அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியாரைச் சிறையில் வைத்திருப்பது முறையா?
1

சென்னை டிச.24, கடந்த 21.12.57 மாலை சென்னை 12ஆவது வட்டத் தி.மு.கழகச் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய பேருரை இங்குத் தரப்படுகிறது .

நீங்கள் நல்ல ஆர்வத்தோடும், மிக்க மகிழ்ச்சியோடும் இங்குக் கூடியிருக்கிறீர்கள். மிக நெருக்கடியான இந்த இடத்தில் நீங்கள் கூடியிருப்பது போலவே. உங்கள் வாழ்க்கைச் சுமையையும் தாங்கி் கொண்டே உழைக்கும் மக்களாக இருக்கிறீர்கள். இதேபோலத்தான், மிக நெருக்கடியான நிலையிலே இந்த நாட்டில் பலர் வாழ்கிறார்கள். இந்த நிலையைக் கண்டு பரிதாபப்படாதவர் யாரும் இருக்க முடியாது.

வறுமைக் கொடுமை வேறு எங்கும் உண்டா?

இங்குள்ளதைப்போல வறுமைக் கொடுமையைத் தாங்கும் பொறுமையுணர்ச்ச்சியை வேறு எந்த நாட்டிலும் காண முடியாது.

இப்பொறுமை உணர்ச்சியை வீணாக, நாடாள வந்தவர்கள் தூண்டிவிட முடியாது.

கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் மனதைப் பெற்றிருக்கிறார்கள் இந்த நாட்டு மக்கள் என்பதைச் சாக்காக வைத்துத்தான், பண்டித நேரு இங்கு வந்தபோது, பொதுமக்களைத் தாறுமாறாக ஏசிப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். கஷ்டப்படும் மக்களைப் பார்த்து, எதிரிகள் எதுவும் சொல்ல முடிகிறது. தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் பண்டித நேரு துணிவுடன் எதையும் பேசுகிறார் என்றால், அந்தத் துணிவு அவருக்கு ஏற்படக் காரணம் இருக்கிறது.

பெரியாரைத் திட்டக் காரணம் என்ன?

ஒரு கட்சியை அவர் திட்டுகிறார் என்றால், அவர் திட்டுகிறபோது மற்றக் கட்சிக்காரர்களெல்லாம் சும்மாயிருந்து விட்ட தைரியம்தான் இன்று பெரியாரை அவர் தாறுமாறாகத் திட்ட காரணம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கழகத்தைத் தாக்குவதற்கென்று தமிழ்நாட்டுக்கு வந்தார் பண்டித நேரு. அப்பொழுது டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரை மாற்றிக் கல்லக்குடி‘ என்று பெயர் வைப்பதற்காக ஒரு போராட்டமும் பண்டித நேருவுக்கு நம் எதிர்ப்பை அறிவுறுத்த இரயில் நிறுத்தப் போராட்டமும் நடத்தினோம்.

ம.பொ.சி.யை நேரு திட்டினார்!

அப்பொழுது இரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தியதற்குக் காரணம். அதற்கு முன்பு சிவஞானக் கிராமணியின் போராட்டத்தைக் குறிப்பிட்டு, ‘சிறுபிள்ளைத்தனம்‘, ‘அர்த்தமற்றது‘ என்றெல்லாம் திட்டினார் நேரு என்பதற்காகத்தான்.

அப்பொழுது தமிழரசுக் கழகக்காரர்களைத்தான் திட்டினார் என்றாலும், எங்களுடைய மனமும் கொதித்தது. எங்கள் மனக் கொதிப்பை நேருவுக்குக் காட்டத்தான் இரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தினோம். மற்றும் கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டமும் நடத்தினோம். மொத்தம் 5000க்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றார்கள்.

தார்மீக ஆதரவு கொடுத்திருந்தால்....!

நேரு திட்டியது சிவஞானக் கிராமணியாரைத்தானே என்று நாம் சும்மாயிருந்துவிடவில்லை, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதியினரைத் திட்டினால் தமிழர் எல்லோருமே எதிர்க்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டால், அதற்குப்பிறகு ஆணவத்துடன் பேசமாட்டார் பண்டித நேரு.

நாங்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், சிவஞானக் கிராமணியாரும், பெரியாரும், மற்றும் கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளம், ‘தி.மு.கழகம் செய்தது நியாயம்தான்‘ என்று எடுத்துக்காட்டி நமக்குத் தார்மீக ஆதரவு கொடுத்திருந்தால், இந்தத் தடவை வந்தபோது நேரு பெரியாரைத் திட்டியிருக்க மாட்டார்.

அப்பொழுது சிவஞானக் கிராமணியார் என்ன சொன்னார். ‘என்னைத் திட்டினால் அதற்கு இவர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?“ என்றார், பெரியார் என்ன சொன்னார் – ‘இவர்களைப் பார்த்து இதைச் சொல்லாமல் வேறு என்னதான் சொல்வார்‘ என்றார்.

நேரு, தமிழ்நாட்டிலுள்ள ஒருவரைத் திட்டினால் வேறு கட்சியிலுள்ளவர்களெல்லாம் அதை ஆதரிப்பார்கள் என்று – கருதித்தான், பெரியாரையும், நாட்டு மக்களையும் தாறுமாறாக – ஆணவத்துடன் திட்டியிருக்கிறார். நேரு, அவர்களைத்தானே சொன்னார். அவர்கள் நம்மை ஆதரிப்பவர்கள் அல்லவே என்பதால், நாம் நேரு சொல்லியது சரி‘ எனக் கூடமாட்டோம்.

பந்தல் அளவுக்குத்தான் உரிமை!

‘திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் இந்த நேரத்தில் எங்கே ஒன்று சேர்த்து விடுமோ, தம் பிழைப்பு – கெட்டு விடுமோ‘ என்று அச்சப்படுபவர்களும் உண்டு. ‘இந்த நேரத்திலாவது அவை இரண்டும் ஒன்று சேராதா? என்று ஆசைப்படுபவர்களும் உண்டு.

அச்சப்படுபவர் யார் என்பதும் எனக்குத் தெரியும். ஆசைப்படுபவர்களையும் எனக்குத் தெரியும். இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் – இந்த இரண்டு சாராரையும் திருப்திப்படுத்த முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.

ஊரிலே திருமணங்கள் பல நடக்கின்ற நேரத்தில் – தெருவில் போகின்ற திருமணமாகாத வாலிபன் ஒருவன், பெரிய பந்தலாகப் போட்டிருக்கும் திருமண வீட்டைப் பார்த்து, ‘இப்படிப்பட்ட பந்தலைத்தான் எனது திருமணத்துக்கும் போட வேண்டும்‘ என்று நினைத்தால். அதில் தப்பில்லை. பந்தலைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் மட்டும்தான் வரும். ஆனால், அந்த வாலிபன், அந்தத் திருமண வீட்டுக்குள்ளேயும் – நுழைந்து, இந்தப் பெண்தான் எனக்குப் பிடித்திருக்கிறது, இந்தத் திருமணமே எனக்குத்தான் என்று கூறினால் என்ன ஆகும்?

அதைப்போல, எந்த விதத்திலும் பெரியாருடைய வளர்ச்சியை – போராட்டங்களை நம்முடையதாக்கிக் கொள்ள முடியாது. பெரியாரிடம் நாம் பந்தல் அளவுக்குத்தான் உரிமை கொண்டாட முடியும்.

மனதைப் பறி கொடுக்காதே!

நான் முன்சொன்ன அந்த வாலிபனுக்கு உரிய பெண் – மண் குடிசையிலும் இருக்கலாம், ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க முடியாத அளவுக்குத் தகப்பன் வறியவனாக இருக்கலாம், மேளக் கச்சேரி – பாட்டுக் கச்சேரி வைக்க முடியாத, அறுசுவை விருந்து அளிக்க முடியாத நிலையிலிருக்கலாம், என்றாலும் – தனக்குப் பிடித்த பெண் பெரிய கல்யாண வீடுகளிலே இருப்பதைப்போல, நாட்டில் பல கட்சிகள் கிளர்ச்சிகள் நடத்தலாம், அதைக் கண்டு நாம் மனதைப் பறிகொடுத்துவிடக் கூடாது.

இரண்டு கழகங்களும் ஒன்றானால் என்ன – என்று கேட்கப்படுகிறது, நான் முதலில் சொல்லியபடி இரண்டுக்கும் நடுவில், ஆசைக்கு ஆட்படாமல், அச்சத்துக்கு உடன்படாமல் தி.மு.கழகம் தனக்கொத்த கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு நான் எட்டாண்டுக் காலமாக இயங்கி வருகிறது. இப்பொழுது இந்தச் சபலம் தட்டுகிறது என்றால், அந்தச் சபலத்தை விட்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கும் அந்தச் சபலம் சில சில வேளைகளிலே ஏற்படுவதுண்டு இருந்தாலும், ‘கூடாது‘ என்று நான் சொல்லுகிறேன் என்றால் பிடிவாதத்தால் அல்ல – கொள்கையிலுள்ள பிடித்தத்தால்தான்.

வண்டி மாற முடியுமா?

திருச்சிக்குப் போக வேண்டுமென்று முன்வட்டியே திட்டமிட்டுக் கொண்டு செல்பவர்கள் இரயில் நிலையம் சென்றதும் திருச்சி இரயிலை விட்டுவிட்டு, கூட்டமில்லாத வண்டிதான் சௌகர்யமாயிருக்கும் என்று கருதி சேலம் போகும் வண்டியிலா ஏறிப் போவார்கள்?

அதைப் போல தி.மு.கழகம் தனக்கென ஒரு திட்டவட்டமான கொள்கையை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது.

அதிக ஆளில்லாத எந்த வண்டியாக இருந்தாலும் அதில் ஏறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஏறுபவர்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். எந்த வண்டியில் ஏறினால் என்ன, வயிற்றுப்பிழப்பு நடந்தால் சதிான் என்று எண்ணும் பிச்சைக்காரர்கள் ஒருவகை, ஏமாந்தவர்கள் ஜேபியிலே கத்திரிக்கோல் போடுபவர்கள் ஒருவகை, மூன்றாவது வகையினர் பொழுது போக்க ஆள் கிடைக்கவில்லையானால் கிடைக்கிற வண்டியிலே ஏறுவார்கள்.

சபலத்துக்கு ஆட்படாது!

தி.மு.கழகம் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காக, அதை அடைவதற்கான முறைகளை வகுத்துக்கொண்டு, தகுந்த பலனைப் பக்குவமாகப் பெறுவதற்குப் பாடுபட்டு வருகிறது. அந்த இலட்சியத்தை அடையும் வரை அது சபலத்துக்கு ஆட்பட்டு ஓடாது. அச்சப்படுபவர்களுக்குத் தி.க.வுடன் ஒன்று சேராது என்று சொல்லவும் முடியும்.

தஞ்சையிலே பெரியார் பேசியதாகச் சில பத்திரிகைகளில் வந்த செய்தி பற்றிக் கேட்கப்பட்டதற்கு, நான் இராயப்பேட்டையிலே நடந்த ஒரு கூட்டத்திலே பதில் சொன்னேன். அந்தச் செய்தி மதுரையிலிருந்து வரும் ‘தமிழ்நாடு‘ பத்திரிக்கையிலே குறிப்பாக வந்திருந்தது. ‘திராவிடர் கழகத்துக்கும் – தி.மு.கழகத்துக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை, என் காலத்துக்குப் பிறகு திராவிடர் கழகம் எங்கே இருக்கப் போகிறது? எனவே, இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தால் நல்லதுதான், சேர வேண்டுமென்று விரும்புபவர்கள் முயற்சி செய்தால் வரவேற்கிறேன்‘ என்று பெரியார் கூறியதாக அந்தச் செய்தியில் கண்டிருந்தது. அதைப் பார்த்ததும், எனக்குக் கூட கொஞ்சம் – திருமணப் பந்தலைப் பார்த்த வாலிபனைப் போல் சபலம் தட்டிற்று. நான் கூடக் கொஞ்சம் ஆசைப்பட்டிருந்தேன். நான் அப்பொழுது சொன்னேன் – ‘பெரியார் இப்படிப் பேசியிருப்பது உண்மையானால், பெரியாரின் ‘விடுதலை‘ பத்திரிக்கையிலே – அறிக்கையாக வரட்டும்‘ என்று. அப்படியின்றி, அது வெறும் நிருபரின் சரடு என்றால், இன்னொரு நிருபர்தான் அதற்கப் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.

கண்மூடி பின்பற்ற வேண்டுமா?

அதே பத்திரிக்கையிலே, பின்னும் இரண்டு தினங்களுக்கெல்லாம் – திருச்சியிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது, நான் எங்கே அப்படிச் சொன்னேன்? நான் செய்வது பிடித்தால், வா, இல்லையேல் போ என்றுதானே சொன்னேன்‘ என்று பெரியார் பேசியதாக அந்தச் செய்தி கூறியது.

‘இத்தோடு விட்டாரா? சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், தம் தோழர்களுக்குக் கூறியிருக்கிறார் – கண்மூடி என்னைப் பின்பற்ற வேண்டுமென்று, தான் சிறைக்குப் போனால், அண்ணாதுரை, ‘தந்தை பெரியாரை காமராசர் சிறையில் அடைத்துவிட்டார்‘ என்று தூற்றினால் அவன் பின்னாலேயே போய்விடக்கூடாது, அவர்கள் அப்படித் தூற்றுவதற்க விடக்கூடாது, காமராசருக்கு விரோதமாக எதுவும் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

எனவே, நாம் யாருக்கும் எந்தவிதச் சபலமும் வேண்டாம். பெரியாரின் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் எப்படியிருந்தோமோ, அப்படியே இனியும் இருப்போம்.

பெரியாரின் விடுதலையை நாம் எப்பொழுது எதிர்ப்பார்க்கலாம்? என்று இங்கு என்னிடம் ஒருவர் சீட்டு எழுதிக்கேட்டிருக்கிறார். நானும் அதைத்தான் கேட்கிறேன்?

யாரைக் கேட்பது? நாங்கள் இருவரும் சேர்ந்து காமராசரைத் தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். ஒரு சமயம் அடுத்த தேர்தல் வரையில் விடுதலை செய்யப்படாமலிருக்கலாம்! காமராசருக்குத் தேர்தல் காலம்வரைதான் பெரியார் தேவைப்படுவார்!

உங்கள் பெரியார்தான்! என்றவர் காமராசர்!

சட்டசபையிலே திரு.வி.கே. இராமசாமி முதலியார், ‘முரளிஸ்கேப்‘ மறியல் பற்றி ஒரு கேள்வி கொடுத்திருந்தால். கேள்வி கொடுத்திருப்பதாக அவர் என்னிடம் சொன்னபோது, நான் அவரிடம், ‘ஏன் இதை நீங்கள் கிளப்புகிறீர்கள்? இது பற்றிப் பேசுகையில், நீங்கள் – ஏதேனும் பெரியாரைத் தாக்கும் வகையிலே பேசினால், பிறகு நானே உங்களை எதிர்க்க நேரிடும் என்றேன், உடனே அவர், ‘ஐயையோ, எனக்குத் தெரியாதே அப்பொழுதே இப்படித் தெரிந்திருந்தால் கேள்வியே கொடுத்திருக்க மாட்டேன்‘ என்றார், அதற்க நான், ‘பரவாயில்லை, நீங்கள் பெரியாரைத் தாறுமாறாகத் தாக்கக் கூடாது, தாக்காத வகையிலே பேசுங்கள்‘ என்றேன். அவரும் பேசினார். பெரியாரைக் குறிப்பிட்டு அவர் பேசும்போது, வழக்கமாக எனக்கு எதிர்ப்புறத்திலே அமர்ந்திருக்கிற காமராசர் என்னைப் பார்த்து தன் முகத்திலே கொஞ்சம் புன்னகையை வரவழைத்துக்கொண்டு- கொஞ்சம் குறும்புத்தனமாக – உங்கள் பெரியாரைப் பற்றிப் பேசுகிறார் பாருங்கள் என்றார், அதற்க நான் அது என்ன, ‘உங்கள் பெரியார்‘ என்கிறீர்கள். தேர்தல் முடிந்து 2 மாதந்தான் ஆகிறது, அதற்குள் அவர், எங்கள் பெரியார் ஆகிவிட்டாரா? என்று கேட்டுவிட்டு, ‘எங்கள் பெரியார் என்றும் சொல்ல வேண்டாம், உங்கள் பெரியார் என்றும் சொல்ல வேண்டாம், ‘நம் பெரியார்‘ என்று வேண்டுமானால் சொல்லுங்கள்‘ என்றேன் ‘இல்லை, இல்லை, உங்கள் பெரியார்தான், என்று அவர் மீண்டும் சொன்னார்.

வாசனை தரும் வரைதான் கருவேப்பிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார். அதைக்கூட நான் சொல்லக்கூடாது, காமராசருக்கு எதிராக நான் பேசுவதாகப் பெரியார் சொல்லக்கூடும்!

காமராசரைக் கவிழ்க்கமாட்டோம்!

காமராசருக்கு எந்தவிதக் கெடுதலும் விளைவிக்காமல் நாங்கள் நடந்து கொள்வோம் எனப் பெரியாருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். காமராசரை நாங்கள் ஒருபோதும் கவிழ்த்துவிட மாட்டோம்.

ஆனால், காமராசர் சர்க்காருக்கு எதிராகக் கிளர்ச்சி நடக்கும் என்ற நிலைமை ஏற்பட்டால்தான் பெரியாரை விடுதலை செய்ய முடியும், ‘நாடு கிளர்ச்சியில் – கொந்தளிப்பில் இறங்கிவிட்டது, மந்திரிகள் நாட்டி் உலவ முடியவில்லை‘ என்று நாம் காட்டினால்தான் பெரியாரை விடுவிப்பார்கள், ‘கருப்புக்கொடி காட்டுவார்களே‘ என்ற அச்சமேற்பட்டால்தான் விடுதலை செய்வார்கள்.

திருச்சிச் சிறையிலே பெரியாரும் நானும்!

நானும் பெரியாரும் – நான் ‘ஆரிய மாயை‘ என்ற நூல் – எழுதியதற்காகவும், பெரியார் ‘பொன்மொழி‘ என்ற நூலை எழுதியதற்காகவும் – தண்டிக்கப்பட்டு இருவரும் ஒன்றாகத் திருச்சிச் சிறையிலே வைக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் – !எனக்கும் பெரியாருக்குமுள்ள 15 ஆண்டுத் தொடர்பில் நான் இல்லாமல் பெரியார் மட்டும் தனித்துச் சிறைக்குச் சென்றிருப்பது இதுதான் முதல் தடவை) – திருச்சி சிறையிலே நானும் அவரும் பக்கத்துப் பக்கத்து அறைகளிலேதான் வைக்கப்பட்டோம், அப்படியிருந்தும், 10 தினங்களுக்கு மேல் நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசாமலேயே இருந்தோம். அப்பொழுது வெளியிலே உள்ளவர்கள், ‘இவர்கள் இருவரும் வருவார்கள்‘ என்றுதான் நினைத்தார்கள், அப்படித்தான் ஆசைப்பட்டார்கள்.

எப்படியாவது பேச வேண்டும்!

அப்பொழுது சிறையிலிருந்த கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவன் எங்கள் இருவருக்கும் தேவைப்பட்ட வேலைகளையெல்லாம் அன்புடன் செய்தான், அடிக்கடி அவன் என்னிடம் வந்து, ‘என்ன அண்ணா, பெரியார் உங்களுடன் பேசினாரா, நீங்கள் அவருடன் பேசினீர்களா?‘ என்று ஆவலுடன் கேட்பான், அதேபோலவே பெரியாரிடமும் அக்கைதி சென்று, ‘அண்ணாவிடம் பேசினீர்களா ஐயா, அண்ணா உங்களுடன் பேசினாரா?‘ என்றெல்லாம் விசாரிப்பான். அவனுக்கிருந்த ஒரே ஒரு ஆசையெல்லாம், நாங்கள் இருவரும் அப்படியாவது பேசிக்கொள்ளச் செய்துவிட வேண்டுமென்பது நான்.

இன்னும் சிலர், ஆண்டவனே அவர்கள் இருவரும் பேசாமலிருந்தால் தானே நமக்கு பிழைப்பு! அவர்கள் பேசாமலிருக்கும்படிச் செய்துவிடு என்று பகவானை வேண்டிக் கொண்டவர்களும் உண்டு!

அதே நிலைதான் இன்றும்! எங்களுக்காகப் பயப்பட்டால் – பயப்படுபவர்களுக்குச் சொல்லுவேன் – எங்களால், எந்த வகையிலும் குறைந்துவிடாது உங்கள் இராஜ்யம். உங்களுடையதாகத் தானிருக்கும், அண்ணாதுரை, படையெடுத்துக் கொண்டு வந்து அழித்துவிட மாட்டேன், நான் இருந்து பரிபலித்துப் பார்த்து விட்டுவிட்டு வந்ததுதான் அந்த – உங்கள் இராஜ்யம்!

நாங்கள் வெளியே வர – கிளர்ச்சிதான் காரணம்!

நாங்கள் அன்று திருச்சி சிறையிலே இருந்தபோது, கிளர்ச்சி நடந்து, ஊரே கொந்தளித்ததால்தான் எங்களை உள்ளேயிருந்து வெளியே அனுப்பினார்கள். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல – பெரியரோடு இருந்ததால்தான் எனக்கும் விடுதலை கிடைத்தது என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், எனக்கு மதிப்புத் தர வேண்டாம், உண்மையில், கிளர்ச்சி காரணமாகத்தான் எங்களை விட்டார்கள்.

அதே அளவு கிளர்ச்சி நடத்தும் சக்தி நம்மிடம் இருக்கிறது. ‘பொங்கி எழும் சக்தியைத் தடுக்காதீர்கள், அனுமதி தாருங்கள் அண்ணா‘ என்று கூட இங்குப் பாட்டுப் பாடினார்கள். நான் என்ன செய்ய முடியும்? பெரியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாரே. எனவே, நாம் கிளர்ச்சி நடத்துவதற்கில்லை. கிளர்ச்சி நடப்பதைக்கூடச் சந்தேகப்படக்கூடியவர்களாயிற்றே தி.க. தோழர்கள்!
கைபட்டால் குற்றம்! கால்பட்டால் குற்றம்!

பிடிக்காத மாமியார் கைபட்டால் குற்றம் – கால்பட்டால் குற்றம் – என்பது போல, நம் செய்கையிலே அவர்கள் சந்தேகப்படுபவர்களாயிற்றே!

ஒரு வீட்டுக் குழந்தை தெருவிலே வந்து வண்டிகள் போகும் பாதையிலே நின்று கொண்டிருப்பதை ஒருவர் பார்த்து, அதைத் தூக்கிக் கொண்டுபோய் வீட்டுக்குள்ளிருந்த குழந்தையின் தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்தால், எதற்கும் சந்தேகப்படக்கூடிய கணவன், ‘நீ யார்’ என்று அவனைப் பார்த்துக் கேட்டால் என்ன அர்த்தம்?

‘குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும் சாக்கில் வீட்டுக்குள்ளே நுழைந்து என் மனைவியிடம் பேசலாம் எனப் பார்க்கிறாயா?’ என்று கேட்டால் என்ன பொருள்? அடுத்த நாள் முதல், குழந்தை தெருவிலே நிற்பதைக் கண்டால், அவன், தெருவிலிருந்தபடியே, ‘அம்மா குழந்தை தெருவிலே நிற்கிறது, தூக்கிப் போங்கள்’ என்றுதானே கூறிவிட்டுப் போய் விடுவான்?

காமராசரைக் கவிழ்க்க மாட்டோம்!

அதேபோல, காமராசரைக் கவிழ்த்துவிடுவோம் என்ற பெரியார் நம்மைச் சந்தேகிக்கிறார். நாமும் வெளியிலிருந்து கொண்டேதான் சொல்ல முடியும்.

இந்த நாட்டை ஆளும் சர்க்காருக்கு இன்னொன்றும் சொல்லிக் கொள்வேன் – பார்ப்பனர்களைக் கொல்ல வேண்டும், குத்த வேண்டும் என்று நான் சொன்னதெல்லாம் இப்பொழுது செய்யச் சொல்லவில்லை, அதற்கென இன்னொரு நாள் வைப்பேன் என்று பெரியார், கடைசி நாள் – தீர்ப்பு வழங்குவதற்கு முன்னாள் கூறினார். அப்படி அவர் கூறிவிட்ட பிறகு – தெளிவாகத் திட்டவட்டமாக அவர் சொல்லிவிட்ட பிறகு அவரை விடுவித்திருக்க வேண்டும்.

அப்போது கிண்டல் செய்தார்கள்!

‘பத்து பார்ப்பனரைக் கொல்லுவதாலோ, அக்கிரகாரத்துக்கு தீ வைப்பதாலோ சாதி ஒழியாது, அதையெல்லாம் நான் ்இப்பொழுது செய்யச் சொல்லவில்லை’ என்று பெரியார் பேசினார், அதைத்தான் இந்த ஏழை அண்ணாதுரை சொன்னபோது, ‘ஈயம், பித்தளை’ என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள்!

பெரியார், ‘பலாத்காரம் செய்வது என் நோக்கமல்ல’ என்று வெளிப்படையாக – பட்டவர்த்தனமாக – திட்டவட்டமாகச் சொல்லிய பிறகும், அவரை உள்ளே வைத்திருப்பது ஒரு சர்க்காருக்கு யோக்கியமில்லை, பத்து பேரைக் கொல்லத்தான் சொன்னேன் என்று அவர் சொன்னால் உள்ளே வைத்திருக்கலாம்.

மனிதத் தன்மையுடன் நடந்துகொள்ளும் சர்க்காராயிருந்தால், பெரியாரின் எழும்பூர்ப் பேச்சை ஆதாரமாக வைத்துக் கொண்டு, பெரியாரையும் அவருடைய கழகத்தைச் சேர்ந்த மற்ற தோழர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

கிளர்ச்சி செய்துதான் விடுவிக்க வேண்டுமென்றால் என் கை கட்டுண்டு கிடக்கிறதே!

காமராசர் யோக்கியதையைக் கண்டிக்கிறேன்!

காமராசர் நல்லவர், நாடாள வந்தவர், பெரியாருக்கு வேண்டியவர், தேர்தல் காலத்திலே ஓடோடி அவருக்காகக் பெரியார் உழைத்தார், காமராசர் நல்ல மனமுடையவராயிருந்தால் அவரை இதற்குள் விடுதலை செய்திருக்க வேண்டுமே! பெரியார் அப்படிப் பேசிய பிறகும் அவரைச் சிறையிலேதான் வைத்திருக்க வேண்டுமென்றால், காமராசருடைய யோக்கியதையைக் கண்டிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அதேபோல, பண்டித நேருவும் இதுவரை தனக்கிருந்த நல்ல பெயரை – புகழைப் பெரியாரைத் திட்டியதன் மூலம் இழந்து விட்டார் என்றுதான் சொல்வேன்.

அவர், பெரியாரைப் ‘பைத்தியம்’ என்று சொல்லிவிட்டால், பெரியார் பைத்தியமாகிவிடமாட்டார். பெரியாரைப் பற்றி என்னுடைய நெஞ்சமும் அன்றி, மற்ற எல்லோருடைய நெஞ்சமும் அன்றி, பலநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள பண்டித நேரு உணர முடியாது.

பெரியார் ‘பைத்தியமா?’

அவர் உள்ளபடியே, பெரியாரை உணர்ந்து இதைச் சொல்லவில்லை. கூடயிருந்தவர்கள் கலக மூட்டியிருக்கிறார்கள். யாராலே, யார் மூட்டிவிட்ட கலகத்தினாலே அவர் அப்படிப் பேசினார் என்ற நினைக்கிறீர்கள்? அவர்கள் யார் என்பதை நான் அறிவேன், யூகிக்கக் கூடியவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

பெரியார் இப்படிப் பேசுகிறார் – அப்படிப் பேசுகிறார் என்றெல்லாம் நேருவிடம் எடுத்துச் சொல்லியிருப்பார்கள். என்ன அப்படிப் பேசுகிறார் என்று நேரு கேட்டிருப்பார், பார்ப்பனரைக் குத்தச் செல்லுகிறார், கொலை செய்யச் சொல்லுகிறார், ஊரே கொந்தளிக்கிறது என்று சொல்லியிருப்பார்கள், உடனே அவர், ‘பெரியார் என்ன, பைத்தியம் போலிருக்கிறது, ஏன் இப்படியெல்லாம் அவர் பேச வேண்டும்’, என்று நேரு கூறியிருப்பார், உடனே இவர்கள், ‘இதை அப்படியே பொதுக் கூட்டத்தில் சொல்லிவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவரும், கூட்டத்தில் பேசுகையில், ‘பெரியாருக்குப் பைத்தியம்’ என்று கூறியிருப்பார், அவ்வளவுதான்!

யாரோ சொல்லியதைக் கேட்டுக் கொண்டு இப்படிச் சொல்லிவிடுவது பெரிய மனிதருக்கு அழகல்ல! நேரு தன் திறமையைக் காட்ட இந்த இடத்தில் தவறிவிட்டால் – மதிப்பை இழந்துவிட்டார் என்று தான் சொல்லுவேன்.

நாட்டின் தலைவர் உயர்ந்த தரத்தில் உள்ளவரா? அல்லது மட்டரகத்தைச் சேர்ந்தவரா என்பதைத் தெரிந்துகொள்ள, வரும்பொழுது தான் ஆத்திரப்படாமல் நடந்துகொள்ள வேண்டும். நாட்டின் பெரிய மனிதருக்கு அழகல்ல. ஆகையால், ஒருவருடைய பேச்சினாலேதான் உயர்ந்த மதிப்புக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுகிறது.

பெரியார் என்ன சொன்னார்? ‘காலிப்பயல்’ என்றார்!

நாட்டிலுள்ள எல்லா மக்களும் கேட்கச் சகிக்காமல் ‘பெரிய மனிதல் இப்படிப் பேசலாமா?‘ என்று கேட்கக்கூடிய நிலையில் நேரு பேசியிருக்கிறார், தாறுமாறாகத் திட்டினார் நேரு என்பதை, சின்னஞ்சிறு பையன் கூட தெரிந்து கொள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

பெரியார் என்ன சொன்னார்? ‘என்னுடைய நாட்டில் வந்து என்னைத் திட்ட இந்தக் காலிப்பயல் நேருவுக்கு என்ன உரிமையிருக்கிறது,’ – என்று கேட்டுவிட்டார். நேரு புகழா வா்ங்கிக் கூட்டிக் கொண்டு போனார் – திட்டியதால்.

நேரு, கடுஞ்சொற்களால் நம்மைத் தாக்கியதற்கு நாம் கண்டனம் தெரிவித்தாக வேண்டும். அவருடைய தாறுமாறான சொற்களை அவரே வாபஸ் வாங்க வேண்டுமென்று நாம் கிளர்ச்சி நடத்தினால் அது காமராசரைப் பாதிக்கும்.

நேரு வருகிற 5ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் வரும்போது பல்லாயிரக் கணக்கானவர்கள் கருப்புக்கொடி காட்டலாம். அதற்குப் படை என்னால் அனுப்பி வைக்க முடியும். பல்லாயிரம் பேர் சிறை சென்றோ, தடியடி வாங்கிக்கொண்டோம் கருப்புக் கொடி காட்ட முடியும். ஆனால் அப்பொழுதும் காமராசரின் போலீஸ் வந்துதான் நம்மைத் தாக்கும் அதே நேரத்திலும கூட காமராசரைக் கண்டிக்கக் கூடாது என்று சொன்னால் – என்னால் கண்டிக்காமலிருக்க முடியாது.