அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆண்டவனை அழைக்கிறார்!

“கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்! கஷ்டநஷ்டத்தைக் கண்டு கலக்கமடைய வேண்டாம். சோகமும் சலிப்பும் வளர விடவேண்டாம். ஆண்டவன் நமது அடால்ப் ஹிட்லரை ஆசீர்வதிப்பார்” என்று கொயபிள்ஸ் ஜெர்மன் மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார். ஜெர்மன் நாட்டிலே பிரிட்டிஷ் குண்டு மாரி பொழிந்தபடி இருக்கிறது, துறைமுகங்களிலே, கப்பல்கள் தலைகாட்ட முடிவதில்லை, தொழிற்சாலைகளிலே பொருள்கள் பொடியாகின்றன, வாலிபர்கள் வதைகின்றனர். பிரான்சைப் பணியவைத்தோம், செக்கோவைச் சிதைத்தோம், நார்வேயை நாசமாக்கினோம் என்று சொல்லிச்சொல்லி, ஜெர்மன் மக்களை வெறியர்களாக்கிய நாஜித் தலைவர்கள், இன்று, ரஷியாவில் படும் அவதிகண்டு மக்கள் மருள்வதைக்கண்டு, ஆறுதல்கூற முன்வருகின்றனர். அத்தகைய நிலைமையை, வீரரஷியர்கள் உண்டாக்கி விட்டனர். 1942ல் நாஜிகளை முறியடிக்கக்கூடிய சக்தியைச் சிகப்புப் பட்டாளம் பெற்றுவிட்டது என்று மாஸ்கோ ரேடியோ தெரிவிக்கிறது. எத்தகைய உற்சாகமான பேச்சு! எந்த மாஸ்கோவில், மூன்றே வாரத்திலே சுவஸ்திகக் கொடியைப் பறக்க விடுவேன் என்று ஹிட்லர் கொக்கரித்தாரோ, அதே மாஸ்கோவில், எந்த மாஸ்கோவைச் சுற்றி வளைத்துக்கொண்டு படுசூரணமாக்கி விடுவதாக நாஜிப்படைகள் மிரட்டினவோ, எந்த மாஸ்கோமீது வட்டமிட்டு நாஜி விமானங்கள் குண்டுவீசினவோ, எந்த மாஸ்கோவைவிட்டு, ஸ்டாலின் ஓடிவிட்டார் என்று நாஜித் தலைவர்கள் புளுகினரோ, அந்த மாஸ்கோ, முற்றுகையிட்ட முரடர்களை மூலையில் ஓடச்செய்துவிட்டு, வீரத்தோடு கூறுகிறது, நாஜிகளை நாசமாக்குவோம், நாளும் பிறந்துவிட்டது, நமது சக்தியும் பெருகிவிட்டது என்று உறுதி மாஸ்கோவில், அழுகுரல் பெர்லினில்! ஆட்களால் இனிஒன்றும் நடப்பதற்கில்லை என்று, ஆண்டவனை அழைக்கிறார் கொயபிள்ஸ்! ஆண்டவன், “அங்கே என்னை அழைத்துப் பயன் என்ன? நான் பகீஷ்கரிக்கப்பட்ட இடம் மாஸ்கோ! என்னையே விரட்டியவர்கள், இறுமாப்புடன் சென்ற உங்களை விரட்டுவதா கஷ்டம்” என்று கூறுவார்!

கடவுள்பற்றிய கற்பனை போன்றதே, நாஜிகளை நசுக்க யாருளர் என்ற பேச்சும், அது ரஷிய களத்திலே பொய் என்று விளக்கப்பட்டு விட்டது. கொயபிள்ஸ் தேறுதல் கூறவேண்டிய அளவுக்கு, பெர்லினில் பீதியும் துக்கமும் இருக்கிறது, ஏன் இருக்காது! 200,000 ஜெர்மானியருக்கு மேலாகவே (குளிர்காலத்திலே) கடந்த 4 மாதங்களிலே ரஷியாவில் மாண்டனர்! கைகால் போயும், கண்ணிழந்தும், மண்டை உடைந்தும், மனமுடைந்தும், காய்ச்சல் கண்டும், கஷ்டத்தை அனுபவிக்கும் நாஜிகளின் தொகை 1000,000 பேருக்கு மேலிருக்குமாம். இவர்களின் வேதனைக்குரல், எத்தகைய நாஜி போதையையும் தெளிய வைத்திருக்கும். மாஸ்கோவை நெருங்கினதும், நெருப்புடன் விளையாடியவர்கள் சூடுண்டு ஓடிவிடுவதுபோல், சுவஸ்திகச் சூறாவளிப்படை பிடரியில் கால்பட பின்வாங்கி விட்டது! பிடித்த கோட்டைகளிலே, பிணமலை குவித்தும் பயன்காணாது, ரஷியரிடம் விட்டு விட்டு நாஜிப் படைகள் ஓடிவிட்டன. கடந்த நாலுமாதங்களிலே, மொஜாய்ஸ்க், ராஸ்டாவ், ட்ரோபெட்ஸ் முதலிய இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, ரஷியர்கள் திருப்பிப் பிடித்துவிட்டனர். வசந்தகாலப் போரும், வாட்டத்தையே நாஜிகளுக்குத் தருகிறது. நாலுமாதத்திலே 300,000 நாஜிப்படை மோட்டார்கள் நாசமாயின, சேதமானவை அந்தத் தொகை யிருக்குமாம்.

இதே காலத்திலே, 50 புதிய பட்டாளங்களைத் திரட்டி விட்டனர் ரஷியர்! அந்தப்படைகள், கையிலும் கருத்திலும், தினவெடுத்துக்கொண்டு, பாயும் வேளையை எதிர் பார்த்துக் கொண்டுள்ளன. நாஜிகளின் நினைப்பு நாசமாகிவிட்டது. மாஸ்கோவைச் சுற்றியிருந்த தளவாடத்தொழிற்சாலைகளை, உள்பக்கமாகக்கொண்டு, போய்விட்டனர். இனிச்சில ஆயிர மைல்கள் நாஜிகளிடம் சிக்கினாலும், தளவாட உற்பத்தி பாதிக்கப்படாது. அந்த முன்னேற்பாட்டையும், சோவியத் செய்துவிட்டது. ஜெர்மன் சோகத்துக்குக் காரணம் இவையே!

ஹிட்லர் கிளம்பியதும் எங்ஙனம் முசோலினியின் புகழ் புகைந்து போயிற்றோ அதுபோல், ஜப்பான் கிளம்பியபிறகு, ஹிட்லரின் ஆவேச ஆட்டத்தை இலட்சியஞ்செய்ய அச்சு உலகிலே ஆள் இல்லை. ஆகவே, எத்தனை இலட்சம் ஜெர்மானியரைப் பிணமாக்கியாவது, ஒரு புகழ்மாலை போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஹிட்லர் துடிக்கிறார். ஆனால், ஹிட்லரின் இறுதிநாட்கள் நெருங்கிவிட்டன! நேசநாடுகள் நிமிர்ந்து நிற்கின்றன. மடகாஸ்கரைப் பிடித்ததும், டோக்கியோவைத் தாக்கியதும், ஜெர்மன் தொழிற்சாலைகளைத் தவிடுபொடியாக்கியதும், மால்ட்டாவிலே நாஜிவிமானங்களை நொறுக்கித்தள்ளுவதும், வடஅயர்லாந்திலே அமெரிக்கத் துருப்புகள் மேலும் மேலும் வந்து குவிவதும், இதனை விளக்குகின்றன. ஐரோப்பாவில் இரண்டாவது போர்முனையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டு, மேஜர் அட்லியும், சர். ஸ்டாபோர்டு கிரிப்சும், பேசியிருப்பதும் கூர்ந்து நோக்கத் தக்கசம்பவம். நார்வேயிலே நாஜிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து விட்டது. டென்மார்க்கிலே பிரிட்டிஸ் பாரசூட் படையினர் இறங்கினர் நாஜிகளிடம் சிக்கிக் கொள்ளவில்லை. இவைகள் ஜெர்மனிக்கு நேரிட இருக்கும் கதியை முன்கூட்டிக்காட்டும் அறிகுறிகள் என்போம். இந்தநேரத்தில், நிலைமையில், கொயபிள்ஸ், ஆண்டவனைக் கூப்பிடுகிறார் அடால்பைக் காப்பாற்ற! வோல்கா நதியே செந்நீராக மாறும் விதத்திலே மூண்ட புரட்சியின்போது, ஜார்கூட, ஆண்டவனைத் துணைக்கழைத்தான்! சிறைக்கூடத்தைத் தூளாக்கி, மாளிகைகளைத் தரைமட்டமாக்கி, அரண்மனையை நோக்கி, ஆவேசத்துடன் மக்கள் கடலென வந்தபோது, பிரன்ச்சு நாட்டரசன்கூட, ‘ஆபத்பாந்தவனை’ அன்போடு அழைத்துத்தான் பார்த்தார்! வாடர்லூ சண்டையின்போது நெப்போலியன் ‘தேவனை’த் துதிக்காமலில்லை! கெய்சர் கடவுளைத் தொழாமலில்லை! ஆனால், அவர்களின் முடிவுயாதாயின! கடவுள், மதம், கற்பனை, முதலாளித்துவம், உலக வல்லரசுகளின், விரோதம் ஆகிய எதையும் பொருட்படுத்தாது பாட்டாளி மக்களின் படைதிரட்டி, பாரோர் கேட்டிராத விதமான பயங்கரப் புரட்சி நடத்தி வெற்றி கண்ட லெனின் வாழ்ந்த இடத்திலே, நாஜிகளின் நினைப்பு நடக்குமா, பலிக்குமா! ஹிட்லரின் சவக்குழி, சிகப்புப்பட்டாளத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. சவக்குழிக்கு அருகே இருந்து ஆசீர்வதிக்க ஆண்டவனும், அங்கு அனுமதிக்கப்படமாட்டார். ஆண்டவன் சென்றால், அங்குள்ள, மக்கள் “சர்வவல்லமை படைத்தவரென ஆஸ்தீகர்களால் துதிக்கப்படுபவரே, எங்கள் இரத்தவெள்ளத்தைப் பெருக்கியன்றோ இவனைச் சாகடித்தோம். இதுவரை எங்கே சென்றிருந்தீர்! ஏன் இத்தகைய தீயோனைத் தோன்றச் செய்தீர்!” என்று கேட்பர். ஆண்டவன், சர்வமும் தெரிந்தவராமே! அவர் என் அங்கே செல்லப்போகிறார்!! அங்கு போகாமலேயே, அவரும் ஆறுதல் அடைவார். “ஒழிந்தது சனியன்! இந்த ஹிட்லரின் கொடுமைக்கு ஆளான மக்கள், ஆண்டவனே உனக்குக் கண்ணில்லையா! என்று விநாடிக்கோர் முறை கேட்டுக்கொண்டிருந்தனர், இனி நமக்கு அந்தத் தூற்றுதல் இராது” என்று கருதி மகிழ்வார்!
24.5.1942