அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இலட்சார்ச்சனை!
கேசவாய நம! கோவிந்தாய நம! . . . ஸ்ரீ வைகுண்டாய நமஹ! ஏன், ஓய் சிங்கு பட்டரே ஆகட்டுமே காரியம் என்று அர்ச்சகர்கள் பேச, பக்தகோடிகள் தரிசனத்துக்கா ஒருவரை ஒருவர் தள்ள, பஜனைக் கோஷ்டிகள் பாட, பட்டுபபுடவைகள் நடமாட, வாலிபக் கண்கள் தாண்டவமாட, ரசமான காட்சி, இன்று ஸ்ரீரங்கத்தில் நடக்கிறது. இந்த வைபவத்தைக் கண்டு, தங்கர், படுக்கைவிட்டு எழுந்திரார். அங்ஙனம் எழுந்திருப்பது சினிமாவில்! வையகத்தில் நடப்பது வேறு!! உண்மையை உரைத்தால் உறுமும பேர்வழிகள், நாம், நிந்தனை செய்வதாகக் கூறுவர். சிந்தனைக்கு விடுகிறோம்.

நம் தேசத்திற்கு இதர தேத்தவர்களால் ஆபத்துக்கள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லா ஷேத்திரங்களையும், நம்மையும் எந்த விதமான ஆபத்துக்களும் வர ஒட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, ஸ்ரீரங்கஷேத்திரத்தில் ஸ்ரீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29ந்தேதி ஆரம்பித்து பங்குனி 2ந்தேதி (15.03.42) முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்படிருக்கிறது என்ற அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது.

இந்த இலட்சார்ச்சனை மூலம் சங்கராதராலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும், ரகங்களுக்கும் இலாபந்தான்! ஆனால் நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி?

ராபர்ட் கிளைவ் வந்தகாலத்திலே, இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், நடத்தினோமே, கண்டதென்ன! கிளைவின் கல்லறைமீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! அந்த பிரிட்டிஷ் வல்லரரை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது, அர்ச்சனைகளின் பலனாலா? யாயோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள், பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

ரங்கூன் பிடிபட்டதா? சரி! படைகளை, பசீன் பிரதேசத்துக்கு அனுப்பு

படேவியாவைப் பிடித்தாகிவிட்டதா? பாண்டியாங்கை ஒரு கை பார்க்கட்டும் படைகள்

நியுகினி மீது படைகளை ஏவு! அந்தமானைத் தாக்கு! ஐராவதி நதி தீரத்தை அடக்கு! இது ஜப்பான் செய்து கொண்டிருக்கும் இலட்சார்ச்சனை!

சோடசோபசாரம் சமர்ப்பயாமி! என்று இங்கு இன்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். சப்மெரைன், விமானம், தளவாடம் இவைகளை ஜப்பான் தனது சேனைகளுக்கு சமர்ப்பித்தவண்ணம் இருக்கிறது. பொன்னம், பொருளும், நேரமும, நினைப்பும், போருக்குச் செலவிடவேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே, வெண்பொங்கலும், சித்ரான்னமும உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி, மக்களின் பணத்தையும் நேரத்தையும் பாழக்குகிறதே, இதை என்னென்பது!

ஐராவதி நதி முகத்துவாரத்தை முற்றுகையிட்டுக் கடாரம் என்று அக்காலத்தில் அழைக்கப்ட்டு வந்த பார்மாவை வென்று, அதைத் தனது சாம்ராச்சியத்தில் ஓர் அங்கமாக்கிக் கொண்ட தமிழ் மன்னர் வாழ்ந்த தமிழகத்தில் நாம் இருக்கிறோம். இந்த வீரச்செயல்பற்றி உள்ள வரலாறுகள், சிவனால் நள்ளிரவில் நந்திக்குக் கூறி நந்தி நாரதருக்குக் கூறி, நாரதர் நரி முக ரிஷிக்குக் கூறி, அவர் அதனை ஏட்டில் எழுதிப் பர்ணசாலையில் வைத்ததை அந்தக் கோத்திரத்தில் அவதரித்த அர்த்தநாருசுர சர்மா புத்தக ரூபமாக வெளியிட்ட புராணத்தில் காணப்படுபவையல்ல! சரித்திரம்! ஆராய்ச்சி! அறிவுடையோர் மறுக்கொணா அக்கால நிகழ்ச்சிகள்.

கி.பி.1013 முதல் 1044 வரை அரசோச்சிய இராஜேந்திர சோலுன் அடைந்த வெற்றிகளைச் சரித ஆராய்ச்சிக்காரர் கூறுவர். அத்தகைய தமிழர், வீடிழந்து வீதியில் திரிகின்றனர், வேற்றூர் சென்றனர், அங்கும் மாற்றான் மருட்ட, காடுமறை கடந்து, எலும்புந் தோலுமாக இங்கு வந்து கொண்டுள்ளனர். நொந்தோம், இங்கு வந்தோம் என்று அவர்கள் கூறி முடிக்கா முன்னம் இங்கு வந்தோம் என்று எதிரியின் படைகள் எக்காளமிடும்போல் தோன்றுகிறது. என் செய்வது? எதை எண்ணி விம்முவது? நாட்டிலே ஒற்றுமை கானோமே என்பதை எண்ணியா? நாடாள வந்த ஆங்கிலேயர் தக்கார் தகவிலர் என்பதைத் தேரிந்துகொள்ளாது பேயினரே என்பதை எண்ணியா? சோர்வும் சோகமும், பிணக்கும் தாண்டவமாடுவதை எண்ணியா? எதை எண்ணுவது, எதை மறப்பது? என்ன எண்ணி, மன உறுதி பெறுவது. முல்லைச் சிரப்பால் முப்புரமெரித்தார் முக்கண்ணனால், அவரிருக்க நமக்கென்ன பயம் என்று எண்ணி உறுதி பெறுவதா?

ஜப்பான் பெற்றுவரும் வெற்றிகள், ராணுவத் தலைவர்களையும் ராசதந்திரிகளையும் திணற வைக்கிறது, மக்களைத் தத்தளிக்கச் செய்கிறது. பிரதேசங்கள் பல பிடிப்பட்டனவென்று நாம் மனமுடையவில்லை. பிடிப்பட்டவை மீட்கப்படக்கூடும். ஆனால் நேசநாடுகள் அடைந்த தோல்விகளால், தகுதியான தளங்கள் தகர்ந்துவிட்டனவே அது குறித்தே நாம் கவலைப்படுகிறோம்.

ஜப்பானிய வெடிகுண்டு வீச்சுக்குப் பன்முறை ஆளான மார்ஸ்பீ துறைமுகத்தை நோக்கி ஜப்பானியக் கப்பல் கூட்டம் போகிறேதாம். மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் கடுமையாகக் குண்டுவீசிவிட்டு, இரண்டு வராங்களில், ஜப்பான் ஆஸ்திரேலியாவைத் தாக்குமென்ற ரால்ப் ஜழர்டன் கூறுகிறார். ஒரே சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா, இரண்டையும் தாக்க, ஜப்பானியருக்குப் பலம் இருக்கிறதென்று ஹாரோல்டு காட்டு என்பவர் தெரிவிக்கிறார். சீனப் பிரசார மந்திரியான டாக்டர் வாங் நேசநாடுகள் தளங்கள் பல இழந்துவிட்டன வாகைபால், இனி, மேலபர்மா, கிழக்கிந்தியா, தென் மேற்கு சீனா, ஆஸ்திரேலியா ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வட்டாரத்தைத் தளமாகக் கொண்டு, எதிரியைத் தாக்கவேண்டுமென்று யோசனை கூறுகிறார்.

பிரிட்டிஷ் படைகள் போரிட்டன இராணுவ இலக்குகளை அழிததன - பிறகு பின் வாங்கி வேறிடம் சென்று அணிவகுத்துள்ளன - என்ற மாமூல் மறைதொழி வேண்டும். உடைந்த உள்ளம், மிகவும் ஆபத்தானது. மக்களின் உள்ளத்தை இனியும் உடைய வைக்காதிருக்கவும், உளறுவாயர்களை ஊமைகளாக்கவும் வேண்டும். அது, சீன அதிகாரி கூறியபடி, முன்னேறித் தாக்குவதால் தான் முடியும். அதனையும் விரைவினில் செய்தல் வேண்டும்.

மாட்ரிடில் உள்ள ஜப்பானிய ராஜ தந்திரிகள், பசிபிக் போர், ஏப்ரல் மத்திக்குள் முடிந்துவிடுமென்றம் பிறகு ரஷியாவைத் தாக்க நேரம் கிடைக்குமென்றும் கூறினராம். விரைவில், ஜப்பான், ரஷியா மீது பாயும் என்று ஏற்படுகிதன அங்காரா ரேடியோ கூறுகிறது.

மஞ்சூரிய பகுதியில், ஜப்பான், படைகளை ஏற்கனவே குவித்து வைத்திருக்கிறது.

வசந்தகாலம் பிறந்ததும், நாஜிப்படைகள் ஒரு புறமும், ஜப்பான் படைகள் மற்றோர் புறமும் ரஜியாவைத் தாக்கக்கூடும் என்பதைப் பல நிபுணர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

மலாய், ஜாவா, சிங்கப்பூர், இரங்கூன் ஆகியவை இனி எதிரிக்குத் தளங்களாகும். இவ்விடங்களில் இருந்துகொண்டு, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு இடங்களில் ஏதாவதொன்த் தாக்க முடியும், இரண்டையும் ஏககாலத்திலும் தாக்க முற்படவுங்கூடும். இலங்கைமீது பாய்ந்து, அங்குள்ள திரிகோணமலையைத் தளமாகக்கொண்டு தமிழகத்தின்மீது தாவக்கூடும்!

பேராசிரியர் புரோடாக்ஸீ, இதுவரை உலகு கண்டறியாத உக்கிரமான போர், வசந்தகாலம் பிறந்ததும், ஆரம்பமாகப் போகிறது என்று கூறுகிறார்.

வசந்தகாலம், வசீகரமான பெயர்! ஆனால் இந்த வசந்தத்தின் போது, தடாகத்தின் அல்லியைத் தொட்டு வண்டு முத்தமிடுவதைக் காண்பதற்கில்லை. எங்கும் இருள்! எப்பக்கத்திலும் வேட்டுச் சத்தம்! எந்த இடத்திலும் இரத்தம்! இந்த வசந்தகாலம், கழுகுக்கும் நரிக்கும் வேட்டைக்காலம் ஆகுமென்று கூறுகின்றனர்.

இந்தப் பயங்கரமான நிலைமையில், இங்கோ, தேரும திருவிழாவும் ஆடலும் பாடலும், விருந்தும் வேட்டையும், கட்சிப் பூசலும் கசடர் ஏசலும், கொச்சைக் கருத்தினரின் குளறலும், ஓயக்காணோம்.

இவை நீங்கி, எதிரிவரின், எதிர்த்து நிற்கும் வகையான புதுமுறுக்கு நாட்டு மக்களிடம் தோன்ற வேண்டும். நேரமும் செல்வமும், திரண்டு போர் முனைக்குப் பயன்படும் பிதமான உதவிகள் உருவாகத் திரளும் வகை ஏற்படவேண்டும். இல்லையேல், ஒன்று ஊராள வேண்டுமென்று உரக்கக் கூறுவோரின் குரல் அழு குரலாக மாறுமோ, அன்றி அன்றொரு நாள் என்ற அட்டவணைக்குச் சேருமோ நாமறியோம். உடலுக்குள் கிருமி, கருவிகளை அரித்துக் கொண்டிருக்கையில், உயிர் மங்கிக் கொண்டிருக்கையில், உணராது, உல்லாசமாக உலவிக்கொண்டிருக்கும் நோயாளிகள் மருத்துவரிடம் போகும் வழியிலே மரித்ததுண்டு. நாட்டுக்கு ஆபத்து எவ்வளவு வந்துள்ளது என்பதை உணராமல், இலட்சார்சனை, இரகுராம பஜனை, சுயராச்ய போதனை ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் இங்குள்ளவர்கள். நாட்டை வேட்டினின்றும் முதலில் முட்கட்டும, பின்ர், நாடாள நான், நீ என்ற போட்டிக்கு வரட்டும, என்று கூறுவோம். எல்லாம் எமக்கே, எவர்க்கும் மேலோர் யாங்களே என்றுரைத்துக்கொண்டு காங்கிரசார், ஆட்சிப்பீடத்தில் அமரவேண்டி, அரசியல் சூதாட்டமாடுவதைக் கண்டு கவலைப்பட்டோ சலித்தோ, கண்துடைக்கவேண்டுமென்றோ பிரிட்டிஷ்காரர், புதுமுறை வகுக்கப் புகந்தால், குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதைபோலாகும். ஆகவே, நாட்டிலுள்ள கட்சியினரின் ஏகோபித்த ஆதரவி பெறத்தக்க விதமான அரசியல் மாற்றங்களைச் செய்தலே அறிவுடைமை, அதனைவிடுத்து எவர் மனங்கோணிலென்ன, இரைச்சலிடுவோருக்கு இரண்டொன்று தருவோம் என்ற பிரிட்டிஷ் ஆட்சி எண்ணுமாயின், அது நாட்டிலே கொந்தளிப்பை உண்டாக்கும். நாடு இன்றுள்ள நிலையில் கொந்தளிப்பு கூடாது. யுத்த ஆதரவு முயற்சியை வலுப்படுத்தும் வகையும் அதுவல்ல, ஆகவே சர்ச்சில் கூறுவதுபோல் இங்குவரும் சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ், நாட்டு நிலையை நன்குண்ர்ந்து நல்லதோர் திட்டம், நாட்டிலுள்ள கட்சிகளின் ஆதரவைப் பெறக்கூடிய முறையில் வழங்கப்படும் என்பதை விளக்கி உரைப்பார் என்று நம்புகிறோம்.

நாட்டுக் இன்று, ஒற்றுமை, ஒற்றுமை என்ற இலட்சார்ச்சனை தவிர வேறொன்றும் தேவையில்லை. அதனை மக்கள் ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும, இன்றே செய்தல் வேண்டும். ரங்கார்ச்சனையோ, கிரிப்சார்ச்சனையோ பலிக்காது.

(திராவிடநாடு - 15.03.1942)