அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
1
                     

வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக் கையிலெடுத்து வைத்துக் கொள்கின்றனரா? இல்லை! அந்த மல்லிகை வாடி வதங்கியது! பூக்காரன் வேறு மல்லிகையைத் தொடுத்துத் தருகிறான். அதுதான் புகழப்படுகிறது!

ஆனால், விளையாடும் சிறு பிள்ளைகளும் ‘வேறு புஷ்பம் வாங்கி வைத்துக் கொள்ள வகையில்லாதவர்களும்’ அந்த வாடிப்போன மல்லிகையை எடுத்து வைத்துக் கொள்வதுண்டல்லவா!

விமலா, வாடிப்போன மல்லிகை! அவளுடைய இளமை மாறி அதிக நாட்களாகவில்லை, ஆனால் மேனியின் மெருகும், வசீகரமும் வனப்பும் மங்கிவிட்டது. தங்கமேனி என்று பிறர் கூறக் கேட்டவள், தன் உடலைத்தானே கண்டு வெட்கமடையலானாள். உடல் இளைத்தது மட்டுமல்ல. அதன் பளபளப்புப் போய்விட்டது. விமலாவின், சுருண்டு திரண்ட கூந்தல், ஒரு காலத்தில், வாசனைத் தைலத்தில் மிதந்ததுண்டு. அவளுடைய முகத்தில் பாரிஸ் பவுடரும், தளுக்குப் பொட்டும் இருந்த காலமுண்டு. லோலாக்கு நாட்டியமாட, முத்துப் பற்கள் புன்னகை பாட அவளுடைய அதரமெனும் திரையை விட்டு வெளியே வருவதும், மறைவமாக இருந்த காலமுண்டு.

அந்த அதரந்தான் அடிபட்டு, வீங்கிப் பார்க்கப் பயங்கரமாக இருந்தது. அந்த வீங்கிய உதட்டுடன்தான் விமலா டாக்டர் சுந்தரேசனிடம் சிகிச்சைக்கு வந்தாள். ஜெமீன்தார் வீட்டுக் காரியஸ்தன் ஒருவனுக்குக் காய்ச்சல். அவனுக்கு ‘இன்ஜக்ஷன்’ செய்யும் வேலையிலே டாக்டர் ஈடுபட்டிருந்தார். விமலாவின் வீங்கிய உதட்டுக்கு, சிகிச்சை செய்ய நேரமில்லை. கம்பவுண்டர் கண்ணுசாமியைக் கூப்பிட்டு, “கண்ணா இந்த அம்மாவுக்கு என்னவென விசாரி” என்று உத்தரவிட்டார் டாக்டர்.

வீக்கத்துக்கும் மற்றும் வெடிப்பு, புண், யாவற்றுக்கும் ‘டின்சர்’ தடவுவது கண்ணுசாமியின் வழக்கம். அந்த முறைப்படியே வீங்கிய உதட்டுக்கும் கண்ணுசாமி ‘டின்சர்’ தடவப் போனான். டாக்டர் தன் வேலையோடு வேலையாக இதையும் கவனித்து விட்டார். “மடையா! உதடு வீக்கமென்றால் கூட டின்சர்தான் போடுவதா!” என்று கேட்டார். கண்ணுசாமி, விமலாவிடம் “உட்காரம்மா ஒரு பக்கமாக டாக்டர் வருவார்” என்று கூறிவிட்டு மருந்து கலக்கச் சென்றான்.

வீங்கிய உதட்டுடன் விமலா உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவள் மனத்தில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணங்கள் எழுந்து விட்டன. எண்ணாதனவெல்லாம் எண்ணலானாள்.

இந்த உதடு, நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்விதம் வீங்கயிருந்தால், எவ்வளவு “ராஜோபசாரம்” பெற்றிருக்கும். எத்தனைவிதமான மருந்துகள் வலிய வலிய வந்திருக்கும். எவ்வளவு ‘பெரிய பெரிய’ மனிதர்கள் தமக்குத்தான் வீக்கம் வந்தது எனக் கருதித் துடித்திருப்பார்கள். அது ஒரு காலத்தில்! விமலா, விளையாட்டுக் கருவியாக இருந்தபோது! விமலாவின் விழி, தன்மீது ஒரு முறை பாய்ந்தால் போதும் எனப் பலர் எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது என்ன பணம் கேட்டாலும் சரி, விமலாவைச் சரிப்படுத்து, அவள் நேசம் கிடைத்தால் போதும் என ஊரிலுள்ள உல்லாசச் சீமான்கள் கூறிய காலத்தில் என்ன உபசாரம் நடந்திருக்கு! இப்போது இளமைக் கெட்டு, அதனை விட விரைவினில் அழகு குன்றி உல்லாச உலகில் ஒதுக்கிடம் பெற்று, உருமாறிப் போன விமலாவுக்கு உதடு வீங்கிற்று என்றால் கம்பவுண்டர் கண்ணுசாமி டின்சர் தடவப் பார்க்கிறான்! அவன் பித்தன்! அந்த அதரம் எத்தனை பேரின் உணர்ச்சியை உலக்கிக் குலுக்கிவிட்டதென்பது அவனுக்கு என்ன தெரியும். சற்று குவிந்தும், சிவந்தும், அந்த உதடு காட்சி தந்து, சங்கீதப் பிரியர்களுக்கு அளித்த விருந்தை அவன் எப்படி அறிவான். வெற்றிலை பாக்கை, ஜாதிக்காய், ஜாபத்ரி, ஏலம் லவுங்கத்துடன் வாயில் விமலா குழைத்துக் கொண்டிருக்க அந்த வெற்றிலைப் பாக்குச்சாறு அந்த உதட்டில் படிந்து பவள நிறத்தைப் பெற்று பார்ப்பவரின் உள்ளத்தில் ‘மோகாந்தகாரத்தைக்’ கிளப்பிவிட்டதை கண்ணுசாமிக்கு என்ன தெரியும்!

அந்த வீங்கிய உதடு, விமலா என்ற அபலையுடையது என்பதை அவன் அறிவானேயொழிய, அந்த விமலா வெனும் தாசியின் சோகமிக்க சேதியை அவன் அறியான்.

விமலா எண்ணம், பறந்து சென்றது. தனது ‘வகை தரும் பருவத்தில்’ தான் இருந்த நிலை, இன்றுள்ள விசார வாழ்வு; அந்த இன்பம், இந்தத் துன்பம், அந்தக் குளிர்ச்சி, இந்த எரிச்சல், அந்த செல்வம், இந்த ஏழ்மை, வீதியில் மாலை 6 மணிக்கு, விளக்கேற்ற வருவாள் வருவாள் என, தரிசனத்துக்கு மைனர்கள் காத்துக் கொண்டிருக்க, அது நன்கு தெரிந்து கையில் விளக்குடன், கருத்தில் களிப்புடன், காலில் சிலம்பு ஒலிக்க, ஜடை சற்றே ஆட, முகத்தில் சோபிதத்துடன், வெளிவந்து, இரண்டொரு விநாடி, எரிந்த விளக்கை ஏறத் தள்ளிக்கொண்டே, தன் கண்களினின்றும் கூர்மையான அம்புகளைக் கிளப்பி, இளைஞர்களின் இருதயத்தில் பாயவைத்த விமலா, இன்று வீங்கிய உதட்டின் எரிச்சலை அடக்கிக் கொண்டு விதியே, விபரீதமே என எண்ணி விம்மிக் கொண்டிருக்கும் விமலா, இரண்டு நிலைக்கும் எத்துணை வித்தியாசம், வாழ்க்கையில் இப்போது விமலாவுக்கு வறட்சி, அன்று வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் இன்பம்.

எண்ணத்தில் ஆழ்ந்திருந்தவளை, டாக்டர் சுந்தரேசன் கண்டார். அவர் மனதில் திடீரென அவள் மீது ஒரு விதமான பச்சாதாபம் உண்டாயிற்று. விரைவில் தன் வேலையை முடித்துக் கொண்டு விமலாவிடம் வந்தார். விமலா, சரேலென எழுந்து நின்று கும்பிட்டாள். அவளது வணக்கத்தைப் புன்சிரிப் புடன் ஏற்றுக் கொண்டார் டாக்டர்.

என்னம்மா உடம்புக்கு? என்று கேட்டார். அவள் பதில் கூறுமுன்பு நிலைமையைத் தானே தெரிந்து கொண்டு பஞ்சில் எதையோ நினைத்து, உதட்டைத் துடைத்தார். தானே துடைத்துக் கொள்வதாக விமலா கூறினாள் கேட்கவில்லை டாக்டர். டாக்டர்களுக்குச் சில பிரத்யேக உரிமைகள் உண்டல்லவா!

கையிலே, சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார் டாக்டர் சுந்தரேசன்.
“பெயர்?”
“விமலா!”
“வயது?”
“முப்பது” - ஆனால் என்ன, நாற்பது என்று எழுதிக் கொண்டால்கூட நம்புவார்கள்.
“தகப்பனார் பெயர்?”
“சர்வேஸ்வரன்!”
“இருப்பிடம்?”
“இப்போது டாக்டர் வீடு. இங்கிருந்து நேரரே குப்பய்யர் தெருவு, இந்த மாதம் வாடகை தராவிட்டால், வேறு வீதிக்குப் போவேன்.”
“தொழில்?”
“தாசி!”
“வேடிக்கையாகப் பேசிக் கொண்டே இருந்துவிட் டேனம்மா” என்று டாக்டர் சுந்தரேசன் கூறினார். ஏனெனில் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை தந்துவந்த விமலா கடைசி கேள்விக்குப் பதில் கூறும்போது அவளையும் அறியாமல் கண்களில் நீர் தளும்பிற்று.

“நான் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்” என்று டாக்டர் கூறினார்.

“இல்லை, டாக்டர் சார், இதிலென்ன தவறு. நான் தாசி என்பதை ஏன் மறைக்க வேண்டும். “இப்போது என்னை தாசி லோலர்கள் உலகுகூட மறந்து விட்டது. நான் தரித்திர உலகில் இப்போது குடி புகுந்துள்ளேன்.” என்று விமலா கூறி டாக்டரின் உள்ளத்தை உருக்கி விட்டாள்.
“விமலா - நீ நல்ல அறிவாளி” என்றார் டாக்டர்.

“நல்ல அழகியாகக்கூட இருந்தேன். பலரை அறிவை இழக்கும்படிக் கூடச் செய்தேன்” என்று விமலா பதிலளித்தாள்.

“உன் வாழ்க்கை வெழு ரசமுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன். உனக்குச் சம்மதமானால், என் வீட்டுக்கு வா; நான் ஒண்டிக்கார மனிதன்; என் கிழத்தாயும், வேலைக்காரரும் மட்டுமே இருக்கிறார்கள். உன் கதையைச் சொல்லு, தவறாக எண்ணாதே” என்று டாக்டர் கூறினார். விமலா புன்னகை புரிந்தாள். கண்ணுசாமிக்குக் கோபம். “இவளோ ஒரு வேசி, உதடு வீங்கி வருகிறாள்; அவளிடம் இந்த டாக்டர் எதற்காக இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்” என்று எண்ணி, இந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென விரும்பி. கனைத்தான். தான் இருப்பதை மறந்து விட்டு, இருவரும் பேசுகிறார்களோ என்று - இந்தக் கனைப்புதான், விமலாவுக்குப் புன்னகை வரச் செய்தது.

“டாக்டர் என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் கூற வேண்டிய பெரிய கதை ஒன்றும் இல்லை. நான் ஒரு தாசி. அலைந்து கெட்டேன். இவ்வளவுதான்” என்றாள் விமலா.

“ஆமாம் விமலா! நான் கேட்டது தவறு. உன் வாழ்க்கை யைக் கூறும்படி கேட்டது பிசகு. நாம் முன்பின் பழக்கமில்லாத வர்கள்” என்று கூறினார்.

“கோபமான டாக்டர்? நான் என் கதையைக் கூறிவிடு கிறேன். நாளைக்கு இங்கேயே கூறுகிறேன். உங்கள் வீட்டிற்கு, இதற்காக வர வேண்டுமா?” என்றாள் விமலா!

“விமலா நீ வந்தாகக்தான் வேண்டும்” என்று டாக்டர் வற்புறுத்தினார்.

“நான் வந்தால், உங்கள் தாயார்...?” என்று இழுத்தாள் விமலா.

“தவறாக எண்ணமாட்டார்கள்” என்று உறுதி கூறினார் டாக்டர்.

சற்று கலங்கிய முகத்துடன் விமலா கூறினாள், “டாக்டரே, எனக்கே சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் அங்கு வர முடியாது. வந்தால் எனக்கு நாயகனாக இருக்கும் பாவி என்னை நையப் புடைத்து விடுவான். நான் அவனுடைய சொத்து. அவன் என்னை இம்சித்தாலும் அவனை விட்டு விலகு முன்னம், நான் அடங்கித் தீர வேண்டும். அதற்குத்தான் பயப்படுகிறேன்” என்றாள் விமலா.

“அவன் யார்?” என்று கேட்டார் டாக்டர்.

“ரௌடி ரங்கன், என்று பிரக்யாதி பெற்றவன். அவனுடைய வைப்பு நான். டாக்டரே என்னைப் பற்றி நீர் சரியாகத் தெரிந்து கொள்ள இந்த விஷயம் போதாது. நான் இப்போது வேறு வழியில்லாததால், வாழ்க்கையில் பல விபரீதங்கள் ஏற்பட்டதால், ரௌடி ரங்கனின் வைப்பாட்டி யானேன். ஒரு காலம் இருந்தது. ரங்கன் போன்றவர்கள் என்னை ஏறெடுத்துப் பார்க்க முடியாத காலம். எனது ஏவலராக இருந்த காலம்” என்று விமலா கூறிக் கொண்டே அழுதாள்.

டாக்டர் சுந்தரேசனுக்கு மனம் உருகி விட்டது. “நான் எண்ணியபடியே இருக்கிறது. உன் வாழ்க்கையில் பல சோகச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமென எண்ணினேன். அப்படியே இருக்கிறது சேதிகளும். ரௌடி ரங்கனை எனக்கு நன்றாகத் தெரியும். போன மாதங்கூட, குடித்து விட்டு, சண்டை போட்டதில் அவன் மண்டையில் பலத்த காயம் பட்டது. நான்தான் மருந்து போட்டேன். ஆனால் அவனிடம், ‘இந்த அருமையான பொருள்’ இருக்கிறது என நான் துளிகூட எண்ண வில்லை” என்றார் டாக்டர்.

“நீங்கள் மட்டுமா டாக்டர், என் பழைய உலகில் இருந்த யாரையும் கேட்டுப் பார்க்கலாம், நான் இவ்விதமான முரட்டுக் குடியனிடமா இருக்கத் தக்கவள் என்பதைப் பற்றி. ஆனால் டாக்டர், அவன்தான் எனக்குக் கால்வயிற்றுக் கஞ்சி வார்க்கிறான். குடிவெறியில் உதைப்பான் அடிப்பான். ஆனால் அவனன்றி வேறு திக்குமில்லை எனக்கு. டாக்டர் நான் உம்மிடம் உள்ளதைக் கூறி விடுகிறேன். மறைக்க மனம் வரவில்லை. இந்த உதடு வீங்கியதற்குக் காரணமும் அவனே” என்றாள் விமலா. “நினைத்தேன், நான். ரங்கன் உன்னை அடித்துத் துன்புறுத்தினானா?” என்று டாக்டர் கேட்டார்.

விமலா சிரித்தாள். சோகத்திலும் அவளுக்கு டாக்டரின் கேள்வி சிரிப்பைத்தான் தந்தது.

“அடித்துத் துன்புறுத்தவில்லை” என்றாள் விமலா.

இந்த உரையாடல் முடியுமுன், ஒரு இளமங்கையும் மூதாட்டியும் டாக்டரின் உதவியை நாடி வந்தனர். மூதாட்டி இளமங்கையைக் காட்டி, “டாக்டர்! என் மகளுடைய கன்னத்தை, குழந்தை கடித்து விட்டது. பல் பட்டால் விஷமாமே - ஏதாவது மருந்து தடவுங்கள்” என்று கூறினாள். கூச்சத்துடன் இருந்த இளமங்கையின் கன்னத்திலே, குழந்தை கடித்தால், வடுவும் இரத்தக் கசிவும் இருந்தது.

“போய் வருகிறேன், டாக்டர்” விமலா கூறினாள். அவள் குரலிலே ஓர் வகை குறும்பு தொனித்தது.