வைதிகர்கள், தமக்கு ஒருவாய்ப்புக் கிடைத்து விட்டதாகக் 
                          கருதிக் களிப்படைகிறார்கள்.
                          
                          நாட்டுக்குக் கிடைத்துள்ள விடுதலையைத், தமக்குச் சாதகமாக்கிக் 
                          கொண்டு, சரிந்துபோன தமதுசெல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக் 
                          கொண்டு வாழலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
                          
                          இதற்காக, இப்போது சாஸ்திரிகளும், கனபாடிகளும், தமிழ் 
                          இனத் தலைவரான சில வைதிகர்களும், ஓயாமல், சளைக்காமல், ‘பண்டைப் 
                          பண்பாடு’ என்பது பற்றிப் பேசுகின்றனர்.
                          சுயாட்சியை அடைந்துவிட்டோம். எனவே, நாம் நமது பரம்பரைப் 
                          பண்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று பேசுகின்றனர்.
                          
                          பிரிட்டிஷ்பிடி நீங்கியதும், இது போன்றதோர் முயற்சி 
                          நடைபெறும் என்பது,நாம் எதிர்பாராததல்ல. தலைமுறை மக்களின் 
                          கவனத்துக்கு இதனைக் கொண்டுவந்திருக்கிறோம்.
                          
                          அந்த ஆசை, சாஸ்திரிகளுக்கு வருவது, சகஜமுங்கூட! ஆசை வெட்கமறியாது 
                          எனும் மொழிப்படி, அவர்கள் இப்போது வெளிப்படையாகவும். 
                          பேசத் தொடங்கியுள்ளனர். அன்னிய ஆட்சியை எதிர்த்தனர் - 
                          ஒழித்தனர் - சொந்த ஆட்சி கிடைத்திருக்கிறது -எனவே, பண்படைந்திருக்கிறது 
                          - எனவே, பண்டைய ஆட்சியை ஏற்படுத்தும்படி வற்புறுத்தலாம் 
                          - மக்கள் செவி சாய்ப்பர் என்று, வைதிக சாஸ்திரிகள், கருதுகின்றனர். 
                          அங்ஙனம் அவர்கள் கருதுவதற்குக் காரணம், ஆங்கில கவர்னர்களும், 
                          அதிகாரிகளும், பெட்டிப்பாம்புகளான பிற கனபாடிகளும், சாஸ்திரிகளும், 
                          சகிப்புக்குரியவர்களாக, மக்களில் தெளிவற்றோரால் கருதப்படுவது 
                          தான். பரங்கியின்பிடியை ஒழித்தது, பண்டைய நாட்களிலே புகுத்தப்பட்ட 
                          பர்ப்பனியத்திடம் சரண்புகுவதற்கு அல்ல என்ற எண்ணம், வைதிகர்கள் 
                          மனத்திலே பதியவில்லை.
                          
                          சாஸ்திரிகள், இப்போது, பல இடங்களிலே, பண்டைய முறையை வலியுறுத்திப் 
                          பேசுகின்றனர். ஆனால், நாட்டு மக்களின் மனப்போக்கு, எவ்வளவு 
                          மாறி இருக்கிறது, என்பதை இந்த வைதிகர்களால் உணரமுடியவில்லை. 
                          வருணாஸ்ரம ஆட்சி கூடாது என்று வெளிப்படையாகப் பலகாலமாகக் 
                          கூறிவரும் சுயமரியாதை இயக்கத்தவர் மட்டுமே தான், வைதிக 
                          ஆட்சியை எதிர்க்கிறார்கள் - அந்தச் சுயமரியாதைக்காரர்கள் 
                          சிறுகூட்டம், பெருங்கூட்டம், பஜனை மனப்பான்மையும், பிராமணசேவா 
                          உணர்ச்சியும் கொண்டு இருக்கிறது, எனவே, அந்தப் பெருங்கூட்டத்தின் 
                          துணைகொண்டு, மீண்டும் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவோம் 
                          என்று, சாஸ்திரிகள் எண்ணுகிறார்கள். அந்த ‘ஏமாளிகள்’ அறியாதது 
                          ஒன்றிருக்கிறது. சுயமரியாதைக் கட்சியினர் என்று கணக்கிட்டால், 
                          சிறு கூட்டம் தெரியும் - ஆனால், சுயமரியாதைக் கொள்கைகளைக் 
                          கொண்டவர்கள் என்ற கணக்கெடுத்தால், சிறுகூட்டமல்ல - சனாதனச் 
                          சாஸ்திரிகள் சஞ்சலப்படும் அளவுக்கு, ஒரு பெரும் கூட்டம், 
                          அஞ்சாநெஞ்சுடன் அறப்போர் நடத்தும் கூட்டம் இருக்கக் காணலாம். 
                          எந்தக் காங்கிரஸ் தமிழர்கள், தமக்குக் கேடயமாகுவர் என்று, 
                          சாஸ்திரிகள் எண்ணிப் பூரிக்கின்றனரோ, எந்தக் காங்கிரஸ் 
                          தமிழர்களைக் கொண்டு, மீண்டும் சனாதன தர்மத்தை ஏற்படுத்திவிடலாம் 
                          என்று மனப்பால் குடிக்கிறார்களோ, அந்தக் காங்கிரஸ் தமிழர்கள், 
                          அவ்வளவுபேரும், அவனாசிகளல்ல, ஆரிய தாசர்களல்ல, அவர்களிலே 
                          பெரும்பகுதியினர், அடிமைத்தனம் எந்த உருவில் வந்தாலும், 
                          ஆதிக்க வெறியர், எந்த மொழிபேசி, என்ன சாகசம் செய்தாலும், 
                          எதிர்த்தொழிக்கும் இயல்பினர். எல்லோரும் ஒருகுலம்! எல்லோரும் 
                          இந்நாட்டு மன்னர்! என்ற இலட்சியம் கொண்டவர்கள். அவர்களின் 
                          கருத்து உறங்கிவிடவில்லை - வீரம் கருகிவிடவில்லை. அவர்கள், 
                          அன்னிய ஆட்சியின் அக்கிரமங்களைக் கண்டு, கொதித்தெழுந்து 
                          போரிட்ட தன் காரணம் மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்கேயன்றி, 
                          மமதையாளர்களின் ஆட்சியைக் கொண்டுவர அல்ல!
                          
                          இதனை அறியாததாலேயே, சில ஆரியத்தலைவர்கள் இப்போது, சற்று 
                          வெளிப்படையாகவே, பண்டைய ஆட்சி முறையை வற்புறுத்துகிறார்கள். 
                          ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறப் போவதில்லை. நாட்டில், இன்று 
                          ஏற்பட்டுள்ள, வளர்ந்து கொண்டுள்ள விழிப்புணர்ச்சி, இந்த 
                          வீணர்களின் கொட்டத்தைக் தாக்கித் தகர்த்துத் தரைமட்ட 
                          மாக்கிவிடும் என்பதில் நமக்கு ஐயமில்லை. கடைசி முறையாகச் 
                          சனாதனம், ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுகிறது. கடைசிக் 
                          கட்டத்தில் வந்து நிற்கிறது. அறிவும் ஆற்றலும் கொண்ட 
                          ஓர் அறநெறிப்படை கிளம்பினால், இனி என்றென்றும் தலைதூக்க 
                          முடியாத படி, இந்த வர்ணாஸ்ரமத்தை, வீழ்த்தமுடியும். இதற்கான 
                          ‘கூட்டுப் படை’ தயாராகவேண்டும். இந்தப் படை தயாராவதை, 
                          இன்று சில சாஸ்திரிகளின் பேச்சுத் துரிதப் படுத்துகிறது.
                          
                          “சுயாட்சியை, யார் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் கவனி, 
                          நண்பனே!” என்று, காங்கிரசிலுள்ள திராவிடனுக்கு, நாம் எடுத்துக் 
                          காட்ட, காங்கிரசிலுள்ள திராவிடத் தோழன், “கவனித்துக் 
                          கொண்டுதான் வருகிறேன் இந்தக் கபடர்களின் செயல்” என்றுகூற, 
                          இருவரும்கூடிப் புதியதோர் அணிவகுப்பை உண்டாக்குவர். சாஸ்திரிகள், 
                          சாகசம் பேசுவது இந்த நிலையை விரைவிலே உண்டாக்கும்.
                          
                          இதென்ன காலமய்யா! என்ன அக்ரமம்! பார்ப்பனர்மீது இப்படித் 
                          துவேஷம் பரவிவிட்டதே! சமஸ்கிருதம் வேண்டாமாமே. இந்திக்கு 
                          எதிர்ப்பாமே! சிவ! சிவ! இது கூடாது கூடாது. இதனை முளையிலேயே 
                          கிள்ளி எறிந்துவிட வேண்டும், வளரவிடக் கூடாது - என்ற பொருள் 
                          படும்படி பேசுகின்றனர் சாஸ்திரிகள். அவர் மனத்தைக் குடைந்த 
                          அந்தக் கிலிக்குக் காரணம் என்ன? எதைக்கண்டு சாஸ்திரியார் 
                          அவ்வளவு சீற்றமடைந்தார் என்று ஆராய்ந்தால், ஒருவிஷயம் 
                          புலப்படுகிறது. அதாவது, நாட்டிலே ஒரு கூட்டம் இருக்கிறதாம். 
                          - அக்கூட்டம் பெரிய காரியமோ, சிறிய காரியமோ- எக்காரியமாக 
                          இருந்தாலும் பார்ப்பனத் துவேஷமென்னும் நோக்கத்துடனேயே 
                          கவனித்து வருகிறதாம். வகுப்புவாதம் வளர்ந்துவிட்டதாம். 
                          இதனால், நாட்டிலே நாகரிகமான பொது வாழ்க்கையே நசித்து 
                          விட்டதாம்.
                          
                          சாஸ்திரியார், சீறவும் சோகிக்கவும் ஆவேசம் கொண்டவர் 
                          போலப் பேசவும் செய்த கூட்டம் எது? அக்கூட்டம் செய்த குற்றம் 
                          என்ன? சாஸ்திரியாரின் சோகத்துக்கும் சீற்றத்துக்கும் 
                          நாம்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். நாம் செய்த 
                          குற்றம், நம்மவர்கொஞ்சம் சுயமரியாயுடன் வாழவேண்டும் எனத் 
                          தூண்டியதுடன் தான். அது குற்றமானால், அதனை மேலும் மேலும் 
                          செய்யச் சௌகரியமும் சந்தர்ப்பமும் வரவேண்டுமென்றே நாம் 
                          விரும்புகிறோம். அதற்காகத் தரப்படும் தண்டனை, சாஸ்திரியார் 
                          போன்றவரின் சீற்றமும், சங்கராச்சாரிகளின் ‘சாபமும்’ கனபாடிகளின் 
                          கோபமும், அல்லது ஆச்சாரிகளின் அடக்கு முறையும் என அடுக்கடுக்காக 
                          வருவதாயினும், வரவேற்கிறோம். ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு 
                          என உழைக்கும் நமக்குப் பழிச்சொல்லும், இழி சொல்லும் 
                          பரிசாகத்தரப்படும் என்பதையும், நமது முயற்சியை அழிக்கப் 
                          பல்வேறு படைகள் திரண்டுவரும் என்பதையும் முன்னதாகவே உணர்ந்தும் 
                          அவற்றுக்கு நம்மைத் தயார் படுத்திக்கொண்டுமே தான், பாடுபட 
                          முன்வந்தோமேயொழிய, என்ன நேரிடுமோ, யார் கோபிப்பரோ 
                          என்று அஞ்சி அஞ்சி வாழுபவர் நாம் அல்ல!
                          
                          எதனை வைதிகர் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறுகிறாரோ 
                          அதுமுளைத்துச் செடியாகிப் பூத்துக்காய்த்து, பழுத்து இருக்கிறது. 
                          சாஸ்திரியார் தூங்கி விழித்தவன் கதைபோல இன்று தோன்றித் 
                          துள்ளுகிறார்.
                          
                          ரோமாபுரியில் பெட்ரீஷியன் (சீமான்கள்) பிளபியன் (ஏழைகள் 
                          - கூலிகள்) என்ற போராட்டம் நடந்த போது, ஆளடிமையாகி, 
                          உழைத்து உழைத்து ஊராருக்கு அழுது, உல்லாச உலுத்தரின் அடிமைகளாக 
                          வாடி இருந்த பிளபியன் தமது உரிமைகளைக் கேட்க ஆரம்பித்தபோது, 
                          இன்று சாஸ்திரியார் சீறி விழுந்து, இதென்ன கேடுகாலம்! 
                          எனக் கூறுவதைப் போலத்தான், பெட்ரீஷியன் எனும் சீமான் 
                          வர்க்கத்தார் சீறினர்.
                          
                          சரித்திரம், அந்தச்சீற்றத்துக்காக, பிளபியன் தனது உரிமைகளைக் 
                          கேட்காது விட்டதாகவோ, அவர்களின் எழுச்சியை, அந்தச் சீற்றம் 
                          அடக்கி அழித்து விட்டதாகவோ கூறவில்லை,
                          
                          பிளபியன்கள் - பெட்ரீஷியன்கள் என்ற பேதமே அடியோடு நீக்கப்பட்டதைத்தான் 
                          ரோம் சரிதம் கூறுகிறது. இடையே ரோம் ரணகளமாக மாயிற்று 
                          என்பது உண்மையே! மாளிகைகள் இடித்தன; மன்னர் போல் மமதையுடன் 
                          இருந்தவர்களின் ரத்தம் தரையில் தோய்ந்தது என்பதும் உண்மையே! 
                          ஆனால், ரத்தத்தைச் சிந்திச் சாதித்த காரியத்தை, நாம் அறிவைச் 
                          சிந்தித் சாதிக்கலாம் என்ற திடநம்பிக்கை மீதே பணியாற்றுகிறோம்.
                          
                          ரோம் வீழ்ச்சிக்குக் காரணமே, அதன் சமுதாய நிலைதான் என்பது, 
                          சரிதத்தைப் பார்ப்பவருக்கு நன்கு விளங்கும். இந்நாட்டிலும், 
                          அந்நிலைதான் உளது. அதனை மாற்றினாலன்றி நாடு மீள மார்க்கம் 
                          இல்லை. எனவேதான் நாம் சமுதாயத்தின் கேடுகளைக் களையும் 
                          பணியில் ஈடுபடுகிறோம். அதனால் சிலருக்குத் தமது ஏகபோகம் 
                          போகிறதே என்பதால் கோபம் வராமற்போகாது! ஆனால், அதற்காக 
                          நாம் நமது பாதையை விட்டு நீங்கவும் முடியாது!
                          சமஸ்கிருத ஆதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும் நாம் கண்டிக்கிறோம் 
                          எனக்குறை கூறுகின்றனர்.
                          
                          ஆம்! என நாம் ஒப்புக்கொள்கிறோம். நல்லவர் சமஸ்கிருத 
                          ஆதிக்கத்தையும், பார்ப்பனியத்தையும் நிச்சயம் எதிர்க்கிறார்கள். 
                          வெறுக்கிறார்கள். ஏன்?
                          
                          கிளி, கூண்டைக் கண்டால் கொஞ்சிக்கொண்டு உள்ளே நுழைந்து, 
                          உல்லாசமாக இருக்க அதுவே ஏற்ற இடம் எனக்கருதாது! அதுபோல் 
                          தமிழர் தம்மையும் தம்கருத்தையும் வாழ்வையும் சிறைப்படுத்தும், 
                          சமஸ்கிருத ஆதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும் வரவேற்க 
                          மாட்டார்கள்; வெறுத்து ஒழிக்கத்தான் விரும்புவார்கள்.
                          
                          “இதுகெட்ட எண்ணம், துவேஷம், இதனை முளையிலேயே ஒழித்துவிட 
                          வேண்டும்”எனச் சாஸ்திரியார் கூறுகிறார். சாஸ்திரியார் 
                          தமது முழு படைபலத்துடன் வரினும், இதனை அழிக்கமுடியாது 
                          என்று முன் கூட்டியே சொல்லவிரும்புகிறோம். ஏனெனில், 
                          இதனைச் சாஸ்திரியார் கெட்டது, ஆபத்தானது, அழிக்கப்பட வேண்டியது 
                          என்று கூறுகிறாரோ, அது மிக இயற்கையாக உண்டாகும் எழுச்சி.
                          
                          இயற்கையாக எழும் உணர்ச்சியை அடக்கி அழிக்க முடியாது. அடக்க 
                          அடக்க அது, அழுத்திவைக்கப்பட்டிருக்கும் ரப்பர் பந்து, 
                          விட்டது மேலே எழும்புவதுபோல மிக மிக மேலுக்குத்தான் கிளம்பும்.
                          
                          தமிழர் மிகமிகப்பலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
                          
                          அவர்கள் ஆண்டவனின் காலில் தோன்றியவர்கள் என்று இழிவாகக் 
                          கூறப்பட்டனர்.
                          
                          அவர்கள் பார்ப்பனருக்கு அடிமை வேலை செய்யவே ஆண்டவனால் 
                          படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.
                          
                          அவர்கள் சொத்துச் சுதந்தரம் பெறவோ, அனுபவிக்கவோ இலாயக்கற்றவர் 
                          என்று கூறப்பட்டது.
                          
                          அவர்கள் “சூத்திரர்கள்!” என்று ஆரியவர்க்கம் கூறிற்று.
                          
                          உழைப்பதும், உள்ளம் உருகுவதும் அவர்களின் வாழ்க்கையாக 
                          இருந்தது.
                          
                          பெரியதொரு சுமையை இடுப்புவளைய, முதுகு முறியச் சுமந்துகொண்டு, 
                          சென்றுகொண்டே இருந்த தமிழன், தன்னைத்தான் உணர்ந்து நிமிர்ந்தான். 
                          அவன் நிமிர்ந்ததும் முதுகிலிருந்த பாரமான சுமை தொப்பெனக் 
                          கீழே இறங்கியதும் அவன் அடைந்த ஆறுதல், ஆனந்தம் இவ்வளவு 
                          அவ்வளவு அல்ல! புன்சிரிப்புடன் நின்றான்.
                          
                          அவன் கீழே தள்ளிய சுமைதான் பார்ப்பனியம்!
                          
                          அதைத் திரும்பவும் முதுகில் ஏற்றிக்கொள் என்று சாஸ்திரியார் 
                          கூறினால் கேட்பாரா! சொல்வதைக் கேட்கவில்லையே என்று சீறினால், 
                          சிரிக்காரா!
                          
                          தேவபாஷை சமஸ்கிருதம்! அதனைப் பூசுரர் அறிவர்! அறிந்து 
                          அழகிய பாசுரம் அமைப்பர். வேதங்கள் அம்மொழியில் தான் உள்ளன. 
                          வேதகாலச் சட்டங்கள் அம்மொழியிலேயே வெளியிடப்பட்டன. மனுவுக்கு 
                          உகந்த மொழியும் அதுவே. பார்ப்பனியத்துக்குப் படை பலமாக 
                          விளங்கியதும் அஃதே. அம்மொழி மூலமே கதைகள் வளர்ந்தன, அந்தக் 
                          கதைகளே தமிழரை அடிமைப் படுத்தின. பார்ப்பனர் என்பவர் ‘பரமனால்’ 
                          பாரிலுள்ளோரை எல்லாம் ஆளவே பிறப்பிக்கப்பட்டவர் என்ற 
                          பயங்கரமான கருத்தைப் பாமரர் உள்ளத்திலே புகுத்தியது அக்கலையே.
                          எந்தச் சமஸ்கிருதத்தின் மீது தமிழர் வெறுப்புக் கொண்டுள்ளார்கள் 
                          என்று வெந்தமனத்துடன் சாஸ்திரியார் கூறுகிறாரோ, அந்தச் 
                          சமஸ்கிருதமும், அதன்மூலம் வெளிவந்த கலையும் தமிழரைப் படுத்திய 
                          பாட்டைக் கொஞ்சம் எண்ணினாலும், சமஸ்கிருதத்தை ஏன் வெறுக்க 
                          மாட்டார்கள் என்று கேட்கிறோம். தம்மைப் பரம்பரை அடிமைகளாக்கி 
                          வைத்தது பார்ப்பனியந்தான் என்பதை உணர்ந்த பிறகு, பார்ப்பனியத்திடம் 
                          யாருக்குப் பரிவுவரும்?
                          
                          காட்டிக் கொடுப்பதையே தொழிலாகவும், வயிற்றுப் பிழைப்பையே 
                          வாழ்க்கையின் இலட்சியமாகவும், அடிமைத்தனத்தையே அணிகலனாகவும் 
                          கொண்டவர்களும் தவிரப் பிறர், தம்மை இழிவு படுத்தும் சமஸ்கிருதத்தைக் 
                          கண்டிக்காமலிரார்.
                          
                          எனவே, பன்னெடுங் காலமாகத் தமிழரை அடிமை கொண்டு ஆட்டிப்படைத்து 
                          வாட்டி வதைத்த ஆரியத்தைத் தமிழர் இன்று எதிர்த்து, அதன் 
                          ஆக்கம் கூடாது என்று கூறுகின்றனரே யொழிய வேறில்லை.
                          
                          இதனால் அண்டம் அதிரும், பூமி பிளக்கும் என்று பூச்சாண்டி 
                          காட்டிய காலம் மலை ஏறிவிட்டது.
                          இது மகா ஆபத்தானது என்று பயங்காட்டினால், அதற்காகப் பறிப்புரிமையைப் 
                          பறிகொடுக்கத் துணியும் பேதைமைக் கூட்டம் இன்று இல்லை.
                          
                          இன்று சுயமரியாதையைக் காத்துக்கொள்ளப் போரிடும் தமிழர்களேயுள்ளனர். 
                          அவர்கள் சாஸ்திரிகளின் சீற்றத்தைக் கண்டு சாயமாட்டார்கள்; 
                          கைகொட்டித்தான் சிரிப்பார்கள்! சாஸ்திரியார் சீற்றம், 
                          காலத்தின் மாற்றத்தை ஒருபோதும் அசைக்காது.
                          
                          கட்டுத்தளர்ந்துவிட்டது! கைகால்கள் சருகென உலர்ந்துவிட்டன. 
                          குத்து ஒன்றுக்குக் குப்புற ஆள்கீழே விழுந்த காலத்தை எண்ணி, 
                          ‘போனது வராது’ என மாஜி போக்கிரி மரத்தடியில் உட்கார்ந்து 
                          யோசிக்கிறான்.
                          
                          கண்ணாடி எங்கேயிருக்கிறது என விநாடிக்கொரு முறை தேடித் 
                          தேடி முகத்தைப் பார்த்து, அந்த மினு மினுப்பையும் சொகுசையும் 
                          கருத்து வளைந்த புருவங்களையும், கண்ணாடி போன்ற கன்னங்களையும், 
                          குவிந்து கொஞ்சும் அதரத்தையும் சுருண்டு வளைந்த கூந்தலையும் 
                          கண்டு கண்டு களித்த காலம் போய்க் கண்ணாடியைக் கண்டால், 
                          முகத்தின் சுருக்கமும் கன்னத்தின் குழியும் உதட்டின் வறட்சியும், 
                          கூந்தலின் வெளுப்புமே தெரியுங் காலம் வந்ததும், அலங்கார 
                          மேனாமினுக்கி, “நாம் அழகாக இருந்த காலம்போயிற்றே, போனது 
                          வராது” என எண்ணுகிறாள்.
                          
                          பலமிழந்த போக்கிரி பக்கத்திலே சில குட்டி வஸ்தாதுகளைச் 
                          சேர்த்து வைத்துக்கொண்டு, பழம்பெருமை போனாலும், அடியோடு 
                          காரியங்கெட்டுவிடாதபடி பார்த்துக் கொள்வான்.
                          
                          வயது முதிர்ந்துவிட்டதால் வசீகரம் வதைக்கப்பட்ட போதிலும், 
                          சிதைந்த சிங்காரத்துக்குச் சில்லறைச் சொகுசுகள் செய்து, 
                          விகாரம் அத்தனையும் வெளிக்குத் தெரிய ஒட்டாது, அலங்காரி 
                          தடுக்கிறாள்.
                          
                          அதுபோலத்தான் வருணாஸ்ரமும் இன்று இருக்கிறது. அதன் ஈடு 
                          எதிர்ப்பு இல்லாத காலம் போய்விட்டது. கண்டால் கிடுகிடுவென 
                          மக்கள் நடுங்கும் காலம் போய்விட்டது. இப்போது எங்கும் 
                          இடி, கண்டனம், தாக்குதல் என்றாகிவிட்டது. எனவே, வருணாஸ்ரமம் 
                          பழங்காலப் போக்கிரி படைசேர்ப்பது போலவும், அந்நாள் அலங்காரி 
                          அழகுப் பூச்சுகளை நம்புவதுபோலவும், தேசியத்தை நம்பி அதை 
                          மூலமாகக் கொண்டு மினுக்கிப் பார்க்கிறது. பகுத்தறிவுக் 
                          கண்கொண்டு பார்ப்போருக்கு, அந்த மூலம் எதன்மீது பூசப்பட்டு 
                          இருக்கிறது என்பது விளங்கும். காலத்தின் போக்கை உணர்ந்தோருக்கு, 
                          இனி ஒரு நாளும் அந்த வருணாஸ்ரமம் பழையபடி நிலைத்து நிற்காது 
                          என்பது விளங்கும். மக்களின் எழுச்சி அடங்காது. அந்த எழுச்சியின் 
                          முன்பு, எதுதான் நிற்கும்? ஜார் நிற்கவில்லை! பிரான்சுக் 
                          குபேரர்கள் நிற்கவில்லை! கொடுங்கோலர் யாருமே நிற்கமுடியவில்லை; 
                          குப்புற விழுந்தனர்! வருணாசிரமும் விழும் கீழே; தவிடு 
                          பொடியாகும். மீண்டும் உருப்பெற்று எழ முடியாதபடி அழிக்கப்படும் 
                          என்பது உறுதி.
                          
                          (திராவிடநாடு - 19.10.1947)