அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கிந்தனார்!

கதை கிதையன்று! கட்டுரை கிட்டுரையுமன்று! காலட்சேபம் சார்! சத்கதா காலட்சேபம்! ஆமாம், நாகர் கோயிலை சுடலை கிருஷ்ணபாகவதாளின் அதிரசமிகு அலங்கிருத அபிநய நவயுகக் காலட்சேபம்; உடுமலை ஈந்த உருவினில் மெலிந்த நகைச்சுவை. நாராயணக் கவியில், சிருஷ்டி, ஜீவன்தந்து, நடமாட விடுபவர் நமது என்.எஸ். கிருஷ்ணன். கிந்தனாரைச் சந்தித்தேன், சென்ற கிழமை, தஞ்சை நகரசபைத் தலைவராகத் தோழர் அருளானந்தசாமி நாடார் அவர்களும், உபதலைவராகத் தோழர் நாஜுதீன் அவர்களும், தேர்ந்தெடுத்ததைப் பாராட்டி, அன்னாருக்கு மங்கள கானசபையார் 5.8.1943 மாலை ஒரு தேநீர் விருந்து நடத்தியபோது, தானம், இராக, பாவம் புடை சூழ, பக்கவாத்யக்காரர் பராக்குக்கூற, பிரமுகர் ஆயிரவர் முன்னிலையில், கிந்தனார் காட்சி தந்தார் மாட்சிமையுடன்.

கதாரம்பத்திலேயே, கடகடவென ஏதேதோ? கூறுகிறீரே, விஷயமென்ன விளங்கக்கூறும். காமிக் ஆக்டர் என்.எஸ். கிருஷ்ணனைப்பற்றியா கூறுகிறீர். தமிழகத்துக்குத்தான், தாங்கொணா வயிற்றுவலியைத் தந்து வருகிறாரே, அந்த நகைச்சுவை அரசர்; கிந்தனார் என்பது என்ன, அவருடைய புதிய படமா? என்று படபடத்துக் கேளாதீர் தோழர்களே! கிந்தனார்படமன்று! வெறும் பாட்டன்று! பாகவதரின் காலட்சேபம்! கிந்தனார், நமக்கெல்லாம் தெரியாதவரன்று, அடிக்கடி அந்தப் பெயரை உச்சரித்திருக்கிறோம். ஆனால், மறந்துவிட்டோம், நாம் இனி என்றென்றும் மறக்கமுடியாதபடி, கிந்தனாரைத் தமிழகத்திலே தோழர் என்.எஸ். கிருஷ்ணன், அழைத்துவந்து அறிமுகப்படுத்தி விட்டார்.

காமிக் என்றால், முன்பெல்லாம், கால் ஒடிந்து, கன்னம் குழிவிழுந்து, தொந்தி சரிந்து, பல்வெளிவந்து, பட்டை நாமத்துடன், உச்சிக்குடுமியில் பூ கூத்தாட, புடவையை வேஷ்டியாகக் கட்டிக்கொண்டு, பொத்தல் குடை பிடித்துக் கத்திக்கூத்தாடும், கோணங்கிச்சேட்டை என்று பெயர்! அசாமியின் அவலட்சணமும், அஷ்டவக்கிரமும், ஆபாசப் பேச்சும், குரங்காட்டமுமே, காமிக் ஆக்டருக்குத் தேவையான விருதுகளாகக் கருதப்பட்ட காலம் ஒன்றுண்டு. இன்றும் சிலர் இந்தப் பட்டியில் சேர்த்திடும் நிலையில் உள்ளனர், விட்ட குறை தொட்ட குறையால்! ராஜபார்ட் என்றால், கழுத்தளவு தொங்கும் கால் கேசம், காம்போதி பைரவி ஆலாபரணம், இருக்க வேண்டும். அதுபோலவே அயன் ஸ்திரிபார்ட்டுக்கும் சில குறிப்பிட்ட அம்சங்கள் இருக்கவேண்டும், கானம் குறைந்திருந்தால், கழுத்தும் இடையும் கொஞ்சம் “வெட்டு வித்தை” தெரிந்து கொண்டிருக்க வேண்டும், கண் சுழற்றவும், மங்கின மேனிக்கு முலாமிடவும் பாக்கமிருந்துவிட்டால் போதும்! அதைப்போலவே, காமிக் ஆக்டர் என்றால், கண்றாவிக் காட்சியாக இருக்கவேண்டும்; கோணங்கிச் சேட்டைகள் செய்யவேண்டும்; திம்மாச்சாரியாக இருக்க வேண்டும்; குச்சுக்காரியின் அகராதியும், குடிகாரனின் குளறலும், குரங்குச் சேட்டையும், இருக்கவேண்டும். காலுக்குப் பிடிக்காத நிஜார், அணிந்து, ஆளைமறைக்கும் சட்டை போட்டுக்கொண்டு ஆபாசமாக இருக்கவேண்டும், அதற்குத்தான் காமிக் என்ற பெயர் முன்பு!
இந்த நாடக மேடை நாராசம், காமிக் என்ற பெயருடன் காட்சி தந்த, கருத்தைக் கெடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் அறிவர்.

ஏறி இறங்கவேணும்
ஏலேலோ பொன்னுத்தாயி
என்னை இன்னும் தடுக்காதே
சொன்னேனே சின்னத்தாயி.

என்று காமிக் ஆக்டர் பாடுவார், ஒரு காமிக் அம்மை முன்பு! கொட்டகையிலே சிரிப்பும் சீட்டியும், பலேவும் தமாஷும், பலமாகத்தான் இருக்கும். கலை கொலை செய்யப்படுவது கண்டு கண்ணீர் விடுபவர் வெகு சிலரே இருப்பர். காமிக் என்ற பெயரால், காம வெறி ஊட்டப்படும். தென்னை மரமேறி இளநீர் பறிக்கப்போகும் புருஷனை; கீழே விழுந்துவிடுவாய் என்ற கூறி மனைவி தடுக்கிறாள், அதற்குத்தான், ஏறி இறங்கவேணும் என்ற பாட்டு, இதனுடைய கருப்பொருள் கண்ட கண்ணியர்களே சீட்டி அடித்துச் சிரிப்பர். இவ்விதமான பாடல் இல்லாவிட்டால், காமிக் என்ற பட்டம், கிடைக்காது, அது ஒரு காலம்! கலையின் கோலம் இப்படி இருந்தது, ஆனால் இன்றோ!
* * *

நகைச்சுவை, என்பது நவரசங்களிலே ஒன்று என்பது மட்டுமன்று, நடிப்புத்திறனுக்கு அத்தாட்சியே அதுதான்; அதிலே, காட்சியிலே கோமாளித்தனம், பேச்சிலே ஆபாசம், தேவையில்லை; நிலைமையை விளக்கும் நடிப்பு; அதிலே நாகரிகம்! நாகரிகம் கலந்த நகைச்சுவை, என்ற முறையை இன்று, தோழர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புரட்சிகரமான பணியினால், கலை உலகு பெற்றுவிட்டது. இந்த அரும்பணியாற்றியவரைக் கலையுலகு என்றும் மறவாது! போயும் போயும் பபூன் வேஷமா! என்ற புன்மொழி மாறிக் கிருஷ்ணன் மதுரம் இருக்கும்போது படத்துக்கு என்ன குறைவு உண்டு! என்று கூறிடும் அளவுக்கு, நகைச்சுவை நடிப்பு புது யோக்யதை, உன்னத நிலை பெற்றுவிட்டது. குளறிக் குதித்துக் குடித்துப்புரளும் கோணியோ, கோணிப்பையில் கட்டுண்டு சாணிக்குட்டையில் வீழ்ந்து, கதறும் கோரமோ, இன்று காமிக்கன்று! பார்க்க நேர்த்தியாய், பாகுமொழியும், பாவம் பொருந்திய நடையும், பேச்சிலே நகைததும்பும் சுவையும், இன்று நாடக மேடைக்கும், திரை உலகுக்கும், தோழர் என்.எஸ். கிருஷ்ணனால், வழங்கப்பட்டது.
தானோர் சிறந்த நடிகர் என்ற பெயரெடுப்பது சிரமமன்று! ஆனால், தம் காலத்திலே, தமது நடிப்பினால், நடிப்புக்கலையிலே, புதியதோர் அம்சத்தைப் பொலிவுறச் செய்தவர் என்ற பெருமை பெறுவது மிகச்சிரமமான காரியம்; அதனைச் சாதித்தவர், நமது தோழர் என்.எஸ். கிருஷ்ணன், மங்காப்புகழ்பெற்ற நகைச்சுவை மன்னர், மற்றுமோர் அரிய வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றி முழக்கம்தான் கிந்தனார்!

கிந்தனார், என்றதும், இது என்னப்பா புதிதாக இருக்கே, என்று யாரும் கேட்பார்களல்லவா? அதை அறிந்தே, தோழர் என்.எஸ். கிருஷ்ணன் கதாரம்பத்திலேயே விளக்கமாகக் கூறிவிட்டார். நீங்கள் இதுவரை நந்தனார் காலட்சேபத்தைக் கேட்டிருப்பீர்கள், கிந்தனார், புதியதாக இருக்கிறதே, இது நந்தனாரைக் கிண்டல் செய்யவோ, என்று எண்ணுவீர்கள். அப்படியன்று விஷயம்! நந்தனார் பக்தியால் முக்தி பெற்றார், கிந்தனார் படிப்பினால் சக்தி பெற்றார். இவரும் நந்தனாரைப் போலவே, தீண்டாத ஜாதி, அதுமட்டுமன்று, நந்தனார் பிறந்த அதே ஆதனூரில் இவரும் பிறந்தார் - என்று நகைச்சுவை மன்னர் முன்னுரை மொழிந்தார், பின்னர் பொன்னுரை நிகழ்த்தினார்.

கீர்த்தனாரம்பத்திலே, காலட்சேபம் புரியும் பாகவதர்கள், பலபீமா பலராமா, என்ற நாமாவளி பூஜிப்பார்களே, அது உண்டோ, இதில்! திவ்யமாக உண்டு. ஆனால், வெடித்தது, சார், படார் என்று! சபை முழுதும் சிரிப்பு!

புருவங்களிலே ஜவ்வாது, மார்பிலே சந்தனம், பஞ்சகச்சம், பட்டைச் சரிகை உத்தரியம், பாகவதக் கோலம், ஏ.ஒன்.

அதுமட்டுமா, கையிலே சப்ளா கட்டை, அதைத் தட்டிய நேர்த்தியிருக்கிறதே, பரம்பரைப் பாகவதர்கள் பக்கத்திலிருந்து பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும், பலப்பல வருடங்களாக, பாகவதராகவே இருந்தவர்போல் காணப்பட்டார்.

படார்! ஆமாம், ஒரே சத்தம் அந்த ஒரு சொல், என்.எஸ். கிருஷ்ணன் உச்சரித்தது உடனே ஒரு புன்சிரிப்புடன், விளக்கமுரைத்தார். படார் என்றதும், ஏதோ வெடிக்கிறது என்று எண்ணுகிறீர்களோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. படார், என்றால், விடப்படார், கைவிடப்படார், நம்பினோர் கைவிடப்படார், - கடவுளை நம்பினோர் கைவிடப்பார் - இதுதான் படார் என்ற பதத்தின் பொருள், என்றால் வயிறுவலிக்கும் நேரம்! மேலும் சிரிப்பூட்டினார், இது சடார் என்று புரியும் விஷயம் பாருங்கோ, அதனால்தான், படார் என்று முடித்திருக்கிறார்கள், என்று கூறினார், கொட்டகையில் சிரிப்புக் கூத்தாடிற்று!!

கடவுள், என்றால், பலர் பலப்பல கூறுவார்கள்; அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் என்று சொல்வார்கள், நான், அன்பு தான் கடவுள் என்று கொள்கிறேன். அன்பு என்பது உண்டு. இதோ நீங்களெல்லோரும் என்னிடம் அன்பு கொண்டிருப்பதால்தானே இங்கு வந்தீர்கள்! ஆகவே நீங்களே, எனக்குக் கடவுள். ஆகவே, நான் செய்ய இருக்கும் காலாட்சேபத்திலே குற்றம் இருப்பின், மன்னிக்கவும், என்று அவையடக்க முரைத்தார், நகைப்பை அடக்க முடியாது, மன்றத்தார் பட்டபாடு, சொல்லி முடியாது.

கிந்தனார் - உங்களுக்குத் தெரிந்தவர்தான் - பல தடவை நீங்களே அந்தப் பெயரைக் கூறியிருப்பீர்கள், மறந்துவிட்டீர்கள், என்று பாகவதரவாள் கூறியபோது, நான் மலைத்துப் போனேன், ஆனால் அந்த உரையை அவர் விளக்கியபிறகோ, சிரிப்பால் களைத்துப்போனேன்.

சினிமா நடக்கும்போது, நந்தனாரோ - கிந்தனாரோ, நடக்குதாமே, போய்ப்பார்ப்போம் வா என்று நீங்கள் ஒருவரை ஒருவர் அழைத்ததில்லையா, அப்போது உங்களையும் அறியாமல், கிந்தனார் பெயரைக் கூறினீர்கள்; நினைவுக்கு வருகிறதா, என்று கேட்டார்; ஆமாம், ஆமாம் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிரங்கள் அசைந்து கூறின. பிறகு, கியின் விசேஷத்தை! விளக்கினார், விமரிசையான விருந்து. பழைய காலத்திலிருந்தே கீ என்ற எழுத்து, விசேஷமானது, அதிலே ஒரு தனிச்சுவை, தனி நயம் தனியான பண்பு, தனியான பணிவு, உண்டு! ஏதாவது இட்லி கிட்லி இருந்தா கொடுங்கோ, கொஞ்சம் காபி கீபி இருந்தால் தாருங்கோ, ஏதாவது வேலை கீலே இல்லிங்களா, என்று கீ என்ற எழுத்து, வருவது சர்வ சாதாரணம், அதிலே உள்ள நயமே அலாதி என்றார். உண்மைதானே! கடவுளாவது கிடவுளாவது என்பதிலிருந்து நந்தனாரும் கிந்தனாரும் என்பது ஈறாக எதிலே கண்டாலும் கீ ஒரு தனிக் கவர்ச்சியுடையதுதான்! ஆனால் அதை அவர் சொன்ன பிறகுதான் ரசிக்க முடிந்தது, பட்டை தீட்டிய பிறகுதானே வைரம் ஜொலிக்கும், அதுபோலவே, பண்பாடு என்ற சாணைக்கல்லிலே, அந்தக் கலைவாணர், கி என்ற சர்வசாதாரண எழுத்தை வைத்து, தீட்டிய பிறகுதான், அது களிப்புக் கதிருடன் காட்சியளித்தது. விளக்கத்துடன், ஒரு சிறு சம்பவமும் கூறினார், கீயின் பெருமைக்கு ஆதாரமாக.

முத்தமிழ்க்கலா வித்வான் டி.கே.எஸ். சகோதரர்களின் எம்.எஸ்.பி.எஸ். சபையின் நாடகங்களைக்கண்டு ரசித்திராதத் தமிழ்த் தோழர்கள் மிகச் சிலரே! திருச்சியும் கரூரும், ஈரோடும் சேலமும், கோவை பாலக்காடு குடந்தை முதலிய பல்வேறு தமிழக நகர்களிலே, டி.கே.எஸ். சகோதரர்களின் கலையழகு மிளிரும் நாடகங்களைக் கண்டு களித்தவர் ஆயிரமாயிரம் பேர் உண்டு; அவர்கள் அறிவார்களோ, யாதோ, நானறியேன், நமது என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள், அந்த டி.கே.எஸ். சகோதரர்களின் சபா நடிகர் என்ற விஷயத்தை! இதனை அன்று தஞ்சையிலே, அவர் கூறும்போது, பெருமிதமும் பூரிப்பும் ஒளிவிடக் கண்டேன். அந்தச் சபை நடிகராக என்.எஸ்.கே. இருந்த சமயம் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத்தான், கீயின் பெருமையை உணர்த்த அவர் உரைத்தார்.
* * *

சபையிலே காலைச் சிற்றுண்டிக்கு ஒரு காலம் குறிப்பிடப் பட்டிருந்ததாம். அந்த நேரம் தவறிவந்தால், அவருக்கு கிடைக்காதாம். ஒருநாள் என்.எஸ்.கே.யும் மற்றோர் நடிகருமாக, ஆற்றுக்கு குளிக்கச்சென்று, நேரம் கழித்து திரும்பி, நேராகச் சமையலறைக்குச் சென்று, சட்டதிட்டமாகச் சிற்றுண்டி கேட்க, அகப்பையார், ஏற இறங்க பார்த்து, “இல்லை” என்றாராம் என்.எஸ்.கேயுடனிருந்த நடிகருக்குக் கோபம் பிறந்து, இல்லையா - அப்படியா - கொடுமய்யா - என்று கூவினாராம். அகப்பையார், அது இரவு செய்யவேண்டிய நடிப்பு, இப்போது “இல்லை” என்பதுதான் நீர் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பு, என்று அந்த நபருக்குத் தீர்ப்பு அளித்துவிட்டாராம். நமது என்.எஸ்.கே. நடிகர் மட்டுமல்லவே உலகு உணர்ந்தவர்! எனவே அவர் சமையற்காரரை நோக்கி ‘இரண்டு இட்லி கிட்லி இருந்தா கொடுங்களேன்’ என்று வினயமாகக் கேட்டாராம். அந்த கியின் நயத்திலே சொக்கிய சமையற்காரர், இட்லியுடன் காபியும் கொடுத்தாராம்! இச் சம்பவத்தை கூறி, இதிலிருந்தே கியின் அருமை பெருமை உணருமின், என்று முடித்தார், அழகாக.

நந்தனார் காலட்சேபத்திலே சேரியின் வர்ணனையும், கூரை வீட்டிலே, சுரை படர்ந்திருப்பதும், மற்றும் பலவும் வர்ணிக்கப்படும். கிந்தனாரில், கிராமப் பள்ளிக்கூடம், வர்ணிக்கப்படுகிறது. நந்தனார் கீர்த்தனை மெட்டிலே! ஆஹா! அந்தப்பாட்டின் பண்பு பாமரருக்குந் தெரியும்படி பாடினாரே, அது அவராலன்றிப் பிறரால் முடியாதென்றே சொல்லலாம். கூரை பிரிந்திருப்பதும், சுவர் சரிந்திருப்பதும், சன்னலைக் கரையான் தின்றிருப்பதும், பாட்டாகக் கூறப்பட்ட உடனே நம்முன் படம்போல் தென்படலாயிற்று. உண்மையிலேயே, நமது கிராமப் பள்ளிகளின் சீர்கேடான நிலைமையை நாம் சிந்திப்பதில்லை. கிந்தனார் காலட்சேபத்தை, கிராம ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும், நிச்சயம் ஒரு முறையேனும் கேட்கவேண்டும். இன்புறவன்று, இந்த நிலையிலே கிராமப்பள்ளிகள் இருக்கலாமா, என்று சிந்தித்து ஆவன செய்ய.

நந்தனுக்கு முக்திப்பித்தம், ஆகவே சித்தம் சிதம்பரத்திலே இலயித்தது. கிந்தனாருக்கோ கல்விமீது நாட்டம். ஆகவே உயர்தரக் கல்வி பயிலச் சென்னை செல்லவேண்டுமென்பது அவன் விருப்பம். நாளை போகாமல் இருப்பேனா, என்று நந்தன் பாடினான், கிந்தனோ, நான்சென்ஸ் கிராமத்திலே இருப்பேனோ என்று பாடுகிறான். சேரியினரைத் திருப்புன்கூர் அழைத்துச்சென்று நந்தன் சிவதரிசனம் காட்டுவதுபோலக் கிந்தன, திருப்புன்கூர்த் தோழர்களை அழைத்துச் சென்று, தரிசனம் காட்டுகிறான் எதை? தண்டவாளத்தின் மீது தாண்டவமாடிடும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரசை!! சிவலோகநாதனை என்ற நந்தனார் கீர்த்தனை மெட்டிலே திருவேண்டிரம் எக்ஸ்பிரசை தரிசித்திடுவோம் வாரீர், என்று கிந்தன் பாடினானாம். பாடலை நீங்கள் பாகவதர் கிருஷ்ணனிடம் கேட்டு இன்புற முடியுமே தவிர, என் எழுத்திலே எங்ஙனம் அந்தச் சுவையைப் பெறமுடியும். மலைபோல மாடுபடுத்துக்கிடந்ததாமே திருப்புன்கூரிலே, அதுபோல, பிளாட்பாரம் போகவிடாது, டிக்கட் கலைக்டர் தடுத்தார், அதற்கும் நந்தன் கீர்த்தனை மெட்டிலேயே ஒரு பாட்டு.
சரி, வேடிக்கையான காலட்சேபம் என்று எண்ணுவீர்கள். வேடிக்கையுடன் இழைந்திருந்த புத்துலகக் கருத்தைக் கவனிக்க வேண்டுகிறேன். இரயிலில் நான் வாரத்தில் நாலுநாள் குறையாமல் செல்கிறேன். பிரதி தினமும் இரயிலிலேறுபவர்களும் உண்டு, ஆனால் நாம் யாராவது அந்த இரயிலின் பெருமையை எண்ணிப் பார்த்ததுண்டா, இல்லை. என்.எஸ்.கே. அன்று ஆற்றிய ரசமான காலட்சேபத்தின் போதுதான், இரயில் இவ்வளவு அருமை பெருமைக்கு இருப்பிடம் என்பது எனக்குத் தெரிந்தது. களிப்பாய் எல்லோரின் முகமும் மலர்ந்தது.

பெரிய பெரிய தலைவர்களெல்லாம் தீண்டாமை ஒழிய வேண்டும், ஜாதி பேதம் போகவேண்டும், சமரசம் உண்டாக வேண்டும் என்று பாடுபட்டும் செய்ய முடியாது திண்டாட, இலண்டனிலிருந்து வந்த இரயில், அது இந்தியாவிலே நுழைந்த நாளே, ஜாதி பேதத்தை ஒழித்துவிட்டது, வேதியரையும், பள்ளு பறையரையும் பேதமின்றிச் சுமந்து செல்கிறது, இரயிலே! ஜாதியை ஒழித்த ரயிலே! சமரசம் கொண்ட ரயிலே! நீ ஆண்டவனுக்குச் சமானம்! இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் ஆண்டவன் இரட்சகனாக இருக்கிறாரே அதுபோல நீ, டிக்கட் வாங்கினவன் வாங்காதவன் ஆகிய இருவரையும் ஏற்றிச் செல்கிறாய், உன் பெருமையே பெருமை என்பதாகத்தானே கிந்தன் இரயிலைத் துதித்துக் கொண்டாடினானாம்.

சில நாட்கள் சென்றபிறகு, கிந்தன், தன் தகப்பனிடம் முறையிடுகிறான், சென்னை செல்ல வேண்டுமென்று. அவர் சிரிக்கிறார், இதென்னடா பித்தமென்று. அப்போது, சிதம்பரத்தின் சீர்பற்றி நந்தன் பாடியதுபோலக் கிந்தன் சென்னையின் சீர்பற்றிப் பாடுகிறான். பிறகு, பள்ளி உபாத்தியாயரிடம் கிந்தன், அனுமதிகேட்க, அவர் நந்தனை மிரட்டிய வேதியர்போல் மிரட்டுகிறார் நாற்பது வேலி நிலத்தை உழுது பயிரிடச்சொல்லி, உத்தரவிட்ட வேதியர்போல, கிந்தனுக்குப் பள்ளி உபாத்தியாயர், உனக்குக் கொடுத்திருக்கும் நாற்பது பாடல்களையும், பாடம் செய்துவிடு, பட்டணம் போகலாம் என்று கூறுகிறார். நந்தனுக்கு ரிஷப வாகனடர் இரவோடு இரவாக நாற்பது வேலிநிலமும் அறுவடைக்கு ஏற்றதாகும்படி அற்புத அருள் புரிகிறாரல்லவா, இட்ஙகே கிந்தனோ, புத்திக்கூர்மையால், 40 பாடலும் கற்றேன், 40 கீடலும் கற்றேன் என்று கூறினான். அது என்னடா, கீடல், என்று கிந்தனை, வாத்தியார் கேட்க, பாடலுக்கு பாடல் ஓர் கீடல் அமைத்துக் கூறுகிறான். கிந்தன், கீடலுக்கு இதோ ஒரு சாம்பிள்!

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும், கேடு கெட்ட மானிடரே கேளுங்கள், கூடுவிட்டு ஆவிதான் போயினபின், இங்கு யாரோ அனுபவிப்பார் - என்பதுதானே பாடல். இதற்குக் கீடல் என்ன தெரியுமோ ‘பாடுபட்டுத்தேடிப் பணத்தைப் புதைத்தால், கேடுவந்தால் தோண்டி எடுக்கலாம். கூடுவிட்டு ஆவிதான் போயினபின் குடும்பமே அனுபவிக்குந்தான்! இதுதான் கீடல். இதுபோலப் பாடலும் கீடலும் கலந்து ஒப்புவிக்கவே, பையன் போனால்போதுமென்று வாத்தி உத்தாரம் தருகிறார்.

இடையே, வாத்திக்கும் அவர் மனைவிக்கும், ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி ஒரு தர்க்கம் - பாடலாக! ஆனையைப் பிடித்திடுவான் ஆம்பளே, என்று ஆர்ப்பரிக்கும் வாத்திக்குப் பானையை பிடித்திடும் பத்தினித் தங்கம், அஞ்சு மூணும் அடுக்கா வைத்தாலும், சமையல் ஞானமே ஆணுக்குக் கிடையாது என்று சவுக்கடி தருகிறாள் அவர் மனைவி. சமையல் கட்டிலிருந்து தொடங்கி சாமிகள் வரையிலே போகிறது, அந்தச் சம்வாதச்சிந்து. சபாஷ்! என்று சிந்து கேட்டிடாச் செவிடரும், பேசமுடியா ஊமையரும் தவிர, பிறர் கூறியே தீர வேண்டும், அந்த ஆம்பளே, பொம்பளே, சம்வாதச் சிந்து கேட்டால்.

கிந்தனின் சென்னைப் பிரவேசமும் அங்கு அவன் காணும் காட்சிகளின் விளக்கமும் பஹுத் அச்சாதான். ஆனால் எல்லாவற்றையும்விட இது எடுத்தா ஒன்றரை அணா, அது எடுத்தால் அணா, 1 அணா, ஒன்றேகால் அணா, ஒரு அணா என்ற சைனாபஜார் தந்திர வியாபாரத்தை என்.எஸ்.கே. நடத்திக் காட்டுகிறாரே, அது முதல்தரம் என்பேன்.

இதுதானோ தில்லைத்தலம் என்று களித்துப் பாடினான், இதுதானே ஐஸ்கூல் என்று பாடுகிறான் கிந்தன். பெரிய கட்டடத்தைப் பார்த்து அங்கு காலேஜ் பிரின்சிபால் வருகிறார். கிந்தன் அவர் கால்களைக் கிட்டிபோட்டதுபோல் பிடித்துக் கொண்டு கோருகிறான். வரம் பெறுகிறான், படிக்கிறான். பட்டம் பெறுகிறான். ஸ்கூல் இன்ஸ்பெக்டராகி ஆதனூருக்கே பழைய பள்ளிக் கூடத்துக்கே இன்ஸ்பெக்ஷன் செய்ய வருகிறான், பள்ளி வாத்தியார், குட்டு தெரிந்த கிந்தன் இன்ஸ்பெக்டராக வருகிறான் கிராண்டு போய்விடுமோ என்று நடுக்கங்கொண்டு, பிளாட்பாரத்தில் கிந்தனுடைய பேட்டி கண்டு, தொழுது மன்னிப்புக் கேட்டு பெற்று, பிறகு மனைக்கு அழைத்துச் சென்று, ஹாலிலே நாற்காலியில் உட்காரச் செய்து, வெள்ளி டம்ளரில் காபி கொடுக்கிறார். கதவோரத்தில் “அம்மா” நின்று கொண்டு “அட கிந்தனா! ஆள் அடையாளமே தெரியலையே. காபி சாப்பிடுங்கோ” என்று குழைந்துகூற, கிந்தன் “கல்வி பேதத்தைக் கூண்டோடு போய்விட்டதே, இதன் சக்தியை தினமும் நமது தீண்டாத ஜாதி கொள்ளவில்லையே” என்று சோகித்து, தீண்டாதாரை முற்றுவிக்க “ஜோதி சங்கம்” அதிலே தீண்டாதாரைச் சேர்த்து தொண்டு புரிகிறான். இதுதான் கிந்தனார் காலட்சேபம், நமப் பார்வதி பதயே நமாவும், திருச்சிற்றம்பலம் ஆடிய பரதனே, ஆனந்தக்கூத்து என்பன போன்ற பழைய பசலி நீக்கி, படிப்புப் பக்குவம்தரும், குலத்தினால் இழிவு என்று குறை கூறுவதையும், கல்வியால் போக்க முடியும் என்ற புத்துலகக் கருத்து மிளிரும்படி அமைக்கப்பட்டிருக்கும் கிந்தனார் காலட்சேபம் இது.

ஜோதி சங்கம் அமைத்தார் என்ற புதுமைப் புனைந்துரையும் ஜாதிபேதத்தை, ரயில் ஒழித்தது என்ற சமரச உரையும் கேட்கும்போது, என் உள்ளம் குளிர்ந்ததுபோலவே, உங்கள் அனை வருக்கும் குளிரும். ஓரிடத்திலே என்.எஸ்.கே. கேட்கிறார், கிந்தன் கேட்டதாக. பிறவியால் ஜாதி பேதம் இல்லையே! யாரய்யா பிறக்கும்போது மார்பில் பூணூலும் நெற்றியிலே பூச்சும் வைத்துக்
கொண்டு பிறக்கிறார்கள்? என்று எத்தனை எத்தனை கல்வீச்சுகளுக்கிடையே ஜெனித்த அந்தச் சுயமரியாதைச் சொல், எவ்வளவு இனிமையாக நகைமுகத்துடன் வரவேற்கப்பட்டது என்பதைக் கண்டபோது, கிந்தனார், ஓர் சுயமரியாதை வீரனின் சோபிதக்காதை என்று கண்டுகொண்டேன், களித்தேன்.

கலை என்றால், பணம் சேர்க்கப் பாமரரின் பக்திப்பித்து, எனும் குட்டையிலே வீசவேண்டிய வலை என்று, கருதுவோரை நான் அவர்களின் புகழ் மலைபோல் உளது என்று கூறிச் சிலை எழுப்பினாலும் நாட்டு நிலையை மாற்றிட நாடி முறுக்கில்லா நடமாடும் உருவங்கள் என்று மதிப்பேனேயன்றி, கலை மூலம் மக்களுக்கு இதம்புரிவோர் என்று கொள்ள மாட்டேன். நண்பர், என்.எஸ்.கே. அந்தவிதமாக இன்றி, கலையின் மூலம், நாட்டு மக்களின் நிலையைத் திருத்தி அமைக்க, கிந்தனார் காலட்சேபத்தைக் கருவியாகக் கொண்டிருப்பது காண நான் களிக்கிறேன், அவரைப் பாராட்டுகிறேன், அவர் செய்யும் அரும்பணியினைத் தமிழகம் பயன்படுத்தி இன்புற வேண்டுகிறேன்.

கிந்தனார் காலட்சேபத்தைக் கேட்கத் தமிழகம் துடிக்கிறது. பல நகர்களிலிருந்து அழைப்புகள் குவிந்துள்ளன என்று கேள்வி. நண்பர் என்.எஸ்.கே. ஒவ்வோர் முக்கிய நகருக்கும் சென்றாக வேண்டும் என்பது என் வேண்டுகோள். அழஅழச் சொல்லியே அறிவூட்ட முடியும் என்று மூதுரை கூறுவர். சிரிக்கச் சிரிக்கக்கூறி, நாட்டைச் சீர்படுத்தும் சீரிய சக்தியைக் கொண்டுள்ள செந்தமிழ் வீரர், என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள், காலட்சேபத் துறையிலே, புரட்சி பூத்திடச் செய்துள்ளார், அதன் மணம், தமிழகம் முழுதும் பரவச்செய்வது அவர் கடமை என்பேன். காலட்சேபத்துக்கு முன்பு, என்.எஸ்.கே. அவர்களுக்கு, கிந்தனார் கதை அமைத்துக்கொடுத்த கவி, உடுமலை நாராயணன் அவர்களை நண்பர் ஒருவருக்கு என்.எஸ்.கே. அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அந்த நண்பர், “குருவிடம் மரியாதையிருக்கவேண்டியதுதானே” என்று சம்பிரதாயப் பேச்சாடினார், உடனே நகைச்சுவை அரசர் சாடினார், மரியாதையா? அது ஏய்க்கும் வித்தைதானே! அன்பு இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள், என்று என்.எஸ்.கே. அவர்கள் சொன்னபோது பேசியது, நானா, அவரா, என்ற சந்தேகம் எனக்கு உண்டாகிவிட்டது. ஏனெனில் நான் அதே கொள்கை உடையவன், பல தடவை அதுபற்றிப் பேசியும், எழுதியுமிருக்கிறேன. சுய மரியாதை அகராதி, அன்று சுடலை கிருஷ்ணன் சொன்ன அதே பொருளைத்தான் மரியாதை என்ற பதத்துக்கு கொண்டிருக்கிறது. எனவே, நான், இக்கட்டுரையில் அவர் பற்றித் தீட்டியிருப்பது அத்தனையும் அவரிடமும் அவருடைய கலைத்திறத்தினிடமும், அந்தத்திறம், தமிழருக்கு விருந்தாகவும், மருந்தாகவும் இருக்கும் அமைப்பினிடமும் நான் கொண்டுள்ள அன்பு காரணமாகவே என்பதைக் கூறாமலிருக்கலாகாது. வாழ்க கிருஷ்ணன்! வளம் பெறுக தமிழகம்!!

15.8.1943