அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கேள்வியும் பதிலும் 1
1. கல்லூரி மாணவர்கள், பகுத்தறிவு இயக்கத்துக்கு, எந்த வகையில் பணியாற்ற முடியும்?

கட்சிமாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகக் கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போயுள்ள பழைய, பயனற்ற, கேடுதரும் எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட்காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ்ஞானிகள், வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதைவடியில் கூறுவது, உலகிலே, எங்கெங்கு, என்னென்ன வகையான மூடநம்பிக்கைகள் இருந்து வந்தன, அவை எப்படி அகற்றப்பட்டன, என்பனவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற்றலாம்- பயன் உண்டு. கூடுமானவரையில், நடைமுறை அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கியிருந்து, நடத்துவதே, நல்லது, பெரிய நகர்களிலே நடத்தப்படுவதைவிடக் கிராமங்களில் இந்தப் பிரசாரம் நடைபெறவேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக்களாக மட்டுமே அமையாமல், மக்கள் மனத்திலே பதியக்கூடிய விதமான உரையாடல்களாக அமைவது நல்லது.

2. கம்பன் கவிதைகளிலே காமரசம் அதிகம் என்று கண்டித்து எழுதிவிட்டு, ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகத்தில் காமரசத்தைக் கலக்கியது சரியா?

சரியல்ல, கலக்கி இருந்தால்! காமரசக் களஞ்சியம், அந்த அரசிகளின் வாழ்க்கை, அதன்பயனாக அரசு அழிந்தது என்பதை முன்னுரையில் கூறிவிட்டு, வெறும் போகபோக்கியத்தில் மிருக இயல்புடன் புரள்வோர் நாடாள்வோராக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கவே இப்புத்தகம் தீட்டுகிறேன் என்பதை விளக்கினேன். எனவே, காமரசத்தைக் கலக்கிய குற்றம் என்பாலில்லை, அதுபோலவே, அந்த ரசத்தைப் போற்றியதாகவோ, பாராட்டு
வதாகவோ, அதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று ‘சிபாரிசு’ செய்வதாகவோ, என்மீது குற்றம் சுமத்தக்காரணம் இல்லை. குற்றம் ஏதேனும் சுமத்தலாம் என்று தேடிடும்போது, இதுமட்டுமா, இன்னும் உருவற்ற, பயனற்ற, பல கிடைக்கும். தேவையுள்ளோர் அந்தத் திருப்பணியில் தாராளமாக ஈடுபடட்டும். நிற்க, ரோமாபுரிராணிகள், கம்பன் ஏடுபோல, கடவுள் கதை அல்ல, பஜனை ஏடல்ல! புண்ணியகதையாகவும், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெரும் துணையாகவும், பெருமானின் பொருளைப் பெற்றுத்தரவல்ல புனித ஏடாகவும் கூறப்படும் இராமகாதையிலே, ஏன், காமரசம் கலக்கினார் கம்பர் என்பது என் கேள்வி? அந்தக் கேள்வியும் கண்டனமும், நான் ‘ரோமாபுரி ராணிகள்’ வெளியிட்டதால் பயனற்றுப் போய் விடாது. பழிகூறு படலத்துக்குப் பரபரப்
புடன் சிலபல தேடுவோர், என்மீது பழுதையை வீசிவிட்டு, பாம்பை வீசிவிட்டோம் என்று களிப்பதிலே, எனக்கொரு நஷ்டமும் இல்லை. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம், என்ற கைவல்ய வாக்கியந்தான் கவனத்திற்கு வருகிறது.

3. வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றாகிவிட்டதே, இனியும் நீங்கள் விடுதலைப்போர் என்று பேசித் திரிவது ஏன்?

விடுதலைப்போரின் ஒரு கட்டமே, வெள்ளையர் விரட்டுபடலம். போர் முடிந்துவிட்டதாகப் பொருளில்லை. அன்னிய ஆட்சி நீங்கியதும், நல்லாட்சி நிறுவப் போரிடவேண்டி ஏற்படுகிறது. அதுவே, உண்மையான விடுதலைப் போர். அந்தப் போர் நடத்துவதே எமது நோக்கம்.

விடுதலைப் போர், வெள்ளையரை ஓட்டுவதோடு முடிந்துவிடுவது என்று கருதுபவர், நாம் குறிப்பிடும் நல்லாட்சி அமைப்புக்கான போர் சரியானதென்றோ, வீரம் செறிந்த தென்றோ எண்ணமாட்டார்கள் - கலந்து கொள்ளவும் விரும்பார். அலுப்பும் சலிப்பும் காரணமாக இருக்கக்கூடும்.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஒத்துழைத்த
வர்கள், அடுத்த கட்டத்திற்கு உடன்வர ஒப்பினும் ஒப்புவர். அன்றி முதற்கட்டத்திலேயே சோர்ந்து போயினும் போவர். அல்லது அவரின் லட்சியம் அதுதான் எனத் திருப்திகொண்டு, மேலும் செல்ல விழைவோரை மடக்கும் அரும்பணியிலும் ஈடபட முனையினும் முனைவர். இக்கட்டத்தில் உண்டாகும் எதிர்ப்பு முன்னிலும் பலம் நிறைந்ததாகும். ஏனெனில், ஒருமுறையான சமூக அமைப்பில் ஆதிக்கம் பெற்றுள்ள சிலர், தங்கள் ஆதிக்கம் என்றும் அழிவுபடாத முறையில் செயலாற்றுவதைக் கண்டு, அந்த முறை பலனற்றது என்பதை உணர்ந்து, விரிவான பலன் தரும் வேறோர் அமைப்பை நிலை நாட்டுவதில் நாட்டங்கொண்டுள்ளோர், ஏற்படுத்தியுள்ள முறையால் அதிகப்படியான மக்களின் அல்லல் தீர்க்கப்படாததன் காரணமாகவும், அத்துடன் மேலும் மேலும் அவ்வல்லல் அதிகரிப்பதன் காரணத்தாலும், முன் குறித்த ஆதிக்கக்காரர்கள் மீது, அவதிப்படும் மக்களை ஏவிவிடுவது, முழு அளவிற்கு முடியவில்லையாயினும், ஓரளவிற்காவது முடிகிறது. ஆனால், இரண்டாம் கட்டத்தில் ஆதிக்கக்காரர்களின் பிடியிலிருந்த மக்களை மீட்கப் போராடியவர்களே - விடுதலை விரும்பிகளே - கஷ்ட நஷ்டம் பட்டவர்களே - ஆதிக்கத்தில் அமர்ந்துவிடுவதால், அவர்களுக்கு எதிராக, அனைவரும் இன்பவாழ்வு பெறுவதற்கான விலங்கொடிக்கும் விடுதலைப் பணியில் மக்களைத் திரட்டுவது, முன்னிலும் கஷ்டமானதாக இருக்கிறது. இருந்தாலும் முடிவில் வெற்றி மக்களுக்கே. காலந்தான் கொஞ்சம் கூடுதலாகும்.

4. வாழ்க்கை, எப்படி இருக்க வேண்டும் என்று பகுத்தறிவு வாதிகளாகிய நீங்கள் கருதுகிறீர்கள்?

மாயப்பிரபஞ்சம் - நீர்மேற் குமிழி என்பன போன்ற கருத்துகளை விரும்பாத பகுத்தறிவாளர்கள், வாழ்க்கையைப் பற்றிக்கொண்டுள்ள கருத்து, வெறும் மிருக இச்சை பூர்த்திதான் என்ற தப்புப் பிரசாரம் பரவி இருக்கும் இந்நாளில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டதுபற்றி மிக மகிழ்ச்சி - உண்மையை விளக்க ஒரு வாய்ப்பு ஏற்படுவதால்.

இவ்வுலகில், உயிரோடு இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை - கல்வி கேள்விகளில் சிறந்து, மக்களை மக்களாக மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக்கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில், நினைப்புக்கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால்மட்டும் சாத்தியமாகக் கூடியதன்று. இந்த லட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில் பலரின் சுகபோகங்களைக் கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.

ஒரே நாளில் வெற்றி பெற்று விடக்கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறிவையும் முயற்சியையும் குலைப்பதற்கு, அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனந்தம். வன்மைமிக்கது. ஒவ்வொன்றாகத் தான் நொறுக்கமுடியும். ஒரு விலங்கு ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில்லையேயென மனச்சோர்வு ஏற்படுவது இயல்பு. அந்த மனச் சோர்வுக்கு இடங்கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில் முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ளவேண்டும். இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும், குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம், எதற்கும் இப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள சக்தி - எதிர்ச்சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.

வாழ்க்கை இன்பம், சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அவ்வளவு பொருட்பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப்பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம். தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந்திருக்கிறது என்ற பேருண்மையை உணராததாலேயே, சுரண்டல் முறை வளருகிறது, அதன் விளைவாகப் பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம்மலாட்டம், என்று சிலபல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

21.12.1947