அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
13
                     

அக்காவின் பேச்சைக் கேட்டு இளையபூபதி கடுங்கோபம் கொண்டதிலே ஆச்சரியப்படுவதற் கில்லை. ஏராளமான பணச்செலவு அவருக்கு; அந்தப் பக்கத்திலேயே, செல்வாக்கு யாருக்கு; அவருக்கா? அல்லது பழைய ஜமீன்தாரருக்கா? என்பதுதான், பேச்சாக இருந்தது; போட்டி பலம்; இந்த நிலையில், பழைய ஜமீன்தாரரின் செல்வாக்கைச் சிதைக்கக் கூடிய ஒரு ஏற்பாட்டுக்கு, என் அக்கா முட்டுக்கட்டைப் போட்டால் இளையபூபதிக்குக் கோபம் வராமலிருக்குமா! அக்காவின் போக்கு எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. எங்கள் குடும்பத்தைக் கெடுத்து, அக்காவின் வாழ்வையே பாழக்கின பழைய ஜமீன்தாரர்மீது எந்தவிதமான பழி சுமத்தினாலும் தகும்; அவருடைய மன நிம்மதியைக் கெடுக்க என்ன செய்தாலும் நல்லதுதானே. ஊரார் கேவலமாகப் பேசும் படி அக்காவின் நிலைமையைக் கெடுத்தவருக்கு இந்தச் சமயத்திலே, இழிவும், பழியும் ஏளனமும் எதிர்ப்பும் கிளம்பட்டுமே; அவர் எவ்வளவு பெரிய சீமானாக இருந்த போதிலும், அவருடைய மனதுக்கு வேதனைதர, எங்களாலும் முடியும் என்பதை அவர் உணரட்டுமே! அக்கா ஏன், இதைத் தடுக்க வேண்டும்! - என்று எண்ணினேன். உண்மையில் எனக்கும் கோபம் வந்தது. இளையபூபதி அதிகமாக ஒன்றும் பேசவில்லை. அவருடைய கோபம், பேசக் கூட முடியாதபடி அவரைச் செய்து விட்டது. கண்கள் சிவந்து விட்டன. இதேதடா புதிய ஆபத்து என்று நான் பயப்படத் தொடங்கினேன். விஷய மறியாமல் அக்கா, வீண் பிடிவாதம் செய்கிறாள். அவளுக்கு விளக்கமாகக் காரணங்களைக் கூறினால், சம்மதிப்பாள் என்று எண்ணி நான், நிலைமையைத் தெளிவுபடுத்தி,“அக்கா! பச்சாதாபப்படுகிறாயா அந்தப் பாவிக்கு! நமது குடும்பத்தை நாலாவழியிலும் கெடுத்தவருக்கு, உன் மனதிலே எள்ளளவும் கருணையும் கொள்ளாதே வம்புகள் எவ்வளவு! வழக்கு எவ்வளவு! ஊர்க்காலிகளை ஏவிவிட்டு நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தார். நமக்கென்று கொடுத்த நிலபுலத்தைக்கூட, கேஸ் ஜோடித்து அபகரித்துக் கொண்ட அந்த ஆசாமிக்குப் பாடம் கற்பிக்க இது சரியான தருணம். பைத்யக் காரத்தனமாக, பழைய பாசத்தை எண்ணிக் கொண்டு, பிடிவாதம் செய்யாதே” என்று கூறினேன். நான் விளக்கமாகக் கூறக்கூற, அக்காவின் கண்களிலே நீர் தாரைதாரையாக வந்ததே தவிர, எங்கள் ஏற்பாட்டுக்குக் சம்மதிப்பதாக ஒரு வார்த்தை வரவில்லை.

“பன்னிப்பன்னிக் கேட்கவேண்டாம் விமலா! முடியுமா முடியாதா? என்று ஒரே பேச்சாகக் கேட்டுவிடு, கடைசி முறையாக,” என்று இளையபூபதி கர்ஜித்தார். ஐயர் பேசினார். “ஜமீன்தார்வாள்! ஆயிரம தடவை கேட்டாலும் விமலா பத்தாயிரம் தடவை கெஞ்சினாலும், கமலா நமது ஏற்பாட்டுக்கு சம்மதிக்கவே மாட்டாள். என்ன இருந்தாலும் நாமெலல்õம் சாதாரண ‘மனுஷர்’ தானே! திரிபுரசுந்தரி சாட்சியாக, உமக்கு ஒரு கெடுதியும், துரோகமும் நான் செய்யமாட்டேன் என்று கோயிலிலே, சத்யம் செய்து கொடுத்திருக்காளே கமலா, எப்படி அதை மீறுவாள்” என்றார். நாங்கள் திகைத்துப் போனோம். இளையபூபதி, என்னய்யா இது, ஏதேதோ பேசுகிறாய்! - என்று சற்று எரிச்சலுடன் கேட்டார். அவளையே கேளுங்களேன் - என்று ஐயர் குறும்பாகக் கூறிவிட்டு ஜமீன்தார்வாளுக்கு, துரோகம் செய்கிறாள் இவள், என்பதை விளக்குவதற்குத்தான் இந்த நோட்டீஸ் போட வேண்டும் என்ற பேச்சை எடுத்தேனே தவிர, நாம் ஜெயமடைவதற்கு, இது தேவையுமில்லை என்று கூறிக் கொண்டே, நோடீசைக் கிழித்தெறிந்து விட்டு, “எனக்குச் சில தினங்களாகச் சந்தேகம்; நமது எலக்ஷன் இரகசியங்கள், எதிரிக்கு எப்படியோ தெரிந்து, அவன் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்றுப் போட்டுக் கொண்டே வருவதைக் கண்டேன், எப்படி யடா இங்கிருந்து விஷயம் வெளியே போகிறது என்று யோசித்தேன், யோசித்தேன் கொஞ்சத்திலே உண்மை துலங்க வில்லை. கடைசியில் கண்டுபிடித்தேன். கமலாவையே பழைய ஜெமீன்தார் இங்கு உளவாளியாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்தது. பழைய சினேகமல்லவா! மேலும், தங்கை இவ்வளவு நல்ல நிலைமையில் இருப்பதும், அவளுடைய தயவில் தான் வாழ்வதும் எப்படிப் பிடிக்கும்! இந்தக் காரியம் செய்து, பழையபடி ஜமீன்தாரரின் சினேகிதத்தைப் பெற்று, ஜொலிக்கலாம், என்று சபலம் தட்டி விட்டது. இலேசாக, விஷயம் எனக்கு எட்டிற்று. சரி, என்று ஒரு ஆளை இந்த விஷய மாகக் கவனிக்கும்படி, ஏற்பாடு செய்தேன் - பிறகுதான் முழு விவரமும், கமலா செய்கிற துரோகமும் தெரியவந்தது. நேற்று மாலை, திரிபுர சுந்தரி கோயிலில் ஜமீன்தாரரை இவள் சந்தித் திருக்கிறாள். பிரகாரத்தில் நின்று கொண்டு இருவரும் இதெல்லாம் நமது காலவித்யாசம் என்று கூறிக் கொண்டார்களாம். கடைசியில் திரிபுரசுந்தரி சாட்சியாக, நான் உங்களுக்கு கேடோ, துரோகமோ செய்வதில்லை என்று இந்தப் பத்தினி, அந்த உத்தமனுக்குச் சத்தியம் செய்து தந்தாளாம். இதைத் தெரிந்த பிறகே, இப்படி ஒரு நோட்டீஸ் போட வேண்டுமென்று கேட்போம், அப்போது இவளுடைய குட்டு தானாக வெளிப் பட்டுவிடுகிறது,பார்ப்போம் என்று ஒரு யுக்தி செய்தேன். நான் நினைத்தபடியே இருக்கிறது” என்று விஸ்தாரமாகக் கூறி முடித்தார். இளையபூபதிக்குக் கோபம் ஜுர வேகத்தில் ஏறிற்று. சகஜந்தானே. எனக்கும் கடுமையான கோபம். என் ஆத்திரத்தில் நான் கண்டபடி அக்காவைத் திட்டிவிட்டு, “யாருடைய தயவிலே இப்போது நீ ஒரு ‘மனுஷியாக’ வாழ்கிறாயோ, அவருக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறாய், உன் முகத்தில் விழிப்பதே பாபம். ரோஷ மானமிருந்தால், அரை க்ஷணம், இங்கு இருக்கலாமா நீ. நீதான் மானங்கெட்டு இங்கு இருந்தாலும், நான் எப்படி இருப்பேன்” என்று ஆவேசமாடினேன். அக்காவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. இப்போது எண்ணிக் கொண்டால் என் மனம் பதறுகிறது; ஆனால் அப்போது கண்ணீருக்குப் பதில் இரத்தமே வழிந்தாலும் சரி என்று எண்ணினேன்.

அக்கா அதிகமாகப் பேசவில்லை. “விமலா! என் வாழ்க்கையிலே, இப்படிப்பட்ட இடி விழுவது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு சமயமும், ஏதாவதொரு சந்தேகம் என் மீது எழுகிறது. நான் கள்ளி என்றும் துரோகி என்றும் தூற்றப்படுகிறேன். வீணான பழிகளைச் சுமந்து திரிகிறேன். பூமிக்குப் பாரமாய், ஊரே என்னைக் கேவலமாகப் பேசினபோதும், ஜமீன்தார் என்னைக் கொடுமை செய்தபோதும், என் மனம் இன்று அடைகிற அளவு வேதனை அடையவில்லை. உன் பேச்சுத்தான், என்னைச் சாகடிக்கும் கடைசி விஷச்சொட்டு, விமலா என் மீது பலமான பழியை ஐயர் சுமத்திவிட்டார். பாபம்! அவர்மீது தவறு இல்லை. அவருக்குக் கோபம் வந்ததும் சகஜம். என் மீது பழி தீர்த்துக் கொள்ளச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் - கிடைத்தது - ஜெயமடைந்தார். என் நேசத்தைப் பெறுவதற்கு அவர் செய்த முயற்சியில் ஜெயம் அடைந் திருந்தால், இப்போது அவர் என்னைக் கெடுக்க, இவ்வளவு பாடுபட வேண்டிய அவசியமே இராது” - என்று பேசிக் கொண்டே இருக்கையில், ஐயர் “சர்வேஸ்வரா! பெண்களுக்கு, இது சர்வசாதாரணமான ஆயுதமாகி விடுகிறதே, தங்கள் குற்றத்தை மறைக்க மகா சாமர்த்தியமாக, அவன் என்னைக் கெடுக்கப் பார்த்தான், நான் இணங்கவில்லை. ஆகவே என் மீது பழி சுமத்துகிறான் - என்று பேசிவிடுகிறார்கள். பெரும்பாலும் அறிவுத் தெளிவு இல்லாதவர் நம்பவும் செய்கிறார்! ஜமீன்தார்வாள்! எனக்குக் கிஞ்சித்தேனும், அந்த மாதிரி சபலம் உண்டானது கிடையாது. வீண் பழி, அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்” என்று சற்றுச் சோகமாகக் கூறினார். இளையபூபதி “இருக்கட்டுமே ஐயர், நீ, என்ன இவளை இச்சித்தால் தவறா! இவள் என்ன மகாராணியோ!” என்று வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில் பேசினார். இந்தப் பேச்சுக்கு ஒரு பதிலும் தராமலேயே அக்கா, தன் பேச்சைத் தொடங்கினாள்.

“விமலா! என் பழைய வாழ்வு பாழாகிவிட்ட பிறகு, உனக்கே தெரியும். நான் கூட்டம் அதிகம் சேருகிற கோயிலுக்குப் போவதில்லை என்பது. திரிபுரசுந்தரி கோயிலில் கூட்டம் வருவது கிடையாதல்லவா; அதனாலே தான் அங்கு சென்றேன் - நேற்று தற்செயலாகத்தான் ஜமீன்தாரரை அங்கு பார்த்தேன் - அவரும் அங்கு எலக்ஷன் சம்பந்தமாகக் கோயிலில் அர்ச்சகரைக் காணவே வந்திருந்தார். நாங்கள் பேசினது உண்மை. நான் அவருக்குக் கெடுதல் செய்வதில்லை, துரோகம் செய்வதில்லை என்று சத்தியம் செய்து தந்ததும் உண்மை. கோயில் அர்ச்சகர் எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவர் சொல்லித்தான் இவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும். ஆனால், நான் இளையபூபதிக்குத் துரோகம் செய்ய எண்ணினது மில்லை, இந்த எலக்ஷன் விஷயமாக, இங்கு நடைபெறும் எந்த ஏற்பாட்டையும் நான் கவனித்ததுமில்லை, நான் கஷ்டகாலத்தை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எனக்கு இதுதானாம்மா வேலை, எலக்ஷன் இரகசியத்தை உளவறிந்து வெளியே கூற, எப்படியோ ஐயருக்குச் சமயம் கிடைத்தது. உன் மனதிலே, என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டிருக்கிறாய் என்பது தெரிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. துரோகி என்று, எப்போது என் மீது உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதோ, இனி, இங்கு நான் இருக்கக் கூடாது. நீங்கள் நிம்மதியாக வாழ்வது, என்னால் கெடுவானேன். நான் போகிறேன் - உலகம் ரொம்பப் பெரியது அம்மா - அனாதைகள் கூடப் பிழைக்கிறார்கள் - அதுவும் முடியாவிட்டால், ஆழமான ஆறு கிணறு குளம் ஏராளம்” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டுச் சென்றாள்.

அம்மா, இப்படியும் பேச முடியாமல், அப்படியும் பேச முடியாமல் திணறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அக்கா, தானாக வந்துவிடுவாள் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந் தேன். எங்களுக்குத் தூரபந்து ஒருவள் - அவள் வீட்டிலே - பக்கத்து ஊர் - அக்கா தங்கியிருப்பதாக் கேள்விப் பட்டேன். எலக்ஷன் முடிந்தபிறகு, நாமே நேரில் போய், ஏதோ இரண்டு சமாதானம் கூறி அழைத்துக் கொண்டு வரலாம் என்று தைரியாம கத்தான் இருந்தேன்.

எலக்ஷன் வேலையோ மும்முரமாகி விட்டது. நாள் நெருங்க நெருங்க, செலவு அதிகரித்தது.

“குன்றூராருடைய, தேசபக்தியைப் பாருங்கள் - ஒரு பைசாக்கூட உங்களுக்குச் செலவு வைக்க மாட்டேன். என் பணமேதான் செலவிடுவேன். இது தேச சேவைக்கான காரியமல்லவா? இதற்குச் செலவாகாத பணம், வேறு எதற்கு? என்று பேசுகிறார்” - என்று எலக்ஷனுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு புகழ்ந்து பேசினவரைப் பற்றி, எலக்ஷன் நாலு நாட்கள் இருக்கும்போது, “குன்றூரார் விஷயம் கொஞ்சம் சந்தேகமா யிட்டுது. அவருடைய மருமகன், எதிர்க்கட்சிக்கு வேண்டிய வனாம், மருமகனுக்கு விரோதமாகப் போக முடியாதென்று பேசுகிறார். மேலும், கொஞ்சம் பணத்தையும தெளித்து விட்டிருப்பார்கள் போலிருக்கிறது. வேறு யோசனை செய்து பயனில்லை என்று, ஒரு இருபது பச்சை நோட்டு குன்றூராரிடமும், ஒரு பத்து, மருமகனிடமும் தள்ளி, பாண்டுரங்க ஸ்வாமி கோயிலிலே, கொண்டு போய் சத்யம் வாங்கி விட்டேன்” என்று பேசினார்.

“ஆறும் நாலும் பத்து - சாந்தூர் வட்டத்திலே பத்தாயிரம் ஓட்டு நமக்குத்தான், சந்தேகமே வேண்டாம்,” என்ற தைரியமான பேச்சு எலக்ஷனுக்கு நாலு நாட்களுக்கு முன்பு வரையில் இருந்தது. பிறகோ, “ஆறிலே ஒரு இரண்டு உதைத்துக் கொள்ளும் போலிருக்கு - நாலுன்னு போட்ட கணக்குச் சரிப்பட்டு வராது, அங்கே ‘ஒண்ணு’ தேறுவதே கஷ்டம்” என்று பேச்சுமாறி, ஒரு நாலு ஆயிரத்தைச் செலவிட்டால்தான் முதலில் போட்ட ‘புள்ளி’ சயின்படி நடக்கும் என்று பேசினர். பல வழிகளிலும் செலவுதான் - தொல்லைதான் - இவ்வளவும் போதாதென்று, எலக்ஷனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திலே ஒருபிரசங்கி, இளையபூபதிக்கு ‘எக்கச்சக்கமான’ நிலைமையை ஏற்படுத்தி விட்டான், அவன் காங்கிரசிலேயே, என்னமோ தீவிரவாதியாம்! ஜனங்களுடைய மனதிலே உற்சாகமூட்டக் கூடிய பெரிய பிரசங்கி என்று சொல்லி, தந்தி மேல் தந்தி அடித்து, வரவழைத்தார்கள் அவன் வந்தபோதே, ஒரு மாதிரியான ஆசாமி என்று எனக்குப்பட்டது. எத்தனையோ பிரசங்கிகள் அதுவரையில் வந்திருக்கிறார்கள் - எல்லோரும் நேரே என் வீட்டிற்குத்தான் வருவார்கள்; ஸ்டேஷனுக்கு ஐயர் போவார். அழைத்து வருவார். இதுதான் வாடிக்கையாக நடந்து வந்தது. இந்தப் பிரசங்கியை அழைத்து வர ஸ்டேஷன் சென்றிருந்த ஐயர், தனியாக வீடு வந்தார். “ஏனய்யா! ஆசாமி, வரவில்லையோ?” என்று இளையபூபதி கேட்டார். ஐயர், புன்சிரிப்புடன், ஆனால் குறும்புத்தனமாக, “வந்துவிட்டார், காங்கிரஸ் ஆபீசிலேயே தங்குவதாகச் சொல்லி விட்டார்” என்றார். எனக்குக் கோபம் இளையபூபதி, “கிராக்கா அந்த ஆசாமி” என்று கேலியாகக் கேட்டார். “நமக்கு எப்படியிருந்தால் என்ன! காரியம் ஆகவேண்டும்.” என்று கூறி விட்டு, “பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரும் வந்திருக் கிறார் - அவரையும் இன்று, நம்ம கூட்டத்திலே பேசச் சொல்லி யிருக்கிறேன்” என்றார்.

அன்று மாலைக் கூட்டம், அமளியில் முடியாதது, எங்களிடம் ஆள் அம்பு ஏராளமாக இருந்ததால்தான். எலக்ஷன் பிரசாரக் கூட்டம் கடைசியில் தர்க்கமாக முடிந்தது - தலை உருளுமோ என்று நாங்களெல்லாம் பயப்படும்படியாகி விட்டது.

தேசியப் பாட்டுகள் பாடி, தலைமை வகித்த கதர்க்கடை மானேஜர், பேசியான பிறகு, முதலிலே, பாரதப் பிரசங்கி பார்த்தசாரதி ஐயங்காரைப் பேசச் சொன்னார்கள்! அவரும், ஆனந்தமாக ஒப்புக் கொண்டார். அவர் பேச எழுந்ததுமே, புதிய பிரசங்கிக்கு, அவர் பெயரைச் சொல்லவே இல்லையே, முத்துராமலிங்கமாம். முகம் கடுகடுத்தது. தக்ளியை எடுத்துச் சுற்றிக் கொண்டிருந்தார். பாரதப் பிரசங்கி, இதைக் கண்டு, எப்படி ரசிக்க முடியும். ஆணும் பெண்ணுமாக, அர்த்த ராத்திரியில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அவருடைய பாரதப் பிரங்கத்தைக் கேட்பது வழக்கமாம். அப்படிப்பட்டவருடைய பிரங்கத்தை அலட்சியமாகக் கருதி, முத்துராமலிங்கர், தக்ளியை எடுத்ததும், ஐயங்காருக்குக் கோபம் பிறந்தது. கிண்டலாகப் பேச ஆரம்பித்தார்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் கையிலே பாஞ்ச சன்யம் என்னும் சங்கு இருந்ததல்லவா, அதுபோல, நமது இளம் பிரசங்கியார் கரத்திலே, ‘தக்ளி’ இருக்கிறது! என்றார். ஜனங்கள், கைகொட்டிச் சிரித்தனர். அந்தப் பிரசங்கியோ, கோபிக்கவுமில்லை, வெட்கப்படவுமில்லை, தக்ளியை எடுத்து மறைத்து விடவுமில்லை, சாவதானமாக நூற்றுக் கொண்டிருந்தார்.

பாரதப் பிரசங்கி, பாரதத்தையே சொல்லிவிடுவார் போலிருந்தது - எலக்ஷனை மறந்து, துரோபதை துயிலுரிந்தது, அரக்கு மாளிகை கட்டியது, சகுனியின் சாகசம், முதலியவற்றைப் பற்றி விஸ்வாராமாகப் பேசினார். இடையிடையே, இனி நமது இளையபூபதி அவர்கள் எலக்ஷனுக்கு நின்றிருக்கும் விஷயமாகச் சில வார்த்தைகள் பேசுகிறேன் - என்று கூறுவார் - ஆனால் பழையபடி, பாரதமேதான் பேசுவார். எலக்ஷன் சமய மல்லவா! எதிர்க்கட்சிக் கூட்டத்திலே பேசினதற்கு, என்ன பதில் கூறுகிறார்கள், பார்ப்போம் என்று ஆவலோடு வந்திருந்தனர். ஏராளமானவர்கள், அவர்களிடம், அர்ஜுனன் தவம், சகாதேவன் பதிகம் என்று இப்படியே பேசினால், எப்படிப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஜனங்கள் கனைத்தும், இருமியும், கை தட்டியும், பிரசங்கத்தை முடித்துக் கொள்ளும்படி ஜாடை காட்டியனார்கள். பாரதப் பிரசங்கி இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் பிடித்தது. கடைசியில் இனி முடியாது என்று கண்டு கொண்டு, பிரசங்கத்தை முடிக்கத் தொடங்கி, “மகா ஜனங்களே! புண்ய பூமியாம் நமது பாரத பூமியில், பண்டைய நாட்களிலே இருந்து வந்த தானம், தர்மம், யோகம், யாகம், தவம், ஜெபம், ஆலயம், அபிஷேகம், சனாதனம், சாத்வீகம் முதலான சிறந்த முறைகள், கேவலம், நீசராகிய, வெள்ளைக்காரன் இங்கே வந்ததால் நாசமாகி ஜன சமூகத்திலே, நவநாகரீகம் எனும் மோகம் புகுந்து, பக்தி மார்க்கம் பாழாகி, ஆச்சாரம் அழிந்து, மதாச்சாரம் சதாச்சாரம் யாவும் கெட்டு, வர்ணாஸ்ரமத்தையே கைவிட்டு, மக்கள் நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? என்று பேசும் அளவுக்கு, நாஸ்தீகர்களாகவுமாகி விட்டனர். நாட்டுக்குச் சுயராஜ்யம் வந்தால், இந்தச் சர்வநாசத்திலிருந்து நாம் தப்ப முடியும். நமது பூர்வீகப் பெருமையை, மறுபடியும் நிலை
நாட்டிய, மதம் கெடாமலும், ஜாதி ஆச்சாரம் பாழாகாமலும் பார்த்துக் கொள்ளலாம். பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடித்தது, இந்தப் பாரத பூமியிலேதான்! பத்தினியிடம் யமதர் மனே தோற்றது, இந்தப் பாரத பூமியில்தான்! நாலுவேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்தெட்டுக் கலைஞானம் இருப்பது, இந்தப் பாரத பூமியில்தான்! - என்று, பஜனையே பாடத் தொடங்கினார். பலமான, கை தட்டுதலுக்குப் பிறகு, பிரசங்கியைத் தலைவர் வற்புறுத்தி உட்காரவைத்து விட்டு, முத்துராமலிங்கனாரைப் பேசச் சொன்னார். ஆரம்பமே வேகமாக இருந்தது.

“மகாஜனங்களே! நான் பாரதப் பிரசங்கியல்ல - பாரத மாதாவின் சேவகன்!” என்று கூறினார் - உடனே மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். பாரதப் பிரசங்கியின் முகத்திலே அசடு தட்ட ஆரம்பித்தது.

“பாரதக் கதையைக் கூறி, அதிலே இருந்து, பல உதாரணங்களைக் காட்டி, ஐயங்கார் பேசினார் - நான் அப்படிச் செய்யப்போவதில்லை - பாரதம் தெரியாததால் அல்ல - இந்தக் காலத்துக்குப் பாரதம் தேவையில்லை ஆதலால்.”

மீண்டும் சந்தோஷ ஆரவாரம் கிளம்பிற்று.

“பாரதத்தை மறந்துவிடுங்கள். பாரதம், குடும்பச் சண்டை. அது கூடவே கூடாது. பாண்டவரும் கௌரவரும் சண்டையிட்டுப் பாரதநாட்டைப் படுகளமாக்கினர். குருக்ஷேத்திர மனப்பான்மை கூடாது. நமக்குள் தாயாதிச் சண்டை ஏற்படக் கூடாது, ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாம் பாரதத்தை மறக்க வேண்டும். மேலும், பாரதத்திலே கூறி இருக்கிற, எதையும் நாம் இந்தக் காலத்தில் காணவும் முடியாது. நடைமுறைக்குக் கொண்டு வரவும் முடியாது - ஐவருக்குப் பத்தினி - பத்தினியை வைத்துச் சூதாடுவது - ஒவ்வொரு தேசத்துக்குப் போகும் போதும் அர்ஜுனன் ஒவ்வொரு கன்னியை மணம் செய்து கொள்வது - சூரியனை மறையச் செய்வது - இவைகளெல்லாம் நம்மால் முடியுமா, நமக்குத் தேவையா? நாம் ஏன் நமக்குத் தேவையற்ற அந்தப் பாட்டி கதைகளைக் கேட்டுக் கொண்டு காலத்தை வீணாக்க வேண்டும்.

இதற்கு, மிகப்பெரிய சந்தோஷ ஆரவாரம் கிளம்பிற்று. அதேபோது பாரதப் பிரசங்கிக்குக் கோபம் பிரமாதமாகி , எழுந்து நின்று.

“பாரதத்தைக் கேவலமாகப் பேசுகிற இந்த வாலிபரின் வாயை அடக்க, ஒரு பத்து நிமிஷம் அவகாசம் தரவேண்டும்” என்று, தலைவரைக் கேட்டார்.

“உட்கார்! உட்கார்” என்று ஜனங்கள் கூச்சலிடலாயினர்.

சிலர், “பெரியவர், பாபம். ஏதோ பேசட்டுமே” என்றனர்.

குழப்பத்தை அடக்க, முத்துராமன், ஒரு நகைச் சுவையை வீசினார்.

“மகா ஜனங்களே! அவர், பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடித்ததாமே, அந்தக் காலத்து ஆசாமி” என்றார்.

பத்து நிமிஷங்களாயின சந்தோஷச் சந்தடி அடங்க.

“இது, பாரததேசத்தை பரங்கி ஆள்கிற காலம்! இந்தப் பரங்கி ஆட்சியை, பாரதப் பிரசங்கி, விஸ்தாரமாக எடுத்துக் கூறிய, பாஞ்சசன்யம், சக்ராயுதம், காண்டீபம், பாசுபதாஸ்திரம், எதனாலும் தடுக்க முடியவில்லை. ஆகையினாலே, இப்போது நமக்கு, அந்த ஆயுதங்களைப் பற்றிய பிரசங்கம் தேவை இல்லை இப்போது நமக்கு வேண்டியது, ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரம், தியாகம், எல்லோரும் ஓர் குலம் என்ற எண்ணம். இதற்கு முற்றிலும் கேடு செய்யும் முறையிலே, பாரதப் பிரசங்கி, பழைய கால வர்ணாஸ்ரமத்தை ஆதரித்துப் பேசினார். இங்கு நமக்குள் நாலு ஜாதி இருப்பது சரி என்று கூறினால். அந்த நாலு ஜாதியிலே, பிராமண ஜாதி உயர்ந்தது என்று கூறினால், பிறகு நாம் எந்த நியாயத்தைக்கூறி வெள்ளைக்காரனை விரட்ட முடியும் - அவன் கூறுவானே, உலகத்திலே ஒரு வர்ணாஸ்ரமம் இருக்கிறது, அந்த முறைப்படி வெள்ளைக்காரர், உயர்ந்த ஜாதி, கருப்பர் தாழ்ந்த ஜாதி! மஞ்சள் நிறம் படைத்த சீனர்கள் இடையிலே உள்ள ஜாதி - என்று பேசுவார்களல்லவா!

இந்த வாதம், ஜனங்களுடைய மனதை மிகவும் கவர்ந்தது பாரதப் பிரசங்கியின் கோபத்தையும் அதிகமாகக் கிளறிவிட்டது ஆவேசம் வந்தவர் போலவே ஆடினார். ஏதேதோ கூறினார். மேஜையைத் தட்டித் தட்டிப் பேசினார். கூட்டத்திலே, கலகம் ஆரம்பித்து விட்டது.

உட்கார்! பேசு! உட்கார்! - என்ற சத்தம் மாறி மாறிக் கிளம்பிற்று.

இந்தச் சந்தடியில், விஷமிகள் யாரோ, கற்களை வீசினர். எங்கிருந்தோ ஒரு பன்றி கூட்டத்திலே புகுந்தது. பாரதப் பிரங்கியைப் பின்புறமிருந்து யாரோ பிடித்திழுத்தனர். எங்கள் ஆட்கள், மிகச்சிரமப்பட்டு, அமைதியை கொண்டு போயினர். முத்துராமலிங்கம், கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, பல அரசியல் கருத்துக்களைப் பேசினார். ஆனால், அவருடைய பேச்சிலே பெரும்பகுதி, ஜாதியால் வந்த கேடு, மதத்தின் பெயரால் செய்யப்படும் அநீதி, ஆகியவை பற்றியே இருந்தது.
கூட்டம், முடிந்த பிறகு, பிரசங்கியை வீட்டுக்கு வரும்படி, இளையபூபதி அழைத்தார். அவர், அன்றிரவே வேறு ஊருக்குப் போவதாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.

அவர் போனபிறகு, கதர்க்கடை ஐயர், அலட்சியமாகக் கூறினார்.

“பெரிய வாயாடி அவன்! காங்கிரஸ் போர்வையிலே உலாவும் சூனாமானா” என்றார்.