அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஞாயிறு போற்றுதும்!
2

தம்பி! களத்திலே இருக்கும் படைமீது, வேகமாகப் பறந்துவரும் வெடி விமானங்கள் தாக்கி, படையை நாசமாக்கும் என்று இன்று படிக்கிறோமல்லவா? படையுடன் படை போரிட்டால், வீரம் காட்டலாம். விண்ணேறி வரும் விமானம், மின்னல் தாக்குதல் நடத்தும்போது, திருப்பித் தாக்க முடியுமா? துரத்திக்கொண்டு போய் அடித்து நொறுக்க முடியுமா? முடியாது.

தம்பி! அதோ பார், மேலே சேவல்கள்! சேவல்களா இத்தனை உயரமாகப் பறக்கின்றன என்று கேட்கிறாய்; இந்தச் சேவல்கள் பறந்திட இயலும், உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக் கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது.

இந்த வேலை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் ஆண்டலையடுப்பு.

ஓஹோ! எரிசிரல் தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும், பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும், எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில் உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல்.

அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் கருவிரலூகம். வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் - உயிர்போன பிறகுதான் பிடி தளரும் - பிணம் கீழே விழும்.

இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது.

வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ, இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்:

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையிலும் வயந்திகழா சூ-னும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!

என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட!

போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள "தென்னாட்டுப் போர்க்களங்கள்'' எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர்.

"காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி,
வேங்கை நாடும், கங்கை பாடியும்
தடிகை பாடியும், நுளம்ப பாடியும்
குடமலை நாடும், கொல்லமும், க-ங்கமும்,
முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு''

வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு.

மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல.

பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும் நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம்.

"வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர்
வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை.
கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை
கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை.
வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி
வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக்
கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில்
குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை.''

என்று இனிய கவி அளிக்கும் சுரதா தீட்டியுள்ளார்.

பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்:

"சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று
சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக்
காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்;
கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும்
நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும்
நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும்
மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து
முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!''

இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு "இமை'யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம் அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம்.

கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு - எனினும், அக் கொடி யுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் "கொற்றம்' இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது.

நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம்.

துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று.

விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல.

சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, "இடுக்கண் வருங்கால் நகுக!' என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள் ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது.

இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்:

"மொட்டுமுதல் இதழ்விரித்து
முல்லை சிரித்ததாம்! - அதில்
மொண்டுமொண்டு தேன்குடித்து
வண்டு சிரித்ததாம்!
சொட்டுச்சொட்டு மழைத்துளியைச்
சொந்தம் என்றதாம் - அந்தச்
சொந்தம்கொண்ட இந்தமண்ணும்
துவண்டு நின்றதாம்!

*

நீல வானில் வந்தநிலவு
நீந்திச் சிரித்ததாம்! - அதை
நின்றுபார்த்து விண்ணின் மீனும்
நெகிழ்ந்து சிரித்ததாம்!
பாலை அள்ளித் தெளித்ததனால்
பாரும் சிரித்ததாம்! - இதைப்
பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு
பிள்ளை சிரித்ததாம்.

வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத் திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் - புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும்.

கவிஞர் முடியரசன் - அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்:

"முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து
முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்
எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து
மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப்
பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற''

அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும்.

தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும்.

ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடாத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சி களைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது - எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை.

கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை - பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை - மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது.

மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப் பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல; இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு - நாட்டு விடுதலைக்கு - வழி கோலின - மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன.

ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர்.

பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும்.

இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன.

இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம்.

அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழி யாக நீடித்து நிற்க இயலாது.

இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது.

பகைவன் உள்ளே நுழைந்ததும் கொள்கை வேறுபாடு மறந்து ஒன்று திரண்டு வாரீர், பகை முடிப்போம்! பழி துடைப்போம்! என்று பண்டித ஜவஹர்லால் நேரு, கனிவுரை யாற்றினார் - அத்துடன், ஓர் அறிக்கை மூலம்,

இந்தி திணிக்கப்பட மாட்டாது.

ஆங்கிலம் நீடித்து வரும்.

இந்தியினைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்கள், எவ்வளவு காலத்துக்கு ஆங்கில மொழி இருத்தல்வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கில மொழி இருக்கும் என உறுதி அளிக்கிறேன்

என்று தெளிவளித்தார், தேன் பெய்தார்.

இதுபோல, வேறெந்தக் கிளர்ச்சிக்கும் நேரடி வெற்றி உருப்படியாகக் கிடைத்ததில்லை.

எனினும், இதுவும்கூட நிலைத்து நிற்கும் வெற்றி எனக் கொள்வதற்கில்லை, மாயமானாகிப் போகலாம். எதற்கும் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல்வேண்டும் என்ற நிலை தமிழரிடம் காண்கிறோம்.

இன்று இந்திமொழி ஆதிக்கம் செயக்கண்டு, திரண் டெழுந்து நின்றுள்ள தமிழர், பின்னர் ஓர் நாள் அயர்ந்துவிடக் கூடும், அணி கலையக்கூடும், அதுபோது, இது தக்க சமயம் என, ஆதிக்கம்தனைச் செலுத்த இந்தி அம்பாரி மீதமர்ந்து வரக்கூடும். இன்னும் ஓர் ஈராண்டில் இந்த நிலை வந்திடாதபடி தடுக்க, அரசியல் சட்டத்தைத் திருத்திடவும் ஒருப்படுகின்றனர், தமிழரிடை இதுபற்றி மலர்ந்து காணப்படும், பெருமை மிகு எழுச்சி காரணமாக, சில ஆண்டுகள் கழித்து, தமிழர் சிந்தை திரிந்து, செயல் மறந்துபோவரேல், அரசியல் சட்டத்திலே புகுத்தப்படும் திருத்தம் நீக்கப்பட்டுவிடக்கூடும்.

அரசியல் சட்டம், திருத்தப்படக்கூடியது.

எனவே, எதையும் நீக்கவும் எதனையும் நுழைக்கவும், குறைக்கவும் வாய்ப்பு உளது.

எனவே, என்றென்றும், எந்நிலையிலும், தமிழ்மொழிக்கு ஊறு நேரிடா வழி காணவேண்டும், எனும் எண்ணம் எழுகிறது. தமிழ் மொழிக்குக் கேடு செய்திடும் நிலையில் ஓரிடம் இருத்தல் எற்றுக்கு என்ற கேள்வி எழுகிறது! அரசியலில் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்சினை பிறந்துவிடுகிறது.

இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது!

தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது!

அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக் காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும்.

தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல.

எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர்.