கொண்டு, சொக்கலிங்கம், ஜெமீன் மாளிகை நோக்கிச் சென்றான்.
* * *

அவன் படாடோபமற்ற ஆனால் நாகரிமான உடை உடுத்திக்கொண்டு ஜெமீன் மாளிகைக்குள்ளே நுழையும்போது, சடையப்பன் விலை மிகுந்த ஒரு குதிரையை வெளியே உலாவ அழைத்துச் செல்வதைக் கண்டான். நெஞ்சு பகீரென்று ஆகிவிட்டது. ஓடிச்சென்று அவர் காலில் விழ வேண்டியது போலத் தோன்றிற்று. அப்பா! அப்பா! என்ற சொல் வேக வேகமாகக் கிளம்பிற்று; சடையப்பன் பார்த்த பார்வையால், வார்த்தைகள் வெளியே வரவில்லை. சொக்கலிங்கத்தைப் பார்க்காதவனைப் போலச் சடையப்பன் வெளியே சென்றான்.

ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதி, மிகுந்த செல்வாக்குப் படைத்தவர், ஆங்கில அரசுடன் உறவு கொண்டாலன்றித் தமது ஜெமீன் வாழ்வு நிலைக்காது என்பதை உணர்ந்து நடந்து கொண்டவர்; ஆனால் அதே நேரத்தில், ஜெமீன்தார் என்பதற்கு உரிய மதிப்பு கெடக்கூடாது என்பதிலேயும் கண்ணுங் கருத்துமாக இருந்தவர்.

மற்ற ஜெமீன்தார்களைப்போல, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தும் கொள்ளை அடித்தும் பொருள் சேர்த்தால் மட்டுமே போக போக்கியத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற நிலையில் அவர் இல்லை. ஜெமீன் வருமானத்தைவிட அதிக அளவு அவர் வியாபாரம் மூலம் பெற்றுக் கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டங்கள், குறிப்பாகப் புகையிலை, நிலக்கடலை, ஆகியவை அவருடைய ஜெமீனில் போதுமான அளவு இருந்தது. சீமைக்குச் சென்று வியாபாரக் கம்பெனிகளுடன் தொடர்பும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்.

விசேஷ தினங்களில் தவிர மற்ற நேரத்தில் ஆங்கில முறை உடுப்புடன்தான் உலவுவார். நவராத்திரி போன்ற சில விசேஷ நாட்களில் மட்டும் ஜெமீன் உடையுடன் உலா வருவார்.

ஜெமீன் மாளிகை, பழைய கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. கொடி மரம்! காவலாட்கள் தங்கும் இடம்! வண்டிப் பாட்டை தனியாக! சிறிய கோபுர அமைப்பில் நழைவு வாயில், அதிலே கலசம்! சித்திரங்கள்! சித்திர வேலைப்பாடுகள்!

உள்ளே முழுக்க முழுக்க ஆங்கிலப் பாணியில், விரிப்புகள், விளக்குகள், இருக்கைகள்.

வேலையாட்கள், ஜெமீன் மரபினைக் காட்டும் தனி உடையுடன் இருந்தனர்.

சடையப்பன்கூட, சாதாரணக் காலத்தில் எப்படி உடை அணிந்திருந்தாலும் ஜெமீன்தார் கிளம்பும்போது, தனி உடை அணிந்து கொண்டுதான் – வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.

வண்டி, இவருக்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டது – இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு.
தரமான குதிரைகளை வாங்கி வளர்ப்பதில், அலாதியான விருப்பம் ஜெமீன்தாரருக்கு.

கொடுமைக்காரர் என்ற பெயர் இல்லை; ஆனால் எல்லோரையும் சமமாகப் பாவித்து நடத்துபவர் என்றும் சொல்லிவிட முடியாது.

கட்டிவைத்து அடிப்பது, கொளுத்தி அழிப்பது போன்ற கொடுமைகள் கிடையாது, ஆனால் அவர் எதிரே வருபவர்கள், மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும், மரியாதைக்காக. ஜெமீன் சாரட்டு வருகிறது என்றால், எழுந்து நிற்கவேண்டும். – இப்படிப்பட்ட கட்டு திட்டங்களைக் கண்டிப்புடன் வைத்துக் கொண்டிருந்தார்.

மகன் இல்லாததால், தன் இரண்டு குமாரிகளையும், ஜெமீனை நடத்திச் செல்லக்கூடிய அறிவாற்றல் கிடைக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.

பெரிய இராஜகுமாரி – இளைய ராஜகுமாரி என்றுதான் ஊரார் அழைப்பார்கள், பெண்களை.

எல்லா விதத்திலும் மிக்க மகிழ்ச்சியாக இருந்து வந்த ஜெமீன்தாரருக்கு ஒரு மனக்குறை ஏற்படுத்தவே பிறந்ததுபோல அவருடைய மருமகன் காளிங்கராயர் விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே ஊராருக்கு நடுக்கம். ஆனால் அவர் ஊரில் இருக்கம் நாட்கள் மிகக் குறைவு. ஊட்டி, கொடைக்கானல், பம்பாய், புனா, பெங்களூர் என்று ஒவ்வொரு சிங்காரபுரியாகச் சுற்றிக்கொண்டிருப்பார்.
* * *

ஜெமீன் மாளிகைக்குள்ளே அனுமதி பெற்று நுழைந்தபோது சொக்கலிங்கத்துக்கு எந்தவிதமான அச்சமும் எழவில்லை. காரணம், ஜெமீன்கள் உண்டான வரலாறு பற்றிப் படித்தறிந்தவன்; ஜெமீன்முறைக்கு எதிர்காலம் கிடையாது என்பது பற்றி டேவிட் தந்த விளக்கத்தைப் பலமுறை கேட்டவன்.

டேவிட் துரை கொடுத்த கடிதத்தை ஜெமீன்தாரரிடம் கொடுத்துவிட்டு, சொக்கலிங்கம் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்;
அவனுடைய தோற்றமும், கண்களிலே தோன்றிய ஒளியும், முகத்தில் தவழ்ந்த புன்னகையும் ஜெமீன்தாரரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. முகமலர்ச்சியுடன் இருந்தார்.
டேவிட் துரையின் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்துவிட்டு, ஜெமீன்தாரர், “வரப்போவதைத் தெரிவித்திருந்தால் ரயிலடிக்கு வண்டி அனுப்பி இருப்பேனே... உன் பெயர் சொக்கலிங்கமா... உட்கார் – பரவாயில்லை உட்கார்... கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே... நம்ம ஜெமீனில் எப்போதும்அறிவாளர்களுக்கு மதிப்பு உண்டு.” என்றார்.

கொடுமைபுரியும் ஜெமீன்தாரர்களைப் பற்றிய கதைகளைப் படித்திருந்த சொக்கலிங்கம். ஜெம்புலிங்க பூபதியின் போக்கைக் கண்டு வியப்படைந்தான். டேவிட் துரையின் சிபாரிசுக் கடிதத்துக்குக் கிடைத்துள்ள மரியாதை இது என்பதையும் உணர்ந்தான்.

“டேவிட் துரை சொல்லுகிற வார்த்தையை நான் தட்டி நடப்பதே இல்லை. அவர்தான் என்னை நம் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சிபாரிசு கடிதம் இருக்கும்போது வேறு எதுவும் தேவையில்லை. நாளைக்கே வேலைக்கு வந்து சேர்ந்துவிடலாம்.”

“மிக்க நன்றி.. இன்று முதலேகூட நான் தயார்தான்... பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டேன்.”

“அதுவும் நல்லதாயிற்று. இன்று நல்ல நாள்கூட. குழந்தைகள் பக்கத்து ஊர் போயிருக்கிறார்கள்... உமது ஜாகை இங்கேயேதான்... வேலைக்காரன் இடத்தைக் காட்டுவான்... பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, உமது வேலை. பிள்ளைகளுக்கு ஒரு பெரிய அண்ணன்போல இருக்கவேண்டும்... எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்...”

“ஜெமீன் குடும்பத்து மதிப்புக்கு ஏற்ற விதமாக குழந்தைகள் வளர என்னாலானதைச் செய்கிறேன்.”

“ஜெமீன் குடும்பத்துச் சுபாவம் குழந்தைகளுக்குத் தன்னாலே வந்துவிடும்... நீங்கள் கற்றுத் தரவேண்டியது மேனாட்டு முறைகளை; நடை உடை பாவனைகளை. இன்னும் சில வருஷங்களிலேயே நான் அவர்களைச் சீமைக்கு அனுப்பப் போகிறேன், அங்கேயே படிக்க... ஜெமீன் குடும்பத்திலே பிறந்தவர்கள் குறைந்தது ஜில்லா கலெக்டர் வேலைக்காவது போனால்தானே மதிப்பு. சீமைப் படிப்பு தேவையாம்... துரைகள் சொல்கிறார்கள்... நீங்கள்கூட ஆங்கிலமுறை உடையிலேயே இருப்பது நல்லது...! குழந்தைகள் பழகும்போதே ஒரு பாடம், கிடைக்கும். ஆங்கிலப்பாட்டு தெரியுமல்லவா, கற்றுக் கொடுக்கவேண்டும். என் சின்னமகள் போனவருஷம் தன் பெரியப்பா வீடு போயிருந்தாள் ஒரு மூன்று மாதம்– பெங்களூர். அங்கு ஆங்கிலேயர் அதிகம் அல்லவா. அங்கு உமா பியானோ வாத்தியம் வாசிக்கக் கூடக் கற்றுக்கொண்டாள்...”

“குழந்தைகள் பெரிய மகளுடைய....”

“ஆமாம், ஆமாம்.... உமாமகேஸ்வரி, லலிதாம்பிகேஸ்வரி என்று எனக்கு இரண்டு பெண்கள்... தாயை இழந்து விட்டார்கள். லலிதாதான் மூத்தவள்; மூன்று குழந்தைகள். உமா; இரண்டாவது பெண்; கன்னி.”

“இருவரும் ஆங்கிலப் படிப்பு படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்”

“ஓர் ஆங்கிலோ – இந்தியமாது – பள்ளிக்கூட ஆசிரியை – இங்கே தங்கி இருந்து, கற்றுக்கொடுத்தார்கள். எப்போது நாம் ஆங்கிலேயருடைய ஆளுகையின் கீழ் வந்துவிட்டோமோ, அப்போதே நாம் அவர்களுடைய முறைகளை மேற்கொள்ள வேண்டியதுதானே. அப்போதுதானே ஒரு மதிப்பு ஏற்படும். மேலும், நான் வேட்டையாடிக் கொண்டும், விருந்து சாப்பிட்டுக் கொண்டும், பொழுதை ஓட்டுகிற ஜெமீன்தாரன் அல்ல. வியாபாரத் தொடர்புகள் உண்டு. சீமையில் ஒரு பெரிய கம்பெனிக்கு நிலக்கடலை ஏற்றுமதி செய்கிறேன். முத்துச் சிப்பிகளையும் அனுப்பி வைக்கிறேன்.அதனால் ஆங்கிலேயர்கள் தொடர்பு நிறைய உண்டு – நிறையப் பழக்கம். சரி! சரி! நான் பேசிப்பேசி உமக்குச் சலிப்பை உண்டாக்கிவிடக் கூடாது. ஓய்வு எடுத்துக்கொள்ள நினைப்பீர். பிரயாண அலுப்பு இருக்கும் உம்முடைய பெயர் என்ன சொன்னீர்...?”

“சொக்கலிங்கம், நண்பர்கள் சொக்கு என்று செல்லமாக அழைப்பார்கள்...”

“இங்கு உமக்குப் பெயர் லிங்கம்.. நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். சொக்கலிங்கம் என்ற பெயர் மீது எனக்கொன்றும் வெறுப்பு கிடையாது. ஆனால் இங்குச் சமையல் வேலை பார்ப்பவன் பெயர் சொக்கலிங்கம். குழந்தைகள், அவனைச் சொக்கா! சொக்கா! என்று அழைப்பார்கள். உம்முடைய பெயரும் அது போலவே இருந்தால் என்னமோபோல இருக்குமல்லவா, அதனாலே.... குழந்தைகளின் சௌகரியத்துக்காக உமது பெயரைக் கொஞ்சம் வெட்டிவிட்டேன், மிஸ்டர் லிங்கம் இனி உமது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பணத்தை அவ்வப்போது மானேஜரிடம் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு உங்களை ரொம்பவும் பிடித்துவிட்டது. சில வேளைகளில் என்னோடு உலாவக்கூட வரலாம், வேட்டையாடக் கூடச் செல்லலாம்...”
* * *

மறுநாள் குழந்தைகளுடன், ஜெமீன்தாரருடைய இரண்டு குமாரிகளும் வந்து சேர்ந்தனர். சொக்கலிங்கத்தை ஜெமீன்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

லலிதாம்பிகேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகிய இருவருமே, தங்களை ஊரார் அழைப்பதுபோல இராஜகுமாரி என்று ஆசிரியரும் அழைப்பதை விரும்பவில்லை என்று கூறக்கேட்டு, சொக்கலிங்கம், வியப்படைந்தான்.

குருபக்தி உணர்ச்சியாக இருக்குமோ என்று முதலில் யோசித்தான். ஆனால் ஜெமீன் மாளிகையில் பூஜை செய்ய வருபவரிடம் அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, தன்னிடம் மரியாதையும் அன்பும் காட்டுவதற்குக் காரணம்,டேவிட் துரையிடம் பல வருஷங்கள் பழகியவன் என்பதுதான் என்று தெரியவந்தது.

ஆங்கிலேயர்கள் ஐயாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து இங்கு வந்து ஆட்சி நடத்துகிறார்கள் என்பதாலேயே, இப்படிப்
பட்ட ஜெமீன்கள் ஆங்கிலேயரிடம் மிகுந்த பயபக்தி விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதும், ஆங்கில அரசினரிடம் மட்டுமல்லாமல், ஆங்கிலப் பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகியவர்களிடமும் அதிக அளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதையும் உணர்ந்தான்;

அந்நியருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்று வருத்தமும் வெட்கமும் துளியும் அவர்களுக்கு இல்லாததையும், ஆங்கிலேயர்களைப்போலத் தாமும் கோலத்தை ஆக்கிக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பதையும் அறிந்து வருந்தினான்.

ஆங்கில நாட்டு வரலாறு படித்திருந்தால், இவர்கள் இப்படியா இருப்பார்கள்; அடிமைத்தனத்தை ஆங்கில மக்கள் எவ்வளவு வெறுத்திருக்கிறார்கள்; அடிமைத்தனத்தைப் போக்க எவ்வளவு இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் இப்படியா இருப்பார்கள் என்றெல்லாம் எண்ணிக் கவலைப்
பட்டான்.
சொக்கலிங்கத்திடம் குழந்தைகள் மிகுந்த அன்பு காட்டத் தொடங்கிவிட்டன.
அவன் படிப்பு சொல்லிக்கொடுத்த விதமும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன.

காலையில் எழுந்திருப்பது – உடலைச் சுத்தம் செய்து கொள்வது – புதிய உடை உடுத்திக் கொள்வது – உலாவச் செல்வது என்பதிலிருந்து படிப்பு தொடங்கும்.

பல நட்டுப் படங்கள் – வராற்றுச் சித்திரங்கள், ஆகியவற்றைக் காட்டி, குழந்தைகளுக்கு இயற்கையாகவே படிப்பதிலே விருப்பம் ஏற்படும்படியாகச் செய்த நேர்த்தியான முறையைக் கண்டு ஜெமீன்தாரர் வெகுவாகப் பாராட்டினார்.

எவ்வளவோ தடுத்தும், ஜெமீன்தாரர், சொக்கலிங்கத்துக்கு விதவிதமான உடுப்புகளைத் தயாரித்துக் கொடுத்தார்.
உமக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம் மிஸ்டர், லிங்கம்! ஆனால் எங்கள் ஜெமீன் கௌரவம் என்று ஒன்று இருக்கிறது பாருங்கள், அதைக் கெடவிடக் கூடாதே – என்று வேடிக்கையாக ஜெமீன்தாரர் பேசுவார்.

சொக்கலிங்கம், பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேலைக்கு அமர்ந்தவராக அங்கு நடத்தப்படவில்லை; ஜெமீன் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து நடத்தப்பட்டு வந்தார்.

எதிர்பாராத அளவுக்கு வசதியான சூழ்நிலையும், மதிப்பும் கிடைத்தது. அவனைக் கண்டவர்கள் அனைவரும், இப்படி அல்லவா அமையவேண்டும் வாழ்க்கை என்று பேசிக் கொண்டனர். பூந்தோட்டத்தில் உலவுகிறான், புதுமணம் நுகர்கிறான் என்றுதான் எல்லோரும் கருதினர். ஆனால் அவன் பட்ட வேதனை அவனுக்கல்லவா தெரியும்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்கள் தாயும் தந்தையும், ஆனால் வெளியே சொல்லிக் கொள்ள உரிமை இல்லை. தனக்குக் கிடைத்த வசதியான வாழ்க்கையிலே அவர்களுக்குப் பங்கு அளிக்க உரிமை இல்லை. பேசவே உரிமை இல்லை.

என்ன விலையுயர்ந்த முத்துமாலை மார்பிலே புரளுகிறது என்று ஊரே புகழ்கிறது; ஆனால் அந்த முத்துகள் ஒவ்வொன்றும் மார்பைத் துளைத்துக் கொண்டே இருக்குமானால், அந்த மாதரசியின் வேதனை எப்படி இருக்கும், பூமணம் நுகருகிறான் என்று ஊரார் பாராட்டுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தடவையும் பூநாகம் கடித்தபடி இருந்தால் எப்படி இருக்கும். ஜெமீன் மாளிகைக்கு வருகிறவர்களிடமெல்லாம் ஜெமீன்தாரர் அறிமுகப்படுத்துகிறார். மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார். ஆனால் பெற்ற தாயும் தந்தையும்? அவர்கள் குடிசையில் அல்லவா குமுறுகிறார்கள்! மகன் மாளிகையில்! அவர்கள் குதிரைக் கொட்டிலுக்கு அருகே! இதற்கா என்னை மகனாகப் பெற்றார்கள்.

எத்தனை இன்பம் கிடைத்தாலும், குதிரையை அவர் தேய்த்துக் கொண்டிருப்பதை ஒருகணம் பார்த்த உடன், இதயத்தில் ஆயிரம் தேள் அல்லவா கொட்டுகிறது.