அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


பார்வதி பி.ஏ.
16
               

மிக்க மமதையோடு சிரித்துக் கொண்டிருந்த பார்த்திபனை வீழ்த்தும் வழியைக் கண்டாக வேண்டும் என்ற திட சித்தத்தோடு லலிதகுமாரியும் பார்வதியும் வீடு திரும்பினர். பார்வதி மிகவும் அலுத்துக் கிடந்தாள்; குமாரின் நிலைமையைத் தெரிந்துக் கொள்ள முடியாமற் போய்விட்ட கவலையினால் வாடிய பார்வதிக்கு ஆறுதல் கூற முயன்றான் லலிதா.

“லலீ! அவன் ஒரு மாயாவி! கடிதத்திலே இருந்த எழுத்துக் கள் மறைந்து போகும்படி செய்துவிட்டான். பார்த்தாயா? ஒரு நொடியில் ஏய்த்துவிட்டானே?” என்று ஆயாசத்தோடு கூறினாள் பார்வதி.

லலிதகுமாரி, “இது பெரிய மாயமுமல்ல. மந்திரமுமல்ல. பார்வதி! நான் படித்ததுண்டு. ஒரு விதமான மை இருக்கிறது. அதனால் எழுதினால் சில நாட்களுக்குள் மறைந்து விடும். ஜெயா எழுதிய கடிதம் அம்மாதிரியான மையினால் எழுதப் பட்டது. அவ்வளவுதான்!” என்று விளக்கமுரைத்தாள்.

விசாரம் நீங்கவில்லை பார்வதிக்கு. “அப்படிப்பட்ட மையினால் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பது பார்த்தி பனுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் பார்வதி. “ஏன்? கடிதத்தைக் கண்டதும் தெரிந்து கொண்டிருப்பான். அவனே ஜெயாவுக்கு அந்த இரகசிய இங்கியைத் தந்துமிருப்பான். ஆகவே அதன் மர்மம் தெரிந்து விட்டது. எனக்கு அந்தக் கடிதத்தின் எழுத்து மறைந்து விட்டது அதிசயமாகத் தெரியவில்லை. சரியான சமயத்திலே அது மறைந்து விட்டதே. அதுதான் எனக்கு அதிசயமாக இருக்கிறது” என்று கூறினாள் லலிதா.

“ஆமாம்! கடிதம் ஓடிவிட்டது என்று கூறினான். கடிதம் இதோ என்று நான் கூறுகிறேன். கடிதம் வெறும் காகிதமாக இருக்கிறது. இது மாயமாக இல்லையா?” என்று கூறிக் கொண்டே, “எங்கே அந்த மாயக் கடிதம்?” என்று லலிதாவைக் கேட்க, தன் மணிப்பர்சிலே மடித்து வைத்திருந்த கடிதத்தைக் எடுத்துக் கொடுத்தாள். கடிதத்தைக் கைநீட்டி வாங்கியதும் பார்வதி மீண்டும் ஆச்சரியத்தால் கூவினாள், ஏன்? கடிதத்திலே எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன.

“லலீ! இந்த அதிசயத்தை பார்! காலியாக இருந்ததே, இதோ ஒரு எழுத்து விடாமல் சகலமும் தெரிகிறது பார்! இதென்ன வேடிக்கை!” என்று பார்வதி ஆச்சரியத்தோடு கேட்டாள். லலிதகுமாரியும் கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள். சில நிமிஷங்கள் வரையிலே இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “மகாபுத்திசாலி போல இரகசிய இங்கியினால் எழுதப்பட்டது. மறைந்துவிட்டது என்று சொன்னாயே. இது என்ன பார்த்தாயா? அங்கே வெறும் காகிதமாக இருந்தது. இங்கே பழைய காகிதமாக இருக்கிறது. இப்போது என்ன சொல்கிறாய்? லலி, அவன் பெரிய மந்திரக்காரன். மாயாஜாலத் தாலேதான் என் குமாரை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறான். எனக்கு முன்பு இருந்ததைவிடப் பயம் அதிகமாகி விட்டது. என்ன செய்வேன்?” என்று பார்வதி பயந்து பேசினான்.

லலிதகுமாரி யோசித்தாள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பார்வதியைப் பார்த்து, “பார்வதி மனோவசியம் என்று கூறுவார்களே. இப்னாடிசம், மெஸ்மெரிசம் என்று, அது தெரிந்திருக்கிறது அந்தத் துஷ்டனுக்கு. சில விநாடிகள் இப்னாடிசம் தெரிந்தவர்கள், மற்றவர்கள் மனத்தைக் கட்டுப் படுத்த முடியும். அந்த இப்னாடிசத்தினாலேதான் பார்த்திபன் நம் இருவரையும் மயக்கிக் கடிதத்தை வெறும் காகிதமாக இருப்பதாக நம்பச் செய்தான். இப்னாடிசம் தெரிந்தவன் என்பதிலே சந்தேகமில்லை. அது தெரிந்தவர்களால் ஒருவரைச் சில விநாடிகள் அடிமைபோல ஆட்டிவைக்க முடியும். சிரி! சிரி! என்று கூறுவான் இப்னாடிசம் தெரிந்தவன். அதனால் மயக் குற்றவன் சிரிப்பான் காரணமின்றி. அதுபோல அழ வைக்க முடியும். தூங்கவைக்க முடியும். கசப்பு பொருளே இனிப்பு என்று கூறிடச் செய்ய முடியும். நான் பார்த்திருக்கிறேன் இப்னாடிசம் செய்பவர்களை” என்று கூறினாள்.

பார்வதிக்கு, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று. கடிதத்தின் மர்மம் துலங்கிவிட்டதும், பழையபடி குமார், வெடிகுண்டு என்ற சொற்களின் கவனம் பார்வதியைக் குடையத் தொடங்கிற்று. இருவரும் கூட நெடுநேரம் ஆலோசித்தனர். அந்தத் துஷ்டனுடன் போர் தொடுக்க என்ன முறைகளை அனுசரிக்க வேண்டும் என்பது பற்றி, பணம், செல்வாக்கு, ஆள், அம்பு, தந்திரம், இவ்வளவுடன் இப்னாடிசம் வேறு தெரிந்திருக் கிறது. அந்தத் திமிர் பிடித்த தன்னலக்காரனுக்கு. இரண்டு பெண்கள் கூடி அவனுடைய கொட்டத்தை அடக்க வேண்டும். குமாரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் சாமான்யமா? சுலபமா? ஏதேதோ யோசித்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விதத்திலே ஊனமுடையதாகத் தெரிந்தது. “ஒரு வேளை நான் அந்தச் சமயத்திலே வராது இருந்திருந்தால் உன்னிடம் ஆசை கொண்ட பார்த்திபன், குமார் விஷயத்தைக் கூறியிருக்கக் கூடும்” என்று கூறினாள். பார்வதியோ! “சேச்சே! அவனாவது இரகசியத்தைக் கூறுவதாவது! என்னையும் ஏய்த்து விடுவான். உன்னையும் ஏய்த்து விடுவான். அவ்வளவு சுலபத்திலே ஏமாறக் கூடியவனல்ல. பெண்கள் அவன் கைக்குப் பூச்செண்டுகள்! நீ அந்தச் சமயத்திலே அங்கு வந்து சேர்ந்ததே நல்லதாயிற்று” என்று கூறினாள்.

இருவரும் இங்ஙனம் யோசனையில் ஆழ்ந்திருக்க அதே சமயத்திலே பார்த்திபனும் ஆழ்ந்த யோசனையில்தான் ஈடுபட்டி ருந்தான்.

பார்வதி எவ்வளவு பசப்பினாள்? குமார் மீது அவளுக்கு அவ்வளவு காதல்! அவனுடைய நிலைமையைத் தெரிந்துக் கொள்ள, என்னைக் காதலிப்பது போலப் பாசாங்கு செய்தாள். முட்டாள்! அவளுடைய சாகசத்தைக் கண்டு நான் ஏமாறுவேன் என்று கருதினாள். அவளும் நடித்தாள். நானும் காதலால் கட்டுண்டவன் போல் நடித்துக் கொண்டிருக்கும்போது வந்து சேர்ந்தாள், வம்பு வளர்க்க அந்த வாலில்லாக் குரங்கு! ஜெயாவுக்குத் திமிர் பிடித்து ஆட்டுகிறது! அவளிடம் எவனோ என்னைப் பற்றி பேசி இருக்கிறான் என்று தெரிகிறது அவளை வேறு கவனித்துக் கொள்ள வேண்டும். கஷ்டம் வரத் தொடங்கினாலே இதுபோலத்தான். பல வரும். சரி, இந்தச் சமயத்திலேதான் கலக்கம் கூடாது. தைரியம் வேண்டும்.” என்றெல்லாம் எண்ணியபடி மேற்கொண்டு என்ன செய்வது என்பதுபற்றிப் பலவாறு யோசித்துப் பார்த்தான். சிகரெட்டுக்கு மேல் சிகரெட்டு செலவாகிக் கொண்டிருந்ததேயொழியத் திட்டம் ஏதும் தயாராகவில்லை.

எவ்வளவோ மூடுமந்திரமாக தான் செய்து வைத்திருக்கும் காரியத்தைச் சில பெண்கள் கூடிக் கொண்டு கெடுக்க முயலுவது பார்த்திபனுக்குக் கோபமூட்டிற்று. பார்வதி ஒரு பி.ஏ., லலிதகுமாரி ஒரு டாக்டர். இவர்கள் தன்னுடைய தந்திரத்தைத் தெரிந்து கொள்வதிலே அவ்வளவு ஆச்சரியம் இல்லை. ஜெயா கூட அல்லவா கிளம்பி விட்டாள் போருக்கு என்பதை எண்ணும் போது, பார்த்திபனுடைய கோபம் அதிகரித்தது. “துஷ்டப் பெண்ணைத் தொலைத்து விடுகிறேன். என்னிடமே காட்டுகிறாள். கைவரிசையை! தன்னைப் பெரிய அரம்பை என்று கருதிக் கொண்டிருக்கிறாள். இவளை நான் கைவிட்டு விட்டேனாம். இந்தக் கண்ணகிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டதாம். என்னை என் இரகசியததைக் கூறிவிடுவாளாம். அதிகாரிகளுக்கு, எவனென்று தெரியவில்லை. என்னைப் பற்றி அவளிடம் பேசியவன். ஒருவேளை என் ஆட்களிலேயே எவனாவது அதிருப்திபட்டு எனக்கு ஆபத்துத் தேடுகிறானோ? ஜெயாவைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் சேரம் அவளுடன் சிரித்து விளையாடினால், ‘செக்’ புத்தகத்திலே ஒரு ஆயிரம் எழுதினால் அவளுடைய கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஆனால் அவளுக்கு உளவு கூறியவன், ஜெயாவை நான் சரிப்படுத்திக் கொண்டதும், வேறே யாருடைய உதவியைத் தேடுவானோ? புதிய ஆபத்து வருமோ என்று யோசித்தான். ஒரு சமயம், இந்தத் துஷ்ட சிறுக்கிகள் அவனைக் காண நேரிட்டால்... என்று நினைத்துப் பார்த்தான். அது மகா ஆபத்தாக முடியும். அந்தச் சந்திப்பு மட்டும் நடைபெறக் கூடாது. அதை எப்படியாவது தடுக்க வேண்டுமே? என்று எண்ணியபடி வேடர்களின் குரல் கேட்ட வேங்கை புதரருகே கோபத்துடன் உலவி வாலைக் கீழே அடித்து உறுமிக் கொண்டிருப்பது போல ஒன்றிரண்டு வார்த்தைகளை வாய்
விட்டும் கூறிக் கொண்டே உலவினான். கடைசியில் குருக்கள், குமரகுருபரருக்கு, “உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தந்தி கொடுத்துவிட்டு, ஊரிலே வேறு ஜோலிகளைக் கவனிக்கலானான்.