அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காமராஜர் சிந்தும் கண்ணீர்!

அந்த மோகனப் புன்சிரிப்பிலே, அவரும் சொக்கினார். பத்தரை மாற்றப் பசும்பொன் மேனியனே! ஓற்றைத் துகிடுத்த ஒளிவிடு வடிவழகா! பற்று ஆற்றவனே! பவம் அறுத்திடுவோனே!! - என்று அவர் அர்ச்சித்தார், ஒருநாள் இருநாளல்ல - ஒய்வின்றி இருபது ஆண்டுகள்!!

தொழுது நின்றவரை, தூரத்திலிருந்து நாம் அழைத்து, “பக்திப் பரவசத்திலே மெத்தவும் உடுபட்ட அன்பரே! நீர்தொழும் தேவன், உமக்கு அருள்பாலிக்க மாட்டானே! பூசுரரின் பாசுரமே அந்தத் தேவனுக்குச் செந்தேன்! உன் மலரைவிட, அவர்கள் தரும் சருகு, அவருக்கு ஆனந்த மளிக்கும்! உன் பக்தியிலே, அவர் ஆனந்தமடைவதைவிட அவர்களின் சக்தியிலே, அவருக்கு அச்சம் அதிகமாயிற்றே! பக்தா! கால்கடுக்க ஆக்கோயிலை வலம்வருகிறாய். வாய்வலிக்க அந்தத் தேவனின் நாமத்தைப் பூஜிக்கிறாய்! பலன் என்ன, அந்தத் தேவன், ஆரிய சிருஷ்டி, ஆரிய வாழ்வுக்கு அப்பு அழுக்கு ஏற்படாதபடி பாதுகாப்புத் தேடுவதே, அந்தத் தேவனின் இலட்சியம்! அவருக்கு மூர்த்திகரம் தந்தவர்களும், ஆரியரே! ஆகவே, ஆரிய சேவாஸ்ர மத்திலே, அனுதினமும் தொழுதாலும் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்ற நிலையிலிருந்து, நாமார்க்குங் குடியல்லோம் நாதர்க்கன்றி, என்று பாடவோ, அந்தணர் ஏன்போர் அறவோர், ஆஅதிலார் அந்தணராகார் என்று கூறவோ, துணிந்தால், தேவன், துதித்து நிற்கும் உம்மையே தூக்கிக் கீழே வீசுவார். வேண்டாம் இந்த வீண் பூஜை! என்று எச்சரித்தபோது, பக்த காமராஜர், நம்மீது சீறி, ஏன் தேவன் பிழைபுரியான்! இவர் அவர் என்று பேதம் காட்டான். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பன்றோ அவர் என்று கூறினார். தொழுகையை விடவில்லை! தேவன், பக்தருடைய பூஜைக்கு மெச்சிப் பிரசன்னமாகி, வரம் தந்தார்! என்னவரம்? ஐ! வம்பர் கூட்டத்தலைவா! பிடிசாபம்! என்றார், பக்தர், தேவன் தந்த பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, கண்ணீர் சொரிகிறார்.

“கண்ணா!” என்று கதறினேன். காதகனோ, துகிலை உரிகிறான். கணவன்மாரோ கற்சிலைகளாயினர், நானோ துடித்தேன். கூப்பிடு தூரத்திலேதான், மாவீர்களான ஏன் மணாளர்கள் இருந்தனர். நானோ, கண்ணனை அழைத்தேன். கண்ணீர் பெருகிற்று, இடையின் ஆளவோ குறைந்துபட்டது, நிர்வாணமாகிவிடவேண்டும் சில நிமிடங்களில்!” என்று புராணப் பாஞ்சாலி பேசினாலும், கடைசியில், மானங் காப்பாற்றப் பட்டது, மணிவண்ணன் அருளால், துகில் வளர்ந்தது., அதனை உரித்த உலுத்தன் சோர்ந்துகீழே வீழ்ந்தான். கண்ணீர் பெருகிற்று. ஆனால் களிப்புப் பொங்கிற்று. கயவனின் கண்கள் இருண்டன, சாய்ந்தான்” என்று முடிப்பார் அது úôபால ஒவருக்கு ஒரு ஆம்மை என்ற முறை படிந்த புராணம் எழுதியவனும், துகில் உரியப்படவில்லை, கடைசியில் திரௌபதையின் மானங் காப்பாற்றப்பட்டது, என்றே முடித்தான்.

“கண்ணா!” என்று கதறியதும், கண்ணன் தோன்றி, காரிகையின் கண்ணீரையும் கண்டு, நன்று! நன்று! இந்த நீலிவேடம்! துகில்போயின் என்ன? திரௌபதே! நான் தந்த இயற்றைகத் துகிலைச் சாமான்யமென்றோ கருதினாய்! என்று கடிந்துரைத்திருப்பின், கண்ணீர் பெருவது நின்று போய், இரத்தமன்றோ பெருகி இருக்கும், காவலர் முன் மானபங்கம் செய்வதற்காகக் கூந்தலைப் பிடித்து இழுத்து வரப்பட்ட பராண திரௌபதிக்கு.

காமராஜர், காரிகை அல்லர், துகிலும் உரியப்படவில்லை, ஆனால் மக்கள் மன்றத்திலே நின்று கொண்டு, முறையிட்டுக் கொண்டிருந்த அந்த வீரனின், தன்மானம் ஒழிக்கப்பட்டது. காரிகையின் இடை மானங்காக்கக்தானே தன்மானம் போக்கப்படுவது, துகில் உரியப்படுவது போன்றதன்றோ! ஆச்சாரியாரின் படையால் தாக்கப்பட்டு, உண்மைக் காங்கிரஸ் ஊழியர்கள் நிர்மாணித்த ஆரணில் தங்கி, இனிநமக்குப் பயமில்லை என்று எண்ணிய காமராஜரின் கதி, பாஞ்சாலிக்கும் நடக்கவில்லை. ஆம்மையைக் கண்ணன் காப்பாற்றினார் - கணவன்மார்கள் கைவிட்டபோதிலும்! இங்கோ காமராஜரின் கண்கண்ட தெய்வம், 20 வருடமாகப் பக்தி விசுவாசத்துடன் அவர் பூஜித்துவந்த தேவன், அவரைக் கைவிட்டார் - கைவிட்டதுடன் இல்லையே - பலிபீடத்துக்குத் துரத்தினார். ஆச்சாரியாரின் அடங்காத பசிக்கு ஆசையாகச் செய்தார். கதறிய பாஞ்சாலி முன்கண்ணன் தோன்றி, விரைவிலே துகில் உரியப்படுவதற்கான வழியைத் துச்சாதனனுக்கு எடுத்துக் கூறினார் என்றன்றோ தேசிய பாரதம் எழுதவேண்டி இருக்கிறது!

காந்தியாரின் அறிக்கையின் விளைவு என்ன? கண்ணீர் பெருக்கியபடி கைகூப்பித் தொழுதபடி, பக்த காமராஜர், ஐயனே! அருள்பாலிக்கும் மெய்யனே! அடியேன் பிழை எதும் செய்திலேன்! எனக்கோ இத்தண்டனை? குற்றமற்ற என்னைக் கொற்றவனே! நீர்மற்றவர் ஊரைகேட்டுத் தண்டித்தீர் எனினும் உமது கொற்றம் வாழ்க! இனியும் ஏழையேன், உமது அடிமையே! என்று பாசுரம் பாடிவிட்டார். தேர்தல் காரியக்குழுவிலிருந்து விலகிக் கொண்டதாகக் காமராஜர் அறிக்கை விடுமுன். கண்ணீர் சொரியவில்லை என்று யார் கூறத்துணிவர்?
வரலாற்றுச் சம்பவங்களிலே ஒன்று என்றே இதனைக் கூறுவோம். வதைக்கப்பட்ட வீரர்களிலே இவரும் ஒருவரானார் - எதிரியால் வதைக்கப் பட்டிருப்பின், வீரர் கோட்டத்தில் இடம் பெறலாம். இவரோ தனது தேவனால், சித்திரவதை செய்யப்பட்டார்.

சிலம்புடன் நின்ற கோவலனை மன்னன் சீற்றத்துடன் நோக்கி, களவாடிய கயவன்! அதை மறைக்க ஏதேதோ கதை பேசும் கபடன், என்று ஐசிக் காவலரை நோக்கி கொண்டு செல்லுங்கள் கொலைக்களத்துக்கு, இக்கள்ளனை என்று கூறியபோது, கோவலினின் கண்களிலே நீர் கொப்பளித்திருக்கும் - அந்தப்புனல், கனலெனக் கொதித்திருக்கும், இவனோ மன்னன்! என்னûக் கள்ளனென்று உரைத்த இவனோ அரசன்! ஏன் மனைவியின் காற்சிலம்பை விற்க வந்தேன். இங்குக் கள்ளனென்று பழிக்கப்பட்டேன். இதுவோ நீதி! என்று, கண்ணீர் வடித்துக் கோவலன் கூறியிருக்கக் கூடும் - இல்லை! அந்த ஆநீதியின் போக்கு, அவனுக்குப் பேசவும் முடியாத நிலையை உண்டாக்கியிருக்கும். பேசமட்டுமா செயலையும் சிந்தனையையும் போக்கிவிட்டிருக்கும் - திடீரென - எதிர்பாராத விதமாக குற்றமற்ற தனக்குக் கள்வன் என்ற இழிபட்டமும் கொலைத் தண்டனையும் ஒரு கொற்றவனால் தரப்பட்டது என்று தெரிந்ததும் - கோவலன் திகைத்துப் போயிருப்பான். பேசமுடியாத நிலைமை சிந்திக்கவும் முடியாத நிலைமை - சிந்திக்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும். விருதுநகர் வீரனும் வழியில் நீர் தளும்ப, திகைத்துப் போயிருப்பார், கோவலன் கொற்றவன் முன்நின்ற கோலத்தை விட, இவருடைய கோலம், பரிதாபத்துக்குரியது. இவருக்குத் தரப்பட்ட “தீர்ப்பு” வழக்கு மன்றத்திலே இவரை நிற்கவைத்து நீதிதேவன் தந்ததல்ல, இவர் தொழுது முடித்ததும் எந்தக் “கண்கண்ட தெய்வத்தைத் தொழுதாரோ, அவர் வழக்கை விசாரிக்காமலேயே. அளித்த தீர்ப்பு!! கோவலன் கண்ணீர் எம்மாத்திரம்!

ஏன் கணவனைக் கள்ளனென்று கூறிய நீயோ காவலன்? என்று சீறிக் கேட்டு, மன்னனை மாண்டிடச் செய்த மறக்குடி மகளிராம் கண்ணகி போலக் காமராஜருக்கு யார் உள்ர்? அவர் அடைந்த திகைப்பைக் கண்டதும், மற்றவர்கள், திகில் கொண்டவராகவன்றோ போயிருப்பர். புகலிடம் எது? எங்கே போவது? ஏவரிடம் முறையிடுவது? வார்தாவுக்கு மேலான நீதிமன்றம் எது? எனவே, திகைப்படைவது தவிர வேறுவழி இல்லை! வேங்கையிடமிருந்து தப்பிப் பிழைக்க, குகைக்குள் ஓட, அங்கு சிங்கமிருந்த கதை போலாயிற்று! துராத்மாக்கள், தொல்லை கொடுத்தால், மகாத்மாக்களிடம் முறையிட்டு, துராத்மாவைத் தண்டிக்கச் செய்யலாம் அதுவே முறையுங்கூட! மகாத்மாவே தண்டனை தந்த பிறகு, ஏன் செய்வது? சகாக்கள் சங்கடம் விளைவித்தால் சபர்மதிச் சன்னிதானம் போய்ச் சமர்ப்பிக்கலாம் வழக்கை, சன்னிதானமே “பிடிசாபம்?” என்று கூறி விட்டபோது எங்கே போவது? என்ன செய்வது? யாரிடம் முறையிடுவது? காமராஜரின் திகைப்பின் காரணம் இதுவே!

காந்தியார், தேசியத்தின், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியின் தலைவர், அவருடைய கண்வன், யாவரும் ஒன்றே, உயர்சாதி என்று உறுமிக்கிடக்கும் உலுத்தருக்கு அந்த உத்தமர் இடந்தரமாட்டார், குற்றம் புரிபவர் யாராயினும் அவர் தண்டித்தே தீருவார், அவருடைய நீதிச்சக்கரம் பிழைபட உருளாது, அவருக்கு வேதியராயினும் அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே, அவர் ஓர் மகாத்மா, ஆகையால் அவர் மனத்திலே, மாசு மருவு இருக்க நியாயமில்லை - என்று நமக்குச் சமாதனாம் கூறக் காங்கிரஸ் தமிழர்கள் தவறியதில்லை. சமாதானத்தைக் கொஞ்சம் சூடாகவே சொல்வதிலும் அவர்களுக்கு ஒரு திருப்தி.

காங்கிரஸ் என்பது தேசியத் தேவலாயம், அங்குக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தேவனே மகாத்மா, அவரைத் தொழுவதே தேசபக்தன் கடமை, அந்த இலயத்திலே அனைவரும் சமம், பேதம் இல்லை, என்று பேசப்பட்டாலும், அதன் அமைப்பு முறை, வேலைத் திட்டம், நிர்வாகிகள் போக்கு என்பவைகளைக் கவனித்து, ஒரு முறைக்குப்பல முறை பரீட்சித்துப் பார்த்தான பிறகே, அது ஆரிய சேவாஸ்ரமமே தவிர, தேசிய ஸ்தாபனமல்ல, அதுருபோலக் கருதிக்கொண்டு மற்றவர்கள் செய்யும் கைங்கரியம், தரும் காணிக்கை யாவும், ஆரிய உயர்வுக்கே பயன்தரும், என்று நாம் எச்சரித்தோம், நாம் ஐளனம் செய்யப்பட்டோம், கண்டிக்கப் பட்டோம், எனினும் நமது பேச்சை மாற்றிக்கொள்ள மறுத்தோம், ஆரிய சேவாஸ்ரமத்திலே ஆனந்த ஆர்ப்பரிப்பு அதிகரித்த போதிலும், நாம் நமது பேச்சை மாற்றிக் கொள்ளவில்லை, ஏனெனில், நாம் மனமார அதனை நம்புகிறோம், மெய்ப்பித்துக் காட்டவும் தயராயிருக்கிறோம். காங்கிரஸ் பார்ப்பனீயப் பாதுகாப்புச் சபை என்று நாம் கூறின பச்சைப்பேச்சு, நச்சு, நினைப்பல்ல, இச்சகம் பேச நாம் மறுத்ததால் உண்மையை உரைத்தோம்.

“காங்கிரசா, பார்ப்பன சபை? முழுப்புரட்டு! தமிழ்நாட்டவரே! நம்பாதீர் அந்தத் தருக்கர் உரையை! தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர் யார்? ஐயரோ? இல்லை! காமராஜரன்றோ தலைவர்! அவருடைய தலைமையிலே நடைபெறும் காங்கிரசைப் பார்ப்பனசபை என்று கூசாது பொய்யுரைக்கும் குறும்பரை என்னென்பது!” என்று ஐசினர், காங்கிரஸ் தமிழர் தலைவர் காமராஜ் தடையில்லை! ஆனால், முடி யார் சிரத்தில் இருந்தாம் பிடி பார்ப்பனிரிடமே இருக்கும், கூர்ந்துபார் அன்பனே! கோபம் குறûந்த பிறகாவது பார் தோழனே!” என்று நாம் கூறினோம். காமராஜரின் தலைமைப் பதவியின் நிலைமை என்னவாயிற்று? தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவர், காங்கிரசின் தூய்மைக்காக என்று கருதி, சகாக்களைக் கலந்து சம்மதம் பெற்று, மக்களிடம் கூறி அவர்களின் சம்மத்தையும் பெற்று, அதற்குப் பிறகு, ஆச்சாரியார், 1942ல் காங்கிரசின் போக்கைக் கண்டித்தவர் ஆகையால், அவரைப் பிரதம பீடத்தில் ஏற்றக்கூடாது என்று தெரிவித்தால். இதிலே, நீதிபதி ஸ்தானம் காமராஜருக்கு, அவர் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆகையால்! குற்றவாளிக் கூண்டிலே ஆச்சரியார், எந்தக் காங்கிரஸ்வாதியும், தவறு இழைத்ததாகக் கருதப்பட்டால், கூண்டு ஏறித் தீரவேண்டும் என்ற நியதிப்படி. இதிலே நீதிபதி, ஒரு தீர்ப்பு அளித்தார்! சட்டமுறைப்படி, ஆச்சாரியார், காமராஜரின் தீர்ப்பை எதிர்த்து, “மேல் கோர்ட்டுக்கு” அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு மனுச் செய்துகொள்ளலாம். அதுதான் ஒழுங்கு, ஆனால் என்ன நடந்தது? காமாஜரின் தீர்ப்பை “சட்டை” செய்யாமல், ஆச்சாரியார் பவனிவந்தார், சில பராக்குக்காரர் உடன்வர! என்ன கூறிக்கொண்டுவந்தார். “திறமை சாலிகளைத் தேர்தலின்போது தேர்ந்தெடுங்கள்” என்று அதன் பொருள் என்ன? நாமே வெட்கப்படுகிறோம், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏன் இந்த நிந்தனையைப் பொறுத்துக் கொண்டார்களோ என்பதை எண்ணும்போது! இதற்கே அவர்மீது காமராஜர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கலாம். செய்யவில்லை அச்சத்தாலோ, அன்பாலோ, அலட்சியத்தாலோ அல்லது இலய சேவையிலே இலயித்ததாலோ ஆச்சாரியார் என்ன செய்தார்? படை திரட்டினார்! படை என்ன செய்தது? திருப்பரங்குன்றத்திலே, காமராஜரின் படைவரிசையுடன் கைகலந்தது. ஆச்சாரியார் போக்கைக் காங்கிரஸ் தீரர்கள் கண்டித்தனர். குன்றத்திலே, இவர்கள் கூடிப் பேசியபோது, ஆச்சாரியார் குற்றாலத்திலே குறுநகையுடன் உலவினார். ஏன் குறுநகை? “என்ன பித்தம் இந்தக் காமராஜருக்கு? பலர் கூடி, தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர் என்று சத்தமிடுவதை நம்பி என்னை விசாரிக்கும் அளவுக்குத் துணிந்தாரே, இது நிற்குமா நிலைக்குமா? ஏன் நினைப்பு அறிந்தால், போதுமே, காந்தியாரின் கட்டளை பிறந்துவிடுமே! இலட்சிய பூஷணத்தை ஆயுதமாகக் கொண்டு என்னை எதிர்க்கத்துணியும் இந்த இளையோனை, வீழ்த்த எத்தனைநாள் பிடிக்கும். வெளிப்படையாகச் செய்தால், விநாடியில் வீழ்த்திவிட முடியும் என்றாலும், இதனைச் சுட்டிக்காட்டி, “இன எழுச்சிக்காரர்கள்”, திராவிடர் கழகத்தார் பயன்படுத்துவரே என்று பார்க்கிறேன். ஏன் தயக்கத்துக்குக் காரணம் அதுதானே! அதனை உணராது, வீரஊரை ஆற்றும் விருதையானிடம் நான் ஐதோ பயப்படுகிறேன் என்று அந்த இளையோன் எண்ணுகிறான் வீணாக. ஏன் அச்சம் உரோட்டுக்குச் செய்தி போகிறதே என்பதன்றி, மயிலû பக்தவத்சலமும் மாங்காட்டு முத்துரங்கமும் விருதைக் காமராஜøம், கூடினரே என்பதா? இதனை அறியாது, போயினரே அவர்கள் என்று எண்ணியே குறுநகை புரிந்தார். அவருடைய கவலை எல்லாம், காமராஜரின் வேகம் தானாகக் குறையவேண்டும், தடுத்துக் குறைத்ததாக வெளியே தெரியக்கூடாது என்பதே தவிர, வேகம் அதிகரிக்கும், அல்லது தன்னை வீழ்த்திவிடும் என்பதல்ல.

அரசியல் அரங்கிலே ஆசப் ஆலி வந்தார், வந்தபோது நீதிபதியைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி வைத்தார்!! முதலில், குற்றவாளிக் கூண்டில் நீதிபதி காமராஜர்! ஆசப் ஆலியின் நீதிமன்றத்திலே, காமராஜரும் ஒரு குற்றவாளி போலவே விசாரிக்கப்பட்டார். கீழ்க்கோர்ட்டுத் தீர்ப்பை மாற்றவும் ரத்துசெய்யவும் மேல் கோர்ட்டு உண்டு, ஆனால் கீழ்க் கோர்ட் நீதிபதியை, (விசாரணை செய்த குற்றத்திற்காக)க் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தும் முறை, அவருடைய நீதிபதி ஸ்தானம் இருக்கும் போதே, அதாவது காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கையிலேயே, ஆசப் ஆலி அவரை விசாரித்தது, விசித்திரமாக சட்டம், ஆனால் அதுதான் வர்ணாஸ்ரம வேலைத்திட்டம்.

ஆச்சாரியார் பக்கம் தீர்ப்பு! கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது! தாழ்ந்த குன்றம் கவிழ்ந்தது, ஆச்சரியத்துக்கு உரியதா? இன்று கவிழ்ந்தும் போயிற்று.

காந்தியார் வந்தார் - தரிசனம் தந்தார் - தீண்டாமையைக் கண்டித்தால் - திருக்கோயில் பூசித்தார் - சென்றார். ஆனால் இதற்கா வந்தார்? இம் எனின் ஏன், காமராஜர்கள் அவருடன் குலவ முடியவில்லை. ஏன் பூசுரக் கூட்டமே அவரைப் புடை சூழ்ந்து நின்றது? அவரை வரவேற்கவும் மாலையிடவும், உணவு அளிக்கவும் ஊர்வலமாக ஆûத்துச் செல்லவும், உடன் இருக்கவும் உபசரிக்கவும், ஏன், அந்தக் குலத்துக்கே “மிராசு” கிடைத்தது? காங்கிரசின் ஜீவன் வந்திருக்க, தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவர், ஏன், அருகே காணோம் - என்று நாம் கேட்டோம். வழக்கப்படி “காமாலைக் கண்ணனுக்கு எதிலே குற்றம் காணலாம் என்பதே வேலை!” என்று தேசபக்தர்களால், கண்டிக்கப்பட்டோம். கவலைப் படவில்லை. காரணம், கண்ணடித்தவர்கள், நிலைமையை உணராது பேசுகின்றனர் என்பது தெரியுமாதலால், காந்தியாரின் சென்னைப் பயணம், ஆச்சாரியாருக்கு முடிசூட்டத்தான் பயன்படும் என்று கூறினோம் - கண்டிக்கப்பட்டோம். இந்தவிதமான எண்ணம், நமக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் ஏடுகளிலே சிலவற்றுக்கு ஏற்பட்டன. “சிவாஜி” என்ற ஏடு. 10-2-46ல்.

“மாகத்மாவின் விஜயத்தை, திரு. இராஜகோபாலாச்சாரியாரும் அவர் கோஷ்டியினரும் தங்களுக்கு அனுகூலமான வகையில் ஒரு அளவு பயன்படுத்திக் கொண்டார்கள். மகாத்மாவின் வாயால், திரு. இராஜகோபாலாச்சாரியாரைப் பாராட்டும்படி செய்து அதைப் பிரசாரம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். காந்திஜியின் அருகில் நடமாட சி.ஆர். கோஷ்டியினருக்குத்தான் உரிமையிருப்பது போலச் சொந்தம் பாராட்டினார்கள்”

என்று எழுதிற்று பெஜவாடாவிலே ஒருவர், காந்தியாரைக் கேட்டேவிட்டார். “ஆச்சாரியாருக்காகத் தானே தாங்கள் சென்னை வந்தீர்கள்” என்று காந்தியார் கோபத்தோடு, “அப்படி ஒன்று இல்லை! ராஜாஜி விவகாரமாக நான் கவனமே எடுத்துக் கொள்ளவில்லை” என்று கூறினார். உடனே ஒரு குதூகலம் பிறந்தது காமராஜர் சகாக்களுக்கு.

“திரு. இராஜகோபாலாச்சாரியாரைப் பற்றிப் பேசும்படி தன்னைப் பலர் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு மறுத்துவிட்டதாகவும மகாத்மா வெள்ளையாகப் பேசியிருப்பது, மகாத்மா காந்தி ஒரு மகாத்மாதான் என்பதை எடுத்துக் காட்டுவதோடு, திரு. இராஜகோபாலாச்சாரி கோஷ்டியினர் ஒரு சதிகாரக் கூட்டம் என்பதையும் ஊர்ஜிதப்படுத்துகிறது” என்று சிவாஜி வெற்றிச் சிரிப்புடன் விளக்கம் கூறிற்று.

வார்தாவிலிருந்து கிளம்பிற்று அறிக்கை. அறிக்கையா? இல்லை! ஆறுதி எச்சரிக்கை!

எந்த ஆச்சாரியார், காங்கிரசின் கண்ணியத்தை, கட்டுப்பாட்ûடை, கட்டளையைக் காற்றிலே உதிர் சருகு என்று கருதினாரோ, அவருடைய சேவையைத் தமிழ்நாடு இழக்கக் கூடாது என்று காந்தியார் கூறினார்.

ஆச்சாரியார், ஆகஸ்டுக் கலவரத்தை ஆதரிக்கவில்லை, கண்டித்தார் தியாகிகளைப் பழிக்கிறாரே என்று காமராஜர் கலங்கினார், காங்கிரசுக்கே இது துரோகம் செய்வதல்லவா என்றார், ஆம்! இது அக்ரமம்! துரோகம்! காங்கிரஸ் பெரிதே தவிர ஆச்சாரியார் அல்லர்! என்று தமிழ்நாட்டுக் காங்கிரசார் கூறினர் : நாடெங்கும் ஆகஸ்ட்டுத் துரோகி ஆச்சாரியாருக்கு இடம் கொடாதே என்று ஆர்ப்பரித்தனர், அந்தத் துரோகத்தை பற்றிக் காந்தியார், தமது அறிக்கையிலே, என்ன கூறினார்? 1942ல் ஆச்சாரியா;ர நடந்து கொண்டதை நான் அறிவேன். அவருடைய வீரமும் விவேகமும் போற்றத்தக்கன! ஆச்சாரியாரைத் துரோகி என்று நாடு கூறினால் என்ன, காந்தியார் அவரை வீரர், விவேகி என்று (அதே விஷயத்துக்காக) பாராட்டுகிறார். காமராஜர், வீரர், தியாகி, பக்தர், வீண் கிளர்ச்சிக் காரரல்லர், அவருக்குப் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது, ஆச்சாரியார் மீது அவருக்குத் துவேஷமோ, அவரைக் கவிழ்க்க வேண்டுமென்ற கெட்ட எண்ணமோ கிடையாது, காங்கிரக்குக் கண்ணியம் இருக்கவேண்டுமென்பதற்காகவே அவர், தமிழ் நாட்டுக் காங்கிரசாரின் பெருவாரியான சம்மதத்தைக் கேட்டுப் பெற்றபிறகு, ஆச்சாரியார் போக்கைக் கண்டித்தார், என்று மக்கள் மன்றத்திலே பேசிக் கொண்டனர், மகாத்மா காமராஜர் கூட்டத்தை சதிகாரக் கும்பல் என்று கூறிவிட்டார். இப்ண்வ்ன்ங் என்ற ஆங்கிலப் பதத்தை உபயோகித்தார் காந்தியார் இது மிகமிகக் கடுமையான சொல் என்று தினமணி கூறுகிறது. மட்ட ரகத்தைத்தான் கும்பல் என்று அழைப்பதார்கள்! இருபது ஆண்டுபக்தி விசுவாசத்தின் பலனாகக் காமராஜர் கண்டது, தானும் தன் நண்பர்களும், ஒரு விவேகியை, வீரரை, வீழ்த்துவதற்காக வேலை செய்யும் கும்பல் என்று காந்தியாரால் அழைக்கப்பட்டது தான்! எவ்வளவு பூஜை! அதற்குக் கிடைத்த பலன் எவ்வளவு அருமை!

நான் சென்னைக்குச் சென்றது, இந்திப் பிரசாரத்துக்கே தவிர, ராஜாஜி விஷயமாக அல்ல என்று கூறிய காந்தியார், என்னிடம் சிலர் ராஜாஜி விஷயமாகக் கேட்டார்கள் நான் எதும் கூறமுடியாது என்று கூறிவிட்டேன் என்று பெஜவாடாவில் பேசிய காந்தியார், எதற்காக எந்த நெருக்கடியைத் தீர்க்க, எந்த மகத்தான ஆபத்து தமிழகத்துக்கு வராதிருக்கச் செய்ய திடீரென்று வார்தாவிலிருந்து, “ராஜாஜியை ஒரு கும்பல் தொலைத்துவிடக் கருதுகிறது” என்ற எச்சரிக்கையையும், ராஜாஜி, விவேகி வீரர் என்ற சிபார்சையும், “அவருடைய சேவையைத் தமிழ்நாடு ஆகழலாகாது” என்ற மிரட்டலையும அறிக்கை வடிவிலே ஐவவேண்டும்? காங்கிரசிலே நாலாணா அங்கத்தினருமல்லாத் என்னை ஏன் இதையெல்லாம் கேட்கிறீர்கள்ஏ ன்று நாசுக்காகப் பேசும் காந்தியார், ஏன், காமராஜர் விஷயமாக கனல் கக்க வேண்டும்? கவலை எடுத்துக் கொண்டவர், அதை ஏன் சென்னையிலே கூறாது, வார்தா சென்று கூறினார்? கூறுமுன்பு, சென்னையிலே காமராஜரை அழைத்து விசாரித்தாரா? மட்டரகமான “கும்பல்” என்ற பதத்தை உபயோகிக்க வேண்டிய அளவு, காமராஜரும் அவருடைய சகாக்களும் செய்த காரியம் என்ன? ராமும் ரஹீமும் ஒன்றே என்னும் பஜனையில் உடுபட்டிருந்த மகாத்மாவுக்கு இந்த விஷயமாக விசாரிக்க நேரம் இருந்ததா? காமராஜர் போன்றவர்கள் ரொம்ப மட்டரகம், அது ஒரு கிளிக் என்று யாராவது சொல்லியிருந்தாலொழிய, இவராக அந்த முடிவுக்கு வர முடியுமா? இவர் அந்தக் கிளர்ச்சி சம்பந்தமாகக் கவலை செலுத்தியதாக இதாராமும் இல்லாதபோது, அவருடைய வார்த்தையை பிறர் செருகிறது என்றுதானே கொள்ள முடியும்? காமராஜரையும் அவருடைய நண்பர்களையும் “கும்பல்” என்று கேவலப்படுத்திப் பேசியவர் யார்? அவர், காமராஜரைவிட, வீரத்தில் தீரத்தில் தியாகத்தில் அறிவில் ஆற்றலில் உயர்ந்தவரா? என்ன ஊரைகல்? யார் இருக்கிறார்கள் கேட்க!!

“காமராஜரின் கும்பல்” பற்றிக் கேள்விப்பட்ட உடனே காந்தியார், சத்திய சோதனையில் உடுபட்டுள்ளவர், செய்ய வேண்டியது என்ன, ஜார்கூட, “கும்பல்” மீது விசாராணை செய்யாது பாய்ந்திடவில்லை! போலி விசாரணையாவது நடந்திருக்கும். காந்தியார், ஏன் காமாஜரை விசாரித்திருக்கக் கூடாது? காமராஜர் காநதியாரைக் காணவில்லையோ? கண்டார்! கேளுங்கள் காமராஜரின் சோகம் கப்பிய பேச்சை, “காந்தியாரை நான் தரிசித்தேன். தரிசனம் தந்த மகாத்மா, விசாரித்தாரா? இல்லை! ஒய்வு இல்லையோ? ஒரு முறைக்கு இருமுறை, காங்கிரசில் சேராத காங்கிரசைக் கண்டித்த, ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்த, மகாகனம் சாஸ்திரியாரை, காந்தியார் போய்ப் பார்த்துப் பேசிவர நேரம் இருந்ததே, காமராஜரிடம் பேசத்தானா நேரம் கிடைத்திருக்காது!! எவ்வளவு அலட்சியப் படுத்தப்பட்டார், காமராஜர்! அதை அவர் எவ்வளவு சாந்தத்துடன் பொறுத்துக் கொண்டார்!! எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் காமராஜர், அந்தப் பத்து நாள்கள் இருந்தார். இஷ்டஜன பந்து மித்ராளுடன் குசலம் விசாரித்துக் கொண்டும், உபசாரம் பேசிக் கொண்டும், காந்தியார் இருந்த அந்தப் பத்து நாள்களும், காந்தியாரைப் புகழ்ந்து பாடாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருதிக் கொண்டிருந்த காமராஜர், பொள்ளாச்சிக் குருடரிடமாவது காந்தியார் பேசினார் இருமுறை, பஸ் ஓட்டுபவரிடமாவது பேசினார், பாவி நான் அந்தப் பாக்கியம் செய்யவில்லையோ, பண்ணேனுனக்கான பூஜை பலநாளுமே பாலித்தருளாயோ, ஏன் கசிந்து உருகினாரோ என்னவோ! காமராஜர், ஜலதோஷம் பிடித்ததால் காந்தியார் அருகே போகமுடியாது இருந்தாரோ? இல்லை! அருகேயே இருந்தார்! அந்தப் பரிதாபத்துக்குரிய கண்ணியவான் கூறுவதைக் கேளுங்கள் - கேட்டுவிட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். “நான் காந்தியாருக்குக் கூப்பிடு தூரத்தில் தான் இருந்தேன். என்னிடம் இதுவிஷயமாக அவர் எதும் பேசவில்லை என்பத எனக்கு வேதனையாக இருந்தது” என்று கூறினார். கூப்பிடு தூரம்! கூப்பிடு தூரம்!! ஒரு குரல், “காமராஜ்!” என்று கிளம்பியிருந்தால். “பாபுஜீ!” என்று பக்தர், பரவசத்தோடு, கூறிக்கொண்டே அருகே போயிருப்பார், கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறியிருப்பார், தவறு இது என்று காட்டியிருந்தால் திருத்திக் கொள்வார், இப்படி நட என்று கட்டளையிட்டால் கூட ஏற்றுக் கொண்டிருந்திருப்பார், ஆனால் பாபூஜீ, கூப்பிட்டால்தானே! காமராஜர், கூப்பிடு தூரத்தில்தான் இருந்தார்! கோகில கானம்பாட, கோபாலசாமிகள் தாளம் போட, ஆரியம் ஆனந்தமாக இட, அதைக் கண்டு களித்துக் கொண்டு, ஆமிர்தகுமாரியும், சுசிலாதேவியும், புடை சூழ வீற்றிருந்த பாபூஜீக்கு, கூப்பிடு தூரத்திதலே காமராஜர் இருந்தால் என்ன! எப்படிக் கூப்பிடுவார்கள்? ஏன் கூப்பிட வேண்டும்! அவ்வளவு கவனிப்புக்கு உரியவரா? அவர், தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவராக இருக்கலாம்! இருக்கட்டுமே! அதற்காக, சம்பந்தியிடம் சண்டை பிடிக்கும் துணிவு கொண்ட பேர்வழிக்கு, “தரிசனத்திலே” இடங்கொடுத்தே, ஒயோ பாவம் என்பதற்காக! கூப்பிட்டு வேறே பேச வேண்டுமா? - என்று கருதினர் போலும் கூப்பிடு தூரத்தில் இருந்தார், கூப்பிடப்படவில்லை! கேட்பார் கூறலாம் என்று இவலுடன் இருந்தார், எதும் கேட்கவில்லை! போய்விட்டார், இனி ஆச்சாரியார் விஷயமாகப் புகை எதும் இராது என்று நம்பினார், அப்போதுதான் வார்தாவிலிருந்து வீசினார் வெடிகுண்டு! கூப்பிடு தூரத்தில் இருக்கும்போது வீசமுடியாதல்லவா? ஆகவே தாமதம்!

காமராஜர் என்ன செய்வார்? புண்பட்ட மனம்! ஆனால் சேவை செய்யும் பண்பிலே பழக்கப்பட்டுப் போனார். எனவே, ஆச்சாரியாருடன் தகராறு வருவûத்த் தடுத்துக் கொள்ளவேண்டும். ஆபாயச்சங்கு உதியதும், குப்புறப்படுகிறார்கள்! காந்தியாரின் அறிக்கை வந்ததும், சட்டசபை சம்பந்தமாகத்தானே சச்சரவு வருகிறது. நான் தேர்தல் கமிட்டித் தலைமைப் பதவியை ராஜிநாமாச் ùச்யகிறேன், என்று கூறிவிட்டார். வேறு வழியில்லை! நாம் கூறுவதல்ல! அந்த வேதனை தரும் வாசகத்தை இருமுறை, காமராஜர் தமது அறிக்கையிலே உபயோகிக்கிறார். ஆச்சாரியாரால் ஆலைக்கழிக்கட்பட்டு, கல்கியால் சின்னத்தலை யாக்கப்பட்டு, காந்தியாரால், அலட்சியப்படுத்தப்பட்டு, கடைசியில், வார்தா அறிக்கையால், வதைக்கப்பட்டு காமராஜர் கண்ணீர் பெருக்கிநிற்கும் காட்சி, தமிழன் உள்ளத்திலே இழப்பதிந்து விட்டது.

வேறு வழியில்லை! ராஜிநாமாச் செய்கிறேன்!!

காப்பாற்றுவார் இல்லை! கிணற்றில் விழுகிறேன்!!


குற்றம் செய்தவனல்ல! ஆனால் தண்டிக்கப்படுகிறேன்!

இவற்றைச் சொல்பவருக்குக் கூடச் சிரமம் இல்லை, கேட்கிறோமே நமது செவியால், நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை!

போர்க்களத்திலே எதிரியின் வாளுக்கு மார்கட்டி, மண்மீது சாயும், சகோதரனைக் காணலாம். சகித்துக் கொள்ளலாம், எங்கே நமது அண்ணனைக் கொன்றவன் என்று தேடலாம், போரிடலாம், அவனை வீழ்த்தலாம், அல்லது நாமும் சாகலாம் வழி உண்டு. ஆறுதல் பெற!

மாற்றானின் வஞ்சக மாளிகைக் குள்ளே புகுந்துகொண்டு, அவன் மனம்போன போக்குக்கு ஏற்றபடி எல்லாம் நடந்துகொண்டு, கடைசியில் அவன் ஐசிப் பேச, அது பொறாமல், மாளிககையிலே ஓரிடத்தில் தூக்கிட்டுக்கொண்டு, ஏன் ùச்யவேன்? நான் இருந்தால்தானே இந்தக் கொடுமை இதோ சாகிறேன் என்று சாளரத்தருகே நிற்கும் தம்பியின் செவியில் விழும்படி, அண்ணன் அலறினால், எப்படிக் கேட்டுச் சகித்துக் கொள்ளமுடியும்! ஆறுதல் பெற வழி இல்லையே! மறைக்கவும் முடியவில்லையே!

இனி என்ன நடக்கும்? காமராஜர் புரட்சி செய்யப் பார்த்தார், அடக்கப்பட்டார், என்று, ஆரிய ஏட்டிலே பொறிக்கப்படும் காமராஜர் கண்ணீர் பெருக்கிக்கிடக்க, ஆச்சாரியார் காந்தீயப் பன்னீரில் குளித்தெழுந்து, பதவிப் பட்டாடை உடுத்திக் கொண்டு, பவனி வருவார். ஒரு சமயம், ஆ;தப் பவனிக்குக் காமராஜரே சாமரம் வீசச் செய்யப் படலாம்! தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குக் கோவை சுப்யைôவோ, வேலூர் குப்பரோ தலைவராகக் கூடும்! காமராஜர், இலட்சோபி இலட்சத்தில் ஒருவர் என்று ஆகக்கூடும். இவ்வளவு கூட இந்த வீரருக்கு முடிந்ததற்குக் காரணம். சில ஏடுகள் இவரை இதரத்ததால் தானே! இனி இந்த ஏடுகள், விஷயத்துக்கு மூடி போட்டு விடும். போடத்தானே வேண்டும் இல்லையேல், வீரர்கள், தியாகிகள், என்ற விருது பெற்றவர்களைக் கும்பல் என்று கூறிய காந்தியார், தேசீய தினசரி, பாரத தேவியின் முரசு, சுதந்திரத்தின் சங்கு, தேச சக்தியின் மணி ஓசை என்ற விருதுகள் பெற்ற ஏடுகளை, “குப்பை” என்று கூறி விடுவார். இன்று அந்த ஏடுகளெல்லாம், “இப்படி நடக்குமென்று தெரியாமல் போய்விட்டதே! காந்தியார் இதிலே தலையிடமாட்டார் என்றல்லவா எண்ணி ஏமாந்துபோனோம்” என்று நடுக்கும் குரலில் பேசும் பாவம், ஆவû என்ன செய்ய முடியும்! தினமணி எழுதியபடி, தர்ம சங்கடமான நிலைமைதான்! வெற்றி பெற்ற பிறகு ஆச்சாரியாருக்குத் துதிபாடும்! ஏன்! இன்னும் சில ஏடுகள், இன்று இல்லாவிட்டால் சின்னாட்களுக்குப் பிறகு, காமராஜரின் உண்மை நோக்கம் தெரியாமல் நாம், அவருடைய முயற்சியைக் கண்ணியமான காரியம் என்று நம்பி ஏமாந்து போனோம். அவர் ஓர் வகுப்புவாதி என்று இப்போதுதான் தெரிகிறது. அதனை முன்கூட்டியே தெரிந்தால்தான் ராஜாஜியும்ம காந்திஜியும் அவரை எதிர்த்தனர், என்று எழுதுவுங்கூடும்!

காமராஜரின் எதிர்காலத்தைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அவர் அதனைச் சித்தரித்துக் கொள்ள வேண்டியவர் - சக்தி இருந்தால்! தமிழன், காங்கிரசிலே சேர்ந்தால் இலட்சியங்கள் பூர்த்தியாகும் என்று பேசுகிறார்களே சிலர், அவர்கள் காமராஜரின் கண்ணீரைக் கண்டு, தெளிவடைவ ர் என்பது உறுதி. தமிழன் வீரத்தால், தியாகத்தால், தேசபக்தியால், காமராஜர் போல, தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவராகலாம்! ஆனால் தக்க காரணம் இருப்பினும், தமிழ்நாட்டுக் காங்கிரசே தன்பக்கம் இருப்பினும், ஒரு தர்ப்பா சூரனையாவது, எதிர்க்கத் துணிந்தால், எத்தனை வருஷம் பக்தியோடு பூஜித்திருந்தாலும், பூஜையை ஏற்றுக்கொண்ட தேவனே, பிடி, சாபம்!! என்றுதான் கூறுவார் காங்கிரஸ், என்பது ஆரிய சேவாஸ்ரமம் என்பது இச்சம்பவத்தால் உறுதியாயிற்று. கருத்துள்ளோர் யாவரும் காணலாம் காமரஜரின் கதியைக் கண்டு, பாடம் பெறலாம்.

ஆனால் காமராஜர், காங்கிரசைவிட்டு விலகுவார் என்று நாம் நம்புகிறோமா? இல்லை! நம்பவுமில்லை! அவருக்கு அந்த யோசனையைக் கூறவுமில்லை. திராவிடர் கழகம் நெருக்கடியான நேரத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டு வேறுவழி இல்லையே என்று கூறும், “பக்தர்களை” அழைக்கவில்லை. தேவையில்லாததால்! காமராஜார்கள், அங்கேயே இருக்கட்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பட்டும், அவர்கள் படும் அல்லலை. அவர்கள் அங்கு ஆரியத்தால் அடக்கப்படுவதை, அவர்களின் ஆண்மை மங்குவதை திராவிடர் கழகம் கவனித்து வருகிறது. ஆரியத்துடன் ஆக்கழகம் நடத்தும் போரிலே, அவர்கள் சார்பாகவும், நிச்சயமாகத் திராவிடர் கழகம் பேசும்! காமராஜரின் கண்ணீரைத் திராவிடர் கழகம் கருப்புச் சட்டைப்படை துடைக்கும் - அவர் அடைந்த கதியால், தமிழனுக்கு ஏற்பட்ட தாழ்நிலையை, ந்சிசயமாகத் திராவிடர் கழகம் போக்கும், வீழ்ச்சியுற்ற இனத்திலே, இதுபோல விழியில் நீருடன், வீரர்கள், இருப்பதுண்டு, ஆனால், எழுச்சி பெற்றதும், அந்த இனத்திலே தோன்றும் வீரர்கள், முன்னவர் சிந்திய கண்ணீரைக் கவனத்திலுலிருத்தி மாற்றான் மண்டியிடும் அளவு வெற்றிபெற்று அந்த வெற்றிநாளன்று, வீழ்ந்து கிடக்கும் மாற்றானை நோக்கி, மமதை கொண்டவனே! உன்மயக்க மொழியிலே சிக்கிய மறத்தமிழனைச் சீரழித்தாயே அன்று! உன்னால் அடைந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விழியில் நீர் பெருக்கினானே! அந்தக் கண்ணீர், இந்தக் கூர்வாளாயிற்று என்று கூறுவர். காமராஜரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள, கருப்புச் சட்டைப்படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியை, அந்தச் கருப்புச் சட்டைப் படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்.

(திராவிடநாடு - 24.02.46
)