அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஞாயிறு போற்றுதும்!
3

சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்?

மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது - இயற்கை அது.

விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு!

மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்!

பயிர் பறித்துச் சந்தன மணம்பெற்று மகிழ்வோம்! தேக்கினில் வண்ணப்பூவும், மாவினில் வாழை பலாவும் பெற்றிட விந்தை முறை காண்போம் என்று பேசலாம்; மகிழ்ச்சிபெற! ஆனால் இயற்கையை அடியோடு மாற்றிட இயலாதன்றோ?

எனவேதான், தமிழ் தந்திடுவன, பிறமொழி தந்திடா! தமிழர் கொண்டிடும் பண்பு, பிறரிடம் புகுத்தலாம், பூத்திடாது! எனவேதான், தனித்தன்மைகொண்டோர் நாங்கள் எனக் கூறுகின்றோம்.

எரிபொருள் ஆகத்தக்க தருக்களே, யாவும்; ஆனால், நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும்; அஃதேபோலப் பயன்தர மொழிகள் உண்டு, மணம்பெறத் தமிழே வேண்டும் என்கின்றோம்.

பிறமொழி ஆதிக்கத்தால், பொருளாதாரத் தாழ்நிலையால், எதையும் உரிமையுடன் செய்திடும் அரசியல் உரிமை பெறாதாராய் இருக்குமட்டும், தமிழர் கண்ட மணம்கமழ் உயர் தனிப்பண்பு தன்னை உலகுக்கு ஈந்து, உலகிலே குவிந்துள்ள கருத்துச் செல்வத்தை மேலும் பெருக்கிடும் சீரிய செயலில் பெற்றி கிடைத்திடாது. எனவேதான், மொழி வளர்ச்சி என்பதுடன் அரசியல் விழிப்புணர்ச்சியும் கலந்து, தி. மு. கழகமாக வடிவமெடுத்திருக்கிறது. மக்களாட்சி முறையே, மக்களின் வாழ்வுக்கு இன்ப ஒளி அளிக்கவல்லது என்பதனால், அம் முறையைப் போற்றுகிறது.

அரசியல் கருத்து வளர்ச்சிபற்றிய வரலாற்றினைப் பார்த்தால், தம்பி! இந்த மக்களாட்சி முறை ஏற்பட எத்தனை பாடுபடவேண்டிய இருந்தது, கொடுத்த பலி எத்துணை என்பது விளங்கும். எனினும், எழு ஞாயிறு எனக் கிளம்பிற்று மக்களாட்சி, ஆந்தைகள் அலறி ஓட, வௌவால்கள் பறந்து பதுங்க!!

பாம்பெது பழுதெது, கனி எது காய் எது, தளிர் எது சருகு எது, மேடும்பள்ளமும் எவை எவை, தொழிலிடம் எது, ஆங்கு செல்லப் பாதை எது - எனும் பொருளின் பாங்கறியும் திறன் மக்கட்கு அளிப்பது ஒளியாகும் - பேரொளிப் பிழம்பே ஞாயிறு!

ஞாயிறு! இல்லையேல் ஞாலம் இல்லை!

பொருளின் பாங்கினை நாம் உணர்ந்திட ஒளி அளிக்க வல்லது ஞாயிறு, எனினும், பொருளின் அமைப்பினைத் திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்!

அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம்.

நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான்.

ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும்.

கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும்.

ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன்.

"பொலபொல எனஇருள் புலரும் வேளை
கலகல வெனக் கரைந்தன புட்கள்
கொண்டையை அசைத்துக் கூவின சேவல்
தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி
மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி
அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்.''

அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா?

காலை மலர்ந்தது மாந்தரெலாம்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்

என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது.

"வயல்புறம் நோக்கி மாண்புடை உழவர்
செயல்திறம் காட்டச் சென்றனர் ஏருடன்
நிலாத்திகழ் மேனி நெடுநடை ஏறுகள்
விலாப்புறம் அசைவுற விரைந்தன செருக்குடன்''

எனவே, கதிரவன் கிளம்புவது ஒளியூட்டி உயிரும் எழிலும் ஊட்டமட்டும் அல்ல, கமலத்தைச் சிரிக்க வைத்து, கன்னியரைப் போட்டியிட வைத்திட மட்டுமல்ல, தொழில் நடத்தப் புறப்படுவீர்! என்று அறிவுறுத்த, ஆணையிடவுமாகும்.

மக்களாட்சி எனும் முறையும், இருட்டறையாக வைக்கப் பட்டுள்ள அரசியல் துறைக்கு ஒளியூட்டி, உயிரூட்டி, எழிலூட்டி, அம்மட்டோடு நின்றுவிடுவது அல்ல. பொறுப் புணர்ந்து செயல்படுமின்! என்று ஆணையும் பிறப்பிக்கின்றது.

இதனை உணர்ந்திடவும் இவ்விழா, பயன்படட்டும்.

ஒளிதரும் ஞாயிறு வெப்பம் மிகுதியாகக் கக்கிடும் போக்கும் உண்டு. அஃதேபோல மக்களாட்சியிலேயும், உரிமை மறுத்தல், உருட்டி மிரட்டுதல்போன்ற ஆகாச் செயல்களும் முளைப்பதுண்டு! அவையாவும் களைகள் - பயிர் அல்ல! காலமறிந்து களைகளை நீக்கிடல்வேண்டும்; நீக்குங்காலை களையினைப் பறித்தெடுத்திடும் வேகம் தன்னில், பயிர் அழித்திடக்கூடாது.

மக்களாட்சியிலும் சிலபல கேடுகளும் கொடுமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும் போக்கிடும் வாய்ப்பும் மக்கட்குக் கிடைக்கிறது.

எனவே இன்று நடைபெறும் போர், உரிமையின் மாண்பதனை நாம் உணர்ந்து போற்றுகிறோம், எந்த வலிவாலும் இதனை வீழ்த்திடுதல்கூடாது என்ற உண்மையினை, உலகறியச் செய்கின்றோம் என்பதற்கும் சேர்த்துத்தான்.

பற்பல நாட்டு வரலாறுகளிலே, மமதை மிக்க மன்னர்கள் பற்றிப் படிக்கிறோம். கொலையைக் கூசாது செய்து, கொடி வழியை அறுத்தெறிந்து விட்டுக் குறுக்கு வழி நுழைந்து கொற்றம் கைப்பற்றினோர். காமக் களியாட்டத்துக்கெனவே நாட்டிலுள்ள கன்னியர் உளர் என்ற கேடு நிறை கருத்துடன் இருந்திடும் போக்கினர், எனப் பல படித்திருக்கிறோம்.

முறையும் தெளியும் தொடர்பும் மிக்கதான வரலாறு தொகுத்தளிக்கப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ளனவற்றைக் கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.

அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை.

வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டது மான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர் களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை.

ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும்.

கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை.

மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டி னைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை "வழிபடத் தக்கவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர்.

"தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . .''

"அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!''

"ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . .''

"தளபதி எங்கே?''

"வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக் கிறார்.''

"அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?''

"அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . .''

"அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், "ராஜபக்தி' மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . .'' "தங்கள் மகள். . .''

"எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . .''

இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்ன ராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.

கொடுங்கோலர்கள் மிகுந்திருந்த நாட்களிலேயே, இங்கு இருந்துவந்த கோனாட்சியையே, குடிக்கோனாட்சியாக்கி வைத்தவர் தமிழர் என்றால், குடியாட்சி முறை ஏற்புடையது, எங்கும் நிலவிடவேண்டியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் இந்நாட்களிலே, மக்களாட்சி முறையினை மாண்புள்ளதாக்கும் பொறுப்பேற்கத்தக்கவர்கள் தமிழர் என்று கூறுவதிலே தவறில்லையே.

தமிழர் நெறி, கூடி வாழ்தல், கேடு செய்தல் அல்ல.

தமிழர் முறை, கருத்தறிந்து காரியமாற்றுதல், கத்தி முனையில் கட்டளை பிறப்பிப்பது அல்ல.

தூய்மை நிறைந்த மக்களாட்சிமுறை, தேவைப்படும்போது, பொது நோக்கத்துக்குத்தான் கட்டுப்படுமேயன்றி, கட்சிக் கொடி களுக்கு அன்று. அங்ஙனமாயின் கட்சிகள் பலப்பல ஏன், தனித்தனிக்கொடிகள் ஏன் என்று கேட்கப்படுகிறது. இது எரிகிற வீட்டிலிருந்து எடுத்தவரையில் இலாபம் என்ற போக்கே யன்றி, வேறில்லை. ஒரு பொது நோக்கத்துக்காகப் பாடுபடும் மாண்பு, மக்களாட்சிக்கு உண்டு என்பதாலேயே எல்லாவற்றையுமே கூட்டிக் கலக்கி ஓருருவாக்கி பேருருவாக்கிவிட எண்ணுவது பேதைமை மட்டுமல்ல, கேடு விளைவிக்கும்.

மலர்களை உதிர்த்து இதழ்கள் குவித்திடலாம் - இதழ் களைக் குவித்து, புதிய பூக்களை மலரச்செய்திட முடியாது. மலர்களைத் தொடுத்து மாலைகளாக்கலாம் - செடிகள் மாலை மாலையாகவே ஏன் தந்துவிடக்கூடாது என்று எண்ணுவது, வேடிக்கை நினைப்பன்றி வேறில்லை.

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டச் சொன்னார் சான்றோர்; தனித்தனி கனிகளே கூடாது என்றார் இல்லை.

நமக்குச் சில வேளைகளிலே ஆவல் ஏற்படும்; விந்தையான எண்ணங்களெல்லாம் எழும்.

வாழைப்பழம்போல உரித்திட எளிதான தோல்கொண்ட தாகவும், பிசின் இல்லாத முறையில் பலாப்பழச் சுவைகொண்ட சுளைகள் கொண்டதாகவும், அதுபோட்டுக் குதப்பத்தக்கதாக இல்லாமல், மென்று தின்னத்தக்கதாகவும், அந்த அருங்கனியும் ஏறிப்பறித்திடவேண்டிய உயரமுள்ள மரங்களில் இல்லாமற் படரும் கொடியிலேயே இருந்திடவும்வேண்டும்; அக்கொடியும் விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் - விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா!

தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் - இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா!

ஒவ்வொன்றும் தன் "கதை'யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே - அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும்.

மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் "படைப்புகள்' கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை.

எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் "படைப்புக' ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும் "அறுவடை' காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை.

ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும்.

ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க. எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் சீவி எடுத்துவிட்டு, அதற்கு அடுத்து உள்ளதை உரித்து எடுத்து விட்டு, அதற்கும் பிறகு உள்ள ஓட்டினை உடைத்து உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம்.

மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டு களித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ!

இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர.

ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும்.

இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! - என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்?

அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் "நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!'' என்று கூறுவாரேயன்றி, "இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழை கின்றான்'' என்று கொண்டாட மாட்டார்கள்.

இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை.

கருத்துக்கள் பல மலர்வது, பல பண்டங்களை இயற்கை தருவதுபோன்றதாகும். அவை வெவ்வேறு முறைகள் கொண்டனவாய் இருப்பினும், முடிவில் ஒரு பயனே பெறுகின்றோம். அந்தப் பயன்பெறும் முறையிலே தான் செம்மை தேவை; படைப்பின் முறையில் அல்ல!

தம்பி! இயற்கையோடு அளவளாவ, நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை, நகர வாழ்க்கையும் நாகரிகப் போக்கும் இயற்கையின் கோலத்தையே மாற்றிடச் செய்து விட்டன.

பழந்தமிழர் அதுபோல் இருந்திடவில்லை; புலவர்களின் கண்கள் இயற்கையைத் துருவித் துருவி ஆராய்ந்தன; சங்ககாலப் பாக்களில், எத்தனை பூக்களைப்பற்றிய செய்தி அறிகிறோம், அன்று அவர் ஆக்கிய கவிதைகளினால், காவும் கனியும், கரியும் கடுவனும், அருவியும் அளிவண்டும், இன்றும் நமக்குத் தெரிகின்றன.

மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்
நீர்சூழ் வளவயல்

கண்டனர்; கவி சுரந்தது.

நீர் வளமிக்க வயலோரம் உள்ள மாமரத்தின் தளிர் தடவிக் கொடுக்க, நாரை இனிது உறங்குகிறதாம்!

கழனிக் கரும்பின்
சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.

பாங்கினைப் பார்க்கிறார் புலவர்.

நன்செய் நிலத்தில் விளைந்துள்ள கரும்பின் வழி ஏறிக் காலை இளவெயிலில் ஆமை காய்கிறதாம்.

இரவெல்லாம், பாவம், நீர் நிரம்பிய இடத்திலிருந்ததால், உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது; இளவெயிலில் காய்கிறது, ஆமை!

தம்பி! கவனித்தனையா, புலவர் தந்துள்ள கருத்துள்ள பதம் ஒன்றை - காலை வெயில் என்று கூறினால் இல்லை - வெயிலில் என்று சொன்னாரில்லை - பசு வெயில் என்கிறார் - செல்லமாக!

ஆமை, வெயிலிலேயே நீண்டநேரம் இருக்கப் போவ தில்லை - ஏன்? என்கிறாயா, தம்பி! புலவர் கூறுகிறாரே புரியவில்லையா? எங்கே கூறினார் அதுபோல என்கிறாயா? அப்பொருள், அவர் கூறியதிலே தொக்கி இருக்கிறது. கரும்பின் மீது ஏறி அல்லவா ஆமை பசு வெயில் கொள்கிறது! கரும்பின்மீது எப்படி ஆமை அதிக நேரம் இருந்திட இயலும். உழவன், அப்பக்கம் வந்துவிடுவானன்றோ!

மாந்தளிர் தடவிக்கொடுக்கத் துயில்கொள்ளும் நாரை! கரும்பினில் ஏறிப் பசுவெயில்கொள்ளும் ஆமை!

உறங்கும்நிலை! விழித்து நடமாடி உடலுக்கு வெப்பம் பெறும் நிலை.

நெடுங்கழி துழைஇய
குறுங்கால் அன்னம்
அடுப்பு அமர்எக்கர்
அம்சிறை உலரும்!

உப்பங்கழியிலே மீன் தேடி உண்ட அன்னம், அடும்பங் கொடி படர்ந்திருக்கும் மணல்மேட்டில் ஏறித் தன் சிறகை உலர்த்திக் கொள்கிறது.

ஏறக்குறைய நீராடிவிட்டு வந்து உடலை உலர்த்திக் கொள்வதுபோன்றது.

இதுபோல், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், எழில் கண்டு இன்புற மட்டுமல்ல, பயன் பெற்றிடவும், இயற்கையின் பொருள் விளக்கிக்கொள்ளவும் முடிந்தது, பழந்தமிழர்களால்.

கருணானந்தம் தந்துள்ள கவிதை காட்டுதல்போல்,

"உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்
அறநெறி பரப்பும் குறள்முறை தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தன்னேர் இல்லாத் தமிழக உழவர்
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்;
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!''

பொங்கற் புதுநாள் என்பதால், இந்நாளில் மகிழ்வுபெற்று, என்றென்றும் இம்மகிழ்வு, அனைவர்க்கும் கிடைத்திடத்தக்க நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன்.

களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று "சங்கநாதம்' செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும்.

தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகி விட்டன - நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன - எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை.

விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது.

எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன்.

கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் - இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!!

அண்ணன்,

14.1.1963