அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நல்ல தீர்ப்பு
2

தீர்ப்பளிப்போரின் கெடுமதி நமக்குக் கேடு பயப்பதாக உளது என்றாலும், காலம் எனும் பெருமன்றம், உயர்மன்றம் ஒன்று உளது - அங்கு எத்தகைய அநீதியும் துடைக்கப்பட்டு விடும் - அக்ரமம் அழிக்கப்பட்டே தீரும் - நீதி நிலை நாட்டப்படும். வரலாறு அத்தகைய "நீதி நிலைநாட்டப்பட்ட' நெறி விளக்க நிகண்டுதானே.

வகுப்பு நீதி சாயக்கண்டு வேதனை அடையும் மாணவர்கள் வகுப்பு நீதி மாயக்கண்டு திகில் கொள்ளும் அதிகாரிகள்

விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நடுத்தர மக்கள்.

சோற்றுக்கு வழியின்றி வேதனைப்படும் ஏழை பாழைகள். நூலுக்குத் திண்டாடி, கூலிக்குப் போராடி, வாழ்வுக்குத் திண்டாடும் நெசவாளர்கள்.

அகவிலையால் அவதிப்பட்டு தேய்ந்து போகும் தொழிலாளர்.

கோழியுடன் எழுந்து கோட்டான் கூவும்போது தூங்கி, காலமெல்லாம் உழைத்து, கால்வயிற்றுக் கூழுக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள்.

மக்கள் பணியாற்றச் சென்று அடக்குமுறையால் தாக்கப் பட்டு, வதைக்கப்படும் பொதுநல ஊழியர்கள்.

இவர்கள் சார்பாகப் பேச, நீதி கேட்க, உரிமைக் கிளர்ச்சி செய்ய, நேர்மையாளர்கள், அறநெறி கொண்டோர் யாரும் இல்லையா திராவிடத்தில்?

ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டிக்கும் ஆண்மை யாளர்கள் இல்லையா?

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற முறையில் நிலைமை இருக்கக் கண்டு அச்சமா?

ஆமையாய், ஊமையாய் வாழ்வதா தமிழர் வீரம்?

உரிமை வேட்கை கொண்டோரே! ஊருக்குழைக்கும் உத்தமர்காள்! என்ன வழிகாட்டப் போகிறீர்கள்? திரண்டெழுந்து வருகிறார்கள் திராவிடப் பொருங்குடி மக்கள், திருச்சியில், மே 17, 18, 19, 20.

திட்டம் தீட்டித் தர வாரீர்!
திருநாட்டை மீட்டிடும் தூய பணியாற்ற வாரீர்!
திராவிடம் அழைக்கிறது.
மே, 17, 18, 19, 20 திருச்சியில் மாநில மாநாடு.

அரும்பு கோணிடினும் மணம் குன்றாதன்றோ! கரும்பு கோணிடினும் சுவை கோணுமோ! இரும்பு கோணியே யானையை அடக்கும் ஆயுதமாகிறது. அதுபோல நமது கழகம், "அகில உலகு' அறிந்ததாக, விளம்பர வனப்புகள் பெற்றதாக இல்லை எனினும், அது கூறும் நீதி நிலைத்தே நிற்கும். நிதி குறைந்திடினும் நீதி குறையாது. நீளப் புகழ் பரப்பி, நெடுமரத்தில் கொடி கட்டி, நிகர் இல்லை என்று நிகண்டு தீட்டி நீட்டிடினும், நீதிதனை மறக்கும் கட்சி, நின்ற சுவர் மாரியில் சரிந்து வீழ்வதே போல், சடுதியில் சாய்ந்தே தீரும்.

தங்கத்தால் கோட்டை கட்டி, வைரம் இழைத்த வாயில் அமைத்து, அதனை எதிர்த்து எவரும் வராதபடி, சுற்றிலும் ஆத்திகமெனும் ஆழி அமைத்து, மத குருமார்களெனும் முதலைகளை அதிலே வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும் கொடிமரம் நாட்டி, அதிலே படாடோபம் எனும் கொடியைப் பறக்கவிட்டு, பார்ப்போரின் கண் கூசும் பளபளப்புடன், கேட்போர் செவி குடையும் அட்டகாசத்துடன் ஆண்ட கொடுங்கோலனெல்லாம், பகல் பட்டினிகளால் பஞ்சை பனாதைகளால், நொந்த உள்ளத்தினரால், தாக்குண்டு, தகர்ந்து, தரைமீது சிதறிச் சிதறி வீழ்ந்து மண்மேடுகளானது, புராணமல்ல, வரலாறு. அதனை அறிந்தோர் நாம். நாம் கூடுகிறோம், திருச்சியில்!

ஏன் உங்கட்குமட்டும் இந்தத் தொல்லை? எப்படி எதிர்த்து நிற்பீர்கள் அவ்வளவு பெரிய ஆற்றலை? வேண்டுவதைக் கேட்டுப் பெற வாய்ப்பு இருக்கிறதே? வெண்சாமரம் வீசுவோருக்கு வாழ்வில் விருந்தே கிடைக்கிறதே? அதை விட்டு, ஏன் ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்று காங்கிரசின் புதிய காதலர்கள், கேட்கக்கூடச் செய்கின்றனர்.

கூண்டிலடைப்பட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர் சோலை, பசும்புற்றரைக்கடுத்துள்ள சாலை, பழைய கட்டிடத்தின் சாளரம், தளிர், பூ, செங்கனி ஆகியவற்றின் மீதுதானே கருத்து இருக்கும். சிறகை அடித்தடித்துக் கூண்டுக்குள் பறந்துவிழும் தத்தை, நித்த நித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக் காட்சிகளை எண்ணி எண்ணியே ஏங்கும்.

கொவ்வைக் கனி தருவாள் ஓர் கோகிலம்; கொஞ்சுவாள் மற்றோர் குமரி; தங்க வட்டிலில் பால் தருவாள் இன்னோர் தையல். சுவைமிகு பண்டமும் தந்து பாவையர் அதனெதிர் நின்று முல்லை காட்டி முறுவலித்தாலும், கிளியின் கருத்து மாறாது, பழைய நினைவுகொண்டு, பதறும்; துடிக்கும்; விடுதலை எப்போது என்று கேட்பதுபோலக் கூண்டுக்குள்ளேயே சிறகடித்துக் கிடக்கும்.

கிளியின் போக்கு இவ்வண்ணம் இருந்திடக் காண்கிறோம். நாமோ, "அறங்கிடந்த நெஞ்சும், அருளொழுகு கண்ணும், மறங்கிடந்த திண்டோள் வலியும்'' கொண்ட மரபினர். நாமா, ஆமையாய் ஊமையாய், ஆளடிமை செய்யும் அடிமையாகிக் கிடப்பது!

உடலெங்கும் இரத்தமயம்! உடையோ சுக்குநூறு! வடுக்களிலிருந்து ஒழுகும் குருதியைத் துடைத்திடவும் கரம் பயன்படவில்லை! தூக்க முடியவில்லை-கரத்திலேயும வடு! எனினும் அந்தப் போர் வீரன் முகத்திலே புன்னகை பூத்திருக்கிறது. ஏன்? அவன் காலடியிலே, வாயில் குருதியொழுக பற்கள் கீழே உதிர்ந்து கிடக்க, தோல் கிழிந்து, புலியொன்று பிணமாகக் கிடக்கிறது. புலியுடன் போரிட்ட சிங்கம் அவன்! புலியின் பொல்லாப் பற்கள் அவன் உடலெங்கும் புண்ணை ஏற்படுத்திவிட்டன. நகத்தால் கீறியும், பற்களால் கடித்தும், உடலால் மோதியும், புலி, அவன் உயிர்குடிக்கத் துணிந்தது. அவன் தனியன்! இளைஞன்! ஆனால் தமிழன்!! எனவே அவன் புலியினைக் கட்டிப் புரண்டான் - அதன் இடியையும் கடியையும் பொறுத்தான். வாள் ஒடிந்தது-வீரனின் மனம் ஒடியவில்லை. கரத்தால் குத்தினான்-வாயைப் பிளந்தான் - வாலைப் பிடித்திழுத்து, புலியைத் தூக்கிச் சுற்றினான் கரகரவென்று. ஓங்கி அடித்தான் பாறைமீது, கோரக் கூச்சலிட்டுச் செத்தது. குற்றுயிராகக் கிடக்கிறான் குமரன்! அவனைக் கண்டோர், வியந்து "வேங்கையைக் கொன்ற வீரனே, எம் தோழனே, உன்னுடன் பிறந்ததற்காக நாங்கள் உள்ளம் பூரிக்கிறோம். உன்னை, எப்பாடுபட்டேனும், எமது இன்னுயிரை ஈந்தேனும், பிழைத்திடச் செய்வோம்'' என்று கூறிப் பெருமைப் படுவர்.

அஃதேபோலத் தம்பி, நெஞ்சில் உரம் உண்டு; கொள்கைக்காக, கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் திறம் உண்டு; அறம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு; அதற்காக எமது ஆவியைக் கேட்டிடினும் அளித்திடும் திடமனமும் உண்டு என்று கூறி, செயலிலும் செம்மல்களாகி, மாற்றாரின் சித்திரவதைக்கு ஆளாகினாலும் சித்தம் கலங்காமல் செருமுனையில் நின்றோமானால், இன்று ஆரியத்துக்கும் வடநாட்டாட்சிக்கும் அடங்கிக்கிடப்போரெல்லாம் பெருமிதம் கொள்வர்-பீதி அழிந்தொழியும், அவர்களும், நமது நெறி நிற்கும் துணிவு பெறுவர்-

நாடறியா நடராசன் நமது தமிழ் காக்க நானுழைப்பேன்!- என்று கூறி நடந்தான் சிறைச்சாலை நோக்கி! சென்று வா மகனே! வென்று வா! என்று செப்பினார் அவர் தந்தை. பாழுஞ் சிறையிலே, படுத்த படுக்கையிலே, பைந்தமிழ் வீரன், நோயுற்று நொந்தான். மரணம் நேர் வந்து நின்று அணைத்துக் கொண்டது. புகழ் மணம் பரப்பிக் கொண்டு புதல்வன் சிறையினின்றும் வெளிவருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் வீரனின் தந்தை. மாடியில்லா மண் வீட்டில் பிணம் வந்து சேர்ந்தது! தமிழரின் கண்களிலே வெள்ளம் புரண்டது.

தாலமுத்து என்றோர் தீரன் தீந்தமிழைத் தாக்க ஒரு தில்லுமொழி துணிந்ததா என்றுரைத்து நுழைந்தான் சிறைக்குள்-பிணந்தான் வெளியே எடுத்தெறியப்பட்டது. முழக்கமிட்டுக்கொண்டு சிறைக்குள்ளே நுழைந்தான், மூச்சு போய்விட்டான பிறகே வெளியே அனுப்பினர். இன்னலால் தாக்குண்டாள் இளம் மனைவி. இனி உலகே எனக்கோர் சிறையன்றோ என்று கேட்டு கண்ணீர் வடித்து நின்றாள். சூழ இருந்தோர் புழுப்போல் துடித்தனர்.

தம்பி! இந்த வீரமும் தியாகமும் வீண் போயிற்றோ! இல்லையே. கட்டாய இந்தி கல்லறை சென்றே விட்டது! கபட இந்திதான் காலாட்டம் நடத்துகிறது!

தாலமுத்துவும் நடராசனும், எந்த கட்டாய இந்தியை எதிர்த்தொழித்திட நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்டு உயிர் நீத்தனரோ, அந்தக் கட்டாய இந்தியைப் புகுத்திய, ஆச்சாரியார் இன்று, இந்தி வெறியை, இந்தி ஆதிக்கத்தைக் கண்டிப்பதுடன், பொது மொழியாக இருக்கும் ஆற்றல் இந்திக்கு இல்லை, ஆங்கிலமே பொது மொழியாதல் வேண்டும் என்று எடுத்துக் கூறிடவும், நம்மை எல்லாம் அழைத்துப் பேசிடவும் முன்வந்துள்ளார் என்றால், வீரம் வீண்போயிற்று என்றா பொருள்! தியாகம் ஒளி விளக்காகிக் காட்டுகிறதே இன்று.

நாமும், தம்பி! நமது ஆற்றல் மூலம், தியாகத்தின் மூலம், விடுதலை விளக்கு ஏற்றி வைத்திட வேண்டும்.

ஏறத்தாழ ஆறாயிரவர் நம்மில் சிறை சென்றவர்களாகி விட்டோம்.

நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தடியடியும் கிடைத்து விட்டது.

நமது தோழர்களிலே சிலர், துப்பாக்கிக்கும் பலியாகி விட்டனர்.

ஆடவரும் கண்டு அஞ்சத்தக்க ஆற்றலைக் காட்டும் ஆரணங்குகள் நமது அணிவகுப்பில் உளர்.

எதையும் தாங்கிக்கொள்ளலாம், அண்ணா, வேல் பாயட்டும் விலாப்புறத்தில், வாள் வீசட்டும் கரத்தில், கழுத்தில், ஆனால் வன்கணாளர் வீசும் இழி மொழியை, பழிச் சொல்லை எப்படித் தாங்கிக்கொள்வது என்று துவக்கத்திலே கேட்டுக் கொண்டிருந்தோரெல்லாம் கூட, இன்று, எதையும் தாங்கும் இதயம் உண்டு என்பதைக் காட்டி விட்டனர்.

எனவே தம்பி, விடுதலைக் கிளர்ச்சியிலே வெற்றி பெறுவதற்கான எல்லாம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது; நாட்டிலே காணக்கிடக்கும், நயவஞ்சகம், ஏமாளித்தனம், ஆகியவற்றினுக்கு மட்டும் அஞ்சாமல், அளிக்கப்படும் அக்ரமத் தீர்ப்புகளை மாற்றி அமைத்திடும் வழி அறிவோம் என்று சூள் உரைத்து அறப்போரில், ஈடுபடுவோமானால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது திண்ணம்.

இந்த உறுதியைக் காட்ட உள்ள உரம் படைத்தோரை, உன் உடன்பிறந்தோரை, உடைமை போயினும், உயிரே போவதாயினும் உரிமையை மட்டும் இழந்திடமாட்டோம் என்று முழக்கமிடும் விரத்தோழர்களை, உடனழைத்துக் கொண்டு, கோழையையும் வீரனாக்கும் பார்வையுடன், கொல்லும் புலியும் அஞ்சத்தக்க நடையுடன், அரிமாபோல் நோக்கம் கொண்டு, அருமைத் தம்பி! திருச்சிக்கு வந்து சேர். 17, 18, 19, 20 திருச்சி வருவதற்கு முன்பு உனக்கு, நீ இருக்குமிடத்திலும், உலவும் இடங்களிலும் நிரம்ப வேலை இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநில மாநாடுபற்றி எங்கும் எடுத்துக் கூறவேண்டும்-எல்லா வகையாலும் நாடறியச் செய்திட வேண்டும்.

பெரிய "இதழ்கள்' ஒரு வரியும் எழுதா!

ரேடியோவில் மூச்சு பேச்சு இராது.

இரயில் நிலையங்களிலே விளம்பரப் பலகைகள் கிடையாது.

உன்னைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார் - நமது பொதுச் செயலாளர். எனவே, பேச்சும் எழுத்தும், மாநில மாநாடு பற்றியே இருத்தல் வேண்டும்! பட்டிதொட்டிகளிலும் சேதி பரவிடச் செய்ய வேண்டும். எத்தனை பெரிய இருட்டடிப்பையும் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்பும் ஆற்றல் உனக்குண்டு. எனவே தம்பி, இன்றே புறப்படு நண்பர்களைக் காண, உற்சாகத்துடன் எடுத்துக் கூறு மாநில மாநாடு பற்றி. எம்மைச் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமா, வாருங்கள் திருச்சிக்கு வந்து காணுங்கள் எழுச்சியை; எமது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள ஆவல் கொண்டோரே, திருச்சி வருவீர், எமது தோழர்கள் தரும் தெளிவுரையைச் செவி மடுப்பீர்; இதுகளா என்று ஏளனம் பேசுவோரே, இதுகள் சாதித்திருக்கும் செம்மையை அறிந்துகொள்ளத் திருச்சி வாரீர் என்று அனைவரிடமும் எடுத்துக் கூறு. தம்பி! நமது மாநாடு, ஓர் பாசறை மட்டுமல்ல- ஓர் பல்கலைக் கழகம் என்பதையும் அவர்கட்கு எடுத்துச் சொல்லு. சாக்ரடிஸ் முதல் ஷா வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலே வாழ்ந்து, உலகை வாழவைத்த உத்தமர்கள் பற்றிய விரிவுரைகளென்ன, விஞ்ஞான வித்தகர்கள் பற்றிய தெளிவுரைகளென்ன, விடுதலை வரலாறு பற்றிய விளக்க உரைகளென்ன-இவை யாவும், நாலு நாட்கள் நடைபெறும் நமது மாநாட்டிலே, தித்திக்கும் தமிழை எத்திக்கும் பரப்பிடும் சொல்லேர் உழவர்கள் எடுத்துரைத்திடப் போகும் சிறப்பினை அவர்கட்கெல்லாம் எடுத்துக் கூறு.

காவியக் கனிரசமும், ஓவியச் சிறப்பும் உண்டு என்பதனை எடுத்தியம்பு.

கருத்தைத் தெளிய வைத்திடும் தேனமுதை கலை வல்லோர் இசை மூலமும் நாடக மூலமும் தர இருக்கும் நேர்த்தியை எடுத்துக் கூறு.

எல்லாவற்றினுக்கும் மேலாக, எந்தையர் நாடு இன்றுள்ள இழிநிலை போக்கப்பட்டு, தனி அரசு பெற்று, தரணியில் ஓர் திலகமெனத் திகழ்வதற்கான வழிவகை பற்றிய பரணி பாடிட ஓர் படை திரண்டு நிற்கும் காட்சியின் மாட்சியினை எடுத்துக் கூறு.

நாட்கள் அதிகமில்லை தம்பி! நினைவிலிருக்கட்டும்.

பல செலவினங்களை இப்போதே சுருக்கிக்கொள்ள வேண்டும்-வசதிகளைத் தேடிப் பெறவேண்டும்.

திரண்டெழுந்து வந்து, இருண்ட மனத்தினரும் அறிவுச் சுடர் பெறுமளவுக்கு, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கி, திராவிடத்திலோர் புத்தொளி எழச் செய்யும் பெரும் பொறுப்பு உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஒளி படைத்த கண்ணினாய்,
வா, வா, வா!
உறுதிகொண்ட நெஞ்சினாய்,
வா, வா, வா!

என்று உரிமையுடன் அழைக்கிறேன்.

தமிழுண்டு தமிழ் மக்கள் உண்டு
இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்
நல்ல தொண்டு

என்ற பண் எழுப்பி, படை திரட்டிக்கொண்டு வா.

பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?

என்று நாட்டிலே இன்னமும் நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்டுத் தெளிவு பெறாமலிருக்குமிடங்களிலெல்லாம், சென்று கேட்டு-சிந்தனையைக் கிளறிவிட்டு, அவர்களை எல்லாம் திருச்சிக்கு வருக! திரு இடம் இதுவென அறிக என்று கூறி அழைத்து வா.

நல்ல தீர்ப்பு நமக்குக் கிடைக்க வேண்டும் தம்பி அதைப் பெற்றுத்தர, உன்னால்தான் முடியும். அந்த நோக்குடன் திருச்சி மாநாட்டுக்கு வந்து எழில் காட்டி, எழுச்சியூட்டி, இன்பத் திராவிடம் காண்பதற்கான வழிவகை தீட்டிச் செயலில் ஈடுபட, உறுதியுடன் வந்து சேர வேண்டுகிறேன்.

நமது நோக்கம் தூய்மையானது - வழக்கு சிக்கலற்றது - ஆதாரம் அப்பழுக்கற்றது; முயற்சியில் நாம் சிறப்புடன் இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்புதான் திருச்சி மாநாடு - மறவாதே!

"எல்லார்க்கும் தேசம்,
எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா
உரிமைகளும் ஆகுகவே
எல்லார்க்கும் கல்வி
சுகாதாரம் வாய்த்திடுக
எல்லார்க்கும் நல்ல இதயம்
பொருந்திடுக
வல்லார்க்கும் மற்றுமுள்ள
செல்வர்க்கும் நாட்டுடமை
வாய்க்கரிசி என்னும்
மனப்பான்மை போயொழிக
வில்லார்க்கும் நல்ல நுதல்
மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே
மணிமுரசம் ஆர்ப்பீரே.''

 

அன்பன்,

22-4-56