அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் கரமும், மன்னர் சிரமும்
3

‘அயர் புரட்சியை அடக்க நானோர் தொண்டர்படை திரட்டுவேன். பதினாயிரவர் முன்வருக!’ என்றான் மன்னன். படை திரளவில்லை. மாமன்றம் தடை விதித்து.

மன்னன் மீண்டும் தத்துவம் பேசினான் - கேட்பார் இல்லை.

மாமன்றம், பழைய ஏட்டைப் புரட்டிப் பார்த்தது. செய்யாது வைத்திருக்கும் காரியம் எது இருக்கிறது என்று அறிய. மக்களால் வலியுறுத்தப்பட்டுவரும் மத அலுவலர்களில் உயர் நிலையில் உள்ளவர்கள் அரசியலில் இடம்பெற்று, செல்வாக்குடன் இருந்தனர். ‘அந்த உலகம்’ குறித்து அரும் உபதேசம் ஆற்றவேண்டியவர்களுக்கு இந்த உலக அரசியலில் அக்கறை ஏன் என்று புதுக்கருத்தினர் கேட்டனர். ஜேம்சும் சார்லசும், உறுதியுடன் மத அலுவலர் சார்பில் வாதாடினர். “பாதிரி இல்லையேல் பார்த்திபனும் இல்லை!” என்று ஜேம்ஸ் கூறினான். சார்லசுக்கும் அதே கொள்கை. அந்த மத அலுவலர்களும், பிரபுக்கள் சபையிலே இடம்பிடித்துக் கொண்டு, எதேச்சாதிகாரத்தை ஆதரித்து வந்தனர். எனவே மக்கள் அவர்களுடைய செல்வாக்கைச் சிதைத்தாக வேண்டும் என்று மன்றம் கூறிற்று. மாமன்றத்திலே, இந்தப் பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டது. மத அலுவலர்களின் செல்வாக்கு, எளிதிலே அழிக்கக் கூடியதல்ல - காரணம் காட்டுபவர்களல்லவே, கர்த்தரைக் காட்டுபவர்கள்! எனவே பிரச்சனை காரணமாக, இருபிரிவுகள் தோன்றிவிட்டன; ஒன்றை ஒன்று கேலி பேசவும் தலைப்பட்டன.

மாமன்றத்தின் சார்பினருக்கு, ரவுண்டுஹெட்ஸ் என்றும், மன்னன் சார்பினருக்குக் கவாலியர் என்றும் பெயரிடப்பட்டது; குட்டைமுடியினர், குதிரைப்படையினர் என்ற பொருள்படும் ஏசலுரைகள் வீசப்பட்டன.

அரசக் கருவூலக் காப்பாளர் பதவி அளித்து, மக்கள் நண்பன் பிம் என்பவரை மயக்கி மடக்கலாம் என்று மன்னன் எண்ணினான்; இயலவில்லை.

மாமன்றம், அடுத்த கட்டம் சென்றது. கத்தோலிக்கரை ஏவிவிட்டுக் கலகம் விளைவிக்கவும், போப்பாண்டவரிடம் உதவி பெற்றுத் தாக்குதல் நடத்தவும் முயன்றதாக, ராணி எனிரிடாமீது குற்றப்பத்திரிகை தயாரிக்கலாயிற்று. மன்னன் நடுங்கிப் போனான். எனிரிடாவிடம் நிரம்ப அன்பு கொண்டவன் மன்னன். தன் ஆசைக்கினியாளுக்கே ஆபத்து என்றதும் மன்னனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! இவ்வளவு துடுக்குத்தனத்துக்கும் காரணமாக உள்ள பிம், ஹாம்டன், ஹாலிஸ், ஆஸ்லிரிக், ஸ்ட்ரோட் எனும் ஐவரையும் கைதுசெய்ய உத்தரவிட்டான்.

ஐவர் மீது நாட்டைத் தாக்க வேறு நாட்டவரைத் தூண்டிய தாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மரணதண்டனைதான் கிடைக்கும் இந்தத் துரோகத்துக்கு!

மன்னனை எதிர்ப்பது மட்டுமல்ல, வெளி நாட்டைத் தூண்டிவிட்டுத் தாயகத்தைத் தாக்க ஏற்பாடு செய்வது மாபெரும் குற்றம்.

கோபத்தைவிட அதிகமாக மக்களுக்குச் சிரிப்புதான் பொங்கியிருக்கும், இந்தக் குற்றச்சாட்டு கேட்டு.

தாயகத்தின் தன்மானத்தைத் தழைத்திடச் செய்வதற்காக, தன்னலத்தை மறந்து, பொதுப்பணியில் ஈடுபட்டு, சிறையை ஏற்று, ஆபத்துகளைத் துரும்பென எண்ணிப் பணியாற்றி வரும், மக்கள் விடுதலைப் படையின் முன்னணியில் உள்ளவர்கள் இந்த ஐவர்! இவர்களைத் ‘துரோகி’ என்று, மக்களை வாட்டி வதைக்கும் மன்னன் குற்றம் சாட்டினால், சிரிப்புப் பொங்கத்தானே செய்யும்.

எங்கள் பிம், எமது ஹாம்டன் துரோகிகளா? யாருக்கு என்ன துரோகம் செய்தனர்? மன்னனை மக்களாட்சி நடத்துக என்று எச்சரித்தனர் ஐவர்! துரோகமா இது? எதேச்சாதிகாரத்தை ஏற்காதீர் என்று எமக்கு அறிவுரை கூறினர். அது துரோகமா? அடக்கு முறைக்கு அஞ்சேல்! என்று வீர உரையாற்றினர். துரோகமா? அரண்மனையில் நச்சரவம் இருக்கிறது, அதன் விஷப்பல்லைப் பெயர்த்தாக வேண்டும் என்று கூறினர்! இதில் என்ன துரோகம்? பொதுப் பணத்தைச் சூறையாடினவன், போக போக்கியத்தில் மூழ்கினவன், காமக் களியாட்டக்காரன், காதகம் புரிந்தோன், பக்கிங்காமுகள், லாடுகள், ஸ்ட்ரா போர்டுகள், இவர்கள் துரோகிகள்! இந்த ஐவர், எமது தோழர்கள், உரிமைப்போர் வீரர்கள். அவர்கள் மீது சிறு விரல் பட்டாலும் சிரம் அறுப்போம்! என்று மக்கள் முழக்கமிட்டனர். பல ஆண்டுகளாக அவர்கள் மக்கள் பணியாற்றி வந்ததால் ஏற்பட்டிருந்த ஆதரவு, சாமான்யமானதல்ல! மன்னன் அவர்கள் மீது பாய்ந்தது, மதியற்ற செயலாகும். எண்ணற்ற மக்களின் நெஞ்சிலே இடம்பெற்ற அவர்களின் சொல் படைகளைத் திரட்டக் கூடிய வலிவு பெற்றுவிட்டது. அடக்க முடியாதது என்று எண்ணி மக்கள் ஆயாசப் பட்டபோது, துணிந்தால் அடக்கலாம் என்று எடுத்துக்கூறி, எதேச்சாதிகாரத்தை அடக்கிக் காட்டிய அம்மாவீரரை இழக்கத் துளியும் சம்மதியோம் என்று மக்கள் கூறி, வீறு கொண்டெழுந்தனர்! அந்த ஐவர், நாட்டின் இதய நாடிகள் - கரம் வைத்தால் சிரம் போகும் என்றனர் மக்கள்.

இராணி எனிரிடா கண்ணீர் உகுத்துக் கண்ணாளனை வேண்டி நிற்கிறாள். வேந்தன் ஐவரைச் சிறையிலிட உத்தர விட்டான்.

உத்தரவைக் தாங்கிக் கொண்டு அதிகாரி வந்தான் - ‘உயிர் பிழைத்துக் கொள்ள வேண்டுமானால் ஓடிப்போ’ என்று மாமன்றம், அதிகாரியை விரட்டி அடித்தது?

ஐவரின் இல்லங்களிலே அரசன் சார்பினரான படை வீரர் புகுந்தனர் - இழுத்துப் பூட்டினர். மன்னன் தவறு மேல் தவறு செய்த வண்ணம் செல்கிறான். நாடெங்கும் கொதிக்கிறது.

‘ஐவரைக் கைது செய்ய நானே செல்கிறேன்’ என்று கூறினான் மன்னன். 300 போர் வீரர் புடைசூழ, சில பிரபுக்கள் உடன்வர, மாமன்றம் வந்தான்.

உள்ளே மாமன்றம் நடைபெறுகிறது; வெளியே மன்னன், முன்னூறு பேருடன் ஐவரைக் கைது செய்ய!

ஐவர், மாமன்றத்தில் இல்லை! அவர்களை நண்பர்கள் வேறிடம் அழைத்துச் சென்றுவிட்டனர். மன்னன் மாமன்றத்துக்குள் நுழைந்தான். எண்பது வீரர் அவனுடன் உள்ளனர். நாடாளும் மன்னன், நாலாந்தர ஐந்தாந்தர அட்டகாசக்காரன் போல வருகிறான். கண்டறியாத காட்சி! கேட்டறியாத சம்பவம்! இத்தனைக்கும் விலா நொறுங்கியிருக்கும் வேங்கையின் நிலையை எய்தியிருக்கிறான் வேந்தன்.

மாமன்றத்தினர் மரியாதையுடன் எழுந்து நின்று, மன்னனை வரவேற்றனர். அவருடைய கண்கள் ஐவரைத் தேடின. “பறவைகள் பறந்துவிட்டன! சரி, நான் வந்தது பலன் தரவில்லை. ஆனால் பர்தார்! அந்த ஐவரை எப்படியும் என்னிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டும். அவர்கள் துரோகிகள்! இது உங்கள் அரசன் ஆணை” என்று கூறிவிட்டு, வெளிக்கிளம்பினான்.

“உரிமை! உரிமை!” என்று முழக்கமிட்டனர், மாமன்றத்தார்.

மன்னன், மாமன்றத்தைத் தாக்க, பலாத்காரத்தைக் கையாளத் தொடங்கிவிட்டான் - சிறு படைதான்! நூறு பேர்கள் - எனினும், படைதானே! எனவே, இனி படைதான் பேச வேண்டும் போலிருக்கிறது! போர்! ஆம்! மன்னன் நம்மைப் போருக்கு அழைக்கிறான்! அவன் போர்க்கோலம் பூண்டு விட்டான்! இனி நாமும் அதற்குத் தயாராக வேண்டியதே என்று தீர்மானித்தனர்.

‘அந்த ஐவர், துரோகிகள் என்றால், நாம் எல்லாம் யார்?’ என்று கேட்டுக் கொண்டனர், மாமன்றத்தார், உடன் பணியாற்றும் தோழர்களாகிய நாமும், துரோகிகளே என்று கூற வேண்டுமா! ஐவரைக் காட்டி நம் அனைவரையும்தான் மன்னன் பழிக்கிறான். நாட்டு மக்களின் சார்பிலே நாம் உறுப்பினரானோம், நம் சார்பிலே ஐவர் அரசனுக்குப் பலியாக வேண்டும்போலும் என்றனர்.

நாடு பதைத்தெழுந்தது. ‘ஐவரைக் காப்போம்; அவர்மீது அரசன் ஆணை பாயச் சம்மதியோம்’ என்று ஆர்ப்பரித்தனர். எந்த நேரத்தில் அரசன் படையினர் ஐவரைக் கைது செய்ய வருமோ என்ற எண்ணத்தில், அன்று இரவு முழுவதும் இலண்டன் நகர மாந்தர், போர்க்கோலத்துடன் விழித்தவண்ணம் இருந்தனராம். வெளி நகர்களிலிருந்து நாலாயிரம் குதிரை வீரர்கள், இலண்டன் வந்து சேர்ந்தனராம். கடுமையாகப் போரிட்டு, மக்களைக் கொன்று குவித்த பிறகே, ஐவரைச் சிறைப்படுத்தமுடியும் என்று நாடு கூறிவிட்டது. நாடாளும் மன்னனால், ஐவரைச் சிறைப்படுத்த முடியவில்லை. மக்கள் ஐவருக்கு அரண் அளிக்கிறார்கள்!

வெடிமருந்துச் சாலைக்கருகே தீக்குச்சிபோலாகிவிட்டது ஐவரைக் கைதுசெய்ய மன்னன் முனைந்தது. அடுத்த கட்டம், போர்! வேறில்லை என்பது விளக்கமாகிவிட்டது.

மன்னன் தாக்கீது அனுப்பினான், ஐவரைக் கைது செய்யும்படி! மாமன்றம் மன்னன் செயல், சட்ட விரோதமானது என்று தாக்கீது பிறப்பித்தது.

இரு அரசுகள்! நாடு, எதை ஏற்றுக் கொள்வது என்பதை இனிக் களம்தான் தீர்மானிக்கவேண்டும்.

ஐவருக்கு வந்த ஆபத்து, நாட்டு மக்களைப் போர்க் கோலத்தில் கொண்டு வந்து விட்டது. நகரம், புயலுக்குரிய நிலைமையில் இருந்தது. ஆபத்து தன்னை அணுகும் என்ற அச்சம் மன்னனுக்கு! மன்னன் தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, ஊரார் அறியாவண்ணம் இலண்டன் நகரை விட்டு, வேறிடம் சென்றுவிட்டான்.

ஐவர், மன்னனை விரட்டிவிட்டனர்! மக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஐவரை வரவேற்றனர்.

தேம்ஸ் ஆற்றிலே, படைக்கலங்கள்! கரையெல்லாம் உறுதி படைத்த வீரர்கள்! ஐவர் வருகின்றனர், மாமன்றம் நோக்கி! ஊரே திரண்டு வருகிறது! வெளியூரில் இருந்தெல்லாம், மக்கள் கூட்டம்.

மன்னன், மக்கள் சீற்றத்துக்கு இடம் தராத இடம் நாடினான் - விண்சர் எனும் ஊர் போய்ச்சேர்ந்தான். ஐவர் மாமன்றத்தில் எப்போதும்போல் அமர்ந்தனர். போர் மூண்டால், வெற்றி எவர் பக்கம் என்பதை அறிவிக்கும் சம்பவமாகிவிட்டது; ஐவர் வெற்றி.

இனிப் போரிட்டுத்தான் பிரச்சனையின் முடிவு காண வேண்டும் என்ற கட்டாயம் தோன்றிவிட்டது.
ராணி எனிரிடா, குடும்ப நவமணிகளையும் அணிகளையும் எடுத்துக் கொண்டு, ஐரோப்பா சென்று, விற்று, ஒரு கலம் நிறைய போர்க் கருவிகளை அனுப்பியாகி விட்டது! மன்னன், தன்னை அண்டிப் பிழைக்கும் பிரபுக்களுடன், மந்திராலோசனை நடத்தி, போர்த் திட்டம் தீட்டினான். மாமன்றம் செயலாற்றாம லில்லை! துறைமுகப் பட்டினங்களிலே, மாமன்றச் சார்பினர், திரண்டனர்.

ஹல் என்ற ஊரிலே குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துக் கிடங்கு, மாமன்றத்தார் வசமாயிற்று. அதைக் கைப்பற்ற வந்த மன்னனைக் கிடங்குக்குள்ளே நுழையக் கூடாது என்று காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். இனியும் என்ன செயல் வேண்டும்! மாமன்றத்தின் கட்டளையின்படி நடந்து கொள்பவர்கள், மன்னனைத் தடுத்து நிறுத்த முன்வந்துவிட்டனர்!

மன்னன் நாட்டிங்காம் எனும் நகர்சென்று, போர்க்கொடி உயர்த்தினான்.

மக்கள் மீது மன்னன் போர் தொடுத்துவிட்டான்! எனவே மன்னன், மாபெரும் துரோகியானான் என்று மாமன்றம் அறிவித்தது. நாடு அறை கூவலை ஏற்றுக் கொள்வோம் என்றது. படைகள், களம் புகுந்தன. உள்நாட்டுப் போர் துவங்கிவிட்டது. தத்துவம் பேசிப் பயன் காணாத மன்னன், இனி இரத்தம் கொட்டி, வெற்றிதேடக் கிளம்பிவிட்டான்.

மக்கள் ஆர்வத்துடன் மாமன்றம் திரட்டிய படையில் சேர்ந்தனர். வெள்ளிச் சாமான்கள், தங்கநகைகள், பணம், கொண்டுவந்து குவித்தனர் மக்கள். அவற்றை வைத்திருக்கப் போதுமான இடம்கூட இல்லையாம். அளவு அவ்வளவு! ஆர்வம் அத்துணை! கிழமைக்கு ஒருநாள், உணவருந்தலாகாது. அதனால் மிச்சப்படும் பணத்தைச் சேர்த்து, மாமன்றத்திடம் தரவேண்டும் என்றுகூட மாமன்றத்தார் ஓர் ஏற்பாடு செய்தனராம். போர்ச்செலவுக்கான பணம் குவிந்தது மட்டுமல்ல, ஓர் உயரிய கொள்கைக்காகப் போரிடுகிறோம்; உயிர் இழப்பினும் கவலை யில்லை என்ற தூய எண்ணம்; வீரம் ததும்பும் மக்கள் குவிந்தனர்.

இலண்டன் வியாபாரக் கோட்டம் - மாமன்றத்துக்குப் பெருந்துணையாக நின்றது.

கடற்படை பெரிதும் மாமன்றத்தை ஆதரித்தது.

துறைமுகப்பட்டினங்கள் பலவும் மாமன்றச் சார்பில் இருந்தன.

எனவே வெளிநாடுகளிலிருந்து ஆள் அம்பு, மன்னனுக்காக வரவழைப்பது கடினமான காரியமாகிவிட்டது.

பிரபுக்கள் புடைசூழ நின்ற மன்னனிடமும், பணம் திரண்டது; படையும் அமைந்தது. ஆனால் கொள்கை மட்டுமே தரவல்ல நெஞ்சுரம் மன்னன் படை வரிசையில் இல்லை. ரூபர்ட் என்பார் போன்ற திறமிகு தளபதிகள் இருந்தனர். எனினும் படைவீரரிடம் ஆர்வம் இல்லை.

1642ஆம் ஆண்டு துவங்கிய உள்நாட்டுப் போர், 1645 வரையில் நடைபெற்றது. பயங்கரமான சண்டைகள். இருதரப்பிலும் கொட்டப்பட்ட இரத்தம் கொஞ்சமல்ல! வீரச் செயல் களுக்கும் குறைவில்லை. இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றிச் சிலகாலம் நடைபெற்ற சமர்! மாமன்றப் படைவரிசையிலே பணியாற்றிய மாவீரன் ஆலிவர்கிராம் வெல் என்பரின் திறமையாலும் தீரச்செயலாலும், களம் அமைக்கும் முறையாலும், தாக்குதலை வகுத்திடும் திட்டத்தின் நேர்த்தியாலும் மாமன்றத்
துக்குச் சாதகமாகத் திரும்பிற்று. மார்ஸ்டன் மூர், நியூபரி, நேஸ்பி எனும் இடங்களில், மாமன்றத்துக்கு மகத்தான வெற்றிகள் கிடைத்தன. கிராம்வெலின் கீர்த்தி பரவிற்று. மன்னன் படைவரிசையில் பிளவும், போரிடுவோர் உள்ளத்தில் கிலியும் ஏற்பட்டது.

வெற்றி கேட்டு மகிழ்ந்த மக்கள், மனவேதனை கொள்ளும் சம்பவமும் இதுபோது நடைபெற்றது. 1643இல் ஹாம்டன் தீரமாகக் களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கையில் இறந்துபட்டார்! வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் பாடுபட்ட மாவீரன் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பெரு நஷ்டம். எனினும், வரலாற்றுச் சுவடியில் மட்டுமல்லாமல், மக்கள் உள்ளத்திலே இடம்பெற்று, ஹாம்டன் நிலைத்து நின்றார். மாமன்றம் இறுதியில் வாகைசூடும். மக்களின் சக்தியை இனி மன்னன் மாய்த்திடுவது முடியாத காரியம் என்பதற்கான நல்ல குறிகளைக் கண்டான பிறகே ஹாம்டன் மாண்டார். அவர் ஆற்றிய பணி அளப்பரிது. அவர் காட்டிய வீரம், மக்களை ஈர்த்தது. மாவீரன்! மறைந்தான்! கடைசிச் சொட்டு இரத்தத்தையும் மக்கள் பணிக்கே தந்தான்.

மக்களுக்கு மகிழ்ச்சியும் மன்னன் சார்பினருக்கு மருட்சியும் தரத்தக்க மற்றோர் சம்பவம் இதுபோது நிகழ்ந்தது. நாட்டை அடக்கி ஆண்ட அக்கிரமக்காரரில் ஒருவனான லாட், தூக்கிலிடப் பட்டான்.

மக்களைத் துக்கத்திலாழ்த்திய மற்றோர் சம்பவம் பிம் மரணம். ஹாம்டன் போலவே, முன்னணி நின்று மக்களுக்குப் பணியாற்றிய பிம், விடுதலை விளக்கை ஏற்றி வைத்தான். ஆனால் அதன் முழு ஒளியை காணும் முன்னம் இறந்துபட்டான். ஓயாத உழைப்பு உடலைத் துளைத்து விட்டது! நோய் வாய்ப்பட்டு பிம் இறந்தான். இறவாப் புகழ் பெற்றான பினறுக, மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்த பிறகு இம்மாவீரன், சுகமிழந்தான், சொத்திழந்தான், ஓய்விழந்தான், ஓட்டாண்டியுமானனான். மக்கள் உரிமை பெறவேண்டும் என்பதன்றி வேறோர் குறிக்கோள் கொண்டானில்லை. நுண்ணறிவும், பொங்கும் ஆர்வமும், பொல்லாங்கைப் பொசுக்கும் தீரமும் படைத்த பிம், கடைசிக் காலம் வரையில், மக்களுக்காகவே உழைத்தான் - வெற்றி கிட்டுவது உறுதி என்ற நிலை பிறந்த பிறகே மறைந்தான்; மறைவதற்கு முன்புகூட, மக்களுக்கு மகத்தானதோர் நலன் தந்தான்.

எட்வர்டுவாலர் என்றோர் கவிஞன் - கலை உள்ளம் கொள்ள வேண்டியவன், சதிச்செயலில் ஈடுபட்டான்.

இனிக்கப் பேசுவான். எவரிடமும் சாகசமாகப் பழகுவான். தோழமைகொள்வான். இக்கவிஞன், மன்னனுக்காக ‘சதி’ புரியத் திட்டம் வகுத்தான்.

தித்திக்கும் பேச்சில் வல்ல இவனிடம் ஆடவரும் பெண்டிரும் நேரம் கொண்டனர்! படைவரிசையில் பளிவு உண்டாக்கு வது, மாமன்றத்தின் வலுவைக் குலைப்பது, மன்னனை அரியாசனம் அமர்த்துவது என்பது கவிஞன் திட்டம். ஆஸ்தான கவிஞன் ஆகலாம் என்று கனவு கண்டிப்பான் போலும்!

டாம்கின்ஸ் என்பான் வாலருக்கு உறவினன். தன் கற்பனைமிக்க கவிதைகளைப் பாடிக் காட்டவேண்டிய கவிஞன், தன் சதித்திட்டத்தை அவனிடம் கூறினான், அவன் ஆதரவு பெற.
மாமன்றத்தின், சம்பளமில்லாத ஒற்றர்கள், எல்லா மாளிகைகளிலும் இருந்தனர், டாம்கின்ஸ் மாளிகையிலும்!!

சதித்திட்டம் பேசப்படுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பணியாள், சேதியைப் பிம்முக்கு அறிவித்தான் - மாமன்றத்தார் பாய்ந்தனர். காதகர் சிக்கினர். பத்தாயிரம் பவுன் அபராதம் செலுத்தி, கவிஞன் உயிர்பிழைத்துக் கொண்டான்; சிலர் சொல்லப்பட்டனர். சதி - சிதைக்கப் பட்டது.
மறையுமுன் பிம் ஆற்றிய தொண்டு இது.

மக்கள் அவனுக்கு வீரவணக்கம் செலுத்தினர் - அவன் பட்டிருந்த பத்தாயிரம் பவுன் கடனையும், அவன் சார்பில் மாமன்றமே செலுத்திற்று.

இருமாவீரர் பிம், ஹாம்டன் மறைந்தனர் - ஆனால் அவர்கள் ஊட்டிய ஆர்வம் வளர்ந்தது; மாஸ்டன் மூர், நியூபரி, நேஸ்பி என்று வெற்றிக் கீதம், மக்களுக்கு விருந்தளித்தது. மிரண்ட மன்னன். ஸ்காட்லாந்துக்காரரிடம் தஞ்சம் புகுந்தான்!

படைபலம் - கடைசி முயற்சி - அதிலேயும் மன்னன் தோற்றான்.

இதற்குப்பிறகு, மன்னன் நிலைமை, கைதியின் நிலைமை தான் - ஆனால் கட்டுக்கு அடங்கிய கைதி அல்ல; தப்பி ஓட முயன்றபடி உள்ள, கைதியின் நிலைமை.

நேஸ்பீ களத்திலே, மன்னன் தோற்றோடியபோது அவனுடைய கடிதக்கட்டு, மாமன்றப் படையிடம் சிக்கிற்று - மன்னன், வெளிநாட்டவரைக் கொண்டுவரச் சதி புரிவது, சாகசமாக மாமன்றத்தாரை ஏய்க்க விரும்புவது, பிரான்சு சென்றிருந்த தன் துணைவிக்கு எழுதி படையும் கருவியும் சேர்த்திட முனைந்தது ஆகியவை அம்பலமாயின. எழுபத்து இரண்டு பக்கம் கொண்ட துண்டு வெளியீடு மூலம் மாமன்றம் மக்களுக்கு இதனை அறிவித்தது.

தோல்வியை ஒப்புக் கொள்ளவோ, துயரால் தாக்குண்டு தலைகுனியவோ, மக்களிடம மல்லுக்கு நின்றது போதும். இனி ஒழுங்கான ஆட்சி நடத்துவதாக உறுதி கூறிச் சமரசம் கோருவோம் என்ற விழைவோ, மன்னனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தப்பிச் செல்ல மார்க்கம் கிடைத்தால், மீண்டும் ஓர் முயற்சி செய்யலாம் என்பதே மன்னனுடைய எண்ணமாயிற்று.

நாடு, பெரும் போரிலே சிக்கிற்று - பொருள் சேதம், உயிர்ச் சேதம் ஏராளம் - வரிச்சுமையும் அதிகம். இந்நிலையில், மாமன்றத்தின் பக்கம் நிற்பவர்கள்கூட, சிறிது சலிப்படைந்திருக்கக் கூடும். இந்த நிலைமையைத் தனக்கேன் வாய்ப்பாக்கிக் கொள்ளக் கூடாது என்பது மன்னன் கருத்து.

சிறைப்பட்டது முதல் சிரம் இழக்கும் வரையில், மன்னன், தப்பிச்சென்று தன் ஆதிக்கத்தைத் திரும்பப் பெற எடுத்துக் கொண்ட முயற்சிகளிலே, முக்கியமான முறை ஒன்று இருந்தது - தன்னை எதிர்த்து நிற்கும் அணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் அம்முறை.
ஸ்காட்லாந்துக்காரரை அடுத்து அவர்களின் ஆதரவைப் பெற்றால், அவர்கள் மூலம், பிரிட்டிஷ் மக்களை வீழ்த்தலாம்.

அயர் மக்கள் திரண்டால், அவர்களைக் கொண்டு மாமன்றத்தாரை ஒழிக்கலாம்.

மாமன்றத்திலேயே பிரிவு தெரிகிறது. அதைப் பயன் படுத்தினால், பலன் காணலாம்.

மாமன்றத்துக்கும் படையினருக்கும் பிளவு வெடிக்கிறது, இதனைப் பயன்படுத்தலாம்.

இன்னபிற எண்ணங்களே மன்னன் மனத்தில்! தத்துவம் குடைகிறது, என் செய்வேன்!

ஸ்காட்லாந்துக்காரர், மன்னனை மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் துணைபுரிய விரும்பவில்லை; மன்னன் கிடைத் திருக்கிறான். இதனைக் காட்டி, மாமன்றத்திடம் பெரும் பொருள் பெறவேண்டும் என்று எண்ணினர்.

4,00,000 பவுன்தர மாமன்றம் இசைந்தது. மன்னனை ஒப்படைக்க ஸ்காட்லாந்துக்காரர் இணங்கினர்.

மன்னன் முறியடிக்கப்பட்ட நேஸ்பீ களத்தருகே, மன்னனுக்குச் சொந்தமான மாளிகையில், சார்லஸ், சிறை வைக் கப்பட்டான்.

மன்னனை அப்போதும் மாமன்றத்தார் மரியாதைக் குறைவாக நடத்தவில்லை; உரிய மதிப்பளித்தனர் - வசதிகள் யாவும் செய்தனர்.

மாமன்றப் படைத் தலைவராக இருந்த பேர்பாக்ஸ் என்பவரே, மன்னனை எதிர்கொண்டழைத்தார்.
மக்கள், சிறைப்பட்ட மன்னனைக் காண வழி நெடுக நின்றனர் - காணக்கிடைக்காத காட்சி அல்லவா!!

சார்லஸ் மன்னன், முரட்டுத் தோற்றமும், பொறி பறக்கும் பேச்சினனுமல்ல! பார்ப்பதற்குப் பரம சாதுவாக இருப்பவன் - கனவு வழியப் பார்ப்பான். கண்ணியமாகப் பழகுவான். எனவே அவனைக் கண்ட மக்கள் தோற்றத்தையும் செயலையும் ஒப்பிட்டுப் பார்த்துத் திகைத்திருப்பர். இவ்வளவு நல்லவனாக இருக்கிறான். எத்துணை தீய காரியம் செய்தான் என்று எண்ணிருப்பர்.