அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“ஏக இந்தியா“ எத்தனைநாள்?

கடந்த 27-5-60 மாலை நடைபெற்ற சென்னை 49-வது வட்டம் புரசைப் படிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழாப் பொதுக்வட்டத்தில் அண்ணா அவர்கள் பேசியதாவது –

இந்தப் படிப்பகத்தை நடத்திக் கொண்டு வருகிற நண்பர்கள் இந்த வட்டத்தில் நல்ல கருத்துக்களை – நாட்டுக்குத் தேவையான கருத்துக்களை காலத்திற்கு உகந்த கருத்துக்களை காலத்தைக் கூட மாற்றக்கூடிய, மாற்றந்தரத்தக்க நல்ல விதத்தில் பரப்ப வேண்டுமென நான் பெரிதும் விரும்புகிறேன்.

படிப்பதுகூடத் தேவையா என்ற ஒரு அதிருப்தி அளிக்கின்ற சூழ்நிலை தமிழகத்தில் சில வட்டாரங்களில் நிலவுகிறது. காரணம் படிக்காமலேயே எல்லாப் பதவிகளையும் வகிக்கலாம் என்ற துரதிருஷ்டவசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது தான். படிப்பதனால் எல்லாம் கிடைத்துவிடும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் படிப்பதனால் எதுவும் கெட்டு விடாது. இயற்கையாக இருக்கும் அறிவைக் கூர்மையான அறிவுள்ளதாக்கி அந்த அறிவை உலக அறிவோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய நாட்டுக்கு நாட்டின் தேவைக்கு அந்த அறிவை ஈடுபாடு கொள்ளச் செய்வதுதான் படிப்பகத்தின் வேலையாக இருக்கிறது – இருக்க வேண்டும்.

அரசியல் நிழலைப்போல் பின்தொடரும்

நம்முடைய நண்பர்கள் அரசியல் மன அருவறுப்பையும் விரோதங்களையும் சமாளித்து இந்தப் படிப்பகத்தை நடத்திச் செல்ல வேண்டிய நிலைமையைப் பெற்றிருப்பார்கள். ஏனென்றால் எவ்வளவுதான் நீங்கள் அரசியலை ஒதுக்கினாலும் நம்மையும் அறியாமல் அரசியல் நம்முடைய நிழலைப் போலப் பின்தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

நமது முன்னோர்கள் ஆண்ட காலத்தில் அரசனுக்கு இருந்த வேலையெல்லாம் காட்டு மிருகங்கள் நாட்டுக்க வராமல் இருக்கவும் மனிதரைப்போல் இருந்தாலும மிருகக் குணம் கொண்டு சில நாடுகளைக் அடிமைப்படுத்த நினைக்கும் எதிரிகளைப் படைகொண்டு அழித்துத் தன் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதும்தான் கடமையாக இருந்தது. அப்பொழுது மக்களுக்கு அரசியல் அதிகம் தேவையில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இருக்கும் அரசு அப்படிப்பட்டதல்ல.

நம்முடைய அரசாகவும் இருக்கவேண்டும்

இன்று காலையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் நமது நண்பர்கள் மிக உருக்கத்தோடு பேசிய பேச்சு அத்தனையும் எத்தனை குழந்தைகள் இருக்கலாம்? என்பதுதான். ஏனென்றால், நாட்டைப் ஆளுகின்ற துரைத்தனத்தார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் குடும்பம் பெருத்துவிட்டால் நாட்டு நிலைமை சீர்கெட்டுவிடும் என்ற அளவில மிகப் பெரிய பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆகவே நாம் எதைச் சாப்பிடுவது, எத்தனைக் குழந்தைகள் பெறுவது என்பது வரையில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது. இது தேவையில்லை என்று ஆச்சாரியாரைப் போல நான் சுதந்தரம் பேசவில்லை. ஓர் அரசு செய்யும் காரியங்களில் நமக்கு அக்கறை இருக்கவேண்டும்.

நம்முடைய நாட்டில் அன்றாடம் மக்கள் செய்கின்ற வேலை, வேலையின் தரம், அந்த வேலைக்குத் தரப்படுகின்ற கூலியின் அளவு, அந்தக் வலி எந்த விதமாக நிரண்யம் செய்து தரப்படுகிறது என்ற விவகாரம் இவை அத்தனையிலும் அரசாங்கள் தலையிடுகிறது.. இத்தனையிலும் அரசின் குறுக்கீடு இருப்பதால் அது நல்ல அரசாக இருக்கவேண்டும். நம்முடைய அரசாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது

ஆகையினால்தான் பழைய காலத்துத் தன்மையைப் போல் இந்தக் காலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தேசியக் கவி பாரதியார் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்“ என்று பாடினார்கள். ஏனெனில் இப்பொழுது இருக்கின்ற மக்களில் சில பேர்கள் மன்னனைப்போல் ஆள ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் ஆளுவார்கள் என்பதற்கு முன்னாலே ஆதாரம் இருந்ததில்லை.

உதாரணத்திற்குச் சொல்லுவேன் முதலமைச்சர் காமராசர் இந்த நாட்டை ஆளுவாரா? என்ற ஐயப்பாடு நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவரே சொல்லுகிறார் நான் கல்லூரியில் படிக்கவில்லை என்கறிார்கள். படிக்காவிட்டால் என்ன, செயல் நடக்கிறதா இல்லையா? என்று ஆளுகிற சந்தர்ப்ப்ம் கிடைத்து இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பார் என்று நாம் முன்பு முடிவுக்கு வந்திருக்க முடியாது.

ஆகையினாலத்ான் எவரையும் ஆளச்செய்யலாம், ஆளச் செய்வது மட்டுமல்ல, சரியாக ஆளுகிறார்களா என்று கவனித்துக் கொள்ளலாம், கவனித்துக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல இப்படிப்பட்ட அரசு ஆண்டால் இன்ன யோசனைகளை சொல்லலாம் என்று கண்காணிக்கலாம். அந்த அரசு சரிவர நடக்கவில்லை என்றால் வேறு அரசை உண்டாக்கலாம். இவ்வளவுக்கு இன்றைய தினம் மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது. உரிமை இருக்கிறது. இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட்டால்தான் நல்ல அரசு நமக்குக் கிடைக்கும்.

அறிவின் துணை கொள்க!

ஐந்தாண்டுக்கு ஒரு தடவை நமக்கு இருக்கும் உரிமையை அளிப்பதற்கு முன்னால் அன்றாட நிகழ்ச்சியைப் பொது மக்களுக்கு எடுத்தச் சொல்லிப் பொது மக்களும் இதில் ஆர்வம் செலுத்தத் தூண்டுவது படிப்பகங்களின் வேலையாக இருக்கவேண்டும். அப்படி இல்லாது கதைகளை மட்டும் படித்துவிட்டு மேலுலகத்தில் மோட்சம் கிடைக்குமா என்றால் அதை என்னாலே சொல்ல முடியாது. காரணம் நான் அங்கே போய் வந்தவனல்ல. ஆனால் இப்படிப்பட்ட ஏடுகளைப் படிப்பதைவிட இந்த உலகத்தில் வாழ் வேண்டுமானால் எப்படி வாழ வேண்டும், என்ன செய்து வாழ வேண்டும். வாழ்ந்தால் அதன் விளைவு நல்லபடி இருக்க வழி என்ன? என்பதற்கெல்லாம் வேண்டிய புத்தகங்களையும் அரசியலையும் படித்துப் பார்த்து வாழ்வு என்றால் என்ன – அரசு என்றால் என்ன – உரிமை என்றால் என்ன? விடுதலை வேட்கை என்றால் என்ன – கிளர்ச்சி – போராட்டம் என்றால் என்ன என்பவைகளைப் பற்றி எல்லாம் நம்முடைய மனதிலே அறிவின் துணைக் கொண்டு எண்ணிப் பார்க்கவேண்டும்.

இதைச் சொன்னால் இவன் இந்தக் கட்சிக்காரன், ஆகவே இன்ன கருத்தைத்தான் வற்புறுத்துவான் என்பார்கள். காங்கிரசு நண்பர்கள் இந்தக் கூட்டத்தில் நினைக்கவேண்டாம். நண்பர்கள் புரசைப் படிப்பகம் என்று அமைத்து இருக்கிற காரணத்தால் நாட்டில் இன்றைய தினம் நிலவுகின்ற கருத்துக்களைச் சொல்லி உங்கள் சிந்தனையை ஒரு கணம் தூண்ட விரும்புகிறேன்.

கேட்டால் பதில் சொல்ல முடியுமா?

எல்லாம் நன்றாகத்தான் நடைபெறுகிறது. சிலர் வேண்டுமென்றே ஆட்சியைக் குறை சொல்லுகிறார்கள். இப்பொழுதுள்ள ஆட்சி ரீதியாக நடக்கிறது. நேர்மையாக நடக்கிறது? ஆகையினால் இந்த ஆட்சியில் ஒருவிதமான குறைவு இல்லை என்று ஒரு கட்சியினால் பாராட்டப்பட்டு வருகிறது. அது எந்தக் கட்சி என்று நான் சொல்லத் தேவையில்லை. மற்றக் கட்சிக்காரர்கள் குற்றம் சொல்லுகிறார்கள் என்றால் அது அவர்களுடைய குற்றமா? குற்றம் சொல்பவர்களைப் பார்த்துக் குற்றம் சொல்லுகிறீர்களே, அப்படி என்ன குற்றம் கண்டீர்கள்? என்று நான் சத்தியவாணி முத்தைக் கேட்டால் அவர்கள் உடனே இது தெரியாதா, வெள்ளைக்காரன் காலத்தில ரூபாய்க்கு எட்டுபடி அரிசி விற்றது. இப்பொழுது ரூபாய்க்கு ஒருபடி தானே கிடைக்கிறது. இது தெரியவில்லையே சாப்பிடத் தெரிந்திருக்கிறதே என்பார்கள். இதைக் கேட்டதும் எனக்கு வெட்கமாக இருக்குமே தவிர பதில் சொல்லமுடியாது.

ஆட்சியில் குறைகள் இருக்கின்றன. இந்தக் குறைகளை நீக்குவது எப்படி என்று கேட்டால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். “திட்டங்கள் நிறைவேற்றப்படட்டும்“ என்று. உடனே சத்தியவாணிமுத்து கேட்கிறார். இப்படிச் சொல்லப்படுவதை எத்தனைக் காலத்திற்கு நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது? 13 வருடங்களாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். எங்களுக்கு ஒரு விதமான நன்மையும் செய்யமுடியவில்லையே என்று. உடனே அவர்கள் இன்னொரு பத்தாண்டுக் காலம் பொறுங்கள் என்று சொல்லுகிறார்கள்.

இதில் என்ன வடக்கு – தெற்கு?

மற்றொரு சாரார் கேட்கிறார்கள், இந்தப் பத்தாண்டுக் காலத்தில் என்னென்ன காரியங்களைச் சய்யப் போகிறீர்கள்? அதையாவது தயவு செய்து சொல்லுங்கள் என்று. இது தெரியாதா? அணைகள் கட்டப் போகிறோம். தொழிற்சாலைகள் கட்டப் போகிறோம் என்று அவர்கள் பதில் சொல்லுவார்கள். சரி அணைக்கட்டு இங்கே இருக்குமா? என்றால் “ஐயோ இதில் என்ன வடக்கு – தெற்கு? என்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்துக்கள் இப்பொழுது நாட்டில் ஒன்றையொன்று மோதிக் கொண்டிருக்கின்றன.

இன்னொன்றும் இத்துடன் ஒட்டி வருகிறது. இந்த நாடு இந்தியா, சேலமாக இருந்தாலும கான்பூராக இருந்தாலும் எல்லாம் இந்தியா, இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது.

இதற்கு மாறாக இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. இந்தியர்கள் என்ற சொல் நமது இலக்கியத்தில் இல்லை என்று சொல்லி பல ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். பல பகுதிகளாக இருந்ததை வெள்ளைக்காரன் மொத்தமாக ஒரு பெயரிட்டு அழைப்பதற்காக இந்தியா என்று அழைத்தான் என்று சொல்லப்பட்டது எப்படி உண்மையாகும் என்று கேட்கிறார்கள்.

அரசியல் வேண்டாம் என்றால் நல்லதல்ல

இதற்கு நான் உதாரணம் சொல்லுவேன். நமக்கு உடலில் கை எப்படி இருக்கவேண்டும். கண் எங்கே இருக்கவேண்டும். காது எங்கே இருக்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது, நமது கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. அந்த விரல்கள் ஐந்தும் தனித்தனி வேலை செய்கின்றன. எழுதுவது என்றால் இரண்டு விரல்கள் மட்டும் வேலை செய்கின்றன. அப்படி இல்லாமல் ஐந்து விரல்களும் எட்டிக் கொண்டுதான் இருக்கவேண்டும் என்றால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்த இரண்டு வகைப் பிரச்சனைகளையும் நீங்கள் நல்லபடி முடிவு செய்கிற வரையில் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நீங்கள் காங்கிரசு சொல்லுவதுதான் சரியென்று தோன்றினால் அதில் சேருஙகள். அதன் வளர்ச்சிக்கு உழையுங்கள். இல்லை கழகம் சொல்லுவது சரியென்றால் கழகத்தில சேர்ந்து அதன் வளர்ச்சிக்கு உழைக்கவேண்டும். இப்படிச் சொல்லுவதால் உங்களை அரசியல் கட்சியில் சேரச் சொல்லுகிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். நீங்கள் கட்டாயம் ஒரு கருத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லுகிறேன்.

இப்படிச் செய்யாமல் “அரசியல் வேண்டாம்“ என்றால் அது நல்லது அல்ல.

கக்கனைப் பார்த்தால் கேளுங்கள்

அமைச்சர் கக்கன் அவர்கள் அரிசன மக்கள் வீட்டிலெல்லாம் வெள்ளிக் குவளையில்தான் தண்ணீர் குடிக்கிறார்கள் என்கிறார். மற்றொரு சாரார் இல்லை தகரக் குவளையில்தான் குடிக்கிறார்கள் என்கிறார்கள். நீங்கள் சேரிக்குத் சென்று உண்மையைத் தெரிந்து மறுபடி கக்கனைச் சந்திக்க நேரிட்டால் கேளுங்கள். ஏதனய்யா பொதுக்கூட்டத்தில் இப்படிப் பொய் சொல்லுகிறீர்கள்? என்று.

இந்தக் காலத்தில் நீங்கள் கேட்க வேண்டிய அளவுக்குக் கேட்டு இருப்பீர்கள். நாங்களும் சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லி விட்டோம். வாலிபர்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அது எனக்குத் தெரியும். வயோதிகர்கள், பெரியவர்கள், தாய்மார்களுக்கு இந்த இரண்டு கருத்தையும் சொல்லி அவர்களையும் நல்ல வழியில் அழைத்துச் செல்ல இந்தப் படிப்பகத் தோழர்கள் உழைக்க வேண்டும்.

இரயிலில் ஏற்படும் ஒற்றுமையைப் போன்றது, காங்கிரசார் பேசும் ஏது இந்திய ஒற்றுமை! அவர்களே இப்பொழுது மிகவும் திண்டாடுகிறார்கள், இந்த ஒற்றுமையால்.

போலி ஒற்றுமை நீடிக்குமா?

இரண்டு குடும்பத்தினர் இரயிலில் போகிறார்கள். ஒரு குழந்தை மிட்டாய் தின்கிறது, மற்றொரு குழந்தை அந்தக் குழந்தையைப் பார்த்து மிட்டாய் கேட்க அந்தக் குழந்தையும் தருகிறது. உடனே குழந்தையின் தாயார் பார்த்தீர்களா இந்தக் குழந்தைகள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றன. இதனால் என் பிள்ளைக்குத்தான் உங்கள் பெண்ணைக் கட்ட வேண்டும் என்பார்கள். அவர்க்ளும் சிரித்துக் கொள்வார்கள். ஆனால் இரயில் விழுப்புரம் வந்ததும் அவர்கள் இறங்கி விடுவார்கள். அவர்களுக்கும் – இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும். பிறகு பையன் வளர்ந்ததும் ஒருநாள் இரயிலில் என்னை நேசித்த அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன், என்றால் அது நடக்குமா?

ஒருவர் இரயிலில் பிராயணம் செய்கிறார். பட்டாணி விற்பவனிடம் அவர் இரயிலுள்ள சன்னலின் நடுவே கையை விட்டு பட்டாணி வாங்குகிறார். ஆனால் கையை விரித்தால் பட்டாணி கீழே கொட்டிவிடும். இல்லையேல் பட்டாணியைத் தின்ன முடியாது.

அதைப்போல் காங்கிரசு இப்பொழுது திண்டாடுகிறது. இந்தப் போலி ஒற்றுமை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? அதை எப்படி நம்பி இருப்பது? ஆகவே இதை நீங்கள் அறிந்து 1962இல் இந்தச் சர்க்காரை மாற்றுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மொழிவழிப் பிரிந்து இனவழிச் சேருவது

இப்பொழுது காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பிராயாணம் செய்கிறார். அவர் ஒரு கூட்டத்தில் ஆந்திரர், கேரளா, கன்னடியர் ஆகியோர் பிரிந்தபின் திராவிட நாடு ஏது என்றும், அவர்கள் பிரிந்து போகையில் தி.மு. கழகத்தினர் ஏன் தடுக்கவில்லை என்றும் கேட்கிறார். இதற்கு ஒன்றும் அவர் பெரிய அரசியலைப் படிக்கவேண்டாம். நமது நாவலர் நெடுஞ்செழியன் பேசும் ஒரு கூட்டத்தைக் காமராசர் கேட்டால் போதும். அவருக்கு உண்மை புரிந்துவிடும். நாம் ஆரம்பக் காலத்திலிருந்தே சொல்லி வருவது “மொழி வழிப் பிரிந்து இனவழி ஒன்று சேருவது“ என்பதுதான்.

குடும்பத்தின் தலைவன் ஆபீசுக்குச் செல்லுகிறான். ஆபீசுக்குச் சென்றவன் வரவேமாட்டான் என்று காமராசர் சொல்லுகிறார். நமது நாவலர் அவர்கள் இந்தப் பிரச்சனையை, ஆரம்பப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குச் சொல்லுவதைப் போல விளக்கிச் சொல்லுகிறார். இதையே காமராசர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர் எந்த வகுப்பிற்கும் இலாயக்கு இல்லை என்று பொருள். இந்தத் திராவிட நாட்டுப் பிரச்சினை காமராசருக்குப் புரியாதது.

தமிழ்நாட்டுப் பிரிவினையை ஆதரிப்பாரா?

குடும்பத்தின் தலைவி சமைக்கும் நேரத்தில் தலைவன் “இந்தச் சமையல் வேலை எனக்கு தெரியும். நீ உன் அம்மா வீட்டிற்குப் போ“ என்று சொல்லிவிட்டுச் சமைக்க வேண்டியதை முறைப்படி சமைக்காமல் எல்லாப் பொருளையும் உலையில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் தீயிட்டால் என்ன நடக்கும். அதைப் பார்க்கும் பெண் இந்த விவகாரம் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் கொஞ்சம் திண்ணையில் உட்காருங்கள் என்பாள்.

இதைப்போல் தெரியாதவரை நாம் உட்காரச் சொல்ல வேண்டும். இதை 1962இல் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

காமராசர் எங்களுக்கு இன்னொரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள். இந்த அண்ணாதுரை யார் யாரோடோ கூட்டு சேருகிறார். இவர் சேர வேண்டியது பெரியாரோடல்லவா? என்று சொல்லுகிறார்.

பெரியார் அவருக்கு இருக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டை மட்டும் தனியாகக் கொடு என்று கேட்கிறார். நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம். காமராசர் எங்களைப் பெரியாரோடு சேரச் சொல்லுகிறார். அப்படியானால் காமராசர் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஆதரித்துக் கையெழுத்திட்டு அறிக்கை அனுப்பட்டும் நான் பெரியாரோடு சேருகிறேன்.

அப்படியில்லாமல் பெரியாரோடு சேர்த்து எனக்கு ஒட்டு வாங்கிக் கொடுங்கள் என்றால் அதற்கு அண்ணாதுரை ஆளல்ல. வேறு ஆளைப் பாருங்கள் என்பதை இந்த நேரத்தில் காமராசருக்கு பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

(நம்நாடு - 24-5-60)