அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பச்சை இரத்தம் பரிமாறிடுவோம்

இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற எழுச்சி பெற்று விட்டால், அந்த இனத்தின் சக்தியைச் சாய்க்க எவராலும் இயலாது, என்பது சரிதங்கூறும் உண்மை. இஸ்லாமிய இனம், இன்று இந்நிலையில் இருத்தல், கருத்துள்ளோர் அறிவர், கசடர் அறியார். அந்த அறியாமை நோயினால் அவர்கள் ஆடுவர், அதைப் பொருட்படுத்த வீரர்களுக்கு நேரமிராது.

இஸ்லாமியருடைய எழுச்சியின் சின்னம், ஜனாப் ஜின்னா. பத்து கோடி முஸ்லீம்களின் உணர்ச்சியின் ஊற்று. அந்த ஒரு உருவம், பலகோடி இந்து வைதிகரின் மனப்போக்கின்படி, காரியம் நடைபெறாதபடி தடுத்து விட்டது. இதனால், சனாதனிதிகளுக்குச் சஞ்சலமும் சோகமும் அதிகம். குடத்திலே பாலைக்கொட்டி வைத்தால், உள்ளே அது கூத்தாடுவதில்லை. மொந்தையில் உள்ள கள்ளோ, பொங்கும், வழியும், கொதிக்கும், கூத்தாடும். அது போலவே அறிவுடன் கூடிய ஆண்மை அட்டகாசமோ, ஆர்ப்பரிப்போ கொள்ளாது. அறிவிழந்தவனின் அங்கங்களோ பதறும், பதைக்கும், பக்குவமின்றிக் குதிக்கும். மதகரியின் மண்டையை ஒரே அடியில் பிளக்கக்கூடிய மாவலி படைத்த சிங்கம், அருகே வருவோரை, பின்னங்கால்களால் உதைத்திடுமா! கழுதைக் கன்றோ வேண்டும், அந்தக்கால்வண்ணம்!! அது போலவே, விழித்தோம், வீறு கொண்டோம், வென்றோம், என்று முன்மொழியும் நிலையிலுள்ள இனத்தின் தலைவனுக்கு முணுமுணுப்போ, முடிச்சு போடுவதோ, முதுகுப்புறமிருந்து குத்துவதோ, தேவையுமில்லை, தெரியவுந் தெரியாது. ஈனத்தனமும் இழிகுணமும், நாடி தேடிடும் பேடித்தனமும் கொண்ட பதர்களுக்கே, கொள்கையைக் கொல்ல முடியா விடத்து, அக்கொள்கையைக் கூறிடும் கோமகனைக் குத்துவோம், கொல்வோம், என்ற குறைமதி தோன்றும்.

அத்தகைய குறைமதியினாலோ வன்னெஞ்சரின் கூலியினாலோ, வெறியாலோ, யாதோ அறியோம், நயவனொருவன் ஜனாப் ஜின்னாவிடம், பேசவேண்டுமென்று கூறி, பேட்டி கேட்டுப் பெற்று, கத்திகொண்டு அவரைக் குத்திக்கொல்ல முயன்றான். சிறு காயமே ஜனாப் ஜின்னாவுக்கு! ஆனால், அந்தக்காயம், அவருடம்புடன் நின்றுவிடவில்லை. பத்துக்கோடி முஸ்லீம்களின் உடலிலும், தம்மை உணர்ந்த நிலையிலுள்ள திராவிடர் உடலிலும், அத்தழும்பு உண்டாகிவிட்டது. அந்தக்கத்தி, காயிதே அஃலமின் உடலிற்தைத்துக் கூர்மழுங்கிற்று! ஆம்! வஞ்சனை எனும் வாள், தூய்மை எனும் கேடயத்தைத் துளைக்க முடியாது. சட்டம் அந்தச் சழக்கனை இழுத்துச் சென்றது. ஆனால், அவனுடைய தீய செயலைக் கேட்டதும், நாம், பாக்கிஸ்தானுக்காக, தலைவர் ஜின்னா பச்சை இரத்தம் பரிமாறிவிட்டார், இனிப்பயனில்லை என்று பண்பாடு வோம், அப்பாதகனின் எண்ணம் மண்ணாயிற்று, பாபெருந் தலைவர் தப்பினார் என்று மகிழ்வோம், கத்தியுண்டு, கடையருண்டு, என்று நம் எதிரிகள் கூறினாலும், இரத்தமுண்டு, கண்டதுண்டமாக்கிடச் சதையுமுண்டு பெறுக, ஆனால், பெறுமுன் இதை அறிந்திடுக, வாள் கொண்டு எமது இலட்சியத்தைச் சிதைத்து விடமுடியாது - ஒரு ஜின்னாவைக் கொன்று விட்டால், நீங்கள் திரும்பிக் காணுமிட மெங்கும் ஜின்னாக்களையே காண்பீர், அந்த உருவங்கள், சாந்த மொழி பேசி, சமரசம் கோரிடும் ஜின்னாக்களாக இரா, திக்கெட்டும் தீப்பொறி பறக்கத் திருவிழி திறந்து, தேடிப்பிடித்திழுத்து தெகிடுதத்தக்காரரை, தரையில் தேய்த்திடும் ஆத்திர உருவங்களாக இருக்குமென்பதை அறிந்திடுக என்று கூற அவாவுறுகிறோம்.

அவிவேகிகளே! ஆத்திரத்தால் அறத்தை அழித்திட முடியாது! காட்டுமிராண்டித்தனத்தால், கொள்கையைக் குலைத்திட முடியாது. முகமதுவின் உடலிலே தழும்பெழக் கல்லடி கொடுத்துக் கைசலித்து, அக்காலக் கடையர்கள், மெய்ஞானப்பவனியைத் தடுக்க மேதினியில், ஒரு சக்தியுமில்லை என்பதனைக்கண்டு கொண்டனர். இக்காலத்தில், கத்தியால் குத்தி பாகிஸ்தான் இலட்சியத்தைக் கொல்லமுடியுமென்று எண்ணாதீர் - மிச்ச மீதியாக உள்ள ஈரமும் உலரும் நிலை உண்டாக்காதீர், என்று போதனை, புரிகிறோம், செவியும் சிந்தையும் சிதையாதுள்ளோர் கேட்கட்டும், மற்றவரைப் பற்றிய கவலை நமக்கில்லை.

(15.8.1943)