அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


கோச்சுவண்டிக் கும்மி
(பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் காங்கிரஸ் மண்டபத்தில் பேசுகையில், கோச்சுவண்டி ஓட்டும்போது உள்ளே இருப்பவர்கள் ஒன்னும் பேசக் கூடாது. அதைப் போலத் தனது நிர்வாகத்தைப் பற்றி குறை கூறலாகாது என்ற கதையக் கூறினார். அதைப் பார்க்கும்போது தோன்றிய 'கும்பி' இது)


கரடு முரடான பாதையிலே, அந்தக்
கறுப்புக் கண்ணாடி கோச்சு மானும்
காட்டுக் குதிரையைப் பூட்டியு மல்லே,
கடுவேக மாகக் கோச்ஓட்ட லானார்

பாதையோ செங்குத்துப் பயமய்யா என்றால்
பச்சை சிரிப்புச் சிரித்து விட்டார்
குலுங்குது வயிறெல்லாம் நோகுதப்பா என்றால்
குந்து சும்மா குந்தெனக் கூறிவிட்டார்.

கண்ணாடி எடுத்திட்டு ஓட்டுமய்யா கொஞ்சம்,
கண்டிப்பாய் சொல்லுகிறேன் கேளும் என்றால்,
ஓட்டிட வந்தவன் நீயோ நானோ என்று
ஒய்யாரம் பேசுறார் கோச்சு மானும்.

உள்ளே இருக்கும்என் உற்றாரும் அப்போ,
உயிருக்குப் பயப்பட்டே கூறி னாரே,
ஓட்டிட வந்தது நீயென்றாலும், அப்பா
உயிர் எங்களுடையது உணரு மென்றார்.

உலகமே அநித்யம் மாயை அய்யா, இனி
உறங்குங் கள்உள் ளேயே, நிம்மதியாய்.
ஓட்டிடும் வண்டியும் உடைந்துவிட்டால், அப்போ
உல்லாச மாகநீர் நடப்பீர் என்றார்.

எங்குத் தேடி னீரோ இந்த ஆளைநீர்
எமக்கென்று வந்தாரே விந்தை யாக
என்றெந்தன் உறவினர் என்னைக்கேட்டால், அப்போ
ஏறெடுத்துப் பார்த்தவர் கூறினாரே.

இப்போதே நான்கோச்சு ஓட்டவந்தேன் சும்மா
இட்டப்படி யெல்லாம் பேச வேண்டாம்
குப்புற வண்டியும் குடைகவிழ்ந்தே போனால்
கொள்ளுங்கள் வேறுஆள் கேட்ப தில்லை.

என்னென்பது ஐயா எங்கள் கோச்மான்
இருந்து வந்த இந்தவிதந் தனையே
வந்ததய் யாபெரும வம்புகளே முன்னம்
வகையறியா தேஆள் வைத்த தாலோ!

(குடியரசு - 14.05.1939)