அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரென்னர் கணவாயில்!

இத்தாலிய சர்வாதிகாரியும், ஜெர்மன் சர்வாதிகாரியும், பிரென்னர் கணவாயில் சந்தித்தனர். ஒருவரை ஒருவர் முகமலர்ச்சி யோடு வரவேற்றனர். இரு நாட்டுப் படைத் தலைவர்களும், இராஜதந்திரிகளும் உடனிருந்தனர். ‘இத்தாலியை நான் என்றும் மறவேன்’ என்று ஹிட்லர் கூறிட, “இத்தாலியிலே உள்ள 100,000,00 ஈட்டி முனைகளும், ஹிட்லரின் ஆணையை நிறைவேற்றி வைக்கும்’ என்று முசோலினி கூறிட, பெர்லின் ரேடியோ இத்தாலியைப் புகழ, ரோம் ரேடியோ ஜெர்மனியைப் பாராட்ட, இருநாட்டினரும், ‘உலக ஆதிபத்யத்துக்கு’ ஆண்டவனால் அனுப்பப்பட்ட அவதார புருஷர்கள் என்று கொக்கரித்துக் கொண்டிருந்தனர் என்று முன்பெல்லாம் செய்திகள் வரும். இன்றோ ஒரு சர்வாதிகாரியின் இருப்பிடமே தெரியவில்லை, மற்றொருவனுடைய மனமோ மருண்டுவிட்டது. பாதை இருண்டுவிட்டது. சோகம் திரண்டு உருண்ட அவனை வீழ்த்தத் துரிதமாக ஓடோடி வருகிறது. நாலு ஆண்டுகளிலே, பிரென்னர் கணவாயிலே நாலுமுறை கூடிக்கூடிப் பேசிய இரு நாசக்காரர்களிலே, ஒருவன் 48 நாட்களுக்கு முன்னால் பீடத்திலிருந்துக் கீழே உருட்டப்பட்டான். அவனுடைய பத்திரிகை பலம், பிரசார யந்திரம் பாசீச ஈட்டிகள், நாஜீ உறவு முதலிய எதுவும் அவனுக்கு வந்துற்ற இடரைக் களைய முடியவில்லை.

முசோலினி போனால் என்ன? மார்ஷல் படாக்ளியோ இருக்கிறார்! அவர் நேசநாடுகளை இலேசில் விடமாட்டார் என்று அச்சுப்பித்தங் கொண்ட பச்சைக்குழவி போன்றார் சிலர் உரையாடினர். இத்திங்கள் மூன்றாம் தேதி நேசநாட்டுப் படைகள் இத்தாலியிலே படையெடுத்தன. சிசிலியின் கோடிக்கரைக்கும் இத்தாலியின் கோடிக்கரைக்கும் இடையே இரண்டே மைல்! எனவே, இந்தப் படையெடுப்பு ஒரு பிரமாதமில்லை, என்று எழுதின, ஆகாகான் மாளிகை உள்ள திசையை நோக்கித் தெண்டனிட்டு வாழும் சில நாட்கள்! நேசப்படைகள் முன்னேறுகின்றன!என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. இந்த முன்னேற்றமெல்லாம் இப்படியே நீண்டிருக்குமென்று கூற இயலாது. ஏனெனில் உள்ளே போகப் போகத்தான் அமோகமான எதிர்ப்பு உண்டாகும். வட இதாலியிலே நாஜியின் ஏற்பாடு அபாரமாக இருக்கிறது என்று எக்காளமிட்டனர்! 9ந் தேதி வெளிவந்தது ஓலை! சரணாகதி! அபயம் அளிக்கவேண்டும்!! ஆயுதத்தைக் கீழே போட்டு விட்டோம்!!! - என்று இத்தாலிய சர்க்கார் அறிவித்து விட்டனர். ஆறே நாட்கள்! அதிவீரதீர பராக்கிரமமிக்க முசோலினியின் அணி வகுப்புகள், பாசீசப் படைக் கருவிகள், இத்தாலியத் துருப்புகள் நின்ற நிலையிலே கீழே வீழ்ந்து நெடுந்தண்டனிட்டு, அபயம் கோரின! நேசநாடுகள் “கரி” என்றன! பிறகே, அந்தப் படையினரின் பயம் தணிந்தது, அந்நாட்டு மக்களின் பெருமூச்சு குறைந்தது, இத்தாலியின் கண்ணீர் நின்றது, புன்னகை பிறந்தது.

ஆறு நாட்களிலேயா இவ்வண்ணம் நடப்பது. ஒரு திங்களாவது போர் நடைபெறு மென்று எண்ணினோம், ஒரு கிழமை கூடவா, களத்திலே நிற்க முடியவில்லை - என்றே எவரும் கேட்பர். “உங்களுக் கென்னய்யா தெரியும், என் நாடு பட்ட அவதி! படை எடுப்பைச் சமாளிக்கும் சக்தியோ இல்லை! விமானப்படை எடுப்பினால் விளைந்த கேடுகளைத் தடுக்கவோ திறமை இல்லை. போக்குவரத்துச் சாதனமோ படுத்துவிட்டது. ரயில்வேக்களோ நாசமாய் விட்டன. இந்நிலையில் போராவது புகையாவது! தலை தப்பினால் போதுமே. இத்தாலியிலே மேலும் மேலும், தீயும் புகையும், புண்ணும் இரத்தமும், குண்டு வீச்சும் குலை அறுதலும் நேரிடவேண்டுமா! படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று படாக்ளியோ பரிதாபப் பாசுரம் பாடிவிட்டார். ஆறு நாட்களிலே இந்த அவதியா என்று கேட்பாருக்கு, மற்றுமோர் திடுக்கிடும் சேதி! உண்மையிலே, சரணாகதி, அறு நாட்களுக்குப் பிறகன்று! படை எடுப்பு நடந்த அன்றே, 3ந்தேதியே, சரணாகதிச் சாசனத்திலே கையொப்பமாகிவிட்டது. நேசநாட்டினர் விருப்பத்திற்
கிணங்கவே, ஆறு நாட்கள், செய்தி வெளியிடப் படவில்லை, ஒப்புக்குச் சண்டை நடந்துவந்தது. ஆகவே முதல் நாளே, இத்தாலிய எதிர்ப்பு முறிந்துவிட்டது.

அபிசீனியாவை அக்ரமமாகச் சித்திரவதை செய்த இத்தாலி, பிரான்சை முதுகுப்புறமாக நின்று குத்திய இத்தாலி, ஆப்பிரிக்கா விலே பெரிய சாம்ராஜ்யம் அமைத்து ஆணவம் கொண்ட இத்தாலி, அல்பேனியாவை ஆக்ரமித்து கிரீசைக் கொலைசெய்து, கிரீட்டை ஜெர்மானியர் பிடிக்கக் கங்காணி வேலைசெய்த இத்தாலி, பொது உடைமையை அழிக்கும் புனிதப் போரிலே ஈடுபட்டேன், இதோ புறப்பட்டேன், வெற்றியுடனன்றி வெறுங்கையுடன் வீடு திரும்பேன் என்று வீராவேசம் பேசிய இத்தாலி, ரஷிய களத்திலே ரணகளச் சூரனெனக் கூவிய இத்தாலி, ஈறிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருப்புக் கோட்டையாக, பாசிசப் பாசறையாக, மத்யதரைக்கடலின் மமதையாளனாக வீற்றிருந்த இத்தாலி, இன்று இருகைகூப்பி, நேசநாடுகளைத் தொழுது, “என்ன கட்டளை! ஏது செய்யப் பணிக்கின்றீர்” என்று கேட்பது காண்கிறோம். இந்தக் காட்சி ஜெர்மனிக்கு இறுதி எச்சரிக்கை! பிரென்னர் கணவாய் வழியாக நேசநாடுகள் விடும் கடைசி எச்சரிக்கை இது!!

எந்த ஜெர்மன் ராணுவத் தலைவர்களைக் கண்டதும், இத்தாலிய வீரரின் கரம் சலாமிட்டனவோ, அதே ஜெர்மானியரின் மார்புக்கு நேராக இதுபோது, இத்தாலிய ஈட்டிமுனை வைக்கப்படுகிறது! ஜெர்மன் டாங்கிகள் பெருமிதத்தோடு இத்தாலிய நகர்களிலே உருண்டகாலம் போய், இத்தாலியரின் ஏசலுக்கும் தாக்குதலுக்கும் பயந்து பதுங்கு நேரம் பிறந்துவிட்டது. மிலான், நேப்பிள்ஸ் முதலிய நகரங்களிலே, ஜெர்மன் துருப்புகளை இத்தாலியப் படைகள் சுற்றி வளைத்துக்கொண்டு விட்டன. கழுகுக் கொடியின் பக்கத்தில் சுவஸ்திகக் கொடியைக் கண்ணியமாகப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த இத்தாலியக் கப்பற்கூட்டம், சுவஸ்திகாவை சுக்குநூறாக்கிவிட்டு, சிசிலி முதலிய நேசநாட்டுத் துறைகளுக்குத் துரிதமாகச் செல்கின்றன! அது மட்டுந்தானா!! இத்தாலி, ஜெர்மன்மீது போர் தொடுத்துவிட்டது.

நாலு ஆண்டுகளாக நாசகாலரிடம் சிக்கி வதைந்த இத்தாலி, உண்மை இத்தாலியன்று. உண்மை இத்தாலி, காரிபால்டி, போன்ற வீரத்தியாகிகள் கட்டி ஆண்ட இத்தாலி, கலைக்கும் நாகரிகத்துக்கும் இடமளித்த இத்தாலி, டாண்டி போன்ற புலவர் பெருமக்களின் பிறப்பிடமான இத்தாலி, பிறந்துவிட்டது! அதன் சுதந்தரமும், சுகமும், இனி நேசநாட்டு வெற்றியைப் பொறுத்திருக்கிறது. திடுக்கிடக்கூடிய திடீர் மாறுதல்கள் ஏற்பட்ட இத்தாலியிலே, இன்னும் சில காலம், எதிர்பாராத பல நிகழக்கூடும், இத்தாலி இவற்றைச் சமாளித்தாக வேண்டும், இடர் நீங்கி இன்பம் உண்டாக!!
இத்தாலியின் வீழ்ச்சி, நேச நாட்டுப் படைகட்கு, ஜெர்மனி யைத் தாக்க வழிவகை எளிதாகும்படி செய்துவிட்டது. இம்மட்டோ, ஹிட்லர் துவக்கிய கூட்டுக்கொள்ளைக் கம்பெனியின் முதல் பங்குதாரனான இத்தாலியின் இன்றைய நிலைமை, இன்னமும் அந்தக் கம்பெனியில் பங்குதாரராக உள்ள பால்கன் நாடுகளுக்குச் சரியான பாடம் புகட்டுமென்பது உறுதி - பால்கன் நாடுகளிலே, ஒரு திங்களுக்குள் பல மாறுதல்களை எதிர்பார்க்கலாம். நேசநாட்டு வெற்றிவீரப்படை, ஐரோப்பியச் சுங்கச்சாவடியைத் தாண்டி விட்டன, அதிகக்கட்டணம் செலுத்தாமல்! இனி, நாஜிக் கோட்டை மீது பாய நாளதிகமிராது என்னலாம். பிரென்னர் கணவாய் மீது கண்ணும் கருத்தும் ஹிட்லர், இன்று செலுத்தினால், எவ்வண்ண மிருக்கும்! அழிவு அங்கு நின்று அவரைக் கூவி அழைப்பதை நிச்சயம் காண்பார்!! அதேபோது ஸ்டாலினோவைப் பிடித்தாகி விட்டது, இதோ வருகிறோம் என்று ஸ்டாலின் முழக்கமிடுகிறார்!!

12.9.1943