அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

உடையார் ஓலம்!

கீழே போட்டு எமைக்
கூழாக்குவரே,
குருடாக்குவரே எமது
கண்கணை,
சிக்கிடின் அவர் கரம்
காலின் கீழே
துவைத்துப் போடுவர்,
எம்மை எல்லாம்
மேட்டுக் குடியினர்
மேனி யழகினர்
காத்து உவந்திடும்
கனவான் தமையும்
நாட்டிலிருந்து
நசுக்கி ஒழிப்பரே!

வெறிகொண் டலைகிறார்
விழியிலாராய்!
பாய்ந்திடும் இடமெல்லாம்
பாழ் வெளியாகுமே
ஆட்சிக் கயிறதும்
அவர்கரம் சிக்கிடின்
உடைத் தெறிவரே
உயிர்நிலை யாவையும்!

என்கென்ன அதனால்
எனக்கேட்டார்
இறைவன் ஆங்கே!
திடுக்கிட்டுப் போயிருப்பர் செல்வர்கள் -
எனக்கென்ன அதனால்? என்ற
இறைவன் கேட்டதன் பொருள் என்ன?
கொதித்தெழுந்து புரட்சிச் செய்திடும்
ஏழையா, என்னை அழிக்க வருவது.

நீர் அளித்த பாடந்தான்
அவர் நெஞ்சந்தனில் உளது.
கெடுமதி பெற்றதவர்
உம்மிடம் இருந்தன்றோ!
இவையெலாம் உமது
படைப்புகள் அலவோ!
ஒளியும் எழிலும்
அருளினேன் முன்னம்
சக்தியில் தள்ளினீர்
இவர் தமை நீவிர்.
வாளுடன் வில்லம்பு
வலிவளிக்கப் போதும்
என்றிருந்து வந்தீர்!
வந்தது இது!
விதைத்ததை நீர்
அறுத்தெடுத்துச் செல்வீர்!

('சமதர்மமும் சர்வேஸ்வரனும்'
- காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(மார்கரெட் விடிமீர் எனும் கவியரசியின் கவிதை தழுவல், விழிப்புற்ற ஏழையின் புரட்சி, ஏழையைப் படைத்தவர் கடவுளிடம் முறையிடச் செய்கிறது)