அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


போராட்டம்
1


அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! மறைந்த மாவீரன் தோழர் சௌந்தர பாண்டியன் அவர்கள் பெயரால் ஓர் படிப்பகத்தை திறக்க முன் வந்த ஒன்பதாவது வட்ட திராவிட முன்னேற்றக்கழக அன்பர்களின் அரிய ஏற்பாட்டைக் கண்டு ஆனந்தமடைகிறேன். அவர்களின் நல்ல எண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

நம்முடைய நாட்டில் இப்படிப்பட்டப் படிப்பகங்கள் பலப்பல தேவைப் படுகிறது. படிப்பகத்தின் மூலம் பாமர மக்கள் பலப்பல புதிய நூல்களைப் படித்துப் பயன் பெறக்கூடும். படிப்பகம் மட்டுமல்ல ஆரம்ப பாடசாலைகளை ஏற்படுத்த வேண்டும். மாலை அல்லது குறிப்பிட்ட சில நேரங்களில் முதியோர் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி அதற்காகவும் பாடுபட வேண்டும்.

சென்னை முழுமையும் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த அரியதோர் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான உதவிகளைப் பொதுமக்கள் செய்ய முன்வரவேண்டும்.

எனக்கு முன்னால் தோழர் இராமச்சந்திரன் அவர்களும், தோழியர் சத்தியவாணி முத்து அவர்களும், பேசினார்கள். நீங்களும் கேட்டீர்கள். மகிழ்ந்தீர்கள்.

அவர்கள் பேசும் போது, உதாரணத்திற்காக சில விஷயங்களை எடுத்துக்காட்டினார்கள். அதை மாற்றுக் கட்சியினர் பொதுமக்களிடம், திருத்திக் கூறி தப்பபிப்ராயம் கற்பித்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குற்றம் குறை கண்டுபிடிப்பதே மாற்றுக் கட்சியின் வேலையாகிவிட்டதால், அவ்வித அந்த நிலை ஏற்படக்கூடாதென்று ஆசைப்படுகிறேன்.

தோழர் இராமச்சந்திரன் கலையும் வாழ்வும் என்னும் பொருள் பற்றி பேசும்போது பலப்பல அரிய விஷயங்களைக் கூறினார். கற்காலம் முதல் இக்காலம் வரை நாகரீகம் என்ன நிலையில் இருந்து வருகிறது என்பதை அழகுபடுத்தி ஆதாரங்களைக் காட்டினார். இப்படிக் காட்டப்பட்ட ஆதாரங்களில், ஆச்சாரியார் சர்க்கார் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதியகல்வி திட்டம். அக்கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டினார்.

ஜாதி பேதம் ஒழிய வேண்டும். கலப்பு மணம் அவசியம் என்று ஆச்சாரியார் ஒரு இடத்தில் பேசி விட்டு, மற்றொரு இடத்தில், கல்வி கற்பது மட்டுமல்ல மாணவர்களுக்கு முக்கியம், தொழில் துறையிலும், அவர்கள் குல சம்பிரதாயப்படி அதை மறவாமல் வண்ணான், வண்ணாரத் தொழிலையும், அம்பட்டன், அம்பட்டத்தொழிலையும் செய்ய வேண்டும் என்று அறிவுரை ஆற்றும்-ஆசாரியார், முன்னுக்குப் பின் முரணாக குலத்தொழிலும் வளர வேண்டும். கலப்பு மணமும் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறு என்று தோழர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார். அவர் நமது கூட்டங்களிலே பேசி அதிகமாக பழக்கமில்லை. ஆதலால், வண்ணான், அம்பட்டன் என்று கூறி விட்டார்.

வண்ணான் என்பதை நாம் சலவைத் தொழிலாளி என்றும், அம்பட்டன் என்பதை மருத்துவத்தொழில் செய்பவர் என்றும் கூறுவதுண்டு. அதன்படி தோழர் கூறியிருக்க வேண்டும். பழக்கமில்லாததால், தவறி அப்படிக் கூறிவிட்டார். இந்த தவறுதலை எதிர்க்கட்சியாளர் பொது மக்களிடம் கொண்டு போய், பார்த்தீரா திராவிட முன்னேற்ற கழகத்தை, பிறவியில் உயர்வு, தாழ்வு கூடாதென்கிறீர்கள். இராமச்சந்திரன், வண்ணான், அம்பட்டன் என்று ஜாதியின் பெயரைச் சொல்லி உங்களை கேவலப்படுத்தி விட்டார், என்று ஆர்ப்பரிப்பார்கள், அதைக்கண்டு ஏமாற வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

தோழியர் சத்தியவாணி முத்து பேசுகையில் பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கு உதாணமாக கணவன், மனைவி நாடகத்திற்குச் சென்று திரும்பியபோது கூறிய வாதத்தைக் காட்டினார்கள். துச்சாதனன் துகில் உரியும் போது, துரோபதை யார் என்று கேட்டாள். ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி என்று கூறியதும், அவள், கணவனிடம் உங்களுக்கு குழந்தையில்லை. நீங்கள் வேறு ஒருவருடன் இருங்கள். நான் வேறு ஒருவனுடன் இருக்கிறேன். இது தவறு இல்லை என்பதை புராணம் கூறுகிறதே, என்ற கேள்வியைப் போட்டு கணவனைத் திணற அடித்தாள். அவர் திண்டாடினார். அதில் அவர் எடுத்துக்காட்டியது பெண் எழுச்சிப் பெற்றால் என்பதை தெளிவுபடுத்தவே அல்லாமல், ஒவ்வொருவரும் அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல, அவர்களுடைய எண்ணம், நோக்கம்.

இந்தப் பேச்சில் சிந்திய எச்சிலை, எதிர்க் கட்சியார், பொது மக்களிடம் திரித்துக் கூற, தங்களுக்கு ஆதரவு தேட முற்படலாம், அது ஆகாத காரியம் என்று அவர்களுக்கு எச்சரிக்கிறேன். இருவரின் பேச்சிலும் குற்றம் குறைகள் இல்லை என்பதே எனது அபிப்ராயம். பொது மக்களும் அப்படியேதான் நினைப்பார்கள். எதிர்க் கட்சியின் ஏமாற்றலுக்கு பொதுமக்கள் செவிசாய்க்கக் கூடாது.

பொதுவாக நமது நாடு கல்வித் துறையில் பிற்போக்கடைந்துள்ளது. மற்ற நாட்டை போல கல்வியைப் பரப்புவதில் அக்கறை கொள்ளவில்லை நமது ஆட்சியாளர். அன்றாடம் ஓர் திட்டத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் தொல்லை தந்து வருகின்றனர். மக்கள் பெற்றுள்ள கல்வி அறிவு மிகவும் குறைவு. பெற்ற அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இப்படிப் பட்ட படிப்பகங்கள் மிகவும் உதவியாக இருக்கும். படிப்பகங்கள் நாட்டில் அதிகமாக வளர வேண்டும். படிப்பகம் நடத்த பொருள் தேவைதான். அதை நாம் பொது மக்களிடமிருந்து பெற வேண்டும். இந்த உதவியும் இருந்தால் மிகவும் அவசியமென்றே கருதுகிறேன்.

தோழர் இராமச்சந்திரன் அவர்கள் கலையும் வாழ்வும் என்பதைப் பற்றி பேசும்போது மிக அழகாகவும், விரிவாகவும் பேசினார். கலைக்கு நல்லதொரு விளக்கமும் தந்தார். மக்கள் எழுச்சி பெற்றவர்களாக விளங்க வைப்பதே கலை. கலை புதியதோர் பாதையில் மக்களை நடத்திச் செல்வதாக இருக்க வேண்டும். பழமை மோகம் ஒழிய வேண்டும். மாற்றமென்பது மக்கள் நலன் கருதியதாக இருத்தல் மிக மிக அவசியம். அரசியலில் மாறுதல் வேண்டுமென்பது போல மதத்திலும் மாறுதல் வேண்டும்.

பழைய காலத்தில் இருந்தவை அந்தந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். அது இக்கால அறிவுக்கு பொருத்தமற்றதாக இருந்தால் அதை மாற்றி அமைக்க வேண்டாமா? மேல் நாடு நாகரீகவளம் அமைந்த நாடு என்று கூறுகிறார்கள். அங்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டவன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

நம் நாட்டைப் போன்று மினர்வா, ஜுபிடர், ஹர்ஜினா போன்ற எண்ணற்றவைகள். அவைகளை வணங்கி வந்தவர்கள் மாற்றம் கண்டுள்ளனர். பிதா ஏசு என்றும், அதற்காக ஒரு பைபிள், வேத சாஸ்திரம், இஸ்லாம், சமூகமும் அப்படியே உருவமற்ற அரூபி எங்கும் நிறைந்த பொருள். அதற்கு உருவம் ஒன்று அவசியமில்லை என்று கூறி அதன்படி அல்லாவை வணங்கி வருகிறார்கள். அதை விளக்கு குர் ஆன் என்னும் வேத நூலும் அவர்களுக்கு உண்டு.

ஆகவே, பழைமை கடவுள் மாற்றப்பட்டு புதுவழி கண்டு தெய்வ வழிபாட்டைச் செய்து வரும் மற்றவர்களைப் போல் நாமும், நமது அறிவு ஆராய்ச்சிக்குப்பட்ட கடவுள் வழிபாடு இருக்க வேண்டாமா? மார்க்கத்தில் மறுமலர்ச்சிக் காண வேண்டாமா? கண்டு அதன்படி நடக்கும்படி கூறுவதுதான் அறிவுடைமை.

அறிவு பிரசாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். மதம், கடவுளுக்கு ஆபத்து தந்து விடுவதாகக் கூறினார்கள். ஆனால், எனது அரும்பெரும் தலைவர் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பே அறிவு பிரசாரத்தைச் செய்து வந்தார். அதற்காக சுயமரியாதை இயக்கத்தையும் கண்டார். இந்த இயக்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

அதன் பிரதிபலிப்பே நான், அவர் காட்டிய வழி நின்று தொண்டாற்றி வருகிறேன். அறிவுத்துறையில் மட்டுமல்ல, கலைத்துறையிலும் அவர் எனக்கு குரு.

ஈரோட்டில் அவருடைய தலைமையில் சந்திரோதயம் என்ற நாடகம் நடைபெற்றது. அதில் நானும், மற்றவர்களும் நடித்தோம். என்னை மேடையில் பாராட்டி பேசிய பல பதங்கள் என் ஞாபகத்திற்கு வருகிறது.

பல மாநாடுகளைக் கூட்டி பேசுவதை விட ஒரு நாடகம் நடத்தி மக்களை, மாற்றலாம் போலிருக்கிறதே. நீங்கள் இவ்வளவு அழகாக நடப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே, என்று கூறியது மட்டுமல்ல, என்னைப் பாராட்டி பத்திரிகையில் மறுநாள், அவர் கைப்பட தலையங்கம் எழுதி, எனக்குப் படித்துக் காண்பித்து வெளியிட்டார்.

குருவின் பாராட்டுதலைப் பெற்று அதன்வழி நடக்கிறேன். குருமாறினாலும் சீடன் செயலில் மாற்றமில்லை, ஏகலைவன் போல் கலைமிக அவசியம்.

கலை மூலம் நமது மக்களுக்கு அரசியல் சமுதாய சீர்திருத்த எண்ணங்களைப் புகுத்தலாம். நடிப்பின் மூலம் உணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கலாம். அதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம், தன் கொள்கைப்படி பல நடிகர்களை நாட்டிற்குத் தந்திருக்கிறது.

மதபக்தி, மூட நம்பிக்கை நம் மக்கள் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. அதில் மாற்றம் காணவேண்டும். வர்ணாசிரம கோட்பாடுகள் நிலைத்திருக்க ஆரியர்கள் கையாண்ட முறைகள் பலப்பல. அவைகளில் ஒன்று கதாகாலட்ஷேபங்கள்.

அவைகள், நாடு நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளிலும், வீதிகள்தோறும் நடைபெற்று வருகின்றன. அவர்கள் ராமாயணம், பாரதம், அரிச்சந்திரா, நல்லதங்காள் கதைகளைக் கையாள்வதைப் போல நாமும் சீர்திருத்தவாதிகளான சாக்ரடீஸ் போன்றவர்களின் கதைகளை காலட்ஷேபத்தின் மூலம் பரப்ப வேண்டும். இதனால், மிகுந்த பயனுண்டு. மக்களும் திருந்துவார்கள். நான் சென்ற ஆண்டில் திண்டிவனத்தில் நடைபெற்ற சமூக, சீர்திருத்த மாநாட்டில் இதை குறிப்பிட்டிருக்கிறேன். நமது பிரசாரகர்கள் இதை கையாளவேண்டு மென்று, இது நமக்கு புதியதுதான், பழக்கம் ஏற்படும் வரையில், அதன் பிறகு நம்மவரை மிஞ்ச எவராலும் முடியாது. காலட்ஷேபம் என்றதும், பயந்து விடாதீர்கள்! மிக எளிதானது, அதன் முறை தெரிந்து கொண்டவர்களுக்கு, இந்த முறையைக் கையாளவேண்டுமென்று, நான் நெடு நாட்களாக நினைத்ததுண்டு, என் நினைவை நிறைவேற்ற நீங்கள் முற்படவேண்டும்.

ஆச்சாரியார் அழிக்கப்படவேண்டியதை காக்க, அழகான முறையில் பேசி வருகிறார். எங்கு சென்றாலும் பஜனை செய்யுங்கள், பஜகோவிந்தம் பாடுங்கள். கடவுளை மறவாதீர்கள், மறந்ததால் மழையில்லை, பஞ்சம் வந்து விட்டதென்று. அவருடைய ஆரிய மத உபதேசம் அறவே ஒழிய வேண்டுமானால், நாமும் மக்கள் மத்தியில் கதாகாலஷேபங்கள் செய்ய வேண்டும்.
ஆச்சாரியார், நாஸ்திகம் பரவி விட்டது. அதை ஒழிக்க வேண்டுமென்கிறார். ஆஸ்திகம் வளர, அவர்கள் கூட்டம் வேலை செய்யட்டும். அதை தடு“கக வேண்டிய புதிய திட்டம் நமக்கு தேவையில்லை. அவர்கள் கையாளும் கதாகாலஷேபமே போதுமானது.

காரைக்காலம்மையார் பட்ட கஷ்டத்தைச் சொல்லுங்கள். சாக்ரடீஸ், விஷமூட்டப்பட்ட கதையைச் சொல்லுங்கள்.

கலீலே சமூகச் சீர்திருத்தவாதி மறைக்கப்பட்டதை கூறுங்கள். திருஞான சம்பந்தர் ஞானப்பால் குடித்த தன்மையை விளக்குங்கள். நாடு அறியாது இருந்த நல்லவர்களை, அவர்களை நாட்டு மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி கூறுங்கள் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களை. அதன் பின் நடக்குமா புராண புரட்சி காலட்ஷேபத்தின் மூலம் பாருங்கள்.

பாகவதர்கள்தான் காலட்ஷேபம் செய்ய பிறந்தவர்கள் என்று நினைக்க வேண்டும். நீங்கள் அவர்களைப் போல், பட்டு பீதாம்பரங்களைக் கட்டி, பளபளப்பான மோதிரங்களை அணிந்து, கையில் கஜ்ஜரா கட்டையுடன் தோற்றமளியுங்கள். கூறுங்கள் சீர்திருத்தவாதிகளின் சரித்தரத்தை கேட்பவர் கேலி செய்யார், பார்ப்பவர் பரிகசிக்க மாட்டார்கள். ஆனால், பக்தர்களுக்கு மிரட்சி ஆரியத்திற்கு ஆட்டம் கொடுக்கும்.

இம்முறையை ஒரு சில ஆண்டு கையாண்டால், மேலும் நீண்ட நாட்களாக, இருந்து வந்த மூட பழக்க வழக்கங்கள் மறைந்து மண்மேடாகும். உதாரணம் வேண்டுவதில்லை.

நாம் நாடகத்தில் நடிக்க முற்பட்டோம். புராண நாடகங்கள் நடை பெறுவதை மக்கள் பார்க்கவும் வெட்கப்படுகிறார்கள். சினிமாவில் மாற்றத்தை காண முடிந்தது. நம்முடைய பிரச்சாரத்தால், சென்ற ஆண்டு எடு“க்கப்பட்ட ஐம்பத்தி மூன்று படங்களில், ஐம்பத்திரண்டு படங்கள் சமூக சீர்திருத்தத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்டது. அவ்வளவும் கழகப்படமல்ல. எந்த கோணத்தில் பார்த்தாலும் அவைகள் நம்முடைய பிரச்சாரத்தால் மாற்றமடைந்தவை.

மக்கள் விருப்பப்படி மாற்றம் தேவை என்பதை அறிந்து பட முதலாளிகள் தங்கள் செய்கைகளையும் மாற்றிக் கொண்டார்கள். ஆகவே கலையில் மறுமலர்ச்சியைக் கண“டோம். காலட்சேஷபத்திலும் அப்படியே காண முடியும் என்று நம்பிக்கை எனக்குண்டு.

முதியோர்களுக்கு காலட்ஷேபம் மூலம் கல்வி அறிவைப் புகுத்தலாம். ஒருவர் படித்து தெரிந்துக் கொள்வதை விட கேட்டுத் தெரிந்து கொள்ளும்படிச் செய்ய இது மிகவும் சாதகமானது.

திராவிட முன்னேற்றக்கழக சென்னை கிளைகள் இதில் அக்கறைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கிளைக் கழகமும் ஒரு படிப்பகத்தை திறந்து அதன் மூலம் மக்கள் அறிவு தெளிவு பெற பாடுபடலாம். அதற்கான வேலைகளில் நானும் பங்கு கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த வட்டத்திலுள்ளவர்கள் முதன் முதலில் இம்முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டு நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்கள் மேலும் மேலும் ஊக்கம“ குன்றாமல் உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

வணக்கம்.

தலைவர் அவர்களே! தோழர்களே!!
இன்றைய விழாவிற்கு இவ்வளவு பெருவாரியான மக்கள் கூடியிருப்பதைக் காண நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நிதியளிப்பு விழா சிறப்பாக நடைபெற, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவும், கருணாநிதியும் எடுத்துக்கொண்ட முயற்சி நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நான் உங்கள் சார்பாக அவர்களை பாராட்டுகிறேன்.

தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரியதோர் சொற்பொழிவு ஆற்றினார். நீங்களும் கேட்டு ரசித்தீர்கள். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். நாடக சம்பந்தமாக நடிகர் நாராயணசாமி மூலம். முதன் முதலில் நான் அவரை சந்திக்கும் போது சந்தேகம் கொண்டேன் அவர் ஒரு ஆரியன் என்று. பிறகு அவர் ஒரு திராவிடன் என்று தெரிந்து ஆனந்தமடைந்தேன்.

அவருடைய தோற்றம், அழகு, உடல் அமைப்பு, பளபளப்பு, பார்ப்பனர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியிருக்கு மென்பதில் ஐயமில்லை. அவருடைய பேச்சு பெருமைக்குரியது. அவருடைய ஒத்துழைப்பு, நமது எதிர்கால திட்டத்திற்கு வெற்றியைத் தேடித் தருமென்று நம்புகிறேன்.

தோழர் மதியழகன் பேசும்போது, ஆட்சியாளர் போக்கை மிக அழகாக, எடுத்துக்காட்டினார். காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நாடு பிற்போக்கடைந்துள்ள நிலைமையை.

நாட்டு மக்களுக்கு பாடுபடும் எந்தக் கட்சியானாலும், தனிப்பட்ட மனிதர்களானாலும் அவர்களிடம் தன்னடக்கம், தளராத ஊக்கம், பெருந்தன்மை இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

நம்மைக் கண்டு சில, பல சில்லுண்டிகள், சிந்து பாடுகிறார்கள். கேலியும் கிண்டலும் கிளம்புகிறது. மாற்றார்களிடமிருந்து, அது மாறாது! காரணம்? அவர்கள் மாற்றார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது, நான் இருக்கும் வீதிக்கு அடுத்த வீதியில் ஒரு பஜனைக் கூடம் இருந்தது. அதை சோம சுந்தர முதலியார் முன்னின்று நடத்தி வந்தார். அவர் வாரந்தோறும், சுண்டல் செய்து தருவது வழக்கம் பஜனைக்கு வரும் மக்களுக்கு அந்தச் சுண்டலையும், அந்த மனிதரே தயார் செய்வார். அது மட்டுமல்ல, கடலை வாங்க அவரே கடைக்குச் செல்வார். காரணம்? யாரையும் நம்ப மாட்டார்.

அதைக் கண்டு ஊரார் கிண்டலும் கேலியும் செய்தனர். இவ்வளவு பெரிய மனிதன் தானே கடைக்குச் சென்று. கடலை வாங்கி அடுப்பேற்றி சுண்டல் செய்து, தானே பங்கிடுகிறானே, யாரையும் நம்பாத பாவி, லோபி என்று தூற்றினர்.

விஷயம் முதலியார் காதில் விழுந்தது. மறு நாள் கடலை வாங்க ஒரு ஆளை அனுப்பினார். வாங்கி வந்த கடலையை சுண்டல் செய்ய மற்றொருவரைக் கொண்டு செய்தார். பங்கிட பக்தர்களில் ஒருவரை நியமித்தார். பார்த்தார்கள் ஊரார், இந்த செய்கையைப் பாராட்டினார்கள் இல்லை. உடனே பழிக்க முற்பட்டார்கள். பார்த்தீரா முதலியார் ஜம்பத்தை! வாழ்வு அதிகமாகி விட்டது பஜனை மடத்து பணமல்லவா அவருக்கென்ன வந்தது என்று.

தானே செய்து வந்த வேலைக்கு இப்பொழுது தனித்தனியாக ஆள் வைத்து விட்டார். இந்த வாழ்வு எத்தனை நாட்களுக்கு பார்க்கலாம்! என்று பரிகசித்தார்கள். பரிதாபத்திற்குரிய பஜனை மடம் வேலையைப் போல தான் பொது வாழ்வும்.

பொது வாழ்வு பஜனை மடத்தை விட மிகவும் கஷ்டமானது. பொறுப்பு வாய்ந்தது. பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் புகழப்படுவதைப் போல், பன்மடங்கு தூற்றப்படுவார்கள்.
அந்த தூற்றலைக் கண்டு துக்கப் படவோ, கஷ்டப்பட்டு கலங்கவோ கூடாது. அப்படிப்பட்டவர் பொது வாழ்விற்குப் புறம்பானவர். எதையும் ஏற்கும் இருதயம் வேண்டும் பொதுத்தொண்டிற்கு, உதாரணமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளியில் நாலாவது வகுப்புக்குரிய ஒரு பாட புத்தகத்தில் ஒருகதையுண்டு. தந்தையும் தனையனும் கழுதை மீது ஏறி அடுத்த ஊர் பிராயணம் செய்தார்கள். பாதையில் போவோர் வருவோர் பார்த்தனர் இவர்களை, பரிதாபப்பட்டனர் கழுதைக்காக.

இரண்டு தடியர்களும் கழுதை மீது உட்கார்ந்துக்கொண்டு போகிறார்கள். பாவம் கழுதை அவர்களைத் தாங்க தத்தளிக்கிறது என்றனர். உடனே அவர்கள் கழுதையை விட்டிறங்கி நடக்கலாயினர். சிறிது தூரம் சென்றதும், சிலர் கூறினர். குழந்தையை நடக்கவைத்து அழைத்து போகிறான் பாவி கழுதை மீது உட்கார வைத்து போகக் கூடாதா என்றனர். அதை கேட்ட தந்தை, மகனைக் கழுதை மீது ஏற்றிச்செல்ல ஆரம்பித்தான். அதற்கு அடுத்து, கொஞ்ச தூரம் போனதும் ஒரு கூட்டம் அக்காட்சியைக் கண்டு தள்ளாதக் கிழவன் தடுமாற்றத்தோடு நடந்து செல்ல, நடக்க சக்தியுள்ள பையன் கழுதை மீதா என்றனர் குறும்புக்காரர்கள்.