அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

பொற்காலம் காண!

எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவைதன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு உடல் பெருத்து
ஊழியர் புடைசூழத்
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேரேறும்
அரசகுமாரர், அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல!

இவரைப் பாடுவேன்!
இன்னல்தரு ஈட்டிவ்வையத்துள்
ஆண்டுபல இருந்தோர்.
ஏனோதானோக்கள்.
எச்சிற் கலையங்கள்.
சாவுவரும் வரையில்
சளைக்காது போரிட்ட
கந்தலுடைக்காரர்.
களம் கிளப்பும்
தூசி ஓசையுடன்
ஓலம் உளம்மருட்ட
மண்டை உடைபட்டோர்,
கண் புண்ணானோர்,
ஏனோதானோக்கள்,
எச்சிற்கலையங்கள்,
பற்றித்தான் பாடப் போகிறேன்

இவரைப் பாடேன்!
மார்பகம் தன்னில்
விருதுகள் மின்னிட
பரிஏறிப் படைகாணப்
பவனி வரும்
படைத் தலைவனாம்
மன்னனின் செல்லப்பிள்ளை

பாடுவேன் இவரை!
எவர், அவர்? என்று
எவரும் அறியா நிலையினர்!
ஏறு நடைபோட்டு
வெற்றி கண்டார்!
இளைஞர்!

குடிமகனாய் உள்ளோன்
ஊர் சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்,
தாங்கொணாப் பாரந்தனைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக்கூடத்து உழல்வோன்
ஏதோ இசை எழுப்பி அதனால்
இனிமைபெற எண்ணுபவன்
ஏரடிப்போன்!
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்.

மற்றவர் பாடட்டும்
மகிழ்ச்சி தரும்
மாது மது குறித்து!

என் பாடல்
குப்பை கூளம் பற்றி
குப்பன் சுப்பன் குறித்து
அவர்கள் இசையினிலே
வண்ணம் புகழுடன்
பொன் மின்னும்.
பிடி சாம்பல்
வாய்க்கரிசி
இவைபற்றி என் பாடல்!
குளிர்கொட்ட
மழை வாட்ட
குமுறிக்கிடப்போர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை!
இஃதே என் காவியம் காண்!

(காஞ்சி பொங்கல் மலர் - 1965)


(பொங்கல் திருநாளில், அரசு முறை நேர்மையானதாக்கப்பட்டால், எல்லாரும் இன்புற்றிருக்கும் பொற்காலம் கண்டிடலாம் என்ற குறிக்கோளையே வாழ்த்துரையாகத் தருகிறார் அண்ணா)

ஜான்மேங்ஸல்டு(1873) எனும் கவியின் கருத்து இது.