அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலியூர் புகுவதா!

காந்தியாரின் சிறைவாசம் இன்று ஐந்தாம் நாள் என்று பாரததேவி 13ந் தேதி கட்டம் அமைத்து எழுத்தலங்காரப் பிரசாரம் பதிப்பித்திருக்கும் பக்கத்திலே, அதை ஒட்டிக்கொண்டுள்ள ஒரு விளம்பரமும் பிரசுரித்திருக்கிறது. வழக்கப்படி வியாபாரம், சம்பூரண சாஸ்திரியாரின் ஜவுளிக்கடையில் என்பதாகும் அந்த விளம்பரம். சிறையிலே காந்தியார், கடையிலே சாஸ்தியார் என்பது இதனால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆம்! காந்தியார் சிறைப்பட்டார் என்பதற்காகக் கனபாடிகள் எவரும் தமது கருமத்தை மறந்துவிடவில்லை. சம்பூரண சாஸ்திரிகள் ஜவுளி வியாபாரத்தை நிறுத்தவில்லை! வழக்கம்போல் வியாபாரம் நடக்கிறது! வழக்கம்போலவே வக்கீல் பார்ப்பனர் கோர்ட்டுகளுக்குப் போகிறார்கள், சட்டம் பேசிப் பணத்தைத் தட்டிப் பார்த்து வாங்கி இட்ட தெய்வத்தை எண்ணி வீடு வருகின்றனர். பார்ப்பன டாக்டர்கள் தமது வைத்திய சாலைகளை மூடிவிடவில்லை. வழக்கப்படி நாடி பார்த்து, அதற்குமுன், வந்தவரின் பண நிதானத்தைச் சோதித்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இசை பாடிடும் பார்ப்பனர்கள், காந்தியார் சிறையிலிடப்பட்டாரே என்று ஏங்கி, லாவணி பாடிக்கொண்டில்லை, எப்போதும்போல, இராகத்தை ஆலாபனை செய்து, பணத்தைப் பாராயணம் செய்து வருகிறார்கள். வழக்கப்படி காப்பி ஓட்டல்களிலே பார்ப்பனர்கள் தமது வேலையைச் செய்கிறார்கள். வழக்கப்படி கோயிலிலே பார்ப்பனர் தமது சஹஸ்ரம நாம அர்ச்சனையைக்கூறி, பக்தர்கள் தந்திடும் காசை வாங்கும் வேலையைச் செய்து கொண்டுதான் வருகிறார்கள். குளத்தருகே வழக்கப்படி பார்ப்பனர்கள் தர்ப்பைக் கட்டும் கையுமாக இருந்து தமது “தபால் இலாகாவை” நடத்திக் கொண்டுதான் வருகிறார்கள். திதி நடக்கும் தேதியை வழக்கப்படி “ஐயா” கூறிவிட்டு, வழக்கப்படி தட்சணை தாம்பூலாதிகளையும் காய்கறி இலையையும் பெற்றுக் கொண்டுதான் வருகிறார். பார்ப்பனர்கள், தமது வேலையைப் பரிபூரணமாகச் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

பாரததேவியிலே காணப்படுவதுபோல், “வழக்கப்படி வியாபாரம் நடக்கிறது.” யாருடைய வியாபாரம்? அக்கிரகார வியாபாரம்!

வேலை நிறுத்தம் செய்யுங்கள் - கடைகளை மூடுங்கள் - என்றெல்லாம் காங்கிரஸ் கூறுவது கேட்கிறோம், அக்ரகாரம் அதை ஆதரிக்கக் காண்கிறோம். ஏன் ஆதரிக்கிறது என்பீரேல், எந்தச் சமயத்திலும் “வேலை நிறுத்தம்” அவர்களைப் பாதிப்பதில்லை.

கடைகள் மூடினால், நம்மவருக்கு நஷ்டம் - மில்களிலே வேலை நிறுத்தம் ஏற்பட்டால் நம்மவருக்கே கஷ்ட நஷ்டம், பள்ளி பகீஷ்கரிக்கப்பட்டால், நம்மவர்களுக்கே வாழ்க்கை வளைவு! அங்கு, எதுவும் அண்டாது! எனவேதான் அக்கிரகாரம் வேலை நிறுத்தங்களை அவ்வளவு ‘அன்புடன்’ ஆதரிக்கிறது.

1920-21ல் நடைபெற்றது போன்றது நடக்கும் என்று காந்தீயர்கள் கூறிவந்தார்கள். அது நடந்துவிட்டது. நாட்டிலே பல இடங்களிலே கலவரம், கல்வீச்சு, கடைகள்மீது மோதுதல், தீயிடல் முதலியன நடைபெற்றுவிட்டன. சர்க்காரும், 1920-21ல் நடந்தது போலவே, தடியடி, கசையடி, துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய அடக்குமுறையை நடத்துகின்றனர்.

பலர் உயிரிழந்தனர், பலருக்குப் படுகாயம் என்று தினசரிகள் தெரிவித்துள்ளன. பொருள் சேதமும் அதிகம், லாரிகள் கொளுத்தப் பட்டன, மோட்டார்கள் எரிக்கப்பட்டன, தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன, தபாலாபிசுகள் தாக்குண்டன, டவுன்ஹால் தீயில் பொசுங்கிற்று, பல இலட்ச ரூபாய் நஷ்டம், என்று பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வெளிவரக் கண்டோம். காங்கிரஸ் தோழர்கள், குறிப்பாக, உணர்ச்சியால் உந்தப்பட்ட வாலிபர்கள், மன எழுச்சி யினால் தூண்டப்பட்ட மாணவர்கள், இவைகளை ‘வெற்றிகள்’ என்று கருதலாம், களிக்கலாம். நாம், கண் கசிந்து இதனை எழுதுகிறோம். இவைகளின் விளைவுகள் துப்பாக்கிப் பிரயோகமும், தடியடியும் பிறவும்! மாணவர்களே! இவை பெறவா, நீர் பள்ளி புகுந்தீர். பள்ளியிலே பெற்ற பயிற்சி இதற்கா பயன்படுகிறது. கொடுமைகள் எவை? கோளாறுகள் யாவை? அநீதி எங்கே எவ்வண்ணம் தாண்டவமாடுகிறது? என்பனவற்றைக் கண்டுணரவும், உணர்ந்தபின்னர் இத்தன்மையான முறைகளால் பயன்படுபவர் யாவர் என்பதனைத் தெரிந்துகொள்ளவும், தெரிந்து தெளிந்தபின்னர், இம்முறைகளை மாற்ற எவை சரி என்பதனை ஆராயவுமே, படிப்பு, பயிற்சி. நீவிரோ, ஒருவாரம், பத்து நாட்கள், பள்ளி பகீஷ்காரம், கடைகள் முன் நின்று கலவரம் விளைவித்தல், வீதிவலம் வருதல், கல் வீசுதல், பொது ஸ்தாபனங்களைத் தாக்கதல் ஆகியவை செய்யின், நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் என்று கருதி, வழி தவறிச்சென்று கஷ்டமடைகிறீர், உமது பெற்றோரைக் கலங்க வைக்கிறீர், நாட்டினர் நொந்திடச் செய்கிறீர், தோழரே! நீங்கள் பள்ளி புக, பயில, உமது பெற்றோர் செலவிடும் பணம், உம்மிடம் பேசக் கூடுமானால், என்னென்ன கூறும் தெரியுமோ! அவர் பட்டபாடு, கண்ட இடி கொண்ட கஷ்டம், எவ்வளவு! நீவிரோ, அவை யாவும் மறந்தீர், தெருவினிலே திரிந்தீர், பதட்டம் புரிந்தீர்! இதுமுறையோ?

தொழிலாளரே! உமது வாழ்க்கையின் வாட்டம் நாமறிந்ததே, உமது வாழ்வு நிலை உயர, நீர்செய்யும் கிளர்ச்சிகள் காணும்போதும் கேட்கும் போதும் “அவர் மீது குறையில்லை, அவரை இந் நிலைக்குள்ளாக்கிய முறையோ குறையுடைத்து” என்று கூறினோம். இன்றோ! பஞ்சம் பரவுகிறது, உணவுப்பொருள் விலைவாசி வக்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்நிலையிலே வேலை நிறுத்தம் செய்வது, உமது வாழ்வைத்தானே பாதிக்கும். ஏன் வீணில் வதைய முற்படுகிறீர்! நெருப்பிலே வெந்து, நீரிலே ஆழ்ந்து, வியர்வை சொட்டச் சொட்ட வேலை செய்து, கையே தலையணையாய் வானமே கூரையாய், மண்ணே மலரணையாய், வாட்டமே தோழனாய்க் கொண்டு வாடுறீர்! இத்தகைய நீவிர், காந்தீயக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு கண்டதென்ன? வாழ்க்கை உயரக் கண்டீரா? இல்லையே! தழும்பு எழ எழத் தடியடி, இருதயத்திலிருந்து இரத்தம் பீறிட துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததென்றால், யாருக்குத் தோழர்களே? சுயராஜ்யப் போர் என்றுரைத்திடும் பூசுரக் கூட்டத்துக்கா, உமக்கா? இதை எண்ணிடலாகாதா? தோழர்களே! மதுரையிலே நடந்த கலகத்தின் விளைவாக நேரிட்ட துப்பாக்கி பிரயோகத்திலே மாண்டவர் எவர் என்பதனைத் தெரிந்து கொண்டீரா? இதோ தகவல் படித்தறிமின். ஒரு துரைசாமி நாயுடு என்ற தமிழ் வாலிபர். நாராயணப்பிள்ளை என்ற ஒரு மலையாளி. அதுபோலவே ராஜபாளையத்திலே குண்டடிப்பட்டவர்கள், கருப்பைய்யா தேவர், பழனியாண்டிச் செட்டியார், பெருமாள் குடும்பன் என்பவர்களாம்.

நாயுடு, பிள்ளை, தேவர், செட்டியார், குடும்பர், என்னும் நம்மவருக்கே தொல்லைவந்தது. எல்லாம் தமிழர்களே!

பர்மா, மலாய் நாடுகளிலே ஜப்பான் குண்டுகளுக்கும் பர்மாக்காரரின் பதட்டத்துக்கும் ஆளாகி குடும்பம் கலகலத்து, குடல் நடுங்கி, கோவெனக்கதறி தாய் நாடு திரும்ப, காடுமலை வனம் வனாந்திரங்களைக் கடந்து காட்டு மிருகங்களுக்கும் காட்டு மிராண்டி மனிதர்களுக்கும் தப்பி, இங்கு வந்துள்ள இலட்சக் கணக்கான தோழர்கள் யார்? தமிழர்!

தேயிலை ரப்பர் தோட்டங்களிலே பாடுபட்டுக் கைகால் அலுத்து, காய்ச்சலும் கடுப்பம்கண்டு கலங்கி இன்று இங்கு வேலையுமின்றி வேதனையுடன் உள்ளவர் யார்? தமிழரே!

கோடிக்கணக்கான ரூபாய்களை பர்மா, மலாயாவில் கொட்டி வியாபாரம் நடத்தி, இதுபோது, உயிர் தப்பினால் போதும் என்று, சொத்து சுகம்விட்டு ஓடோடி இங்குவந்து, “கைமுதலும் போச்சே, கஷ்டப்படலாச்சே” என்று கதறும் தோழர்கள் யார்? தமிழர்தான்! என்றும் கஷ்டம் தமிழருக்குத்தானே! இதை எண்ணிடக்கூடாதோ என்று தமிழ் மாணவரை, தமிழ்த் தொழிலாளரை, தமிழ் வியாபாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று நடைபெறும் கிளர்ச்சியினால் நேரிடும் சங்கடமும் சஞ்சலமும், கஷ்டநஷ்டமும், பெரும்பாலும் தமிழர் தலைமீதே வந்து வடிகிறது. மதுரையிலே மண்ணிலே வீழ்ந்தவர் தமிழர்! மற்றும் அல்லல் வந்தது தமிழருக்கே!

வழக்கப்படி அக்கிரகார வியாபாரம் குறைவின்றி நடக்கிறது.

தோழர்களே! டவுன்ஹால் கொளுத்தப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் எரிக்கப்பட்டது. ரயில்வே வண்டிகள் சாம்பலாயின. தபாலாபீஸ்கள் சூறையாடப்பட்டன. தந்திக்கம்பிகள் அறுபட்டன, வீடுகள்மீது கல்வீசப்பட்டன, மோட்டார் வண்டிகள் தகனம், என்று படிக்கிறீர்கள். இவைகள் எங்கே நடைபெற்றன! எந்த வெள்ளைக்காரனை ஒட்ட போர் நடத்துவதாக கூறப்படுகிறதோ, அந்த வெள்ளைக்காரன் நாட்டிலல்ல! இங்கு! இதனால் பல இலட்சம் செலவு, இந்தக் கிளர்ச்சியை அடக்கச் சர்க்கார் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காகப் பல இலட்சம் செலவு, இவ்வளவும் யாருக்கு? வெள்ளைக்காரருக்கா? இல்லை, தோழரே, நமக்கு! இடிந்த கட்டடம் நம்முடையது, அதனைக் கட்டியது நம்முடைய பணத்தைக்கொண்டு இனி அதனைப் புதுப்பிக்க மீண்டும் நம் பணமே செலவிடப்படும்! இதனால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு வீண்செலவு? மக்கள் வரிப்பணத்திற்குத்தானே வீண்விரயம்? காலக்கோளாறு மிகுந்து, பணமுடை அதிகரித்து வாழ்க்கையை நடத்துவதே கஷ்டமாகி, பாட்டாளிகளாக, பரிதவிக்கும் இந்த வேளையிலே, இத்தகைய வீண்விரயம் செய்வது விவேகமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.

தீமூட்டுவது, தெருக்கலகம், குத்துவெட்டு, துப்பாக்கி வேட்டு முதலியன கண்டு மக்ககள் கலங்குகின்றனர். விமான படை எடுப்பு, வெடிகுண்டு, எரிகுண்டு வீச்சு, கோட்டை கொத்தளங்கள் இடிபடுதல், கும்பல் கும்பலாக மக்கள் மாளுதல், ஓடும் ரயிலின்மீது குண்டுவீசி, மூழ்கடித்தல், போர் வீரர்கள் பிணமாதல், ஊர் தீப்பிடித்து மக்கள் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு, மகனைக் காணோமே மகளைக் காணோமே, என்று தவித்து, அப்பா, அம்மா, அண்ணா என்று கதறியும், ஐயோ, அப்பா, என்று பதைத்தும், அல்லோகல்லோலப்பட்டு ஓடும், கனக்காட்சி உலகிலே இன்றுளது. இந்தியாவிலும் இத்தகைய கோரநிலைமை ஏற்படச் செய்யவேண்டும் என்பதே எதிரியின் எண்ணம். அச்சமயம், இன்று நடைபெறும் கலகமும் கூச்சலும், அலைகடல் மீதோர் துரும்பெனக் கருதப்படும் அளவினதாகக் கொள்ளப்படும். அத்தகைய அவதிக்கும் தயாராக இருக்கவேண்டிய மக்கள், இன்று நடைபெறும் கலகத்தைக் கண்டுக் கலங்கிடத் தேவையில்லை. சென்ற மாதம், நாடு இருந்த நிலை என்ன? மக்கள் பதைத்து நகரங்களைவிட்டுக் கிராமங்களுக்கும் ஓடினர். இன்றோ, நாளையோ, ஜப்பான் படை எடுக்கப் போகிறது என்ற திகில் மக்களைப் பிடித்தாட்டிற்று. அதுபோல், ஏதேனும் படை எடுப்பு நேரிட்டிருந்திருக்குமானால், எத்தனையோ மடங்கு அதிகமான சங்கடத்திற்கும் சஞ்சலத்திற்கும் மக்கள் ஆளாகியிருந்திருப்பார்கள். எனவே, இன்று நேரிட்ட நடவடிக்கைகள் கண்டு நொந்திடுவதில் பயனில்லை. இனியேனும், தோழர்கள், காலநிலை, கருமத்திலே கண் எனும் கோட்பாடுகளை அறிந்து, நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்திக் கொல்வதுபோல, நமது! நகரங்களை நாமே நாசஞ்செய்வது, நமது சொத்துக்களை நாமே அழிப்பது, நமது மக்களை நாமே பதைக்கச் செய்வதெனும், முறைகள் வேண்டாமென ஒதுக்கித்தள்ளி, இந்த உள்ள எழுச்சியை, உணர்ச்சியை, உத்வேகத்தை, எதிரியின் படை எடுப்பு நேரிட்டால் அவனை விரட்டிவிட உபயோகிக்க வேண்டுகிறோம். ஆம்! தோழர்களே! ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஜப்பானியருக்கு எதிரிடையாக நடத்துவோம், ஜப்பானியர் நம் நாட்டிலே எங்கேனும் தங்கிடின், அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்துக் கொள்வோம். இடிப்போம், கொளுத்துவோம். ஜப்பானியரின் மோட்டார்கள்மீது கற்களை வீசுவோம், நொறுக்குவோம். ஜப்பானியரின் முகாம்கள் ஏற்படின் அவற்றிலே தீயிடுவோம் என்று உறுதிகொள்ள வேண்டுகிறோம். நமது உணர்ச்சியும் உத்வேகமும் அதற்காகத் திரட்டப்பட வேண்டுமே யொழியே, நமது நாட்டிலே நாமே ஓர் கொந்தளிப்பை உண்டாக்கப் பயன்படுத்துவது, தற்கொலைக் கொப்பாகும் என்பதை மறக்கக்கூடாது.

நாட்டிலே, இன்று வேகமான கிளர்ச்சியைத் தூண்டிவிடும் செயல், காங்கிரஸ் தலைவர்களுக்குக் களிப்பூட்டலாம். ஆனால், இந்த முறைதான், உரிமைகளைப்பெற அனுஷ்டிக்கப்பட வேண்டும் போலும் என்று, நாட்டிலே உள்ள நானாவிதமான இலட்சியக் காரரும் கருதுவதானால், நாட்டுக்கு எதிரியே வரத்தேவையில்லை. நாட்டு மக்களே ஒருவரை ஒருவர் வெட்டி மடித்துக்கொண்டுமாள நேரிடும்! பரிபூரண பொசுக்கல் ஏற்படும்! இது பிறகு, நோகாமல் நுழைய எதிரிக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். ‘பாரததேவி.’ எண்ஜான் உடம்பு என்றேனும் வெந்து சாம்பலாகத்தானே போகிறது என்று எழுதி, தூபமிடுகிறது. எண்ஜான் உடம்புக்குச் சிரசே பிரதானம்! சிரசிலே இருக்க வேண்டியது எதுவோ, அதற்குக் குழப்பம் விளைவித்துக்கொள்ளும் காரியம், நடப்பது, தேவியின் விருப்பம் போலும்! “இந்த காலித்தனம் இலட்சியத்துக்கும் காந்தியாரின் விருப்பத்திற்கும் மாறானது. இது நிற்க வேண்டும்” என்று கூறி தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். இன்று அது, கலகக்காரரின் கண்களிலே படாது. வேகம் குறைந்து, வேதனை மிகுந்து, வீணுக்குச் செய்தோம் என்பதனை உணர்ந்து, மாணவர்களும் மற்றையோரும் அமரும்போது, ஆச்சாரியாரின் அறிக்கைபற்றி யோசிப்பர், சரியானதே அவர் கூறியது என்று தலையசைப்பர். சந்தடிமிக்க இந்த நேரத்திலே, இன்னும் எங்கெங்கே கலகம் நடந்தது என்று கேட்கவும் பேசவும் விரும்புவர் மக்கள். பின்னர், இதனால், நமது நாட்டுக்கு நாமே நலிவு தேடினோம் என்றுணருவர். அதுசமயம், மக்கள் நிச்சயமாக தூண்டி விட்டவர்கள், தூபமிட்டவர்கள், தட்டிக்கொடுத்தவர்கள், தலை உருண்டால் என்ன தம்பி என்று கூறி உசுப்பினவர்கள், இன்னம் இரண்டோர் இடங்களிலே கலகமூட்டு என்று ஏவினார்கள். சபாஷ் கூறிக் கைகொட்டினார்கள், ஆகியோர்மீது குற்றம் சாட்டுவர். சரிதத்திலே இந்தச் சம்பவம் மாணவர்களின் உணர்ச்சியையும் தொழிலாளரின் உத்வேகத்தையும், தூண்டிவிட்டு மிக்க நெருக்கடியான நேரத்திலே மிக மோசமான கலகத்தைத் தூண்டினர் தோற்றனர் என்றே எழுதப்படும்.

எனவே இத்தகைய வீண்கலகத்திலே ஈடுபடாது, ஒதுங்கி நிற்கும்படி திராவிடத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். நரியூரைக்கண்டு பயந்து புலியூர் செல்வதோ! நமது வீட்டிலே கொசுவும் பிறவும் இருப்பதைப்போக்க வீட்டைக் கொளுத்துவதோ! எண்ணிப்பார்க்கட்டும் தோழர்கள்! இன்றளவுவரை நடைபெற்ற கலவரத்தினால், சுயராஜ்யத்தின் பாதையைவிட்டு சுய அழிவுப் பாதைக்கே நாம் வந்திருக்கிறோம் என்பதைத் தோழர்கள் உணர வேண்டுகிறோம், அடக்குமுறையை வீசச் சந்தர்ப்பங்களை உண்டாக்குவதன் மூலம், நாட்டிலே மேலும் பல சங்கடங்களை உண்டாக்க முடியுமே தவிர, மக்களுக்கு மேலும் பலப்பல கஷ்டங்களை விளைவிக்க முடியுமே தவிர, இன்று கிளர்ச்சி நெருப்புக்குத் நமது உடலை விறகுகளாக்குவோம், செந்நீரை நெய்யாக்குவோம் என்று வீரம் பேசும் மக்கள், காணப்போவது ஒன்றுமில்லை. ஓமகுண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டுள்ள ஆரியத்தலைவர்களே பயன்பெறுவர், பிறகு.

தோழர்களே, உங்களின் தழும்புகள் மறையாது, அதைத் தடவுந்தோறும் தடவுந்தோறும், நாட்டு விடுதலைக்காக நாம் நடத்திய கிளர்ச்சியிலே பட்ட அடி இது என்று எண்ணி நீங்கள் மகிழ்வீர். ஆனால் இந்தத் தழும்புகளைக் காட்டி, துப்பாக்கி வேட்டு பாய்ந்த மக்களின் கணக்கைக் காட்டி, கருகிய கட்டடங்களைக் காட்டி, ஆரியத் தலைவர்களே பிறகு, ஆளுக்குக் கொஞ்சம் என்று அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வர். இன்று நடைபெறும் அடக்கு முறைகளை அவர்கள் நொடியில் மறப்பர், வெள்ளையருடன் குதூகலமாகக் கை குலுக்குவர்.

“துப்பாக்கியிலே குண்டு இருக்கும் வரையில் சுட்டேன்” என்று கூறிய டயரின் கொடுமைப்பற்றி அவர்கள் பேசினரே தவிர, பிறகு, மந்திரிப்பதவிகள் கிடைத்தபோது, பஞ்சாப் படுகொலையை மறந்து, வெள்ளையருடன் உல்லாசமாகக் காலங்கழித்தனர் என்பதை மறக்கவேண்டாம். நீங்கள் சிந்தும் இரத்தம், ஆரியருக்கே அதிகார அபிஷேக நீராகப்போகிறது, இதை அறிமின்.

இயக்கம் சரியான வழியிலே செல்லாது, பலாத்காரச் செயல் மிகுந்துவிட்டால், என்னை உயிருடன் காண முடியாது என்று காந்தியார் கூறிப்போந்தார். அவர் அன்பர்கள் பலாத்காரச் செயலில் இறங்குவது சரியா! இதை யோசியுங்கள்.

16.8.1942