அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஜெமீன் ஒழிப்பு!

``நாங்கள் வெறும் வரி வசூலிப்போர் என்று சொல்வது தவறு. நாட்டின் தலைவர்கள் நாங்கள்- அதனாலேயே ஜெமீன்தாரர்களாக்கப் பட்டோம். நாங்கள் ஜெமீன் நிலங்களுக்கு உரிமையாளர்கள் என்பதை மறக்கக் கூடாது'' என்று குமாரமங்கலம் ஜெமீன்தார் டாக்டர் சுப்பராயன் கூவினார்.

மீர்ஜாபுரம் ஜெமீன்தார், ``ஜெமீன் ஒழிப்புச் சட்டம் செய்து விடுகிறீர்கள், ஆனால் இதனால் என்னென்ன நேரிடப் போகின்றன என்பதை எண்ணிப் பார்க்கவில்லை அவசரத்தில், பலவித மான வழக்குகள் ஏற்படப் போகின்றன!'' என்று மிரட்டினார்.

``சீமையிலிருக்கும் ஒரு பிரபல வக்கீலைக் கேட்டேன். ஜெமீன்தாரர்களின் உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று அவர் கூறியிருக்கிறார். எச்சரிக்கை செய்கிறேன், எங்கள் மீது பாய வேண்டாம். கோர்ட்டுக்குப் போவோம்'' என்று வெங்கடகிரிராஜா வீரா வேசமாடினார். மற்றும் சிலர், இந்தத் திட்டத்தால் மாபாதகம் சம்பவிக்கும் என்றனர்.

இவ்வளவு மிரட்டல்களுக்கிடையே, சென்னை சட்டசபையில் ஜெமீன் ஒழிப்பு மசோதா, சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவிலே, பாதி உயிரை மடிசஞ்சிகள், டில்லி தேவதைகளைப் பூஜித்துப் பெற்ற வரத்தால், போக்கி விட்டனர். இனாம் களைக் காப்பாற்றிக் கொண்டனர்- இப்போ தைக்கு! ஜெமீன்தாரர்கள் மடிசஞ்சிகளின் மகத்தான வெற்றியைக் கண்டு, ஏன் தாங்கள் மட்டும் `சோடை'களாக வேண்டும் என்று எண்ணி, சூரத்தனத்தைக் காட்டிப் பார்த்தனர்- ஆனால் காளா வெங்கடராவ், டில்லி தாக்குதலால் களைப்புற்று இருந்த போதிலும், தீரமாகப் போராடி, மசோதாவைச் சட்டமாக்கிவிட்டார். நமது நன்றி கலந்த பாராட்டுதல் அமைச்சருக்கு.

டில்லியின் அவசியமற்ற, தலையீடு ஜனநாயக முறையையே கேலிக்கூத்தாக்கி விட்டது பரிதாபத்துக்குரிய அமைச்சர் டில்லி தபாலைப் பார்த்துப் பார்த்து, அடிக்கொரு திருத்தம், அங்குலத்துக்கு ஒரு மாற்றம், செய்த வண்ணம் இருக்க நேரிட்ட காரணத்தால், மசோதாவின் உருவம், அவலட்சணமாகி விட்டது.

எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜெமீன் தாரர்களுக்கு அதிகமான அளவு நஷ்ட ஈடு தரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது கிடைத்துள்ள புள்ளி விவரத்தின்படி பனிரெண் டரை கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டி வருமெனத் தெரிகிறது.

மேலிடத்தாரிடம் இனிக் காவடி எடுத்து சட்டத்தை அமுல் நடத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடச் சொல்ல முனைவார்கள், ஜெமீன்தாரர்கள்.

இப்போதே இதற்கான மனுக்களை, மயிலை வக்கீல்கள் தயாரித்துக் கொண்டிருக்கக் கூடும்.

நஷ்ட ஈடுக்கு மத்ய சர்க்கார் உதவி செய்யப் போவதில்லை என்பதை ஏற்கெனவே அறிவித்து விட்டனர்.

கடன்பத்திரங்களை கொடுப்பதானாலும், அதற்கும், இப்போதுள்ள சட்டத்திலே இந்திய சர்க்கார் சில திருத்தம் செய்தாக வேண்டுமாம்.

பீகாரில் நிறைவேற்றப்பட்ட ஜெமீன் ஒழிப்புச் சட்டத்தை, கவர்னர் ஜெனரல், அங்கீகரிக்க மறுத்துவிட்டார்- சட்டம் திரும்பி, பீகாருக்குச் செல்கிறது. சில திருத்தங்கள் பெற.

அதுபோலவே, சென்னையிலிருந்து பயணப்படும் ஜெமீன் ஒழிப்புச் சட்டமும், கவர்னர் ஜெனரலால் மீண்டும் திருப்பி அனுப்பப் பட்டு விடலாம்.

இதற்கான சகல முயற்சியும் எடுத்துக் கொள்ள ஜரூராக வேலை செய்வர். ஜெமீன்தாரர் களும் அவர்களின் சட்ட ஆலோசனையாளர்களும்.

ஜெமீன்கள் தங்கள் கரத்திலிருந்து போய்விடும் நிலை பிறக்கப் போகிறது என்பதைப் பல ஆண்டுகளாகவே அறிந்த ஜெமீன்தாரர்கள் கிடைத்ததைச் சுருட்டுவது என்ற முறையில், ஜெமீனுக்குள் என்னென்ன சூதுகளெல்லாம் செய்ய முடியுமோ அவை களைச் செய்து, இலாபம் அடைந்து வருகிறார்கள்.

இனியும் சட்டம் நடைமுறைத் திட்டமா வதற்குத் தடையும் தாமதமும் ஏற்பட்டபடி இருந்தால், `சுளை போய் தோல்' கிடைத்த கதையாகி விடும் ஜெமீன் ஒழிப்பு!

எனவே, சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதை உடனடியாக கவனித்தால்தான் ஓரளவு பலனாவது கிடைக்கும். இந்தச் சட்டத்தினால்.

ஆனால், டில்லி என்ன செய்யுமோ!

சட்டசபையிலே, தோழர் பிரகாசம், ``சட்டங் களைக் செய்வது யார் இங்கே, சென்னையிலுள்ள சட்டசபை மெம்பர்களா, அல்லது டெல்லியா? மேலிடம் ஏன் இப்படி நமது விவகாரத்தில் குறுக்கிடுகிறது! யார் இந்த மேலிடம்!'' என்று கோபமாகக் கேட்டார். மசோதாவில் பல திருத் தங்கள் டில்லி கட்டளைப்படி செய்தாரே. மந்திரியார், செய்யலாமா! அப்படிப்பட்ட நிலை வந்தபோது, மந்திரி, ராஜிநாமா செய்துவிட்டிருக்க வேண்டாமா என்றும் சீற்றத்தோடு கேட்டார். இந்தக் கேவலமான நிலையைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்''- என்றும் பிரகாசம் கூறினார்.

வெட்கம்- துக்கம்- சஞ்சலம்- சங்கடம்- சாகசம்- சட்டச் சூழூல்- சதிச் செயல்கள் எனும் பல்வேறு தடைகள் போடப்பட்டன. காளாவின் பாதையிலே- அவர் இவ்வளவையும் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் சட்டம், எதிர் பார்த்தபடியான உருவைப் பெறமுடியவில்லை. ஆனால் ஊமையை விட உளறுவாயன் மேல் என்பார்களே, அதுபோல், ஏதோ ஒருவகையான சட்டமாகவேனும் கொண்டுவந்து விட்டாரே என்கிற அளவிலே மகிழ்ச்சி.
இனி, மேலால் ஆகவேண்டியதைத் தொடர்ந்து செய்யவேண்டுகிறேன்.

(திராவிட நாடு - 31.10.1948)