அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

திருவிடத்தை அமைப்போம்!

உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே!
உலகிலே பான்மை கெட்டு உழலுவது அழகலவே!
கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்!
குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு!
ஆண்ட இனம் நாமலவோ! அச்சம் ஏனோ?
ஆருயிரை இழப்பதேனும்,
அருமைமிகு திருவிடத்தை அமைப்போம் காப்போம்!

அகிலொடு சந்தனமிக அடல்கொண்ட மலைநாட!
ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக் கனுப்பியோனே!
நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்!
பூமணக்கும் பொழில் சூழ்ந்த பென்னி நாட!
புகழ் மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு!
புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!!

(திராவிடநாடு - 11.06.1961)