அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

காந்தி பனிரெண்டு

காந்தியாரைக் காண வந்திருந்த கூட்டத்திலே ஒருவருடன் உரையாடியதன் விளைவு இந்தச் செய்யுட் கடிதம். தொழுது நின்றார், சில சொல் புகன்றேன், பதில் பேசாது சென்றார். செய்தியைச் செந்தமிழ்ப் புலவர் ஒருவரிடம் சொன்னேன், அவர் செய்யுளாக்கித் தந்தார் - படித்து, மடித்து வைத்தேன் காகிதத்தை - அஞ்சலுக்கு அனுப்பத் தேடும்போது காணோம். இது புதிதல்லவே, நெடுநாளாக இரு போலத்தானே நமது கலைக் கருவூலம் கடலால் கொள்ளப்பட்டே, கனவில் பட்டோ, காலச் செல் அரித்ததாலோ கயவர் கிழித்தெரிந்ததாலே, காணாமற் போய்விட்டன என்று எண்ணிக் கவலைப் பட்டு, முன்பு படித்த நினைவைத் துணை கொண்டு, நானாகவே எழுதினேன். ஆகவேதான் புலவர் செய்யுள் இலக்கண முறைப்படி செய்து தந்த காந்தி பத்து, காந்தி பனிரெண்டு ஆயிற்று. ஆனால் என்ன? கருத்து, கெடவில்லை, என்ற விளக்கக் கடிதத்துடன வீரன் அனுப்பிய செய்திச் சுருளையை இதோ வெளியிடுகிறேன்.

(அண்ணாவின் முன்னுரை - திராவிடநாடு - 21.01.1946)

 

1
வருகிறார் காந்தி என்றார்! வருகுது வாழ்வு என்றார்
வரமது தந்து நம்மை வகைசெய்யும் வள்ளல் என்றார்!
வறண்ட என்வாழ்வு தன்னில் இருண்டிடும் இடரும் போக
திரண்டிடும் ஆவலோடும் ஓடினேன் காந்தி காண!

2
தவமுனி தன்னைக் காணத் தவித்திடும் திறனைக் கண்டேன்!
பவமறுத் திடுவோர் கூறும் பண்புரை கேட்க நின்றேன்!
கதருடைக் கூட்டம் அங்குக் காவிடை வண்டு போல,
களித்திட வந்தார் காந்தி காரிருள் ஒழியும் என்றார்

3
இரசித்திடின் ஒன்றே யாகும் இராமும் இரஹிமும் என்றார்;
இராட்டையே நாட்டைக் காக்கும் இரவிகுலச் சோமன் என்றார்;
பாட்டையே காண வேண்டின் பழங்கடி மக்கள் தம்மை
நீட்டியே கரமும் தந்து நீஅணைத் திடுக என்றார்

4
ஏனப்பா அம்மான் பேச்சி எப்படி இருந்த தென்றேன்!
தேனப்பா! தெவிட்டா தப்பா! தேகமே கூசுதப்பா
ஆமப்பா! என்றான் நண்பன். அதுசரி என்றான் நேயன்
போமப்பா பேதம் பீடை புன்மைகள் யாவும் என்றேன்

5
புன்னகை புரிந்தான் நீசன், புகலொணாக் கோபம் கொண்டேன்.
புகன்றிடு காரணத்தைப் புகைந்திடு கோபம் தீர
என்றுமே நானும் கேட்க, என்னநான் சொல்ல நீதான்
இங்கந்தன் அஹிம்சை தன்னை இறந்திடச் செய்தான் என்றான்.

6
தவமுனி தந்த அந்த தகுமொழி புதிதோ? முன்னம்
ஜடைமுனி பலரும் சொன்ன சமரச கீதம் அன்றோ?
இவருமே இருப தாண்டாய் இதனையே இயம்பி நிற்க
எவருமே சென்ற தில்லை இதுவழி அறிந்தும் என்றான்

7
நூலதை நூற்றோம் முன்பு, கோலது சாயக் கண்டோம்
மேலதோ இந்தாள் மெய்யாய் மேதினித தானே உய்ய,
காலமாம் கனியின் சாற்றைக் காண்பதோ இராட்டை நூற்றுப்
போகுமோ பூசல் யாவும் பொன்மொழி கேட்டாய் நன்றாய்!

8
சமரசம் பேசப் பேச சமர்மிக மூண்ட தேனோ?
அமரரே! என்றுகூறி அடிபணிந்திருந்திட்டாரே!
ஆலைகள் தன்னில் ஆடை ஆகுதே குன்றம் போலே!
ஆகாது அரிஜன் பட்டம் அவல மேஎன் கின்றாரே

9
இருபது நல்ல ஆண்டாய் இவர்வழி கண்டோர் பல்லோர்
சென்றவர் உண்டோ அதிலே சேர்ந்தவர் தானம் உண்டோ
செம்பொனின் தன்மை தன்னை உதைத்திடத் தெரியுமாப்போல்
இம்முனி தன்னில் கொள்கை செய்கையில் என்னாம் என்றான்

10
கனிமொழி பேச லாகும் கண்மூடிக் காட்ட லாகும்
தனித்தனி சென்ற பின்னர் தகுவழி வேறே கொள்வார்.
தலைகளைச் சீவி யேனும் தன்னலம் பேணி வாழ்வார்.
தருமமே பேசி னோர்கள் தரணியில் பண்டும் உண்டு.

11
வந்த இம்முனி வர்போல வந்தனர் வரிசை யாக
முந்தை யோர்கா லந்தொட்டு முப்புரி வாழக் கண்டோம்!
இப்புரி வாழ வேண்டின், அப்புரி அறுதல் வேண்டும்!
செப்பிடும் காந்தி மார்க்கம் செய்யுமோ இதனை என்றான்!

12
காளையின் மொழியைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டேன் ஆனால்
மூளைக்கு வேலை தானும் மூண்டுமே விட்டதாலே
நாளைக்கு வாரேன் என்று நழுவி யேவழி நடந்தேன்.
தாளையே வணங்கும் கூட்டம் தாருமோ பதிலும் என்றான்

(திராவிடநாடு - 27.01.1946)