அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
7
               

ஆலாலசுந்தரர் அழுத்தமான பேர்வழி என்பதும், அவரிடம் அரைக்காசு வாங்குவது மற்றவர்களிடம் அரைரூபாய் வாங்குவதற்குச் சமானம் என்பதும், குருக்கள் குமரகுருபரருக்குத் தெரியும். குருக்களிடம் சற்று குளுகுளுவென ஆலாலசுந்தரர் பேசுவதே, தேவியின் கடாட்சத்தால்தான் என்பதையும் ஐயர் அறிவார். ஒரே ஒரு தேவியா? இரண்டு தேவிகள்; கோயிலிலே ஒன்று. மற்றொரு தேவி தமயந்தி! இரண்டுக்கும், ஆலாலசுந்தரரைப் பக்தராக்கி வைத்த பெருமை, குருக்கள் குமரகுருபரருக்கே உண்டு. கோயிலிலே, அவர் அனுசரிக்கும் பூஜா முறையே அலாதி. “இன்று அவசியம் அம்பாள் தரிசனத்துக்கு வரவேண்டும்’ என்று யாராவது ஒரு சீமானுக்குக் கூறுவாரானால், அன்று, தமயந்தி, தங்கையுடன் கோயிலுக்கு வருவாள் என்பது உட்பொருள்! அதிகமாகக் கோயில் பக்கம் வராத பேர்வழிகளைக் கூடப் பக்குவமாக இழுப்பார். “என்னா, நாயுடுகார்! கோயில் பக்கமே தலைகாட்டுவதே இல்லையே” என்று கேட்பார். மரியாதையை உத்தேசித்து, அந்த நாயுடு, “வேலை தொந்தரவுதான்” என்று பதில் கூறுவார். “என்ன சார் வேலை. பிரமாதமான வேலை! ஜட்ஜு ஜகன்னாதநாயுடு, ஒருநாள் கூடத் தவறுவதில்லை. சாயரட்சை ஆறு ஆக வேண்டியதுதான், ஜட்ஜு பிரசன்னமாவார். அவருக்கு வேலை இல்லையோ? பகவத் கைங்காரியத்துக்காக ஒரு நாளிலே, ஒரு அரைமணி நேரம் செலவிடப்படாதோ?” என்று ஐயர் சொல்வார். தேவிக்காகப் போகாவிட்டாலும், ஜட்ஜு ஜெகன்னாத நாயுடுவைப் பார்க்கவாவது போவோம்; கோயிலிலே பார்த்துப் பேசிப் பழக்கமானால், அவருடைய மகனுக்கு நமது மகளைக் கலியாணம் செய்துவிட ஒரு ஏற்பாடும் செய்து கொள்ளலாம் என்று நாயுடு நினைப்பார். கோயிலுக்கு வரத் தொடங்குவார். விஷயத்தை மெள்ளத் தெரிந்து கொண்டால் ஐயர் சும்மா இருப்பாரோ? “தேவி பூஜை வீண் போகுமோ? நாயுடுகார்! விஷயம் தெரியுமோ? உம்ம குழந்தை இருக்கே வரலட்சுமி, அதைத் தன் மகனுக்கு ஏற்பாடு செய்யணும்னு ஜட்ஜுக்கு ஒரு அபிப்பிராயம் உதிச்சிருக்கு போலிருக்கு” என்று ஆரம்பிப்பார். அவ்வளவுதான், நாயுடு, ஐயர் வேண்டாமென்றால் கூடக் கோயிலுக்குப் போவதை விட மாட்டார். அம்பாளிடமிருக்கும் பக்தியை விட குருக்களிடம் அதிக பக்தி கொள்வார். “சாமி, ஏமண்டி, விசேஷமுந்தோ?” என்று கேட்பார். ‘லேகுண்ட போனா’ என்று குருக்கள் பதில் கூறுவார். வேறு இடத்திலே ஜட்ஜு மகனுக்குப் பெண் நிச்சயமாகிற வரையிலே!

“ஏண்டாப்பா, சதாசிவனல்லே நீ! சிறு வயதிலே பார்த்து” என்று முகவுரை போடுவார். வாலிபனாக இருந்து, கோயில் பக்கம் வராதிருக்கும் பேர்வழியிடம், “ஆமாம்” என்று சுருக்க மாகப் பதில் கூறுவார் வாலிபர். “நேத்து கோயிலுக்கு நீதானே ருக்குவுடன் வந்தே” என்று கேள்வி பிறக்கும் குருக்களிட

மிருந்து “ருக்குவா?” என்று கேள்வியிலேயே முக்கியமான பாகத்தை எடுத்துக் கொண்டு, வாலிபர் விசாரிக்க தொடங்குவார். “மேல வீதி ருக்கு, சுருட்டை மயிர்க்காரி, எப்போ பார்த்தாலும் சிரிச்சிண்டே பேசுவாளே, அடே, இந்த ரேடியோவில் கூடப் பாடுவாளே கமலம் மக ருக்கு, அவளோடு நீ வந்தாயோ நேத்து?” என்று கேட்கும் கேள்வியிலேயே ருக்குவை ஐயர் வர்ணித்து விடுவார். ருக்குவின் ரூபலாவண்யத்தைக் கேட்டு மகிழ்ந்த வாலிபர், “நான் வரவில்லையே, எனக்கு அவளைத் தெரியாதே” என்று பதில் கூறுவார். அன்று மாலை முதல் வாலிபர் கோயிலுக்கு ஆஜர்; தெரிசனத்துக்கா? ருக்குவைக் காண. அவளுக்கோ பாவம், செண்டும் புஷ்பமும், பவுடரும் ஜவ்வாதும் சிரிப்பும் கண் ஓட்டமும் அதிகமாகும். அதுமட்டுமா? ஐயருக்கும் குஷி! “என்ன ருக்கு! இன்னிக்கு பலே ஜோரா இருக்கே! ஆசாமியை வலையிலே போட்டுடுவே போலிருக்கே” என்று ருக்குவைக் குருக்கள் கேலி செய்வார். “உங்க ஆசீர்வாதம இருக்கணும்” என்று அமரிக்கையுடன், ஆனால் ஆழ்ந்த கருத்துடன் பதிலுரைப்பாள். அன்று ஐயரின் அர்ச்சனையில் ஐந்தாறு இராக ஆலாபனமாவது இருக்கும். மகிழ்ச்சியினால்!

இந்தத் திறமை குமரகுருபரருக்கு இருந்ததால் தான் பாரோரை உய்விக்க ஏடெழுதத் தொடங்கிய பார்த்திபனையே, ஜெயத்துடன் சரசமாட வைக்க முடிந்தது. சிற்றின்பத்துக்காக ஜெயத்தை நாடுவதாக ஊரார் குறை கூற முடியாது. நான் அவளுடைய நடனத்தைக் காண அங்கே செல்கிறேன். வேறு கேளிக்கைக்காகவா? என்று சாக்குக் கூற ஆசிரியரால் முடிந்தது. கலாநிலையங்கள் ஏற்படுத்துவதும் நகர மணடபங்களிலே நாட்டிய விழாக்கள் நடத்துவதும் ஜெயாவின் விதவிதமான புகைப்படங்களை பத்திரிகைகளிலே வெளியிடுவதும், கீழ்நாட்டு நடனக் கலைக்கும் மேனாட்டு டான்சுக்கும் உள்ள தார தம்மியங்களைப் பற்றி தர்க்க வகுப்புகள் நடத்துவதும் பார்த்திபனின் முக்கிய பணியாவது கண்ட குருக்கள், “அடடா! பயல் எவ்வளவு இலகுவாக இருக்கிறான். இவன் வேறு யாரிடமாவது சிக்கிவிட்டால் ஆபத்தாகி விடுமே. ஆட்டு விக்கிறபடி ஆடுபவன் வேறு நாட்டியக்காரியிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே” என்று கவலைப்பட்டார். காசு தாராளமாகக் கிடைக்கும வரையிலே, நமக்கு வீண் கவலை ஏன் என்று தமயந்தி கூறின பேச்சு குருக்களுக்குக் கோபமூட்டிற்று. “உலகமறியாது உளறுகிறாள். வசீகரமான உருவந்தானே? வகை ஏது அவளுக்கு?” என்று மனத்திற்குள் எண்ணுவார்.

இங்ஙனம் குருக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் கலாரசிகர், கனகசபேசர், பார்த்திபனுடைய கலை ஞானத்தையும் ரசிகத் தன்மையையும் பாராட்டிப் பண்பாட்டின் அருமை அறியா ஆலாலசுந்தரரை இகழ்ந்துரைத்து விட்டுப் பார்த்திபனிடம் தொடர்பு கொள்ளலானார். உண்மையிலே, பார்த்திபனின் உள்ளத்திலே ஜெயாவின் லாவண்யமும் லலிதமும், சரசமும் சிரிப்பும் பதிந்திருந்ததேயன்றி, இடை வளைவும் கடைவிழிக் குழைவுமல்ல! கனக சபேசரோ இதைக் கண்டறியவில்லை. கலை கலை என்று கூவினார். அதைப் பாதுகாக்க இதோ, கிளம்பிவிட்டார் மாபெரும் வீரர் என்று மார் தட்டினார். பழைய ஏடுகளிலே உள்ள பாடல்களுக்குப் பொருள் கண்டு பிடித்துக் கூறினார். நாட்டியக்கலைக்கு ஒரு புதிய நூல் தொகுப்பேன் என்று சூள் உரைத்தார். நடராஜ உருவம் நானில மெங்கும் விளங்கிட வேண்டி குருக்களுக்குத் திகில் உண்டாக்க வில்லை. சேரநாட்டுச் சேல்விழியாரின் நடனக் கலையே அபூர்வமானது. அலாதியான அனந்தம் தரவல்லது. அங்கே சென்று மலையாள மங்கையரின் நடனத்தைக் கண்டு வர வேண்டுமென்று, பார்த்திபனைக் கனகசபேசர் தூண்டினார்.

குருக்கள் பயந்தார். பதைத்தார். ஜெயத்தை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார். பரதநாட்டியத்துக்குக் ‘கதகளி’ ஈடாகாது என்று வாதாடிப் பார்த்தார். பலிக்கவில்லை.

கலையிலே அதிக ஆர்வங்கொண்ட சபேசர், கதகளியின் மேன்மையை வர்ணித்ததிலிருந்து கேரளக் கன்னியரிடம் பார்த்திபனுக்குத் தனியான பாசம் பிறந்தது. “பொன் உருக்கு மேனி, பூவைப் பழிக்கும் விழியினர், கொவ்வை இதழினர், குயில் மொழியினர், கோமள வல்லிகளின் நடையே நடனம்! அவர்களின் இடையோ ஆண்டவனுக்குச் சமானம். உண்டோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டிய சிற்றிடை!! ஆசிரியரே தங்களின் கலைஞானம் பரிபூரணமாக வேண்டுமானால், மலையாளம் சென்று அவர்களின் நடனத்தைக் கண்டே தீர வேண்டும். அந்த நாட்டின் எழிலை என்னென்பேன்! தென்றல் கமழும் நாடு! சிங்காரச் சிற்றாறுகளும் அலங்கார அருவிகளும் உள்ள மண்டலம்! கிள்ளை மொழிக் குமரிகளின் கீதம், வானுலகம் எனக்கு வேண்டாம் என்று எவரையும் கூறிடச் செய்யும்! வீடுகள் தோட்டத்தின் நடுவே! ஒருபுறம் ஓடை! மற்றோர்புறம் கனிதரும் மரங்கள்! இடையே அந்தக் கன்னிகா ரத்தினங்கள். ‘சேரநாட்டு இளமங்கையர்’ என்று செந்தமிழில் பாரதியார் செப்பியது வீணோ? பார்த்திபா! பார்த்தால் மறக்கமாட்டீர். பாராவிடில் உமது கலாஞானம் பூர்த்தியாகாது” என்று கனகசபேசர் கிளறி விட்டார். குருக்களின் பெருமூச்சும், ஜெயாவின் கண்ணீரும் வழியனுப்பக் கனகசபேசரும் புத்தகக் கட்டும், காமிராவும் உடன்வர, “ரட்சகன்” ஆசிரியர் கலா சேவைக்காகக் கதகளியின் விசேடத்தைக் கண்டறியக் கேரளம் சென்றார். இரயிலடியிலே கலாரசிகர்கள் அவருக்கு மாலை சூட்டி, உபசரித்தனர்.

உத்தமியுடன் வாழ்ந்து வந்த பார்வதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “பார்வதி! கலை கலை என்று சிலர் கூறுவது, வெறும் வலை. பாமரரைத் தூங்க வைக்கும் சதி” என்று கூறிய பார்த்திபன், “மக்களின் வாழ்வு துலங்க வேண்டுமானால், மாஸ்கோ சென்று அறிவைத் தேடிப்பெற்று வந்து இங்க அதனைப் பரப்ப வேண்டும்” என்று பேசிய பார்த்திபன். “சீமான்களின் சொகுசுக்குச் சுந்தரிகளைப் பலியிடும் சூழ்ச்சியே நாட்டியக்கலை” என்று பேசிய பார்த்திபன், கதகளியின் விசேஷத்தைக் காண, கேரளம் செல்கிறான், என்ற செய்தி பார்வதிக்குக் சிரிப்பை உண்டாக்காமலா இருக்கும். “ஒழியட்டும் மக்களைப் பாழ்படுத்தச் சமதர்மவாதி என்று முகமூடியணிந்து கொண்டு திரிவதைவிட, இப்படிக் கலை என்று கூறிக் காலங்கழித்து விடட்டும்; சமுதாயத்திற்குக் கேடு அதிகமாகப் பெரிய சந்தர்ப்பமிராது” என்று பார்வதி கருதினாள். உத்தமியிடம் கூறவோ, அவளுக்குப் பிரியமில்லை.

இந்த வாதங்களைக் கேட்கவோ, உத்தமிக்கு நேரமில்லை. அவள் ‘காதல்’ நோயால் திடீரென்று தாக்கப்பட்டாள். அதன் பயனாக ஆரியசமாஜத்தின் சட்டதிட்டங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் உத்தமி ஆராயலானாள். உத்தமியின் காதல் நோய்க்கும், ஆரிய சமாஜத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற ஐயமே எவருக்கும் பிறக்கும். காதலுக்கும் கருத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டல்லவா? உத்தமியின் காதலுக்கு உறைவிட மானவன் ஆரியசமாஜத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். அதனாலேயே, உத்தமிக்கு அந்தச் சமாஜத்திடம் அக்கறை ஏற்பட வேண்டியதாயிற்று.

அன்று - அதாவது உத்தமி முதல் முதலாக நரசிம்மனை சந்தித்த நாள் - கடற்கரையிலே வழக்கமாகக் கூடும் அளவு ஜனங்கள் இல்லை. ரேடியோ சுகமாக இல்லை. சினிமாக்களிலே நல்ல படங்கள். ஆகவே கூட்டம் கடற்கரையிலே குறைவு. நங்கையரின் நயனாபிஷேகத்தைப் பெற வேண்டுமென்ற நாட்டத்தோடு வரும் வாலிபர்கள் மட்டும் வழக்கம்போல் கடற்கரையிலே வந்தனர். நரசிம்மன், அங்ஙனமே இரைதேடி வந்தவன். இளமையும் இயற்கை அழகும் பொருந்திய உத்தமியைக் கண்டான். வெண்மணலைக் குவித்தும் கலைத்தும் சாய்ந்தும் நடந்தும் மெல்லிய குரலிலே பாடியும் மேலோங்கி மீண்டுமடங்கும் அலையைக் கண்டும் பொழுது போக்கிக் கொண்டிருந்த உத்தமி மீது வலைவீசத் தீர்மானித்து விட்டான் நரசிம்மன். அதற்கேற்ற பருவம் அவனுக்கு. பயிற்சியும் உடையவன். நாகரிக உடை, நகையுடன் சேர்ந்த பேச்சு, நயனபாஷை கற்றவன்; சுருங்கக் கூறின் மனதை அடக்கத் தெரியாத மங்கையருக்கு நரசிம்மன் ஒரு நோய்! தொத்திக் கொள்வான்!

உத்தமியும் பார்வதியைப் போலவே தாய்தந்தையற்றவள்; பாதிரிமார் தயவால் படித்து ஆசிரியையானவள். ஏசுவின் விசுவாசி; ஞாயிறுதோறும் சென்று பரமண்டலத்திலுள்ள பிதாவை வேண்டிக் கொள்பவள். மற்ற நாட்களிலே நாவல் பைத்தியம் அந்த நங்கைக்கு! புலி பூவையைத் துரத்த, புலியைக் கொன்று பூம்பாவையை அணைத்துக் கொண்ட காதலன்; நீர் பருகச் சுனை சென்று கால் வழுக்கி அதிலே வீழ்ந்த கன்னியை, வீரன் காப்பாற்றி, கட்டியணைத்து முத்தமிட்டுக் ‘காதலீ! கனிரசமே, கற்கண்டே, தேனே! என்று கொஞ்சிய காதலன்; தந்தையின் கொடுவாளுக்கு அஞ்சாது, சுவரைத் தாண்டிக் குதித்து கந்தரிக்கு காதல் சுகந்த மலரைப் பரிசளித்த காதலன் என்னும் இன்னோரன்ன பிற காதலர்களின் கதைகளைப் படித்துப் படித்துப் போதை கொண்டவள் உத்தமி. எனவே சரியான வேட்டைக்காரனிடம் பெருத்த மான் சிக்கிக் கொண்டது. நரசிம்மன் வீசிய வலையிலே உத்தமி வெகு எளிதில் வீழ்ந்தாள்.

ஒருவரை ஒருவர் பார்த்ததும், உத்தமி மறுபடியும் ஒரு வாலிபனைப் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்துடனேயே, தலையைக் கவிழ்ந்த வண்ணம் புத்தக்கத்தைப் பிரித்து அதிலே விழியைச் செலுத்தினாள். அவனே பின்புறமாக வந்து நின்றான். கைக்குட்டை தவறி விழுந்துவிட்டது! அதை எடுக்கும் பாவனையாக உத்தமியின் விழியை அணைத்துக் கொண்ட புத்தகம் எதுவெனப் பார்த்தான். சிரித்தான்! உத்தமி வெட்கத் துடன் அவன் பக்கம் திரும்பினாள். தனியாக ஒரு மங்கை இருக்கையிலே சிரிப்பதா? என்று சற்றுக் கண்டிப்பாகக் கேட்க வேண்டுமென்றுதான் உத்தமி எண்ணினாள். ஆனால் அவனுடைய சிரிப்பு, முகத்திற்கே புதிய பொலிவை உண்டாக்குவது கண்டு அதை ரசிக்கலானாள்.

“புத்தகத்தைத் தலைகீழாக வைத்துக் கொண்டு எப்படிப் படிக்கிறீர்கள்?” என்று சிரிப்புடன் கேட்டான் நரசிம்மன். அவன் கேட்டபிறகே, புத்தகம் தலைகீழாக இருந்தது உத்தமிக்கு தெரிந்தது. வெட்கம், சிரிப்பு இரண்டும் உத்தமிக்கு! “எவ்வளவு கெட்டிக்காரன்! என் குட்டு வெளிப்பட்டுவிட்டதே” என்று உத்தமி எண்ணினாள்.

அவளுடைய மௌனம் புன்னகையுடன் இருப்பது கண்ட நரசிம்மன், “நான் இங்கு இருப்பது தங்களுடைய படிப்பிற்கு இடையூறாக இருக்குமானால் நான் போகிறேன். பழக்கமில்லாத தங்களிடம் நான் பேசியதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். பேச வேண்டிய அவசியம் நேரிட்டதால் பேசினேன். அதாவது தாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலே நான் அரை மணி நேரத்திற்கு முன்பு உட்கார்ந்திருந்தேன். அப்போது என்னுடைய பேனா தவறிவிட்டது. அதைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்” என்று நரசிம்மன் கூறினான். “அப்படியா? எங்கே தவறிவிட்டது? இங்கா?” என்று கேட்டபடி உத்தமி எழுந்தாள். நரசிம்மனும் அவளுமாகக் காணாமற்போன பேனாவைத் தேடிப் பார்த்தனர். பழியை ஏற்றுக் கொண்ட பேனா, பத்திரமாக நரசிம்மனுடைய மேஜையிலே கிடந்தது. தன்பொருட்டு ஒரு வாலிபனும் வனிதையும் கடற்கரை மணலைக் கையில் கிளறிக் கொண்டிருப்பது பேனாவுக்கு என்ன தெரியும்!

“நல்ல பேனா! பார்க்கர்!” என்று நரசிம்மன் கூறினான்.

“ஐயோ பாவமே! நான் வருவதற்கு முன்பு வேறு யாரேனும், வந்திருக்கக் கூடும். அவர்களிடம் பேனா சிக்கி விட்டிருக்கும்” என்று உத்தமி கூறிவிட்டு, “என்னிடம் இருப்பது “ஸ்வான்” என்று உத்தமி கூறிப் பேனாவைக் காட்டினாள். நரசிம்மனுக்கு அந்தச் சமயத்தை இழக்க மனம் வருமா? பேனாவை எடுத்துக்காட்டிய உத்தமியின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “நான் என்ன விஷய மறியாதவனா? தங்களை நான் சந்தேகிப்பேனோ என்று எண்ணிப் பேனாவைக் காட்டுகிறீர்களே, இது சரியா? பத்தாயிரம் பேனாவை இழந்தாலும் நான், தங்கள் போன்றோரைச் சந்தேகிக்க மாட்டேன். தயவு செய்து தப்பெண்ணத்தை விடுங்கள்” என்று பேசினான். “தயவு செய்து என் கரத்தை விடுங்கள்” என்று உத்தமி கூறவில்லை. அவள் விழி அதைத்தான் கூறிற்று. நரசிம்மனும் முரடனல்ல. பக்குவமாகக் கையாள வேண்டிய பண்டம் என்று தீர்மானித்து உத்தமியின் கரத்தை விட்டு விட்டான்.

யோசனையில் அடிக்கடி ஈடுபட்டார்.