அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நல்ல தீர்ப்பு
1

விநாயகரும் தீர்ப்பும்-
தி.மு.க. சொற்பொழிவாளர்கள்-
தி.மு.க.வின் பணி-
திருச்சி மாநாடு.

தம்பி, "விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய பாட்டனார்!

கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து, உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர், இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில் தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும் பயனும் வரக்கூடியவிதமாக்கினார்.

ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும், இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும் கூறுவார்கள் - இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக இருக்கும் "பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்'' - ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக் காட்டினார்.

அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு, வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும். ஆதாரங்களை எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர். நிச்சயமாக அறம் வளர்த்தான் பிள்ளைதான், கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்படுவார் என்று கூறினர். ஆனால், வழக்கு மன்றத் தலைவரோ விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்! அப்பழுக்கற்ற ஆதாரம் காட்டினார் வழக்கறிஞர். சாட்சிகள் யாவரும் ஒழுங்காக உண்மையை எடுத்துரைத்தனர். என்ன அக்ரமம், எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகத் தீர்ப்பளித்தாரே! வீராசாமி நாயகர் தர்மகர்த்தாவாமே! அவரேகூட இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! அவர் வழக்குத் தொடுத்ததன் காரணமே, அறம் வளர்த்தான் பிள்ளைக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்கே தவிர, தர்மகர்த்தாவாக வேண்டும் என்பதற்கு அல்லவே!

அக்கிரமமான தீர்ப்பு!

அநியாயமான தீர்ப்பு!

ஊரே கண்டித்தது-அறம் வளர்த்தான் பிள்ளையே வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறினார்: "தாங்கள் தங்கள் கடமையைத் துளியும் குறைவின்றித்தான் செய்தீர்கள்- என்ன செய்யலாம்-இப்படி ஆகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை-வருத்தப்படாதீர்கள்'' என்றார்.

"இதுபோல ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதே இல்லை- சிக்கலற்ற வழக்கு-இதிலே இப்படித் திடுக்கிடத்தக்க தீர்ப்பு கிடைப்பது என்றால், என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை'' என்றார் வழக்கறிஞர். சொல்லிவிட்டு, "இவ்விதமான அநியாயத் தீர்ப்புக்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை'' என்று ஆயாசப்பட்டார்.

வழக்கறிஞரும் மற்றவர்களும் இந்தத் தீர்ப்பை, "அநியாயம்' என்று கூறிக் கண்டித்தனரே தவிர, வழக்கு மன்றத் தலைவர், தெளிவுடன் பேசினார்:

"என் தீர்ப்பை "அநியாயம்' என்று கூறுகிறார்களாமே! என்ன அறிவுச் சூன்யம் இவர்களுக்கு! அறம் வளர்த்தான் பிள்ளையின் "வக்கீல்' திறமையாகத்தான் வாதாடினார் திறமையைக் கண்டு, நான் மயங்கி, நீதியிலிருந்து தவறிவிடுவதா?'' என்று வழக்குமன்றத் தலைவர், தன் மனைவியிடம் கூறினார்.

"என்னதான் காரணம், உங்கள் தீர்ப்புக்கு'' என்று மனைவி கேட்டார்-வழக்கு மன்றத் தலைவர், கோயில், அறம் வளர்த்தான் பிள்ளை குடும்பத்தாருக்குச் சொந்தமென்று ஏதேதோ ஆதாரம் காட்டினார் வக்கீல். ஆனால், மறுக்க முடியாத ஒரு ஆதாரம் எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டுதான், வீராசாமி நாயகர் பக்கம் தீர்ப்பளித்தேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். "என்ன அந்த ஆதாரம்?'' என்று அந்த அம்மையார் கேட்டதற்கு, அவர், "கோயில், விநாயகர் கோயில்; நான் தர்மகர்த்தாவாக நியமித்திருப்பது வீராசாமி நாயகரை! விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர் தர்மகர்த்தா ஆகாமல், வேறு யார் ஆக முடியும்? கோயில் நாயகர் கோயில்! விநாயகர்!! ஆகவே, தர்மகர்த்தாவும் நாயகர்! அதுதானே முறை. பெயரைக் கேட்டதுமே எனக்கு உண்மை புலனாகிவிட்டது. விநாயகர் கோயில், வீராசாமி நாயகர்!'' என்று விளக்கமளித்தார்.

அம்மைக்கு முழுத் திருப்தி-தன் கணவன், நியாயம் தவறவில்லை, தவறாதது மட்டுமல்ல, வாதத் திறமையால், நீதியைக் குலைத்திட ஒரு வழக்கறிஞர் முனைந்தபோது, துளியும் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். அதுவல்லவா நேர்மை! என்றெண்ணிக் களிப்படைந்தார்.

விநாயகர் - என்ற பதத்திலே நாயகர் என்று இருக்கிறது.

வீராசாமி நாயகர் என்ற பதத்திலேயும் நாயகர் என்று இருக்கிறது

எனவே, நாயகர் நாயகருக்கே என்று தீர்ப்பளித்தார்.

அத்தகைய தீர்ப்பு அளித்திட வழக்குமன்றத் தலைவரால் முடிந்ததற்குக் காரணம், அவர் ஒரு துரைமகன் - வெள்ளைக்காரன்.

விநாயகர் என்பதிலே உள்ள நாயகர் என்பதற்கும், வீராசாமி நாயகர் என்ற பதத்திலே உள்ள நாயகர் என்பதற்கும், பொருள் வேறு வேறு என்பது தெரியாது.

எனவே, அவர் விநாயகர் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தார்.

ஊரார் இதை அநியாயத் தீர்ப்பு என்று கூறினர் - அவரோ இதைவிட நேர்மையான தீர்ப்பு தரமுடியுமா என்று கேட்டார்-தம் தீர்ப்பு அநியாயமானது என்று ஊரார் கூறினது கேட்டு, கோபித்துக் கொண்டார்.

ஆதாரங்கள் அப்பழுக்கற்றதாக இருந்தாலும், அதை எடுத்துரைக்கும் ஆற்றல் குறைவின்றி இருந்தாலும், வழக்குமன்றத் தலைவருக்கு, "பிரச்சினை' புரியவில்லை என்றால், அநியாயத் தீர்ப்புதானே கிடைக்கும்.

பிரச்சினை புரியவேண்டுமானால், வழக்காடு' மக்களுடைய முறை, நெறி ஆகியவற்றினைத் தெரிந்துகொள்ளத் தக்கவராக, வழக்கு மன்றத் தலைவர் இருக்க வேண்டுமல்லவா!

துரைமகனுக்கு, இங்கு உள்ள ஜாதி அமைப்பு முறைகள் என்ன தெரியும்? எனவே, விநாயகர், வீராசாமி நாயகருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்தார்.

கைக்கூலி பெற்றுக்கொண்டு அநியாயத் தீர்ப்பு அளிப்போர் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அந்தத் தூய இடத்தைவிட்டு அகற்றப்பட வேண்டியவர்கள்.

நியாயம் எது? அநியாயம் எது? என்று புரிந்துகொள்ளும் திறனற்று அநியாயத் தீர்ப்பு அளிப்போன் என்றும் எள்ளி நகையாடத் தக்கவன், அந்த இடத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவன்.

கைக்கூலி பெற்றதாலும் அல்ல, மெய் எது? பொய் எது? என்று ஆய்ந்தறியும் திறனற்றதாலும் அல்ல, வழக்கிலுள்ள பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கான மனப்போக்குக் கொள்ள முடியாதபடி, இனத்தால், மொழியால், பண்பாட்டி னால் முற்றிலும் மாறுபட்டவராக இருப்பதால், பிரச்சினையைத் தவறாகப் புரிந்து கொண்டு, நியாயமான தீர்ப்பு என்று எண்ணிக்கொண்டு, அநியாயத் தீர்ப்பு அளிப்பவர் குறித்து என்ன எண்ணுவது?

துரைமகனுக்கு பிரச்சினை புரியவில்லை - புரியாது! எனவேதான் விநாயகர் கோயில் வீராசாமி நாயகருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்தான். தம்பி, திராவிடநாடு திராவிடருக்கு என்று வழக்காடும் நாம் எடுத்துக்காட்டாத ஆதாரமில்லை, விளக்கிக் காட்டாத வரலாறு இல்லை, தேடிக்காட்டாத புள்ளி விவரமில்லை. இவைதமை நாம் எடுத்துரைக்கும் திறன்பற்றியும் யாரும் குறை கூறிவிடுவது முடியாது. வாயாடி வம்பர்கள் - ஒன்றுக்கு ஒன்பது காரணம் காட்டுபவர்கள் - எதையும் கிளறிக்கிளறிக் காட்டுபவர்கள் என்றெல்லாம் மாற்றார்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்களல்லவா - பிரச்சினையை நாம் அவ்வளவு விளக்கிக் காட்டுகிறோம் என்பதுதானே அதற்குப் பொருள்.

ஆகவே, வழக்கை எடுத்துரைப்பதிலே நாம் ஆற்றலற்றவர்கள் என்று கூறிவிட முடியாது.

எனினும், விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான் தர்மகர்த்தா என்று தீர்ப்புக் கிடைக்கிறது.

எடுத்துக்காட்டுக்காக குறிப்பிடப்படும் விநாயகர் கோயில் வழக்கிலே தவறான தீர்ப்பு தரப்பட்டதற்குக் காரணம், தீர்ப்பளித்தவர் ஒரு துரைமகன் - பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள அன்னியன்.

நமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காததற்குக் காரணம். அன்னியன், நமது பிரச்சினையை புரிந்துகொள்ளாதவன், வழக்கு மன்றத் தலைவனாக வீற்றிருக்கிறான் என்பதல்ல.

அதுமட்டுமல்ல.

கைக்கூலி வாங்கிக்கொண்டு அநியாயத் தீர்ப்பளிப்போர்; கருத்திலே தெளிவற்ற காரணத்தால், வழக்கின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், அநீதியான தீர்ப்பளிப்போர்;

நீதியாகத் தீர்ப்பளித்தால், அக்ரமக்காரன், தன்னை நிந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால், அநியாயத் தீர்ப்பளிப்போர் இவ்விதம் எல்லா வகையானவரும், வழக்கு மன்றத்தில் கொலு வீற்றிருக்கிறார்கள். நீண்டகாலமாக, மூடி மறைக்கப்பட்டுப்போன ஒரு கொலை வழக்கில், இறந்துபோன வனுடைய நகத்தின் நுனி, கொலை செய்தவனுடைய சட்டையில் பதிந்து கிடப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் துப்பினைத் துணைகொண்டு, திறமைசாலி, மேலும் தீவிரமாக வேலை செய்து, இன்னான்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்து, அவனைக் கூண்டிலேற்ற வேண்டும் என்று எண்ணும்போது, அவனேதான் வழக்குமன்றத் தலைவன் அல்லது போலீஸில் உயர்தர அதிகாரி என்பது தெரிந்தால், அந்தத் துப்பறிவோனுக்கு எப்படி இருக்கும்?

அதுபோன்ற நிலை, நமக்கு?

குற்றவாளிகள், கொற்றம் நடத்தும் கொடுமையைக் காணவேண்டி இருக்கிறது.

சாட்சிகளைத் திரட்டவும், அவர்களின் மனமயக்கத்தை, மருட்சியைப் போக்கவும், மிகமிகச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டி நேரிடுகிறது.

வழக்கு மன்றம் வந்திருந்து உண்மை பேசுவதாக ஒப்புக் கொள்ளும் சாட்சிகளிலேயே சிலர், நெருக்கடியான கட்டம் எழுகிறபோது, நெளிந்துவிடுகிறார்கள். பகைக்கு அஞ்சி மாற்றாருடன் கூடிக்கொள்ளும் சாட்சிகளைக்கூடக் காண நேரிடுகிறது.

இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தான பிறகு, தீர்ப்பளிக்கும் கட்டத்தின்போதோ

கைக்கூலி வாங்குவோர்
கருத்துக் குழப்பம் கொண்டோர்
பிரச்சினைக்குப் புதியவர்கள்
அலசி உண்மை காண முடியாத அன்னியர்

என்ற வகையினர் வீற்றிருக்கின்றனர் - விபரீதமான தீர்ப்பு கிடைக்கிறது.

இல்லையானால், தம்பி, சிக்கலற்ற வழக்கு நம்முடையது, அப்பழுக்கற்ற ஆதாரம் இருக்கிறது. அதனை எடுத்துரைப்ப திலும் நமது தோழர்கள் ஆற்றல் மிக்கவர்கள். எனினும் நமக்குச் சாதகமான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லையே - காரணம் என்ன காட்ட முடியும்?

திராவிட நாடு திராவிடருக்கே என்பது நமது இதயகீதம்-உரிமை முழக்கம்.

திராவிடம் நமது நாடு, முன்னாளில் தனியாட்சியுடன் இருந்த நாடு.

இதை அடிமைக் காடாக்கி விட்டனர்.

திராவிட நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு.

இதை வடநாட்டுச் சரக்குக்குச் சந்தையாக்கிவிட்டனர்.

திராவிட நாடு, ஜாதி, மத, பேதம் எனும் பித்துப் பிள்ளை விளையாட்டு இல்லாததாக இருந்தது - அன்று.

இன்று திராவிடத்தை ஜாதி மத வெறியரின் வேட்டைக் காடு ஆக்கிவிட்டனர்.

திராவிட நாடு பஞ்சமும் பட்டினியும் பசியும் அறியாதிருந்த நாடு.

பருத்திக் கொட்டையும் புளியங் கொட்டையும் கத்தாழைக் கிழங்கும்கூட தின்று வதைபட வைத்து, பஞ்சக் காடாக்கினர்.

திராவிடத்தின் புகழ் தரணி முழுவதும் பரவி இருந்தது - முன்பு.

இன்று திராவிடத்தின் "தலைவிதி' டில்லியில் எழுதப்படுகிறது.

திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி வைத்தது.

இன்று மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு.

திராவிடம் தேய்கிறது.

தன்மானம் அழிகிறது.

வீரத் திராவிட மக்களே! விடுதலை வேண்டாமா? பிறப்புரிமையைப் பெற வேண்டாமா? திராவிட நாடு திராவிடருக்காக வேண்டாமா?

இதனை எடுத்துக் கூறுவதிலே நமது தோழர்கள் திறமை யற்றவர்களா என்றால், இல்லை, இல்லை என்பதை மாற்றாரும் கூறிவிடுவர், நாடெங்கும் நடைபெறும் நமது இயக்க நல்லறிவுப் பிரசாரத்தைக் கேட்போர், மகிழ்கின்றனர், வியப்படைகின்றனர், பாராட்டுகின்றனர்-பொறாமையால் தாக்குண்டு புலம்புவோரும் உளர்.

நாவலர் நடையில் தமிழ் இலக்கியம் ஆட்சி செய்கிறது.
நடராசன் பேச்சிலோ எளிமையும் தோழமையும் சுவை தருகிறது.
கருணாநிதியின் பேச்சு கலை முரசு.
கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது.
ஆசைத்தம்பியின் பேச்சில் அழுத்தந்திருத்தம் அழகு பெறுகிறது.
சீனுவாசன் பேச்சிலே சிந்து பைரவி கேட்கிறது.
இளங்கோ பேச்சில் எதிரியை மடக்கிடும் முடுக்கு தெரிகிறது.
சம்பத்து பேசுகிறார்; சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள்.
M.S.இராமசாமி பேசுகிறார்; எதிரியின் மனமும் இளகிவிடுகிறது.
சிற்றரசு பேசுகிறார்; சீறி வருவோரும் சிரித்தபடி குழைகின்றனர்.
சத்தியவாணி பேச்சிலே சுவையும் சூடும் கலந்து கிடைக்கிறது.
குடந்தை நீலமேகம் அனுபவத்தைக் கொட்டுகிறார்.
மதுரை முத்து தமிழ் மரபாம் வீரத்தை விளக்குகிறார்.
கோவை இராஜமாணிக்கம் கோலோச்சும் வழியே கூறுகிறார்.
ப.உ. சண்முகம் பேச்சில் பண்பும் பயனும் காண்கிறோம்.
காஞ்சி அண்ணாமலை கனிவு பொழிகிறார்.
தென் ஆற்காட்டிலே சாம்பசிவம் சாந்தம் எழப் பேசுகிறார்.
வடாற்காட்டு முல்லை சத்தி எண்ணப் பண்ணைக்கு வண்ணம் தேடி அளிக்கிறார்.
பராங்குசம் பேசும்போது பாட்டாளி படை திரளுகிறது.
திருச்சி மணி பேசும்போது தீ கிளம்பித் தீயோரைக் கருக்கிவிடுகிறது.
வில்லாளன் பேசுவதிலே வீரமும் விவேகமும் காண்கிறோம்.
தூத்துக்குடி சாமி துரத்தி அடிக்கிறார் எதிரிகளை.
தங்கப்பழம் பேசுகையில் மாற்றார் பங்கம் அடைகிறார்கள்.
சிவசாமி பேசும்போது சீறும் மாற்றாரும் சிந்திக்கின்றனர்.
போளூர் பேசினால் போகக் கிளம்பும் பேர்வழிகளும், உட்கார்ந்து மகிழ்கிறார்கள்.
அரக்கோணம் கிருஷ்ணசாமி பேசும்போது ஆற்றல் புரியும் வகை அறிகிறோம்.
மதியழகன் பேச்சு மாணவர் உள்ளமெல்லாம் நிறைகிறது.
பொன்னம்பலனார் பேச்சு புகையும் எரிமலை.
அலமேலு அப்பாதுரையின் பேச்சிலே ஆர்வம் கொந்தளிக்கிறது.
அருண்மொழியும் பூங்கோதையும் அழகு தமிழில் அகில உலகப் பிரச்சினைகளைக்கூட அலசிக் காட்டுகிறார்கள்.

யார்தான் அந்த இயக்கத்திலே அழகாக, சுவைபட, பொருள் விளங்க, பயன் கிடைத்திடும் வகையில், பேசாமலிருக்கிறார்கள்-பேச்சில் வல்லவர்கள், எழுத்தும் அவ்விதமே என்று கூறாதார் இல்லை.

நம்மை நிந்திப்போரும் எதிர்ப்போருங்கூட, நமது நடையைப் பயின்றுகொள்ளவேண்டி வருகிறது.

எனினும் தம்பி, நாம் எடுத்துரைக்கும் வழக்குக்குக் கிடைக்க வேண்டிய நீதியான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. காரணம் என்ன என்பது பற்றியும் எண்ணிப் பார்த்திட வேண்டும்-நீதியான தீர்ப்பு நமக்குக் கிடைத்திடச் செய்யும் வழிவகை யாது என்பது பற்றியும், நாம் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும்.

மாநில மாநாடு அத்தகையதோர் மன்றத்தில் நாமனைவரும் கூடி இருந்து, பிரச்சினைகளையும் நிலைமை களையும் ஆராய்ந்து முடிவுகள் காணும் வாய்ப்பாகும்.

எனவே, திராவிட விடுதலையில் நாட்டம் கொண்டுள்ள எவரும், எந்தக் காரணம் கொண்டும், இந்த வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது.