அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர் அடையும் பெருமை

“சிறைவாசமே, மேல்!” என்று சித்தம் கலங்காமல் கூறினார் அந்த விடுதலை வீரன். கோர்ட்டார் சட்டப்படி, அவருக்குத் தண்டனை விதித்தனர். “150 ரூபாய் அபராதம் செலுத்தித் தொகையைக் கட்டத்தவறினால், சிறைச்சாலைக்கு அனுப்பப் படுவாய்” என்று சிறைச்சாலைக்கே அனுப்புக! என்று கூறிவிட்டார் தண்டிக்கப்படுபவர்.

திடநெஞ்சம் இருக்கட்டும் ஒருபுறம். இந்தத் தண்டனையைப் பெற்றவர் செய்த குற்றம் என்ன? ஜாதி இந்துக்களுடைய மார்க்க உணர்ச்சியைப் புண்படுத்தினார்! எப்படி? கொலையா? களவா? கற்பழித்தாரா? கொள்ளையா? குடியா? சூதா? வஞ்சனையா? எது செய்தார்? இவை ஏதும் செய்யவில்லை. இவை ஏதேனும் செய்திருப்பின், அவர் ஜாதி இந்துக்களிடம் மார்க்க உணர்ச்சியைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கமாட்டார். எந்த மார்க்கத்துக்கும், மனித உரிமைக்கும் ஒவ்வாத செயல்புரிந்தார் என்று கூறலாம். ஆனால் அவர் செய்தது குறிப்பாக இந்து மார்க்க உணர்ச்சியைப் புண்படுத்திய குற்றம் எவ்விதம்? அங்கேதான் இருக்கிறது, சர். சண்முகத்தைக்கூடச் சீடராக்கிக் கொண்ட புனிதமான இந்து மார்க்கத்தின் (அவ) லட்சணம்.

மங்களூர் நகராட்சிக் கழகத்திலே, தோழர் வாமனா ஒரு உறுப்பினர். அவர் 1944, ஜூலை மாதத்திலே, இந்துமத உணர்ச்சியைப் புண்படுத்தினார். எங்ஙனமெனில், ஒரு ஆதித் திராவிடன் இறந்துவிட்டான். சுடுகாட்டிலே, ஆதித் திராவிடருக்குத் தனி இடம் இருக்கிறது. உயிருடன் இருந்த போதுதான் அந்த உழைத்து அலுத்த உத்தமன், ஊருக்கு வெளியே, நாறும் சரியிலே நாதியற்றுக்கிடந்தானே, பிணமான பிறகேனும் பேத வாழ்வு ஒழியட்டும், என்று வாமனா எண்ணினார் போலும். ஆதித்திராவிடப் பிணத்தை ஜாதி இந்துப் பிணங்களைச் சுட்டெரிக்கும் இடத்திலேயே சுட்டெரித்தார்! வைதீக இந்துக்களின் மனதிலே, கோபத்தீ கொழுந்துவிட்டு எறியத் தொடங்கிற்று. எப்படி, சுடுகாட்டிலே, இந்த வாமனா இந்த அக்ரமம் செய்யலாம்? உயர்ஜாதி இந்துக்களுக்கு என்று தனியாக உள்ள இடத்திலே தீண்டாதானின் உடலைத் தீயில் இடுவதா? புனிதமான நமது மத ஏற்பாட்டையல்லவா அந்தப் “பாவி” தீயிலிட்டான்! நாமெல்லாம், இந்து வைதீகர்களெல்லாம், பிணமாகி விட்டோமா? நாம் உயிருடன் இருக்கும்போது, உத்தமமான, நமது மத ஏற்பாட்டைக் குலைக்கிறாரே ஓர் ஆசாமி. இதைக்கண்டு நாம் வாளாயிருப்பதா? என்று வைதீக இந்துக்களுக்குக் கோபம் பொங்கிவிட்டது. கோர்ட்டிலே நிறுத்தப்பட்டார், தோழர் வாமனா! இந்துமதவாதிகளின் மனம் புண்படும்படியாக, ஆதித்திராவிடர்கள் அனுமதிக்கப்படாத இடத்திலே அக்ரமமாகப் பிரவேசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தோழர் வாமனாவுக்கு காசராகாட் சப் மாஜிஸ்ட்ரேட், 150 ரூபாய் அபராதம், அது கட்டாவிடில், சிறை வாசம், என்று தீர்ப்பளித்தார், முன்பொரு காலத்திலே அன்று, சென்ற கிழமை!! பிணத்தைச்சுடும் இடத்திலே பேதம்! அந்தப் பேதத்தை மதிக்காதிருப்பவருக்குத் தண்டனை! இத்தகைய நாட்களிலேதான் நாம் இருக்கிறோம், இருந்துகொண்டு, சுதந்தரம், சமதர்மம், விடுதலை வீரம், விஞ்ஞானம் என்று பலப்பல பேசுகிறோம். உப்புக் காய்ச்சியவர்கள் பகைவனை விரட்டப்பார்க்கிறோம், இராட்டை சுற்றி நாட்டை மீட்க எண்ணுகிறோம், மற்றும் பலப்பல செய்கிறோம், பேசுகிறோம்.

வர்ணாஸ்ரமம் என்ற சிறைச்சாலை! அதற்கு சாஸ்திரங்கள் என்ற இரும்புக்கம்பிகள்! கனபாடிகள் எனும் காவலாட்கள்! இந்தச் சிறைச்சாலையிலே, அர்த்தமற்ற கொள்கையே உணவு, ஆபாசச் சடங்கே, பானம்! இப்படி இருக்குமா என்று கேட்டால் இடி! எப்படி நம்புவது என்று கேட்டால், பிடிசாபம்! தோழர் வாமனா வர்ணாஸ்ரமம் என்ற சிறைச்சாலையிலே, வாடிடும் தோழர்கள் கோடிக்கணக்கிலே இருக்கக்கண்டு தான் போலும், சிறைச்சாலைக்கும், வீட்டுக்கும் பேதம் இல்லை என்ற மனப்பான்மை பெற்றார். சிறைச்சாலை, சில கட்டுதிட்டங்கள் உள்ள இடம், காவல் இருக்கிறது, குறிப்பிட்ட காலம், தங்கி இருக்க வேண்டும், மேலதிகாரிகளின் சொற்படி நடக்க வேண்டும், ஏதோ ஒரு குற்றம் செய்ததற்காக விதிக்கப்படும் தண்டனையை அனுபவிக்க வேண்டிய இடம். இந்து மார்க்கத்திலே பிறப்பது, அந்த மார்க்கப் பட்டியிலே பெயர் இருக்க இசைவது என்ற சிறைச்சாலையிலே வாழ்நாள் முழுவதும் மட்டுமன்று, பிணமான பிறகும், ஒவ்வொரு இந்துவும் இருந்து தீர வேண்டும்! சிறை அதிகாரிகள்போல, இந்துமதத் தலைவர்கள், இப்படி இப்படி நட, இன்னின்ன காரியாதிகளை இவ்விதம் செய், என்று கட்டளையிடுவர், கட்டுப்பட வேண்டும், எனவே வர்ணாஸ்ரமவாசிக்குச் சிறைவாசம் புதியதோர் தொல்லையாக இராது, என்ற மனோதத்துவத்தை நிலைநாட்டவே போலும் தோழர் வாமனா, சிறைச்சாலைக்குச் செல்லத் துணிந்தார்!

தோழர் வாமனாவின் தீரச்செயலை, தென்கன்னட மாவட்ட ஆதித்திராவிட சேவாசங்கத்தார் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலைவிட, அவருக்கும், அவர் காட்டிய சுயமரியாதை ஆர்வத்தை ஆதரிக்கும் தோழர்களுக்கும், அதிக மகிழ்ச்சியை, பூரிப்பை, பெருமையைத் தருகிற முறையிலே, மங்களூர் நகராட்சிக் கழகத்தார், சுடுகாட்டிலே, ஜாதிக்கு ஓர் இடம் என்று பிரிந்திருக்கும் பேதத்தை ஒழித்துவிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஒரு வாமனார் சிறைச்சாலை போனதன் மூலம், பன்னெடுங்காலமாக இருந்து வந்த பேதம் ஒழிந்தது, பீடை துடைக்கப்பட்டது. மனித உரிமைக்குத் தடை விதித்த மதமமதைக்கு மண்டையில் அடி கொடுத்த மங்களூர் நகராட்சி மன்றத்தினரை நாம் மனமாறப் பாராட்டுகிறோம். அவர்களை இந்த மகத்தான காரியத்தைச் செய்யத் தூண்டிய விடுதலை வீரனைப் பாராட்டுகிறோம்.

பிணத்தின் உரிமைக்குக்கூட இந்நாட்டிலே போராட வேண்டியிருக்கிறது, அவ்வளவு பெருமைக்குரியது, நமது புராதன, புண்ய, புனிதமார்க்கமாம் இந்து மார்க்கம்!! சீர்திருத்தம் பேசும் சிங்கங்கள் பலப்பல! அவை பெரும்பாலும் தேர்தல் தீனி கண்டே கொழுத்த தீனி! தோழர் வாமனா, அங்ஙனம் கொள்கைக்காகக் கஷ்டநஷ்டம் ஏற்கும் கண்ணியவானாக இருப்பது கேட்டு, சுயமரியாதை உலகு பெருமையடைகிறது! ஆம்! சிறைச்சாலைக்கும் வீட்டுக்கும் வேறுபாடு காணாத வீர உள்ளம் கொண்டாலொழிய, சீர் கேடடைந்துள்ள இந்தச் சமுதாயத்தைத் திருத்தி அமைக்க முடியாது; புத்துலகம் வேண்டுமானால், பூணும் ஆபரணம் பொன்னாக இருக்கமுடியாது. இரும்புச் சங்கிலி மாட்டிக் கொள்ளவும் நெஞ்சம் இடம் தர வேண்டும், இதிலென்ன பிரமாதமிருக்கிறது கொள்கைக்காக, உயிரையே உத்தமர்கள் இழந்துமிருக்கிறார்கள்!! வாழ்க வாமனா!!

ஆம்! ஆனால் இப்படி, எத்தனை வாமனா தேவை! எங்கெங்கு தேவை! எந்தெந்த காரியத்துக்குத் தேவை! என்பதை எண்ணிடும் போது, நெஞ்சம் திடுக்கிடும். திருத்த வேண்டியவை ஏராளமாக உள்ளன! சம்பிரதாயங்கள் அவ்வளவும், சாக்கடைப் புழுவாக உள்ளன, சீர்திருத்தவாதியின் நோக்கிலே, ஆனால் அத்தனை சம்பிரதாயத்துக்கும் சட்டத்தின் காப்பு இருக்கிறது, எனவே சம்பிரதாயத்தைத் தாக்கும்போது சட்டம் சீர்திருத்தவாதியைச் சுட்டிடத் தயாராகிறது. அந்தச் சூட்டுகோலின் முன் நிற்க எந்த அளவுக்கு உலகம் தயார் என்பதைப் பொறுத்தே இருக்கிறது புதுவாழ்வு! இந்த விடுதலை, புனா ஒப்பந்தத்தால் கிடைக்கவில்லை கதராடையும் காந்தியார் ஆசியும் பெற்ற அரிஜன மந்திரியாகத் தோழர் முனுசாமிப்பிள்ளை அமர்ந்ததால் வரவில்லை. ஒரு தீரன், கட்டு மீறுகிறேன், தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன், என்று கிளம்பினதால் ஏற்பட்டது. தொகுதி பிரித்தல், எண்ணிக்கை நிறுவுதல், கூட்டு மந்திரி சபை அமைத்தல் முதலியன பற்றிப்பேசும் அரசியல் கொலுப்பொம்மைகளுக்குப், பிணமான பிறகுங்கூட, பேதம் காட்டப்படும்போக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாது! பஞ்சம் பிணியைவிட அதிகக் கேடு பயக்கும் பயங்கரமான பழமையின் நினைவுபற்றி அவர்களுக்கு அக்கரை கிடையாது. இந்துமதத்தின் பேரால் நடக்கும் இத்தகைய இடர்கள் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை, நேரம் கிடைக்காது. ஜாதி இந்துக்கள், வாமனாமீது கோபித்துக் கொண்டது இந்து மதத்தின் உன்னதத் தன்மை கெட்டு விடுகிறது என்பதற்காக! கோர்ட்டார் வாமனாவைத் தண்டித்தது, இந்து மதவாதிகளின் மனம் புண்பட்டது என்பதற்காக!! எனவே, இந்துமதத்தின் மாண்பு, வர்ணாஸ்ரம முறைப்படிதான் இந்து வாழவேண்டும். வாழ்ந்து செத்தபிறகும், சாக இருப்பவர், அந்த வர்ணாஸ்ரம முறைக்குக் கேடு வராத முறையிலேதான், அந்தப் பிணத்தை அடக்கம் செய்ய வேண்டும், என்ற அளவுக்குச் சர்வாதிகாரம் செலுத்துவதுதான்! உயிருடன் இருந்தவரையில், “எட்டி நில், கிட்டே வராதே, தொட்டால் தீட்டு” என்று பேசச்செய்தது இந்துமதந்தான், பிணமான பிறகும், “இங்கே கொளுத்தாதே தீட்டாகிவிடும், இது உயர் ஜாதிக்காரர் கொளுத்தப்படும் இடம் தீண்டாதாருக்கு வேறு இடம்” என்று சுடுகாட்டிலே “சுதர்மம்” பேசுவதும் இந்து மதந்தான்! இப்படிப்பட்ட, கொடுமையைக் கூசாது செய்வது இந்துமதம் என்றாலும், சர். சண்முகம், “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்ளப் பெருமை அடைகிறேன்!” என்று கூறுகிறார்.

இந்துமதத்தைக்காட்டி மனித உரிமையை இழிவுபடுத்தியதை எதிர்த்துப் போராடி, சிறைச்சாலை செல்லத் துணிந்த வாமனா, “நான் ஒரு வீரன்” என்று கூறிக் கொள்ளவில்லை, கூறிக்கொள்ள மாட்டார், சர். செட்டியார் சாற்றுகிறார், “நான் ஓர் இந்து” என்று!!

பிணம் பேசாது! பேசும் பேர்வழிகளின் கதையைத்தான் பார்ப்போம்!

ஒரு குளம்! சிலர் நீராடினர்! அதற்காக அவர்கள் மேல் வழக்கு! வழக்கைக் கோர்ட்டார் தள்ளிவிட்டனர்! உடனே அப்பீல்! அப்பீலில், குளித்தவர்மீது குற்றம் என்று தீர்ப்பு!! எங்கோ ஒரு குறும்பராட்சியிலே நேரிட்டதன்று! மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் அரசாட்சியிலே, நீங்களும் நானும், (நாம் கிடப்போம், சாமான்யர்கள்) சர். சண்முகம் வாழும் நாட்களிலே, நடந்த விஷயம்.
பாலக்காடு நகரருகே உள்ள கானசாரி என்ற இடத்திலே கோகோடி என்று ஒரு கோயில், அதைச் சார்ந்து இரு குளங்கள். இங்கு, அப்பகுதியிலுள்ள உழவர்கள் நீராடினர். இந்தச் செயல் அங்கிருக்கும் நாயர்களுக்கு ஆத்திரமூட்டிவிட்டது. ஈழவர்கள் அந்தக் குளங்களில் நீராடினதால், குளங்கள் தீட்டாகிவிட்டன. அந்தத் தீட்டுப்போக, பரிகாரப் பிராயச்சித்தம் செய்து, மீண்டும் குளத்திதைச் சுத்தப்படுத்த வேண்டும், இதற்கான செலவுத் தொகையை ஈழவர்கள் தரவேண்டுமென்றும், ஆச்சார விரோதமாக மீண்டும் ஈழவர்கள், அந்தக் குளங்களில் நீராடாமல் இருக்கும்படி தடை உத்திரவு பிறப்பிக்கவேண்டுமென்றும், நாயர்கள் வழக்குத் தொடுத்தனர். ஈழவர்களின் உடல்பட்டுவிட்டால், குளத்துநீர் தீட்டாகிவிடுகிறதாம்! மறுபடியும் சுத்தம் செய்யச் செலவாம்!! எப்படி இருக்கிறது சம்பிரதாயத்தின்படி. ஜில்லா முன்சீப், நாயர்கள் தொடுத்த வழக்கைத் தள்ளிவிட்டார்! விட்டனரா வைதீகர்கள்? மேல்மன்றம் சென்றனர்! அங்கு, நாயர்கள் பக்கம் தீர்ப்பாயிற்று, அதாவது திருக்குளங்களிலே நீராடி, அவைகளின் புனிதத் தன்மையைக் கெடுத்துவிட்டதாகக் கருதப்பட்டு, மீண்டும் குளங்கள் புனிதமடைவதற்காகச் செய்ய வேண்டிய சடங்குக்கான செலவுத் தொகையை ஈழவர்கள் செலுத்த வேண்டும். இனி அக்குளங்களிலே நீராடக்கூடாது என்று தீர்ப்பு! ஈழவத் தோழர்கள், சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் செய்து கொண்டனர். ஜஸ்டிஸ் சந்திரசேகர ஐயர், ஈழவர்களின் அப்பீலைத் தள்ளிவிட்டார். குளங்கள் கோயிலைச் சார்ந்தவை. கோயில் பிரவேச உரிமை ஈழவருக்கு இல்லை. குளத்திலே நீராடும் உரிமையும் இல்லை, அந்த உரிமை, ஜாதி இந்துக்களுக்கே உண்டு. அந்த உரிமையைக் காப்பாற்றியாக வேண்டும்! எனவே ஈழவர்கள் அந்தக் குளங்களிலே நீராடினது வழக்கத்திற்கு விரோதம், ஆகவே (கீழ்க்கோர்ட் தீர்ப்பை ஆதரித்து) அவர்கள் பிராயச்சித்தத் தொகை செலுத்துவதுடன், இனி அந்தக் குளங்களிலே நீராடுவதும் கூடாது என்று ஜஸ்டிஸ் சந்திரசேகர ஐயர் தீர்ப்பளித்தார். 1945 ஜனவரி 17ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. நம் தமிழகத்தில் நாடார் என்றழைக்கப்படும் வீர அரச பரம்பரைக்கு மலையாள நாட்டில் ஈழவர் என்று பட்டம்.

குறிப்பிட்ட இடத்தைவிட்டு, வேறு இடத்திலே, “தீண்டாதானின்” பிணத்தைத் தீயிலிட்டதற்காக எந்த இந்து மத உணர்ச்சி புண்பட்டதோ, அதே உணர்ச்சியால்தான், நாடார் குல மக்கள், குளத்திலே குளித்ததால், நாயர்களின் மனம் புண்பட்டது. குளம் தீட்டுப்பட்டது என்று கூறச் செய்தது. அந்தச் சம்பிரதாயக் காப்பாற்றத்தான் சட்டம் பயன்பட்டது. குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்டவன்மேல் என்றாகிவிட்டது. அந்தக் குளத்திலே நீராடியத் தோழர்களின் நிலைமை, இன்னின்ன இடத்திலேதான் இன்னின்ன ஜாதியார் குளிக்கலாம், என்று, கட்டளையிட்டு, அதை யுக யுகமாகக் காப்பாற்றி வருகிறது ஓர் ஏற்பாடு! இந்தக் கொடுமையை “இந்துமதம்” என்று கூறுகிறார்கள். உரிமையைத் துளியும் தயக்கமின்றி மாய்க்கும், இந்து மத ஏற்பாட்டின்படி நடந்து நடந்து, நமது மக்கள் வாயில்லாப் பூச்சிகளாகிவிட்டனர். சிறுமை அடைந்தனர். என்றாலும், நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்ளப் பெருமை அடைகிறேன் என்று சர். சண்முகம் கூறுகிறார்! கூறாமல் என்ன? குளத்திலே மூழ்கியவர்கள் அவரைக்கண்டு பேசப்போகிறார்களா? அவர்கள் சாதாரண மக்கள், இவரோ, சர்! சுடுகாட்டிலே சுயமரியாதைப் போர் நடத்திய பிணமோ பேசாது! பிறகு பயம் என்ன? தாராளமாகக் கூறுகிறார், “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்ளப் பெருமை அடைகிறேன்” என்று!!

இந்து என்றால் துன்பப்பட்டவன் என்று உபநிடதம் கூறுகிறது.
இந்து என்றால் திருடன் என்று பாரசீக அகராதி கூறுகிறது.
இந்து என்றால் காட்டுமிராண்டி என்று காணப்படுகிறது. பழைய ஆங்கில அகராதியில்.
இந்து என்றால் ஆரியத்துக்கு அடிமை என்று தற்கால ஆங்கில அகராதி தெரிவிக்கிறது.

இந்து என்ற வார்த்தையும் இந்து மதம் என்கிற வார்த்தையும் எந்தத் தமிழ் இலக்கியத்திலும் கிடையாது என்ற போதிலும், “நான் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று சர். சண்முகம் கூறுகிறார்.

இந்து வேதத்தை ஒப்புக்கொள்பவர் இந்து என்றால், கிருஸ்தவர், முஸ்லீம், ஆகியோருக்குத் தனித்தனி வேதமும் அதனை ஆக்கியோர் காலமும் இருப்பதுபோல் இந்து வேதங்களுக்குக் கிடையாது. அவை யாரால் எப்போது எங்கு ஏற்பட்டவை என்று ஆராய்ச்சி முடிவு எதுவுமில்லை. முரண்பாடுகள் மிகுந்துள்ளது வேதம். அது நமது மொழியாம் தமிழில் இல்லை! மேலும் இந்த வேதத்தைத் தமிழர்கள் படிக்கக்கூடாது என்ற நிபந்தனை யுமிருக்கிறது.

வேதம் கிடக்கட்டும், தர்ம சாஸ்திரத்தைக் கவனிப்போம் என்றால் இந்து தர்ம சாஸ்திரமும் மனுதர்ம சாஸ்திரமும், பராசரஸ்மிருதியும் வேதசம்மதமானதாகும். இந்த சாஸ்திரமும் ஸ்திருதியும் தமிழனை மிருகங்களிலும் கேவலமாக மதித்துமிகத் தாழ்மைப்படுத்தி ஈனஜாதி என்று கூறுகிறது. இப்படிப்பட்ட தர்ம சாஸ்திரத்தை நம்புபவர் இந்து என்றால், ஈன ஜாதி என்று நமது பெயரை ஆரியப்பட்டியிலே பொறித்துவிட வேண்டும். என்றாலும், “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று சர். சண்முகம் கூறுகிறார்.

இந்துக்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடவுள் கிடையாது. பல கடவுள்களை ஒப்புக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் அவைகளுக்குள் ஒற்றுமையோ ஒழுக்கமோ இருப்பதாகச் சொல்லவும் சுலபத்தில் முடியாது. அப்படிப்பட்ட கடவுள்களையும் தமிழன் பக்கத்தில் சென்று நேராக பூசை செய்து வணங்க உரிமை கிடையாது! என்றாலும், “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று சர். சண்முகம் கூறுகிறார்.

இந்துக் கடவுள்களைப் பற்றிய ஆதாரங்களான புராணங்கள் மிக ஆபாசக் களஞ்சியமாகும். கேவலமான கட்டுக்கதைகள். அவைபற்றித் தர்க்கித்தால், அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தாலே பாபமாம், தோஷமாம். சிறிதளவு பொது அறிவு உள்ளவர்களும் அக்கதைகளை நம்பமாட்டார்கள். நம்பாவிட்டாலோ நரகமாம்! என்றாலும், “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று சர். சண்முகம் கூறுகிறார்.

இந்துக்களின் மூலக்கடவுள்கள் என்று கூறப்படும் திரிமூர்த்திகள், தங்களுக்குள்ளாகவே கலவி செய்து, பிள்ளைகள் பெற்றதாகவும், ஒருவர் மனைவியை மற்றவர் இச்சித்ததாகவுங்கூட இக்கட்டுக் கதைகள் உள்ளன. அப்படிப்பட்ட கலவியின் பயன்களான பிள்ளைகளும் இந்துக்களுக்குக் கடவுள்களாக இருக்கின்றன. கேட்டாலே கூசும் கேவலமான காரியங்களைச் செய்ததாகக் கூறப்படும் இக்கடவுள்களை நம்பித்தானே தீரவேண்டுமாம் இந்து மார்க்கத்தின்படி. என்றாலும் “நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று சர். சண்முகம் கூறுகிறார்.

நமக்கு - இன்றைய இளைஞருக்குத் - தலைநரைத்து, அவர்களின் பேரன்மார் நாட்டை ஆளும் நாள் ஒன்று வரும். அந்த நாட்களிலே, தடிதாங்கி நடக்கும் தாத்தாவை, அரும்பு மீசைப்பேரன் கேட்பான், “தாத்தா! உங்கள் காலத்திலே தாண்டவமாடிய ஜாதி வித்யாசம், நடக்கும் பாதை குளிக்கும் இடம், குடியிருக்கும் வீடு, உணவுச்சாலை, என்பதோடு மட்டுமில்லையாமே சுடுகாட்டிலே கூடக் கூத்தாடிற்றாமே! என்னதான் கோழைத்தனமும் சுயநலமும் உங்களுக்கு இருந்தாலும் தாத்தா! எப்படி நீங்கள் இவ்வளவு அக்ரமத்தைச் சகித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான். ஒரு பெருமூச்சுதான் பதில், தாத்தாவிடமிருந்து. பேரன் பெருநகை புரிந்து, “இவ்வளவு அக்ரமமும், இந்து மதத்தின்பேரால் நடந்ததாமே?” என்று கேட்பான். மௌனமாகி விடுவார் பாட்டன். விடமாட்டான் பேரன், “தாத்தா! இவ்வளவு கொடுமைகளைச் செய்த இந்து மதத்தை, உமது மதம் என்று கூறிக்கொள்ள, எப்படி உமது மனம் இடந்தந்தது” என்று கேட்பான். பதிலுரைக்கத் தாத்தா, தொண்டையைச் சரிப்படுத்தும் நேரத்திலே, பேரன், “ஒரு சர், மேதாவி உலகம் சுற்றியவர், விடுதலை முரசு கொட்டியவர், சுயமரியாதைக் கோட்டை கட்டியவர், யாரோ சண்முகமாமே, அவர் வாயாறக்கூறவும் செய்தாராமே நான் ஓர் இந்து என்று கூறிக்கொள்ளப் பெருமை அடைகிறேன் என்று எப்படித்தான் அவருக்கு மனம் இடந்தந்ததோ? அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு நீங்களெல்லாம், எப்படித்தான் சொரணையற்றுக் கிடந்தீர்களோ” என்று இடித்துரைப்பான்.

தம்பீ! அவர் சொன்னது உண்மை, ஆனால், நாங்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் உரையை மறுத்தோம். அவர் பெரிய மேதாவிதான், நாங்கள் சாமான்யர்கள், அவர் சீமான், நாங்கள் அன்னக்காவடிகள், அவர் பட்டம் பதவி பெற்றவர். நாங்கள் பகல் பட்டினிகள் என்றாலும் நாங்கள் தயங்கவில்லை, மயங்கவில்லை, “எதைக்கண்டு ஐயா! நீர் பெருமை அடைகிறீர்? அந்த மதத்தின் அடிப்படையான வர்ணாஸ்ரமத்தைக் கண்டா? அந்த மதத்தின் விளைவாக 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஆதித்திராவிடர் என்று அவதிப்படும் கோரத்தைப் பார்த்தா? ஆபாசக்கதைகளை ஆண்டவன் லீலை என்று கூறிய ஆனந்தத்தைக் கண்டா? பார்ப்பனியத்தைப் பயந்தெடுத்த பான்மையைக்கண்டா? பேதத்துக்கு வேத ஆதாரம் காட்டிய பேதமையைக் கண்டா? ஐயா! எதைக்கண்டு நீர் பெருமை அடைகிறீர்? என்று கேட்டோம், நேசமும் பாசமும் கெட்டுவிடுகிறதே என்று துக்கத்தையும் மறந்து கேட்டோம், அவ்வளவு பெரியவரின் பேச்சுக்குள் திரிடையாகப் பேசினால் இடர் வருமே என்பதை மறந்து கேட்டோம், என்று தாத்தா கூறுவார். அப்போதுதான், அந்தப் பேரன், பேருவகையுடன், தாத்தாவின் தாளை வணங்கி, “உன்னைத் தாத்தாவாகக்கொண்ட நான் பெருமை அடைகிறேன்” என்று கூறுவான். தமிழகத்திலே, இந்தக் குடும்பக் காட்சி இருக்கத்தான் போகிறது. அந்தப் பெருமைக்கு உரியவராக்கிக் கொள்ள, அருமைத் தோழர்களே! தயார் செய்து கொள்ளுங்கள். அவர் இன்று “பெருமை அடையட்டும்” நமது பெருமை நாடு சீர்திருந்துவதற்கு நாமும் ஒர் சிறு பணி செய்தோம் என்ற திருப்தியிலே இருக்கிறது. நாடு நமது பணியை நிச்சயமாக எதிர்பார்க்கிறது. நமது வாழ்த்துதலுக்கு உரியவர்கள், வணக்கத்துக்குரியவர்கள், வசீகர வாழ்க்கை நடத்தும் வசந்தவாசிகளன்று, சமுதாயச் சீர்திருத்தத்திற்காகப் போரிட்டு, அதன் பயனாகச் சிறைவாசத்தையும் ஏற்கும் வாமனாக்கள்!

10.6.1945