அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


மூதறிஞர் மூவர்
(கவிதை அல்ல: ஆக்கிக் கொள்ளலாம்)

மூவர் கிளம்பினர் மூதூர் விட்டு
வேறூர் சென்று வாழ்ந்திட எண்ணி
முறையாய் மருத்து வம்ஆரூ டமொடு
இசையுங் கற்றுத் தேறி யிருந்தும்
எவரும் சீந்தா நிலையே, ஈங்கு,
எனவே ஏகுவோம் இனிதாய் வேற்றிடம்
என்றே சென்றனர், மூவரும் ஒன்றாய்.

வழிநடந்த களைப்புவந்து அவரை வாட்டுமுன்
வழியில்பட்ட சிற்றூரொன்று சிந்தை ஈர்த்தது
விழுந்தும் வீழா நிலையிலுள்ள பழையசாவடி
இருந்துசமைத்து உண்ண எண்ணித் திட்டமிட்டனர்

•••

கடைசென்று கச்சிதமாய் கறிகாய் வாங்குவேனென்று
மருத்துவம் கற்றவன், மன்னன், சொன்னான், சென்றான்.

•••

அரிசிக்கு நான்செல்வே னென்றேன். ஆரூடத்தான்
அடுப்புமூட்டிக் காத்திருப்பேன் - அறிவித்தான் இசைகற்றோன்
இவ்விதமே மூகரும்தான் முத்தொழிலை மேற்கொண்டார்

•••

"கத்தரிக்காய்! விலைமலிவு! என்றான் கடைக்காரன்.
மெத்தச் சூடலவோ, வயிறும் வலிக்குமென்றான்,
வெண்டை சளியூட்டும், உருளை உடல்ஊதும்,
கருணை நல்லதுதான், என்றாலும் கடும்வாய்வு
என்றே ஒவ்வொன்றும் ஒவ்வோர் நோயூட்டுமெனும்
மருத்துவத்தை உரைத்தான், மதித்தெதையும் கொள்ளாது.

•••

இந்த நிலைய தனில் இவனிருக்க,
அரிசி கொளச்சென்ற ஆரூடக் காரனவன்
குறுக்கே ஓர்பூனை ஓடியதால் திகில்கொண்டு,
குந்திக் கிடந்தான் ஓர்திண் ணையிலே,
ஆரூடம் கூறும்அரை நாழிகை வரையிலே.
அப்பா! இனித்தோஷம் என்றேகுகையில்,
ஐயர்குறுக் கிட்டார்! ஔவையும் தும்மிவிட்டாள்!
அடுக்கடுக்காய் அபசகுனம் - ஆபத்து வந்ததனால்
அரிசிவாங்கும் 'ராசி' அந்திசாயும் போதினில்தான்.
என்ற கணக்கெடுத்தான் ஆரூடம்தனைக் கற்றோன்.
எனவே அயர்ந்து படுத்திருந்தான் அரசமரத்தடியில்.

•••

இங்கோ இசைகற்றோன், ஈரமிலா விறகெடுத்து
எரியவிட்டு, அடுப்புமீது ஏற்றினான் பானையதை!
தண்ணீர் அதிலிட்டான், தழல்பிடித்துக் கொண்டதுகாண்.
தளதள தத்தளவென்றே தாளம் போடுதல்போல்
கொதியெழுப்பிக் காட்டிற்று, பானையுள் தண்ணீரும்
சரியான சமயமிது சங்கீதம் பயிலஎன்று,
சமயலில் ஈடுபட்ட இசையாளன் முடிவுசெயது,
பாட்டைத் துவக்கிவிட்டான். பானை தாளமிட
தளதள தத்தளவென்ற தாளம் துணைகொண்டான்.
பாடல் பரவசத்தில் ஈடுபட்டான் பரிவாக.

•••

தாளம் போட்டிடவா பானைக்குத்தான் தெரியும்!
தண்ணீர் கொதிப்புமாறி தாளமும் வேறாயிற்று!
தப்பாகத் தாளமிட்டுச் சங்கீதம் சொல்லாதே!
சொன்னேன், நான் முன்கோபி, சொகுசாகப் பாடுகிறேன்.

என்பாட்டுக் கேற்றபடி இசைந்து தாளமிடு
இல்லையேல், இருக்கவிடேன் உனை என்றான்.
பானைக் கென்னதெரியும் பாட்டும் தாளமும்தான்!
தளதளவெனும் ஓசை தவறாகிப் போயிற்று.
முறைத்தான், முணுமுணுத்தான், மும்முறையும் எச்சரித்தான்.

பானைக் கென்னதெரியும் பாடுவோன் கடுங்கோபம்?
தன்னிச் சையாக ஓர்தாளம் எழுப்பிற்று.
தடிதூக்கி அடிகொடுத்தான், தப்புத்தா ளம்போட்டு,
இசைகெடுக்கும் போக்கிரியே! இந்தா தண்டனையென்று.
பானை தூளாகித் தண்ணீர் நெருப்பணைக்க,
சமையலுக்கு வழியில்லை! கண்டான் சங்கீதன்!

•••

காயின்றிக் கறியின்றிக் காரணங்கள்தான் சுமந்து
வந்துசேர்ந்தான் மருத்துவனும், வாகடம் பிழைத்ததென்று.
அசிரிக் கடைக்காரன் பேர்ராசி என்னுடைய
ராசியுடன் ஒன்றுசேராக் காரணம் தன்னாலே
வாங்கி வரவில்லை அரிசிதானும்!
வேறு கடையும் இங்கில்லை.
ஆரூடம் பொய்க்காது! ஆறாண்டுப் பாடம் என்றான்.
ஆரூடம் கற்றதனால் அரிசிவாங் காதிருந்தேன்!

•••

மூவரும் மும்முறையில் மூதறிவை நிலைநாட்டிக்
கிள்ளும் பசியகற்ற வழிகாணத் தவறினர்காண்!
மருத்துவம் ஆரூடமுடன் மாகலையாம் சங்கீதமதை
மதித்து நடந்துகொண்டோம், மாமேதை ஆதலினால்
என்றெண்ணினர் - வயிறு பசியால் எரிகிறது!!

•••

இந்நிலை யிலேயே இலட்சியம் தேடிடுவோர்
ஆங்கதனை மறந்து அவரவர்க்கு விருப்பமுள
பாங்குகள்-பற்றுகள்-ஆகியவை குறித்தெண்ணிச்
சூறைமதி விளைவாகத் திறம்குலைந்து போவதனால்
குறிக்கோள் தனைஇழந்து, உழல்வராம் உளம்திரிந்து.

•••

ஒன்றில் குறிவைத் தால்அது
நன்றென்று எண்ணல் வேண்டும்.
ஆங்கத னைப்பெற் றிடவோ
அயரா துழைக்க வேண்டும்!
தூங்கிடுதல் துவண்டிடுதல் தூய்மைக்கு அழகல்ல!
தொடர்பில்லாதன வற்றைத் தொட்டிழுத்துக் கூட்டி வந்து,
இடரை வரவழைத்து இலட்சியம் இழந்திடுதல்,
எற்றுக்கு என்பதனை எண்ணிடுவீர் எல்லோரும்,
சாதாரணச் சமையல், அதனைச் செய்திடவோ
சங்கீதம் கற்றவனும் ஜாதகம் கணிப்பவனும்
நோய்தீர்க்கும் மருத்துவனும் கூடி முடியவில்லை,
காரணமோ,
குறிக்கோள்தனைக் கெடுக்கம் குறைஅறிவு கொண்டதுதான்.
மற்றும் தமக்கென்று மாமேதாவித் தன்மை
மெத்த இருக்குதென்ற பித்தத்தி னாலுங்காண்

(திராவிடநாடு - 14.01.1961)

(தி.மு.க.விலிருந்து பிரிந்து செல்ல முயன்ற சம்பத் செயல் குறித்து தீட்டப்பட்டது)