அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


எந்த ஆயுதத்தால் ஒழிக்கப் போகிறீர்கள்?

நாட்டுப் பிரிவினையை எதிர்க்க ஒரு கூட்டு சேருவோம் வாரீர் என்று இன்று டி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற காங்கிரசுக்காரர்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

‘காங்கிரசு ஆட்சியை முறியடிக்கக் கூட்டுச் சேருவோம்‘ என்று நான், தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சிகளை அழைத்த போது, காமராசர் என்ன சொன்னார்? நாலு நொண்டிகள் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது‘ என்றால். இப்போது, ‘பிரிவினைக் கொள்கையை எதிர்க்க – அண்ணாதுரையை ஒழிக்க, கூட்டுச் சேருவோம்‘ என்று கம்யூனிஸ்டுக் கட்சியையும் சுதந்திராக் கட்சியையும் சோஷலிஸ்டுக் கட்சியையும் மற்ற எதிர்க் கட்சிகளையும் பார்த்துச் சொல்கின்றனர்.

இவர்களில் ஒவ்வொருவரும் தனியாக நின்று எங்களை ஒழிக்கத் தைரியமில்லை! அதனால்தான் கூட்டுச் சேர்கிறார்கள்.

‘பக்கத்துத் தெரு பாண்டுரங்கனை எதிர்க்க வேண்டும், உதவிக்கு வா, என்று பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தால் என்ன பொருள்? தனியாகப் பாண்டுரங்கனைச் சந்திக்கப் பயம் என்றுதான் பொருள்! அதைப் போலத்தான், அவர்கள் கூட்டுக்கு ஆள் தேடுகிறார்கள்.

கூட்டாவது – குழம்பாவது!

மற்றக் காலங்களைவிட, மார்கழி மாதத்தில் தினம் பஜனை நடைபெறும், மற்றக் காலங்களை விட மார்கழி மாத பஜனையில் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு போவார்கள். இதற்குக் காரணம் அந்த மாதத்தில் குளிர் அதிகம் என்பதுதானே தவிர, உறவு அதிகம் என்று பொருளல்ல. அதைப் போலத்தான் தேர்தல் நேரத்தில், கூட்டை எதிர்த்தவர்கள், இப்போது நம்மை எதிர்த்துக் கூட்டுச் சேர்க்கப் போவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் சேர்க்கும் கூட்டைப் பற்றி யாராவது ஆராய்கிறார்களா? நாம் கூட்டுச் சேருவதாகக் கூறியபோதுதான், ‘ஒருவர் கூட்டா! இன்னொருவர் கூட்டு என்றால் என்ன, ஏற்பாடு என்றால் என்ன‘ என்று கேட்க, மற்றொருவர், கூட்டாவது – குழம்பாவது என்று கூற, இப்படி ஒவ்வொருவராக ஆராய்கிறார்கள்.

இவர்கள் கூட்டைப் பற்றி யாராவது ஆராய்கிறார்களா? கழகத் தோழர்களை நான் கேட்கவில்லை பொதுக் கூட்டங்களுக்கு வர முடியாமல் வீட்டிலேயே இருக்கம் தாய்மார்களையும், வீடு உண்டு. தொழில் உண்டு என்று இருப்பவர்களையும், அரசியலில் கலவாத ஏனைய பொதுமக்களையும் கேட்கிறேன், எங்களை ஒழிக்கக் கூட்டுச் சேர்க்கும் அவர்களை – நீங்கள் காரணம் கேட்கிறீர்களா? ஆராய்ச்சி நடத்துகிறீர்களா?

புதிய பலம் வந்துவிடுமா?

அவர்கள் கூட்டை நான் எதிர்க்கவில்லை, வரவேற்கிறேன், என்றாவது ஒருநாள், பிரிவினையை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கமும் ஆதரிப்பவர்கள் மற்றொரு பக்கமும் நின்றாக வேண்டும். இதில் ஒளிவு மறைவு என்ன? கூட்டுச் சேருவதால் புதிய பலம் வந்துவிடுமா? இப்போது இருக்கிற பலம் தான் கூட்டுச் சேர்ந்தாலும் இருக்கம். பன்னிரண்டை நாலால் வகுத்தால் 12/4 = 3, மூன்றால் வகுத்தால் 12/3 = 4, இரண்டால் வ்குத்தால் 12/2 = 6, ஆக ஈவுதான் வேறுபடுமே தவிர 12 பன்னிரண்டாகத்தான் இருக்கும். அதைப் போல எல்லாக் கட்சிகளும் சேர்ந்தாலும் பிரிவினையை எதிர்ப்பதற்கு இனி ஒரு புதிய காரணமா கிடைக்கம்? நான் ஒரு புதுக்காரணம் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன், கூட்டுச் சேர்ந்தால் தான் அதைச் சொல்லுவேன் என்கிறார்களா, கம்யூனிஸ்டுத் தோழர்கள்?

“இப்படி மேடை அமைத்து அதில் காங்கிரசுக்காரர் பேசினால், தண்டியாத்திரையில் தொடங்கி, பர்தோலி வரிகொடா இயக்கத்தை விளக்கி, பஞ்சாப் படுகொலையைச் சொல்லி, இப்படியெல்லாம் கஷ்டப்பட்ட நாங்கள் உயிரைக் கொடுத்தாவது பிரிவினையை எதிர்ப்போம்“ என்பார். நான் சொல்வது புதிய காங்கிரசுக்காரைப் பற்றியல்ல, புதியவர்களுக்கு இதையெல்லாம், புரிந்து கொள்ளவே நேரமிருக்காது. பழைய காங்கிரசுக்காரர் பேசினால், இதையெல்லாம் அழகாகப் பேசுவார், உணர்ச்சியோடு பேசுவார், கேட்கவும் உருக்கமாக இருக்கும். அவர் பேச்சுக்குக் கிடைத்த கைத்தட்டலைக் கண்டதும் கம்யூனிஸ்டுப் பேச்சாளருக்குப் பொறுக்காது. நாம் அவரைவிட , அதிகமாக கைத்தட்டலைப் பெற வேண்டும் என்று நினைத்துப் பேசுவார் – “காங்கிரசு நண்பர், உயிரைக் கொடுத்தேனும் பிரிவினையை அவர்கள் உயிரைப் பறித்தாவது பிரிவினையை எதிர்க்க அதிகரிக்கம், அதைக் கேட்டதும் பக்கத்திலிருக்கம் இன்னொரு பேச்சாளர், கம்யூனிஸ்டுத் தோழர் பேசியதை மறுத்துப் பேசத் தடுப்போம்‘ என்று கூறியதற்காக நான் வருத்தப்படுகிறேன், உயிரைப் பறிப்பது ஆகாது. இப்படி பேசியவருக்குப் பழைய இப்படிப் பேசியதைக் கண்டிக்கிறேன், அவர் “இப்படித்தான் பேசுவேன்“ என்று கூறுவாரேயானால் இந்தக் கூட்டே வேண்டாம் என்று சொல்லி விட்டு உட்காருவார்.

அறிவு ஆயுதத்தாலா? அழிவு ஆயுதத்தாலா?

கூட்டுச் சேர்ந்து கூட்டம் நடத்தினால், இந்தச் சண்டைதான் நடக்கும், வேண்டுமானால் நடத்திப் பார்க்கட்டும். மேடையில் காங்கிரசுக் கொடி பெரியதாக இருப்பதைப் பார்த்ததும், இன்னொரு கட்சிக்காரருக்குப் பொறுக்காது. அவர் போய் அதைவிடப் பெரிய கொடியாகக் கொண்டு வந்த கட்டுவார். இந்தப் போட்டிதான் நடக்கும்.

கூட்டாகப் பேசினாலும் தனித்துப் பேசினாலும், ஒன்றுதான். நமது இலட்சியத்தை எதிர்த்து அவர்கள் கூறும் வாதத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிய்த்தெறிந்து ஆண்டுகள் பல ஆகின்றன.

பிரிவினை பேசும் என்னைப் பிடித்துச் சிறையில் போட வேண்டும் சிலர் கூறுகிறார்கள். எங்களை எந்த முறையில் அடக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறேன். பிரச்சாரம் என்னும் அறிவாயுத்தாலா, அல்லது அடக்கமுறை என்னும் அழிவு ஆயுதத்தாலதா? எதனாலே அடக்கப் போகிறீர்கள்?

முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றிப்பட்டியலை வைத்து முதலில் ஆராயுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

(நம்நாடு - 25-5-1962)