அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அன்பு வாழ்க்கை
1

இப்போது தோழர் கிருஷ்ணன் அவர்களுக்கும் தோழியர் துளசிபாய் அம்மையாருக்கும் சீர்திருத்த முறையில் திருமணம் நடைபெற்றது. இப்படிப்பட்ட சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் இப்போதெல்லாம் மக்களிடம் அதிக அக்கறை காணப்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தன. இன்று அப்படிப்பட்ட எதிர்ப்புகள் இல்லை. அப்போது எதிர்ப்புகளும் ஏராளம். இப்படிப்பட்ட திருமணங்களுக்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் ஏராளமான சீர்திருத்தத் திருமணங்கள் மிகவும் தாராளமாக நடைபெறுகின்றன என்றாலும், எதிர்ப்புகள் அடியோடு இல்லவே இல்லை என்று கூற முடியாதே!

எவ்வளவுதான் அதிகமான சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தபோதிலும், அவற்றைப் பற்றிய சந்தேகங்கள் மக்களுக்கு இன்னமும் அடியோடு நீங்கிவிட்டதா? நீக்கப்பட்டு விட்டதா? இல்லை!

சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடைபெற வேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் அக்கறை காட்டத்தான் செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பகுத்தறிவுத் தோழரானாலும், கம்யூனிஸ்டு கட்சியிலே உள்ள சீர்திருத்த நண்பரானாலும் அல்லது வேறு எந்தக் கட்சிக்காரர் ஆனாலும் சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்துக்களும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்போல எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பார்ப்பனருக்கு அடுத்த ஜாதி நாங்கள்தான் என்று பெருமை பேசிடும் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அல்லது செட்டியார், நாயுடு, ஷத்திரியர் என்று கூறிக்கொள்ளும் எந்த வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அந்தந்த வகுப்பிலுள்ள பெரும்பாலான வாலிபத் தோழர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சீர்திருத்த திருமணங்கள் செய்து கொள்வதிலே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.

இன்று எந்தச் சமுகத்தைச் சேர்ந்தவர்களானாலும் உலக நிகழ்ச்சிகளைக் கொண்டு முன்னேற விரும்புகிறார்கள். தெளிந்த அறிவு காட்டும் நல்ல போக்கின்படி நடக்கத் துணிவு கொண்டுள்ளனர். எனவேதான் நாள்தோறும் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றுவரும் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் எவ்வளவு சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றாலும், இன்னமும் சாதாரண மக்களிடையே தவறான மணமுறைகளைப் பற்றிய தவறான கருத்துகளும் பொருத்தமற்ற சந்தேகங்களும் தோன்றாது அடியோடு மறைந்துவிடவில்லை. எதிர்ப்புகள் அன்றுபோல அதிக அளவில் இல்லாமலிருக்கிறதே தவிர எதிர்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டுவிடவில்லை யென்பதை நாம் உணரத்தான் வேண்டும்.

இன்று சீர்திருத்தத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. அதுவும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன. என்றாலும் எதிர்ப்புகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கின்றன. இப்போது இங்கு நடைபெறுகின்ற திருமணத்திற்குக் கூட ஏதோ எதிர்ப்புகள் இருந்ததாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.

இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களைக் கண்டு சிலர் பயப்படுவதற்குக் காரணமே கிடையாது. நாங்கள் என்ன நடக்கக் கூடாதது எதையும் செய்யவில்லையே! என்றைக்கும் போல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குந்தானே இங்கே திருமணம் நடத்தி வைக்கிறோம். அதிலும் ஆணின் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து மணப்பந்தலில் நிறுத்திவிட்டு அதன்பின்னர் அதோ இருக்கும் அந்தப் பெண்தான் உனக்கு மனைவியாகப் போகிறவள் என்று கூறவில்லையே!

ஆணும் சரி, பெண்ணும் சரி, முன்னதாகவே ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக அறிந்து தெரிந்து கொண்ட பின்னர்தானே திருமணம் நடைபெற வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம், செய்கிறோம்.

ஒரு ஆணுக்கும், மற்றொரு ஆணுக்கும், அல்லது ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்குமா திருமணம் நடத்துகிறோம்? இல்லையே! அப்படி ஏதாவது அக்கிரமமான காரியங்கள் செய்தால், செய்ய வேண்டுமென்று பேசினால், ‘ஆகா அக்கிரமக்காரர்கள், ஆகாத காரியம் புரிகிறார்கள்’ என்று எங்களைக் கண்டிப்பதற்கு இடமேற்படும். ஆனால் நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லையே!
நாங்கள் இங்கே திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணைவர்களாகிறோம் என்று எடுத்துக் கொள்ளும் உறுதிக்கு சாட்சிகளாகத்தான் வந்திருக்கிறோம் இங்கே கூடியுள்ள அத்தனைபேரும் உற்றார் உறவினர் உட்படவும் அதற்காகத்தானே வந்துள்ளனர்.

மணம் செய்வதற்குச் சாட்சிகளாக இருக்கவும், மணமக்களை வாழ்த்தவும், புத்திமதிகளைக் கூறவுந்தான் நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். இதைத்தான் நாம் செய்கிறோம். இதைக்கண்டு ஏன் சிலர் சந்தேகப் படவேண்டும்? எதற்காக எதிர்ப்புக் காட்டவேண்டும்?

சில பெரியவர்கள், வைதீகத்தில் பெரிதும் ஊறியவர்கள் வேண்டுமானால் சில காரணங்களைக் கூறுவார்கள். அதாவது இந்தத் திருமணத்திலே அவர்கள் எண்ணப்படியும் முறைப்படியும் காரியங்கள் நடைபெறவில்லை என்பதுதான் அவர்களுக்கு ஏற்படும் குறைகள்!

அவர்கள் எண்ணப்படி முறைப்படி நாம் இங்கே அய்யரை அழைத்து அக்கினி வளர்க்கவில்லை. அகல் விளக்கு ஏற்றிவைக்கத் தவறிவிட்டோம். அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கத்தை விட்டு விட்டோம். அரசாணிக்கால் நட்டு அதைச்சுற்றி வரவில்லை. மணமக்கள் அய்யர் மந்திரம் ஓதித் தாலி கட்டவில்லை!

இப்படிப்பட்ட சில வழக்கமான பல சடங்குகளைச் செய்யவில்லை. இதுதான் இன்று எதிர்ப்புக் காட்டும் சிலரது குற்றச்சாட்டுகள், சீர்திருத்தத் திருமணங்களைப் பொருத்தமட்டில் இக்குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கவில்லை. மறுக்கவும் மாட்டோம். அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்கள் சீர்திருத்தம் என்று கூறுவதே, இப்படிப்பட்ட சடங்குகளை நீக்க வேண்டும், அடியோடு விட்டுவிடவேண்டும் என்பதுதானே! அப்படியிருக்க சடங்குகள் இல்லையென்று கூறுவதைக் கேட்டு அவைகளை எப்படி எங்களால் மேற்கொள்ள முடியும்?

சீர்திருத்தத் திருமணம் தேவையென்பதற்காக நாங்கள் கூறும் காரணங்கள் மறுத்தல்ல இன்று காணப்படும் எதிர்ப்புகள் எதிர்ப்புகள் எங்கு காணப்பட்டாலும் அது ஏதோ சில சடங்குகளை அழித்துவிடுகிறோம் ஒழித்துவிடுகிறோம் என்பதற்காகத்தான் காணப்படுகிறது.

சங்கராச்சாரியாரிலிருந்து சாதாரண அய்யரிலிருந்து சாதாரண சாமியார் வரை படித்த பார்ப்பனர்களிலிருந்து படிக்காத பாமரர் வரை, அவர்கள் யாராக இருப்பினும் இதுவரை சீர்திருத்த முறையில்தான் திருமணங்கள் நிகழ வேண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் கூறிவரும் காரணங்களை ஒருவரும் மறுத்துப் பேசியது கிடையாதே!

அவர்கள் நாங்கள் கூறும் காரணங்களை மறுத்துப் பேசுவதில்லை. பேசவும் முடிவதில்லை. ஆனால் அர்த்தமற்ற சடங்குகளை பொருத்தமற்ற காரணங்களைக் காட்டிக் கடைபிடிக்கவில்லையென்றுதான் குற்றஞ் சாட்டுகிறார்கள்.

நாங்கள் மேற்கூறப்பட்ட எந்தவிதமான சடங்குகளையும் செய்வதில்லை. செய்யத் தேவை இல்லையென்றும் கூறுகிறோம். அத்தகைய சடங்குகளைச் செய்வதற்கு எந்தவிதமான அர்த்தமுமில்லை. அதற்குக் கூறப்படும் காரணங்களும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவைகளை நாங்கள் செய்வதில்லை யென்பதுடன், செய்வதும் கூடாது எனவும் குறிப்பிடுகிறோம்.

இந்தச் சடங்குகளை நாம் ஏன் செய்ய வேண்டும்? அவைகளை விட்டுவிட்டால் என்ன? என்ற கேள்விக்கு ‘அவைகள் அக்காலத்திலிருந்து இருந்து வரும் பழக்கங்களாயிற்றே! அவைகளை எப்படி விடமுடியும்?’ என்ற முறையில்தானே பதில் கிடைக்கிறது. வேறு ஏதாவது தக்க காரணங்கள், பொருத்தமான பதில்கள், அர்த்தமுள்ள அறிவுக்குப் பொருத்தமான விளக்கங்கள் தரப்படுகின்றனவா? கிடையாதே!

ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றால் சாஸ்திர முறைகள் என்றும் பழைய வழக்கங்கள் என்பதற்காக மட்டும், எந்த விதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம் சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப்பார்த்து முடிவு கட்ட வேண்டும்!

மக்கள் தமது அன்றாட வாழ்வில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறார்கள். செய்கின்ற அத்தனை காரியங்களுக்குமா காரண காரியங்களையும் பொருத்தத்தையும் எண்ணிப்பார்த்து செய்து கொண்டிருக்கிறார்! இல்லை அப்படிச் செய்வதில்லை.

எத்தனையோ காரியங்களை ஏன் செய்கிறோம்! என்ன அர்த்தம். எப்படிப் பொருத்தம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமலே ஏன்? ஒரு சிறிதும் எண்ணிப் பாராமலுங்கூடத் தங்களையறியாமல் பல காரியங்களை பலர் செய்து வருவதை நாம் காண்கிறோம்!

உதாரணத்திற்காக நான் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிலருக்குத் தூக்கம் வருவதற்கு முன்னர் கொட்டாவி வரும். அப்படிக் கொட்டாவி விடும்போது விரல்களால் மூன்று சிட்டிகை போடுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நண்பரைப் பார்த்து அவர் கொட்டாவி வரும்போதெல்லாம் மூன்று சிட்டிகை போடுகிறாரே அதற்கு என்ன காரணம் என்று கேளுங்கள்.

கொட்டாவி விடும் நண்பர் சிறிது கோபக்காரராக இருந்தால் முறைத்துப் பார்ப்பார், அல்லது சாந்தமானவராக இருந்தால் மெதுவாகச் சிரித்துக் கொண்டே அது ஏதோ பழக்கம் காரணம் ஒன்றுமில்லை என்று பதில் கூறுவார்.

இதைப் போலவே சூளையில் உள்ள ஒரு பெரியவர் புரசைவாக்கத்தில் நடந்த ஒரு சச்சரவில் பஞ்சாயத்து செய்யப் புறப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். சூளையிலுள்ள பெரியவர் புரசைவாக்கம் போவதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டு போகிறார்.

அவர் புறப்பட்டுத் தெருவில் சிறிது தூரம் செல்லும்போது அடுத்த வீட்டின் கூரையில் இருந்த பூனை எதிர்த்த வீட்டுத் திண்ணைப்பக்கமாக ஒரு எலியை பிடிக்க குறுக்கே ஓடுகிறது. இதைக் கண்டவுடனே பஞ்சாயத்துக்காக வேகமாக நடந்து சென்ற பெரியவர் திடுக்கிட்டுத் திரும்பிவந்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்.

திரும்பி வந்தவர் திண்ணையில் உட்கார்ந்தபடியே ‘அடியே காமாட்சி! என்று தமது மனைவியை அழைப்பார். இப்படி அவர் அழைத்த உடனே அந்த அம்மையார் ‘சகுனம் சரியில்லை போலிருக்கிறது அதுதான் திரும்பி வந்துவிட்டார்’ என்று தீர்மானித்து கையில் தண்ணீருடன் திண்ணைப்பக்கம் வருவார். பெரியவர் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகேதான் மீண்டும் எழுந்து புரசைவாக்கம் போவார்.

இந்தப் பெரியவர் போவதோ புரசைவாக்கம் சச்சரவைத் தீர்ப்பதற்காக, குறுக்கே பூனை ஓடியதோ எதிர்த்த வீட்டுப் பக்கம் ஓடிய எலியைத் தூரத்திப் பிடிப்பதற்காக! குறுக்கே ஓடிய பூனையை கண்டு இவர் திடுக்கிடுவானேன்? திரும்பி வருவானேன்? திண்ணையில் உட்கார்ந்து தண்ணீர் சாப்பிடுவதும்தான் எதற்காக?

இவர் போகின்ற காரியத்திற்கும் பூனை குறுக்கே ஓடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே! என்றாலும் பூனை குறுக்கே ஓடினால் அவர் மேலே போகமாட்டார். சகுணத் தடையாகிவிட்டது. போகிற காரியம் தடையாகிவிடும் என்று அஞ்சுகிறார்.
‘ஏன் இப்படி?!’ என்று அந்தப் பெரியவரைக் கேட்டால் பொருத்தமான காரணம் ஏதாவது கூறமுடிகிறதா என்றால் அதுதானே இல்லை, ‘ஏதோ பழக்கம்’ என்றுதானே அனைவரும் இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பதில் கூறுகின்றனர்.

இதே போன்று மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு தோழர்கள் உட்கார்ந்து கொண்டு காரசாரமாக அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் ‘தினமணி’ பத்திரிகை இருக்கிறது. அதில் உள்ள அகில உலகச் செய்திகளைப் படித்து ரசமான பேச்சு நடக்கிறது.

இந்த இரண்டு தோழர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், மற்றவர் பிரஜா சோசலிஸ்டுக் கட்சியில் பங்கு கொண்டவர். காங்கிரஸ் தோழரைப் பார்த்து, பிரஜா சோசலிஸ்ட் ‘டாக்டர் லோகியாவை காங்கிரஸ் சர்க்கார் கைது செய்தது நியாயமா?’ என்று கேட்பார். அதற்கு காங்கிரஸ்காரர் உடனே ‘உங்கள் பட்டம்தாணுப்பிள்ளை மட்டும் திருவாங்கூரில் குஞ்சன்நாடாரை கைது செய்தது மட்டும் என்ன நியாயம்’ என திருப்பிக் கேட்பார். இதைத் தொடர்ந்து ரசமான விவாதம் தொடரும்.

இவர்கள் இப்படி விவாதம் செய்துகொண்டு இருக்கும்போது அந்த வீட்டுக்கூரையில் உள்ள பல்லி ஒன்று ஒரு பூச்சியைப் பிடிப்பதற்காக பாயும். அப்போது அது சிறிது சத்தமிடும்.

பூச்சிப்பிடிக்கப் பல்லியிடும் சத்தம் கேட்டதும், திண்ணையில் உட்கார்ந்து அருமையான அரசியல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தாங்கள்பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு வாயில் சப்புக்கொட்டி தரையில் மூன்று தரம் விரலால் தட்டுவார்கள்.

பூச்சிபிடிக்கும் பல்லி சத்தமிட்டால் இவர்கள் ஏன் பேச்சை நிறுத்தவேண்டும். தரையை மூன்று தரம் தட்ட வேண்டும்!

அந்த நண்பர்களைக் கேட்டால் சாந்தமான நேரமாக இருந்தால் ‘என்னமோ பழக்கம் சார் விடமாட்டேன்கிறது’ என்று சொல்வார்! இன்னும் சிலர் நாம் இப்படிக் கேட்டால் உங்களுக்கு வேறு என்னதான் வேலை! சுயமரியாதைக்காரர்களுக்கு இப்படி எதையாவது கிளறிக்கொண்டு கேலி செய்து கொண்டிருக்கத்தான் தெரியும் என்று சலித்துக் கொள்வார்கள்.

பூச்சி பிடிக்கச் செல்லும் பல்லியின் சத்தத்தைக் கேட்டதும் தாங்கள் பேசி அலசிக் கொண்டிருந்த அகில உலகப் பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்திவிட்டுத் தரையில் மூன்றுதரம் தட்டுவதற்குப் பொருத்தமான காரணம் எதையுமே கூறிட முடியாது.

கொட்டாவி விடும்போது மூன்று தரம் சிட்டிகை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுணம் சரியில்லையென்று திரும்பிவிடுவதும், பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்கு பலன் பார்த்துப் பதைப்பதுங் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டுவிட்ட பழக்கத்தினாலும் அறியாமையினாலுந்தான்.

இவைகளையெல்லாம் காரணந் தெரியாமல், ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிதுமின்றி, தங்களை யறியாமலே பழக்கத்தினால் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காரணகாரியமற்ற செயல்கள் பழக்கத்தின் பேராலும், வழக்கத்தின் மூலமாகவும் பல நடைபெறுவதை நாம் காண முடியும்.

இவைகளைப் போலவேதான் திருமணக் காலங்களிலேயும் சில அர்த்தமற்ற காரியங்களைச் செய்துவருகிறார்கள். தேவையற்ற சாமான்களைச் சேகரித்து வைத்து வீணாக்குகிறார்கள்.

இப்படிப்பட்ட சடங்குகளைத்தான் நாங்கள் சடங்குகள் கூடாது என்று கூறி, அவைகளை அடியோடு நீக்கிவிட்டுப் பல ஆண்டுகளாக எத்தனையோ சீர்திருத்தத் திருமணங்களை நடத்தித்தான் வருகின்றோம் அதனால் என்ன கெட்டுவிட்டது? ஏதும் இல்லையே!

இத்தனை காரண காரியங்களுடன் நாங்கள் சடங்குகள் கூடாது என்று கூறி, அவைகளை அடியோடு நீக்கிவிட்டு பல ஆண்டுகளாக எத்தனையோ சீர்திருத்தத் திருமணங்களை நடத்தித்தான் வருகின்றோம் அதனால் என்ன கெட்டுவிட்டது? ஏதும் இல்லையே!

எனவே மக்கள் சடங்குகளைத் தள்ளிவிடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்தமற்றதாகும்!

திருமணத்தின்போது தாலிகட்டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக் கயிற்றில் புலியின் நகத்தைப் போலும் பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒரு விதமான விளக்கங் கூறுகிறார்கள். அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம் நாடுகள் குறைவு. காட்டிலே புலிகளும் அதிகம். ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டுவந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான் அதனுடைய பல், என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக் கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன், என்று கூறி அந்த வீரனையே மணந்துகொள்வாள், தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலிநகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும் புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்க வேண்டும் என்று ஏற்பாடு தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந்திருக்கலாம்.

இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்கவேண்டுமா? உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்களே!

இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?

இன்றைக்கு நாடுகள் அதிகாமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது குறைவு. அந்த நாட்களைப்போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலிகளைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என் காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!

பழைய காலத்தைப் போலவே இன்றும் புலிவேட்டையாடி காதலிக்குத் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலியிடம் காட்டி, “பெண்ணே இதோபார், நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாக கட்டுகிறேன்” என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் ‘சரி’ என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!

புலியைக் கொன்றேன் இதோ அதன்பல்! அதன் அளவைப்பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?

காதலனிடம் சிக்கிய காட்டுப்புலிக்கே இந்த கதி ஏற்பட்டுவிட்டதே! இப்படிப்பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.

இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு வீரத்தை எதிர்பார்க்கவில்லை. எந்தக் கணவனும் ‘புலி’ என்றடவுடன் கிலிகொண்டிடும் நிலையில்தானே இருக்கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரியதாகக் கருதவில்லை.

அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்க வேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரிகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக்கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த்திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன்மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய்விட்டது.

எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.

நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள்தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு நமது சொத்துபற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

ஏராளமான பணத்தைத் தேடி வைத்துள்ள பணக்காரர்கள் தானே இதைப்பற்றிக் கவலைப்படவேண்டும்!

மக்களுக்கு இனி அத்தகைய அச்சமும், ஆயாசமும், பரிதவிப்பும், பயமும் ஏற்படுவதற்குக் கூட காரணமில்லாமற் போய்விட்டது. ஏராளமான சீர்திருத்தத் திருமணங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்ற காரணத்தால் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களும் இனி சட்டபடி செல்லுபடியாகும் என்ற சூழ்நிலை இப்போது உருவாகி வருகிறது.

ஆச்சாரியார் மந்திரி சபையில் சட்ட மந்திரியாக இருந்த குட்டி கிருஷ்ண நாயர் காலத்தில் சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றிய கேள்வி நீதிமன்றங்களில் எழுந்தது. இதன் காரணமாக அவர் ஏற்கனவே நடந்துவிட்ட சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்.

ஆனால் இன்று காமராசர் ஆட்சியில் இதனை ஏற்கனவே நடந்த திருமணங்கள் மட்டுமல்லாமல், இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டபடி செல்லுபடியாகும் என்ற முறையில் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பேசிவந்த நிலைமை அடியோடு மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பும் ஏற்பட்டு விட்டது.

இதுவரையில் நாம் சட்டம் ஒப்புகிறதா? இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. சமூகம் ஒப்புகிறதா? மக்கள் மனம் திருந்துகிறார்களா? என்பதை மட்டுந்தான் கவனித்துச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வந்தோம். நாம் எதற்கும் அஞ்சாது தொடர்ந்து இத்தகைய பணியினைச் செய்து வந்ததன் பயன்தான் இப்பொழுது சட்டம் நம்மைத் தேடி வந்து நமக்குப் பாதுகாப்புத்தரும் நிலை ஏற்பட்டு விட்டது.

இதே முறையில் நம்நாடு முழுவதும் பேசியும், எழுதியும் பிரசாரம் செய்து வந்த மற்றொரு காரியமும் இன்று சட்டமாகியிருக்கிறது. நாம்தான் கேட்டோம் முதன் முதலில் ஒரு ஆண் பல மனைவிகளை மணந்து கொள்வது நியாயமா? என்று.

அவணுக்கென்ன ஆண் மகன்! ஒன்றென்ன ஒன்பது மனைவிகளைக் கூடக்கட்டி ஆளலாம்! என்று பெருமை பேசி வந்த காலமும் இருக்கத்தான் இருந்தது! சமூகத்திலும் இப்படிப்பட்ட பலதார திருமணத்திற்குச் சம்மதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆசைக்கு ஒரு மனைவி, சொத்துக்கு ஒரு மனைவி, சுகத்திற்கு வேறொருத்தி, போகிற இடத்தில் வேறொருத்தி பெருமைக்கு மற்றொருத்தி என்ற முறையிலே ஒரே ஆண், பல மனைவியரை மணந்து வந்த முறையினை நாம்தான் தகாது எனக்கூறினோம். முறையல்ல என்று கண்டித்தோம்.

பல பெண்கள் ஒரு ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைந்தன! எத்தனை பெண்கள் கணவனைக் கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூட பார்க்கமுடியாத பயங்கர நிலையில் தத்தளித்தனர்? எத்தனை குடும்பங்களில் கண்ணீர் வெள்ளம் புரண்டோடியது?

இந்தக் கொடுமையைக் களைய வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமே தவிர இஷ்டம்போல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணப்பேன் என்று நடப்பது அநாகரீகம் என்று நாம் கண்டித்தோம். அதன் பலனை இன்று காண்கிறோம்!

இன்று சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணந்து கொள்ள முடியும். ஒரு மனைவி உள்ளபோது மற்றொரு பெண்ணை மணந்து கொள்வது சட்டபடி செல்லுபடியாகாது, இதோடு இரண“டாவது மனைவியை மணந்து கொள்ளும் ஆணுக்கும் அவருக்கு பெண்தரும் பெண் வீட்டாருக்கும் சட்டப்படி பல வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பல மனைவியரை மணப்பேன். என்னைத் தடுப்பவர் யார், என்று ஆண்மகன் பேசி வந்த காலம் போய்விட்டது.

‘ஆணுக்கு என்ன எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். ஆண்டவனே பல மனைவியை மணந்துள்ளாரே’ என்று பேசி வந்த வைதீகர்களின் போக்கும் இன்று சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே ஒரு மனைவியிருக்கும் போது மற்றொரு பெண்ணை மணப்பது இன்று கிரிமினல் சட்டபடி குற்றமாகும்.

இந்த நிலைமை ஏற்படக் காரணமானவர்கள் யார் நாம்தானே! கல்லடிகளையும், அதைவிட எதிர்த்தவர்களின் படுமோசமான சொல்லடிகளையும், பிறர் ஏளனத்தையும் ஏசலையும் பொருட்படுத்தாது, தாங்கி வந்த சுயமரியாதைப் பணியில் பிரச்சாரத்தின் விளைவாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சிதான் சர்க்கார், இப்படிப்பட்ட சட்டமியற்றுவதற் கான சூழ்நிலை ஏற்பட்டதற்கு காரணமாகும்.

முன்பெல்லாம் தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தள்ளி வைத்துவிட்டு தன்னிஷ்டமாக வேறு மனைவியைத் தேடி கொண்டது போலச் செய்ய முடியாது. தனது மனைவியை அர்த்தமற்ற காரணங்களுக்காக எவரும் ஒதுக்கிவிட்டு புதுமனைவியைத் தேடவும் முடியாது.

இருக்கும் மனைவியைத் தள்ளிவிட்டு வேறு மனைவியை மணம் புரிந்து கொள்ள வேண்டுமானால் கணவன் முதலில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பிறகு தன் மனைவி கருத்தரிக்கவே முடியாது என்றோ, அவள் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கே இல்லை யென்பதையோ, தக்க டாக்டர்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.

தன் மனைவிக்கு தீராத நோய் இருந்தால் நீக்கலாம், அதைக் கோர்ட்டில் டாக்டர் மூலம் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும். மனைவிக்குக் குட்டம் என்பதையோ கோர்ட்டாரின் அனுமதி பெற்ற பின்னர் தான் எந்த மனிதனும் இன்னும் வேறொருத்தியை மீண்டும் மணக்க முடியும்!