அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஊரைத் திருத்துவதில் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும்

கடந்த 29.10.61 அன்று சென்னை ஏழுகிணறு வட்டத்தில் மாநகராட்சியின் திருமணக்கூட்டத்தைத் திறந்து வைத்து அண்ணா அவர்கள் ஆற்றிய ஊரையின் சுருக்கம் வருமாறு:-

“நமது மேயர் முனுசாமி அவர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பாலும் இத்திருமண மண்டபத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள்.

இதைத் திறந்து வைக்கும் விழாவிலே மக்கள் இவ்வளவு திரளாகக் கலந்து கொண்டிருப்பது மாநகராட்சியின் நடவடிக்கைகளை மக்கள் கவனிக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டும் அறிகுறியாகும்.

அந்தக் காலம் மாறிவிட்டது
மக்கள் மாநகராட்சி நடவடிக்கைகளைக் கவனிக்கா திருந்த காலம் ஒன்றிருந்தது. அந்தக் காலம் மாறிவிட்டது.

இந்த நிகழ்ச்சியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பது, மக்கள் மாநகராட்சியின் மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுவதாகும். இந்த ஆதரவு தொடர்ந்து காட்டப்பட்டால் அக்கறை தொடர்ந்து காட்டப்பட்டால் மாநகராட்சியினர் தொடர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்வார்கள்.

நான் படித்த காலத்தில், இந்தப் பகுதியிலே வாழ்ந்தவனாதலால், இங்குள்ள ஒவ்வோர் இடமும் எனக்கு நன்றாகத் தெரியும். இங்குள்ள ஒவ்வொரு சந்தும் பொந்தும் நல்ல வகையிலே தெரியும். இப்படிப்பட்ட இடத்தில் இது அமைவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

முன்னர் நான் இந்தப் பகுதியில் நடமாடும்போது, எல்லாம் இடிந்த கட்டடங்களாகவே இருக்கும். இடிந்த கட்டடங்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்ட புதுக்கட்டடங்கள் தோன்றுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

இத்திருமண மண்டபத்திற்கு அடிப்படைக் கல் நாட்டியவர் நம் முதலமைச்சர் காமராசர். கட்டடத்தைத் திறந்து வைப்பவன் நான். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

தொண்டு செய்ய இது ஒரு சான்று
காமராசர் ஒரு கட்சி, திறந்து வைக்கின்ற நான் வேறு கட்சி. இப்படி, பல வேறுபாடுகளுள்ளவர்களை ஒன்றுகூட்டி வைப்பது போல், கூட்டுறவுத் துறைச் செயலாளர் டாக்டர் நடேசனார் தலைமையேற்றிருக்கிறார்.

அரசியல் வேறுபாடுகளை மாநகராட்சியில் கவனிக்காமல் இருந்தால் நல்ல பல தொண்டுகளை ஆற்றலாம் என்பதற்கு இது ஓர் சான்று.

இத்திருமண மண்டபத்தைப் பயன்படுத்திக் கொள்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், பின்னர் நிர்ணயிக்கப்படும் என்றும் மேயர் தமது வரவேற்புரையில் கூறினார்.

எழைகளுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் இத்திருமண மண்டபம் கட்டப்பட்டதாகச் சொன்னார்கள். எனவே, நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் ஏற்ற அளவில் கட்டணத் தொகையை நிர்ணயித்தல் வேண்டும்.

திருமணக் காலங்களிலே, திருமணக்காரர்கள், மண்டபத்திற்காக அலைவதைப் பார்த்திருக்கிறோம். திருமண மண்டபவம் கிடைக்காததால் சிற்சில வேளைகளில் திருமணமே கூட ஒத்திப் போடப்படுகிறது.

முனுசாமியால் முடியாதென்றால்...
சில திருமண மண்டபங்களிலே ஒரே நாளில் இரண்டு திருமணங்கள்கூட நடப்பதைப் பார்க்கிறோம். காலை 7 மணி முதல் 9 மணி வரை ஒரு திருமணம் முடிக்கப்பட்டு விட்டு, உடனே 9 மணி முதல் 12 மணி வரை வேறொரு திருமணம் நடப்பதையும் காண்கிறோம்.

இப்படி திருமண வேலைகளுக்கென ஓர் எழில் மண்டபத்தை அமைப்பதிலே சட்டச்சிக்கல்கள் தோன்றின என்று மேயர் கூறினார். அவற்றைத் தீர்த்து வெற்றி கண்டதாகவும் கூறினார்.

முனுசாமியால் முடியாதென்றால் வேறு யாராலும் முடியாதென்பதை முனுசாமியை அறிந்தவர்கள் அறிவார்கள்.

அவரது முயற்சியால் இப்படியொரு மண்டபம் அமைந்திருப்பது, இந்த வட்டத்திற்கு மட்டுமல்ல, மாநகருக்கே அணிகலன் ஆகும்.

நகரத்திலே நாம் பல பணிகளை ஆற்றிடவேண்டியுள்ளது. குடிதண்ணீர் வழங்குதல், குடியிருப்பு வசதிகள், மக்களைப் பிரித்து அனுப்பி வேறு இடங்களில் குடியேற்றுதல், நல்ல வகையான மார்க்கெட்டுகளை அமைத்தல் ஆகிய எல்லாவகைப் பரிட்சைக்கும் இந்த இடம் ஏற்றது.

இந்த வட்டத்திலேயும், வேறு பல இடங்களிலேயும், பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குடிதண்ணீர் பிரச்சனையாகும்.

அவருடைய பேச்சு முக்கியமானது
காமராசர் சிலையைத் திறக்க வந்திருந்தபோது, இந்தியத் துணைக்கண்டத் தலைமையமைச்சர் நேருவிடம் நமது மேயர் முனுசாமி இதை எடுத்துக் கூறியிருக்கிறார். குடிதண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது அவசியம் என்று தலைமை அமைச்சர் ஒப்புக் கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சியுடையவும், அவரது பேச்சு முக்கியமானது என்று கருதவும் மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று இந்தப் பிரச்சனை அவர்களுக்கும் எட்டியிருக்கிறது என்பது, இரண்டாவது அவர் மேயரின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அப்பிரச்னை தீர்க்கப் பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருப்பது. மூன்றாவது தன் ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்து, ‘கடன் எழுப்பலாம்’ என்று யோசனை கூறியிருப்பது. இந்த மூன்று காரணங்களாலே அவருடைய பேச்சு முக்கியமானதாகிறது.

தலைமை அமைச்சரின் யோசனையை வைத்து நடைமுறைப்படுத்த முடியும் என்றால், அதற்கானவற்றை ஆணையர் செய்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஊரைத் திருத்தவேண்டும்; நல்ல எழில் ஊட்ட வேண்டும் என்பதிலே யாருக்கும் கருத்து வேறுபாடில்லை என்றே கருதுகிறேன். அவ்வாறே மாநகராட்சியிலுள்ள அனைவரும் ஒன்று பட்டு நகரைத் திருத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெருச்சாளி பயம் தீர்ந்தது
இரவு பத்து மணியாகிவிட்டால், ‘காடு வழிகளிலே கள்வர் பயம் உண்டு’ என்று சொல்வார்கள். நான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இரவு ஒரு மணி ஆனாலே பெருச்சாளி பயம் உண்டு. நடந்து வருபவர்கள் மீது விழுந்து கொண்டு பெருச்சாளிகள் ஓடும். நமது முனுசாமி மாநகராட்சி உறுப்பினரான பிறகு இப்பகுதியில் எழிலுள்ள கட்டடங்களும் நல்ல சுற்றுச்சார்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் அவருடைய சிறந் தொண்டால் சென்னை நகரம் பயன்பெற இருக்கிறது. இவ்வகையிலே தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கப்படுவதனால் சென்னை நகரம் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளிலே தலைநகராகிவிடும்.

நமது ஆணையர் (பாலசுப்பிரமணியம்) அவர்களை இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். அவர், நல்ல இளைஞர், சுறுசுறுப்புள்ளவர். அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய குணம் ஒன்று அவர்களிடத்திலே இருக்கிறது. அதாவது, தன் மனத்திலே இருப்பதை முகத்திலே காட்டமாட்டார். அப்படிப்பட்டவர் காலத்திலே அவர் சுறுசுறுப்பின் துணையோடு நகருக்கு வேண்டிய நல்ல பணிகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டுகிறேன்.

நீங்கள் ஏமாந்தவர்களாவீர்கள்

இந்த மண்டபத்தில் நடக்கும் திருமணங்களெல்லாம் மகிழ்ச்சிகரமான திருமணங்களாகும்படி வாழ்த்துகிறேன்.

இவ்விழாவிலே அரசியல் பேசுவேன் என்று எதிர்பார்த்து நீங்கள் யாரேனும் வந்திருந்தால், நீங்கள் ஏமாந்தவர்களாவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இம் மண்டபத்தைக் கட்டிமுடிக்க முயற்சியெடுத்துக் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 8.11.61)