அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் கரமும், மன்னர் சிரமும்
2

கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட காலம் மலையேறி விட்டது; இப்போது தியாகத் தழும்புகளைத் தடவிப் பார்த்தபடி, தருக்கருக்குத் தக்க தண்டனை தரும் நாள் பிறந்துவிட்டது! எங்கே அந்தக் கொடியவர்கள்? ஏன் இனியும் அவர்களை விட்டு வைப்பது? என்று முழக்கம் கிளம்பிவிட்டது. மாமன்றத்தின் வலுவு முழுவதும் தெரியும் நாள் அது.

மக்கள் துரோகி ஸ்டாபோர்டு தண்டிக்கப்பட வேண்டும் - என்று பிம் கூறினார். “இழுத்து வருக” என்று உடன் முழக்கமிட்டனர் மாமன்றத்தார்! மன்னன்? அரண்மனையில்! ஆனால் ஏதும் செய்ய இயலாத நிலை! நாட்டு மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி, மக்களின் வரிப்பணத்தைப் பாழாக்கி, மன்னனை ஆகாவழி புகுத்தி, அவதியை உண்டாக்கிய, லாட், ஸ்டாபோர்டு இருவரும், சிறையில் தள்ளப்பட வேண்டும்! என்று தாக்கீது பிறந்தது. அதனைத் தடுக்கும் சக்தி, மன்னனுக்கு இல்லை! தடுக்க முயன்றிருந்தால், அரண்மனை தரை மட்டமாகி விட்டிருக்கும்! மக்கள் அவ்வளவுக்குத் துணிந்திருந்தனர்.

இரு கொடுமையாளர்களும், இந்தப் புயல் நீண்டகாலம் அடிக்காது; அடங்கிவிடும், என்று எண்ணியபடி சிறை சென்றனர். அடங்கக்கூடியதல்ல; இந்தப் புயல்! அடக்கும் ஆற்றல் எவருக்கும் இல்லை!!

இருகொடுமையாளர்களைச் சிறைக்கூடத்துக்கு மாமன்றம் அனுப்பிய செய்தி, மக்கள் உள்ளத்திலே என்றுமில்லாத களிப்பை உண்டாக்கிற்று! நீதி வெல்கிறது! மக்கள் வெல்கிறார் கள்! மமதை அழிந்து படுகிறது! மாண்பு வெற்றி பெறுகிறது என்று மகிழ்ந்தனர். குட்டிக் கொடுமையாளர்களுக்கெல்லாம் குலைநடுக்கம். அரசை ஆட்டிப் படைத்த இருவர், சிறையிலே தள்ளப்பட்டனர். நமது கதி யாதோ என்று எண்ணினர். பயத்தால் பாதி உயிர் போயிற்று! பலர், வெளிநாடுகளுக்கு ஓடினர். சிலர், சரண் புகுந்தனர். சிலர், மன்னனைச் சுற்றி வட்டமிட்டனர் - மன்னனோ தன் ஆதிக்கம், மடியக் கண்டு, மனம் உடைந்து போயிருந்தான்.

நெடுங்காலமாக ஏறிக் கொண்டு வந்த கறைகளை மாமன்றம் கழுவித் தள்ளலாயிற்று.

ஹாம்டனுக்கு விரோதமாகத் தீர்ப்பளித்த நீதிபதிகள், வேலையினின்றும் விரட்டப்பட்டனர்; மாமன்றம் திருப்பித் தாக்கத் தொடங்கியது, தீயோர் திகில் கொண்டனர்.

உரிமைக்குரல் எழுப்பியதற்காகச் சிறையிலே தள்ளப்பட்டுக் கிடந்த இலட்சியவாதிகள் விடுதலை செய்யப் பட்டனர்; நாடு, விழா கொண்டாடிற்று.

பர்ட்டன், பிரைன், லில்ப்ர்ன் ஆகியோர் விடுதலையை மக்கள் பெருந்திருவிழாவாகக் கொண்டாடினர்; இலண்டன் நகருக்கு அவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்; பாதையில் மலர் தூவி மக்கள் அவர்களை வரவேற்றனர். கண்ணீர் துடைக்கப்படுகிறது! கடும்தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெறுகின்றனர்!

மக்கள் இயக்கத்தை நசுக்க முற்பட்டவர்கள், தெருவில் செல்ல அஞ்சுகிறார்கள். முச்சந்திகளிலெல்லாம் முழக்கமிடும் மக்கள் கூடி, ‘இன்றைய விருந்து என்ன? இன்று யார் விடுதலை? இன்று எந்தக் கொடுமையாளனுக்குத் தண்டனை? இன்று மாமன்றம் எந்தப் பிரச்சனை குறித்து முடிவெடுத்தது?’ என்று கேட்கின்றனர். அரசியல் பிரச்சனை தவிர பிறிதொன்றிலும் மக்களின் மனம் செல்ல மறுத்தது.

இராணி எனிரிடாவின் தாயார், பிரான்சிலே அடைந்த அல்லலை ஆற்றிக் கொள்ளலாம் என்று எண்ணிப் பிரிட்டன் வர, அங்கு பெரும்புயல் வீசக் கண்டு, எந்த நேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ என்று திகில்பட வேண்டி இருந்தது. நூறு துப்பாக்கி வீரர்கள் காவலுக்கு அமர்த்தப்பட்டனர்; பிரபுக்களிடம் அம்மை முறையிட, அவர்கள், மாமன்றத்தைக் கேட்டிட, “கேடு வராமல் பார்த்துக் கொள்கிறோம்; எனினும் கத்தோலிக்க மார்க்கத்தவர் நாடு இப்போதிருக்கும் நிலையில், அம்மை, இதைவிட்டுச் செல்வது நலம்” என்று மாமன்றம் கூறிவிட்டது.

ஏய்த்துப் பிழைத்தவர்கள், அடக்கி அழித்தவர்கள், ஆணவக்காரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர், மக்கள் கனல் கக்கும் கண்ணினரானதும்! ஆனால் புனல் நிரம்பிய கண்ணினராக மக்கள் இருந்தபோது, யார் ஆறுதல் கூற முன் வந்தனர்? கேலி பேசினர்!
பதின்மூன்று பேர் கொண்ட கமிட்டி நான்கு திங்கள் பணியாற்றி இருபத்து எட்டு குற்றங்களைப் பட்டியலாக்கித் தந்தது, ஸ்டாபோர்டுக்கு எதிராக.

நாடு நன்கு அறியும் அந்தக் கொடியவன் செய்ததை. எனினும் முறைப்படி காரியமாற்ற வேண்டும் என்பதற்காக, குற்றப் பட்டியலைத் தயாரித்து, மாவீரன் பிம் வீர உரை ஆற்றினான்.
மக்களின் உடைமைக்கும் உயிருக்கும், இரண்டினும் மேலான உரிமைக்கும், ஸ்டாபோர்டு உலை வைத்ததை விளக்கிப் பேசினார், பிம்.

அவன் கூறியதை மறுத்துரைக்க ஸ்டாபோர்டுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

ஸ்டாபோர்டு மீது வெகுண்டெழுந்தவர்கள், பிரிட்டிஷ் மக்கள் மட்டுமல்ல, ஸ்காட் மக்கள் சீறினர், அயர் மக்கள் கொதித்தனர். அனைவருக்கும் கேடு பல செய்தவன் அந்தக் கொடுங்கோலன்.

மாமன்றத்தைப் பதினோராண்டுகள் கூட்டாமல் மன்னன் இருந்தது, இந்த மமதையாளன் தூண்டுதலால்தான்.

ஸ்காட் மக்களிடம் சமரசம் பேச மன்னன் முற்பட்டதைக் குலைத்து மீண்டும் போர் மூட்டி விட்டதும் இவனே.

அயர் மக்களோ, இவனுடைய அழிவுத் திட்டத்தால், மிகவும் நொந்து போனவர்கள், மாளிகைகளிலும் சிறு குடில் களிலும், பண்ணைகளிலும் பட்டி தொட்டிகளிலும், இவன்நடத்திய பயங்கர ஆட்சியின் விளைவுகள், நெஞ்சை உலுக்கும் காட்சிகளாக இருந்தன - கருகிய பிணங்கள், தீய்ந்துபோன வயல்கள், இடிந்த மாளிகைகள், ஒடிந்த உள்ளங்கள்!

மூன்று நாடுகளிலும், கொடுமைகள் புரிந்தவன் - பதினோ ராண்டுகள் மக்களைப் பதறப்பதறத் தாக்கினவன், மாமன்றத்தினிடம் சிக்கிக் கொண்டான்; இருபத்து எட்டு வகையான குற்றங்கள். ஒவ்வொன்றும் நாட்டுக்குப் பெருங்கேடு விளைவித்தவை. மனித வேட்டையாடுவதிலே மட்டற்ற மகிழ்ச்சி காட்டிய அந்த மாமிசப்பிண்டத்துக்கு, மறுத்துப் பேசவும் வாய்ப்பளித்தது, மாமன்றம், மக்களுக்கு இது பிடிக்கவில்லை! ஆரவாரம் செய்தனர். அக்கிரமக்காரனைக் கொன்று போட்டாக வேண்டும். அவனிடம் வாதிடுவது கூடாது. அவன் செய்த கொடுமைகளுக்குச் சாட்சிகள் தேடி அலைவானேன்? நாடு நன்கு அறியும். எனவே அவனைக் கொன்றுவிடுக என்று மக்கள் முழக்கமிட்டனர்.

அயர்லாந்தில் ஸ்டாபோர்டு செய்த அக்கிரமத்தை விவரமாக எடுத்துக்கூற அங்கிருந்து ஒரு குழு பிரிட்டன் வந்தது.

பிரபுக்கள் சபைக்குச் சென்றது விசாரணை! ஸ்டார்போர்டு, தன் திறமை முழுவதையும் காட்டினான் - குற்றச் சாட்டுகளை மறுத்தான். ஆட்சியை வலுவாக்கத் தான் எடுத்துக் கொண்ட பல நடவடிக்கைகளை மாமன்றத்தார் அக்கிரமம் என்று கூறுவது பொருளற்றது என்று வாதிட்டான். துரோகம் இழைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் துரோகம் என்பதற்கு என்ன விளக்கமளிக்கிறார்கள். என்று கேட்டான். மாமன்றத்தின் சீற்றம் இங்ஙனம் வரம்புமீறி, அதிகாரிகள்மீது பாய்வது சட்டத்தையும் ஒழுங்குமுறையையுமே கெடுத்துவிடும் என்று பயமூட்டினான். என் கதி எதுவோ, அது, மற்றப் பிரபுக்களுக்கும் பிறகு வந்து சேரும் என்று எச்சரித்தான். ஒரு மாமன்ற உறுப்பினர் கூறியபடி, “தேர்ந்த நடிகன்போல், விசாரணைக் கூடத்தில் ஸ்டாபோர்டு அற்புதமாக நடித்தான்.” எனினும், நாடு, அவன் குற்றவாளி, கொல்லப்பட வேண்டியவன் என்று தீர்ப்பளித்துவிட்டது. விசாரணைக் கூடத்தைவிட்டு அவன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால்போதும்; ஆத்திரம் கொண்ட மக்கள் கல்லால் அடித்துக் கொன்று இருப்பார்கள்.

மாமன்றம் இதை அறிந்து, சம்பவத்தை நீடித்துக் கொண்டு போவதால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நேரிடும் என்று கருதி, ஸ்டாபோர்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றினர் - 59 பேர் இதை எதிர்த்து ஓட்டளித்தனர். மக்கள் இவர்களின் பெயரைத் துரோகிகளின் பட்டியலில் சேர்த்து, சதுக்கத்தில் தொங்கவிட்டனர்.

விதவிதமான வதந்திகள் பரவின. மன்னனுக்குத் துணைபுரிய பிரான்சிலிருந்து படை வருகிறது! கத்தோலிக்கர் கூடிச் சதிசெய்கிறார்கள், மாமன்றத்தைத் தாக்கக் காலிகள் படை தயாராகிறது என்றெல்லாம் வதந்திகள் உலவின. மக்கள், கோபங் கொண்டனர்.

பலிபீடம் தயாராகிவிட்டது. ஸ்டாபோர்டு கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட வேண்டியவனே என்று மாமன்றம் கட்டளையிட்டுவிட்டது. காவலன் கசிந்துருகினான். நண்பன் உயிரைக் காப்பாற்றும் ஆற்றலும் அற்றுப் போயிற்றே என்று அலறினான். “இனி எந்த வேலையிலும் அவனை அமர்த்துவ தில்லை என்று உறுதி கூறுகிறேன். கொல்லாமல் விட்டுவிடுக!” என்று மன்றாடினான். மாமன்றம் இணங்கவில்லை. மக்களோ, “கடமையை, அச்சம் தயைதாட்சண்யமின்றிச் செய்க” என்று கட்டளையிட்டனர். மன்னன் ஏதேனும் சூழ்ச்சி செய்து, ஸ்டாபோர்டை தப்பி ஓடச் செய்துவிடுவானோ என்ற சந்தேகம் கொண்ட ஆறாயிரவர், கிடைத்த ஆயுதம் தாங்கிக்கொண்டு, மாமன்றத்தைச் சூழ்ந்து கொண்டனர்.

‘நீதி வேண்டும்! கொடியவன் தண்டிக்கப்பட வேண்டும்!’ என்று ஒரே முழக்கம்.

அரண்மனை அருகேயும் பெருந்திரள் - அரசனைக் கண்டிக்கிறது - அரசியின் கண்களிலே நீர் - பரிவாரம் பயத்தால் நடுங்குகிறது. ஸ்டாபோர்டு சிறையிலே; பலிமேடை தெரிகிறது!

முறைப்படி இந்த விசாரணை நடைபெறவில்லை என்று சிலர் முணுமுணுத்தனர். செயின்ட்ஜான் “முயலையும் மானையும் வலைபோட்டுப் பிடிக்க வேண்டும். வாட்டி வதைக்கக் கூடாது என்ற வேட்டைமுறை உண்டு; ஆனால் ஓநாயையும் நரியையும், கண்ட இடத்தில் கிடைத்ததைக் கொண்டு சாகடிப்பர்” என்று கூறினார். மக்கள் கொண்ட கருத்தைத்தான் அவர் எடுத்துரைத்தார்.
“என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் இறையே! எனக்காகச் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று ஸ்டாபோர்டு உபசாரத்துக்காக ஒரு கடிதம் அனுப்பினான் - மன்னன் கண்களைத் துடைத்துக் கொண்டான். பெருமூச்சுடன், மாமன்றம் அனுப்பிய ஓலைக்கு ஒப்பமளித்தான்.

மரண ஓலை தயாராகிவிட்டது. மன்னன் ஒப்பமும் கிடைத்துவிட்டது என்பதறிந்த ஸ்டாபோர்டு பதறினான்.

“மன்னனை நம்பாதீர்!” என்ற முதுமொழி கூறிக் கசிந் துருகினான்!

எப்படிப்பட்ட மன்னனை நம்பினான் இந்தப் பிரபு? எதன் பொருட்டு நம்பினான்?

மக்களைப் பூச்சி புழுக்களென எண்ணும் ஒரு மன்னனை நம்பினான்; மக்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஒடுக்கலாம் என்று மன்னனை நம்பச் செய்தான். பதைக்கப் பதைக்கத் தாக்கினான்; பழி தீர்த்துக் கொள்ளும் நாளன்று, பாகாய் உருகிப் பயன் என்ன, கண்ணீர் உகுத்துக் காணப் போவதென்ன? ஸ்டாபோர்டு, பலியிடப் பட்டான். ‘முதல் முரசு!’ என்றனர் மக்கள். பலி பீடத்தில் முதல் காணிக்கை!

மன்னன் சார்பினர், ஸ்டாபோர்டு வீழ்ந்துபட்டது கண்டு, விலாவில் வேல் பாய்ந்தவராயினர். பெரும் முயற்சி செய்து, இந்த மாமன்றத்தை அழித்தாலொழிய, மன்னன்பாடு ஆபத்துதான் என்பது புரிந்துவிட்டது!

படைகொண்டு தாக்கினால் என்ன? எண்ணம் ஏற்பாடாக உருவெடுத்தது. பயர்சி, ஜெர்மின், கோரிங் எனும் படைப்பிரிவுத் தலைவர்கள், பல்லிளித்தனர். சதி பிறந்தது.

மன்னனுக்காகப் படை கிளம்புவது என்று ஏற்பாடு வகுக்கப்பட்டது. ஆனால், சதியை உடனிருந்து வகுத்துக் கொடுத்த கோரிங் என்பானே, மாமன்றத்துக்கு இரகசியத்தைக் கூறிவிட்டான் - சதிகாரர்களை மாமன்றம் துரத்திற்று - சிலர் ஓடிவிட்டனர். சிலர் பிடிபட்டனர். கருவில் சிதைந்தது காதகம்! காவலன்மீது கடுங்கோபம் கொண்டனர் மக்கள்.

மாமன்றம், மக்கள்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை ஒடித்தெறிகிறது, கொடுமையைக் களைகிறது, இனி மன்னன் பயங்கரத் தாக்குதலால், தன் நிலையைப் பலப்படுத்த முயற்சிப்பான்! கண்காணிப்பாக இருக்க வேண்டும்; எந்த நேரமும் ஆபத்து மூளக்கூடும்; எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று நாட்டினர் கருதினர்.

நிழலுருவில், இருமுகங்கள் தெரியலாயின.

பதறிப்போன பிரபுக்கள், பரிவாரம் சூழ, மன்னன் ஓர் முகாமில், ஆணவம் குறைந்திருக்கிறது; எனினும் ஆசை அழிந்துபடவில்லை; தத்துவம் மேலோங்கியே நிற்கிறது.

வெற்றிக் களையுடன் மாமன்றத்தார், வீர முழக்கமிடும் மக்கள் - மற்றோர் முகாமில்.

கூலி கொடுத்தால் வேலை செய்யலாம் என்பதன்றி வேறு குறிக்கோளில்லாமல் ஒரு பகுதி மக்கள் உள்ளனர்; படையில் சேரவிழைவோர்.

அரசனுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கென்றே ஏற்பட்ட தனி நீதிமன்றங்களை, நட்சத்திர மண்டபம் போன்ற வற்றை, மாமன்றம் கலைத்தது.

படைவீரர்களைக் கட்டாய விருந்தினராக்கும் கயமைக்குச் சாவுமணி அடித்தது.

கட்டாயக் கடன்போன்ற வரிமுறைகளை ஒழித்தது. காட்டுச் சட்டத்தை அழித்தொழித்தது.

மாமன்றத்தின் ஒப்பம் இன்றி வரிவசூலிக்கும்போது, மன்னனுடன் ஒத்துழைத்தவர்களுக்கெல்லாம், சீட்டுக் கிழிக்கப் பட்டது; எதிர்த்து நின்றோருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது.

அரண்மனையில் மன்னன் இருக்கிறான். மாமன்றம் அரசோச்சுகிறது. கணக்குத் தீர்க்கும் காரியம், தீவிரமாக நடை பெறுகிறது. மாமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், மக்கள் உள்ளத்திற்குத் தென்றலென இனிக்கிறது. மன்னனுக்கோ வாடை என வாட்டுகிறது. இந்த நெடுநல்வாடை கண்டு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஆச்சரியமடைகின்றன.

நெருக்கடியின்போது மாமன்றத்தைக் கூட்டுவதும், பிறகு கலைந்துபோகச் சொல்வதும், எதேச்சாதிகாரத்தை வளர்க்கும் செயலாகும். இதனாலேயே சார்லஸ், பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமலேயே ஆதிக்கம் புரிந்தான். இந்தக் கேடு களைய முனைந்து மாமன்றம். மூன்றாண்டுக் காலத்துக்குமேல், மாமன்றம் கூட்டாமலிருப்பது சட்ட விரோதமாகும் என்றும், கூடிய மாமன்றத்தை அதன் சம்மதம் பெறாமல் ஐம்பது நாட்களுக்குள் கலைப்பது கூடாதென்றும் சட்டம் இயற்றினர். இனி மன்னன், மாமன்றம் என்ன செய்யும் என்று ஆணவம் பேச முடியாது! தன் செயல்களுக்குக் கணக்குக் காட்டவேண்டிய காலம், மூன்றாண்டுகளில் வந்து தீரும். மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இந்தப் புதிய ஏற்பாடு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மார்க்கத்துறையினர் அரசியலில் அதிகாரம் செலுத்துவதை அறவே ஒழித்தாக வேண்டும் என்ற எண்ணம், மாமன்றத்தில் வலுத்தது. ‘வேரறக்களைவது’ என்ற திட்டம் வலியுறுத்தப்பட்டது.

மன்னன் உள்ளம் இவற்றை ஏற்றுகொள்ள வில்லை; கரத்திலே வலுஇல்லை. எனவே சமயத்தை எதிர்நோக்கியபடி இருந்தான்.

முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றவண்ணம் இருந்தன. மன்னனிடம் கெஞ்சிப் பேசிப் பிழைத்துவந்த கும்பல் இந்த ஆபத்தை நீக்கினால், இலாபம் பிறகு கிடைக்கும் என்று அறிவர். எனவே அவர்கள், மன்னனை, மாமன்றத்தார் தலையாட்டி யாக்க விரும்பும் கொடுமைபற்றி உருக்கமாகக் கூறி ஆதரவு திரட்டிப் பார்த்தனர். படை வரிசையிலேயும் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆனால் அரண்மனை, மாளிகை, பாசறை எங்கு இவ்வித மான சதி உருவானாலும், உடனுக்குடன், மாமன்றத்துக்கு விஷயம் எட்டிவிடும் - மாமன்றத்தின் சார்பினர், எங்கும் இருந்துவந்தனர். ஒரு சதியும் கருவிலிருந்து வெளிவர இயலவில்லை; சிதைக்கப்பட்டது.

போப்பாண்டவரிடம் உதவி கோரி எனிரிடாராணி புதிய முயற்சி செய்து வந்தார். பிரிட்டனில் கத்தோலிக்கருக்குச் சலுகைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்து இந்த உதவி கோரப்பட்டது.

மக்கள் வீரமாகத் திரண்டு நின்றனர். மாமன்றம் விழிப் புணர்ச்சியுடன் இருந்துவந்தது. என்றாலும், சிறிது அயர்ந்தால், மன்னன் சதிபுரிவான் என்ற அச்சம் விட்டபாடில்லை. ஆதிக்க காலம் போய்விட்டது. மக்கள் விழித்துக் கொண்டனர். இனி அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அலங்காரச் சின்னமாக இருந்துவிடுவோம் என்று தீர்மானிக்கக் கூடியவனல்ல, சார்லஸ்; தத்துவவாதி!

‘படைகளை மாமன்றத்தின் விருப்பமின்றி அமைத்தல் கூடாது. போர் தொடுத்தல் மன்னனுடைய தனித் தீர்மானமாக இருத்தலாகாது; வரிகளை மாமன்ற ஒப்பமின்றி விதித்தலாகாது’ என்று, இந்த “கூடாது - ஆகாது” என்ற அந்தாதி குறையவில்லை.

மன்னன் இந்நிலையில், ஸ்காட்லாந்து செல்ல வேண்டிய தாயிற்று, சமரசத் திட்டம் வகுக்க. மன்னன் ஸ்காட் மக்களுக்குச் சலுகைகள் தருவதென்றும், அதற்கு ஈடாக அவர்கள் அரசனுக்குத் துணை நின்று பிரிட்டிஷ் மாமன்றத்தை ஒடுக்குவதென்றும் ஒப்பந்தமாகிவிட்டது. அதன் பொருட்டே அரசன் அங்குச் செல்கிறான் என்று பேச்சுக் கிளம்பிற்று. முன்னேற்பாடு குறையின்றி இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு குழுவினரை, மன்னனுடன் செல்ல மாமன்றம் அமைத்தது. மாமன்றத்தின் அரிமா நோக்கு அரசன்மீது எப்போதும் இருத்தல்வேண்டும். சிறைக் காவலர்கள் கைதியைக் காண்காணிப்பதுபோல, மன்னன் ஆகிவிட்டான்; மறுப்பதற்கில்லை. இந்தக் குழுவில் ஹாம்டன் இருந்தார்!

மாமன்றம், பல்லாண்டுகளாகக் குவிந்து கிடந்த குப்பையைக் கூட்டித் தள்ளிற்று - பட்ட கஷ்டத்தைப் போக்கிக் கொள்ள ஓய்வு தேவைப்படவே பிறகு கூடுவதெனக் கலைந்தது.

மாமன்ற உறுப்பினர்கள் தத்தமது வட்டம் சென்றனர்; அங்கெல்லாம் அவர்கள் மக்களிடம், பூத்து வரும் புது மலரின் அழகு குறித்தும், மணம் பற்றியும் எடுத்துரைத்தனர். வெற்றி வீரர்களாக வீடு திரும்பினோரை மக்கள் வாழ்த்தி வரவேற்றனர். “பெற்றோம் வெற்றி; பெருமைக்குரியதே! எனினும் பெற்ற வெற்றியை அழித்திட மன்னன் புது முயற்சிகள் செய்யக்கூடும். எனவே நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று உறுப்பினர் அறிவுரை கூறினர்.

மாமன்றம் கூடாதிருக்கும் நாட்களில் இன்றியமையாத ஏற்பாடுகளைக் கவனிக்கவும், நிலைகளுக்கேற்ப கட்டளை பிறப்பிக்கவும், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், பிரபுக்கள் சபையினரும் உண்டு. மாமன்றம், பிரபுக்களை வீணாக எதிரி முகாமுக்குத் துரத்த விரும்பவில்லை. மக்களாட்சியை மதிக்கும் பிரபுவை, தங்கள் முகாமுக்கு அழைத்துக் கொள்வதே அறிவுடைமை என்று எண்ணினர். அல்லலும் ஆபத்தும் விளையும் வகையில் ஆட்சிமுறை செல்வதைத் தடுத்தாக வேண்டும் என்ற பெருநோக்கம் கொண்ட பிரபுக்கள் சிலர், மாமன்றத்துடன் தோழமை பூண்டனர்.

மன்னன் ஸ்காட்லாந்திலிருந்து கொண்டு, தன் துணைக்குப் பலம்தேடிப் பார்த்தான். சில பிரபுக்கள் முன் வந்தனர். எனினும், தாக்குதலுக்குத் தேவையான அளவிலும் வகையிலும் துணை திரளவில்லை. மன்னன் மீண்டும் இலண்டன் மாநகர் வந்தான் - வரவேண்டிய நிலைமை, புதியதோர் ஆபத்தால் ஏற்பட்டது.

அயர்லாந்திலே புரட்சி மூண்டுவிட்டது! அயர் மக்கள் நீண்டகாலமாகக் கொடுங்கோலால் தாக்குண்டு தவித்தவர்கள். மேலும், அங்குச் சென்று குடி ஏறிய பிரிட்டிஷ் மக்கள், அயர் மக்கள். பிரிட்டனிலும் ஸ்காட்லாந்திலும் கொந்தளிப்பு இருக்கக் கண்டு, தளைகளை அறுத்துக் கொள்ள, புரட்சி செய்தனர். இதனை அடக்க படை வேண்டும்; படை பயன்பட பணம் வேண்டும். மன்னனுக்கு வாய்ப்பாகவும் இது அமைதல் கூடும். அயர் புரட்சியை அடக்க, மாமன்றம் முன் வந்து பணம் தந்தால், அதைக் கொண்டு அமைக்கப்படும் படையைக் கொண்டு, மன்னன் மாமன்றத்தைத் தாக்கித் தகர்க்கக் கூடுமல்லவா! நல்ல வாய்ப்பு, இந்த நெருக்கடி என்று தோன்றிற்று.

இலண்டன் நகரில் நடைபெற்ற வரவேற்பும் உபசாரமும் கண்டு மன்னன் புதிய நம்பிக்கைகூடப் பெற்றான்.

மக்கள் - குறிப்பாக பிரமுகர்கள் மாமன்றத்தார் போலத் தன்னிடம் அருவருப்பு கொள்ளவில்லை; ‘ராஜ பக்தி’ இருக்கத் தான் செய்கிறது என்று எண்ணி, ஓரளவு களித்தான்.

அந்த வரவேற்பின் பொருளை மன்னன் உணரவில்லை. மக்கள் உரிமையை மன்னன் வற்புறுத்தலால் வழங்கினான். எனினும், அதைச் செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கவும், இதுபோல மக்களின் உரிமையை வழங்கும் மன்னராட்சிக்கே ஆதரவு கிடைக்கும் என்பதை அறிவிக்கவுமே வரவேற்பு நடைபெற்றது. மன்னன் இதை மறைந்து கிடக்கும் ஆதரவு என்று தவறாகக் கணக்கிட்டான்.

மாமன்றம், நிலைமையை விளக்கிவிட்டது. அயர் புரட்சி பற்றிய பிரச்சனையைக் கவனிக்கக் கூடிய மாமன்றம், ‘படை திரளட்டும். ஆனால் அதன் தலைவராக யார் இருத்தல் வேண்டும் என்பதை மாமன்றமே தீர்மானிக்கும்’ என்று முடிவெடுத்தது. மன்னன், இதற்கா இணங்குவான்?
படையைத் தலைமை தாங்கி நடத்தும் உரிமை முற்றிலும் மன்னனைச் சார்ந்தது என்று வாதிட்டான். வம்பு வளருகிறது என்று மாமன்றம் எச்சரித்தது; இந்த மூலாதார உரிமையை ஒருக்காலும் இழக்க இணங்கேன் என்றான் மன்னன் - பிளவு தெரியலாயிற்று.