அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பகையும் இல்லை – காதலும் இல்லை

காமராசர் இப்போது ஒரு எழுதப்படாத காகிதம், காலக்கரம் அந்தக் காகிதத்தில் எழுதுவதைப் பொறுத்திருக்கிறது. நாம் அவரை ஆதரிப்பதானால் அவர் நமக்கு நல்ல நண்பராகக்கூடும்.

கம்யூனிஸ்டுகள், பொறுத்தமற்ற கதை பேசிப் பொழுது ஓட்டுகிறார்கள், தி.மு.கழகம் எப்படிப்பட்ட ஜனநாயக அமைப்பாக இருக்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள். முற்போக்குக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டிய உறவை முறித்துக்கொள்கிறார்கள் – வீண் பழி சுமத்தியும், இழித்துப் பேசியும் என்று, 22.8.1954இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்டத் தி.மு.கழக இரண்டாவது அரசியல் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில், தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் அவர்கள் தொடர்ந்து பேசியதாவது.

செங்கற்பட்டு மாவட்டத் தி.மு.கழக இரண்டாவது மாநாடு நேற்றும் இன்றும் நடைபெறுகின்றது. இந்த இரண்டு நாட்களிலும் நமது தோழர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் பேசியிருக்கிறார்கள். நேற்றைதியம் நீங்கள் கேட்ட சொற்பொழிவுகள் எல்லாம் சாதாரண மக்களின் பொது அறிவு வளர்ச்சிக் வெகுவாக பயன்படும் என்பது என் துணிவு. அரிய பெரும் விஷயங்களையெல்லாம் இந்த மாநாட்டில் நீங்கள் கேட்டீர்கள். சீரும் சிறப்புமாக நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட மாநாட்டு வெற்றிக்காகப் பாடுபட்ட எல்லாத் தோழர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இது திருவிழாக் கூட்டமல்ல!

ஒவ்வொரு மாவட்ட மாநாடும் இதுபோன்றே விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமாக மக்கள் கூடுகிறார்கள், தாய்மார்கள் கூட்டம் வளருகிறது, மகிழ்ச்சி. ஆனால், திருவிழாக்களல்கூடும் கூட்டம் இதைவிட அதிகம், தாய்மார்கள் கூட்டம் மிக அதிகம்.

திருவிழாக்களிலே அலங்காரமும் அதிகம், ஆனால் திருவிழா செல்லும் கூட்டம். திருவிழா பார்த்துவிட்டு ஊர் திரும்பியதும் திருவிழாவின்போது தாங்கள் பெற்ற பக்தி உணர்ச்சி பற்றிப் பிறருக்குப் கூறி, பக்தியை வளர்த்திட முடியாது. ‘தில்லை சென்றேன், ஐயனின் திருநடனம் கண்டேன், சைவத்தின் மாண்பினை உணர்ந்தேன், என்றோ ‘திருப்பதி சென்றேன் திருமலையப்பனைத் தரிசித்தேன், வைணவத்தின் மேன்மையினைத் தெரிந்து கொண்டேன். என்றோ பக்தார்கள் செய்திகளையே கூறுவார்கள்.

இன்னும் சிலர், வெளியே சொல்ல முடியாத அனுபவங்களைப் பெற்றிருப்பவர், பொருள் இழந்தவன், பொருள் பெற்றவன், புது உறவு பெற்றவன் என்று இப்படி இருக்கும். அதுபோல மாநாடுகளில் கலந்து கொண்டு இங்கே கூடிய கூட்டம், பந்தல் அலங்காரம், கடைக் காட்சிகள், ஒளி விளக்குகள், நீண்ட பிரசங்கங்கள் இவைபற்றி மட்டும் வீடு சென்று பேசினால் பயன் ஏற்படாது.

தெளிவு பெறும் இடம்தான் மாநாடு!

இங்கு நீங்கள் கேட்ட சொற்பொழிவுகள் மூலம் பெற்ற தெளிவை, உற்சாகத்தை நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

‘காஞ்சிபுரம் மாநாடு சென்றேன், திவிதாங்கூர் தமிழர் பிரச்சனை குறித்து நெடுஞ்செழியன் பேசினார். கேட்டேன், எனக்கு அந்தப் பிரசங்கத்திலே இருந்த சில சந்தேகங்கள் போய்விட்டன. இன்னின்ன பொருள் ப்றி்ப் பேசினார்கள் இப்படிப்பட்ட விளக்கம் கிடைத்தது, இத்தகைய ஆதாரம் கிடைத்தது‘ என்று எடுத்துரைக்க வேண்டும்.

மாநாடுகள் நடைபெறுவது இதற்காகத்தான், திருவிழாக் கூட்டமல்ல, தெளிவு பெறும் இடம், மாநாடு, கூட்டு உணர்ச்சியும் கொள்கை எழுச்சியும் பெற வேண்டிய இடம்! இந்த முறையில் மாநாட்டுக்கு வந்திருக்கும் தோழர்கள் இதனைப் பயனுள்ள தாக்கிக் கொள்ள வேண்டும்.

டாக்டர் வீட்டுக்குப் போவது போல....

ஜோதிடர் வீட்டுக்குப் போய்விட்டு வருபவனுக்கும் டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டு வருபவனுக்கும் வித்தியாசம் உண்டல்லா! ஜோதிடர் வீட்டுக்குப் போய்த் திரும்புபவன் சிறிது மகிழ்ச்சிகூடப் பெறக்கூடும். அவர் கூறியிருப்பார் – ஆடி போய் ஆவணி வந்துவிட்டது இனி உனக்கு கஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும் என்று. அதனாலே அவனுக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஆனால், டாக்டர் வீடு சென்றால், அவர் கூறியிருப்பார் – உனக்கு இரத்தச் சோகையும், நரம்புத் தளர்ச்சியும் இருப்பதாகத் தெரிகிறது, இன்னவகையான மருந்து சாப்பிட வேண்டும் என்று! அதைக் கேட்டு நமக்கு இரத்தச் சோகை இருக்கிறதாமே, என்று எண்ணிச் சோர்வும், கவலையும் கூட அவன் கொள்ளக்கூடும். ஆனால், ஜோதிடம் உட்பட யாரும், டாக்டரை நாடத்தான் வேண்டும், நலிவு இருக்கும்போது நலிவு எத்தகையது, அதைப் போக்கிக்கொள்ள உட்கொள்ள வேண்டிய மருந்துகள் யாவை – என்று டாக்டர் கூறக்கேட்டுச் சோர்வு அடையலாகாது, நலிவு போக்கிக் கொள்ள வழி கிடைத்தது என்று மகிழ வேண்டும்.

திருவிழாக்களுக்குப் போவது டாக்டர் வீட்டுக்குப் போய் வருவது போன்றது!

மாநாடுகளுக்குப் போவது டாக்டர் வீட்டுக்குப் போய் வருவது போன்றது!

தி.மு.க. நல்ல மருத்துவ மனை!

இங்குதான், சமுதாயத்திலே உள்ள சீர்கேடுகள், மதத்தால் விளைந்த நலிவுகள், அரசியலில் நெளியும் அவதிகள் இவைபற்றி எடுத்துரைக்கப்படும். சோர்வு அடைந்துவிடக் கூடாது. மாறாக, தெளிவு பெற்றோம் என்று மகிழ வேண்டும், பிறர்க்கும் தெளிவு தர வேண்டும்!

தி.மு.கழகம் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல மருத்தவமனை போன்றது!

சமூகத்திலே, மூண்டு கிடக்கும் எல்லா வகையான நலிவுகளுக்கும் மருந்தளித்துக் குணப்படுத்தும் நோக்குடன் பணியாற்றும் அமைப்பு, தி.மு.கழகம் எனவேதான், இன்று, நமது கழகத்திற்கு நல்லதோர் நிலை ஏற்பட்டிருக்கிறது.

துப்பாக்கியைக் காட்டியா பயமுறுத்தினார்?

நாம் நேற்றைய தினம் சமூகச் சீர்த்திருத்த மாநாட்டில் பேசிய பல்வேறு பிரச்சனைகளையும் பேச, இந்த நாட்டில் நம்மைத் தவிர மற்றவருக்கு அக்கரை இல்லையே! இந்தச் சமுதாயச் சீர்கேடுகளைப் போக்க வேண்டுமென்பதில் – நாம்தானே அக்கரை காட்டுபவர்களாயிருக்கிறோம்! அடுத்து இன்றைய அரசியல் மாநாட்டில், நமது தோழர்கள் நாட்டில் நிலவுகிற பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேசினார்கள். சந்தேகங்களைப் போக்கினார்கள்.

சிலர், காமராசருக்கும் நமக்கும் ஏதோ மறைமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூடப் பேசுகிறார்கள்.

கம்யூனிஸ்டு நண்பர்கள், ஒருநாள் என்னைக் காமராசர் அழைத்து, கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரை ஆதரிக்காவிட்டால் வேலூர் சிறைக்கு அனுப்பிவிடுவதாகப் பயமுறுத்தியதினால், தி.மு.க. ஆதரிக்கும்,‘ என்று நான் அவரிடம் கூறித் தப்பித்துக் கொண்டு வந்து விட்டதாக ஒரு செய்தியை கற்பித்துக் கொண்டு நாட்டிலே பேசி வருகிறார்கள்!

தி.மு.க. ஆட்டு மந்தை அல்ல!

கம்யூனிஸ்டு நண்பர்கள் மிக நல்லவர்கள், பிறருக்கு என்ன பிடிக்குமோ அதை அழகாகச் சொல்லுவார்கள், மக்களிடம் இப்படிச் சொல்லியாவது மக்களைத் தன் பக்கம் கூப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

காமராசருக்கும் எனக்கும் இப்படியொரு தொடர்பைக் கற்பிக்கிற நண்பர்கள், ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் கடந்த ஆறாண்டுகளாகச் செயலாளராயிருந்து நடத்திச் செல்லும் தி.மு.கழகம், ஒரு ஆட்டு மந்தை அல்ல!

நான் கையைக் காட்டிய பக்கம் ஓடி வரும் கூட்டமல்ல தி.மு.கழகம்!

அப்படி ஒரு காலத்தில் இருந்தோம், ஒரு இடத்தில்! இப்போது அப்படி அல்ல! நான் இந்தப் பக்கம் போவோம் என்று கூறினால், தம்பிமார்கள், ‘ஏன் போக வேண்டும், எதற்காகப் போக வேண்டும்‘ என்று கேட்காமல் புறப்பட மாட்டார்கள்!

அப்படிப்பட்ட ஒரு நல்ல ஜனநாயக உணர்வு பெற்றது தி.மு.கழகம் என்பதைக் கம்யூனிஸ்டு நண்பர்கள் அறிந்து கொள்ளாததால் வந்த வினைதான், காமராசருக்கும் நமக்கும் தொடர்பு என்ற கதையைக் கற்பிப்பது!

கழகம் தந்த பாடத்தை அறியவில்லை!

கழகத் தோழர்களிலே கூட யாரேனும் இந்த ஜனநாயக உணர்வை அறிந்து கொள்ளாது, நான் சொல்கிறேன் என்பதாலேயே, அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டுமென நினைப்பார்களானல், அது அவர்கள் எல்லாம் இதுவரை கழகம் தந்த பாடங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டும்!

காமராசர் என்னிடம் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர், “என்னை ஆதரிக்கிறீர்களா அல்லது வேலூர் சிறைக்குப் போகிறீர்களா?“ என்று கேட்டதாகக் கம்யூனிஸ்டு நண்பர்கள் கூறுகிறார்களாம்!

எனக்குப் பால் தருகிறாயா, இல்லையானால், பக்கத்துக் குளத்திலே இருக்கும் தவளையை அழைத்துவந்து உன்னைக் கடிக்கச் செய்யட்டுமா, என்றா பாம்பு கேட்கும்!

பகையும் இல்லை – காதலும் இல்லை

காமராசரிடம் மயங்கியோ, அவரால் விரட்டப்பட்டோ நாம் அவர் பின் செல்வதாக யாராவது எண்ணுவார்களானால் அது தவறு.

நாம் காமராசரை அவர் ‘கல்வித் திட்டம் ஒழிவதற்குக் காரணமாக இருந்தார் என்பதற்காகப் பாராட்டினோம், அவ்வளவுதான், அதற்காகவே, அவருடைய காங்கிரஸ் சர்க்காரை ஆதாக்கிறோமா – இல்லையா என்று கேட்கிறார்கள்.

எதிர்விட்டுப் பெண்ணின் மீது உனக்கு பகையா, காதலா என்றா கேட்பது?

இப்போதைக்குப் பகையும் இல்லை, காதலும் இல்லை,

(நம்நாடு - 25.8.1954)