அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சூழ்நிலை
1

முத்தமிழ் விழா! முத்தமிழ் விழாவின் முதல் நாள் இன்று! முக்கிய நிகழ்ச்சி, முத்தமிழின் வளர்ச்சியைக் குறித்திடும் நிகழ்ச்சி!

இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்களித்த உங்களுக்கு தொண்டை மண்டலம் பள்ளி மாணவருக்கும், ஆசிரியருக்கும், அதன் நிருவாகிகட்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கசாலை வீதியிலே, தடியடி தர்பாரின் இடையிலே, தமிழுக்காகப் போராடி, இந்திப் போர்க்களத்தில் புகுந்து, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தி, “இந்தி படியாதீர் மாணவரே! கட்டாய பாடமாக இந்தி போதனை கூடாது. அது தமிழுக்கு கேடு, தமிழருக்கு இடர்” என்று வீதியிலே, உங்கள் பள்ளி வாயிலில், தமிழ் காத்திடத் துணிந்த தன்மானத் தொண்டர்கள்-தமிழ்த் தொண்டர்கள்-அணிவகுத்து நின்ற காட்சி, என் மனக் கண்முன் நின்று, அதிலே மாணவர் காட்டிய ஆர்வத்தையும், அடக்கத்தையும் துணையையும், தோழமையையும் எண்ணியெண்ணி மீண்டும் இறும்பூ தெய்துகிறேன். அந்தப் பள்ளியில், இன்று முத்தமிழ் விழா! முத்தமிழ் வளர்ச்சி குறித்த பேச்சு! அதிலே எனக்குப் பங்கு கொள்ளும் வாய்ப்பு, பெறக்கரிய வாய்ப்பு. கிடைத்ததைக் குறித்து, உண்மையிலேயே, எனது உள்ளம் பேருவகை பூண்டு, பெருமையும் பூரிப்பும் அடைகிறது!

இத்தகைய முத்தமிழ் விழாக்கள், இன்று, தனித்திருவிழா போல, நாடெங்கும் நடைபெறுகின்றன!
மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி, தமிழணர்ச்சி, தமிழின் உணர்ச்சி பெருகியுள்ளன என்பதன் அறிகுறி, அறிவிப்பு, எடுத்துக்காட்டுகள் இவை, என்பதன்றி, வேறென்ன காரணம், வேறெந்தச் சூழ்நிலையைத் தெரிவிக்கின்றன, இவையெல்லாம்!

தமிழ்மொழி, தமிழ்ப்பாடம், தமிழ் வகுப்பு, தமிழாசிரியர், தமிழாசிரியர் வகுப்பு என்றால், எனது மாணவப் பருவத்திலே, மாணவருக்கு, ஒரு வேடிக்கை நேரமாக, கேளிக்கைக் கூடமாக, பொழுது போக்கும் விளையாட்டு மண்டபமாக எண்ணினார்; எண்ணி நடந்தும் வந்தனர்.

தமிழறிவு பெற்று, தமிழில் புலமை பெற்றவன் என்றால், அவனைப் புகர்பவர், போற்றிடுபவர் இல்லை, அன்று.

ஆங்கிலம் படித்தால் நல்லது; நன்மதிப்பு, நல்ல, படிப்பாளிக்கு அத்தாட்சி, எடுத்துக்காட்டு, நற்சான்று என்ற நிலை அப்போது!

ஆங்கிலத்தில் பேசினால்தான், எழுதினால்தான் பெருமை, கீர்த்தி, புகழ் என்ற எண்ணம் பெரிதும் வேரூன்றி நிலைத்திருந்த காலம் மாறி நீண்ட நாட்களாகிவிடவில்லை இன்னும்.

தமிழார்வம், தமிழ் படிக்கும் ஆர்வம், தமிழ் கற்றோன் என்றால், தகுதியுடையோனாக மதிக்கப்படும் நிலை, இப்போதுதான், சில ஆண்டுகளாகத்தான், தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிறது!

தமிழன் தமிழைப் படிக்கத் தொடங்கிவிட்டான்; தமிழைப் போற்றத் தலைப்பட்டுவிட்டான்; தமிழருக்குத் தனிப்பெருமை, தனது மொழிக்கு, தன் தாய்மொழிக்குத் தனது பணியைச் செய்திட முன் வந்து விட்டான். நாடெங்கும் தமிழ்த் திருநாட்கள், முத்தமிழ் முழக்கங்கள் நடைபெறும் நன்னாளைக் காண்கிறோம், இன்று! இங்கும் நடக்கிறது, முத்தமிழ் விழா, அதிலே, இன்று, இயற்றமிழ்த் திருநாள்!

முத்தமிழை மறந்திருந்த, தமிழனின் தமிழுணர்வைத் தட்டியெழுப்பி, தன்னினமொழியைப் போற்றும் நிலைக்குத் தமிழறிவை, தமிழின் தனிச்சிறப்பை, தமிழ் மொழிப்பற்றை உண்டாக்கினர், தமிழனிடம் பலர்.

மறைந்த தமிழ்ப் பெரியார், மறைமலை அடிகளாரும் தள்ளாத வயதடைந்தும் தளராது தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களும், தமிழ் மொழிப்பற்றை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள், முதல்வர்கள், முன்னணி வீரர்கள்.

மறைமலையடிகளாரின் தமிழ்ப்பற்றும், தனித்தமிழ் உணர்ச்சியையும், திரு.வி.க.அவர்களின் தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பண்பும், இருவரது தமிழ்த் தொண்டும், தமிழ் வளர்ச்சியில் அவர்களது பேரூக்கமும், இடைவிடாத உணர்வும் உழைப்பும் தமிழர் இதயங்களில் இரண்டறக் கலந்துவிட்டன!

தமிழர் வரலாற்றில், தமிழ் மொழியின் மறுமலர்ச்சி ஏட்டில் அவர்களது காலம், அவர்களது தமிழ் வாழ்வு என்றும் நிலைத்து நிற்பவை!

இரண்டு தமிழ்ப் பெரியார்கள், தமிழின் மறுமலர்ச்சித் தூதுவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா இங்கே முக்கியபகுதி! மகிழ்ச்சி தரும் பகுதியும் கூட!

தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள், தமிழ்ச் சுடர்கள், இரு திருவிளக்குகள் மறைமலையடிகளாரும், திரு.வி.கவும் ஆவார்கள். அவர்களைப் போற்றும் பேறு உங்களுக்குக் கிடைத்தது கண்டு அதிலே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததையும் நினைத்து மனமிக மகிழ்கிறேன் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்கள் வழி நின்று, அவர்கள் போற்றிய தமிழை அவர்கள் பரப்பிய தமிழை கற்றுத் தெளிந்து, தமிழர்களாய், தமிழ்ப் பெருமக்களாய், தமிழ் நாட்டை தனித்திருநாடாக ஆக்கிடும் பெருமக்களாய் நீங்கள் இன்றைய மாணவர்கள் வாழ வேண்டும். இதுவே இந்த தமிழ்ப் பெரியார்களுக்கு தமிழ்ச் சுடர்களுக்கு நாம் காட்டும் கைம்மாறு!

தமிழ்! முத்தமிழ்! தமிழின் மூன்று கூறுகள், மூன்று வகைகள், மூன்று பிரிவுகள், இயல், இசை, கூத்து!

இயல்,இசை,கூத்து! தமிழின் முப்பிரிவுகள்! தமிழின் தனிச்சிறப்பை, தனிப்பண்பை உணர்த்திடும் பிரிவுகள், முத்தமிழ், முக்கனிகள் மா, பலா, வாழை என்று முக்கனி போன்றவை, இயல், இசை, கூத்து தமிழ் மொழிக்கு!

கனிகளிற் சிறந்தவை, முக்கனிகள், மா, பலா, வாழை என்பவை! இயல், இசை, கூத்து என்ற பிரிவுகளைக் கொண்ட மொழி, தமிழ் மொழி, நமது மொழி, சிறந்த மொழி!

மா! மாங்கனி! முக்கனியில் முதற்கனி! முத்தமிழின் முதற்பிரிவு இயல்!

மாம்பழம்! சில இனிக்கும், சில புளிக்கும், சில துவர்க்கும், சில எரிப்பும் தரும்.

சில மாங்கனிகள் பார்வைக்கு அழகாக இருக்கும்; பருத்தும் பெருத்தும் இருக்கும்; கடித்தால் புளிக்கும் சில பல நல்ல மணம் தரும் மகிழ்ச்சியும் தரும், சுவைத்து உண்ண உண்ண ருசி பெருகிடும் சில பல மாங்கனிகளும் உண்டு.

மாங்கனிகளைப் பொறுக்கி, தேர்ந்தெடுத்துப் புசிக்க வேண்டும். சில உருசி தரும், உருசியோடு வேறு சில உண்ண உருசியும், உடலுக்குத் தீங்கும் விளைவித்திடும் பண்பு கொண்டதாகவும் விளங்கிவிடும்.

இதுபோலவே, இயல்! இயற்றமிழும் பல வடிவிலே, பல முறைகளிலே, பலப்பல பண்பு கொண்டது, பயன் தருவதாகவும், பயனற்றதாகவும் பலப்பல விதங்களிலே அமைந்திருக்கின்றது!
புராண இலக்கியம், பொழுது போக்கு இலக்கியம், அறிவை அகலப் படுத்தும் இலக்கியம், அப்பாவியாக்கிடும் இலக்கியம், கற்பனை இலக்கியம், காவியம், கதை, கட்டுரை, ஆராய்ச்சி, முன்னேற்றம், சிந்தனை சீர்திருத்தம் பற்றிய முற்போக்கு இலக்கியம் என்று இயற்றமிழ் எத்தனையோ, சுவையும் சுவையற்றதுமான, பயனும் பயனற்றதுமான பல இலக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

மாங்கனிகளை, நன்மை பயப்பவை, தீமை தருபவை, உபயோகமுள்ளவை, உபயோக மற்றவை என்ற முறையிலே, பிரித்து, பாகுபடுத்தித் தெளிந்து, தேர்ந்து உண்பது போல இயற்றமிழில் அடங்கிய, இலக்கியங்களையும் ஆய்ந்து தெளிந்து கற்றிட வேண்டும். காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த, உபயோகமான இலக்கிய்களையே படிக்க வேண்டும்!

பலா, தடித்த தோலுடன் கையைக் குத்தக்கூடிய முட்களையுடையதாகத் தோன்றுகிறது பலாப்பழம்!

பார்வைக்கு, வெறுப்பைத் தருகிறது, பலா! சிரமம் பாராது தோலை உரித்து விட்டால், உள்ளே இருப்பது பலாச்சுளை! சுவையான பழச்சுளைகள்!!

மேலே முள், முரட்டுத்தனமான உருவம், முட்களைக் கொண்ட தோல் மூடியிருக்கிறது. ஆனால், உள்ளே ருசியான பழச்சுளைகள். உண்ண உண்ணத் தெவிட்டாத பழச்சுளைகள் உடலுக்கு உறுதியான பழச்சுளைகள்! முள் நீக்கித் தோலை உரித்தெடுத்துப் பெறும் பலாச்சுளையைப் போன்றதுதான் இசை!

இசையைக் கற்பது இசை வல்லுநராவது எளிதல்ல! எல்லோராலும் முடியக் கூடியதுமல்ல!
இசையில் தேர்ந்திட, இராகம், தாளம், ஆலாபனம் இன்னும் எத்தனையோ முறைகளைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டிய நிலை! இவையெல்லாம், இத்தகைய கட்டுத்திட்டங்களெல்லாம் முதலில் சுவையைத் தராது. இசைத் தமிழில், எல்லோருக்கும் ஆனால், இசைவாணர்கள் இனிய குரலில், பாடக்கேட்டிடும் பொழுது பரவசமடைகிறோம்! கேட்டுக் கேட்டு இன்புறுகிறோம் இசைத் தமிழை, முள் நீக்கிய பலாச்சுளைபோல்!

வாழா! தோலை உரித்ததும் பழத்தைச் சுலபத்தில் உண்ண முடிகிறது! தோலை உரித்தவுடனே வெகு எளிதிலே பழத்தின் பண்பைப் பெறுகிறோம். அதே போலத்தான் முத்தமிழின் மூன்றாவது பிரிவு, நாடக மென்ற கூத்து.

தோல் சற்றுக் கனமாக இருந்தால் உரிப்பதிலே சற்றுத் தயக்கம் பின்னியிருக்கும், தாமதமுமேற்படும். அதைப்போலவே கூத்து! அரங்கேற்றத்திலும் நடிகர் பொறுக்குதல், பயிற்சிக் காலம், பின்னணி, எல்லாம் முதலில் ஒன்று சேர்ந்து அமையச் சற்றுச் சிரமமாகவே இருக்கும். அமைந்தபின் தோல் உரிக்கப்பட்ட வாழைப் பழந்தான். சுலப வேலைதான், உண்ண! இப்படிப் பட்டதே கூத்து.

தோலைக் கண்ட கண்ட இடத்திலே வீசி எறிந்தால் கால் வழுக்கி விழுந்து காயமேற்படுத்திக் கொள்கிறோம். நாடகமும் அப்படித்தான். இறுதியிலே சற்றுக் கவனப் பிசகாக, குறைவாக நடந்து கொண்டால் தொல்லை நம்மை வட்டமிடும கவனமாக நடந்து கொண்டால் நாடகத்தின் மூலம் நற்பணி கிடைக்கும்! நாட்டைச் செம்மைப்படுத்தி அறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம்.

முக்கனி, கனிவகைகளில் சிறந்து விளங்குகின்றன! மொழிகளிற் சிறந்து விளங்குகிறது முத்தமிழ்!
இயல்! இயற்றமிழ் இலக்கியங்களாக இன்று நாட்டிலே நடமாடிவிடும் இலக்கியங்கள் என்னென்ன, இலக்கியங்களில் காணப்படுபவை, எவையெவை! என்ன பயன், அவற்றைக் கற்பதால்?

இலக்கியங்கள் மனிதனின் எண்ணங்களை வளர்க்கின்றன! எண்ணங்களை ஏற்படுத்துகின்றன! கருத்துக்களை, பல தரப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன!

இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது! மனிதனுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது! நன்மை தீமைகளை எடுத்துக்காட்டுகிறது! மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது!


இலக்கியங்கள், எந்த முறையில் அமைகின்றனவோ, இலக்கியங்கள் எந்த முறையைப் போதிக்கின்றனவோ, எந்தெந்த ஏற்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றவோ, அந்தந்த முறைகளிலே ஏற்பாடுகளிலே மனிதனது, எண்ணமும் செல்லும், செல்லுகிறது.

எனவே இலக்கியங்கள், நல்ல முறையில், நல்ல கருத்துக்களைப் போதித்திடும் வழியில், மனிதனின் எண்ணங்களைப் பண்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது! முக்கியமுமாகிறது!

இன்று, தமிழ்நாட்டில் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்பட்டு மக்களால், தமிழ்ப் புலவர் பெருமக்களால் போற்றப்பட்டு வருகின்றன பல இலக்கியங்கள்!

இலக்கியங்கள் என்ற வரிசையிலே, இன்று, காணப்படுபவை பெரும்பாலும் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துக்களைத் தருபவைகளாகக் காணப்படவில்லை! எல்லாம், ஒரே கருத்தை, பழைமையைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன!

என்றோ, யாராலோ, வேதம், அகமம், இதிகாசம், புராணம் என்ற முறையிலே ஏற்பட்டு, எழுதப்பட்டவைதான், முடிந்த இலக்கியங்கள் அவற்றில் கூறப்படும் கருத்துக்களே நாட்டினர்க்குத் தேவை. அவற்றை, ஏற்கவேண்டும், போற்ற வேண்டும், ஏன், என்று கேட்காமல் பின்பற்றிடவும் வேண்டும் என்ற எண்ணம், கொள்கை, கோட்பாடு, நாட்டில் படித்த புலவர்களிடையேயும் பெரிதும் காணப்படுகிறது.

பழைய இலக்கியங்கள், பழைய காலத்திற்கு ஏற்றவையாக சிறந்தவையாக இருக்கலாம்! ஆனால், அதே கருத்துக்கள், அந்தக் கால கருத்துகள், அப்படியே முழுதும், இன்று ஏற்றுக்கொள்ளப் படவேண்டும் என்று கூறுவது, திட்டம் வகுப்பது, தீர்மானங்கள் செய்வது தகுதிதானா, தேவைதானா? கூறுங்கள்!

பழைய இலக்கியங்களிலே, காவிய ரசம் ததும்பலாம்; நடையழகு நன்றாக இருக்கலாம்; அதைத் தீட்டியவர் பெரிய புலவராகவும் இருக்கலாம்! அதற்காக, அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கதைகள், நீதி போதனைகள் அத்தனையும் தேவை. தீர்மானமாவை, என்றும் மாற்ற முடியாதவை, மாற்றக் கூடாதவை என்றும் கூறுவதை எப்படி ஒப்ப முடியும் முழுதும்!

அந்த நூல்களிலே உள்ள காவிய ரசத்தைப் பருகலாம். சுவையோடு! வேண்டாமென்று கூறுவோர் யார்? நடையழகைப் பாராட்ட வேண்டாமென்று தடுக்கமாட்டானே எந்தப் புல்லனும்?

காவிய ரசம், நடையழகு இவற்றுடன் நின்று விடாது, கருத்தழகையும் கவனிக்க வேண்டும் என்று கூறாதே, காலத்திற்கேற்ற கருத்தா, என்று கருத்தூன்றிக் கவனிக்காதே! கேள்விகள் கேட்காதே! கண்மூடிப்பாடி, பாராயணம் செய், பாராட்டு, பாடமாகக் கொள், அதன் வழி நட, என்று கூறுவதை எப்படி ஒப்பிட முடியும்?

எந்த இலக்கியமானாலும், அதன் கருத்தை, அது தரும் பாடத்தை போதனையை, நல்லறிவைப் பொறுத்துத்தான் அதன் சிறப்பு, அதனது தேவை அமையும்; அமைந்திடவும் முடியும்!

முற்காலப் புலவர்கள் என்ன, சாமான்யமானவர்களா? அகத்தியன் பரம்பரையில் வந்தவர்கள், அறியாமலா கூறியிருப்பார், என்று ஆர்ப்பரிப்பதும் வசிஷ்டர் வாக்கு, வேத வாக்கு என்று போதனை செய்வதும், நம்பினவருக்குத்தான் மோட்சம், நம்பாதவர்க்கெல்லாம் நரகம் என்று பயமுறுத்தியும், பண்டைய ஏடுகளையே திரும்பத் திரும்ப, வலியுறுத்தி அவற்றையே கற்று, தமிழர்கள் இலக்கியத் துறையிலே முன்னேறாது, காலத்திற்கேற்ற கருத்தமைத்த இலக்கியங்களை, புதுப்புது இலக்கியங்களைக் உண்டாக்காது, பழைமையில் மூழ்கித் தவிக்கின்றனர்.

பழைமை! பழைமை! என்று எதற்கெடுத்தாலும் பேசுகிறார்கள்! பழைய புராணம், பழைய காலம், பழைய பாடல், பழைய முறை, பழைய கருத்து, பழைய மொழி என்றெல்லாம் கூறி, எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

பழைமை, பழைய ஏடுகள், பழைய கருத்துக்கள், பண்டைய இலக்கியங்கள் தான் முடிந்தவை, சிறந்தவை என்ற நிலை மாறி புதிய இலக்கியங்கள் தோன்றவேண்டும், எழுதப்படவேண்டும், இன்று!

நாகரிக சாதனங்கள் பலவும் தோன்றி, உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டே போகும் இந்நாளில், நாம் புதுப்புது கருத்துக்களை, எண்ணங்களை, ஏற்பாடுகளை, வாழ்க்கை முறைகளை, நாகரிகச் சாதனங்களைத் தெரிந்து கொள்ள, புதிய இலக்கியங்கள் உண்டாக்கப்படவேண்டும், என்று கூறுவது கூடாதா, தேவையற்றதா, பழைமைக்கு விரோதமா, எந்த விதத்திலே தவறு? எடுத்துக்காட்டுங்கள்!

மனிதன், மனிதனாக வாழவேண்டும். மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தேவை! மனிதனது முதற்தேவை, உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும்.

முதற் தேவையான, முக்கியத் தேவையுமான, மூன்று தேவைகளைப் பெற்றால்தான் தேவையான அளவு பெற்றால்தான் மனிதன் மனிதனாக வாழ முடியும்.

தேவையற்ற மனிதனாக, திருப்தியுடைய மனிதனாக வாழ, முக்கியத் தேவைகளான, முதல் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றையும் பெற்றிடத்தான் மனிதன் வாழ்கிறான்!

மனித வாழ்வின் முக்கிய இலட்சியம், முதல் இலட்சியம், தனது முதல் தேவைகளைப் பெறுவதுதான்; பெற்றுத் திருப்தியாக வாழ்வது தான்!

வாழவேண்டிய மனிதன், தனது வயிற்றை நிரப்பி உடை உடுத்தி இருக்க இடம் அமைத்து வாழ, இயற்கை வளங்களைப் பண்படுத்தி உபயோகிக்கப் பல வழிகளிலும் தனது அறிவை, ஆற்றலை, சிந்தனையை, செயல் திறமையை, உடலுமைப்பைப் பயன்படுத்துகிறான்.