அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


24 மணி நேரத்தில் சுயராச்யம்!
சுயராஜ்யம்தானே வேண்டும்?

ஆமாம்! நிச்சயமாக அதுதான் வேண்டும்.

சரி! 24 மணி நேரத்திலே சுயராஜ்யம் கிடைக்கும்வழி இருக்கிறது.

என்ன? ஒரே நாளிலே சுயராஜ்யமா?

ஆமாம், தோழனே! ஒரே நாளிலே சுயராஜ்யம். ஓடும் ரயில்மீது கல்வீசத் தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனைக் கொளுத்தத் தேவையில்லை! தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நடக்கும்படி நிலைமையை உண்டாக்கத் தேவையுமில்லை., தபாலாபீசைச் சூறையாடத் தேவையில்லை. நாட்டிலே சஞ்சலமும் சங்கடமும், உண்டாக்கத் தேவையில்லை. இவைகளின்றி, மிக மிகச் சாதாரணமாக 24 மணி நேரத்திலே சுயராஜ்யம் பெற வழி இருக்கிறது.
நான் நம்பமாட்டேன். அது எப்படி முடியும்? காங்கிரஸ் எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்திற்று. எத்தனையோ ஆயிரம் பேர் சிறை புகுந்தார்கள். அதனாலெல்லாம் வராத சுயராஜ்யம், 55 ஆண்டுக் கிளர்ச்சியினால் வராத சுயராஜ்யம், 25 வருட காந்தீயத்தால் வராத சுயராஜ்யம், 24 மணி நேரத்திலே அமளியின்றி, அல்லலின்றி எப்படி பரதா! வரமுடியும்?

“தம்பீ கேள்! நீ சொன்னாய், காங்கிரஸ் எத்தனையோ போராட்டங்களை நடத்திற்று, ஆனால் சுயராஜ்யம் வரவில்லை என்று, அதிலேதான் சூஷமம் இருக்கிறது. தெரிந்துக்கொள். காங்கிரஸ் ஒன்றுமட்டும் காரியத்தை நடத்தினால், பலன் கிடைக்காது. நாடு செய்ய வேண்டும். நாட்டு மக்களின் ஏகோபித்த ஒற்றுமையான கிளர்ச்சி வேண்டும். திராவிடரும் முஸ்லீம்களும், கலந்துத் தமது கையொப்பத்தை இடாமுன்னம், அந்தக் கிளர்ச்சிக்கு நாட்டு மக்கள் நடத்தும் கிளர்ச்சி என்ற பெயர் ஏற்படமுடியாது. காங்கிரஸ் நடத்தும் கிளர்ச்சியிலே விறுவிறுப்பு இருக்கலாம், மக்களை மருட்டவும் செய்யலாம் சர்க்காரைச் சங்கடத்துக்குள்ளாக்கலாம் சுயராஜ்யத்திற்கு இவை அறிகுறியாகாது. காங்கிரஸ் மட்டுமே கிளர்ச்சி செய்து வெள்ளையரை மிரட்டி விரட்டிவிடுகிற தென்றே வைத்துக் கொள் தோழா, அது ஏற்றும் வெற்றிக்கொடி நெடுநாட்களுக்கு பறக்க முடியாது. அது கையாண்ட முறை களையோ, அன்றி அதைவிடக் கடுமையான முறைகளையோ, இன்றோ, பிறகோ, இஸ்லாமியரும், திராவிடரும், கைக்கொள்வார்கள். அது சமயம் சங்கடமும் சஞ்சலமும் இன்றுள்ள அளவினதாக இராது. அதை மறக்காதே.

ஒற்றுமை வேண்டாமென்று நாங்கள் சொல்லவில்லையே! எவ்வளவோ பாடுபட்டோம் அதற்காக முடியவில்லை என் செய்வது?

பாடுபட்டால் பலன் ஏற்படாது போயிருக்குமா? இதோ இன்று நாட்டிலே காங்கிரசார் நடத்தும் கலகம் பலன் தரும் என்று நம்புகிறாயே, இதற்குச் செலவிடப்படும் சத்தியமும் நேரமும், சுறுசுறுப்பும், நாட்டிலே ஒற்றுமையான திட்டம் ஏற்பட செலவிடப் படவில்லை. யோசித்துப் பார். உனக்கு என்ன வேண்டும்? சுயராஜ்யம் தானே!

ஆமாம்!

வெள்ளைக்காரன், சுயராஜ்யம்தர முடியாதென்று கூறிவிட்டானா?

இல்லை.

தருவதாகத்தானே சொல்லுகிறான்?

ஆமாம், ஆனால் சால்ஜாப்பு செய்கிறான்.

அது சகஜந்தானே தம்பி! என்ன சொல்கிறான்?

முஸ்லீம் லீகும், இதர கட்சிகளும் சம்மதிக்கட்டும் என்று கூறி விடுகிறார்கள்.

முஸ்லீம் லீக், நீதிக் கட்சி, முதலிய எந்தக்கட்சியாவது சுயராஜ்யம் வேண்டாமென்று கூறினதுண்டா?

இல்லை.

பிறகு, அந்தக்கட்சிகளின் சம்மதத்தையும் சேர்த்துவாங்கி, வெள்ளைக்காரர் முன்பு வீசி எறியத்தடை என்ன?

அந்தக்கட்சிகள், ஏதேதோ கூறுகின்றன. பாகிஸ்தான் திராவிடஸ்தான் என்று கேட்கின்றன.

அதிலே தவறு என்ன? நாம் சுயராஜ்யம் தேவை என்று சொல்வது தப்பா? அதைப்போலவே அவரவர்கள் ஒவ்வோர் இடத்தை ஆளுவோம் என்று கேட்பது எப்படித் தப்பாக முடியும்?

நாட்டைப் பிளந்தால், ஒற்றுமை இராது, எதிரிகள் சுலபத்திலே அழித்து விடுவார்கள்.

இது அசல் பிரிட்டிஷ் வாதமல்லவா? அவனும், சுயராஜ்யம் கொடுக்க எனக்கு இஷ்டந்தான். ஆனால் கொடுத்தால் காப்பாற்றிக்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டா என்று தான் பயப்படுகிறேன் என்று பேசுகிறான். நீங்களும், அவரவர்கள் உரிமை கேட்பது சகஜந்தான், நியாயந்தான், ஆனால் பிரித்துக்கொடுத்து விட்டால் ஆபத்து என்கிறீர்கள். சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை, அதைக்கொடு, நாங்கள் எப்படியோ ஆண்டு கொள்கிறோம். எப்படியோ எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம், என்று நாம் வெள்ளைக்காரரைப் பார்த்துச் சொல்கிறோமே, அதே நியாயம், பாகிஸ்தானிகளுக்குப் பொருந்தாதோ!

எப்படியோ நடக்கட்டும். முதலிலே சுயராஜ்யம் வந்து விடட்டும். பிறகு பாகிஸ்தான் திராவிடஸ்தான் உரிமைகள் விஷயமாகக் கவனித்துக் கொள்வோம்.

தம்பி! நீ எப்படி, இஸ்லாமியருக்கும் திராவிடருக்கும் “வாய்தா” போடுகிறாயோ, அதைப்போலவேதான், வெள்ளைககாரன், இந்த யுத்தம் முடியட்டும், உடனே சுயறாஜ்யம் தருகிறேன் என்று “வாய்தா” போடுகிறான். சுயராஜ்யத்துப் பிறகு சமரசம் என்ற பேச்சை விட்டுவிட்டு இப்போதே சமரசம் செய்து கொள். 24 மணி நேரத்திலே சுயராஜ்யம், கிடைக்கிறது பார்!

ஒற்றுமை இல்லையே!

நான் சொன்னதைத்தானே மறுபடியும் நீ சொல்கிறாய். சரி இதோ இரு. ஆமாம்! இந்தப் பாட்டைக் கேள் சற்றுநேரம்.

பாட்டுக் கேட்கவா நான் வந்தேன்?

பாட்டு மட்டுமில்லை. இதிலே பேச்சுமிருக்கிறது. கேள் கொஞ்சம்.

இது, என்.எஸ். கிருஷ்ணன் காமிக்! சகுந்தலை படம். ஆயிரம் தடவை கேட்டிருக்கிறேன்.

இப்போ ஒரு தடவை கேள். கேட்கவேண்டிய இடம் இதுதான்.

என்னாடா, நமக்குள்ளே ஒத்துமெ வேணாமாடா.

நீ என்னை மோசம் செய்யலாமாடா.

நீ இதிலே பங்கு கேக்கலாமாடா.

அப்ப ஒண்ணு செய்வோமாடா.

என்ன மாடா?

ஆளுக்குப் பாதியா அறுத்து எடுத்துக்குவோம்.

ஆ! எனக்கு முழு மீனுதான் வேணும்.

முழுமீனு வேணும்னா நான் புடுங்கி தண்ணீலே போடறேன்.

நீ மட்டும் தண்ணிலே போடு, உன் தலையைக் கிள்ளித் தண்ணிலே போடப் போகிறேன்.

போதும்! இதைத்தான் தம்பி நீ கேட்கவேணும். நாடு, இந்த நிலையில்தான் இருக்கிறது. இதற்கு வழி கண்டுபிடிக்காமல் நாம் வாழமுடியாது. ஜுரம் அடிப்பதைப் போக்க, குளிர்ந்த நீரிலே உட்கார்ந்து உடம்பைக் குளிரச் செய்துவிட முடியாது. ஈரத்துணியை உலரவைக்க அதை எறிகிற நெருப்பிலே போட்டு எடுக்கவும் முடியாது.

இதெல்லாம் வெறும் பேச்சு! இந்த ஜின்னா, நாயக்கர் கூட்டமெல்லாம் ஜெயிலுக்கு வராது.

அப்படி எண்ணாதே தோழனே. பெரியார் எட்டு முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார்.

ஜின்னா விஷயம் என்ன?

அதைத்தான் சொல்ல வந்தேன். இதோ கேள், அவருடைய அருமையான அறிக்கையை, அவர்தான் 24 மணி நேரத்திலே சுயராஜ்யம் பெறமுடியும் என்று கூறியிருக்கிறார். இதோ நான் படிக்கிறேன், கவனமாகக்கேள்.

ஜனாப் ஜின்னா தெரிவித்த விவரம்.

பம்பாய், ஆக. 16-
“உடனே முஸ்லீம் லீகுடன் ஒரு முடிவைச் செய்துக்கொண்டு அதன்மூலம் நிரந்தரமாக ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படும்படி செய்யும் பட்சத்தில் நானே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நடத்துவேன், மகாத்மா காந்தியுடன், சிறை செல்வதில் நான் முதல்வனாக விருப்பேன்” என்று முஸ்லீம் லீக் தலைவரான ஜனாப் எம்.ஏ. ஜின்னா பம்பாய் காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் தற்கால அரசியல் நிலைமைபற்றி விவாதித்தபோது கூறினார். உடனே சுதந்திரம் வேண்டுமென்பது முஸ்லிம் லீகின் கோரிக்கையென்றும் ஆனால் இதற்குக் காங்கிரஸ் தடையாயிருக்கிறதென்றும் ஜனாப் ஜின்னா வற்புறுத்தினார்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டமும் வெற்றிபெற வேண்டுமாயின் அதற்கு ஒற்றமை இன்றியமையாதென்றும் முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கைக் கிணங்குவதாலேயே அந்த ஒற்றுமை ஏற்படும் என்றும் அவர் அபிப்பிராயப்படுகிறார்.

24 மணி நேரத்தில் சுதந்திரம்.

ஜனாப் ஜின்னா மேலும் தெரிவித்ததாவது:
ஒற்றுமை ஏற்பட்டவுடன், முஸ்லீம்கள் காங்கிரஸுடன் சேர்ந்து பிரிட்டிஷாரிடமிருந்து பரிபூர்ண சுயேச்சை வேண்டுமென்று கோருவார்கள். பிரிட்டன் இதை மறுக்கமுடியாது. 24 மணி நேரத்தில் நாம் சுதந்திரத்தைப் பெறுவோம். இல்லையாயின் இதர முஸ்லீம் தலைவர்களுடன் விடுதலைப் போராட்டத்தில் நான் முன்னணியில் நிற்பேன்.

பாகிஸ்தான் பிரச்னைபற்றி முடிவுசெய்ய அரசியலை அமைக்கும்போது இந்திய முஸ்லிம்களிடையே ஓட்டு எடுக்கலாமென்று ஜனாப் ஜின்னா கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் மேற்சொன்னவாறு தெளிவான முறையில் அறிவித்து முஸ்லிம்களின் சந்தேகத்தை நிவர்த்திக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

முஸ்லீம் முதலாளிகளோ அல்லது ஹிந்து முதலாளிகளோ செல்வத்தில் செழிப்படையும்படி செய்வது என் நோக்கமல்ல. ஹிந்துக்களாயினும் சரி, முஸ்லீம்களாயினும் சரி, பாமர மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காக சேவை செய்யவேண்டுமென்பதே என் திட்டமான நோக்கம். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையின்றி இது சாத்தியமில்லை.

இப்போது என்ன சொல்கிறாய்? அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திலே தோழர் ஜெகத் நாராயண் பாகிஸ்தானை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். அதை ரத்து செய்துவிட்டு, சமரசம் உண்டாக்கி விட்டால், சுதந்திரப் போராட்டம் நடத்த நான் தயார் என்று ஜனாப் ஜின்னா கூறுகிறார். பாகிஸ்தான் அமைக்கும்போது, முஸ்லீம்களிடையே ஓட் எடுக்கலாம் என்றும் கூறுகிறார். இதைக் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டால், சிறைபுகவும் தயார் ஜின்னா! தோழனே! நாட்டிலே ஒற்றுமை உண்டாகவும், சுதந்திரப் போரை நாட்டு மக்கள் ஒன்றுகூடி நடத்தவும் இதைவிட அரிய சந்தர்ப்பம் இராது.
* * *

நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்ட காங்கிரஸ் தோழர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணை, நான் மேலே தந்தது. ஜனாப் ஜின்னாவின் அறிக்கையை நான் விளக்கினேன், வாதிட்டேன், வீண் கலவரத்திலே விருப்பம் வைத்துப் பயனில்லை என்று சொன்னேன். என் நண்பரின் நினைவு பூராவும், நாட்டிலே நடைபெற்று வரும், நானாவிதமான கலவரங்களிலே ஓடிற்றே யொழிய, நான் சொன்னவற்றால் திருப்தி அடையக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் ஒன்று நானறிவேன். இந்த வேகம் குறைந்து, என் தோழர்கள் ஆர அமர யோசிக்கும் சமயம் வந்து கொண்டு இருக்கிறது. அதுபோது, இது போன்ற யோசனை எழப்போவது உறுதி. இல்லையேல், இந்தக் கலவரங்களினால் நாடு ஒரு களமாகும், காட்டு ராஜாக்கள் கிளம்பும் காலம் போன்றிருக்கும், கையில் வலுத்தவனின் காரியம் நடக்கும், வெள்ளையனை ஓட்டும் கிளர்ச்சி என்று எண்ணி இன்று மகிழ்வோரும், மருண்டு, தலைமீது மோதிக்கொள்ளும்படி, சொத்து சூறையாடலும், குத்து வெட்டுகளும், கொள்ளை கொடுமைகளும், நடைபெற்று அமைதி அழிந்து, போகமார்க்கம் தோன்றக் கூடுமேயன்றி, நாட்டுக்கு விமோசனம் எழாது என்பதுறுதி. நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டோரின் நல்லெண்ணங்கள் இன்று சந்தேகிக்கப் படலாம். ஆனால் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும்.

சர்தார் குல்பீர் சிங்: “சரி! தோழனே! அஹ்ரார்கள் செல்வாக்கு எந்த இடத்திலே வளர்ந்தாலும், உடனே, முஸ்லீம்கள் இந்துக் கடைகளைப் பகீஷ்கரிக்கிறார்கள்? புதிய முஸ்லீம் கடைகள் திறக்கப்படுகின்றனவே? இது என்ன?

அப்ஜால்
ஹக்: இது சகஜந்தானே தோழனே! ஒரு சமுதாயத்துக்கு அறிவூட்டினால் அது, தன் நிலைமையை உணர ஆரம்பிக்கிறது, தனக்கிருக்கும் சங்கடம், சஞ்சலம் ஆகியவற்றுக்குக் காரணம் என்ன என்று யோசிக்கிறது. இவ்விதம் யோசிக்கும்படி அஹ்ரார் இயக்கம் தூண்டுகிறது. இவ்விதம் முஸ்லீம்கள் யோசிக்கும்போது, தங்களுக் கிருக்கும் வேதனைக்குக் காரணம், வெள்ளைக்காரனை விட இந்துக் களாலேயே அதிகம் என்று ஏற்படுகிறது, ஆகவே முஸ்லீம் சமுதாயம் விழிப்படைகிறது. தன்னைத் தீண்டாதவனாகப் பாவிக்கும் இந்துவின் ஆதிக்கத்தை அறுத்துவிட முனைகிறது. இது சகஜந்தானே.

சர்தார் குல்பீர் சிங்: உண்மைதான்! இந்து சமுதாயம் அப்படித்தான் செய்கிறது. என் செய்வது? என்று தீருமோ இந்தக் குறைபாடுகள்?

இந்தச் சம்பாஷணை ராவல்பிண்டி சிறைச்சாலையிலே இரு வாலிபருக்குள் நடந்தது. ஒருவர் முஸ்லீம், மற்றொருவர் இந்து. சர்தார் குல்பீர்சிங் என்ற இந்து சாமானியமானவரல்லர். சர்க்கார் தாசரல்லர், பகத்சிங்கின் சகோதரர்! அப்ஜால் ஹக் என்ற முஸ்லீமும் காங்கிரஸ் வைரியல்ல அஹ்ரர் இயக்கத் தலைவர். காங்கிரசை ஆதரிப்பவர். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர். சிறையிலே, நாட்டின் பிரச்னைகளையே பற்றி சிந்தித்தவர், பாகிஸ்தான் கோரிக்கை பற்றிப் பன்னிப்பன்னிப் பேசியும் விவாதித்தும் விளக்கம் பெற்றவர். அவர் இந்துக்கள் முஸ்லீம்களைத் தீண்டாதவர்போல் நடத்துவதை முஸ்லீம் சமுதாயம் வெறுக்கிறது என்ற விஷயத்தை, பகத்சிங்கின் சகோதரரிடம் ராவல்பிண்டி சிறையிலே பேசினார். பாகிஸ்தானமும் தீண்டாமையும் என்ற ஓர் புத்தகத்தை 1940ஆம் ஆண்டு ராவல்பிண்டி சிறையிலேயே எழுதினார். அதிலே இருக்கிறது நான் மேலே தீட்டிய உரையாடல். அதுமட்டுமல்ல இந்து முஸ்லீம் இனவேற்றுமை பற்றி பல அரிய, அனுபவபூர்வமான உதாரணங்களும் உள்ளன.
பாகிஸ்தான் கேட்கும் மனப்பான்மைக்குக் காரணம் என்ன வென்று கேட்போர், இந்து, முஸ்லீம் இனத்தின் பேதமும், இரு இனத்திற்கு இருந்துவந்த, இருந்துவரும், இருக்கக்கூடிய தொடர்பு எத்தன்மையது என்பதையும் தெரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் நாட்டிலே உள்ள சமுதாயத்தை மறந்து ஏட்டிலே உள்ள சித்திரத்தை மட்டுமே கண்டு, ஏங்கி, எட்டா பழத்திற்குக் கொட்டாவி விடுகிறார்கள். அவர்களுக்கு ஜனாப் ஜின்னா, விளக்கம் ஏற்பட, சென்ற வாரம், ஒரு அமெரிக்கப் பத்திரிகை நிருபரிடம் பேசுகையில், முஸ்லீம், இந்து, இனவேறுபாடு பற்றிக் கூறியிருக் கிறார். ராவல்பிண்டி சிறையிலே, பாதுகாப்புச் சட்டப்படி கைதாகி யிருந்த அஹ்ரர் அப்ஜால் ஹக் கூறினதற்கும் காயிதே அஃலம் கூறுவதற்கும் மாறுபாடு இல்லை. முஸ்லீம்களை இந்துக்கள் தீண்டாத ஜாதி போலவே கருதுகிறார்கள் என்பதை ஜனாப் ஜின்னா அமெரிக்க நிருபரிடம் தெளிவுபடக் கூறினார் “என் கையால் தொடப்பட்ட ஜலத்தை இந்து சாப்பிடமாட்டார். அவருக்கு அது ஆச்சாரக் குறைவு” என்று ஜனாப் ஜின்னா கூறினார். இதைக் கூறுகையில், அவருடைய மனம் எவ்வளவு வேதனையுடன் இருந் திருக்கும். யாவரும் சமம் என்ற மெய்ஞ்ஞான போதகராம் நபிகள் நாயகத்தைப்பின் பற்றும் ஜனாப் ஜின்னா, எங்ஙனம் இத்தகைய பேதத்தைக்கண்டு சகிக்கமுடியும்! அறிவுள்ள எவர்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும்? ஆனால், அதோ ரயிலைக் கவிழ்த்தும் தபாலாபீசைத் தீக்கிரையாக்கியும், தண்ட வாளத்தையும் அகற்றியும், சுயராஜ்யம் தேடும் தோழர்கள், இதனை உணர மறுக்கிறார்கள். தம்முடன் சேர மறுப்பவரை, சர்க்கார் கூலிகள் என்றும், சுயராஜ்யத்தை வேண்டாதவர்கள் என்றும் தூற்றுகின்றனர்.

சுயராஜ்யம் வேண்டுமா? என்று என்னைக் கேட்டால், “ஆம்! நிச்சயம் வேண்டும். விரைவில் வேண்டும்” என்றுதான் கூறுவேன், உரிமை வேண்டா மென்று கூறிடும் உலுத்தன் எவன் இருக்கமுடியும்? என்னுடைய இரத்தத்தில், வீரமும் விறுவிறுப்பும், ஓடுகிறதோ, எவனுடைய இருதயத்திலே சுதந்திர எண்ணம் கொந்தளிக்கிறதோ, அவன் சுதந்திரத்தை வேண்டாமென்றுரைக்க மாட்டான். நாமார்க்குங் குடியல்லோம் என்று மார்தட்டியே நிற்பான். நமது நாட்டை மற்றொருவன் ஆள்வதா என்று சீறுவான். என் உடலம், பருந்துக்கும் நரிக்கும் இறையாகட்டும், கவலையில்லை என்றே கர்ஜிப்பான். இந்த எண்ணம் இயற்கை! இது அடக்க, அழிக்க, மறைக்க மறுக்க, மறக்க முடியாது. நம்மை ஆள்வோராகிய வெள்ளையரும் இதனை மறுக்கத் துணியார். மறுக்கவில்லை. அவர்கள் ஒரு காலத்தில் ரோம் நாட்டு ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தனர். அவர்கள் நாட்டு ராணி பொப்பிஷியாவை, மரத்திலே கட்டிவைத்து அடித்தார்கள் என்று கதை உண்டு. அவர்கள் தங்கள் சுதந்திரத்துக்காகப் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. அவர்கள் நாட்டு சரிதம் நானறியாததன்று. அதை வெள்ளையர்கள், நாம் படித்துணரவும் செய்துள்ளனர். எனவே சுதந்திரத்தை நான் மறவேன, நீதிக்கட்சி, குடியேற்ற நாட்டு அந்துஸ்து போதும் என்ற கொள்கையை விட்டு, நாட்டுக்குப் பூரண சுயேச்சை தேவை என்ற தீர்மானத்தை ஏற்று, பெரியாரின் தலைமையின் கீழ் நின்று பொது உடைமை திட்டமோ என்று மூர்த்திகளும் சாஸ்திரிகளும் கூறி, சர்க்காரிடம் சாடிசொல்லவேண்டிய அளவு தீவிரமுள்ள வேலைத் திட்டத்தையும் கட்சி ஏற்றுக்கொண்டபிறகு, அக்கட்சியிலே, இருக்கும், எவரும் சுதந்திரத்தை மறுப்பவராக இருக்கமுடியுமா? சுதந்திரத்தையே ஜீவநாடியாகக் கொண்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய எட்டு கோடிக்கு மேற்பட்ட நமது முஸ்லீம் தோழகள் சுதந்திரத்தை மறுப்பவர்களா? காங்கிரசின் வயப்பட்ட வர்கள். நம்மையும், இஸ்லாமியரையும், சுதந்திர எதிரிகள் என்று கூறுவது துளியும் பொருந்தாது. உரிமைப்போர் நடத்த இந்த இரு இனமும் என்றும் தயார்! இன்றும் சரியே! நான் கூறுகிறேன் காங்கிரஸ் தோழர்களுக்கு, உரிமைச் சாசனம் தயாரித்துக் கொள்வோம், பிறகு போர்த்திட்டம் அமைப்போம், போரில் இறங்குவோம். சம்மதமா? என்று கேட்கிறேன். இதோ நான் தீட்டும் சாசனம் காங்கிரஸ் தோழர்கள் கூர்ந்து நோக்கவேண்டுகிறேன்.

1. வெள்ளையர் ஆட்சி நீங்கி நாட்டு ஆட்சி நம்மிடம் ஒப்படைக்கப்படும்.

2. இந்து, முஸ்லீம் இனங்கள், மதம், கலை, நாகரிகம், இலட்சியம் முதலிய அடிப்படையான கருத்துகளிலேயே மாறுபட்டும், முரண்பட்டும், ஒன்றின் மீதொன்று மோதக் கூடியதாகவும், இருப்பதால், ஒரே குடும்பமாக வாழ, கூட்டாக ஆள இயலாது ஆகையால், அவரவர்கள் பெருவாரியாக உள்ள இடங்களிலே, அவரவரின் சுயேச்சையான ஆட்சி ஏற்படுத்திக் கொள்ள உரிமை வேண்டும்.

3. அரிய, திராவிட, கலை நாகரிக இலட்சிய வேறுபாடு, விரோதத்தையும் துவேஷத்தையும் மூட்டுவதாக இருப்பதால், திராவிடர் பெருவாரியாக உள்ள நாட்டிலே ஆரிய ஆதிக்கம் ஏற்பட முடியாதபடி, அங்கு திராவிட ஆட்சி அமைத்துக் கொள்ளத் தனி சுதந்திர அரசுரிமை அமைக்கப்பட வேண்டும்.

4. நாட்டுப் பழங்குடி மக்களைத் தீண்டாதார் என்று கூறி உரிமையை மறுக்கும் கொடுமை களையப்பட்டு, பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை, பேதம் காட்டப்படமாட்டாது என்று சட்டம் ஏற்படுத்திவிட வேண்டும்.

5. தொழிலாளர், முதலாளி பிணக்கு ஏற்படவும், அதைத் தீர்க்க முறைகள் பல கையாளப்டுவதுமான தொல்லைகள் களையப்பட, பொருளாதார நீதி ஏற்பட, சர்க்காரே, தொழிற்
சாலைகள், பெருவாரியான பண நடமாட்டமுள்ள உற்பத்தி ஸ்தாபனங்கள் ஆகியவற்றை ஏற்று நடத்திவரவேண்டும்.

6. சமுதாய சமத்துவம், பொருளாதார நீதி ஆகியவற்றைக் குலைக்கக்கூடிய கருத்தைக்கொண்ட மதம், தடுக்கப்பட வேண்டும்.

இவைகள் நான் விரும்பும் உரிமைகள், இதோ கேண்மின் ஜனாப் ஜின்னா கூறுவதை “முஸ்லீம் முதலாளிகளோ அல்லது இந்து முதலாளிகளோ செல்வத்தில் செழிப்படையும்படி செய்வது என் நோக்கமன்று. இந்துக்களாயினும் சரி, முஸ்லீம் களாயினும் சரி, பாமர மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காகச் சேவை செய்ய வேண்டுமென்பதே என் திட்டமான நோக்கம்.”

இந்த வாசகத்திலே உள்ள உணர்ச்சியை மறக்க முடியுமா?

சுதந்திரப்போர் நடத்த, சமதர்மத்தை நிருவ, ஜனாப் ஜின்னா தயார்!

போருக்குப்பிறகு பிரிட்டன் சுயராஜ்யம் தராமல் ஏமாற்றும்போது, அங்ஙனம் நடக்குமாயின், நமக்கு பிரிட்டனை எதிர்த்தே சுயராஜ்யம்பெறும் சக்தி போர் முடிந்ததும் ஏற்பட்டு விடும்!

நேசநாடுகள் அதுசமயம் நம்மை ஆதரிக்கும். சுயராஜ்யத்தை எந்தக் கட்சியும் வேண்டாமென்று கூறவில்லை. எல்லா கட்சிகளும் சுயராஜ்யம் கோருகின்றன. எந்தக் கட்சிக்கும் வெள்ளையரிடம் காதல் கிடையாது. எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை ஏற்படவேண்டும்.

அதற்கு இன உரிமைகள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

இன உரிமைதான் பாகிஸ்தான் திராவிடஸ்தான் கோரிக்கைகள் போர் முடிந்து ஏற்படும் புதிய அரசியலில் இவை இருக்கலாம் என்று காங்கிரஸ் கூறினால், இன்று சமரசம் ஏற்பட்டுவிடும்.

சமரசம் ஏற்பட்டதும், வெள்ளையரை, நாடு நிமிர்ந்து நின்று என்ன சொல்லுகிறாய் என்று கேட்கும்.

உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்ட பிறகு, நான் சுயராஜ்யத்தை மறுக்கமுடியாது. சுயராஜ்யத்தைத் தருகிறேன். நான் போகட்டுமா? என்று வெள்ளையர் கேட்பர். 150 ஆண்டுகளாக எங்களை நிராயுதபாணிகளாக வைத்துக்கொண்டிருந்தாய், எங்கள் நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறினாய், எங்கள் நாட்டு வரிப்பணம் கோடி கோடியாக ராணுவத்திற்காகத் தந்தோம் இத்தனை ஆண்டுகளாக. ஆகவே எதிரியைத் தோற்கடிக்கும் பொறுப்பு, கடமை, உன்னுடையது. அதை வெற்றிகரமாகச் செய்துவிட்டுப் போ, என்று நாடு கூறும்.

நேசநாடுகளின் பக்கம் நம்நாடு! நேச நாடுகள் எவை! நமது இருதயத்தைக் கொள்ளை கொண்ட, இனத்தில் இன்பம் உண்டு, எவருக்கும் உண்டு, என்ற சித்தாந்தத்தின் சிங்காரச் சோலை, ஜெகம் புகழும் வீரர் கோட்டம், பாட்டாளியின் பரிபாலன பூமி, வேலை இல்லை, கூலி இல்லை, என்ற பேச்சு எழாத பெருமித ஆனந்தபுரி, சோபிதமிக்க சோவியத் ரஷியா சிதையா வீரத்தின் சிகரமாக விளங்கும் சீனா, இவைகள் உள்ளன!

இதைத்தெரிந்து, தெளிவுகொள்ள வேண்டும் தோழர்கள்.

வாசலிலே உள்ள பூனையை விரட்ப்போகிறோம்! புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. அங்கோர் ஓநாய், இரத்த வெறியுடன் நிற்கிறது! அது உள்ளே நுழையக்கூடாதே!

எதிரியின் எக்காளம், வங்கக்கடல் அலையுடன் கலந்தடிக்கிறதே, இந்த வேளையிலா, நாட்டிலே இந்த வேதனைமிகும் விளைவுகள்?

23.8.1942