அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

இனியன இனி பல

இனியன கேட்கின்
இயம்புதல் கேளீர்,
இனிது இனிது
எகிப்தின் எழுச்சி!
அதனினும் இனிது
ஆணவம் தவிர்த்து
ஆங்கில அரசு
அடி பணிந்ததுவே!

இனியன கேட்பின்
என்னரும், தம்பி!
இனிது இனிது
இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்
அடுத்ததன் நண்பராய்
ஆகுதல் அன்றோ!

இனியது கேட்கின்
கனிமொழித் தம்பி!
இனிது இனிது
அன்பர்கள் அருங்குழாம்
அதனினும் இனிது
ஆர்த்தெழும் மாற்றார்
திருந்தி நம்முடன்
சேர்ந்திட விழைதல்!

(திராவிடநாடு - 28.07.1957)


(தமிழாசிரியர் துணைகொண்டு சீரும்தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில், குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்)