அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சுதேசி சுரண்டல் யந்திரம்!

“பணக்காரன் கொழுத்த பணகாரானாகிறான். ஏழை, பரம ஏழையாகிறான். பஞ்சமும் பசியும் நோயும் தாண்டவமாடுகிறது.”

என்று சென்ற கிழமை காந்தியார் தமது பிரார்த்தனைக் கூட்டத்திலே கூறினார். உண்மையான நிலைமை இந்தநிலை, “சாத்தானின் சேட்டை” என்றார். நமக்குச் சாத்தான் தெரியாது, ஆனால், இந்த நிலைச் சேட்டை ஆபத்தான சேட்டை என்பதை உணர்கிறோம். இதுபோக, இந்நிலை மாறா என்னவழி கூறினார் காந்தியார்? இதற்கு முன், “மகரிஷிகளும் மகாத்மாக்களும், ஆழ்வாராதிகளும் நாயன்மார்களும் சித்தர்களும் ஜீவன்முக்தர்களும்” சொன்ன அதே வழியைத்தான் அவரும் சொன்னார், அதாவது “ராமநாமத்தை ஜெபியுங்கள்” என்றார்! ராமநாத்தின் மகிமையினாலேயே பணக்காரன், ஏழை என்ற வித்யாசம் நீங்கும், பஞ்சமும் பிணியும் போகும் என்று கூறுகிறார் ராம ராஜ்யத்திலேயே, ஓடம் ஓட்டி ஜீவித்த “குகன்” ஒரு புறத்திலும் ஜாதகம் கணித்துக் கொடுத்து அரண்மனையில் வசித்துவந்த வசிஷ்டர், மற்றோர் புறத்திலும் வாழ்ந்தனர், என்பதனையும், உல்லாச புருஷர்கள் ஒருபுறமும் உழவர் கூட்டம் மற்றோர் புறமும் வாழ்ந்திருந்தது என்பதும் வால்மீகி, கம்பர், இருவர் தீட்டிய இராமாயணத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அவ்விதமிருக்க, “ராமநாமம்” பணக்காரர் - ஏழை என்னும் சமூகப் பேதத்தையும், அதனால் விளையக்கூடிய வேதனைகளையும் நீக்கும்படி அது சாத்தியமாகும்? கேட்கப்படாது! மகாத் மாக்களின் வாசகத்தைப் சந்தேகிப்பதா மகா பாபமேன்னோ!!

ஏழை, பணக்காரன் என்ற பேதம் இருப்பதும், மறைவரும் மாற்றப்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும், பணக்காரர்களாகச் சிலரே, இருப்பது, தேசத்தை மட்டுமல்ல, தேசிய இயக்கத்தையே கெடுத்துவிடும் என்ற கருத்தைக் கவனிப்போம். கவனிக்கும்படி, நண்பர் காமராஜரின் பேச்சு தூண்டுகிறது.

ஜøன் முதல் தேதி ஆம்பாசமுத்திரத்தில் கூடிய அரசியல் மாநாட்டிலே பேசும்போது, நண்பர் காமராஜர், “காங்கிரஸ் ஏழைகமக்களின் ஸ்தாபனம், அவர்களின் நன்மைக்காகப் பாடுபடுவதே அதன் இலட்சியமாகும். காங்கிரஸ் இலட்சியத்தில் அனுதாபம் காட்டி ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ளும் மனப்பான்மை சமீபகாலத்தில் பணக்காரர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. காங்கிரசில் செல்வாக்கான பதவிகளைக் கைப்பற்றிக் கொள்ளத் திட்டம் போட்டு அவர்கள்ம வேலை செய்கிறார்கள். கடந்த 25 வருஷங்களாகக் காங்கிரஸ் ஊழியர்கள் தியாகம் செய்தது காரணமாகக் கிடைக்கப்போகும் பலனைத் தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசையே இந்த முயற்சியின் அடிப்படையான காரணமாகும். பணக்காரர்களின் இந்த எண்ணம் நிறைவேறாதபடி பார்த்துக் கொள்ளவேண்டியது காங்கிரஸ்காரர்கள் கடமை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எந்த நாட்டிலும், ஏற்படும் இந்த ஆபத்தை நண்பர் காமராஜர் உணரத் தொடங்கியது கண்டு மகிழ்கிறோம். பெரியாரின் இயக்கத்தினை நாட்டு விடுதலைக்கே கேடானது என்ற கண்ணோடு நோக்காது இருந்திருந்தால் காமராஜருக்கு இந்தக் கருத்து, அதாவது பண ஆதிக்கக்காரர்கள், காங்கிரசில் புகுந்து கொண்டு அதன் மூலம் தமது செல்வாக்கைப் பலப்படுத்தி வருகிறார்கள் என்ற கருத்து, நெடுநாட்களுக்கு முன்பே தெரிந்திருக்க முடியும். காலதாமதமானாலும் காரியம் ஒன்றும் அதிகமாகக் கெட்டுவிடவில்லை, இப்போதாவது தெரிந்துகொண்டாரே என்றவரை திருப்தியே. ஆனால், இந்த ஆபத்û எப்படிப் போக்குவது?

“தேசிய ஸ்தாபனம்” இப்படிச் செல்வான்களின் பிடியில் சிக்கிவிடுகிறது என்றால், இதனைப் போக்கவும், காந்தியார், ராமநாமமே கற்கண்டு, என்றுகூறுவாரோ, என்னவோ நாமறியோம், மகாத்மாக்களின் மனமும் மார்க்கமும் மனைத்துக்குரியது, மக்களின் நடைமுறைக்கு அவை ஓட்டிவருவதில்லை. எனவே, இந்தப் “புதிய ஆபத்து” காமராஜர் எடுத்துக்காட்டிய ஆபத்து, நீக்கப்பட என்ன வழி என்பதை, மக்கள் யோசிக்கவேண்டும். நாட்டு விடுதலை என்றால் நாட்டு மகக்ளின் நல்வாழ்வுக்காகப் போரிடுவது என்று பொருள் கொள்பவர்களே. உண்மையான தேசியவாதிகள். பிரிடடிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலே இந்தியா சிக்கி இருக்கிறது என்றால், அதன் பொருள் பிரிட்டனிலே உள்ள ஒவ்வொருவனும் இந்தியாவிலே ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதல்ல, பிரிட்டிஷ் குபேரர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று பொருள் துவக்கத்திலே இந்தியாவை அடிமைப்படுத்தும் போராட்டங்களை வெள்ளையர் நடத்தியபோது வேலை வெட்டி கிடைக்காமல் வீதியில் திரிந்து வீணன் என்று கண்டிக்கப்பட்ட கிளைவ் போன்ற காசில்லாத காற்றாடிப்போக்கினர்தான் நுழைந்தனர். சொந்த நாட்டைவிட்டு, நெடுந்தூரம் கப்பலில் பயணம் செய்து, ஊர்பேர் தெரியாதவர்களின் நாட்டிலே வேலைசெய்வது என்றால், மாளிகைவாசிகளா வருவார்கள்! பிரிட்டனிலே பிழைக்க வழியற்றவர்கள், தெருக்கோடிச் சண்டையில் தேர்ந்தவர்கள், ஆகியோரே வரமுடியும். அத்தகைய படையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பண்டங்களையும் ஏற்றிக் கொண்டுதான் பரங்கிகள் நுழைந்தனர்.

பரந்த இந்தியப் பூபாகத்தில், இங்கே அதுபோது இருந்த இளித்தவாயர்ளின் உதவியால் நிலைத்தனர், பெரும்பொருள் திரட்டினர், திரட்டிய பொருளால் துரைமாராயினர், பிரிட்டனிலே திரும்பிச் சென்று, பிரபுக்களாயினர், பிரிட்டிஷ் அரசியலிலேயும் செல்வாக்குப் பெற்றனர், பிரிட்டனிலே இருந்த பரம்பரைப் பணக்காரர்கள் இவர்களைப் புதிய பணக்காரர் என்று முதலில் கேலி செய்தனர் என்றபோதிலும், நாளாவட்டத்திலே இவர்கள் பிரிட்டிஷ் அரசியல் வாழ்விலே செல்வாக்கான இடங்களைப் பிடித்துக்கொண்டு, ஆளும் வர்க்கமாயினர். அவர்களே பிறகு, “சாம்ராஜ்ய சிற்பிகள்” “ஏகாதி பத்தியக் காவலர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அந்தக் கூட்டத்தினரின் ஆதிக்கத்தைத்தான், “ஏகாதிபத்தியம்” என்று பொதுப்பெயரால் அழைக்கிறோம். ஆலசிப் பார்த்தால், பிரிட்டிஷ் முதலாளிமார்களின் பிடியிலே “இந்தியா” சிக்கிக் கொண்டது என்றுதான் ஏற்படும்.

இந்தியாவின் வைசிராயாக இருந்த வின்லிதோ பிரபுவுக்கு, இப்போது என்ன வேலை? இம்பீரியல் கெமிகல் கம்பெனியிலே ஒரு டைரக்டர், தாவது உலகெங்கும் வியாபித்துள்ள மிக இலாபகரமான ஓர வியாபாரக் கம்பெனியிலே அவர் ஓர் பங்குதாரர், முக்கியஸ்தர், அது மட்டுமல்ல பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரர். ஆள்பவராக இங்கே வருபவர்கள் பெரும்பாலும், பிரிட்டிஷ் முதலாளி வர்க்கத்தவராக, அல்லது அதன் ஏஜெண்டாக இருப்பார், ஏகாதிபத்தியம், ஏகாதிபத்யம் என்று நாம் கண்டிப்பது, உண்மையிலே, சுரண்டிச் சுகபோகத்திலே புரளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைத்தான்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற ஏற்பாடு, பிரிட்டனிலே, கடல் வியாபாரத்தால் பணக்காரர் களான ஒரு சிறு கூட்டத்தார், நமது நாட்டு அரசியலிலே ஆதிக்கம் தேடிக் கொண்டு, அதன் துணைக்கொண்டு, இந்தியா, போன்ற பரந்த, சிக்கல் நிறைந்த இடங்களிலே, நுழைந்து, ஏராளமான பணத்தை “முதல்” ஆகப்போட்டு மிகக்குறைந்த கூலி கொடுத்துப் பாட்டாளிகளை அமர்த்தி, அங்கே கிடைக்கும் இயற்கைக் செல்வத்தைச் சுரண்டுவது, அதனால் பெருத்த இலாபம் ஆடைவது, மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டுபோய், செய் பொருளை இங்கே அனுப்புவது, அதன்மூலம் ஏராளமான பணம் இலாபமாகப் பெறுவது என்பதுதான். இந்தச் சுரண்டல் யந்திரம் இப்போது, அதிக நாள் வேகமாக வேலை செய்ததால், தேய்ந்து போயிருக்கிறது. இந்த யந்திரம் தேய்வு அடைந்திருக்கும் அதே நேரத்தில் சுதேசிச் சுரண்டல் யந்திரம் அமைக்கப்பட்டு, வேலை செய்து வருகிறது. பிரிட்டிஷ் யந்திரத்தைப் பழுது பார்ப்பது, அல்லது புதிதாக்குவது என்பதைவிட, ஏற்கெனவே தயாராக இருக்கும் சுதேசிச் சுரண்டல் யந்திரத்துக்குத் தேவையான, உதவி செய்து, பங்காளிகளாகிவிடுவது சுலபம் என்ற நிலையில், இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உள்ளனர். ஆகவேதான், ஏகாதிபத்தியக்காரர்கள், புன்னகை புரிகிறார்கள், பேரம் பேசுகிறார்கள், ஜெய்ஹிந்து கூறுகிறார்கள். இந்திய ஒக்கியத்தை வற்புறுத்து கிறார்கள். தேச பக்தியின் அவசியத்தைக் கூட எடுத்து உபதேசிக்கிறார்கள்.

இரண்டு பெரிய போரிலே சிக்கிய பிரிட்டனின் பொருளாதார சக்தி நொறுங்கிப் போயிருக்கிறது. கடல் அரண் இருந்தால் மட்டுமே பிரிட்டன் தன் சுதந்திர வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளமுடிந்தது. அரசியல் வாழ்வு காப்பாற்றப் பட்டதே யொழிய, பிரிட்டிஷ் பொருளாதார வாழ்வு நொறுங்கிவிட்டது. எனவே, இப்போது, பிரிட்டனால், முன்போல, ஏராளமான பணத்தை மூலதனமாக, இங்கேயோ, அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பி, சுரண்டல் யந்திரம், அமைக்கமுடியாது, பிரிட்டனுக்குள்ள சக்தி குறைந்துவிட்டது. என்பது மட்டுமல்ல அதே சமயத்தில், இந்திய முதலாளித்துவம், புது முறுக்குடன் இருக்கிறது. பணவிஷயம், சுரண்டும் முறைக்குத் தேவையான மூளைச்சுறுசுறுப்பு ஆகியவற்றைப் பொறுத்த வரையிலும், சுதேச முதலாளித்துவம் பிரிட்டனிடமோ, வேறு வெளிநாட்டினிடமோ தயவு கோர வேண்டிய நிலைமையில் இல்லை. பிரிட்டனே, கடனாளி! பொருளாதாரத் துறையிலே நோயாளியுங்கூட. எனவே, இந்திய முதலாளித்து வத்துடன் கூட்டாளியாகிவிடத் துடிக்கிறது. இல்லையானால், அமெரிக்கக் கோடீஸ்வரர்கள், காத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வலையை வீச, இந்தியத் தேசிய இயக்கத்தைப் பணக்காரர்கள் என்பது, இந்தப் புதுக் கூட்டாளிமுறையின், வேலைத் திட்டமேயாகும். காமராஜர், குறிப்பிடும், நிலைமை, தமிழ் நாட்டை மட்டும பொறுத்ததல்ல “அகில இந்தியக் காங்கிரஸ்” என்று மொத்தத்திலே கவனிக்கபோனால், வடநாட்டு முதலாளிமார்களின் பிடியிலே, அந்த அமைப்பு இருப்பதைக் காணலாம். ஆகவே, ஜாக்ரதையாக இருப்பது, எச்சரிக்கையாக இருப்பது, தியாகிகள், வீரர்கள் ஆகியோர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசைப் பணக்காரர் கூட்டம் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்வது, என்று நண்பர் காமராஜர் விடுக்கும் யோசனை இருக்கிறதே. அது, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் வெற்றகரமாக, நடப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் பலன் என்ன? வடநாட்டு முதலாளிமார்களிடம் காங்கிரசின் “சூத்திரக் கயிறு” இருக்கிறபோது, காங்கிரஸ் எப்படித் தியாகிகள், வீரர்கள், தொண்டர்கள் ஆகியோருக்காகப் பணிபுரியும் மகத்தான இயக்கமாக இருக்கமுடியும்?

பம்பாயிலே, தோழர் நிம்கர் என்பவர், பல நாட்களாகப் பட்டினி கிடக்கிறார். ஆலைத் தொழிலாளர்களின் சில குறைகள் போக்கப்பட வேண்டும் என்பதற்காக என்ன நடந்தது? காங்கிரஸ் தலைவர்களிலே பெரிய தலைகள் அப்படி ஒரு சம்பவம் நடப்பதாகவே கருத்திலே கொள்ளவில்லை. வைசிராய் மாளிகையின் ராஜதந்திரச் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளனர். இரண்டாம் வரிசைக்காரர்கள், ஒரு ஆசாமி பட்டினி கிடக்கிறார், அதுவும் சாகும் வரை பட்டினி இருக்கப்போகிறாராம், தன் சொந்தக் காரியத்துக்காக அல்ல, தொழிலாளர்களின் குறைகளைப் போக்கவே இப்பட்டினி துவக்கினராம் என்பதை அறிந்துள்ளனர். அறிந்து போக்கவே இப்பட்டினி துவக்கினராம். என்பதை அறிந்துள்ளனர், அறிந்து என்ன செய்தனர்? பட்டினி இருப்பதை நிறுத்திக்கொள்ளும்படி தோழர் நிம்கருக்கு யோசனை கூறினர்! “ஐயா! என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். உங்கள் செல்வாக்கு முழுவதையும், மில் முதலாளிமார்களிடம் போய் உபயோகித்து ஏன் வேண்டுகோளுக்கு அவர்களைச் செவிசாய்க்கச் சொல்லுங்கள்” என்று தோழர் நிம்கர் கூறி அனுப்பிவிட்டார், என்ன நடந்தது பிறகு? ஆலை முதலாளிகளிடம் சென்றனரா காங்கிரஸ் தலைவர்கள்? இல்லை! ஏன்? முடியாது! ஆலை அரசர்கள், இவர்களின் பேச்சைக் கேட்கமாட்டார்கள் அவர்களின், “டெலிபோன்” சத்தம் கேட்டால் சட்டமும் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காகச் சர்க்கார் வைத்திருக்கும் பபைலமும் பரிவாராதிகளும், ஓடோடி வந்து கைகட்டி வாய் பொத்தி நின்று சேவகம் செய்யும். அதுபோலவே, அந்த டெலிபோன் சத்தம் கேட்டதும், “தேசியத் தலைவர்கள்” விமான மார்க்கமாக விரைந்து வருவார், ஆûதியின் அவசியம், கட்டுப்பாட்டின் மேன்மை, தொழிலாளி முதலாளி ஒற்றுமையின் தன்மை, ஆகிம்சையின் அளவிலாத பெருமை ஆகியவற்றைப் பற்றி உபதேசிப்பர். காந்தியாரோ ராமநாமமே கற்கண்டு, அதுவே, ஏழையின் பொற்குண்டு என்று பாடுவார். ஐக், தோ, என்பார். உடனே, உரத்த குரலிலே, தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி முழக்கமிட்ட தோழர்களெல்லாம் “ராம்தூன்” பாடுவார்கள். இந்த நிம்மதியான காட்சியை, குமாரி நிர்மலாவுக்குக் காட்டிக் கொண்டே, ஆலை அரசர் புதிய மோட்டாரில் போய்க் கொண்டிருப்பார். இதனைப் பத்திரிகைப் பிரச்சார பலத்தால் எவ்வளவு காலத்துக்கு மறைத்து வைத்தாலும், பயனில்லை உண்மை வெளிப்பட்டே தீரும்.

இந்த நிலைமையை மாற்ற காமராஜர், என்ன செய்ய உத்தேசிக்கிறார்! என்ன செய்ய முடியும்? தமிழ் நாட்டுத் தனவந்தர்கள், தமிழ்நாட்டுக் காங்கிரசைக் கைப்பற்றிவிட முடியாதபடி, கண்ணுங்கருத்துமாக இருந்து வெற்றி பெறுவதாகவே வைத்துக் கொள்வோம். அதனால், காங்கிரசின் தன்மையை வடநாட்டு நிலைமையை எப்படி மாற்றிவிட முடியும்! அதனை மாற்றா முன்பு, இங்கே பணக்காரரின் ஆதிக்கம் காங்கிரசிலே இல்லாதபடி பாதுகாத்துதான் பயன் என்ன? ஏழைகளின் ஸ்தாபனமாகத் தென்னாட்டுக் காங்கிரசும், பணக்காரர்களின் பதுங்குமிடமாக வடநாட்டுக் காங்கிரசும் இருந்தால், இரண்டும் ஒன்றோடொன்று பொருந்துமா? அந்த நிலையிலே, காங்கிரசின் மேலிடமாக குருபீடமாக வடநாடு இருக்கும்போது, முதலாளிகளின் குரலுக்குத்தானே வலுவிருக்கும்? இது பற்றி நண்பர் யோசித்தாரா? யோசிப்பார்? யோசிக்கவிடுவார்களா?

பிரிட்டிஷ், ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப காலத்திலே எப்படி, பிரிட்டிஷ் முதலாளிமார்கள் மூலப் பொருள்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டுபோய், அதே பொருள்களைச் செய்பொருளாக்கி அதிக விலைக்கு இங்கே கொண்டு வந்து விற்று, இரட்டை இலாபம் பெற்றார்களோ அதே நிலைமையில் இப்போது வடநாட்டார் செய்து வருகிறார்கள். அதாவது, சுதேசிச் சுரண்டல் யந்திரம், வடநாட்டில் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்த யந்திரம் தென்னாட்டைச் சுரண்டுகிறது. பஞ்சு ஆலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் பல ரசாயனச் சாலைகள், மோட்டார் உற்பத்தி, மருந்து, முதலிய எண்ணற்ற பல துறைகளிலே, வடநாடு - குறிப்பாக பம்பாய், குஜராத் பகுதிகள் - மேனாடு கண்டு பொறமைப் படக்கூடிய அளவுக்கு முன்னேறிவிட்டது. ஒரு பிர்லாவுக்கும் டாட்டாவுக்கும் இருக்கும் செல்வாக்கைக் காமராஜர் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
அவர்கள் “இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” தேசியமும் அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து குற்றேவல் புரியும் ஏகாதிபத்தியமும், அவர்களின் இச்சையை அறிந்து பூர்த்தி செய்ய எப்போதும் சித்தமாக இருக்கும். டாட்டா கம்பெனியின் அதிகாரியான சர். ஆர்தீசர்தலால், வைசிராய், நிர்வாக சபை அங்கத்தினரானார். பொது மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? ஏதேனும் கட்சிக்குப் பிரதிநிதியா? இல்லை! டாட்டாவின் முத்திரை பொறிக்கப்பட்டவர். எனவே, அவருக்கு வார்தாவும் இடம் தருகிறது. வைசிராய் நிர்வாக சபையிலும் இடம் கிடைத்தது. ஆண்டு பல சிறையிலே கிடந்த பண்டித ஜவஹருக்கு, வைசிராய் நிர்வாக சபையிலே இருக்க அழைப்பு அனுப்பிய அதே வைசிராய், டாட்டா கம்பெனி டைரக்டர், தோழர் ஜான் மத்தாய்க்கும் அழைப்பு அனுப்பினார்! போஸ் படையினர் மீது தொடரப்பட்ட வழக்கைச் சர்க்கார் சார்பிலே இருந்து நடத்திய சர். ஏன்ஜினியருக்கும், வைசிராய் அழைப்பு அனுப்பியிருக்கிறார். அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சுதேசச் சுரண்டல் யந்திரத்தின் துணையை நாடுகிறது. ஆகவே, நாட்டை ஆளும், பொறுப்பை, சுதேச சுரண்டல்காரர்களிடம் ஒப்படைத்துவிடத் தயாராகிவிட்டனர். இடையே லீக் தோன்றியதால் ஏகாதிபத்தியம், தனது திட்டத்தை அங்கங்கே திருத்தவேண்டி நேரிட்டது. இல்லையானால், அதிகாரம் அவ்வளவும், பிர்லா-பஜாஜ்-டாட்டா, ஆச்சிடம் கொடுத்து விட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அந்த அச்சுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தன் இலாபக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளும் சத்காரியத்திலே உடுபட்டிருக்கும்! தெளிவாகத் தெரிகிறது. தீவிரத் தேசியவாதிகள் மட்டுமே இதனை உணர மறுக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின வார்சு ஏற்பாடாகிவிட்டது, வார்சு பாத்தியத்தைப் பெற்ற பிரபுக்களே, காங்கிரசை மேலும் மேலும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்போகிறார்கள். அதற்கேற்ற பணபலம், பிரச்சார பலம் ஆமோகமாக இருக்கிறது. இந்தப் பலம் பொருந்திய பிடியிலிருந்து, காமராஜர் எப்படிக் காங்கிரசைக் காப்பாற்றுவார்! காந்தியாருக்கு இது கவனிக்கப்படவேண்டிய பிரச்சனையாகவே தோன்றாது! அவர் மராட்டியக் கதாசிரியர் காண்டோர்கார் கூறுவதுபோல “தரித்திர நாராயணனுக்கும் இலட்சுமி தேவிக்கும் திருமணம் நடத்தி வைக்கும் காரியத்திலே உடுபட்டிருக்கிறார். இப்படிக் கஷ்டத்தின் மேல் கஷ்டம் வருகிறதே என்றால், “ஐக், தோ, ராம், ராம், போல்!” என்று கூறப்போகிறார் அது போதுமா, பணக்காரர்கள் காங்கிரசைக் கைப்பற்றாதிருக்கும்படி பார்த்துக் கொள்ள?

இந்த நிலையிலேதான், காமராஜர் “திராவிடநாடு” என்ற நமது கிளர்ச்சியின் காரணத்தைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கிளர்ச்சியின் பொருள் என்ன? அரசியலிலே பதவிகள் பெறுவதா? இல்லை! முடியாது, கிடைத்தாலும் அனுபவிக்க ஆட்கள் கிடையாது!! தேர்தலுக்கான புது கோஷமா? இல்லை! தேர்தலுக்கே நிற்பதில்லை என்று தீர்மானம், பட்டம் பதவிகள் பெறுவதற்கான பசப்பு மொழியா? இல்லை! சேலத்திலே திராவிடர் கட்சியினர் பட்டம் பெறக்கூடாது, கௌரப் பதவிகளிலே இருத்தலாகாது என்று தீர்மானித்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தூண்டிவிட்டதால் கிளம்பிய பேச்சா? இல்லை! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் புது அரசியல் திட்டம் தீட்டும் சமயத்திலே, திராவிடர் கழகத்துக்கு அழைப்பும் இல்லை.

இதிலே வெட்கம் என்ன, வெளிப் படையாகவே கூறுகிறோம். ஒருவிதமான வசதியும் இன்றியே திராவிடர் கழகம் “திராவிட நாடு திராவிடருக்கே” என்று கிளர்ச்சியைத் துவக்கி இருக்கிறது. ஏன்? புதியதோர் பொருளாதார ஏகாதிபத்தியம் தயாராகிவிட்டது. வடநாட்டிலே அந்த ஏகாதிபத்தியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு “வார்சு” அதன் பிடியிலே, திராவிடம் சிக்கினால், அதன் செல்வம் வரண்டு போகும், மக்கள் கூலிகளாவர், மாளிகைகள் குடில்களாகும், என்று உண்மையிலேயே அஞ்சுவதாலேதான் திராவிடர் கழகத்துக்கு இந்த மூலாதாரப் பிரச்சனையே வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய “சக்தி” இருக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்கு அர்த்தமும் அவசியமும் இருக்கிறதா இல்லையா என்பதைத்தான், காங்கிரசிலே உள்ள திராவிடத் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசியல் விதலையைத் திருப்பூர் குமரன் தலையிலே இருந்து ஒழுகிய இரத்தம், காசிராஜன் கண்ணிலே புரண்ட தண்ணீரும் காமராஜரின் குரலிலே ஏற்பட்ட புண்ணும், மற்றும் எண்ணற்ற வாலிபர்களின் உழைப்பும் வாங்கித் தருகிறது. அரசியல் விடுதலை என்றால், அரசியலை நாமே நடத்தும் உரிமை. இந்த உரிமையைப் பொருளாதாரப் பலம் படைத்தவர்கள் எளிதிலே கைப்பற்றுகிறார்கள். அதற்குக் காமராஜரின் பேச்சே போதுமான இதாரம். இந்த நிலை, தமிழ்நாட்டைவிட, வடநாட்டில் மிக அழுத்தமாகவும் ஆசைக்கமுடியாத தன்மையிலும் இருக்கிறது. அந்த வடநாட்டுக்குத்தான் அரசியல் அதிகாரத்தின் தலைமைப் பீடமும் கிடைக்கிறது. அந்த வடநாட்டுப் பிரபுக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் கூட்டாளிகளாக இருக்கிறார்கள்!

சங்கிலித் தொடரைக் கவனித்துக் கொண்டே போனால், மீண்டும் இலண்டன் தெரியும்!! இடையே இருந்து இணைப்பு வேலை நடத்துவது வடநாடு, திராவிடநாடு திராவிடருக்கே என்பது, இந்த இணைப்புக்கு ஒரு வெட்டு வேண்டுமென்கிறது. வெட்டிவிட்டால், திராவிடம் தனி, அதன் நிலைமையை வடநாட்டுச் சதேசிச் சுரண்டல் யந்திரம் ஒன்றும் செய்யமுடியாது.

இந்தக் கிளர்ச்சியை, மடியவிட்டு விட்டாலோ, மங்கவிட்டு விட்டாலோ, என்னநேரிடும்? பிரிட்டிஷ்-பனியா கூட்டுச் சுரண்டலுக்குத் திராவிடம் பலியாகித் தீரவேண்டும். பிரிட்டிஷ்-பனியாக் கூட்டுச் சுரண்டலுக்கு, எல்லை, சிந்து, பஞ்சாப், ஆசாம், வங்காளம், பலியாகாது அவை AC என்று தனித்தனி வட்டாரங்களாகின்றன. திராவிடமே, பிரித்தானியம் பார்ப்பனியம், பனியா என்னும் பிடிகளிலே சிக்கியதோடு இனி B தொகுதியில் சேரும்படி, அதன் மீது அரசியல் திட்டத்தைத் திணிக்கிறார்கள். இதை B தொகுதியில் பம்பாய், ஜந்துமாகாணம், ஓரிசா, மத்ய மாகாணம், ùச்னனை, இவகைள் இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. பம்பாயில்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வார்சு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வார்சுக்குத்தான் ஒக்யமாகாணத்தில் வளர்ந்துள்ள விடுதலை இயக்கம் வாழ்க்கைப்பட்டுவிட்டது. இந்தத் தொகுதியிலேதான் பிர்லா-பஜாஜ்-டாட்டா அச்சு இருக்கிறது. இஅது பிரம்மாண்டமாகத் சுதேசிச் சுரண்டல் யந்திரம், இதன் மூலதனமும், மூளை பலமும், பிரச்சாரபலமும், ஆமோகம், இந்த அச்சுதான் இன்று காங்கிரஸ் இயக்கத்தையே நடத்தி வைக்கிறது என்று கூறலாம். பிர்லா-பஜாஜ்-டாட்டா அச்சுக்குத் துணை அச்சுதான். பிரிட்டனில் உள்ள நப்பீல்டு போன்ற பிரபுக்களின் அச்சு! இந்தச் சுதேசி சுரண்டல் யந்திரம், திராவிடத்திலே உருள இடந்தருவதே, பி தொகுதி என்ற முறையிலே, சென்னையைப் பம்பாயுடன் தொகுப்பது! யுத்த காலத்திலே, பொருள்களுக்கும் இடங்களுக்கும் எதிரி மூலம் சேதம் ஏற்படாதிருப்பதற்காகவே பூச்சுவேலை செய்து மறைப்பார்கள். அது போல திராவிடத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த அச்சுக்கு, மூவர்ணப் பூச்சு இருக்கிறது. அந்தப் பூச்சு கண்டு பூரித்து, இதுவரையில் அந்த ஆச்சைக் கொழுக்கவிட்டு விட்டனர் நமது காங்கிரஸ் தோழர்கள்.

இனிவரும் நாட்களிலே இந்த அச்சுக்கு, ஐந்து மாகாணங்களில் வேலை இராது, (எல்லை, பஞ்சாப் சிந்து, ஆசாம், வங்காளம்) எனவே அந்த அச்சு, அதிகரித்த பசியுடன் திராவிடத்தின் மீது பாயும்! திராவிடம் அந்த ஆச்சின் பாய்ச்சலைத் தாங்கும் சக்தியில் இல்லை! எனவேதான் இப்போதே விழித்துக்கொண்டாக வேண்டும் என்கிறோம். புது அரசியல் திட்டத்திதலே பி தொகுதியல் திராவிட நாடு சேர்க்கப்படக்கூடாது, தனித்தே இருக்கவேண்டும். மத்திய சர்க்காருடன் பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக, மற்றத் தொகுதிகள் தொடர்பு வைத்துக் கொள்வது போல் வைத்துக் கொள்ளலாம், பனியா அச்சுடன் சேருவது கூடாது, ஆபத்து என்பதைக் காங்கிரசிலுள்ள திராவிடர்கள் உணரவேண்டும்.

காமராஜர், “பணக்காரர்கள் காங்கிரசைப் பற்றாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார். பணக்காரர்கள் காங்கிரசைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, பிர்லா-பஜாஜ்-டாட்டா ஆச்சின் மூலம், திராவிடத்தையே, பம்பாய்க்குப் பிடி இக்குவதற்கான வேலை நடந்து வருகிறது. இந்தப் புதிய பேராபத்தைத் தவிர்க்கத்தான், நாம், “திராவிடநாடு திராவிடருக்கே” என்று கூறுகிறோம். கேலி செய்யப்பட்டோம், கவலை இல்லை, இப்போதாவது நண்பர்கள் நமக்கு வர இருக்கும் புதிய ஆபத்தை உணர்ந்து (பி) தொகுதியிலே (திராவிட நாட) சென்னையை இணைக்கக்கூடாது என்று கிளர்ச்சி செய்தால் போதும்.

திராவிடர் கழகத் தலைவர் பெரியார், காங்கிரசில் சேரவும் தயார் என்று பல கூட்டங்களிலே பேசிவருகிறார். ஏன்? ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒழிப்பு என்பனவற்றிலே, அவருக்கோ அவரைப் பின்பற்றுபவர்களுக்கோ, காங்கிரஸ் கூறுவதைக் கேட்கக்கூôது என்ற கருத்து கிடையாது. அந்த எதிர்ப்பு நடத்திவிட்டு இந்தத் தொகுப்பு (பி) (பம்பாயுடன் தொகுப்பு) ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சந்தான். திராவிடர் கழகத்தார் கொண்டிருந்தது. அந்த அச்சம் எவ்வளவு நியாயமானது என்பதை, இப்போது தொகுதி அரசியல் திட்டம் நிரூபித்துவிட்டது. திராவிடத்தைப் பிர்லா-பஜாஜ்-டாட்டா அச்சுடன் சேர்க்கிறார்கள்! தேர்க்காலிலே, திராவிடம்! பொருளாதாரத்திலே பிரிட்டனையும் மிஞ்சிய வட்டாரத்துக்த் திராவிடம் பலியிடப்படுகிறது. இந்த நிலமை நேரிடாதபடி தடுப்பதற்காகத்தான். திராவிடர் கழகம் என்ற தனிஸ்தாபனம் தேவைப்படுகிறதே யொழிய, வேறு காணவில்லை. இதனைத் திராவிடர் கழகத் தினசரி “விடுதலை” 17-6-46 தலையங்கத்திலே விளக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறது.

குறைந்த அளவு வடநாட்டார் சம்பந்தமாவது அவர்களது ஆதிக்கமாவது இல்லாதிருக்குமானால், அதாவது வடநாட்டார் பிணைப்பிலிருந்து காங்கிரஸ் விடுபடுமானால் தாம் உடனே சேருவதில் இக்ஷேபனை இல்லை என்றும் பெரியார் சொல்லி வருகிறார்.

உண்மையில் காங்கிரசினிடம் அதன் அமைப்பு கொள்கை ஆகியவைகளைப் பற்றித்தான் எந்த உண்மைத் தொண்டனுக்கும் அதில் சேருவதற்கும் சேராததற்கும் காரணம் இருக்கலாமே ஒழிய, காங்கிரஸ் என்கின்ற பெயரிடம் யாருக்குத்தான் வெறுப்பு விரோதம் இருக்க முடியும். ஆகையால், காங்கிரசில் உ.வெ.ரா. சேருவதும், தொண்டாற்றுவதும் அது இந்த மாகாணத்தில் ஒரு சுதந்திர ஸ்தாபனமாய் வெளி மாகாணத்தான் ஆதிக்கமில்லாததாய் மத்திய காங்கிரஸ் ஸ்தாபனத்துடன் இணைந்து வேலை செய்யும் ஒரு தனி சுதந்திரமுடையதாய் இருப்பதைப் பொறுத்தும் திராவிடர் கழகம் முக்கிய கொள்கையை ஏற்றுக் கொள்வதைப் பொறுத்துமே ஒழிய மந்திர வேலைக்கோ தேசபக்த பட்டம் பெறவோ அல்ல, என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம், என்று விடுதலை தீட்டியிருக்கிறது.

அகில இந்தியக் காங்கிரசுக்குக் கட்டுப்பட்ட நிலைமையில் வடநாட்டு ஆதிக்கம் கூடாது என்று பேசவோ, பி தொகுதியில் சென்னையச் சேர்க்கக் கூடாது என்று பேசவோ, சென்னை மாகாணக் காங்கிரசுக்கு அதிகாரம் இராது, பொருத்தமாகவும் இருக்க முடியாது. எனவேதான் பெரியார், காங்கிரசில் சேருவது என்றால், இந்த மாறுதல்கள் தேவை என்று கூறுகிறார்.

இப்போது உடனடியாகச் செய்யவேண்டிய முக்கியமான வேலை சென்னை மாகாணத்தைப் பி தொகுதியில் சேர்த்திருப்பதைக் கண்டிப்பாய்க் கண்டித்தாக வேண்டும். அந்தப் புது அடிமைத் தனை திராவிடத்தின் மீது பூட்டப்படாதபடி பார்த்துக் கொண்டாக வேண்டும்.

காமராஜர் இந்தக் கிளர்ச்சியைத் துவக்கினால், திராவிடர் கழகம், அதிலே முழுப்பங்கு எடுத்துக்கொள்ளத் தயாராகவே இருக்கிறது “பி” தொகுதியில் சேருவதால் உண்டாகக்கூடிய சாதக பாதகங்களைப் பரிசீலனை செய்ய, சென்னை மாகாணத்தைப் பொறுத்தமட்டிலே உள்ள எல்லாக் கட்சியினரும் கொண்ட ஓர் மாநாடு கூட்டப்பட்டால் பி தொகுதியிலே சென்னை இணைக்கப்படுவதால் கேடு என்பது விளக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும் என்பதிலே நமக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அந்த விளக்கம் ஏற்பட்ட பிறு சென்னை மாகாணக் காங்கிரஸ் சென்னை மாகாணம் “பி” தொகுதியில் அதாவது மார்வார் தொகுதியில் பிர்லா-பஜாஜ்-டாட்டா ஆச்சில் சேர்க்கப்படக்கூடாது என்ற கிளர்ச்சியைத் துவக்க முன்வந்தால் திராவிடர்கழகம் அந்தக் கிளர்ச்சியிலே இரண்டறக் கலக்கவும் அந்த நோக்கத்துடன், காங்கிரசிலேயே சேரவும் தயங்காது. பணக்காரர்கள் காங்கிரசைக் கைப்பற்றாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசுவதிலே என்ன பிரயோஜனம்? தலைக்கு மேலே உட்காரப் பார்க்கும் சுதேச் சுரண்டல் யந்திரத்திலிருந்து தப்பிப் பிழைக்க என்ன வழி? இதனைக் காமராஜர் யோசித்துப் பார்க்க வேண்டும் - விரைவாக.

(திராவிட நாடு 23.6.46)