அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


அரிய அமெரிக்கப் பயணம்
(1968 ஏப்ரல் 15 முதல் மே 15 வரை அண்ணா அவர்கள்
ஒரு மாத கால அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்
15.04.1968 அன்று சென்னையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின்
முழுச் செய்தியின் விளக்கம்)

கேள்வி: தாங்கள் வெளிநாடு செல்வதில் முக்கிய நோக்கம் என்ன?

பதில்: என்னுடைய பயணத்தின் முக்கிய நோக்கம் பல்கலைக் கழகக் கல்வியும் தொழிலும் எம்முறையில் அங்கு நடைபெறுகின்றன என்பதைப் பார்ப்பதுதான்.

மேலும் அங்குக் கல்வித்துறையில் என்னென்ன வசதிகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரப்படுகின்றன. ஆசிரியர்கட்கும் மாணவர்கட்குமுள்ள நட்புறவுகள் என்ன என்பனவற்றைக் கவனித்திடவும் ஆராய்ந்திடவும் எண்ணியிருக்கிறேன்.

கேள்வி: தங்கள் பயணத் திட்டம் என்ன?

பதில்: நான் யேல் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல இருக்கிறேன். அப்பல்கலைக்கழகத்திற்கு என்னை வருமாறு அந்நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் நான்கு மாதங்களுக்கு முன் அழைத்தார்கள்.
அப்பல்கலைக்கழகத்தில் ஐந்து நாட்கள் தங்குவேன். அங்கு நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வேன். அங்கு நான் சில சொற்பொழிவுகளையும் நிகழ்த்த இருக்கிறேன்.

நான் ஹாவாய்த் தீவுக்குச் செல்லுகையில் அங்குக் கிழக்கு - மேற்குக் கலாச்சார நிலையத்தில் பேச இருக்கிறேன்.

ரோம் நகரில் போப் அவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறேன்.

பாரிசில் ஐ.நா.வின் கிளைக் கழகமான யுனெஸ்கோவில் தங்க இருக்கிறேன். அதன் பொதுச்செயலாளர் மால்கம் ஆதிசேஷய்யா ஒரு விருந்து தர இருக்கிறார். பாரிசில் அடுத்த உலகத் தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதுபற்றியும் அவருடன் பேச்சுநடத்த இருக்கிறேன்.
நான் பல அமெரிக்க மாநிலங்களுக்குப் போவதாக இருக்கிறேன்.

எடுத்துக்காட்டாகக் கான்சாஸ் மாநிலத்திற்குச் செல்வது. அங்குள்ள வேளாண் ஆராய்ச்சிப் பண்ணையை நேரில் கண்டறிந்து, அதன் நுட்பங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன்.
அமெரிக்க ஜெனரல் மோட்டார் தொழிற்சாலை நிர்வாகம் என்னை அங்கு வரும்படி அழைத்திருக்கிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்நிறுவனத்திற்குச் சென்று பார்வையிடுவேன். பெரிய மண்வாரி எந்திரங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களில் அதுவும் ஒன்றாகும். சென்னையில் மண்வாரி எந்திரம் அமைப்பதைப் பற்றி அந்நிறுவனத்துடன் பேச இருக்கிறேன். ஓர் இந்திய நிறுவனத்தின் கூட்டுறவில் அதனைத் தமிழ்நாட்டில் நடத்த இயலுமா என்பதைப் பற்றிப் பேசுவேன்.

ஜப்பானில்தங்கி இருக்கையில் சேலம் இரும்பாலைத் திட்டத்துக்கு உதவிபெறும் நிலை குறித்து அறிய முயலுவேன். அங்க ஐந்து நாட்கள் அரசு விருந்தினராக இருக்கும்பொழுது பல தொழில் நிறுவனங்களுக்கும் செல்ல இருக்கிறேன். இரும்பாலைத்திட்டம் மீன்பிடி படகுத் துறைத்திட்டம் தூத்துக்குடியில் வேதிஇயல் தொழிலுக்கு உதவி பெறுவது ஆகியவை குறித்தும் பேசுவேன்.

கேள்வி: தாங்கள் வெளிநாடு சென்றால் தொலைக்காட்சியில் பேட்டியையும் பத்திரிகையாளர் பேட்டியையு்ம் வேண்டாம் என்று சொன்னீர்களாமே?

அண்ணா: இதை உங்களுக்கு யார் சொன்னது?

செய்தியாளர்: சி.சுப்பிரமணியம் சொல்லியிருக்கிறார்.

அண்ணா: அவரிடமே நேரில் நேற்று நான் "உங்களுக்குத் தவறான தகவல் தரப்பட்டிருக்கிறது" என்று கூறிவிட்டேன். எங்குச் சென்றாலும் செய்தியாளர் பேட்டி என்பது தவிர்க்க முடியாதது ஆயிற்றே! நான் அதை வரவேற்பவனாயிற்றே.

கேள்வி: பம்பாயில் எவையேனு்ம் நிகழ்ச்சிகள் உண்டா?

பதில்: பம்பாயில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். போதிய காலம் இல்லாததால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். எனினும், மராட்டிய ஆளுநர் செரியனின் விருந்தினராகச் சில மணிநேரம் தங்க இருக்கிறேன்.

கேள்வி: தலைமை அமைச்சர் கூறியதென்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றி என்ன கூற இருக்கிறீர்கள்?

பதில்: நான் சில நாட்களுக்கு முன் தலைமை அமைச்சர் இந்திராவிற்கு இதுபற்றி ஒரு கடிதம் எழுதினேன். எங்களுக்கும் இந்திய அரசினருக்கும் வெளிநாட்டுகு கொள்கையைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ பொதுவான கருத்தொற்றுமை இருக்கிறது. பல நாட்டுப் பிரச்சினைகள் பற்றி அரசாங்கத்தின் கருத்தை அறிய விரும்புகிறேன் என்று அக்கடிதத்தில் எழுதி இருந்தேன்.

அந்தக் கடிதத்திற்குத் தலைமை அமைச்சர் பதில் எழுதி இருந்தார். சில நாட்டுப் பிரச்சினைகள் பற்றிய யோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்தார். பிறநாட்டுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள உறவுமுறை பற்றியும் விவரமாக எழுதி இருந்தார்.

கேள்வி: கூட்டுச் சேரா கொள்கைப் பற்றி இந்திரா குறிப்பிட்டிருந்தாரா?

பதில்: அவருடைய கடித்தத்தின் முதல் வாசகமே அந்தச் சொல்லிலிருந்துதான் துவங்குகிறது.

கேள்வி: அமெரிக்காவில் வியட்நாம் பற்றிக் கேட்பார்களே!

பதில்: அமெரிக்காவிலேயே வியட்சாம் பிரச்சினை இருப்பதாக உணரப்படுகிறது. இந்தப் பிரச்சினை பற்றி இந்திய அரசு கருத்துத் தெரிவிக்கிறது. வியட்நாம் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கூடாது என்பது நம் கருத்து. அமெரிக்கக் குடியரசுத் தலைவரே அமைதிப் பேச்சுகளைத் துவங்க முன்முயற்சி எடுத்துவருகிறார். அமைதிப் பேச்சவார்த்தைகளுக்கான முன்முயற்சியை அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஜான்சன் மேற்கொண்டுள்ள தருணத்தில், நாம் அமெரிக்கா செல்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: தாங்கள் வெளிநாட்டில் இருக்கும்பொழுது, இங்கு தற்காலிக முதலமைச்சர் என்று யாரையாவது அமர்த்தி இருக்கிறீர்களா?

பதில்: அப்படி ஏதும் இல்லை. ஆனால் அதற்குப்பதிலாக எங்களுக்குள் சில மரபுகள் இருக்கின்றன. அவற்றின்படி நடப்போம்.

கேள்வி: தாங்கள் அமெரிக்காவிற்கு என்னென்ன பரிசுப்பொருள் கொண்டு செல்கிறீர்கள்?

பதில்: ஆங்கிலத் திருக்குறள், தொல்காப்பியம், கருணாநிதி எழுதிய சிலப்பதிகாரம், வேலைப்பாடுமிக்க மரப்பொருள்கள், காஞ்சிபுரம் பட்டுக் கைக்குட்டைகள், நாகரிகப் பாணியில் தலையை மூடும் சிறிய குட்டைகள் இவற்றை கொண்டுசெல்கிறேன்.

பதில்: திண்ணமாக நம் நாட்டின் பெருமையை, சிறப்பை உயர்த்தும முறையில்தான் நடந்துகொள்வேன்.

கேள்வி: வெளிநாட்டுக்கு தாங்கள் எந்த உடையில் செல்வீர்கள்?

பதில்: சாதாரண உடையில்தான். சில மாநிலங்களில் குளிர் இருப்பதால் வெப்பந்தரும் உடைகளைக் கொண்டு செல்கிறேன்.

கேள்வி: தாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்புகிறீர்கள். அதை எப்படி வெளிநாட்டில் விளக்குவீர்கள்?

பதில்: மொழிப் பிரச்சினை கருத்து வேற்றுமைக்குரியது. அதை விளக்க வேண்டிவந்தாலும், நம் நாட்டின் உயர்விற்கு உட்பட்ட எல்லையில் அதை விளக்குவேன்.

ஒரு கூட்டாட்சி அமைப்பு காண நாங்கள் உழைத்துவருகிறோம் என்பதையும் கடந்த 20 ஆண்டுகளாக நம் பட்டறிவில் சில மாறுதல்களின் தேவை உணரப்பட்டுள்ளது என்பது பற்றியும் நான் அமெரிக்கர்களுக்கு எடுத்துக் கூறுவேன். மைய அரசு மாநில அரசுக்கும் இடையே நிதி மற்றும் அதிகாரம் ஆகியவற்றில் உள்ள பங்கு பற்றியும் நான் விளக்க இருக்கிறேன்.

என் கட்சி வரலாறு பற்றி அவர்கள் கேட்டால் நான் என் கட்சிப் பிரிவினை பற்றிப் பேசியதையும் அந்தப் பிரச்சினையைக் கைவிட்டு விட்டதையும் அதன் பிறகு ஒற்றுமைக்காகப் பாடுபடுவதையும் அந்த ஒற்றுமை வலுப்படுவதற்குச் சில கருத்தேற்றங்களையும் எடுத்துரைப்பேன்.

கேள்வி: மதுரையில் தமிழர் படை அமைத்திருக்றார்கள் என்ற செய்தி வந்திருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: அதன் முழு விவரம் எனக்குத் தெரியாது. அது ஒரு தொண்டர் படை, சேனைப்படை என்பதெல்லாம் அந்தப் பொருள் தருவதால். சாந்தி சேனை என்று கூட வினோபாவேவைச் சார்ந்தவர்கள் அமைத்திருக்கிறார்கள். மேலும், இது உள்ளூர்ப் பிரச்சினை. அரசியல் செயல் முறையோ கட்சிச் செயல்முறையோ இதில் ஏதுமில்லை. கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை. அந்த அமைப்பு தவறான வழியில் போனால், உறுதியாக அதைத் தடுத்து நிறுத்துவேன். ஏனெனில், அதில் ஈடுபட்டவர் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

இந்தப் படை அமைப்பிற்கும் மாணவர் நடவடிக்கைக்கும் ஏதும் தொடர்பில்லை. அப்படி ஏதாவது தவறாக நடக்குமென்றால் அந்த அமைப்பைக் கலைக்க ஆணையிடுவேன். திமுகவோ இந்த அரசாங்கமோ இதுபோன்ற அமைப்பின் தயவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. தேவையுமில்லை.

கேள்வி: அண்மையில் நடந்த சென்னை நிகழ்ச்சிகளுக்கு நான் அதிகாரத்தில் இருந்தால் உயர்நீதிபதியை விசாரிக்கும்படி உத்தரவிட்டிருப்பேன் என்று சுப்பிரமணியம் பேசி இருக்கிறாரே?

பதில்: திருப்பி அவரை நான் கேட்கிறேன், அவர் அதிகாரத்தில் இருந்தபோது முதுகுளத்தூர் கலவரம் பற்றி விசாரிக்க யாரை நியமித்தார்? சென்னை துறைமுகத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது யாரை நியமித்தார்? அண்ணாமலை நகரில் மாணவன் சுடப்பட்டபோது யாரை நியமித்தார்? தில்லியில் சாமியார்கள் கலகம் நடந்து காமராசர் வீடு எரிக்கப்பட்டபோது எப்படிப் பட்ட நீதி விசாரணை நடந்தது? சுப்பிரமணியம் அதிகாரத்திலிருந்தபோது அருமையான சந்தர்பங்கள் கிடைத்தபோது அவர் என்ன செய்தார்?

இராஜாஜி அவர்கள் கூட நான் விஷயத்தை எடுத்து விளக்கியபின், இப்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுபற்றி முழு மனநிறைவு தெரிவித்திருக்கிறார்.

நான் அந்த நிகழ்ச்சிகள் நடந்தபின் பேசாமலிருந்தால, நீதிவிசாரனை தேவை என்று கோரியிருப்பார்கள். அதுபற்றி எந்தக் கோரிக்கையும் வருவதற்கு முன்பே நானாகவே நீதிவிசாரனை பற்றி அறிவித்ததால், ஏன் உயர்நீதி மன்ற நீதிபதியை நியமிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டேன். நான் ஒரு மாத காலம் வெளிநாட்டில் இருக்கும்பொழுது என் அமைசரவையிலுள்ள தோழர்கள் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்துவதாக எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் திறமையில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

நான் வெளிநாட்டில் இருக்கும்பொழுது இங்கு எப்போதும் போல் நல்ல முறையில் விவகாரங்கள் நடந்து வரும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தோழர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தோழர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பான வேண்டுகோள் ஒன்று பத்திரிகையாளர்களுக்கு விடுக்கிறேன். என் வெளிநாட்டுப் பயணத்தின்போது என் தோழர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பத்திரியாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என் அமைச்சரவைத் தோழர்கள் மீதுள்ள நம்பிக்கையின் பேரில்தான் நான் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்.

நான் வெளிநாடு சென்றாலும் என் அமைச்சரவைத் தோழர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பேன்

(1968 ஏப்ரல் 15 முதல் மே 15 வரை அண்ணா அவர்கள் ஒரு மாத கால அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் 15.04.1968 அன்று சென்னையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் முழுச் செய்தியின் விளக்கம்)