அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“நாம்“ பலர், அவர்கள் சிலர்”

அவர்களில் எவருமோ உயிருடனில்லை! அத்தனை பேரும் மடிந்துவிட்டனர்! மண்ணோடு மண்ணாகிவிட்டனர்!

மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது!

மடிந்த மக்கள்-எனினும் அவர்கள் வாழ்விலே இருந்த மொழியை அழியாது நிலைக்கச் செய்யப் புதுமுறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!

இடிந்த கோட்டை, பாழான அகழ், கலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.

மாங்க்ஸ் மொழி மறைந்து விடாதிருக்க, ‘ரிகார்டு’ மூலம் அம்மொழியைக் கேட்கச் செய்யப்பட்டுள்ளது.

செத்த இனமானாலும் அவர் வழங்கிய மொழி சாகாதிருக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறந்த மொழிகளுக்கு இதுதான் இடம்! ஆனால் இந்தியப் பூமியிலே மட்டும் செத்த மொழிக்கு சீரும், சிறப்பும் தேடுவதில் முனைந்துள்ளவர்கள், அம்மொழிக்கு இடம் ‘ரிகார்டு’ என்பதை மறந்துவிட்டு, அரிசாயனம் அமைக்க ஆசை கொண்டு திரிகின்றனர்!

“ரிகார்டு” செய்து, காட்சி சாலைகளிலே, கேட்கச் செய்வதை விடுத்து விட்டு, அதற்குப் பன்னீர் தெளித்து, பரிமள கந்தம் பூசி, பட்டுபீதாம்பரம் உடுத்தி, பாலும் பழமும் ஊட்டி, பல்லக்கிலேற்றி பராக்கு கூறி, பாராள வைக்கலாம் என்று ஆகாத ஆசையினால் அவதிப்படுகிறார்கள்!

எங்கள் சமஸ்கிருதம், செத்த மொழி யென்று பேசுகின்றனரே, இவர்கள் நா அழுகிப் போகாதா! நாசகாலர்கள், தேவ மொழியையே நிந்திக்கிறார்கள்! இவர்கள் வாழ்வார்களா! என்று ஆயாசங் கலந்து பேசிடும் பொழுது, சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை.

வடமொழி, பேசும் மொழியல்ல! தேவரும், மூவரும் கேட்டமொழி, பூசை நேரத்தில் பேசிய மொழியல்ல! இங்குள்ள பூதேவர்களும் நாவில் நடமிடவில்லை. அம்மொழியை! செத்த மொழியைத் தாங்குகிறார்கள். தர்ப்பையைக் கொண்டு! புரி நூலால், அம்மொழியைக் கட்டித் தூக்கி நிறுத்துகின்றனர்!

செத்த மொழிக்காக சல்லடங் கட்டுவோர் உண்டு. இங்கு ஆனால் அவர்களுக்கு மந்திரிமார்களும் துணை போகிறார்கள் என்றால்தான் நாம் அதுபற்றி நினைக்க வேண்டியிருக்கிறது!

எங்கோ, சில இடங்களில் அந்த மொழி சொந்தக்காரர்கள் பேசுவர் இந்த மந்திரிகளோ ஓடியோடிக் கலந்துகொள்கின்றனர்!

வடமொழியை வாழ்விக்க நாங்களிருக்கிறோம், பணம் தருகிறோம் பட்டாளத் தருகிறோம். பயப்பட வேண்டாம் என்று அவர்கள் கூறுவதும் அதைக் கேட்டு, பூதேவர் பரம்பரை பூரிப்பதும் வேடிக்கை!

வடமொழிக் கல்லூரி வைக்கிறோம் பாருங்கள் என்று அவர்கள் புலம்புவதும், இவர்கள் நல்ல காரியம், நாளையே செய்யுங்கள் என்று கூறுவதும் நமக்கு விந்தையாய்த் தானிருக்கிறது.

மாங்க்ஸ் மொழி பேசப்பட்ட மொழி பேசிய மக்கள் மடிந்தனர். வடமொழியோ பேசப்பட்ட மொழியே அல்ல அதற்கு இங்கு ஆராதனை செய்திடுவோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செய்யும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

‘ரிகார்டு’ களோடு நிற்கவேண்டிய வடமொழி, இன்று கல்லூரிகளிலும், கலைக்கோயில்களிலும் மக்கள் வாழ்விலும், தாழ்விலும் வழங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்திடும் போக்கு நாட்டோர் கண்டு நகைத்திடக்கூடியது!

இந் நாட்டில்தான் மொழிப் பிரச்சினை, மிகப் பயங்கர உருவெடுத்திட வேண்டிய நிலை இருந்தது.
வடமொழிக்கு, வக்கீலாகிறார்கள், அமைச்சர்கள்! அது மட்டுமா? இந்தி மொழிக்கு ஏக வாரிசாகிறார்கள் அவர்கள்.

தமிழைத் தவிர பிற எம்மொழிக்கும் இந்த மிதமிக்க மந்திரிமார்கள் தாளங் கொட்டி, ‘தத்தித்தோம்’ ஆடி வரவேற்பர்.

இதைக் கண்டு மக்கள் சீறினால், சிரிப்பர், சிந்தனையின்றி! ஆம், அவர்கள்தான் நமக்கு மந்திரிகள்! என் செய்வது?

இந்தியைத் திணிக்க, காங்கிரஸ் ஆட்சி துணிந்தது!

தமிழகம் இந்தத் துணிகர அக்கிரமத்தை எதிர்த்தது!

இந்தியைக் கட்டாய பாடமாக்கக் கூடாது என்று அறப்போர் நடத்தினர். ஆட்சியாளர் அடிபணிந்தனர்.

கட்டாய பாடமென்றது, எங்கள் அறிவு எட்டாத நேரத்தில் போட்ட திட்டம், இதோ எடுத்துவிட்டோம் என்றனர்.

இந்திக்கு, ஏற்றம் தரவில்லையென்று சர்க்கார் கூறியும், மக்களின் சீற்றம் குறையவில்லை. காங்கிரஸ் ஆட்சி கதி கலங்கியபடி, மக்கள் ஆத்திரத்தைப் போக்க வழி பார்த்தது.

இந்தியைத் தாழ்த்தியது மட்டுமல்ல,தமிழுக்கும் தொண்டு செய்கிறோம் நாங்கள் என்று சொன்னால் தான் மக்களின் முன்னால் வரமுடியும் என்று தெரிந்துகொண்டனர்.

அவினாசியாரின் ‘விலாசம்’ மக்களுக்குத் தெரிந்த நேரம்-அவர் நாளில் தமிழகத்தில், தமிழுக்குத் தொண்டு புரிகிறோம் என்று தமிழ் வளர்ச்சிக் கழகம் வைத்தனர்.

தமிழுக்கு, பெருமை தேடுவதற்காக, ஆஸ்தான கவி ஏற்படுத்து கிறோம் என்றனர்.

பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவிலேயே தமிழில் பேசிக் காட்டினார், அவினாசியார்.

தமிழ் மொழி சீர்த்திருத்தக் குழு அமைத்து, எழுத்துச் சீர்திருத்தத்திற்கு வழி வகுத்தனர்.

அதன் முடிவு, அண்மையிலே வெளியிடப்பட்டது. நாம், அந்த நாள் முதல் சொல்லிவந்தபடி, தமிழ் எழுத்துச் சீர்த்திருத்த முடிவுகள் வெளிவந்துள்ளதைக் காண மகிழ்கிறோம்.

இவையெல்லாம், ஆட்சியாளர் முதலில் செய்த பெருங் குற்றத்திற்கு, கழுவாயாகவே செய்தனர்.

இந்தி, கட்டாயபாடம் என்று சொன்ன குற்றத்தைத் திருத்திக் கொண்டும், மக்கள் மன்றத்தில் மகிழ்ச்சி வரவழைக்க, இத்தகைய வேலைகளையும் செய்தனர் இருந்தும் இன்று, மந்திரி மாதவமேனனார் பேசுவது வியப்பாக இருந்தது.

இந்தி எதிர்ப்பு நடத்தியோர் சிலராம்! இந்தியை ஆதரித்தோர் பலராம்!

மலையாள மந்திரியார் உதிர்த்த மணிமொழிகள் இவை.

இந்தி எதிர்ப்பு நடத்தியோர் சிலராம்-மனந்துணிந“து சொல்கிறார்.

ஆயிரமாயிரம் காளைகள், தாய்மொழிக்காக சிறைக்கதவை தட்டியிருக்கின்றனர்.

நம், செந்தமிழ் காத்த வீரர்களால் தான், சிறை விரிந்தது!

இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம், நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டவரே, என்று கூட்டம் கூட்டமாக, சிறைக் கோட்டம் சென்றனர்.

உலகமே, காணாத விந்தை! சிறையிலே ஏணைகள் தொங்கின ஆம், தமிழகத் தாய்மார்கள் சிறை சென்றனர்.

சிறையை, சிங்காரச் சோலையாக மாற்றினர்!

தாளமுத்து, நடராசன் பிணமாயினர், தாய் மொழிக்காக!

பள்ளிகள் தோறும், காலை, மாலை நின்று இந்தி பயிலாதீர்கள் என்று எண்ணற்றோர் அறப்போர் புரிந்தனர்.

தமிழ் அறிஞர், பாவலர், நாவலர், எல்லோருமே எதிர்த்தனர்.

எங்கெங்கும் மாநாடுகள் கூட்டி, இந்தி ஆகாதென எடுத்துக் காட்டினர்.

தமிழால் நாவசைப்போர், பேனா ஓட்டுவோர் எல்லோரும், இந்தி எதிர்ப்பியக்கத்தில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.

தமிழகமே எதிர்த்தது-இந்தி கூடாதென்று!

நாடே, எதிர்ப்பியக்கம் நடத்தியிருக்கிறது!

ஆனால், நாடாள வந்துள்ள மாதவ மேனனார் சொல்கிறார் அவர்கள் சிலர் என்று!

அவர் வாக்குப்படியே, வாதத்திற்காக, இந்தி எதிர்ப்பியக்கம் நடத்தியோர் சிலர் என்றே வைத்துக்கொள்வோம்.

அந்தச் சிலரின் சீற்றத்திற்காக ஏன் இவர் அலைமோத வேண்டும்? சிலர் அவர்கள், என்று தள்ளிவிட வேண்டியதுதானே! சிலரின் சீற்றத்திற்கு சிரம் வணங்குவானேன்?

சிலர் செய்த அறப்போர்தான் இந்தப் பலரை ஆட்டிவைத்தது! சிலரின் போர், இந்தப் பலரை முகத்திலே முக்காடு போட வைத்தது! ஆச்சாரியாரை ஆழந்தெரியாமல் காலைவிட்டு விட்டேனே, என்று அங்கலாய்க்க வைத்தது! அவினாசியாருக்கு, முகவரி மாற்றம் போடக் கூட முடியாத நிலை பிறக்கச் செய்தது! மாதவ மேனனாரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச்செய்தது!

இந்தியை சிலர்தானே எதிர்த்தார்கள்! ஏன் இந்தப் பலர் இந்தியைத் திணிக்க முடியவில்லை? திண்டாடினர். திருதிருவென விழித்தனர், திருடர்போல!

இந்தி கட்டாயபாடமென்று திட்டமிட்ட அவர்கள், திடீர்க்கர்ணம் போட்டது ஏனோ! இந்தியை எதிர்த்தவர் சிலராக இருந்தும்-இந்தப் பலரின் துணையிலே பவனி வரும் மந்திரிசபை கட்டாய பாடமில்லையென்று ஏன் மாற்றிற்று?

சிலரின் போர், பலரின் போக்கை மாற்றி விட்டதே! ஏன்?

பலர், அப்படியானால் மண் பதுமைகளா? சிலரை அடக்க முடியாத அச்சுப் பொம்மைகளா? அலங்காரச் சிலைகளா?

மந்திரியார் வாக்கு, இல்லாவிட்டால் பொய்யாக இருக்க வேண்டும்!

நம்மைச் சிலர் என்று அவர் கூறுகிறார். ஆனாலும், பலரின் பக்கபலம் உள்ள அவரே புலம்புகிறார். இந்தி கட்டாய பாடமில்லை என்றாலும் என்ன, எத்தனையோ பள்ளிக்கூடங்களில் இருக்கின்றதே என்று கூறித்திருப்தி தேடுகிறார்.

இந்தி எதிர்ப்பியக்கம், சிலருடையது என்பதோடு மட்டுமல்ல, அதனை அடக்கிவிட்டோம் என்று கூட அஞ்சாது புளுகுகிறார்!

இந்தி எதிர்ப்பியக்கத்தையடக்கி விட்டோம் என்றால், இந்தி கட்டாயபாடம் என“றாக்கியிருக்க வேண்டும் இல்லையே! பின் மாதவமேனனார் இப்படி மனம்போன போக்கில் ஏன் பேசுகிறார்!

மந்திரி என்றால் வாயில் வந்ததையெல்லாம் பேசிடுவதென்றால் விந்தை இது!

ஆகவே, மந்திரியார் கூறுவது உண்மையில்லை.

நாம் பலர்! அவர்கள் சிலர்! ஆகவே தான் வெற்றி நமக்குக் கிடைத்துள்ளது!

இதனை மாதவ மேனனார் மட்டுமல்ல, செத்த மொழிக்கும், அதையொட்டி, இந்த வந்தமொழிக்கும் வக்கீலாக்கும் பேர்வழிகள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும்.

சிலர் அவர்கள், ஆகவேதான் திண்டாடுகிறார்கள்!

அவரே, கூறுகிறார் இந்திக்கு எதிர்ப்பிருப்பதைப் பற்றி வடநாட்டிலே கேட்கிறார்கள் என்று!

அவரது வடநாட்டுச் சுற்றுப்பிரயாணத்தின் போதும், ஹைதராபாத் சென்றிருந்த பொழுதும், பலர் கேட்டனராம்! பலராஜ்ய மந்திரிகளும் விசாரித்தனராம்! இந்தி எதிர்ப்பு இயக்கத்தைப்பற்றி அங்கெல்லாம் கேட்கிறார்கள்!

ஆனாலும் சொல்லுகிறார் சிலரின் வேலை இது என்று! மந்திரியாருக்கு மண்டைக் குழப்பம் ஏதுமில்லாதிருக்கும் பொழுதே!

அதுமட்டுமா? அந்தச் சிலரை அடக்கிவிட்டோம் என்று கேட்ட அவர்களுக்குப் பதில் சொன்னாராம்!

ஆனால், இவரை நம்பவில்லை வடவர். இவரின் வார்த்தைகளை உண்மையென்று நம்பவே இல்லை!

எப்படி நம்புவர்? நாட்டு நிலவரத்தையே புரிந்துகொள்ளாத அவர்களே நம்பவில்லையென்றால், இவரின் நெஞ்சறிந்த பொய்யை, தமிழகம் எப்படி நம்பும்?

சிலர் செய்த போர், வடநாடு வரைசென்று, அங்குள்ளோர், மந்திரியாரை விசாரிக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் நாம் சிலரில்லை, பலர் என்பதையுணர்த்தும்!

இந்த உண்மையை மறைக்க ஒரு புதுப்படுதா கண்டுபிடித்துள்ளார் மாதவமேனனார்.

விளம்பரத்தால் தான் இந்த இயக்கம் இப்படி வளர்ந்துவிட்ட தாம்!

மந்திரி, கொலம்பஸாகி விட்டார்! கண்டுபிடித்துவிட்டார் பாருங்கள், இந்த உண்மையை!

இந்தி எதிர்ப்பியக்கத்திற்கு அதிக விளம்பரமாம்! என்ன புதுக்கண்டுபிடிப்பு! இந்து, சிந்து பாடிற்றா? இந்தியன் எக்ஸ்பிரஸ் இயக்க முரசாயிற்றா? தினமணி, தினந்தினம் நம்மைத் திட்டித் தீர்த்ததே! தினசரி, பாரத தேவி, சுதேசமித்திரன்-எதுதான் விளம்பரம் தந்தது!

இருட்டடைப்புக்கே, இலக்கணம் வகுத்துக் காட்டினரே, அந்த இயக்கத்தின் பொழுது!

மந்திரியார் கூறுகிறார், விளம்பரத்தால்தான் வடநாடு அறிகிற அளவு வளர்ந்துபோனது இந்த விபரீதம் என்கிறார்!

அதுவா உண்மை? இல்லை. மக்கள் அனைவரும் திரண்டு ஒருமுகமாக எதிர்த்ததால்தான் வடநாடு திடுக்கிட்டது! மந்திரியாரைக் கேட்ட வண்ணமிருக்கிறது!

நாம் பலராக இருப்பதால்தான் அந்த நிலை! இதை மறைக்க விளம்பரத்தால் வந்தது என்கிறார்!

பிரச்சார பீரங்கிகள் அனைத்தும் நம்மீது தூற்றல் குண்டுகளை வீசியபடியே இருந்தனவே தவிர, இந்த இயக்கத்தை ஆதரித்ததில்லை! நம், இயக்க ஏடுகள், சிலவே, இவ்வியக்கத்தினை நடத்திற்று! வடநாட்டார் பார்த்தாலே ‘பாவ’ மென்னும் ஏடுகளே ஆதரித்தன!

வடநாட்டார் அஞ்சுவதற்குக் காரணம், விளம்பரம் விதைத்த விபரீதமல்ல! அதற்குக் காரணம் உண்டு!

வெளிநாட்டு உதவி மந்திரி கேஸ்கார் திருச்சியில் பேசுகையில், மாதவமேனனார் பாணியிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தி எதிர்ப்பு அரசியல் குறிக்கோளோடு செய்யப்பட்டதென்று!

இருந்தாலும், அந்த எதிர்ப்பியக்கத்திற்குப் பயந்து கொண்டுதான் பேசவேண்டியிருக்கிறது!

இந்திய சர்க்கார் தமிழகத்தி“ன் மீது இந்தியை திணிக்க முயலாது!

இப்படிக் கூறிவிட்டுத்தான், மலையாளத்தாரின் சிலரைப் பற்றிப் பேச முடிகிறது!

அவர் குறிப்பிட்டது போல, வடநாட்டு மந்திரி, அதுவும் மத்திய சர்க்கார் மந்திரி, அதிலேயும் வெளிநாட்டிலாகா மந்திரி, உள்நாட்டைப் பற்றி இப்படிப் பேச வேண்டியிருக்கிறது!

இந“தியைத் திணிக்க மாட்டோம் என்று கூறிவிட்டுத் தான் பேச முடிகிறது!

இதற்குக் காரணம் விளம்பரம் என்கிறார் மந்திரியார்-அதுவா உண்மை!

விளம்பரமல்ல, இதற்குக் காரணம், நாம் தரும் விளக்கம்!

விளக்குகிறோம், நம் திட்டத்தை! அதனை விருப்பமில்லா விட்டாலும் கேட்க வேண்டிய நிலையை உண்டாக்கியிருக்கிறோம்!

ஆகவேதான் மந்திரியார் வடநாடு சென்றால், மக்கள் மட்டுமல்ல. மந்திரிகளில் சிலரும் கேட்கிறார்கள்! இவர்கள் மறுத்துரைத்தால், நம்புவதில்லை!!

விளம்பரம்
விளக்கம்.

மந்திரியாருக்கு, அவரை முடிசூட்டி வைத்திருக்கும் கட்சியும், அதற்கு பின்னணிபாடும் பத்திரிகைகளும் விளம்பரம் தரலாம்!

நாம், அவர்களுக்கு விளக்கந் தருகிறோம்!

அதன் விளைவை வேறெங்கும் போய்ப்பார்க்க வேண்டியதில்லை.

மாதவமேனன், சென்னையில் எந்த இந்தி பிரச்சார மேளாவில் நம்மைச் சிலர் என்று கேலி பேசினாரோ, அங்கேயே இந்த விளக்கத்திற்கு அறுவடை காணலாம்.

அவரை அடுத்துப் பேசிய, ஹரிகிருஷ்ண சர்மா, மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியமக்கள், துளசிதாசர், மீரா போன்றோரின் இந்திப் பாடல்களைப் பாடுவதுபோல், வடநாட்டாரும், சுப்ரமணிய பாரதி போன்றோரின் பாடல்களைப் பாட வேண்டும்.

இந்தி இங்கு! தமிழ் அங்கு உண்டா? கேட்கிறார்கள் மக்கள். அதை சர்மா, இனத்தின் போக்குப்படி உபதேசமாக்கி விட்டார்.

இங்கே, இந்திப் படிக்கச் சொல்கிறார்கள்! அவர்கள் நம் மொழியைப் படிக்கிறார்களா? கேட்கத் தானே தோன்றும்! அதனையறிந்து தான் சர்மா, சாதாரண போதனை மொழியாகத் தந்துள்ளார்.

இந்தக் கேள்விதான் வளர்ந்து, வளர்ந்து நம் இலட்சிய பாதையில் வந்து முடிகிறது!

இங்கே இந்தி, அங்கே தமிழில்லை!

இங்கே துளசிதாசர், மீரா, அங்கே இராமலிங்கர் காரைக்காலம் மையார் இல்லையே!

இங்கு இந்தி ராமாயணம், அங்கே திருவாசகம், தேவாரம் இல்லை!

இங்கே சாயிபாபா! சென்னையைத் தாண்டிவிட்டாலே, தாயுமான வரைத் தெரியவில்லை! பட்டினத்தடிகளைப் புரியவில்லை!

இங்குள்ளோருக்கு அங்குள்ள கங்கை புண்ணிய நதி! அங்குள்ள காசிதான் புண்ணியபூமி!

காசி, சமூக புண்ணியபூமி, டெல்லி, அரசியல் புண்ணியபூமி!

அங்கிருந்து இங்கு வருவோருக்கு அமோக வரவேற்பு! வருபவர் யாரானாலும் இங்கிருந்து அங்கு செல்லும் எவருக்கும் இரயிலடியில் போர்ட்டர் கூட வரவேற்பதில்லை.

அங்குள்ள தலைவர்களின் பெயரால் இங்குபார்க், மைதானம், கட்டிடங்கள், காட்சி சாலைகள் இங்குள்ள தலைவர்களுக்கு ஒரு சிறு நினைவும் இல்லை அங்கு!

இங்கு அரிசியில்லையென்றால் அங்குள்ள கோதுமையை அதிக விலையில், அவசியமில்லாமல் அனுப்புவானேன்?

நூலின்றி நாம் தவிக்க, இங்குள்ள நூலை அனுப்புவானேன்?

மக்கள் தரும் வரிகளையெல்லாம் அங்கு அனுப்பிவிட்டு, திட்டங்கள் எது தீட்டினாலும், பணமில்லை பணமில்லை யென்று பல்லவி பாடுகிறார்களே! ஏன்?

தென்னாடு, வடநாட்டுடன் ஏன் ஓட்டியிருக்கவேண்டும்?

ஆகவே, திராவிடநாடு, திராவிடருக்காக வேண்டும்!

இப்படி நம் இலட்சிய பாதைக்கு வந்து சேர்கின்றனர்.

இது விளம்பரத்தால் வரவில்லை விளக்கத்தால்!

இதனை வடநாட்டார் அவ்வளவு அக்கறையுடன் கவனிக்கின்றனர். ஆகவேதான் மலையாளத்தார் போகும்பொழுது இந்தியார் விசாரிக்கிறார்.

மலையாளத்தார் ஆறுதல் கூறுகிறார். இந்தியார் நம்ப முடியாது என்று மறுக்கிறார்!

நாம், விளக்கந் தருகிறோம் வடநாட்டவருக்கு!

இந்துவினாவல்ல, மித்திரன்மூலமல்ல, பாரததேவியை தூதனுப்பியல்ல, ஆனந்தவிகடன் அரசியல் நிருபர் துணைகொண்டல்ல, கல்கியின் வாய் வழியில்லல தினமணி, தினசரியார்களின் பக்கபலங்கொண்டல்ல!

கையிலே கருப்புக்கொடி! காட்டுகிறோம்!

வடநாட்டு மந்திரிமார்கள் வரும்பொழுதுதெல்லாம் காட்டுகிறோம்!

அது, அவர்களுக்குக் கருப்புக்கொடியாகத் தெரியவில்லை. கருத்துக் கொடியாகிவிடுகிறது!

இப்பொழுதாவது மனது தெளிவடைவாராக மாதவமேனனார்!

சென்றவாரம் ஜகஜீவன்ராம் வந்திருந்தார்.

கோவை
சேலம்
மதுரை
சென்னை
ஆகிய இடங்களில் கருப்புக்கொடி காட்டினர்.

தி.மு.கழகத் தோழர்கள் மத்திய கழகத் தீர்மானத்தின்படி, சட்டவரம் பிற்குட்பட்டமுறையில், கருப்புக்கொடி மூலம், திராவிட நாட்டோர், வடநாடு ஆதிக்கத்தை வெறுக்கின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டி விட்டனர்.

கருப்புக்கொடி காட்டாமல் தடுக்க என்னென்ன முறைகளைக் கையாண்டனர்!

தடியடி தந்தனர், விரட்டியடித்தனர். இரத்த மழை பொழிய வைத்தனர், சிறைக்கு அனுப்பினர், வழக்கில் அபராதம் வாங்கினர்!

ஆனாலும் கருப்புக்கொடி காட்டினோம்! கருத்து தெளிவடைந்தனர்!!

விளக்கம் கிடைக்கவேதான், அவர்கள் விழிப்படைந்து, விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனை, கண்டு விசாரங்கொண்டு பயன் என்ன?

மாதவமேனனார் குளறியது போல, விளம்பரமல்ல, விளக்கம் பெறுகிறார்கள்! ஆகவே விசாரிக்கிறார்கள்.

இந்தியைத் திணிக்க முடியாத இவர் நம்மைச் சிலர் என்கிறார் அதனால் சமாதானம் தேடுகிறார்.
இந்த மாதிரி நாட்டின் நிலையுணராமல், மமதையோடு ஆட்சி புரிந்தோர் பேச்சுகள் எல்லாம் மாங்க்ஸ் மொழிபோல ‘ரிகார்டு’ கூட செய்யப்பட்டதில்லை!

அவர் வாய்மூடுமுன் ஆட்சிப்பீடம் அழிந்துபடும்!

இவரோ, நம்மைச் சிலர் என்று சொல்லிவிட்டு உளறுகிறார், மன்னிக்கவேண்டும், குளறுகிறார்!

நாம் பலர், அவர்கள் சிலர் ஆகவேதான், வடநாட்டாதிக்கமே, வளைந்து குனிந்து நம்மைப்பற்றி விசாரிக்கும் நிலை பிறந்திருக்கிறது!

இந்நிலை வளரும்-அப்பொழுது நாம் மிகப்பலராவோம், அவர்கள் மிகச்சிலராவர், பிறவோ எவருமிலர் என்ற நிலை பிறக்கும்!

(திராவிடநாடு 29.7.51)