அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நெருக்கடி!

“திராவிட நாடு“ நெருக்கடியால் தாக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையில் ஏற்பட்டிராத அளவுக்கு நெருக்கடி.

இந்த நெருக்கடி மெள்ள மெள்ள வளர்ந்துகொண்டே வந்தது – இப்போது வெளிப்படுத்தித் தீரவேண்டிய அளவுக்கு இருக்கிறது.

‘திராவிட நாடு‘ ஏஜண்டுகள் இதுவரை இதுபோன்ற நெருக்கடி ஏற்பட முடியாதபடி நடந்து கொண்டு வந்தார்கள். சில திங்களாகச் சில ஏஜண்டுகள் பாக்கிப் பணத்தைக் குவியும்படிச் செய்துவிட்டனர். ஐயாயிரம் ரூபாய்க்கு மேலாகவே நிலுவை இருக்கிறது கடிதங்களுக்குப் பதில் கடிதங்கள் அனுப்புகிறார்கள் – கண்டித்தால் ‘சிபார்சு‘களை அனுப்புகிறார்கள் – பணம் வருவதில்லை.

இதனால் வளர்ந்த நெருக்கடி இதுபோது ‘வாராவாரம்‘ இதழடிக்கக் கடைவீதி சென்று காகிதம் வாங்கிவரும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

இந்த ‘நெருக்கடி‘ ஏற்படக் காரணமாக இருந்துவரும் ஏஜண்டுத் தோழர்கள், உடனே பணம் அனுப்பிவைத்தால்தான், இதழுக்கு வந்துள்ள ஆபத்து நீங்கும்.

அருள்கூர்ந்து ‘பாக்கி‘ அனுப்பவேண்டிய ‘ஏஜண்டுகள்‘ இந்த நிலைமையை அறிய வேண்டுகிறேன்.

பல்லாயிரக்கணக்கான திராவிடர்களின் அன்புக்குப் பாத்திரமாக உள்ள திராவிடநாடு இதழ், இன்று நெருக்கடியால் தாக்கப்படுகிறது.

உடனே நெருக்கடி தீரவழி செய்க – பாக்கி பணத்தை உடனடியாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு கிழமை இதழ், ஐயாயிரம் ரூபாய்க்குமேல், வெளியில் இறைத்து விட்டு, ஒழுங்காக வெளி வந்து கொண்டிருக்க முடியாது என்பதைப் பணம் சேரவேண்டிய ஏஜண்டுத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

நெருக்கடி, என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய அளவுக்கு வளர்ந்திருப்பதாலேயே, இந்த வேண்டுகோள்.

பொறுப்புணர்ச்சியுள்ள ஏஜண்டுகள் இந்த என் வேண்டுகோளுக்கிணங்க நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன்
அண்ணாதுரை

திராவிட நாடு – 30-3-52