அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


மொழி உள்ளிட்ட பல பிரச்சினைகள்
(02.06.1968 அன்ற சென்னையில் அண்ணா செய்தியாளருக்கு அளித்த பேட்டி)

செய்தியாளர்: காஷ்மீரில் நடைபெறும் ஒருமைப்பாட்டு மாநாட்டுக்குச் செல்வீர்களா? சதந்திராக் கட்சியின் ரங்கா போன்றவர்கள் அங்குச் செல்ல மறுக்கிறார்களே?

அண்ணா: நான் அங்குச் செல்வதாக இல்லை. ரங்கா காட்டும் காரணம் போன்றதல்ல நான் செல்லாததற்குக் காரணம், இங்கு எனக்கு வேலைகள் அதிகம். எனக்குப்பதில் வேறு யாராவது செல்லலாம்?

செய்தியாளர்: கருணாநிதியின் சிலை பற்றி...

அண்ணா: சிலை வேண்டாம் என்று கூறப்பட்டுவிட்டது.

செய்தியாளர்: அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்குத் திருமணக் கடன் திட்டம் விரையில் வருமா?

அண்ணா: கைவிடப்பட்டது என்று கூடச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அத்திட்டம் கைவிடப்படவில்லை. அது பற்றிய இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்.

செய்தியாளர்: சென்னையில் வழங்கப்படும் நெல்லூர் அரிசி விலை உயர்ந்ததாக இருக்கிறதே?

அண்ணா: அதை நாம் ஆந்திராவிடமிருந்து வாங்குகிறோம். இலாபமுமில்லை இழப்புமில்லை என்னும் முறையில் அதை நடத்துகிறோம். ஆகவே, விலை உறுதி செய்தல் அதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. தற்போது நமக்குத் தரப்படும் நெல்லூர் அரிசி பழைய தரத்தில் இல்லை என்னும் குறையும் இருக்கிறது.

செய்தியாளர்: நம் மாநிலத்தில் தொழில்கள் அமைக்க மைசூர் அரசு செய்வதைப் போலக் பல இடங்களுக்குச் சென்று தொழிலதிபர்களை அழைக்கும் முறை மேற்கொள்ளப்படுமா?

அண்ணா: அதில் அவர்கள் எவ்வளவு தூரம் இந்தப் பொருளாதாரச் சூழ்நிலையில் வெற்றியடைவார்கள் என்று பார்ப்போம்.

செய்தியாளர்: சேலம் உருக்காலைப் பற்றி...

அண்ணா: நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான்காவது திட்டத்தில் அது சேர்க்கப்படும் என நம்புகிறேன்.

செய்தியாளர்: உங்கள் நம்பிக்கை மைய அரசு தந்த வாக்குறுதியி்ன் பேரிலா.

அண்ணா: அப்படித் தந்திருந்தால் நான் வெளிப்படையாகக் கூறிவிடுவேன். ஆனால், அப்படி இல்லை. இருப்பினும், மிகுந்த நம்பிக்கையுடன இருக்கிறேன்.

செய்தியாளர்: தாங்களும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் கலந்து பேசி இந்தக் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்திற்கு முடிவுகட்டக் கூடாதா?

அண்ணா: இதைக் காங்கிரஸ் கட்சி செய்தால் அவருடன் பேசலாம். உள்ளூர்க்காரர்கள் செய்ததாகக் கூறுகிறார்கள். இனி உள்ளூர்க்காரர்களுடன் பேச வேண்டியதுதான். கறுப்புக்கொடி காட்டுவதை எதிர்ப்பவன் அல்லன் நான் கறுப்புக்கொடி காட்டுதல் என்பது ஜனநாயக முறைகளுள் ஒன்று. ஆனால் இன்ன காரணத்தி்ற்காக இன்ன இடத்தில் காட்டுவது என்னும் முறைகள் உண்டு. அது கடைப்பிடிக்கப்படவில்லை.

செய்தியாளர்: தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்ற எப்போது அறிவிப்பீர்கள்?

அண்ணா: இம்மாதம் ஆறாம் நாள் திருச்சியில் திமுக பாராளுமன்றக்குழு கூடும். அப்போது அது முடிவு செய்யப்படும்.

செய்தியாளர்: நேசமணி மறைந்ததால் இன்னொரு இடம் காலியாகிறது. அதில் காமராசர் நிற்கப் போகிறாராமே!

அண்ணா: காமராசர் நின்று தில்லிபோய் அமைச்சர் ஆக முடியாது. சுப்பிரமணியம் நின்றால் அங்குப் போய் அமைச்சராகலாம் என்னும் கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் இருக்கிறது என்று நண்பர்கள் கூறினார்கள். பொதுவாக, நேசமணி இப்போதுதான் மறைந்திருக்கிறார். இது பற்றி விரிவாகப் பேசுவது சரியல்ல.

செய்தியாளர்: பம்பாயில் சிவசேனையின் அடாவடிச் செயல்கள் அதிகமாகி வருகின்றனவே?

அண்ணா: நாட்டில் வளரும் சீர்கேடுகளில் அது ஒன்று. அந்தச் சேனை பற்றி இப்போதுதான் சவானும் மற்றவர்களும் வாய்திறந்து பேசுகிறார்கள். நான் தில்லியில், "இந்தச் சேனைகளின் இலட்சியங்கள் முதலியவற்றை ஆய்ந்து ஒருமைப் பாட்டுக்கும் சட்ட ஒழுங்கிற்கும் மாறாக இருந்தால், அவற்றை நீக்கும்படியாகக் கேட்டுக்கொள்ளலாம். வெறுந்தொண்டர் படையாகவே இருக்கும் என்றால் அனுமதிக்கலாம்" என்று கூறினேன்.

செய்தியாளர்: மைய அரசு உங்கள் கருத்துக்கு என்ன பதிலுரைத்தது?

அண்ணா: என் கருத்தை அவர்கள் வரவேற்றது போன்று தெரிந்தது. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேனை துவக்கப்படுகிறது.

செய்தியாளர்: மொழிக் கொள்கை பற்றித் தில்லியில் என்ன கூறினீர்கள்?

அண்ணா: நான் என் இருமொழித் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதும் அதிலிருந்து பின்னடையப் போவதில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

நான் தில்லியில் தலைமை அமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் சந்தித்தேன். அவர்களுக்கு நான் நிறைவேற்றிய மொழிக்கொள்கைத் தீர்மானம் பற்றித் தெரியும். ஏன் அதைச் செய்தீர்கள் என்றோ அதை மறு ஆய்வு செய்யவேண்டுமென்றோ அவர்கள் என்னை கேட்கவில்லை. கல்வி என்பது மாநில அரசின் பொருள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

செய்தியாளர்: மொழிப் பிரச்சினையில் தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

அண்ணா: காங்கிரஸ் கட்சியின் வட இந்தியத் தலைவர்களும் தென்னிந்தியத் தலைவர்களும் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்துக் கொள்ளவேண்டும். சுப்பிரமணியம் கூட வினோபாவைச் சந்தித்தார் என்ற செய்தி வந்தது. என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.

செய்தியாளர்: தென்மாநிலங்கள் ஒன்று சேர்ந்து மொழிப் பிரச்சினைக்கு முடிவு காண முடியுமா?

அண்ணா: தென்னிந்திய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து கூட்டணியாகச் செய்லபடவேண்டுமானால், அது மொழித் தீர்மானத்தை நீக்கும்படி கேட்பதில் மட்டுமே இருக்கலாம். ஏனெனில், அந்த ஒரு பொருளில் மட்டுந்தான், தென்னாட்டு மாநிலங்கள் ஒன்றாக இருக்கின்றன. ஏனைய பொருள்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவ்வாறு மொழித் தீர்மானம் நீக்கப்பட்டுவிட்டால், மொழிப்பிரச்சினை பற்றி விரிவாகப் பேச நல்ல சூழ்நிலை ஏற்படும்.

செய்தியாளர்: பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி மேலுந் தகவல் கிடைத்ததா?

அண்ணா: நேற்று (01.06.1968) கருணாநிதி தங்கியிருந்த பேராவூரணிப் பயணிகள் விடுதி்யில் கறுப்புக் கொடி காட்டியவர்கள் உள்ளே நுழைந்து கதவை உதைத்துத் திறந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. முழு விவரம் இன்னும் வரவில்லை. நான் கருணாநிதியியைத் தொடர்புகொள்ள இருக்கிறேன்.

செய்தியாளர்: தாங்கள் சோவியத்து ஒன்றியம், ஐரோப்பா ஆகிய நாடுகளுக்குச் செல்லுவதாக இருக்கிறீர்களா?

அண்ணா: ஐரோப்பா இப்போது மிக வெப்பமாக இருக்கிறது(சிரிப்பு)

செய்தியாளர்: இலங்கைக்குச் செல்லப் போகிறீர்களா?

அண்ணா: இல்லை. கல்வியமைச்சர் செல்வதாக இருக்கிறார்.

செய்தியாளர்: இலங்கையிலிருந்து வருவோருக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

அண்ணா: சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கூடலூரில் 5 ஆயிரம் ஏக்கரும் திருச்சிப் பகுதியில் சில இடங்களும் குடியேற்றத்திற்காகவும் மலைத் தோட்டத்தொழிலுக்காகவும் பார்த்திருக்கிறோம். அந்தமானில் குடியேற்றுவது பற்றி மைய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்தப் பிரச்சினை நமக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மைய அரசு சில திட்டங்களில் ஒத்துழைத்தாலும் பர்மாவிலிருந்து வருவோரின் சொத்துகள் பற்றிய விவரத்தினை அறிவதில் தட்டிக் கழிக்கும் போக்கில் இருக்கிறது.

செய்தியாளர்: பர்மா அரசு ஒத்துவராத அரசாங்கமாக இருக்கிறதா?

அண்ணா: பர்மா ஒத்துவராத அரசாங்கம். சீனா பிடிவாதமானது என்று கூறிக்கொண்டே போனால் நாம் என்ன அரசாங்கமாக இருப்பது?

செய்தியாளர்: இந்த ஆண்டு கல்லூரிச் சேர்க்கை எப்படி இருக்கும்?

அண்ணா: இந்த முறை கலைக் கல்லூர போன்றவற்றிற்கு அதிகாரப்பற்றற்ற அதர்வுக்குழு இராது. அதிகாரிகளே தேர்ந்தெடுப்பர். மருத்துவக் கல்லூரியில் சென்ற ஆண்டு இருந்தது போன்றே இருக்கும். ஆனால், மாவட்ட வாரியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது.

செய்தியாளர்: மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு குழுவா, ஒன்றுக்கு மேற்பட்ட குழுவா?

அண்ணா: ஒன்றுக்கு மேற்பட்டதாகத்தான் இருக்கும். ஆனால் மாவட்ட வாரியாகக் குழு இராது. விரைவில் முடிவுகள் எடுக்க குழுக்கள் விரிவாக அமைக்கப்படலாம். ஏனெனில், இங்கே இடம் கிடைக்கவில்லை என்றால் பிற கல்லூரிகளில் சேரலாம்.

இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போலவே நெருக்கடி இருக்குமானால், கல்லூரிகளை விரிவுப்படுத்தாமல் மாற்று வேளைமுறை (Shift) வைக்கலாம். சென்ற ஆண்டே இதுபற்றிக் கருதினோம். சூழ்நிலை இந்த ஆண்டு மாற்று வேளைமுறை ஏற்படுத்த வற்புறுத்தும் என்று நம்புகிறோம்.

(02.06.1968 அன்ற சென்னையில் அண்ணா செய்தியாளருக்கு அளித்த பேட்டி)