அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இஞ்சிபத்தனே மேல்!

பாண்டியனின் தேவியின் காற்சிலம்பைக் களவாடுகிறான் பொற்கொல்லன், வஞ்சிபத்தன், வஞ்சிபத்தனின் குமரியையே களவாடுகிறான் இஞ்சிபத்தன்! இவன் செய்யும் மற்றோர்செயல், மிகச்சாதாரணமானது அவனுடைய மொழிப்படி! கொடுப்பது பொன் பெறுவதுயித்தளை! அவனிடம் பான் கொடுப்பார் பித்தளைதான் பெறுகிறார்கள். அத்தகைய புரட்டிலே புரள்கிறான் இஞ்சிபத்தன்! விலாசமென்னவென்று கேட்காதீர்கள். நிஜத்திலில்ல இஞ்சிபத்தன், சினிமாப் படத்தில் கண்ணகியில்!

இந்த இஞ்சிபத்தன் காமிக் என் புகுத்தப்பட்ட என்று கொஞ்சநேரம் யோசித்தேன், பிறகு தெளிவாக எனக்கு அதன் காரணம் விளங்கிவிட்டது. தெளிவான எனக்கு அதன்காரணம் விளங்கிவிட்டது. இஞ்சிப்பத்தன் பொன் பெற்று, கொடுத்தோருக்கு பித்தளையைத்தந்து தான், கண்ணகி படக்காட்சியின் சூட்சமத்தை விளக்கும் யுக்தி என்று கண்டு கொண்டான்.

சேரன் செங்குட்டுவனின் தம்பி, இளங்கோவடிகளுக்கு செந்தமிழில், இயற்றிய சிலப்பதிகாரம் எனும் பொன் இளங்கோவன் எனும் புனைபெயர் பூண்ட தோழாரால், பித்தளையாக்கப்பட்டிருக்கிறது! சிலப்பதிகாரப் பொன்னை, சினிமாக்கதையெனும் பித்தளையாக்கிய இளங்கோவன், பொன்னைப் பித்தளையாகமாற்றித் தரும் பொற்கொல்லன் காமிக் மூலம், தம்மை அறிமுகப் படுத்திக்கொள்கிறார், என்னே பரிதாபம்!

கதை, சிலப்பரிகாரத்தைத் தழுவியது என்று விளம்பர படுத்தப் பட்டிருக்கிறதே அதையேனும் மாற்றிவிட வேண்டும், இல்லையேல் தோழராவது இளங்கோவன் எனும் தமதுபெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டிலொன்று நடவாமுன்னம் நான் என்கருத்தை மாற்றிக்கொள்ளவதற்கில்லை என்பதைக் கூறித்தான் ஆகவேண்டி இருக்கிறது.

இளங்கோவன், உயிர்த்ததும்பும், உணர்ச்சிபொங்கும் வரை எழுதவல்லாத வெறும் எழுத்துக்கோர் பைத்தியக்காரராக இருப்பின், நான், பொருட்படுத்தியிருக்கமாட்டேன், இந்தக்குறை கூறலைத்துவக்கியுமிரேன் எத்தனையோ குப்பையிலே இதுவுமொன்று, சொத்தை பிடித்த அத்திப்பழத்திலே எந்தப்பாகத்தை நல்லதென்று கொள்ளமுடியும் என்றெண்ணி இருந்ருப்பேன். ஆனால், இளங்கவோன், சினிமா உலகத்திலும், செந்தமிழும், உயிர்நடையும் இருக்கமுடியும் என்பதையும், உரையாடலை ஊரார் ரசிக்கமுடியுமென்பதையும் மெய்ப்பித்தவர். எனவேதான, அவர்மீது, இம்முறை அவர் கண்ணகி கதை கோர்த்ததிலும், உரையாடல் தீட்டியதிலும், நான் குறைகாணவும், கண்டிக்கவும் முனைகிறேன். அவர் எழுத்து, தமிழகத்துக்குப் பயன்பட வேண்டுமென்பதற்காகவே, அவர் கொண்டுள்ள மனமாசு போக்கமுயல்கிறேன். அதிலே நான் வெற்றிபெற்றாலும் பெறாமற் போனாலும், நீங்கள் விஷய விளக்கம் பெறுவீர்கள், அதுபோதும் எனக்கு!

“மாதவியா! கண்ணகியா!! மாதவியானால் மடிமேல்வா கண்ணகியானால் கடுகிப்போ!” என்று, சங்கீதக்கோவலன், ஆர்மோனியக்காரரை முறைத்து, தபேலாக்காரரைக் காய்ந்து, சபையோர்முன் கைகூப்பி நின்று கதறுவதும், மாதவி கோவலனைப் படாதபாடு படுத்துவதும், கோவலன் செய்துதந்த தங்கச்சிலை, மாதவியை விளக்குமாறு கொண்டு அடிப்பதுமாக, காட்டப்படம், காணகடூரமும் கண்ணுக்குப்புண்ணுமாக இருக்கும், நாடகம். அந்த ஆபாசத்தை எண்ணுந்தோறும் மனம் வேகாதிருப்பதில்லை. எத்தகைய பாத்திரம் மாதவி, இளங்கோவடிகளின் சித்திரத் தமிழிலே! எவ்வளவு இழிந்தகுணத்தின் இருப்பிட மாக்கப்படுகிறாள் நாடகமேடையிலே!!

இசைவல்லவள், ஆடலழகி, அபரஞ்சிப்பதுமை உயிர்பெற்றதன்ன அமைப்பினள், நற்குணங்கள் கொண்டவள், கலையின் மணம், மாதவி! கோவலன் மீது அவள் கொண்ட காதல், காசுக்காக அல்ல! கோவலன் கொலையுண்டது கேட்டதும், துறவுபூண்டு விடுகிறான், தூய உள்ளம் படைத்த அத்தோகை
யாள்! உலகம் போற்றும், மணிமேகலையைப் பெற்ற மணி வயறுபடைத்தவள் மாதவி! அத்தகைய மாசிலாமணி, நாடகமேடையிலே, மோசக்காரியாக, நயவஞ்சகியாக, குடிகேடியாக, கோணற் குணங்கொண்டோளாக, பணம் பறிக்கும் பேயரக, அன்பு என்பதையே அறியாத அக்ரமக்காரியாக, கோவலனைக்கொடுமை செய்து விரட்டிடும் விபசாரியாகக் காட்டி, மக்களின் மனதிலே மாதவி என்றதும், வெறுப்பும் கோபமும், கேலியும் கண்டனமும் பிறக்குமாறு செய்தனர், நாடகங்களை நடத்தியவர்கள். சிலப்பதிகாரத்தைச் சித்திரவதை செய்து விட்டனர். (மலர் முகத்தவளை மந்திமுகத்தினளாக்கி, புன்சிரீப்புக்காரியை முகாரி குடிகொண்ட முகத்தோளோக்கிடும், கோரம்போன்றது, அவர்கள் செய்த கலைக்கொலை!) தாசியின் மோசத்தை விளக்குவதையா, இளங்கோவடிகள் கருத்தாக அமைத்தார் தமது சீரியநூலிலே! இல்லையே! எத்துணை உயர்தரமான கருத்துக்களை உள்ளடக்கியது சிலப்பதிகாரம்!! அதன் நாடக்காரர்கள் எவ்வளவு கெடுக்கவேண்டுமோ அவ்வளவு கெடுத்து வைத்தனர்.

இந்தக் கலைக்கொலை, கண்ணகி படத்திலே இராது என்றே நான் எண்ணினேன்! என் எண்ணத்தை ஈடேற்ற முடியாது என்றுரைத்து விட்டார் இளங்கோவன் - பழயவரல்ல, புதியவர். மாதவியை, நாடக மேடையிலே சித்தரிப்பதுபோலச் செய்யவில்லை. அது வரை மகிழ்ச்சியே! ஆனால், இவர் தீட்டிடும் கதையிலும், மாதவியின் நடனம், மாலை வீடு படலம், கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியாது கோவலன் கஷ்டப்பட்டது ஆகிய காட்சிகள் உள்ளன. நான் கேட்கிறேன், இதுசிலப்பதிகாரமா? என்று ‘நாடகமேடைக்’ கோவலனுக்கும் நண்பர் தீட்டியதற்கும், அதிக வித்தியாசமில்லையே இதற்கு இவரின் எழுத்துப் பயன்படுவதுகண்ட நான், யாரை நோவது என்று தெரியாது தவிக்கிறேன்.

கண்ணகி ஒரு பத்தினி! மாதவி பரத்தை, ஆனால் அன்பு வயப்பட்டு, ஆழ்ந்த காதலால் கோவலனை அபிஷேகித்த அருங்குணவதி. பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி, கணவன் இறந்தது கண்டு மனம் உடைந்து மாண்ட மற்றோர் பத்தினி, இத்தகைய மூவரின், முக்குண விளக்கச் சித்திரம் சிலப்பதிகாரம்.

அவர் மாண்டபின் எனக்கேன் வாழ்வு! எனக்கு எது இன்பம்? எனக்கு எதற்கு அலங்காரம்? என்றாள் மாதவி.

மன்னன் மாண்டபின் மாநிலத்தில் நானிருப்பது முடியுமோ, முறையாகுமோ, அவர்சென்றவழி நானும் செல்வ÷ன், என்று கதறுகிறாள் கோப்பேருந்தேவி, பாண்டியனின் மனைவி.

அவர் இறந்தாரா? அவரைக் கொன்றறார்களா பழிக்கப்பழி! இரத்தத்துக்கு இரத்தம்; என்று கர்ஜனை புரிந்து, கணவன் கள்வனல்ல, களவனென்றுரைத்த மன்னனின் கோல் செங்கோலால்ல, என்பதை உலகுக்கு உணர்த்திய வீராங்கணை, கண்ணகி.

இளங்கோ வடிகள். தீட்டிய இம் முப்பெரும் மாதர்களின் இயல்புகள் எவ்வளவோ பாடங்களை உலகினோர் உணரவைக்க உதவுகின்றனர். ஆனால், கண்ணகி படத்தைக் கண்டவர்கள், என்ன பாடத்தைப் பெறமுடியும் என்று என்னைக்கேட்டால், நமது குடும்பங்களே பரவாயில்லே, ஆண்டவன் குடும்பத்திலே இருப்பதோ ஓயாததொல்லை, அதன் பயனாக மானிடர் படும்பாடு கொஞ்சமில்லை, ஆகவே உலகினோரின் கஷ்டம் குறையவேண்டுமானால், கடவுளின் குடும்பக்கோளாறு தீரவேண்டும், என்ற இவைகள் தான்!

கோவலன் வெட்டுண்டதும், பாண்டியன் கோல் கெட்டதும், கண்ணகி கஷ்டப்பட்டதும், இன்னோன்ன பிற இடுக்கண்கள் நேரிடக் காரணம் என்ன? இளங்கோவன் தீட்டியுள்ள கதையின்
படி பார்த்ததால், இவ்வளவு தொல்லைக்கும் துயருக்கும் காரணம் பரமசிவன் குடும்பத்திலே நேரிட்ட ஒருவம்புதான்! கடவுள் வீட்டு வம்பு, கோவலன் உயிருகுடிக்கும் பாம்பாகிறது! இதனை எந்தவிதமான நீதியிலே, சேர்ப்பதோ நானறியேன், தோழர்களே!

அன்றோர் நாள், அரன் உழையும், குமாரர்களும் காணா, காண்டமாடிக்கொண்டிருந்தார். தாண்டவத்தைக்கண்டு விநாயகரும் முருகரும் ‘சபாஷ்’ கூறுகின்றனர். பார்வதிக்கோ பொறாமை மேவிடுகிறது.

இதென்ன பரதா! கடவுளுக்குமா பொறாமை குணம் உண்டு? அதிலும் கணவனின் கீர்த்திக்கு மனைவி பொறாமைப்படுவது, மும்மலம் நீங்கப்பெற்றாத முற்றரிவுகிட்டாத, மூலப்பொருளைச் சேவித்தே மோட்ச சாம்ராஜ்யம் செல்லவேண்டிய, சாமான்ய மக்களுக்குள்ளேயே இராதே, முழுமுதற் கடவுளின் மனைவிக்கு அவருஐடய தாண்டவத்தைக் கண்டு பொறாமை உண்டாகிவிட்டது என்றுரைக்கிறாயே கடவுளின் இலட்சணம் இதுவா? - என்று என்ணை கேட்காதீர்கள். நான் இளங்கோவன், தீட்டியுள்ளதைத் தீட்டி, உம்மிடம் நீட்டுகிறேன், கைச்சக்கைக் தீட்டினேனில்லே.

சில சமயங்களிலே நான் எண்ணிக்கைக் கொள்வதுண்டு, நல்லவேளையாக நாம்மானிடக் குடும்பத்திலே பிறந்தோம், தேவகுடும்பத்திலே பிறந்திருந்தால் என்னென்ன பட்டிருப்போமோ, எத்தனை ஆபாச ஆட்டங்கள் ஆடியிருக்கவேண்டுமோ, என்று அவ்வளவு கோளாறுகள், கோணற்சேட்டைகள் தேவ குடும்பங்களிலே, ரிஷி ஆஸ்ரமங்களிலே, தபோதனர்களின் பர்ணசாலைகளிளே, கைலாயம், வைகுந்தம் பிரம்மலோகம் ஆகிய இடங்களிலே நடந்தனவென்று நமது புராணங்களிலே காணப்படுவது போன்ற அக்ரம நடத்தைகளை, இங்கு ரஸ்புட்டீன் செய்திருக்க முடியாது ஆல்கபோன் செய்திருக்க முடியாது. எத்தகைய காமுகனும் செய்திருக்க முடியாது, நான் நாத்தீகம் பேசவில்லை நண்பர்களே! ஆத்திதம் பேசுபவர் அளன்து கொட்டுகிறார்களே, அவற்றின் ஆபாசத்தை அறிந்தோர், அவ்விதமான ஆபாசலோகத்திலே பறவாமல், இங்கு பிறந்தோமே என்று எண்ணி அகம கிழ்வர் என்றே கூறுகிறேன். பாருங்கள், காகுரோத, மதமாச்சரியாதிகளையும் ராகத்துவேஷர்களையும், இந்திரியச் சேட்டைகளையும், கடந்த நிலையே யோகிகலும்; தபோதனர்களும், ரிஷிகலும் மகான்களும் மகாத்மாக்கலும் வேண்டுகின்றனர். இதற்காக நீர் நின்று தவஞ்செய்தோர், நெருப்பிலே படுத்து தவஞ் செய்தோர், தலைகீலாக நின்று தவம்புரிந்தோர், ஊசிமுனையின்மேல் நின்று ஓங்காரச் சொரூபத்தைக் காண தவமியற்றினோர், சதையை அறுத்து யாகத்தியில் இட்டோர், என்று எத்தனை எத்தனையோ விதவிதமான கோரமான தவங்களைச்செய்தனர். என்று புராண இதிகாசாதிகள் புகல்கின்றன. இவ்வளவு கடுந்தவம் இயற்றி, தேவலோக வாசம் பெறுகின்றனர். ஆனால் அங்கபோன பிறகு, எத்தகைய வாழ்க்கை! அதே புராணாதிகள் தேவவாழ்க்கையையும், அதனால் ஏற்படும் வக்கிர வரலாறுகளையும், கூறுவதைக் கூர்ந்து நோக்குவோர், எந்தக்காமக் குரோத மகாத்மாக்காரிங்களையும் இந்திரிய சேட்டைகளையும் விடுத்தால் வேவலோக வாசம் கிடைத்ததோ, அதேபேர் வழிகள், மதனலீலா விநோதர்களாகவம், ராஜதந்திர நிரணர்களாகவும், காமுகர்களாகவும், கபட வேட்தாரிகளாகவுமே வாழ்கின்றன என்பதையே காட்டுகிறது. இது பொறுத்தமானதாகுமா என்று உமது பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பாருங்கள். அக்ரமான கதைகளய்யா, தேவலோகத்து நடவடிக்கைகள்!

“ஏடா! பிரமனே! உனக்கு அவ்வளவு கவமா என் தலையிலே ஒன்றைக்கிள்ளி விடுகிறேன் என்று சிவனார் சினந்துகூறி, பிரமனின் சீரத்தை கொய்தது, எங்கே என்று எண்ணுகிறீர்கள்? பாபாத் மக்கள், பாமரர், வினையின் விளையாட்டுக்கருக்கள் சகடர் என்று கூறப்படும் மக்கள் வாழும் இந்த மாநிலத்திலே நடந்த தல்ல! சகலமும் உணர்ந்து, சராசரத்தைப் படைத்து, எங்கும் நிறைந்து, எதற்கும் காரணமாகி, எந்தக்காரியத்துக்கும் பொறுப்பாக உள்ள பரமபிதாவின் மண்டலத்திலே, இது நடக்கிறது நடந்ததா என்று என்னைத் திருப்பிக்கேட்க வேண்டாம். நான் கண்டேனில்லை. மானிடரிலே இவைகளைக் கண்டோரில்லை. கண்டோர் விண்டது மில்லை விண்டோர் கண்டதுமில்லை! நடந்ததாகப் புராணம் நாட்டிலே இருக்கிறது, கடிக்கின்றனர், பரம பக்குமான்கள் இதனை ரசிக்கின்றனர், பூரிக்கின்றனர், என்றோ அவர் பெருமை! என்று தொழுகின்றனர்.

காட்டிலேதிரியும் கள்ளர் கூட்டத்திலே, ஒருவர் தலையை ஒருவர் அறிவாளால் வெட்டுகின்றனர், கொல்லைச்சண்டை, கொண்டைக்காரியிடம் கொல்லையிலே கோழி கூவும் நேரத்திலே பேசியதால் வந்த சண்டை வரப்பு வாயக்கால் சண்டை, முதலியவற்றிலே தலை உருளக்கேட்டிருக்கிறோம். அத்தகையவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று தூற்றுகிறோம், கள் என்று ஏசுகிறோம், கொலைபுரியும் கொடுமை யாளர்கள் என்று பேசுகிறோம். சட்டம் தண்டிக்கிறது. இதோ, புராணத்தின் படிபார்த்தால், திருஷ்டி கர்த்தாவின் சிரத்தைச் சின்மயானந்த சொரூபி கிள்ளி எறிகிறார்! நமது கடவுள்களின் இலட்சணம் இதுவென்று புராணீதர்கள் தீட்ட, அதனைக்கெட்ட, சாதுக்கள் என்ன ஊற்றிக்கழுவிச் சுத்தம் செய்வது, கூறுங்கள். நமது நல்ல வேலைதானே இத்தகைய கோரம குதிக்கும் இடத்திலே இல்லாது, கொலை கொள்ளை, களவு முதலியன புற்றில் அடங்கி இருக்கும் பாம்பு போல் பதுங்கிக்கொண்டுள்ள இடத்திலே இருக்கிறோம். என்று நான் எண்ணி மகிழ்வதுண்டு. ஒரு நாரதரிடம் நாம் சிக்கிக்கொண்டால் எவ்வளவு பாடுபட்டிருப்போம் எவ்வளவு பாடுபட்டார்கள் தேவர்களும், மவரும், அந்த பிரம்மச்சாரியின் கலக சுபாவத்தால்1 ஆஸ்ரமத்திலே இருக்கும் அகலிகையை, இந்திரன் கற்பழித்ததும், அதற்காகக் கோழியுருக் கொண்டு சுவியதும் பின்னர், உடலெங்கும் யோனிஆக என்று முனிவர் சாபமிட முழித்ததும், பின்னர் உனக்குமட்டுமே அந்தக்கோரம் தெரியும், மற்றவர்களுக்கு நீ ஆயிரங்கண்ணுடையோனாகவே இருப்பாய் என்று மாற்று பெற்றதுமாகிய கதைகளைப் படிக்கும் போது எவ்வளவோ, மேலப்பா, இந்த லோகம், இங்யே உடைக்கோ, மனைவிக்கோ, உருக்கோ, பேருக்கோ இத்தனை பெரியவர்கள் இத்தகைய ஆபத்து வருவதில்லை, என்று எண்ணி திருப்தி அடையாமலிருக்க மடியுமா, கூறட்டும் நமது ஆத்தீக ஆழியிலே அனுதினம் மூழ்கிடும் அன்பர் குழாங்கள்.

தேவலோக விஷயமாகக் கூறவந்தது, கண்ணகி கதைக்கு மூலமாக, இளங்கோவன் தீட்டியதை எடுத்துரைக்கத் தொடங்கியதால், மேலே கூறுவோம் கேளுங்கள். சிவனாரின் தாண்டவத்தைக் கண்டு பொறாமை கொண்ட பார்வதியார், “நிறுத்து உன் நர்த்தனத்தை” என்று சீறுகிறார். சிவனார் ஏன்? என்று கேட்கிறார். பேச்சு முற்றுகிறது. “சரி! சக்தி பெரிதா சிவன் பெரிதா? என்று உமை உக்கிரத்துடன் கேட்கிறார்.

பாருங்கள் தோழர்களே! ஆண்டவன் குடும்பத்திலே சதிபதி ஒற்றுமை இருக்கும் விதத்தை! யார் பெரியவர்கள் என்ற சண்டை நடக்கிறது, சகலமும் உணர்ந்தவரின் சன்னதியிலே.

சக்திதான் பெரிது! சிவமே பெரிது! இல்லை சக்தி பெரியது!, இல்லை, இல்லை, சிவமே பெரிது! என்று சம்வாதம் நடக்கிறது. கோபச்சிரிப்பு வேறு! முடிவில், நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய். நீ பூலோகத்திலே பிறந்து படாதபாடு பட்டு. பிறகு எம்மை வந்தடைவாய்” என்று சிவனார், சக்தியைத் தேசவாஷ்டம் செய்கிõறர். அந்த சக்திதான், கண்ணகி! இது இளங்கோவனின் கதை, இளங்கோவனுடையதல்ல! இது சினிமா அதிகாரம்! சிலப்பதிகார மல்ல! இது சிந்தனைக்குத் தேவையானதா, சிவசக்தி இலலட்சண விளக்கத்துக்கு அவசியமா, பகுத்தறிவுக்கு ஏற்றதா, பாமரரின் அறிவுக்கு விருந்தா, அன்றி அவர்களுக்கு அபினா, என்பதை அன்பர்களே, யோசித்துப் பாருங்கள்.
கண்ணகி பல கஷ்டமனுபவித்து, பாண்டியனை மாளச்செய்து, மதுரையை தீப்பிடிக்கச்செய்து, ஓய்ந்து நிற்கையிலே, சிவனார் கூப்பிடுகிறார், “சக்தி! ஏ! சக்தி!” என்று கண்ணகி விழிக்க, சிவனார் விளக்க, பின்னர் சக்தி, கண்ணகி உருவத்தை உலகோர் மறவாதிருக்க, சிவனார், சிலையாக்கி, “இதனை உலகோர்பத்தினிக்கடவுளாகக்கொண்டு வணங்குராக” என்று கட்டளைப் பிறப்பிக்கிறார். ஆரம்பத்திலே சக்தி சிவசம் வாதம் என்ற புராண ஆபாசத்தை இளங்கோவன் தீட்டவே, இறுதியிலும் ஆபாசத்துடனேயே முடிக்க வேண்டி நேரிட்டுவிடுகிறது. இடையிலேயும் இதனால், மாதவியைப்பிரித்து கோவலன், கண்ணகியிடம் வந்து சேர்ந்ததும், கண்ணகி கணவனைத் தொடவும் கூடாது என்று “தீண்டினால் திருநீலகண்டம்” என்றுகூறி விடுகிறான் கோவலன்! ஏன்? சக்தியே கண்ணகியாகத் தோன்றுவதாகக் கதைதுவக்கியதால், கைபடாத பத்தினியாகவே இருக்கச்செய்யவேண்டிய பொறுப்பும், கடைசீயில், சிவனாரிடம் சக்தியாகப் போய்ச்சேரச் செய்யும்
பொறுப்பும் கதை எழுதினோருக்கு ஏற்பட்டது! சேற்றிலே கால்வைத்தால், கழுவித்தானே தீரவேண்டும். செந்தேலைத் தீண்டினால், அது கொட்டித்தானே தீரும். அதுபோல், புராண ஆபாசத்துடனேயே முடிக்கவேண்டி நேரிடுகிறது. இளங்கோவடிகளின் செம்பொன்னை இளங்கோவன் பித்தளையாக்கித் தருகிறார் என்று நான் கூறுவதினாலே தவறா, கூறுங்கள் கேட்போம்.

ஏன், கதையை இப்படி கோணலாக்கினார்கள்? சிலப்பதிகார ஆசிரியரின் சிந்தனையிலே கோளாறு கண்டுபிடித்து அதனைச் செம்மைப்படுத்த சிவலோகநாதனைப் பிடித்திழுத்து வைக்கவேண்டிய காரணம் என்ன? என்று கேட்பிர்கள். அதனை அறிய, ஆதியை விட அந்தத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் அன்பர்களே.

நான் கூறினேன், கதையின் கடைசீ கட்டத்திலே, சிவனார் தோன்றி, சக்தியை மன்னித்து கண்ணகிச் சிலையைத் தமது கடாட்சத்தால் உண்டாக்குவித்தார் என்று அந்தக் கட்டத்திலே இருக்கிறது சூட்சமம்! இங்கு “இளங்கோவன்” கலைக்கொலை மட்டுமல்ல இனக்கொலை செய்கிறார். அதை எண்ணும் போது இருதயம் துடிக்கிறது. கண்ணகியின் சிலை, இற்பட்டவிதம் என்ன, இலக்கியச் சான்றுப்படி? இளங்கோவன் எழுத்தின்படி எண்ணம்வேறு அவரது எழுத்துவேறு, சிலையைச் சிவனார் சிருஷ்டிக்கிறார். ஆனால், செந்தமிழ் பயின்றவரனைவரும் அறிவர், கண்ணகியின் வரலாற்றினைக் கேள்விப்பட்ட இளங்கோவடிகள் நூல் இயற்ற, இளங்கோவடிகளின் சகோதரர், சேரன் செங்குட்டுவன், அத்தகைய பத்தினிக்குக் கோயில் கட்டுவேன், சிலை அமைப்பேன் என்று கூறி, சிலைக்குக்கல் இமயத்திலேடுபேன் என்றுரைத்து இமயம் சென்று ஆங்கு எதிர்த்த கனகவிசயன் எனும் ஆரிய மன்னர்களைப் போரிலே வென்று, அவர்களின் தலைøமீது கல்கொணர்ந்து, பத்தினிக்குச் சிலையும் கோயிலும் அமைத்தான் என்பதை திராவிட மன்னன், திராவிடப் பெண்மணியின் திராவிடக் குணத்தை உலகு உணரட்டும் என்பதற்காகக் கோயிலமைக்க, ஆரிய மன்னரை முறியடித்து, அவர் தலைமீது கல்லை ஏற்றிக்கொண்டு வந்தான் என்ற இந்த இனச்சிறப்பை மறைக்க, மக்கள் தெரிந்துகொள்ளாதிருக்க, தெரிந்த சிலரும் திகைக்க, சிலை சிவனார் செய்தார், காரணம் சக்தியே கண்ணகியாக அவதரித்தது என்று புனைசுருட்டு புகுத்தப் பட்டிருக்கிறது. தோழர்களே இது கலைக்கொலையாக மட்டுமிருப்பின், தெரிந்தது அது தான் போலும் என்று பரிதாபப்பட்டு இருப்பேன், இலக்கியக் கொலையாக மட்டுமிருப்பின் இதற்குமேல் எதிர்பார்க்க முடியாது என்றெண்ணிச் சும்மா இருப்பேன், இது இனக்கொலை! திராவிடர் ஆரியர் என்ற இனப்பாகுபாடு, பூர்வகாலப்போர், திராவிடமேம்பாடு ஆகியவற்றை வேண்டுமென்றே மறைக்கச் செய்யும் சதி! இதனைத் தமிழகம் தாங்குவதா! இலக்கியம் கற்றோரே. சிலப்பதிகார ஆராய்சியாளரே! சிந்தனைக்குச் சற்றே வேலை கொடுங்கள், இந்தச் சித்திரவதைக்கு நீங்கள் உடந்தையா? கண்டும் கேட்க மறுக்கும் போக்கு உதவுமா? எதற்காகச் சிலைசெய்த வரலாற்றை இங்ஙனம் தலைகீழாக மாற்றுவது என் இந்தத் தெகிடுதத்தம்? கேட்பார் இல்லையா? இந்நாட்டிலே இலக்கியக் காப்பாளர் எதெதற்கோ எவரெவர் மீதோ சீறுகின்றனரே, சிலப்பதிகாரத்தை இந்தச் சித்திரவதை செய்திருப்பதைக் கண்டு, சீற்றம் எழ வேண்டுமா? செந்தமிழ் நாட்டவரின் சிறப்புக்கு இத்தகைய பங்கம் விளைவிக்கத் துணியும் செயலைக் சண்மார்க்க முன்வர வேண்டாமா? தமிழர் இல்லையா, தமிழ் காதில்! சிலப்பதகாரத்தை அப்படியே படம் எடுக்க முடியுமா, சிற்சில மாற்றங்கள் சினிமாவுக்கேற்றபடி செய்யவேண்டாமா என்று வாதிடுவர். மாற்றம் தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எத்தகைய மாற்றம் தேவை! இஞ்சிபத்தன் செய்வது போன்ற மாற்றமா! என்ன ஆச்சரியம்! என்று இஞ்சிப்பத்தன் அடிக்கடி கூறக்கேட்டேன் காட்சியிலே, இஞ்சிபத்தளாக வந்த தோழர் N.கு. கிருஷ்ணன். இதனைச் சிலப்பதிகாரத்தைத் தழுவியது என்றும், தீட்டியவர் பெயர் இளங்கோவன் என்றும் விளம்பரம் செய்கிறார்களே இது என்ன ஆச்சரியம்! என்று கூறவில்லையே தவிர அவர் மனதிலே அதே எண்ணந்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

பழையகாவியம், சரிதம் ஆகியவற்றைத் திரைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதை நான் தவறென்றுக் கூறுபவனல்ல. கண்ணகி படத்திலேயே, இஞ்சிபத்தன் காமிக்செருகல். ஆனால், அதன் சோபிதம் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. அறிவுக்கு பொருத்தமான மூலக்கருத்துக்கு மாறாகவில்லாதத் துணைச் சருத்தாகவோ, விளக்கமாகவோ, இருக்கும் கருத்தை புகுத்தி அதற்கேற்ற காட்சிகளை அமைப்பதை நான் வரவேற்கிறேன். மூலக்கருத்தையே கொலை செய்யும் விதத்திலே மாற்றம் இருப்பது, அடாத செயலென்பேன். இளங்கோவடிகள், ஒரு பத்தினியின் பேருங்குணத்தை ஒரு பாத்தையின் காதல் மகத்துவகை, ஒரு வணிகனின் வாழ்க்கையில் பலமாற்றங்களை, ஒரு வறசகனின் மோசத்தை ஒரு மன்னனின் அவசந்ததை விளக்குகிறார், சிலப்பதிகார மூலம். கண்ணகி கதையிலே இந்த மூலமே முறியடிக்கப்பட்டு, இவ்வளவும் கைலாயத்திலே நேரிட்ட சிவ சக்தி சம்வாதத்தால வந்த தொல்லை என்று முடிக்கிறார், இளங்கோவன் ஜூனியர்! இது சரியா, முறையா! தகுமா? என்று கேட்கிறேன்.

அதிலும் சிலை உண்டான விதம்பற்றி அவர் திரித்திருப்பதைத் தமிழ் உணர்ச்சியுள்ள யாரும், மன்னிக்க மாட்டார்கள். சிலை உண்டானதற்கு, உண்மைக் காரணத்தைக் காட்டினால், ஏற்கனவே வீறுகொண்டெழுந்துள்ள தமிழருக்கு மேலும் வீரம் உண்டாகுமே, ஆரிய அதனை எங்கனம் செய்வார் என்று எவரேனும் வாதிடுவரேல் இது கூறுவேன், “உண்மையை உரைக்கும் நெஞ்சுறுகி பிறவாது போயினும், அண்டப்புளுகு கூறாமலாவது இருந்திருக்கலாம்.” சிலைக்காட்சியையே விடுத்துவிட்டு, கண்ணகி களைத்து நின்ற முடித்து அடுத்த காட்சியாக பல வருடங்களுக்குப் பிறகு என்ற தலைப்புடன் ஒரு கோயிலைக் காட்டி கண்ணகியின் சிலையைப் பலர் தொழுவதாகக் காட்டி முடித்திருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, சிலசமைத்த விஷயமாக உள்ள ஆரிய-திராவிடக் கிளர்ச்சியை மறைத்து, மாறாக ஒரு புராணம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. தெரிந்து, துணிவாக, தமிழரைத் துச்சமெனக் கருதி, செய்யப்பட்டது இது என்பேன்.

நான் படத்திலே உள்ள மற்றவற்றைக் குறை கூற முன்வரவில்லை. சினிமாத் துறையிலே ஈடுபட்டுள்ளவர்கள் கூறுவர்! கலை விஷயமாகவும், இன விஷயமாகவும், செய்யப்பட்டுள்ள, சகிக்கமுடியாத, மன்னிக்க முடியாத, கொலையை மட்டுமே நான் இங்குக் குறிப்பிட்டேன்.

கோவலனின், “சாந்தி முகூர்த்தத்தன்று” மாதவி நடனம் என்றிருக்கும் ஆபாசத்தையோ, இந்திரவிழாவுக்கு கோவலனும் மாதவியும் போனபோது, கற்பாறைகளும், விணையை எடுத்துத்தர வந்த பணிப்பெண் இரவரும் தவிர, விழாவிற்க பேறு யாரும் வரதிருந்த விந்தையையும், மாதவிக்கு அண்ணனாக ஒரு ஸ்திரி வந்திருந்து “மாமனாக” இருக்கும், கோரத்தையும் எடுத்துக் கூறுவது, என் வேலையாது நான் கொள்ளவில்லை. படத்திலே காணப்படும். இந்தச் சில்லறை ஆபாசங்கள் அத்தனையும், கண்ணகியாக வரும் தோழியர் கண்ணாம்பாவின் நடிப்பிலே, அடித்துத்த தள்ளப்படுகிறது. எனவே, படத்தின் மற்றப் பகுதி பற்றியோ, இளங்கோவனின் நடைபற்றியோ குறைகூறுகிறேன். ஆனால் இந்த இனக்கொலையை நான் மறவேன்.

ஆம்! நான் அந்தப்படத்தைக் தயாரித்திருந்தால், கதை தீட்டியிருந்தால், ஆரம்பம், எதுவாக இருக்கும்! சிவனும் சக்தியுமா வருவார்கள்! அவர்கள் கைலாயத்திலே இருப்பார்கள், கதையிலே தலைமீது கல்லை சுமந்துகொண்டுவரும் கனக விசுயரைக் காட்டுவேன். “தமிழ் மன்னனை எதிர்த்ததும் போதும், தலை சரிச்சல் கண்டதும் போதும்” என்று அவர்களைக்கூறச் செய்திருப்பேன். கண்கிக்குக் கற்சிலை செய்யும் வரலாறும், அகலிகை கல்லான வரலாற்றும், ஒப்பிடும் பேச்சை, கனக விசயனுக்கும், தமிழ்க மன்னனுக்கும் நடக்குமாறு செய்வேன்! ஆரியர் கொட்டம் அடக்கப்பட்டதை அக மகிழ எடுத்துரைப்பேன்.

மதுரை தீப்பற்றி எரிந்ததையும், மாயா சக்தி என்றுரைத்திரேன். மன்னன், இருதயத்துடிப்பினால் மாண்டான் என்று கூறுவேன். மன்னனின் மரணத்தையும் கண்கியின் கோலத்தையும் கண்டமக்கள், பொல்லாத வங்சிபத்தனாலல்லவா, இவ்வளவும் நேரிட்து என்று கோபித்து அவன் வீட்டில் தீவைக்க, அச்சிமயம் பெருங்காற்று அடித்துத் தீபரவ, பத்யத்தினியின் வாக்கினாலேயே தீ பரவிற்று என்று மக்கள் பயந்தோட, தீ அணைப்பாரற்று, மதுரையே அழிந்தது என்று விளக்கமுரைப்பேன். இத்தகைய மாற்றங்கள் இருக்குமேயன்றி இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை, சினிமா-அதிகாரம் பெற்றதனால், சித்ரவதை செய்திருக்கமாட்டேன்.

சர்க்கா நம்மிடமிருப்பின், கண்ணகி படத்திலே, முதல் ரீல், கடைசி ரீலை, இரண்டையும் சென்சார் போர்டார் நீக்கிவிட்டிருப்பர் என்றும் கூறுவேன். தமிழரின் முற்காலச் சிறப்பை மறைக்கச் செய்யப்படும் சதி, திரையிலுமா என்று சென்சார் போர்டார் சீறுவர். ஏன் மறைக்க வேண்டும் உண்மையை? என்று கேட்டார்.

பிரபாத் கம்பெனியார் சில ஆண்டுகளுக்குமுன்பு தயாரித்த அடிவானத்துக் கப்பால் என்ற படத்திலே ஆரியர் -அநாரியர் என்ற விஷயம், ஆரியர் மகத்தின் பேரால் அநாரியரைக் கொடுமைப்படுத்தி வஞ்சித்த வரலாறு, ஆரிய அநாரிய பேதம் காதலை மாய்த்த கோரம், ஆரிய குரு மக்களை ஆட்டிப்படைத்தது ஆகியவற்றை பச்சையாகவே படமெடுத்துத்தான் காட்டினார்கள்! அந்ததத் துணிவு, கண்ணகி படமெடுத்தவர்களுக்கு வரமாற்போனாலும், திரித்துக்காட்டுவதாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று கேட்கிறேன்.

தமிழரின் துரைத்தனம் இருந்தால் இத்தகைய செயல் நடக்காது என்று நான் கூறுவதை, வீண் மிரட்டல் என்று கருதாதீர். சில ஆண்டுகளுக்கு முன்பு “சிவாஜீ” படக்காட்சியை வடநாட்டிலே தயாரித்தார்கள். சிவாஜியின் வாழ்க்கை காட்டவேண்டிய பாடம், வீரம், உழைப்பு, தந்திரம், தீரம், இறுதியில், வைதிகத்துக்குப் பலியான கோரம், இவைகளே! படமெடுத்தவர்கள், இதற்கு நேர்மாறாக, சிவாஜியின் வெற்றிகளுக்குக் காரணம், ராமதாசர் ஆசீர்வாதம் என்றும், சிவாஜி, ராதாசரின் பாரதபூசை செய்தே பெரிய வெற்றி பெற்றார் என்ற கருத்தைக் கொண்டதாக அக்காட்சியைத் தயாரித்தனர். எங்கனம், கணணாகி படமூலம் பத்தினியின் பண்பு வெளிப்படுவதை விடச் சக்தி சில சம்வாதத்தால் நேரிட்ட சங்கடமே வெளிப்படுகிறதோ அதுபோலவே சிவாஜி படக்காட்சி மூலம், சிவாஜியின் வீரப்பிரதாபம் வெளிப்படுவதை விட ராமதாசரின் சக்தியே வெளிப்பட்டது. மராட்டியர்கள் இதனைத் தமது இனத்தைக் இழித்துக்காட்டும் படமெனக் கண்டுகொண்டனர். கிளர்ச்சி நடந்தது. கோலாப்பூர் மன்னர் முன்வந்தார். “இந்தப்படத்தை நமது சமஸ்தானத்திலே கொண்டுவரக்கூடாது” என்று தடை உத்திரவு பிறப்பித்தார். மராட்டியர் இருந்த இடமெங்கும் இந்த உத்திரவு போற்றப்பட்டது. பல இடங்களிலே படத்துக்குக் கண்டனம். படமுதலாளிகள் பட்ட கஷ்ட நஷ்டம் சொல்லிமுடியாது.

கோலாப்பூர் சமஸ்தானம் செய்ததை, தமிழரசு, செய்ய முடியாதா? அந்தவாழ்வு ஏந்தநாள் வரும், என்ற எண்ணமே மேலிடுகிறது, இத்தகைய சமயங்களிலே!

கண்ணகி எனும் அந்தத் தமிழ்ப்படக்காட்சியைக் கண்டதற்கு, வஞ்சிபத்தனைவிட இஞ்சிபத்தன், பலேகைகாசு ஆசாமியாக இருக்கிறார் என்று எண்ணினேன். கதைப்போக்கையும், கலைக்கொலை, இனக்கொலை ஆகியவைகளைக் கண்டபிறகு, இஞ்சிபத்தனே மேல்! இளங்கோவன், செய்ததைவிட, இஞ்சிபத்தன் செய்ததுபரவாயில்லை என்றும் எண்ணினேன். என்ன ஆச்சரியம், தமிழ்ப்படநிலைமை இப்படி இருக்கிறது, ஏன் செய்வது!

(திராவிடநாடு - 16.08.1942)